நறுங்காதல் பொழிபவனே – 15

ஆதவனுக்கும் வேல்விழிக்கும் திருமணமாகி ஒரு வருடம் கடந்திருந்த போதிலும், மூன்றரை வருடங்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது இவர்களின் காதல்.

வருடங்கள் ஓடினாலும், இவர்களின் காதல் மென்மேலும் மெருகேறி மேன்மை அடைந்த வண்ணமே இருந்தது. வாழ்வின் போக்கில் இருவருக்கும் பலவிதமான சண்டைகள், வாக்குவாதங்கள்  வந்த போதிலும், இருவரும் தங்களின் காதல் அதில் வீழ்ந்துவிடாது புதுபித்த வண்ணம் இருந்தனர்.

முகிலன் கவிதா இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று மாதங்களாகி இருந்தது. அச்சமயம் ஒரு வாரயிறுதி நாளில் ஆதவனும் வேல்விழியும் திருச்சி சென்றனர்.

சனிக்கிழமையன்று இரவு பொழுதில், முகப்பறையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் கவியும் விழியும் இரவுணவை பரிமாறி கொண்டிருந்தனர்.

முகிலன் உணவு உண்டவாறே தொலைகாட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருக்க, “ஏன்டா இதைப் பார்த்துட்டு இருக்க? இந்த விஜய் டிவிலாம் சுத்த போருடா! வேற ஏதாவது மாத்துடா” எனக் கூறியவாறே அவளும் அவர்களுடன் உணவுண்ண அமர்ந்தாள்.

அவர்களுடன் இணைந்து உண்ண அமர்ந்த கவிதா விழியின் பேச்சை கேட்டதும், “அவரை டா போட்டு பேசாதீங்க” எனச் சத்தமாய்க் கூறியிருந்தாள்.

அனைவரின் பார்வையும் இவர்கள் இருவர் மீதும் விழுந்தது.

வேல்விழிக்கு சட்டெனக் கோபம் வர, “ஏன் சொன்னா என்ன?” எனக் கேட்டாள்.

“அப்படிச் சொல்லாதீங்க அவ்ளோ தான்” என்றவாறு உண்ண ஆரம்பித்து விட்டாள் கவிதா.

அச்சமயம் விஜயாவோ, “இதென்ன ஆம்பிளை பசங்களைப் பொதுவுல டா போட்டு பேசுறது?” எனச் சமயம் பார்த்து பேச,

வேல்விழியின் விழி முகிலனை தான் நோக்கியது. அவன் அமைதியாய் இருப்பதைக் கண்டு மனம் வலித்தது. அதன் விளைவாய் விழி நீர் கண்களில் தளும்ப ஆரம்பிக்க, “சரி இனிமே நான் கூப்பிடலை” என உரைத்து அங்கிருந்து
அகன்று தனது அறைக்கு சென்று விட்டாள்.

ஆதவன் விழி என அழுத்தமாய் அழைக்க, கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள் அவள்.

அங்கு அனைவரின் முன்பும் அழுதுவிடக் கூடாதென்றே இவ்வாறு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளின் பின்னேயே ஆதவன் அறையினுள் சென்றான். இனி ஆதவன் பார்த்து கொள்வான் என மற்றவர்கள் அவரவர் உண்ணும் வேலையை மேற்கொண்டனர்.

ஆதவன் உள்ளே செல்லும் போது தேம்பி தேம்பி அழுதிருந்தாள் அவள்.

“விழி எதுக்குடி இப்படி அழுகுற? அவ ஏதோ சின்னப் பொண்ணு தெரியாம பேசினதுக்கு இப்படி அழுவியா?” என அவளின் கண்ணீரை துடைக்கப் போக,

அவனின் கையைத் தட்டி விட்டவள், “தொடாத என்னை! நீயும் அங்க எனக்குச் சப்போர்ட் பண்ணி பேசலைல!
நான் அவன்கிட்ட எந்தளவுக்கு ஃப்ரண்ட்லியா பேசுவேன்னு உனக்குத் தெரியும் தானே! நான் அவன் மேல வச்ச பாசத்தை எல்லாம் இன்னிக்கு அவன் அமைதியா இருந்த இந்த நொடில சுக்கு நூறா உடைச்சிட்டான்டா! இனி நான் என்னிக்குமே அவன்கிட்ட பேச மாட்டேன்” எனக் கூறி கட்டிலில் அழுதவாறு படுத்து கொண்டாள்.

ஒரு மாதிரி, தான் ஏதோ தனக்கு சொந்தமில்லாத ஒரு இடத்தில் இருப்பது போன்ற உணர்வு அவளை ஆட்கொள்ள, தன்னிரக்கத்தில் அழுது கரைந்தாள் அவள்.

ஆதவனுக்கு அவளின் அழுகையில் மனம் கனத்துப் போனது.

தனக்கு முதுகு காண்பித்துப் படுத்திருந்தவளின் அருகில் அமர்ந்தவன், அவளின் தலையைக் கோத, தட்டி விட்டாள்.

அவளின் தலையைப் பற்றித் தன் மடியில் வைக்க, மீண்டுமாய் தலையைத் தலையணையில் வைத்து கொண்டாள்.

“ம்ப்ச் விழி இங்க பாரு” என அவள் முகத்தைத் தன்னை நோக்கி திருப்பினான்.

அவள் பார்க்கவே இல்லை. விழியைத் தாழ்த்தி கொண்டாள்.

அந்நேரம் விஜயா உணவுண்ண இருவரையும் அழைத்தார். ஆதவன் பாதி உணவில் எழுந்து வந்துவிட்ட கவலை அவருக்கு.

“நான் சாப்பிட வரலை” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

பெருமூச்செறிந்தவனாய் அங்கிருந்து சென்று விட்டான்.

‘வேண்டாம்னா போய்டுவானா! நிஜமாவே இங்க எனக்குனு யாருமே இல்லையா?’ என அவளின் மனம் குமுற அழுது கொண்டே உறங்கி போனாள்.

தான் சாப்பிடாமல் வைத்து விட்டு வந்த உணவை உண்டு முடித்து அரை மணி நேரம் கழித்து வந்த ஆதவன், அவளை எழுப்பி அமர வைத்தான்.

அவள் முகத்தினில் இருந்த கண்ணீர் தடத்தைத் துடைத்து விட்டான். அவளுக்கெனக் கொண்டு வந்த தோசையைப் பிட்டு அவள் வாயருகே கொண்டு போனான்.

அது வரை விழியைத் தாழ்த்தி அவனைப் பார்க்காதவாறு அமர்ந்திருந்தவள், அவன் முகத்தை விழி உயர்த்திப் பார்த்தாள்.

“ஹ்ம்ம் சாப்பிடுடா அழகம்மா!” என அவளின் கன்னத்தில் இதழ் பதித்து வாயருகே தோசையைக் கொண்டு செல்ல, அவள் வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

இத்தனை நேரமாய் மனதில் எழுந்த கோப தாபங்கள், தன்னிரக்கம், கழிவிறக்கம் அனைத்தும் அவளை விட்டு அகன்றோட, சாந்தமான மனநிலையுடன் அவன் ஊட்டும் உணவை உண்டு கொண்டிருந்தாள்.

அவன் கடைசி வாய் ஊட்ட வரும் போது, வாயை திறக்காது, கன்னத்தைத் திருப்பி அவள் காண்பிக்க, இத்தனை நேரமாய் அவளை எண்ணி பாரமான மனது அவளின் செயலில் எடை இறங்க மென்னகை புரிந்தவன், அழுத்தமாய் இதழ் பதித்துக் கடைசி வாய் உணவை அவளுக்கு ஊட்டினான்.

அவளுக்கு ஊட்டிவிட்டுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அவன் சமையலறை நோக்கி செல்ல, முகப்பறையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் பார்வையும் ஆதவன் மீது தான் இருந்தது.

அவன் எதையும் பொருட்படுத்தாது கையைக் கழுவி விட்டு தன்னறைக்குள் சென்று விட்டான்.

அங்கு விழி அமைதியாய் அமர்ந்திருக்க, அவளருகில் அமர்ந்தவனின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.

“நீ ஏன்டா அங்க எனக்காகப் பேசலை” எனக் கேட்டாள்.

“அவ சின்னப் பொண்ணுடி! இப்ப தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கா.. அங்க அப்ப யார் எது பேசியிருந்தாலும் அது கண்டிப்பா பிரச்சனையில் தான் முடிஞ்சிருக்கும்! நீ இதெல்லாம் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத!” அவள் தலையை வருடியவாறே நிதர்சனத்தை உரைத்தான்.

சற்று கோபமாய் எழுந்து அமர்ந்தவள், “நான் அவனை அப்படிக் கூப்ட கூடாதுனு சொல்ல இவ யாரு? இவளே இப்ப தான் வந்திருக்கா.. அப்ப உன் தம்பிக்கு நான் முக்கியம் இல்லைல! என்கிட்ட எவ்ளோ ஃப்ரண்ட்லியா இருப்பான்! இப்ப எப்படி மாறிட்டான் பாருடா” அவன் மீதான பாசத்தில் கண்களில் நீர் தேங்கியது மீண்டும் அவளுக்கு.

“சரி விடுடி!” என அவள் கண்ணீரை துடைத்தவன்,

“அம்மா அப்பா அவங்களை டிவியே பார்க்க விடுறது இல்ல! நம்ம இருக்க நேரம் தான் அவங்க கைக்கு ரிமோட் கிடைக்குது! அவன் மாத்தின நேரம் போய் நீ மாத்த சொன்னதும் அம்மா அப்பா மேல இருக்கக் கோவத்தை உன் மேல காமிச்சிட்டா” கவியின் மனநிலையை எடுத்துரைத்தான்.

“அதுக்கு நான் தான் கிடைச்சேனா? என் மேல என்ன தப்பு சொல்லு? நான் அப்படிக் கூப்பிட்டது தப்பா சொல்லுடா?” எனக் கேட்டாள்.

“அப்படி இல்ல! யார் மேலயும் தப்பு இல்லடி! அவங்க நிலைமையை நினைச்சு பாரு! நம்ம இருக்கும் போது தான் அவங்க கொஞ்சம் ஃப்ரீயா இருக்காங்க! மத்த நேரத்துல அம்மா ரொம்ப பண்றதா தம்பி சொன்னான்” என்றவன் கூறவும்,

“அப்படி என்ன பண்றாங்களாம்?” எனக் கேட்டாள்.

“ஆமா வம்பு பேச வந்துடுவியே” என அவளை அவன் கலாய்க்க, அவன் புஜத்தில் கிள்ளி வைத்து முறைத்தாள்.

“சரி சரி மோகினியாட்டம் முறைக்காதே” என்றவன்,

“வீட்டு வேலை செய்யச் சொல்லி அம்மா அவளை ரொம்ப டார்ச்சர் செய்றாங்களாம். காலைல ஏழு மணிக்குக் காலேஜ் கிளம்புறதுக்குள்ள சமையல்லாம் செஞ்சி வச்சிட்டுப் போகச் சொல்றாங்களாம். அவளால எப்படிச் சமைக்க முடியும் சொல்லு. அவ அவளுக்கு மட்டும் நைட்டே ஏதாவது எக்ஸ்ட்ரா செஞ்சிப்பா! இட்லி ஊத்திட்டு காலைல இட்லி உப்மா மாதிரி செஞ்சி காலேஜ்க்கு எடுத்துட்டுப் போவாளாம். இதுல எங்க இவங்களுக்கு அவ சமைச்சு வைக்க முடியும்.

தினமும் நைட் அவ தான் பாத்திரம் எல்லாம் கழுவி வச்சிட்டுப் போய்ப் படுக்கிறா! நைட் லைட் போட்டு படிக்க விடமாட்றாங்களாம். கரெண்ட் பில் அதிகம் ஆகுதுனு சொல்றாங்களாம்.

இப்படிப் பல மெண்டல் பிரஷர் அவளுக்கு. அதுல ஏதோ ஒன்னு மனசுல வச்சி சொல்லிருப்பா.. அதனால இதைப் பெரிசா எடுக்காதடி!

நம்மளாவது மைண்ட் ரிலாக்ஸ்காக வீக்கெண்ட்ஸ்ல வெளில போறோம். மன்த்லி ஒன்ஸ் பீச்க்கு போறோம்.

இவங்க வீட்டிலேயே இருக்காங்க. வீக்கெண்ட்ஸ்ல வெளில போகக் காசு வேணும்ல. அவன் சம்பளம் வேற அம்மா வாங்கி வச்சிக்கிட்டுத் தரலையாம். இனி அம்மாகிட்ட சம்பளம் முழுசா தர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தான். வீக் டேஸ்ல அவன் காலைல போய்ட்டு நைட் தான் வரான். அவளுக்குக் காலேஜ்ல இருந்து வந்த பிறகு கூடப் பேச ஆளில்ல. அம்மா அப்பா பேசிக்கிட்டே அவங்க டிவி பார்த்துட்டு இருக்காங்களாம். அவ என்ன பண்ணுவா சொல்லு. வயசானா மெச்சூரிட்டி வரும்னு சொல்லுவாங்க இங்க அப்படியே தலைகீழா இருக்கு. நான் என்ன பண்றதுனு சொல்லி தம்பி புலம்புறான்” வீட்டின் நிலவரம் முழுவதும் உரைத்திருந்தான் ஆதவன்.

“ஹ்ம்ம் கவியை நினைச்சுப் பாவமா தான் இருக்கு. ஆனாலும் இது தேவை தான். படிக்கும் போது மேரேஜ் வேண்டாம்னு சொன்னா கேட்டானா உன் தம்பி! படிச்சு முடிச்சு ஒரு வேலை வாங்கிட்டுத் தனியா போயிருந்தா இந்தப் பிரச்சனைலாம் வந்திருக்காதுல” என்றவள்,

“இப்ப புரியுதா உங்கம்மாவ பத்தி! அன்னிக்குக் கவி வீட்டு சீர் பத்தி பெருமையா தான் பேசினாங்கனு சொன்னதுக்கு, அம்மா அப்படி நினைச்சு சொல்லலை, சீர் பதிலா காசு கொடுக்கலாமேன்ற ஆதங்கத்தை அப்படிச் சொல்லிருக்காங்க, நீ தான் தப்பா புரிஞ்சிக்கிட்டனு என்கிட்ட சொன்னியே! இப்ப புரியுதா” எனக் கேட்டாள்.

அமைதியாய் அவளைப் பார்த்தான் ஆதவன்.

“ஆனா ஒன்னுடா நான் சொன்னது கண்டிப்பா நடக்கப் போகுது” எனத் தீவிரமாய் அவள் உரைக்கவும்,

“என்னது நடக்கப் போகுதுனு சொல்ற?” என யோசனையாய் அவன் கேட்க,

“கவி கண்டிப்பாகத் தனிக்குடித்தனம் போய்டுவா! என்ன அவ அம்மா அப்பா பேச்சு கேட்டு போவானு முன்னாடி நினைச்சேன். ஆனா உங்க அம்மா டார்ச்சர் தாங்காமலே போய்டுவானு இப்ப புரியுது” அவள் சொல்லி முடிக்கவும் அவன் முறைக்க,

“என்ன முறைக்கிற? நல்ல வேளை நம்ம கூட்டு குடும்பமா அவங்க கூட இருக்கலைனு நிம்மதி தான் வருது. கடவுள் காப்பாத்திட்டான் குமாரு” எனக் கூறி அவள் சிரிக்க,

அவனின் முறைப்பு அவள் சிரிப்பில் கனிவான பார்வையாய் மாறியிருந்தது.

பெருமூச்செறிந்தவனாய், “ஆமா என் தம்பியோட நிலைமையைப் பார்த்துட்டு, கண்டிப்பா உன்னையும் அம்மாவையும் ஒன்னா வைக்கக் கூடாதுனு நினைச்சிக்கிட்டேன். உங்களுக்கு இடையில சிக்கி நான் தான் தவிக்கனும். தள்ளி இருந்தே சில சமயங்கள்ல தத்தளிக்க வேண்டியதா இருக்கு!” என்றான்.

“ஹ்ம்ம் புரிஞ்சா சரி” என்றவாறு படுத்து கொண்டாள்.

அவனும் பலவிதமான யோசனைகளுடன் படுத்தவன், மனச்சோர்வில் உடனே உறங்கி போனான்.

இந்நிகழ்விற்குப் பிறகு விழி, முகிலன் மற்றும் கவிதாவிடம் பேசுவதை முழுதாய் நிறுத்தியிருந்தாள். அவர்களும் அவளிடம் பேசுவது இல்லை. எங்கேனும் பார்க்கும் போது சிறு புன்னகையுடன் அவர்களும் கடந்து விடுவர்.

மறுநாள் காலை பத்து மணியளவில் விழியுடன் கிளம்பியவாறு வீட்டின் முகப்பறைக்கு வந்த ஆதவன், “அம்மா, நான் விழியை அவ அம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுறேன்” எனக் கூறியவாறு கிளம்ப எத்தனிக்க,

“என்னடா இங்க வர்ற அன்னிக்குலாம் அங்க போயாகனுமா? சரி அப்படிப் போனாலும் பார்த்துட்டு வந்தா போதாதா? எதுக்கு விட்டுட்டு வர?” எனக் கேட்டார்.

“அவ அம்மா அப்பா கூட இருக்கனும்னு ஆசைப்படுறா.. இருந்துட்டு வரட்டுமே” என்று அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“சரி! இரண்டு பேரும் எதுவும் ட்ரீட்மெண்ட் போறீங்களா இல்லையா? ஒரு வருஷம் ஆயிடுச்சு குழந்தை பெத்துக்கிற எண்ணமே இல்லையா” எனக் கேட்டார் விஜயா.

“அம்மா அதெல்லாம் அவ நல்லா ஹெல்தியா தான் இருக்கா! நேரம் வரும் போது எல்லாம் தானா நடக்கும்” என்றான் ஆதவன்.

“அதுக்கில்லடா அவ வீட்டுல பெரியப்பா பொண்ணோ சித்தப்பா பெண்ணோ யாருக்கோ கல்யாணமாகி பல வருஷமாகியும் குழந்தை இல்லையாமே! இவளுக்கும் முதல்லயே டெஸ்ட் பண்றது நல்லது தானே” என்றவர் கூறி முடிக்கும் முன்பே,

“அம்மாஆஆ” என எரிச்சலாய் மொழிந்தவன், “அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” எனக் கூறியவாறு கிளம்பி விட்டான்.

தங்களின் அறையில் இருந்து விஜயாவின் இப்பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கவிதா முகிலனிடம்,

“அதானே பார்த்தேன்! கல்யாணமாகி இரண்டு மாசமான நமக்கே குழந்தை இல்லையானு கேட்டு டார்ச்சர் பண்றாங்களே, இவங்களை ஒன்னும் கேட்கலையானு நினைச்சேன்! பரவாயில்லை உங்கம்மா இந்த விஷயத்துல பாரபட்சம் இல்லாம தான் நடந்துக்கிறாங்க” நக்கலாய் உரைத்திருந்தாள்.

“என் நிலைமையும் என் அண்ணன் நிலைமையும் தான் இதுல திண்டாட்டமா இருக்கு! இது எங்கம்மாவுக்குப் புரிய மாட்டேங்குதே” எனக் கூறியவாறு வெளியே கிளம்பினான் முகிலன்.

அன்றிரவு சென்னைக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்த ஆதவனின் தோளில் சாய்ந்தவாறு விழி கண்களை மூடியிருக்க, ஆதவனின் எண்ணங்கள் காலையில் தாய் உரைத்த விஷயத்தில் பயணித்திருந்தன.

“உனக்குக் குழந்தைங்கனா பிடிக்குமாடா? எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதுவும் பிரக்னென்ட்டா இருக்கப் பொண்ணுங்கள பார்க்கவே பிடிக்கும். அந்த நேரத்துல அவங்க ரொம்ப அழகா தெரிவாங்க. அவங்கள எல்லாரும் எந்த வேலையும் செய்ய விடாம சந்தோஷமா வச்சு பார்த்துப்பாங்க! அந்தக் குழந்தை பூ போல அழகா இருக்கும். கொஞ்சிட்டே இருக்கலாம். இப்படிப் பல காரணங்களுக்காகப் பிரக்னென்ட்டா இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் காலேஜ் படிக்கும் போதே வயித்துல தலைக்காணிலாம் வச்சி பார்த்திருக்கேன். நான் கர்ப்பமா இருக்கும் போது பார்க்க எப்படி இருப்பேனு நினைச்சி பார்த்துப்பேன். அந்தப் பீரியட் ஆஃப் லைப்பை அனுபவிச்சி ரசிச்சு சந்தோஷமா வாழனும்டா”

திருமணப்பேச்சு முடிவானதும் விழி அவனிடம் குழந்தை குறித்துப் பூரிப்பாய் உரைத்த உரையாடல்கள் எல்லாம் அவன் மனக்கண்ணில் ஊர்வலம் போயின.

‘எவ்ளோ ஆசையா குழந்தை பெத்துக்கிறது பத்தி கனவு கண்டுட்டு இருந்தா.. அம்மா சொல்றது மாதிரி டெஸ்ட் பண்ணி பார்க்கலாமா? இவ அதுக்கு ஒத்துப்பாளா?’ என எண்ணியவாறு இவன் இருக்க,

“ஆதவ் நம்ம அத்தை சொன்ன மாதிரி டெஸ்ட் பண்ணலாமாடா?” எனக் கேட்டவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஒவ்வொரு மாசமும் எதிர்பார்த்து ஏமாந்து போறது ரொம்பவே கஷ்டமா இருக்குடா” தொண்டை கமற அவள் உரைக்க,

“என்னடி கல்யாணமாகி ஒரு வருஷம் தானே ஆகுது! பாட்டி மாதிரி பேசுற” என வம்பிழுத்தான்.

“ம்ப்ச் எனக்குக் குழந்தைங்கனா எவ்ளோ பிடிக்கும்னு உனக்குத் தெரியும்ல! டிலே பண்ண வேண்டாம்னு தோணுது எனக்கு” என்றாள்.

“சரி நல்ல பெரிய அனுபவமுள்ள டாக்டரா பார்க்கலாம்! நான் விசாரிக்கிறேன்” எனக் கூறியவன் அதற்கான முயற்சியில் மறுநாளே ஈடுபடத் துவங்கினான்.

அனைத்து டெஸ்ட்களையும் எடுக்க வைத்து இருவரையும் பரிசோதித்த மருத்துவர், இருவரும் நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக இருப்பதாய் உரைத்தார். கர்ப்பபையை சுத்தம் செய்ய மட்டும் அறிவுறுத்தினார்.
அதற்காக மருத்துவர் குறிப்பிட்ட நாளன்று ஆதவனுடன் சென்ற விழிக்கு, பயத்தில் கைகள் சில்லிட்டது.

ஆதவனை வெளியில் காத்திருக்க சொல்லி, அவளைச் சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றார் மருத்துவர்.

அவளின் பயத்தைக் கண்ட மருத்துவர், “ஒன்னுமில்லைமா! ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்” என ஆறுதல் உரைத்தார்.

“இல்ல இந்த இன்ஸ்ட்ருமெண்ட்லாம் பார்த்தா பயமா இருக்கு” கண்களில் பயத்தைத் தேக்கி உரைக்க,

“பார்க்க தான் அப்படி இருக்கும். நான் உங்களுக்கு வலியே தெரியாம க்ளீன் பண்ணி முடிஞ்சிடுவேன்” என்றதும்,

“அப்ப மயக்க ஊசிலாம் போட மாட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“இதுக்கு மயக்க ஊசிலாம் தேவையில்லமா! நீ பயப்படாம ரிலாக்ஸ்டா இருமா” எனக் கூறி தன் வேலையை ஆரமபித்தார்.

பத்து நிமிடத்தில் அந்தச் சிகிச்சை முடிந்து விட்டது. வெளியில் வந்து ஆதவனுடன் அமர்ந்து கொண்டவள், ஆதவன் தோளில் அழுத்தமாய் முகத்தைப் புதைத்து கொண்டாள். சுற்றம் எதுவும் அவள் கருத்தில் பதியவே இல்லை.

“ஹே விழி! என்னடி வலிக்குதா?” எனக் கேட்டான்

“ஹ்ம்ம் அடி வயிறு ஒரு மாதிரி வலிக்குதுடா! பரவாயில்லை நம்ம பாப்பாக்காகத் தானே” எனப் பல்லை கடித்தவாறு உரைத்தவள், அந்த நாற்காலியில் பின்னோக்கி தலை சாய்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.

“சரி இரு நான் டாக்டர் பார்த்துட்டு வரேன்” என்று மருத்துவரிடம் பேசி விட்டு வந்தவன், “இன்னிக்கு ஒரு நாள் அப்படிப் பெய்ன் இருக்குமாம்டி! அப்புறம் சரியாகிடும்னு சொல்லிருக்காங்க” எனக் கூறியவன், அவளது கவனத்தை வலியில் இருந்து திசை திருப்பும் விதமாய் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவளிடம் பேசி கொண்டே அரை மணி நேரம் வரை கடத்தியவன், அவளை இளைப்பாற விட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

இந்நிகழ்வு நடந்த இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் காலை விநாயகர் ஆலயத்தில், வேல்விழி ஆதவனுடன் அரச மரத்தடியில் இருக்கும் அந்த சின்னஞ்சிறிய விநாயகர் சிலைக்குத் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.

ஆதவன் அக்கோவில் வளாகத்தினுள் இருந்த கிணற்றில் இருந்து நீரை இரைத்து வந்து இவளிடம் வழங்க, இவள் அந்நீரை விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டிருந்தாள்.

பதினோறு குடங்கள் நீர் ஊற்றிய பிறகு, விநாயகருக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ வைத்து, கற்பூரம் ஏற்றி, அந்தப் பிள்ளையாரை மரத்துடன் சேர்த்து சுற்றி வந்து பிரார்த்தனை முடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

“ஷப்பாஆஆ! இன்னும் எத்தனை நாள்டா இதைச் செய்யனும்! உங்கம்மாக்கு யார் தான் இப்படிலாம் ஐடியா கொடுக்கிறாங்களோ தெரியலையே” எனச் சோர்வாய் மெத்தையில் அமர்ந்தவாறு கூறினாள் விழி.

“அம்மா நம்ம நல்லதுக்காகத் தான் எதுனாலும் சொல்லுவாங்க” என்றான் ஆதவன்.

“ஆமா இந்த டயலாக்கை மட்டும் மாத்திடாத நீ” என்றாள் சலிப்பாய்.

“அம்மா அப்பா இந்த வாரம் சென்னை வராங்கடி” என்றான் ஆதவன்.

“என்னது சென்னை வராங்களா?” அதிர்ச்சியாய் கேட்டவள், “எதுக்கு வராங்க? நம்மளை கோயில் கோயிலா கூட்டிட்டு போகவா? ஏற்கனவே கோயில் கோயிலா தானே இரண்டு மாசமா சுத்திட்டு இருக்கோம்” அலுப்பாய் அவள் கூற,

“இல்லடி யாரோ தெரிஞ்சவங்க கல்யாணத்துக்குப் போக வராங்க” என்றான்.

“எத்தனை நாள் நம்ம கூடத் தங்குவாங்க” எனச் சோகமாய் அவள் கேட்க,

“ஹ்ம்ம் ஒரு மூனு நாலு நாள் இருப்பாங்க” என்றான்.

“இங்க பாரு இப்பவே சொல்லிட்டேன்! உங்கம்மா இருக்காங்கனு நீ கிச்சன் பக்கமே வராம எல்லா வேலையும் என்னையவே செய்ய வச்சீனா அவ்ளோ தான். ஆபீஸ் வேலையும் பார்த்துட்டு இவங்களுக்கும் சமைச்சு கொடுத்துட்டு உதவிக்கு ஆளுமில்லாம ரொம்பக் கஷ்டமா இருக்குடா. நீயும் அத்தையும் என்னமோ சமையல்னா என்னனே தெரியாத மாதிரி கிச்சன் பக்கமே வர மாட்டேங்கிறீங்க. இதுவே எங்கம்மா வந்தா எவ்ளோ ரிலாக்ஸ்டா இருக்கு தெரியமா.. கூட இருந்து பாதி வேலை அவங்களே செஞ்சிடுவாங்க” ஆதங்கமாய் உரைத்தாள்.

“சரிடி அம்மா அப்பா வரும் போது நான் ஹெல்ப் பண்றேன் போதுமா! புலம்பாம ஆபிஸ்க்கு கிளம்பு” என அவளைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.

விநாயகர் பூஜையின் நிறைவு நாளன்று,
ஏனோ அவள் சற்று பதட்டமாய் இருப்பதாய் தோன்றியது அவனுக்கு.
ஆனால் பூஜை முடிந்த பின்பு பேசிக் கொள்ளலாம் என அவளைக் கவனித்தவாறே பூஜைக்குரிய பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டு இருந்தான்.

கற்பூரம் ஏற்றி விட்டுக் கண்ணை மூடி வேண்டிக் கொண்டவளின் விழிகளில் இருந்து நீர் வழிந்தது.

அதைக் கண்டவன் பதறியவனாய் அவள் கைப்பற்றி, “அழகம்மா! என்னடா ஆச்சு?” எனக் கேட்டான்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணீரை துடைத்தவளாய், “நீ அப்பாவாகப் போறடா!” என்றாள். சென்ற முறை கூறியது போல் மகிழ்வும் மின்னலும் இல்லாது இம்முறை அவள் விழிகளில் பயமும் கண்ணீருமே வியாபித்திருந்தது.

இச்செய்தியை கேட்டதும் ஆதவனின் உள்ளம் அதிர்ந்தடங்கியது. அவனின் உணர்வுகள் முன்பு போலவே இப்பொழுதும் பிரதிபலித்தது. அதீத மகிழ்வில் தொண்டை அடைத்தது. அவளை அணைத்துக் கொள்ளப் பரபரத்த கையைக் கட்டுப்படுத்தியவன், “அதுக்கு ஏன்டா அழற?” எனக் கூறி அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

“ரொம்ப பயமா இருக்குடா! இந்தத் தடவையும் இப்படி ஆகிட கூடாதேனு” எனக் கூறும் போதே அவளின் கை அவள் வயிற்றைத் தடவி கொடுத்தது.

“அதெல்லாம் ஒன்னும் நடக்காது. நம்ம செஞ்ச பூஜைக்கான பலன் கிடைச்சிருக்கு! கடவுள் கூட இருந்து காப்பாத்துவாரு” என அவளுடன் சேர்த்து தனக்குமாய் ஆறுதல் உரைத்துக் கொண்டான்.

“இந்தத் தடவை நம்ம உடனே யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். வெயிட் பண்ணுவோம்” என்றவன் கூறியதற்கு சரியெனத் தலையசைத்து கொண்டாள்.

கரு கொடுத்த கடவுள் அதற்கு உரு கொடுக்கத் தவறிப்போனாரோ?

— தொடரும்