நறுங்காதல் பொழிபவனே – 16

விநாயகரின் முன் நின்று தான் கர்ப்பமாய் இருப்பதாய் வேல்விழி உரைத்த ஒரு வாரத்திற்கு முன்பான ஒரு வாரயிறுதி நாளில் ஆதவனும் வேல்விழியும் அமர்ந்து தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஆதவனுக்கு முகிலனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவனிடம் பேசிக் கொண்டிருந்த ஆதவன், “கன்ஃபர்மாடா?மூனு மாசம் ஆகுதா? ஏன்டா சொல்லலை” என்று கேட்ட கேள்வியில், அவனருகில் அமர்ந்திருந்த வேல்விழி அவனைத் திரும்பி பார்த்தாள்.

“ஓ சூப்பர்டா! வாழ்த்துகள்டா! ரொம்ப சந்தோஷம்!” என ஆதவன் பேசி கொண்டிருக்கும் போதே, எதற்காக ஆதவன் முகிலனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறான் என ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது அவளால்.

அவளின் முகத்தில் வேதனை படர்ந்திருக்க, பூரண மகிழ்வு அவன் முகத்தில்.

விழியிடம் முகிலன் தந்தையாகப் போவதை சைகையில் உரைத்துப் பேசுமாறு அலைபேசியை அவள் கையினில் திணித்தான் ஆதவன்.

விழி அலைபேசியை வாங்காது கோபமாய் படுக்கையறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.

முகிலன் மீதான கோபத்தினால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என எண்ணி எரிச்சலுற்றவனாய், முகிலனிடம் ஏதோ பேசி சமாளித்து இணைப்பை துண்டித்தவன், “ஹே விழி! கதவை திறடி! அவன் எவ்ளோ நல்ல விஷயம் சொல்லிருக்கான்! இன்னுமா உன் கோபத்தைப் பிடிச்சு வச்சிட்டு இருப்ப?” எனக் கதவை தட்டியவாறு உரைத்தான்.

ஆனால் அவளோ அவன் கேள்விக்கு எதிர்வினை ஆற்றாது கதவை திறவாமல் இருந்தாள்.

சில நிமிடங்கள் கழிய, அவளின் அழுகை சத்தம் அவனுக்குக் கேட்க ஆரம்பிக்கவும் தான், அவளின் நிலையை உணர்ந்தான் அவன்.

கருத்தரிப்பதற்காகப் பூஜைகள் மற்றும் மருத்துவ டெஸ்டுகள் என அலைந்து கொண்டிருப்பவளுக்கு இச்செய்தி அவளின் நிலை எண்ணி வேதனையை அளித்திருக்கிறது எனப் புரிந்தது அவனுக்கு.

அவளின் அழுகையினால் இவனின் முகத்தில் வேதனை படர்ந்தது.

பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் அவள் கதவை திறவாமல் இருக்க,”விழி கதவை திறடி! பயமுறுத்தாதடி! என்னடி பண்ற உள்ள?” என அவன் பயத்துடன் கேட்ட பிறகே கதவை திறந்தாள்.

அழுதழுது கண்கள் சிவந்தவாறு அமர்ந்திருந்தவளிடம் வந்தவன், “எதுக்கு இந்த அழுகை? என்ன தான்டி பிரச்சனை உனக்கு?” எனக் கத்தியிருந்தான்.

“உங்க வீட்டுல நான் பொறாமைபடுவேன்னு நினைச்சிட்டாங்க தானே! என்னை மாதிரி அபார்ஷன் ஆனவகிட்ட சொன்னா ஏதாவது பிராப்ளம் வரும்னு நினைச்சு தானே மூனு மாசமா சொல்லாம இருந்திருக்காங்க” என் சொல்லி கட்டிலில் அமர்ந்து முகத்தை மூடி அவள் கதறி அழ,

“அய்யோ நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு ஏன்டி உன்னைக் கஷ்டப்படுத்திக்கிற?” எனக் கேட்டு அவள் தலையை வருடியவாறு முகத்தைத் தன் வயிற்றில் புதைத்துக் கொண்டான்.

“இல்லை நீ தான் சமாளிக்குற! அது தான் உண்மை!” என மேலும் அழுதாள்.

“இல்லடி நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லை! எல்லாருக்கும் இருக்கிற பயம் மாதிரி தான்! மூனு மாசம் கழிச்சு சொல்லலாம்னு சொல்லிருக்காங்க. காலைல செக் அப் போனாங்களாம்! அப்பவே ஓரளவிற்கு கன்பர்ம் ஆகிடுச்சாம். அப்புறம் ஸ்கேன் பண்ணி பார்த்ததுல ஹார்ட் பீட்லாம் இருக்குனு சொன்னான். அதுவும் செக் அப் முடிஞ்சதும் நமக்கு தான் முதல்ல ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க” நடந்ததை ஆதவன் உரைக்க,

“ஏன்டா எனக்கு எதுவுமே தெரியாதுனு நினைக்கிறியாடா! கன்சீவ் ஆகி 45 நாள் கழிச்சு தான் முதல் ஸ்கேன் செய்வாங்க. அப்ப தான் ஹார்ட் பீட்லாம் வரும். அப்ப கன்பர்ம் பண்ணிட்டு வெயிட் பண்ணிருக்காங்கனு தானே அர்த்தம்” என மறுத்து பேசியவள்,

“உன் தம்பி இப்படி மாறுவான்னு நினைக்கலைடா! ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு! அதுக்கு நீயும் சப்போர்ட் பண்ற! உனக்குப் புரியுதா இல்லையா இல்ல தம்பி பாசம் கண்ணை மறைக்குதா?” எனக் கூறி அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“அப்படி இல்லடி! அவளுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ்! அதனால பிரக்னென்ட் ஆனதே தெரியலைடி! வாமிட்லாம் வந்த பிறகு டவுட் வந்து இப்ப செக் அப் போய்ருக்காங்க. ஸ்கேன் செஞ்ச பிறகு கன்பர்ம் பண்ணிருக்காங்க!” என விளக்கம் அளித்தான்.

“போதும்டா ரீசன் சொல்லாத! நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியலை! ப்ளீஸ் இங்கிருந்து போய்டு! நான் அழுதே என்னோட மென்டல் பிரஷரை குறைச்சுக்கிறேன்! போடா” என அவனைத் தள்ளிவிட்டாள்.

அவளின் அழுகை அவனை வருத்தினாலும், புரிந்து கொள்ளாமல் வதைக்கிறாளே என ஆயாசமாய் இருந்தது ஆதவனுக்கு.

ஆனால் விழி கணித்து உரைத்தது சரியே என ஆதவன் அறிந்து கொள்ளும் நாளும் வரும் என அவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

கருச்சிதைவு இந்தளவிற்கு விழியின் மனதை காயம் செய்திருக்கும் என எண்ணியிருக்கவில்லை ஆதவன். அதனால் உண்டான மன அழுத்தத்தை வெளியிடாது அடைக்காத்திருந்தது தான் இன்று அவளை வெடிக்க செய்வதாய் தோன்றியது அவனுக்கு.

அவளின் நிலை எண்ணி கண்களில் வந்த நீரை உள்ளிழுத்துக் கொண்டான்.

“நீ போடா நான் அழுதுக்கிறேன்! நீ இருந்தா அதுவும் என்னால பண்ண முடியாது! நான் அழுறதை பார்த்து நீ அழுவ! நீ இங்க இருக்காத போ” என அவனைக் கதவுக்கு வெளியே அவள் தள்ளி செல்ல,

அவளைத் தனியாக விட மனமே இல்லை அவனுக்கு. அவளது மன அழுத்தம் குறையுமட்டும் அழுது கொள்ளட்டும் என எண்ணியவன், “சரி நீ எவ்ளோ வேணாலும் அழு! நானும் கூட இருக்கேன் வா” எனக் கூறி அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.

அவனிடையை வளைத்து மடியில் தலை சாய்த்திருந்தவளை வருடியது அவனின் கைகள். அழுகை விசும்பலாகி அப்படியே கரைந்து குறைந்து போனது அவளிடத்தில்.

சிறிது நேரத்தில் அப்படியே அவன் படுத்துக் கொள்ள, அவன் மீது சாய்ந்து படுத்திருந்தவள், “எனக்கு எதனால இப்ப கோபம் வந்ததுனே தெரியலை ஆதவ்! கடவுளுக்கு இவ்ளோ செஞ்சும் நம்ம மேல கருணை வரலையானு கோபம், விரக்தி, ஆதங்கம். என்னோட இயலாமையை நினைச்சு கோபமா வந்துடுச்சுடா!” தன் மனவோட்டத்தினை அவனிடம் பகிர்ந்து கொண்டவள்,

“உனக்கு வருத்தமா இல்லையாடா!” எனக் கேட்டாள்.

“எதுக்குடி வருத்தப்படனும்! நான் அப்பா ஆகலைனா என்ன? என் தம்பி ஆகப் போறான்! எனக்கு ஹேப்பி தான்!” என்றான்.

இவளுக்கு நின்றிருந்த கண்ணீர் மீண்டுமாய் உற்பத்தியாக, “எப்படிடா நீ இவ்ளோ நல்லவனா இருக்க?” எனக் கூறி அவனைக் கட்டி கொண்டாள்.

அவனிடம் சண்டை போட்டதற்கான குற்றயுணர்வு அவளை ஆட்கொள்ள, “நான் எவ்ளோ சண்டை போட்டாலும் எப்படி உனக்கு என் மேல வெறுப்பே வர மாட்டேங்குது?” அவன் மார்பில் தாடையைப் பதித்துக் கண்களை நோக்கியவாறு அவள் கேட்க,

அவளின் கேள்வியில், ‘ஹப்பாடா நார்மல் ஆகிட்டா’ என ஆசுவாச பெருமூச்சு விட்டவனாய், “பெத்த தாய்க்கு அவங்க குழந்தைங்க என்ன தப்பு செஞ்சாலும் அவங்களை வெறுக்க முடியாது. நான் உன் மேல வச்சிருக்கக் காதலும் அப்படித் தான்டி என் அழகம்மா” என நெற்றியில் முட்டினான்.

“பாவம்டி முகிலும் கவியும்! அம்மா டார்ச்சர்னால தான் உடனே குழந்தை பெத்துக்க முடிவு பண்ணாங்க! இன்னும் ஆறு மாசம் படிப்பு இருக்கு அந்தப் பொண்ணுக்கு! கல்யாணம் ஆனதும் இரண்டு வருஷம் கழிச்சு தான் குழந்தைனு ப்ளான் செஞ்சி வச்சிருந்திருக்காங்க! ஆனா இரண்டு மாசத்துல தினமும் அம்மா பேசற குத்தல் பேச்சுல குழந்தை பெத்துக்க முடிவு செஞ்சாங்க போல! முகில் என்கிட்ட பேசும் பொழுதெல்லாம், நல்ல வேளை உன்னையும் அம்மாவையும் ஒன்னா இருக்க வைக்கலைனு என்னை நினைக்க வச்சிடுறான்டி! அவ்ளோ கஷ்டப்படுறாங்க அவங்க” என்றான்.

அவன் மீது படுத்திருந்தவள், அவன் பேசியதை கேட்டவாறே உறங்கியிருந்தாள்.

விழியின் குழந்தைப்பேறுக்கான மன அழுத்தத்தையும், அதைப் போக்கும் வழியினையும் சிந்தித்தவாறே அன்றைய உறக்கத்தைத் தொலைத்திருந்தான் ஆதவன்.

ஆனால் ஆண்டவனே அடுத்த வாரத்தில் அவளின் கர்ப்பத்தை உறுதி செய்து ஆதவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்க, இனி அவள் இறுக்கம் தளர்ந்து சரியாகிடுவாள் என நிம்மதி எழுந்தது ஆதவனுக்கு.

ஆனால் இந்தக் கருவும் சிதைவுரும் நேரம், அவளின் நிலை என்னவாகும் எனச் சிந்திக்காது இருந்து விட்டான் அவன்.

இக்கருவிற்கு எவ்வித பாதகமும் நேராது என ஆதவன் தீவிரமாய் நம்பி கொண்டிருக்க, வேல்விழி ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே கருவை தாங்கியிருக்க, மூன்றாம் மாதம் எடுத்த ஸ்கேனில் குழந்தைக்கு இதயத் துடிப்பு வந்துவிட்டதாக உரைத்தார் மருத்துவர். அதன்பிறகே வேல் விழிக்கு முழு நம்பிக்கை வந்தது.

ஆதவனும் வேல்விழியும் அவரவர் உற்றார் உறவினர்களிடம் இந்த சுப செய்தியை பகிர்ந்து கொண்டனர்.

அதன் பிறகான ஒரு வார நாளில் இரவு ஆதவன் அலுவலகம் சென்றிருக்க, வேல்விழி வீட்டில் உறங்கி கொண்டிருந்தாள்.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் திடீரென்று ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியில் முழித்தவள், மிதமான ரத்தக்கசிவை உணர்ந்தாள். ஆனால் தாங்கி கொள்ள இயலா அவ்வலியில் அவளால் நகரவும் இயலவில்லை. ஆதவனுக்கு அழைத்து உரைக்க, அவன் உடனே அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தான். அவளுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்து, உடை மாற்ற வைத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது விடியற்காலை ஆகியிருந்தது.

கருவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக உரைத்தார் அந்நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர். விழியை அட்மிட் செய்ய சொன்னவர், அவளுக்கு வலியை குறைக்கவும் தூக்கம் வர வைக்கவும் மருந்து செலுத்தி ட்ரிப்ஸ் ஏற்றினார்.  காலை அவர்கள் வழமையாய் பார்க்கும் மருத்துவரிடம் செக்அப் செய்து விட்டு கிளம்பலாம் என உரைத்தார்.

ஆதவனுக்கு அப்பொழுதே கண்களில் நீர் நிறைந்துவிட, இவளுக்கும் அழுகை வந்தது. இருப்பினும் அவனின் வேதனையைக் காண சகியாதவளாய், அவனைத் தேற்ற வேண்டுமென்பதே முதன்மையாய் தோன்ற, “சரி விடுடா! பார்த்துக்கலாம்! நம்ம பாப்பா எப்படினாலும் நம்ம கிட்ட வந்து சேர்ந்துடுவா” தனது வயிறை வருடியவாறு உரைத்தவளின் தொண்டை கமற, தன்னைத் தேற்றி கொண்டவளாய், “அழாதடா! ப்ளீஸ்” என அருகில் அமர வைத்து, அவன் கண்களைத் துடைத்து விட்டாள்.

“நமக்கு இன்னும் வயசு இருக்கு! நமக்குத் தான் எந்தப் பிரச்சினையும் இல்லையே! திரும்பக் குழந்தை பெத்துக்கலாம்” என நில்லாமல் வழிந்தோடிய அவனின் கண்ணீரை துடைத்துவாறு ஆறுதல் உரைத்து கொண்டாள்.

“சரி நீ போ! எனக்குக் குடிக்கப் பால் வாங்கிட்டு வா! எனக்குப் பசிக்குது” என அவனை அவள் திசை மாற்ற முனைய,

தன்னை சற்று தேற்றி கொண்டவனாய்,
“அம்மா அத்தை இரண்டு பேருல ஒருத்தரை உடனே கிளம்பி வர சொல்லிருக்கேன்! உனக்கு கூட பார்த்துக்க ஆள் இருந்தா நல்லா இருக்கும்ல” என்றான்.

சரியெனத் தலையைசைத்து கொண்டாள்.

இருக்கும் வலியில் அவளுக்கும் உடன் இருந்து பார்த்துக் கொள்ள, தாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது.

அவளின் முகத்தை ஒரு நிமிடம் பரிவாய் நோக்கியவன் நெற்றியில் முத்தமிட்டு, “இதோ வந்துடுறேன்” என வெளியே சென்று விட்டான்.

அதன்பிறகு கதறி அழுதிருந்தாள் அவள்.

காலை வந்து பரிசோதித்த மருத்துவர், “D&C தான் செய்யனும். உடனே செய்யனும்னு அவசரம் இல்ல! நீங்க டிசைட் பண்ணி சொல்லுங்க! இந்த ஷாக்ல இருந்து விழி கொஞ்சம் நார்மல் ஆகட்டும்!” என்று உரைத்தார்.

D&C (Dilation and curettage – அறுவைச் சிகிச்சை மூலம் கருச்சிதைவின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் முறை)

அன்று காலை ரயிலில் வேல்விழியின் அன்னை மகேஸ்வரியும், ஆதவனின் தாய் தந்தையும் சென்னை நோக்கி பயணித்திருந்தனர். 

இரண்டாவது கர்ப்பம் எவ்வித சிக்கலும் இல்லாமல் நல்ல முறையில் நடைபெற வேண்டுமென எண்ணி பெரிய மருத்துவமனையில் அவளின் குழந்தை பேறுக்கான மருத்துவத்தைப் பார்க்க செய்திருந்தான் ஆதவன். ஆகையால் இந்த D&Cக்கான செலவு மற்ற மருத்துவமனைகளை விட இங்குக் கூடுதலாகவே இருந்தது. அதனால் மறுநாள் இந்த D&C செய்வதற்கான ஏற்பாட்டையும் செய்தவாறு அவளையும் கவனித்துக் கொண்டான் ஆதவன்.

அன்று மாலை வேல்விழியின் அன்னையும், ஆதவனின் தாய் தந்தையரும் நேராய் மருத்துவமனைக்கே வந்துவிட்டனர்.

அன்றிரவு விழியுடன் அவனே தங்கி கொள்வதாய் உரைத்து அவளுடன் இருந்து கவனித்து கொண்டான்.

மறுநாள் காலை அவளுக்கு மயக்க மருந்து அளித்து சிகிச்சை செய்து
முடித்த பிறகு, குழந்தை பெற்ற பெண்களைத் தங்க வைத்திருந்த அறையிலேயே அவளை வைத்திருந்தனர். மயக்கத்தில் இருந்தாள் அவள். மயக்கம் தெளிந்த பிறகு இரண்டு மணி நேர அப்சர்வேஷனுக்குப் பிறகு அறையை மாற்றுவோம் என உரைத்திருந்தார் மருந்துவர். அந்த அறைக்கென்று ஒரு செவிலியர் பணியில் இருந்தார்.

ஆதவன் அந்த அறையின் வாயிலில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். நடந்த நிகழ்வுகளில் அவனின் மனமும் உடலும் வெகுவாய் சோர்ந்து போயிருந்தது. சோகமான முகத்துடன் அமைதியாய் அமர்ந்திருந்தவனை நோக்கி வந்த அந்த அறையின் செவிலியர், “சார் உங்க வொய்ப் பாப்பா பாப்பானு புலம்புறாங்க! நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க! நீங்க வந்து பாருங்க” என அழைத்தார்.

அவன் அறையினுள்ளே சென்று பார்த்த பொழுது, விழி கண்களை மூடியவாறு மயக்கத்தில் இருந்தவள், தன் வயிற்றைத் தடவியபடியே விழி நீர் வெளியேற, “பாப்பா! என் பாப்பா” எனக் கத்தி கொண்டிருந்தாள்.

மயக்கத்திலேயே இவ்வாறு புலம்புகிறாள் என்றால் அவளின் மனது எந்தளவிற்கு இந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டிருக்கும் என எண்ணி மனவலி கொண்டான் இவன். அடக்கிய அழுகையில் தொண்டை வலித்தது அவனுக்கு.

தன் கையில் இருந்த கைகுட்டையை வைத்து அவளின் கண்ணீரை துடைத்தவன், அவளின் கன்னத்தை வருடியவாறு, “ஒன்னுமில்லடா அழகம்மா! ஒன்னுமில்ல! ஒன்னுமில்ல” என மழலையைக் கொஞ்சும் விதத்தில் இவளை ஆறுதல்படுத்தி அவளின் உள்ளங்கையில் கையை வைக்க, அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டவள், புலம்பலை நிறுத்தினாள்.

அவள் கத்துவதை நிறுத்திய ஐந்து நிமிடத்தில், “சார் நீங்க வெளிய இருங்க! நான் ஏதாவதுனா கூப்பிடுறேன்!” என அந்தச் செவிலியர் ஆதவனை வெளியே போகச் சொன்னார்.

ஆனால் அவனின் கையை இறுக்கமாய் பற்றியிருந்தவளின் விரல்களைக் கூடப் பிரிக்க முடியவில்லை. கடினப்பட்டு அதைப் பிரித்தெடுத்தவன், அவளின் கையில் தனது கைகுட்டையை அழுத்தமாய் வைத்து விட்டு வெளியே வந்து விட்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கண் விழித்த வேல்விழியை வேறு அறைக்கு மாற்றியிருந்தனர். அறைக்குள்ளே வந்தவன் அவளின் நலனை விசாரித்து, வலியை பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க, “ஆமா இந்தக் கர்சீப் எப்படி என் கையில வந்துச்சு?” எனக் கேட்டாள் விழி.

நடந்தது எதுவும் அவள் நினைவில் இல்லை என்பதிலேயே அவளின் ஆழ்மனம் எத்தனையாய் இந்தக் குழந்தையை எதிர்பார்த்து இருந்திருக்கிறது எனப் புரிந்தது அவனுக்கு. ஆயினும் மீண்டுமாய் இதைப் பற்றிப் பேசி அவளைக் கவலைக்குள் ஆழ்த்தாமல், வேறு சில விஷயங்களை பேசி கொண்டிருந்தான்.

அந்நேரம் வந்தனர் மகேஸ்வரியும் ஆதவனின் பெற்றோரும்.

“உங்க அம்மாகிட்ட சொல்லி வைங்க தம்பி! பொண்டாட்டிக்கு இவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டல்ல செலவு செஞ்சி பார்க்கனுமா? எங்களுக்குலாம் கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டல் தானே கூட்டிட்டுப் போறான்! அவளுக்கும் அப்படிப் பார்த்திருக்க வேண்டியது தானே! தேவையில்லாம காசை கரியாக்குறானேனு சொல்றாங்க உங்க அம்மா” எனக் கோபமாய் உரைத்தார் விழியின் அன்னை மகேஸ்வரி.

அதற்கு விஜயா தன் பங்கிற்கு எதுவோ எடுத்து கூற, இருவரும் மாறி மாறி பேசி வாக்குவாதமாய் அது முற்ற, “என் பொண்டாட்டிக்கு செலவு செய்றதை பத்தி பேச யாருக்கும் இங்க உரிமை இல்ல! இதோட இந்த பேச்சை நிறுத்திக்கோங்க” என்றவன்,

“அப்பா நீங்க அம்மாவை கூப்பிட்டுட்டு நாளைக்கு ஊருக்கு கிளம்புங்க! அத்தை தான் இருக்காங்களே! அவளை அவங்க பார்த்துப்பாங்க” என்றான்.

“மருமகளுக்கு முடியலைனதும் அழுதுட்டே கிளம்பினாடா உங்க அம்மா!” என மனோகர் கூறவும்,

‘ஹ்ம்ம் அது மருமகளுக்கு முடியலைனு அழுதுருக்க மாட்டாங்க! வாரிசு அழிச்சிருச்சேனு அழுதுருப்பாங்க’ விழி மனதிற்குள்ளாக நினைத்து கொண்டாள்.

“சரிப்பா ஆனா ஒருத்திய பார்த்துகிறதுக்கு எதுக்கு இத்தனை பேரு! அதான் கிளம்ப சொல்றேன்” என்றவன்,

‘இனி விழியையும் அம்மாவையும் மட்டுமில்லை! என் அம்மாவையும் விழி அம்மாவையும் கூட ஒன்னா சேர்ந்து இருக்க விடக் கூடாது! ஒரு நைட் தானடா ஒன்னா இருந்தாங்க’ என எண்ணியவாறு விழிக்கு உணவு வாங்குவதற்காக வெளியேறி விட்டான்.

கருச்சிதைவிற்கான காரணத்தை கண்டறிய அந்த கரு சாம்பிளை லேப் டெஸ்ட்டிற்கு அனுப்பி பார்க்கலாம் என உரைத்தார் மருத்துவர்.

மறுநாள் காலை விழி டிஸ்சார்ஜ் ஆகலாம் என உரைத்திருந்தார். அன்றிரவு விழியின் அன்னை அவளுடன் தங்குவதாய் ஏற்பாடு ஆகியிருந்தது. இரவு வீட்டிற்கு செல்லும் முன் அவளருகில் வந்து அமர்ந்தான் ஆதவன்.

“நீ வேணா இன்னொரு மேரேஜ் செஞ்சிக்கடா” என்றாள் விழி. 

“அடடா! இப்ப வந்து சொல்றியே! இதை முன்னாடியே சொல்லிருந்தா ஆபிஸ்ல சைட் அடிச்ச பொண்ணைலாம் பிரபோஸ் செஞ்சிருப்பேனே” என தீவிரமாய் அவன் உரைக்க,

அவன் தோளில் ஒரு அடி போட்டவள்,
“உனக்கு வரதை பேசுடா! சைட் அடிக்க தான் நீ லாயக்கு! இதுல போய் பிரபோஸ் பண்ணுவானாம்! உடனே அந்த பொண்ணுங்க ஒத்துக்கிட்டு கல்யாணம் செஞ்சிக்குமாம்! பேச்சை பாரு” என கிண்டலாய் உதட்டை சுழித்தாள்.

அவளின் ரியாக்ஷனில் வாய்விட்டு சிரித்தவன், “என் பொண்டாட்டி இப்படிலாம் ஒரு ஆப்பர்சூனிட்டிய அவளாவே ஏற்படுத்தி தரும் போது நான் யூஸ் பண்ணிக்கனும் இல்லயாடி அழகம்மா” சுழித்த உதட்டை அவன் கிள்ளியெடுக்க,

“நான் எப்ப இப்படி சொல்லுவேன்னு காத்துட்டு இருந்தியோ! கொன்னுடுவேன் உன்னை” அவன் கைகளில் கிள்ளி வைத்தாள்.

“ஹ்ம்ம் இது! இது தான் என் அழகம்மா” என அவள் நெற்றியில் முட்டியவன்,

“இப்ப தானடி லேப் டெஸ்ட் கொடுத்திருக்கோம்! நீ ஏன் இதுக்கு நீ தான் ரீசனா இருப்பனு உன்னையவே ப்ளேம் பண்ணிக்கிற? ஏன் என்னோட விந்து பவர் இல்லாம கூட இப்படி ஆகலாம் தானே! யாருக்கிட்ட பிரச்சனை இருந்தாலும் சரி செய்ய பார்ப்போம்! சரியாகலையா இப்படியே இருப்போம்! விட்டுட்டு போறதுக்கா அவ்ளோ கஷ்டப்பட்டு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!” தன் மீதான அவனின் காதலில் நெஞ்சம் நெகிழ கண்ணீர் விட்டவள்,

“எனக்கு ஏன் இப்படி தோணுதுனு புரியலைடா! மைண்ட் ரொம்பவே நெகிட்டிவ்வா யேசிக்குது! ரொம்ப ஸ்ட்ரஸ்ஸா ஃபீல் ஆகுது” எனக் கூறி அழுதாள்.

“டோண்ட் வொரி பேபி! எல்லாம் சரி ஆகிடும்” என அவளை அணைத்து தேற்றியவன், அவளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழியை யோசிக்க ஆரம்பித்தான். 

ஒரு மாதம் முழுவதும் மகேஸ்வரி விழியுடன் தங்கியிருந்து அவளை கவனித்து கொண்டார். ஒரு மாதம் கழித்து வந்த லேப் டெஸ்ட் ரிப்போர்ட்டில் கருவில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றே வந்திருந்தது.

“சில கேஸ் இப்படி ஆகும். இது நார்மல் தான்! ஸ்ட்ராங் இல்லாம இருக்கும்! இது தப்பி பிறந்தாலும் பேபிக்கு ஏதாவது பிராப்ளம் இருக்கும்! இது நல்லதுனு நினைச்சிக்கோங்க” என்றார் மருத்துவர். 

விழியின் அழுத்தத்தை போக்க இயற்கை சூழ்ந்த இடத்தினில் மூன்றாம் ஹனிமூனை திட்டமிட்டான் ஆதவன்.

— தொடரும்