நறுங்காதல் பொழிபவனே – 14

மருத்துவமனையில் இருந்து ஆதவனுக்குக் கைபேசியில் அழைப்பு விடுத்தாள் வேல்விழி.

இரவு ஷிப்ட் முடித்து வந்து பகல் நேர தூக்கம் என்பதால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் ஆதவன்.

அவள் இரண்டு மூன்று முறை அழைப்பு விடுத்தே பிறகே ஏற்றான் அவன்.

“என்னடி இப்ப கால் பண்ணிருக்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே” அவள் வழமையாய் அவனை எழுப்புவதற்காக அழைக்கும் அழைப்பு என எண்ணி இவ்வாறு உரைத்திருந்தான்.

“ஆதவ் நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்டா!” என விழி கூறியதும் சட்டெனப் படுக்கையை விட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க, மணி மதியம் மூன்று எனக் காண்பித்தது.

“என்னடி என்னாச்சு? எதுக்கு ஹாஸ்பிட்டல் போன? உனக்கு எதுவும் பிராப்ளம் இல்லைல” எனக் கேட்டான்.
அவன் குரலில் நடுக்கம் இருந்தது.

“திடீர்னு ப்ளீட் ஆகிடுச்சுடா! என்ன பண்றதுனு தெரியலை! ஆபிஸ் பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்க்கு வந்துருக்கேன். என் டீம்மெட் நிலா கூட வந்திருக்கா” சற்று சோர்வாய் வெளி வந்தது அவளின் குரல். தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.

“பிராப்ளம் ஒன்னும் இல்லைல! எந்த ஹாஸ்பிட்டல்? அட்ரஸ் சொல்லு! நான் உடனே கிளம்பி வரேன்” எனக் கூறியவாறே தனது உடுப்பை மாத்த ஆரம்பித்தான். அவனின் மனது பதட்டத்தில் நடுங்கியது.

“வேணாம்டா நீ ஆட்டோ பிடிச்சு இங்க வரதுக்குள்ள, செக் அப் முடிச்சிட்டு நானே வந்துடுவேன்! ஒன்னும் பிராப்ளம் இல்லைடா! சில பேருக்கு இப்படி ஆகும்னு என் கூட வேலை பார்க்கிற ரம்யா அக்கா சொன்னாங்க” கேட்கும் பொழுதே கண்களில் இருந்து உருண்டோடி வழிந்த நீரை துடைத்துக் கொண்டான் ஆதவன்.

அவள் கூறுவதும் சரி தான் என்றாலும் அவளைத் தனியாய் விட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோமே எனக் கோபமாய் வந்தது அவனுக்கு.

“சரிடா நான் உள்ளே போறேன்” எனக் கூறி இணைப்பை துண்டித்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டு வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினாள் வேல்விழி. நிலா அவளுக்கு கேப் புக் செய்து அனுப்பி வைத்திருந்தாள்.

அவளின் கண்கள் கலங்கி தலையெல்லாம் கலைந்து வெகு சோர்வாய் தெரிந்தாள் அவள்.

வீட்டிற்கு வந்து சோபாவில் அமர்ந்தவளிடம், “என்னடா என்னாச்சு! எப்படி இப்படி திடீர்னு ஆச்சு? இப்ப எப்படி இருக்கு உடம்பு?” எனக் கேட்டான்.

“எனக்கு ஒன்னும் தெரியலைடா! லைட்டா ப்ளீட் ஆகுது. டாக்டர் கரு தங்காதுனு சொல்லிட்டாங்கடா” என அருகே நின்றிருந்தவனின் இடையை அணைத்து கதறி அழுதாள்.

பேரதிர்ச்சி அவனுக்கு! அவனின் முகம் வெளிறிப் போனது.

“என்னடி சொல்ற? ஏன்னு சொன்னாங்களா?” பதட்டமாய் அவன் கேட்க,

“எதுவுமே சொல்லைடா அந்த டாக்டர்! ஜஸ்ட் செக் பண்ணிட்டு இது தங்காதுனு சொல்லிட்டு போய்ட்டாங்க. எனக்கு அதுல இருந்து வெளில வரவே முடியலை. நிலா தான் கேப் பிடிச்சு அனுப்பி வச்சா” தேம்பியவாறு உரைத்தாள்.

“பாப்பாக்கு எதுவும் ஆகாதுலடி” அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

“ஒன்னும் ஆகாதுடா! என்னடா இப்படிப் பேசுற நீ? நம்ம பாப்பாக்கு ஒன்னும் ஆகாது. நீ வேணா பாரு” என அவனை அருகில் அமர்த்திக் கண்ணீரை துடைத்து ஆறுதல் உரைத்தாள்.

“தங்கம் அப்பாகிட்ட சொல்லு, எனக்கு ஒன்னுமில்லைப்பா, நான் நல்லபடியா வெளில வந்து உங்களைப் பார்ப்பேன்னு
சொல்லு பாப்பா” என வயிற்றில் இருந்த குழந்தையிடம் பேசினாள்.

அவனின் கண்கள் விடாது கண்ணீரை பொழிய, “ஏன்டா அழுற? நீ அழுதா எனக்கும் அழகை வருதுடா! அழாதடா” எனத் தன் கண்ணில் வழிந்த நீரை பொருட்படுத்தாது அவன் கண்ணீரை துடைத்து கொண்டிருந்தாள்.

“சரி எனக்குப் பசிக்குது! ஈவ்னிங் சாப்பிட மாதுளை உரிச்சு டப்பால போட்டு கொடுத்தல. அது என் பேக்ல இருக்கு போ போய் எடுத்துட்டு வா. போடா.. எனக்கும் பாப்பாக்கும் பசிக்குதுல” என அவனைக் கலைத்தாள்.

அவன் இயந்திரதனமாய் எடுத்து வந்து கொடுக்க, அதை சாப்பிட்டுக் கொண்டே விழி, “பாப்பா பாரு அப்பா சின்னப் பையன் மாதிரி அழுறாங்க. நீ வெளிய வந்த பிறகு போட்டு அடிக்கனும் சரியா.. இப்ப நான் சாப்பிடுற இந்த மாதுளைல எல்லாம் சரியாகிடனும்.. சரியா பாப்பா” எனப் பேசி கொண்டிருந்தாள்.

ஆதவன் கண்ணீருடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் வழமையாய் பரிசோதனைக்குச் செல்லும் மருத்துவருக்கு அழைத்துப் பேசினான்.

“விழி நீ கொஞ்சம் நேரம் தூங்குடா! நம்ம டாக்டர்கிட்ட பேசிட்டேன். சாயங்காலமா வர சொன்னாங்க” எனக் கூறி அவளைத் தூங்க வைத்தான்.

ஏனோ அவனின் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது. விழி தைரியம் உரைத்தாலும், அவனுக்கு எதிர்மறை எண்ணமே ஆட்டுவித்தது. அதுவே விடாது கண்ணீராய் வடிந்து கொண்டிருந்தது.

பின் மாலை வேளையில் அவளை எழுப்பிக் கிளம்ப வைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றான்.

அங்கு அவளுக்கு ஸ்கேன் செய்து பார்த்து விட்டு அந்த மருத்தவர், “35 நாள் தானே ஆகுது. 4 வீக்ஸ் பேபி இருக்கு! பயப்படாதீங்க. பார்த்துக்கலாம்” என உரைத்து மாத்திரைகளை எழுதி கொடுத்தவர் ஒரு வாரம் கழித்து வர சொன்னார். அந்த மருத்துவரின் வார்த்தையில் அத்தனை வலிமை இருந்ததாய் தெரியவில்லை இருவருக்கும். ஆறுதலுக்காக அவர் உரைப்பதாய் தோன்றியது.

இருவருக்குமே மனதில் பெருத்த அவநம்பிக்கை குடி கொண்டது. இருப்பினும் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கை அளித்து, ஆறுதல் உரைத்துக் கொண்டு உலவினர். அந்த ஒரு வாரமும் இருவரும், தான் அழுதால் தங்களது இணையும் அழுவர் எனத் தங்களது கண்ணீரை மற்றவருக்கு தெரியாத வண்ணம் மறைத்து அழுது தீர்த்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில் மீண்டுமாய் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அவளின் வயிற்றில் ஜெல்லை தடவி, கருவியைக் கொண்டு வயிற்றுப் பகுதிகளில் அழுத்தியவாறு மானிட்டரில் கருவின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் புருவங்கள் இடுங்க, “நீங்க ப்ரெக்னெண்ட்டா இருந்தீங்களா?” எனக் கேட்டார்.

விழிக்குக் கண்கள் கலங்கி விட்டது.
சற்று எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் இப்படி இந்த நேரத்தில் கேட்டது அவளை அங்கேயே அழ வைத்துவிட்டது.

“என்ன டாக்டர் இப்படிக் கேட்குறீங்க? போன வாரம் ஸ்கேன் பண்ணப்போ 4 வீக்ஸ் பேபி இருக்கிறதா டாக்டர் சொன்னாங்களே” எனக் கேட்டாள்.

அந்த மருத்துவர் எதுவும் உரைக்காது, அவர்கள் வழமையாய் பார்க்கும் மருத்துவரை பார்க்குமாறு உரைத்து விட்டார்.

அந்த மருத்துவரிடம் ரிப்போர்ட்டை காண்பிக்க, கரு கலைந்து விட்டதை உறுதி செய்தார் அவர்.

“இது வரைக்கும் நீங்க எடுத்துட்டு இருந்த மாத்திரைகளை நிறுத்திடுங்க” எனக் கூறி வேறு சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.

கரு கலைந்ததற்கான காரணத்தைக் கேட்டதற்கு, “இட் ஹேப்பன்ஸ்” என முடித்துக் கொண்டார் அவர்.

அடுத்த இரண்டு நாட்களில் அவளுக்கு மாதவிடாய் வந்துவிட, வெகுவாய் சோர்ந்து போனாள் விழி. ஆதவனும் வேல்விழியும் மாற்றி மாற்றி ஆறுதல் உரைத்து கொண்டனர்.

வேல்விழி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருக்க, ஆதவன் வீட்டிலிருந்தே வேலை செய்வதாய் உரைத்து அவளுடனேயே இருந்து அவளைக் கவனித்துக் கொண்டான்.

இரண்டு வாரங்கள் கடந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை அவர்களை உள்ளிழுத்துக் கொண்ட நேரம் ஒரு காலை பொழுதில் வேல்விழி சமைத்துக் கொண்டிருக்க, அவள் பின்னிருந்து இடையை வளைத்தவாறு அணைத்துக் கழுத்தில் முகம் புதைத்த ஆதவன், “அழகம்மா செகண்ட் ஹனிமூன் போகலாமா?” எனக் கேட்டான்.

இருவரின் மனநிலையையும் மாற்றவெனத் திட்டமிட்டு இவ்வாறு கேட்டிருந்தான்.

“என்னடா உண்மையாவா சொல்ற? நானும் என்னமோ என் புருஷனுக்கு ரொமேன்ஸ்லாம் மறந்தே போச்சோனு நினைச்சிட்டு இருந்தேன்” என அவனை நோக்கி திரும்பி நாக்கை துருத்தினாள்.

“செகண்ட் ஹனிமூன்ல எந்தளவுக்கு ஞாபகம் வச்சிருக்கேன்னு காமிக்கிறேன்?” எனச் சிரித்தவாறு அவள் நெற்றியில் முட்டினான்.

“ஆனா உங்க ஆபிஸ்ல தான் லீவே தர மாட்டாங்களே!” என அவள் கேட்க,

“ஆமா அவங்க லீவ் தரும் போது தான் நம்ம போகனும்னா எனக்கு 60 உனக்கு 58 ஆகிடும்” கிண்டலாய் அவன் உரைக்க,

“நோ நோ அப்ப எனக்கு 56 தான் ஆகிருக்கும்” எனக் கூறி கண் சிமிட்டினாள் அவள்.

“ஆமா என் வயசை சொல்லலைனா உனக்குத் தூக்கம் வராதே! சரி செகண்ட் ஹனிமூன்க்கு எங்க போகலாம்னு சொல்லு” எனக் கேட்டான்.

ஞாபகம் வந்தவளாய், “அய்யோ காய் கருகிடும்” என அடுப்பில் வைத்ததைத் திரும்பி பார்க்க, அவன் இவளை அணைக்கும் போதே அடுப்பையும் அணைத்திருந்தான்.

“Mr Perfect தான்டா நீ” என அவன் கன்னத்தைக் கிள்ளியவள்,

“உனக்கு நம்ம எங்க போகனும்னு ஆசை இருக்கு சொல்லு! அங்கயே போகலாம்” என்றாள்.

“எனக்குச் சேம் ஊட்டி சேம் ஹோட்டல் போகனும்னு தான் ஆசை” கண் சிமிட்டி உரைத்தான் அவன்.

“ஆமாடா எனக்கும் அங்க போகத் தான் ஆசை! போன தடவை போனப்ப சரியா சுத்தி பார்க்கவே இல்ல! திரும்பப் போய்ச் சுத்தி பார்க்கலாமா?” எனக் கேட்டாள்.

“அடியேய் ஹனிமூன்க்கு சுத்தி பார்க்கவா போறோம்?” என அட்டகாசமாய் அவன் சிரிக்க,

“அப்ப இந்தத் தடவையும் சுத்தி பார்க்க விட மாட்டியாடா நீ” என அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்தவன், “அதுக்கு முன்னாடி திருச்சிக்கு போய்ட்டு அப்படியே ஊட்டிக்குப் போகலாம்” எனத் திட்டத்தைக் கூறினான்.

“எதுக்குத் திருச்சிக்கு?” என அவனை விட்டு விலகி வந்து அவள் கேட்க,

“அது முகில் அம்மா அப்பாவை ஒரு வழியா சம்மதிக்க வச்சிட்டான். அதனால கவிதாவை பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு போறோம்” என்றான்.

“அதானே பார்த்தேன்! தம்பி ஃபங்ஷனுக்குப் போறதுக்குத் தான் செகன்ட் ஹனிமூன் ப்ளான்னா?” எனக் கோபமாய்க் கேட்டவள்,

“அதெல்லாம் என்னால வர முடியாது” என முடித்துக் கொண்டாள்.

ஏன் திடீரென்று இவ்வாறு கோபம் கொள்கிறாள் எனக் குழம்பியவனாய்,

“என்னடி இப்படிச் சொல்ற? போகலைனா அம்மா வருத்தப்படுவாங்கடி! அவன் நம்ம கல்யாணத்துக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கான். அவனுக்கு பொண்ணு பார்க்க போகும் போது நம்ம போகலைனா நல்லாவா இருக்கும்?” எனக் கேட்டான்.

“என்கிட்ட யாருமே இது வரைக்கும் இந்தப் பொண்ணு பாக்கிற விஷயத்தைப் பத்தி சொல்லலை! உன் தம்பியும் தான் சொல்லலை. நான் கன்சீவ் ஆனதும் உன்கிட்ட சொன்ன பிறகு உன் தம்பிக்கிட்ட தான் சொன்னேன். இப்படி ஆன பிறகு ஒரு வார்த்தையாவது என்ன ஆச்சுனு கேட்டானா? இப்ப இந்தப் பங்ஷன் பத்தி கூட நீ சொல்லி தான் தெரியுது. என்னை ஒரு ஆளாவே மதிக்காதவன் பங்ஷனுக்கு நான் ஏன் வரனும்” கோபத்தில் கண்களில் நீர் தேங்கியிருந்தது அவளுக்கு.

“ம்ப்ச் அழகம்மா! எதுக்கு இப்ப இவ்ளோ இமோஷனல் ஆகுற! இங்க வா, உட்காரு” என முகப்பறைக்கு அழைத்து உட்கார வைத்துத் தண்ணீர் அருந்த கொடுத்தான்.

“அவனுக்கு அவன் லைப் தான் முக்கியம்னு அந்த டைம்ல கூட அவன் பிராப்ளம் பத்தி மட்டும் தானே பார்த்தான். சரியான செல்பிஷ் அவன்” என அவள் திட்டி கொண்டே போக,

“விழி” என அதட்டலாய் குரல் கொடுத்த ஆதவன்,

“அவனுக்கு நிறையப் பிராப்ளம்டி! கவி வீட்டில வேற புஷ் பண்றாங்க! அதான் அவன் அதை எப்படி சரி செய்யனு பார்த்துட்டு மத்ததுல கவனம் செலுத்தல. உங்க வீட்டுல உனக்கு வேற மேரேஜ் பத்தி பேசினதும் நான் வந்து பேசினேன்ல உன்னை மிஸ் பண்ணிட கூடாதுனு. அப்படித் தானே அவனுக்கும் இருக்கும்” எனத் தம்பியின் பக்கம் இருக்கும் ஞாயத்தை அண்ணனாய் இவன் எடுத்துரைத்துக் கொண்டிருக்க,

“ஓ நானும் அவளும் ஒன்னா? அவ இன்னும் படிப்பே முடிக்கலை! உன் தம்பிக்கு காலேஜ் பீஸ் நீ தான் கட்டுற! நாளைக்கு அந்தப் பொண்ணுக்கும் சேர்த்து கட்டுவியா நீ?” எனக் கேட்டாள்.

“ஹே அவன் தான் பீஸ்லாம் கட்டுறான். என்கிட்ட எப்பவாவது கேட்பான். திருப்பியும் கொடுத்திருக்கான். ஒன்னும் தெரியாம பேசாத விழி” எனச் சத்தமாய் உரைத்திருந்தான் இவன்.

“ஆமா எனக்கு ஒன்னும் தெரியாது! சரி கல்யாணம் முடிஞ்சதும் அந்தப் பொண்ணு படிப்புக்கு எப்படி இவன் செலவு பண்ணுவான். அவனோட மாமியார் வீட்டுலேயே இரண்டு பேரோட செலவையும் பார்த்துப்பாங்ளா இருக்கும். அவன் தான் பணக்கார குடும்பத்துக்கு மாப்பிள்ளையா போறானே” எனக் கேள்வியும் பதிலுமாய்த் தானே பேசி கொண்டவள்,

“ஆமா உங்கம்மா இதுக்கு மட்டும் எப்படி உடனே ஒத்துக்கிட்டாங்க? நம்ம மேரேஜ்க்கு அவ்ளோ நாள் ஒத்துக்காம இழுத்தடிச்சாங்க. அந்தப் பொண்ணு ரிச்-ன்றானால தானே ஒத்துக்கிட்டாங்க” எனக் கேட்டாள்.

முகிலன் இப்பெண்ணைக் காதலிப்பதாய் உரைத்த பொழுது இந்தப் பெண்ணை பற்றி அறியாததால் அக்காதலுக்கு ஆதரவு தெரிவித்தவள், அப்பெண்ணையும் அப்பெண்ணின் பணக்கார குடும்பத்தைப் பற்றியும் அறிந்த பிறகு ஆதவனைப் போலவே அவளுக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. இந்தத் திருமணம் நடந்தால், தன்னையும் தன் குடும்பத்தவரையும் தாழ்வாய் பேசி விடுவார்களோ என்ற கவலை வந்தது இவளுக்கு.

“அப்படிலாம் இல்லடி! நம்ம காதலுக்கு டிலே பண்ணாலும் சம்மதம்னு சொன்னாங்க. உன்னைலாம் அவங்களுக்குப் பிடிச்சி இருந்துச்சு. ஆனா இவன் விஷயத்துல இவன் பேசி சம்மதிக்க வச்சிருக்கான். அவங்களும் என்ன பண்றதுனு ஒத்துக்கிட்டு இருக்காங்க. ஆல்ரெடி அங்கே நிறையப் பிராப்ளம் போய்ட்டு தான் இருக்கு! அதோட இப்ப நம்ம பூ தான் வைக்கப் போறோம். கல்யாணம் ஆறு மாசம் கழிச்சு தான்” அவளை சமாதானம் செய்வதற்கான அத்தனை காரணக் காரியங்களையும் விடாமல் விளக்கினான் ஆதவன்.

“ஆமா ஆறு மாசம் பெரிய கேப் பாரு! நான் வரலை! என்னால டிராவல் பண்ண முடியாதுனு சொல்லிடு! நீ போ உன்னை நான் தடுக்கலை” என்றாள் அவள்.

“என்னடி இப்படிச் சொல்ற! நீ எனக்காக வாடி! உன்னை யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கிறேன்” அவன் கெஞ்சவே துவங்கவும்,

“சரி போய் தொலை! உனக்காக வரேன். ஆனா அங்க உங்கம்மா ஏதாவது சொன்னாங்கனு வச்சிக்க நான் திருப்பிப் பேசிடுவேன் சொல்லிட்டேன்” என்றாள்.

“அய்யோ ஏன்டி? ஏன் இந்தக் கொலவெறி? எனக்காக அம்மாகிட்ட எதுவும் பேசாதடி! அம்மா மேரேஜ் பத்தி எது பேசினாலும் ஹ்ம்ம் சொல்லிட்டு வந்துடு” என்றவன்,

‘எதுக்கும் இவளை தனியா அம்மாகிட்ட பேசவே விடக் கூடாது, ஏதாவது சொல்லி மேரேஜ்ஜை நிறுத்தினாலும் நிறுத்திடுவா!’ என மனதினில் பேசி கொண்டான்.

“அப்படியே தக்கல்ல டிக்கெட் போட்டுடி!” என ஆதவன் கூற,

அதற்கு அவள் முறைக்க,

“முறைக்காதடி! இதெல்லாம் நீதானே சரியா பண்ணுவ! எனக்காகடி ப்ளீஸ்” என அவன் கேட்கவும்,

“உனக்காக உனக்காகனே என்னைய எல்லாத்தையும் பண்ண வச்சிடுடா” என அலுத்து கொண்டவள்,

“சரி போடுறேன். ஆனா ஒன்னு பங்ஷன் முடிஞ்சதும் அம்மா வீட்டுக்கு போய்டுவேன்! நீ தான் அத்தைகிட்ட பேசி எதுவும் பேசாம பார்த்துக்கனும்” என்றாள்.

“ஓகே பேபி டீல்! அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என அவளுடன் சமையல் வேலையில் ஈடுபட சென்றான்.

‘ஷப்பா இந்த முகில் மேல உள்ள கோபத்துல நம்மளை ஒரு வழி ஆக்குறாளே! இவங்க கல்யாணம் முடியுறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடும் போலிருக்கே ஆண்டவா’ என மனதினுள் புலம்பி கொண்டான்.

அன்றிரவு ஆதவன் வீட்டிலிருந்தே வேலை பார்த்துக் கொண்டிருக்க, “எனக்கு ஒரு மாதிரி அங்க எல்லாரும் என்னைய அனுதாபமா பார்பாங்களோனு இருக்குடா” எனக் கூறி அவன் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.

அவள் தலையை வருடியவன், “என் அம்மா அப்பா தம்பி தவிர இந்த விஷயம் அங்க யாருக்கும் தெரியாது. இவங்க யாரும் உன்னை அப்படிலாம் பார்க்க மாட்டாங்க. ஆளாளுக்கு அங்கிருக்க வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும்” அவள் தலையைக் கோதியவாறு உரைத்தான்.

“ஹ்ம்மம்” என ஆமோதிப்பாய் உரைத்தவள் ஏதேதோ எண்ணங்கள் சுழல உறக்கத்தைத் தழுவினாள்.

அந்த வாரயிறுதி நாளில் இருவரும் கிளம்பி ஊருக்கு சென்றனர்.

திருச்சியில் முகிலனுக்கு பெண் பார்க்கும் படலம் சிறப்பாய் நடந்து முடிந்த அந்த நாளில், மாலை வேளையில் ஆதவனின் அறையினுள் நுழைந்த வேல்விழி கோபமாய் அவனிடம் தேநீரை வழங்கினாள்.

“என்னடி என்னாச்சு? ஏன் மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்க? நான் தான் உங்கம்மா வீட்டுக்கு நாளைக்குப் போகலாம்னு சொன்னேன்ல” என்றான்.

அவனை முறைத்தாள் அவள்.

“என்னடி முறைக்கிற?” அவன் கேட்க,

“ஒழுங்கா நான் ஃபங்ஷன் முடிஞ்சதும் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். நான் பார்த்துக்கிறேன். நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்து இங்க வந்ததும் மாத்தி பேசுற” எனக் கேட்டாள்.

“இல்லடி விழி! உடனே அங்க போறோம்னு சொன்னா அம்மா அப்பா வருத்தப்படுவாங்க! அதான் நாளைக்குப் போகலாம்னு சொன்னேன்! இப்ப இங்க என்ன நடந்துதுனு குதிக்கிற?” என்றான் அவன்.

“இன்னும் என்ன நடக்கனும்? உங்கம்மா கவி வீட்டுல கொடுக்கிற சீர் பத்தி இது வரைக்கும் நூறு தடவை சொல்லிட்டாங்க” என்றாள் கோபமாய்.

“என்ன சொன்னாங்க?” என அவன் யோசனையுடன் கேட்க,

“ஃப்ரிஜ், வாஷிங் மிஷின், மிக்ஸி, கிரைண்டர்லாம் தரேன்னு சொன்னாங்களாமே கவி வீட்டுல! அது எல்லாம் எங்ககிட்ட இருக்கு! நீங்க தர வேண்டாம்னு சொன்னாலும் அவங்க கேட்கலைனு பெருமை பேசுறாங்க உங்க அம்மா” என்றாள்.

“அதுல என்னடி இருக்கு? அவங்க கொடுக்கிறாங்க, அதை அம்மா உன்கிட்ட சொல்லிருக்காங்க! இதுல எங்க பெருமை வந்துச்சு?” எனக் கேட்டான்.

“அதை ஒரு தடவை சொன்னா போதாதாடா! இது வரை மூனு தடவைக்கு மேல சொல்லிட்டாங்க. எங்க வீட்டுல எதுவும் கொடுக்கலைனு குத்தி காட்டி பேசுற மாதிரி இருக்குடா” லேசாய் அவள் கண்கள் கலங்கி விட்டது.

“சே சே அப்படிலாம் இருக்காதுடி! நீ ஏன் அப்படி நினைக்கிற? அவங்க சொன்னா சொல்லிட்டு போறாங்க! நீ எதுவும் சொல்லாத! இன்னிக்கு நைட் இங்க இருந்துட்டு நாளைக்கு உங்க வீட்டுக்கு போய்டுவோம்! அதுக்குப் பிறகு நம்ம சென்னை போய்ட போறோம். அதனால இதை மனசுல வச்சிக்கிட்டு அம்மாகிட்ட எதுவும் பேசி வைக்காத இன்னிக்கு” கெஞ்சும் விதமாகவே அவளிடம் கூறினான்.

அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தவள், “ஹ்ம்ம் உனக்காகத் தான்டா பொறுத்து போறேன்! ஆனாலும் இந்த தடவை அத்தைகிட்ட கேட்டு விட்டேன்டா” என்றவள் கூறவும்,

‘அய்யய்யோ ஏழரைய கூட்டிட்டு தான் வந்திருக்காளா?’ என மனதினுள் பேசியவாறு பதறியவனாய்,

“என்னனு கேட்டடி” என்றான்.

“அவங்க தனிக் குடித்தனம் போனா தேவைபடும்ல அத்தை! அதனால தான் பொண்ணு வீட்டுல கொடுகிறாங்க போல! இருக்கட்டும்னு வாங்கி வச்சிக்கோங்க அத்தைனு சொன்னேன்” என்றாள்.

“அடிப்பாவி ஏன்டி அப்படிச் சொன்ன? அவங்க வருத்தப்படுவாங்கல” என அவளைப் பார்த்து முறைத்தான்.

“ஆமா அவங்க வருத்தப்படுவாங்கனு ஃபீல் பண்றியே! ஒரு தடவை இல்ல இது வரைக்கும் மூனு தடவைக்கு மேல சீர் பத்தி சொல்லிட்டாங்க! எங்க வீட்டுல எதுவும் செய்யலனு குத்தி காட்டி பேசுறாங்கனு என் மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்! உனக்கு நான் ஃபீல் பண்ணுவேன்னு கவலை இல்லைல! தேங்க்ஸ் ஆதவ் உங்ககிட்ட போய்ச் சொல்ல வந்தேன் பாருங்க! என்னைச் சொல்லனும்! ஆனா எழுதி வச்சிக்கோங்க ஆதவ் சார், அவன் கண்டிப்பா தனிக்குடித்தனம் போக தான் போறான். கவி அவனை கூட்டிட்டு போக தான் போறா” என்று சத்தியம் போல் உரைத்தவள் அழுகையுடன் முடிக்கவும்,

‘என்ன மரியாதை தூக்கலா இருக்கு! மேடம் கோவம் ஆகிட்டாங்களா? அழ வேற செய்றாளே’ எனப் பெருமூச்சு விட்டவனாய்,

“இப்ப எதுக்குடி அழுற? போரிங் குழாய் எதுவும் கண்ணுல வச்சிருப்பியா? உடனே தண்ணீர் வந்துடுது” என அவளைக் கலாய்த்தவன்,

“நம்ம இருக்கப் போற ஒரு நாளைக்கு எதுக்கு ப்ராப்ளம் பண்ணனும்னு தான் சொன்னேன். சரி இனி அம்மா பேசாத மாதிரி நான் பார்த்துக்கிறேன்” என்றான் அவளை சமாதானம் செய்யும் விதமாய்.

‘கொஞ்சம் நேரம் தானடா ஒன்னா இருக்க விட்டோம். அதுக்கே பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்களே! இனிமே இவங்க இரண்டு பேரையும் தனியா இருக்க விடக் கூடாது’ என மனதினுள் நினைத்துக் கொண்டான்.

“ஓஹோ கல்யாணத்துக்கு முன்னாடி அழுதா, நீ அழுதா என் மனசு தாங்காதுடி! என்னால பார்த்துட்டு இருக்க முடியாதுடினு காதல் வசனமா பேச வேண்டியது! கல்யாணத்துக்குப் பிறகு அழுதா போரிங் குழாயத் திறந்து விட்டதா தெரியுதா உனக்கு!” எனக் கோபமாய் உரைத்து அவன் கையில் கிள்ளியிருந்தாள்.

ஆஆஆ என அலறியவன் அவளின் இடையைச் சுற்றி கை போட்டு தன் கை வளைக்குள் கொண்டு வந்தவன், “நீ எப்ப அழுதாலும் என் மனசு தாங்காது தான்டி அழகம்மா!” என நெற்றியில் முட்டியவன், “ஆனா தேவையில்லாம ஏழரையே கூட்டிட்டு வந்து அழுதா எரிச்சல் வருமா வராதா?” என்றான்.

அவள் கோபமாய் ஏதோ பதில் சொல்ல வருவதற்கு முன், “சரி அதை விடு” என அவள் கண்களைத் துடைத்தவாறு,

“சரி நீ சொன்னதுக்கு அம்மா என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான்.

“அவங்க என்ன சொல்லுவாங்க! என்
பிள்ளைங்க என்னை விட்டு போக மாட்டாங்க! அவங்க நல்லவங்க வல்லவங்க நாலும் தெரிஞ்சவங்க! பாசக்காரங்கனு உங்க இரண்டு பேரை பத்தியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க” என்றாள்.

“சரி இதைப் பத்திலாம் எதுவும் நீ யோசிச்சு கவலைப்பட்டுட்டு இருக்காத!” என்றவன்,

“வா நம்ம கொஞ்சம் நேரம் மொட்டை மாடி போய் காத்தாட நடந்துட்டு வரலாம்” என அவளை உடனேயே அந்த அறையை விட்டு வெளியே அழைத்து வந்து விட்டான்.

அறையினில் இருந்தால் தானே சண்டை போடுவாள் என அவளின் மூடை மாற்ற, அந்நிகழ்வை மறக்க செய்ய மாடிக்கு அழைத்துச் சென்று விட்டான்.

சமையலறையில் இரவு உணவை தயாரிக்கும் வேலையில் விழி ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்நேரம் ஆதவனை அவர்களின் அறைக்கு அழைத்தார் அவனின் தாய் விஜயா. அங்கு மனோகரும் இருக்க, “எதுக்குமா கூப்பிட்ட?” எனக் கேட்டவாறு வந்தான் ஆதவன்.

“முகில் சம்பந்தி வீட்டுல நாங்க சொல்றதை கேட்கவே மாட்டேங்கிறாங்கடா ஆதவா! நம்ம வீட்டுல தான் எல்லா சாமானும் இருக்கே! எதுக்குத் திரும்பவும் அதையே சீரா கொடுக்கிறீங்க? எங்களுக்கு வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்கடா” என்றார் விஜயா.

இதை அவர் பெருமையாகவா உரைக்கிறார் என விஜயாவின் முகத்தினை ஆராய்ந்தான் ஆதவன். அப்படி ஒன்றும் தெரியவில்லை அவனுக்கு.

‘இந்த விழி அவளா ஏதாவது நினைச்சிக்கிட்டு வருத்தப்படுறதே வேலையா வச்சிருக்கா!’ என எண்ணி கொண்டவனாய்,

“விடுங்கம்மா அவங்க பொண்ணுக்கு குடுக்கிறதை கொடுக்கட்டும்” என்றான் ஆதவன்.

“அதுக்கில்லடா! இதெல்லாம் புதுசா வாங்குறதுக்குப் பதிலா பணமா அவங்களுக்குக் கொடுத்தா, அது அவங்களுக்கு உபயோகமா இருக்கும்ல! அதான் சொன்னேன்” என்றவர் மேலும் தொடர்ந்து,

“இதை உன் பொண்டாட்டிக்கிட்ட சொன்னா என்ன சொன்னா தெரியுமா?” எனத் தன் மன ஆதங்கத்தை அவனிடம் உரைத்தார்.

‘அய்யய்யோ அவ கூட்டின பஞ்சாயத்து வருதே’ மைண்ட்வாய்ஸில் பேசி கொண்டவனாய், எதுவும் தெரியாதது போல,

“என்னமா சொன்னா?” எனக் கேட்டான்.

(‘இது உலகமகா நடப்புடா சாமி’ இது ரீடர் அண்ட் ரைட்டர் மைண்ட் வாய்ஸ்’)

“உன் தம்பி தனிக்குடித்தனம் போய்டுவான்னு சொல்றாடா?” என்றார்

“அப்படியா சொன்னா? ஏன் அப்படிச் சொன்னானு தெரியலையே” என்றான் தன் தாடையைத் தடவியவனாய்.

“நான் சொல்லிட்டேன்! என் பிள்ளைங்க அப்படிலாம் பண்ண மாட்டாங்கனு” என்றார் விஜயா.

“ஆமா ஆதவா! விழி அப்படி சொன்னதுல இருந்து உங்க அம்மா புலம்ப ஆரம்பிச்சிட்டா அப்படி எதுவும் இருக்குமோனு? அதுக்குத் தான் சீர் தராங்களோனு கேட்குறா! அப்படிலாம் இருக்காதுனு நானும் எவ்ளோ சொல்லிட்டேன். நீயே எடுத்து சொல்லு அவளுக்கு” என்றார் மனோகர்.

“அம்மா முகில் அப்படிலாம் பண்ண மாட்டான்மா! நானும் விழியும் சென்னை போய்டுவோம்! முகில் அவனோட ஜெராக்ஸ் கடைக்கு காலைல போனா நைட் தான் வருவான். அவன் வர வரைக்கும் நீங்க இரண்டு பேரும் வீட்டுல தனியா இருப்பீங்க! உங்களுக்கு உதவியா கூடத் துணையா கவிதா இருப்பானு தான் அவசரமா அவளைக் கல்யாணம் செஞ்சிக்கிறதா அவன் என்கிட்ட சொன்னான். அவ காலேஜ்கே போனாலும் சாயங்காலமா வந்து உங்களைக் கவனிச்சிப்பானு சொன்னான்! இப்படி யோசிக்கிற முகில் எப்படி உங்களை விட்டுட்டு போவான். இதெல்லாம் நினைச்சு நீங்க கவலைப்படாதீங்கமா” என்று தனது தாய்க்கு ஆறுதல் உரைத்து தெளிய வைத்தவன்,

“விழி ஏதாவது யோசனைல பேசியிருப்பா! நீங்க எதுவும் பெரிசா எடுத்துக்காதீங்க. நான் விழிகிட்ட பேசிக்கிறேன்” என்றான்.

“டேய் நீ எதுவும் பேச வேண்டாம்! உங்க அம்மாக்கு மனசுக்கு கேட்கலை அதான் உன்கிட்டயும் என்கிட்டயும் சொன்னா.. நீ ஏதாவது கேட்க போய் விழி எதுவும் தப்பா நினைச்சிக்கப் போறா.. அந்தப் பொண்ணே இப்ப தான் உடம்பு தேறி வந்திருக்கு! எதுவும் கேட்டு அந்தப் பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாத” என்று மனோகர் உரைக்கவும்,

சரியெனத் தலையாட்டிவிட்டு வந்துவிட்டான் ஆதவன்.

விழியின் கருச்சிதவை பற்றி அவனது இல்லத்தில் எவருமே பேசவில்லை. இந்த விஷயத்தில் அவளை சங்கடப்படுத்தும் விதமாய் அங்கு எவரும் நடந்து கொள்ளவே இல்லை.

ஆயினும் அந்த இல்லத்தில் புது மருமகளான கவிதாவின் வரவு பல இன்னல்களைக் கொண்டு வர போவதை விழி கணித்தது போல மற்றவர்கள் கணிக்கத் தவறி தான் போயினர்.

ஆதவனும் விழியும் மறுநாள் விழியின் இல்லத்திற்கு சென்று விட்டு, அவர்களின் திட்டப்படி அடுத்த மூன்று நாட்கள் ஊட்டியில் இரண்டாவது தேனிலவை கொண்டாடிவிட்டு தான் சென்னை திரும்பி இருந்தனர்.

— தொடரும்