நறுங்காதல் பொழிபவனே – 13

சென்னையில் இருந்த வாடகை வீட்டில் அவர்களின் குடித்தனத்தைத் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்திருந்தது.

காலை எட்டு மணியளவில் தன்னிடம் இருந்த சாவியின் மூலம் கதவை திறந்து வீட்டினுள் நுழைந்தான் ஆதவன்.

வரவேற்பறையில் விழி அவளின் கைப்பையை ஓரிடம், துப்பட்டாவை ஓரிடம், ஆபிஸ் ஐடி கார்ட்டை ஓரிடம் என ஆங்காங்கே போட்டு வைத்திருக்க, வீட்டினுள் நுழைந்ததும் முதல் வேலையாய் அனைத்தையும் எடுத்து அந்தந்த இடத்தினில் வைத்தான் ஆதவன்.

திருமணம் முடிந்து வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் ஆதவனுக்குத் தொடர்ந்து இரவு ஷிப்ட் ப்ராஜக்டில் வேலை செய்வது போன்ற சூழ்நிலை அமைந்து விட்டது.

இரவு எட்டு மணிக்கு வேலைக்கு செல்பவன், காலை எட்டு மணிக்கு தான் வீட்டிற்கு வருவான். அவனிடம் இருக்கும் சாவியை வைத்து வீட்டிற்குள் சென்று விடுவான்.

தற்பொழுது வரும் பொழுது அவன் வாங்கி வந்திருந்த பாலை அடுப்பில் வைத்து காய்த்தவன், படுக்கையறைக்கு சென்று விழியை எழுப்பினான்.

இரவு வேளையில் தனியாக இருப்பதால் உறக்கம் வராமல் தவிப்பவள், காலை வேளையில் தான் கண் அசருவாள்.

“வந்துட்டியாடா?” எனக் கேட்டவாறு எழுந்து அமர்ந்தவள் ரிப்ரெஷ் செய்து கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

அதற்குள் இவன் இருவருக்குமாய் சேர்த்து காபியை கலக்கி வைக்க, வரவேற்பறையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசியவாறு காபி அருந்தினர்.

இந்தப் பத்து நிமிடம் தான் வார நாட்களில், அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து சற்று ஆசுவாசமாய் பேசிக் கொள்ளக் கிடைக்கும் நேரம்! இரவு இவள் வீட்டுக்கு வரும் பொழுது அவன் ஆபிஸ் கேப்பில் சென்றிருப்பான்.

அதனால் அவனின் விரல்களோடு கை கோர்த்தவாறு அவனருகே அமர்ந்து அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தவாறு அந்தத் தேநீர் நேரத்தை கடத்துவாள் அவள்.

“என்னடா வந்ததுல இருந்து உன் முகமே சரியில்லையே?” என அவனின் முகவாட்டத்தினைக் கண்டு கேட்டாள்.

“ஆபிஸ்ல செம்ம வேலைடி! என்னை வச்சு செய்றாங்க. நைட் ஒரு பொட்டு கூடக் கண் அசர முடியலை. பிரேக் கூடப் போக முடியலை. தெரியாத்தனமா இந்த ப்ராஜக்ட்ல வந்து சிக்கிட்டேன்! ரிலீஸ் கேட்டாலும் கொடுக்க மாட்டேங்குறாங்க. இப்படியே போச்சுனா சின்ன வயசுலேயே செத்து போக வேண்டியது தான்” என்றதும் அவன் கைகளை அவள் இறுக்கமாய் பற்ற,

“நீ ஒன்னும் கவலைப்படாத விழி! உனக்கு இன்சுரன்ஸ் 50 லட்சம் வரும். அதை வச்சிக்கிட்டு நீ வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிக்கிட்டு ஹேப்பியா இரு” அலுவலக அழுத்தம் அவனை அவ்வாறு பேச வைத்தது.

“சரிடா! உன்னை மாதிரியே நல்ல ஆளா, என்னை நல்லா பாத்துக்கிறவனா பார்த்து வச்சிட்டு சொத்து போ.. என்னாலலாம் தேட முடியாது. நான் பெரிய சோம்பேறினு உனக்கே தெரியும்ல! முக்கியமா உன்னை மாதிரி கன்னத்துல குழி விழனும் சரியா” கிண்டலாய் அவள் கூற,

“ஏன்டி ஒருத்தன் சாகுறேன்னு சொல்றேன்.. அதைப் பத்தி உனக்குக் கவலை இல்ல! கன்னத்துல குழி விழனுமா உனக்கு?” அவளைக் கோபமாய் முறைத்தவாறு உரைத்தான்.

“நீ தானடா அப்படிச் சொன்ன! நானா சொன்னேன்? இனி இப்படிப் பேசின நானே உன்னைக் கொலை பண்ணிருவேன் ஜாக்கிரதை” என அவனின் கழுத்தை நெறித்தாள்.

“ஆஆஆ விடுடி” என அவன் அலறிய பிறகு தான் விட்டாள்.

“ஆபிஸ் வேலைல இதெல்லாம் சகஜம் தானேடா! அதுக்கு இப்படி பேசிவியா நீ” என அவனின் தலையைக் கலைத்தவள்,

“வாழ்க்கை எப்பவுமே ஒரே மாதிரி இருக்காதுடா! சீக்கிரம் சரி ஆகிடும். டோன்ட் வொர்ரி” என ஆறுதலும் உரைத்தாள்.

அந்நேரம் ஷெல்ஃப்பில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைக் கண்டவன்,
“அங்க என்ன ஷெல்ப்ல புக் நகர்ந்த மாதிரி இருக்கு? நீ கை வச்சியா?” எனக் கேட்டான்.

அவனின் கேள்வியில் ஆச்சரியம் அடைந்தவளாய், “ஓ மை காட்! எப்படிடா? ஒரு பேப்பர் வேணும்னு எடுத்தேன்டா. ஆனா புக் எதுவும் நான் நகர்த்தலையே? எப்படிடா கண்டுபிடிச்ச?” எனக் கேட்டாள்.

“அது அப்படித் தான்! நீ கை வச்சி புக் லேசா நகர்ந்து இருக்கு பாரு” எனக் கூறியவாறு அதைச் சரி செய்து வைத்தான்.

“உன்னை Mr Perfectனு ஆபிஸ்ல கூப்பிடுறது எவ்ளோ பொருத்துமா இருக்கு பாரு” கண்களை உருட்டியவாறு அவள் கூறுவதை ரசித்துப் பார்த்திருந்தான் அவன்.

“உன்னால தான்டி வீட்டை இப்படிக் கலைச்சி போட்டு வைக்க முடியும்!” அவளை வம்பிழுத்தான்.

“போடா இந்த மியூசியம் மாதிரி வீடு கலையாம இருந்தாலே பிடிக்கிறது இல்ல. கலைஞ்சி இருந்தா தான்டா வீடு” என அவள் வசனம் பேச,

“என் துணி ஷெல்ப்லாம் எவ்ளோ நீட்டா வச்சிருக்கேன் பாரு. உன் ஷெல்ப்ல வாரா வாரம் துணிலாம் அடுக்கி வைக்கிறதே எனக்குப் பெரிய வேலையா இருக்கு! துணியை எடுக்கும் போது கலையாம எடுக்கலாம்ல” என்றவாறு அவளின் துணியை அடுக்கி வைத்தான்.

“கலச்சி வச்சாலும் எடுத்து வைக்கத் தான் நீ இருக்கியே” எனப் பழிப்பு காட்டியவாறு
சமைப்பதற்கு காய்களை நறுக்க ஆரம்பித்தாள். சோறும் குழம்பும் தயாரானதும், காய் பொரியலை அடுப்பில் வைத்து விட்டு அவனை இறக்குமாறு கூறி விட்டுக் குளிக்கச் சென்றாள்.

ஆதவன் அதை இறக்கி, அவளுக்கு மதிய உணவை கட்டி எடுத்து வைத்தான்.
காலை உணவாய் இருவருக்கும் தோசை ஊற்றி தட்டில் வைத்து வரவேற்பறைக்கு வந்த சமயம், அவளும் குளித்துத் தயாராகி அவனுடன் உண்ண அமர்ந்தாள்.

“ஏன்டா நீ பைக் ஓட்ட கத்துக்கிட்டு இருந்தா தினமும் ஆபிஸ்க்கு போற இந்த ஆட்டோ செலவு மிச்சமாகும்லடா! பஸ்ல போறேன்னு சொன்னாலும் கேட்காம ஆட்டோல போனு காசும் கொடுத்துடுற! ஊரு உலகத்துல பைக் ஓட்ட தெரியாத ஒரே பையன் நீயா தான்டா இருப்ப” எனக் கூறியவாறு உண்டு கொண்டிருந்தாள்.

“நான் கத்துக்காதது நல்லது தான். வீட்டுல இவ்ளோ வேலை முடிச்சு உன்னை ஆபிஸ்ல வேற கொண்டு போய் விடனுமா? நம்ம எது செஞ்சாலும் அதுல ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கும்?” என அவன் கெத்தாய் உரைக்க,

“ஆமா நான் ஆபிஸ் கூட்டிட்டுப் போகச் சொல்லிடுவேன்னு சார் பைக் ஓட்ட கத்துக்கலையாம்! ஓட்ட தெரியலைனாலும் நல்ல கதை சொல்றடா!  நீ சொல்ற கதையை வச்சு நூறு பிள்ளைங்களுக்கு சோறு ஊட்டலாம் போடா” என அவனைக் கலாய்த்தாள்.

அவள் அலுவலகம் கிளம்பி சென்றப்பின் சமையலறையில் பாத்திரத்தை எல்லாம் கழுவி சுத்தம் செய்து வைத்து விட்டு உறங்க சென்றான்.

இரவு அவள் விரைவாய் வீட்டிற்கு வந்துவிட்டால் அவனுக்கு உணவு செய்து கொடுப்பாள். அவள் தாமதமாய் வரும் நாட்களில் இவன் அலுவலகத்தில் உண்டு கொள்வதாய் உரைத்து கிளம்பி விடுவான்.

வாரயிறுதி நாட்களில் இருவருமாய் இணைந்து துணி துவைப்பது, வீட்டை பெருக்கி துடைப்பது, காய்கறி வாங்க மார்க்கெட் செல்வது என வேலையில் ஈடுபடுவர்.

இருவரும் காதலிக்கும் போது, திருமணத்திற்குப் பிறகு தாங்கள் வாழ வேண்டுமென ஆசைப்பட்ட வாழ்வை இப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தனர். அதனால் பணிச்சுமை அழுத்திய போதும் மனமகிழ்வாகவே வாழ்ந்து வந்தார்கள்.

அடுத்த வந்த ஒரு வாரமும் ஆதவன் அவளிடம் ஏதோ மாற்றம் தெரிவதாய் உணர்ந்தான்.

ஒரு நாள் காலை அவள் அலுவலகத்திற்கு கிளம்பும் வேளையில்,

“அழகம்மா ஏனோ நீ கொஞ்ச நாளா ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க மாதிரியே ஃபீல் ஆகுது எனக்கு! ஆபிஸ்ல எதுவும் பிரச்சினையா?” எனக் கேட்டான்.

“இல்லடா! அதெல்லாம் எதுவும் இல்ல! இந்த வாரம் ஒரு பிராஜக்ட் ரிலீஸ் இருக்கு ஆபிஸ்ல! அது நல்லபடியா நடக்கனுமேன்ற டென்ஷன் தான்” எனக் கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.

இவனும் மேலும் அதைப் பற்றி எதுவும் அவளிடம் கேட்காமல் இருந்து விட்டான்.

மறுநாள் காலை அவன் வீட்டிற்குள் நுழைந்ததும், வரவேற்பறையில் அமர்ந்திருந்த விழி, அவன் கைப்பிடித்துப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள்.

“என்னடி இன்னிக்கு சீக்கிரம் எழுந்து உட்கார்ந்திருக்க?” எனக் கேட்டவாறு அவளின் இழுப்பிற்கு சென்றான்.

“கண்ணை மூடு! வாயை திற” அவனுக்குக் கட்டளையிட்டவள்,

வாயை திறந்து கண் மூடிய நிலையில் இருந்தவனின் வாயில் சர்க்கரையைப் போட்டாள்.

வாயில் இனிப்பு சுவையை உணர்ந்தவன் மென்றவாறு கண்ணைத் திறந்து அவளை நோக்க, சிரித்தவாறு அவனைப் பார்த்தவள், “நீ அப்பாவாகப் போறடா” எனக் கூறி அவனை அணைத்து கொண்டாள்.

ஆதவனின் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிதமிஞ்சிய இன்பத்தில் மனம் நர்த்தமாட, அதன் பாரம் தாங்காது கண்கள் நீர் பொழிய, அவனின் விழி நீர் அவனது மனைவி விழியின் கன்னத்தைத் தொடுமாறு இழைந்தவன் அழுத்தமாய் முத்தமிட்டான்.

ஒரு நிமிடம் இருவரும் அமைதியாய் அணைத்தவாறு அந்த இனிய செய்தியின் மகிழ்வை சுகித்தவாறு நின்றிருந்தனர்.

“நான் நேத்தே நினைச்சேன்” என்றான் அவன்.

அவள் சற்று அதிர்ந்தவளாய் அவன் மார்பில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தவாறு, “எப்படிடா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் உனக்கு எப்பவுமே 23 டூ 25 டேஸ்ல பீரியட்ஸ் ஆகும். இந்த மாசம் 25வது நாள்ல இருந்து நீ ஒரு மாதிரி எக்ஸைடட்டா யோசனையாவே இருந்த! அதுவும் நேத்து ரொம்பவே எக்ஸ்ட்ரீம்மா பதட்டத்துல இருந்த மாதிரி தோணுச்சு” அவன் தன் அனுமானத்தைக் கூறவும்,

“ஆமாடா நேத்தோட முப்பது நாளாச்சு. 31வது நாளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். டெஸ்ட் பண்றதுக்காக! இவ்ளோ நோட் பண்ணவன் ஏன்டா என்கிட்ட காமிச்சிக்கவே இல்ல” எனக் கேட்டாள்.

“நம்ம இருக்குனு நினைச்சிட்டு இல்லனு ஆச்சுனா உனக்குக் கஷ்டமா இருக்குமே! அதான் நான் எந்த ஹோப்பும் உனக்குக் கொடுக்க வேண்டாம்னு நினைச்சேன்” அவன் கூறவும், அவனின் சட்டையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து, “லவ் யூ டா புருஷா” எனக் கூறி கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள்.

“சரி இன்னிக்கு லீவ் சொல்லிடு! இப்ப கிட்ல தானே டெஸ்ட் பண்ணிருப்ப? நம்ம ஹாஸ்ப்பிட்டல் போய் செக் பண்ணிட்டு வந்துடலாம்” என்றுரைத்து விட்டு வழமையான அவர்களின் சமையல் வேலையை முடித்து விட்டு இருவருமாய் மருத்துவமனை சென்றனர்.

அங்கும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டதும் இருவரும் தங்களது பெற்றோரிடம் இச்செய்தியை பகிர்ந்து கொண்டனர்.


கொரோனா இரண்டாம் அலை மிதமாய் துவங்கியிருந்த சமயம் அது.

வேல்விழி சென்னையில் தாங்கள் வாழ்ந்த வாழ்வை குறித்த மலரும் நினைவுகளுடன் மொட்டை மாடியில்
சிறிது நேரம் நடை பயின்றவள், சற்று ஓய்வாக அங்கு வீசிய காற்றை சுவாசித்தவாறு நின்றிருந்தவள் ஆதவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

உறங்கி கொண்டிருந்த குழந்தை காவ்யாவை தனது தாய் மகேஸ்வரியை பார்த்துக் கொள்ளுமாறு உரைத்து விட்டு வந்திருந்தாள்.

வேல்விழியின் ஒரு கை தனது வயிற்றை வருடி பார்க்க, மற்றொரு கை கைபேசியில் இருக்க, அதைக் காதில் வைத்தவாறு ஆதவன் அழைப்பை ஏற்பதற்காகக் காத்திருந்தாள்.

அவன் அழைப்பை ஏற்றதும் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்தவாறு இருவரும் சற்று நேரம் பேசி கொண்ட பின், “ஆதவ் நாளைக்கு இங்க வரியாடா?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஆச்சரியப்பட்டவனாய், ‘நம்ம நாளைக்கு அங்க போய் அவளை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சிருந்தா.. என்ன அவளே இப்படிக் கேட்குறா? தெரிஞ்சி கேட்குறாளா.. தெரியாம கேட்குறாளானு தெரியலையே’ மனதிற்குள் பேசி கொண்டவனாய்,

“ஆபிஸ் வேலை இருக்கேடி! திடீர்னு கேட்டா எப்படி வர முடியும்?”

அவனின் பதிலில் அவளுக்குக் கோபம் வர, “இங்க வந்துடாத! அங்கேயே இருந்துக்கோ! அந்த வேலையையே கட்டிக்கிட்டு அழு” என ஆத்திரமாய் அவள் பேச,

“ஏன்டி கோபப்படுற? நாளைக்கு என்ன விசேஷம்? எதுக்கு நீ வர சொல்ற? அதை சொல்லு நீ முதல்ல?” எனக் கேட்டான்.

“யப்பா சாமி! ஒன்னுமில்லை! நான் தான் என் புருஷனை பார்க்கனும்னு ஆசைப்பட்டுத் தெரியாம கேட்டுட்டேன்” அதே கோபத்துடன் அவள் உரைக்க,

“போன வாரம் தானடி வந்தேன்! அதுக்குள்ள வர சொல்லி நீ கேட்கவும் என்ன ஏதுனு தெரிஞ்சிக்கக் கேட்டா இவ்ளோ கோபப்படுற” எனக் கேட்டான்.

அவனின் இந்தக் கேள்வியில் சற்று அமைதியடைந்தவள், “ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்! நேர்ல தான் சொல்லனும்! அதான் கேட்டேன்! அடுத்து நீ எப்ப வரியோ அப்ப சொல்றேன் சரியா” என நிதானமாகத் தன்மையாக அவள் கூறவும்,

அவளின் நிலை உணர்ந்தவனாய், “சாரிடி அழகம்மா! நீ என்னைய ரொம்ப மிஸ் பண்றியா? அதான் இப்படி உனக்கு மூட் ஸ்விங் ஆகுதா?” எனக் கேட்டான்.

“இல்லடா நம்ம சென்னை லைப் பத்தி நினைச்சுப் பார்த்தேன். நீ நான் நம்ம வீடுனு எவ்ளோ ஹேப்பியா வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை திரும்ப எப்ப கிடைக்குமோனு ஏக்கமா போய்டுச்சு” வார்த்தையில் உணர்வுகளைத் தோய்த்து சற்று வருத்தமாய் அவள் கூற,

“எல்லாம் இந்தக் கொரோனாவால தான்! திரும்ப எப்ப சென்னைல இப்படி சேர்ந்து இருப்போமோனு எனக்கும் தோணும்டி” என்றான் அவன்.

இருவரும் அதன்பிறகு சிறிது நேரம் பேசி விட்டு வைத்தனர்.

மறுநாள் காலை வேல்விழிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தான் ஆதவன்.

ஆதவன் வந்திருப்பதாய் மகேஸ்வரி உரைத்து வேல்விழியை வீட்டு வாசலுக்கு சென்று பார்க்குமாறு குரல் கொடுத்தார். அவள் அங்கு சென்று பார்க்கும் போது, இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து இருந்தான் ஆதவன்.

அவனை வண்டியோடு கண்டதும் கண்கள் விரிய அவனருகில் சென்றாள்.

“டேய் வண்டி ஓட்ட கத்துக்கிட்டியாடா?” என இன்ப அதிர்ச்சியாய் கேட்டாள்.

“லைசன்ஸ்ஸே வாங்கியாச்சு மேடம்” என அதை எடுத்து அவளிடம் அவன் காண்பிக்க, இன்பமாய் பார்த்திருந்தவளின் முகம் கோபமாய் மாறியது.

உடனே வீட்டிற்குள் சென்று விட்டாள்.

“ஹே என்னடியாச்சு” என வண்டியை நிறுத்திவிட்டு அவளின் பின்னேயே அவளறை நோக்கி சென்றான்.

“நான் எத்தனை தடவை உன்னை வண்டி ஓட்ட கத்துக்கச் சொல்லி கேட்டிருப்பேன். இப்ப உன் பொண்ணு வந்ததும் அவளை வண்டியில கூட்டிட்டு போறதுக்கு இந்தக் கொரோனா டைம்லயும் ப்ளான் பண்ணி செஞ்சிருக்கல” என அவள் சற்றுக் கோபம் கலந்த கவலையாய் கேட்கவும்,

“அடிப்பாவி! பொண்ணுகிட்ட போய் உரிமை போராட்டம் பண்ணிட்டு இருக்க நீ” என வாய்விட்டு சிரித்தவன் அவளின் கையைப் பிடிக்கப் போக,

அதைத் தட்டிவிட்டவள், “போ எப்படினாலும் உனக்கு என்னைவிட உன் பொண்ணு தானே முக்கியமா போய்ட்டா?” எனக் கேட்டாள்.

அவளின் பொசசிவ் கோபத்தை வெகுவாய் ரசித்தான் இவன்.

அவளைத் தன் கைவளைக்குள் கொண்டு வந்தவன் நெற்றியில் முட்டி, “லவ் யூ டி அழகம்மா” என்றான்.

அவனின் செயலிலும் சொல்லிலும் கோபம் குறைந்தாலும் அவனை வெறுப்பேற்றும் பொருட்டு, “பாரு நாளைப்பின்ன நமக்குப் பையன் பிறக்கும் போது நானும் உன்னை இப்படி வெறுப்பேத்துவேன்” என்றவள் கூறவும்,

“அதெல்லாம் அப்ப பார்க்கலாம்” எனச் சிரித்தவனின் மூளை அவளின் நேற்றைய பேச்சோடு இதையும் முடிச்சு போட, அதில் கிடைத்த விடையில் கண்கள் மின்ன, “ஹே அழகம்மா! உண்மையாடி?” எனக் கேட்டான். அவனின் கை அவளின் வயிற்றை வருடி கொண்டிருந்தது.

ஆமென அவள் தலையசைக்க, “நம்ம பாப்பா பிறக்கிறதுக்கு முன்னாடி எத்தனை மாசம் இந்த செய்தியை எதிர்பார்த்து ஏமாந்திருப்போம்ல! ஆனா இன்னிக்கு நம்மளே எதிர்பாக்காம அடுத்தக் குழந்தையைப் பொக்கிஷமா ஆண்டவன் கொடுத்திருக்காருடி” என அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“எனக்குப் பயமாவும் வெட்கமாவும் இருக்குடா?” தன் உணர்வை அவனுக்கு உரைத்தாள்.

“உன் பயம் புரியுது! ஆனா வெட்கம் எதுக்குடி?” எனக் கேட்டான்.

“ஹான் முதல் குழந்தைக்கு ஒரு வயசு ஒரு மாசம் தான்டா ஆகுது! அதுக்குள்ள அடுத்ததுனா.. எப்படி இதை நான் எல்லார்கிட்டயும் சொல்றது?” என வெட்கப்பட்டவாறு அவனுள் புதைந்தாள்.

அவனின் சிரிப்பொலி அவளின் வெட்கத்தைக் கூட்டியது.

— தொடரும்