நறுங்காதல் பொழிபவனே – 12

திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்றடைந்தவர்கள், அங்கிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் தங்களது தேனிலவிற்காகப் பயணித்திருந்தினர் வேல்விழியும் ஆதவனும்.

அப்பேருந்தில் அவனின் முழுங்கையைப் பற்றியவாறு அமர்ந்திருந்தவளின் மனம் வெகுவாய் நெகிழ்ந்திருக்க, அவனின் மனமோ பெருத்த ஆசுவாசம் அடைந்திருந்தது.

எத்தனையோ மனிதர்கள் காதலிக்கிறார்கள், அனைவரும் திருமணத்தில் இணைக்கிறார்களா என்ன? அவளே எத்தனையோ கைவிடப்பட்ட காதலை தங்களது கல்லூரியிலும் அலுவலகத்திலும் கண்டிருக்கிறாள், கேள்விப்பட்டும் இருக்கிறாள்.

எத்தனை எத்தனை சண்டைகள், வாக்குவாதங்கள், பிரச்சனைகள், மன கசப்புகள், மன உளைச்சல்கள் அத்தனையையும் எத்தனை அழகாய் கையாண்டு தன்னைக் கரம் பிடித்திருக்கிறான் இவன் என்ற எண்ணமே நெகிழ்த்தி இருந்தது அவளை.

அவளைக் காதலித்த நாட்களில் பல முறை உரைத்திருக்கிறான் அவன். தன் வாழ்வில் காதல் என்பது ஒரு முறை மட்டுமே; அது உன்னுடன் மட்டுமே எனக் கூறியிருக்கிறான் அவன். அந்தக் காதல் இன்று தன் கை வளைக்குள் இருப்பதாய் பெருமிதம் கொண்டது அவளின் மனது.

ஏதோ பெரியதாய் சாதித்த பெருமை அவனுக்குள்! ஆம் காதலித்த பெண்ணைப் பெற்றோர்களின் விருப்பத்துடன் மணம் முடிப்பதும் சாதனை தானே! அதுவும் திருமணம் நிகழவிருக்கும் நிமிடம் வரை நடக்குமா நடக்காதா எனப் புலம்ப வைத்துப் பதட்டத்தில் தானே இவர்களின் திருமணம் நிகழ்ந்தேறியது.

இவ்வாறு பலவிதமான எண்ணங்கள் மனதினில் ஊர்வலம் போக வெளியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்த விழியிடம், “என்னடி வெளில இயற்கையை ரசிக்காம பெரிய திங்கிங்ல இருக்க மாதிரி தெரியுது” எனக் கேட்டான்.

“ஆமாடா நம்ம கல்யாணத்தைப் பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன். எவ்ளோ பிராப்ளம்ஸ் கடந்து வந்து நம்ம மேரேஜ் செஞ்சிருக்கோம்னு நினைச்சுப் பார்த்தேன்” என்றாள்.

“ஆமாம்டி உங்க வீட்டுல மூனு பவுன் நகைக்குப் பண்ண பிரச்சனைலயே கல்யாணம் நின்னுடும்னு நினைச்சேன்” என வேண்டுமென்றே அவள் வீட்டினரை அவன் வம்பிழுக்க,

“ஆமா எங்க வீட்டை சொல்லலைனா உனக்குத் தூக்கம் வராதே! உங்க வீட்டுல பார்த்து வச்சிருந்தாங்களே மண்டபம்! படு கேவலமா இருந்துச்சு! எங்க ரிலேடிவ்ஸ்லாம் நைட் அங்க ஸ்டே பண்ண மாட்டோம்னு கிளம்பிட்டாங்க தெரியுமா” என முகத்தை சுளித்தாள்.

“ஆமா பெரிய அம்பானி ஃபேமிலி! இதுவே உங்களுக்கு ஜாஸ்தி தான்! பெரிய ராஜ பரம்பரை மாதிரி சீன் போடாத போடி” நக்கலாய் அவனுரைக்க,

கோபமாய் அவனை முறைத்தவள், “நாங்க ராஜா பரம்பரை இல்லனா என்னைய ஏன்டா இளவரசினு சொன்ன?” எனக் கேட்டாள்.

“சரி போன போகுது உன்னைய வேணா இளவரசினு ஒத்துக்கிறேன். அதுக்காக உன் அப்பாவைலாம் ராஜாவா ஒத்துக்க முடியாது” அதே நக்கல் தொனி அவனிடம்.

அவனின் கையில் கிள்ளியவள், “என் அப்பாவ இழுக்கலைனா உனக்குத் தூக்கம் வராதே” எனப் பற்களைக் கடித்தாள்.

அவள் கிள்ளியதில் ஆஆஆ வென்று அலறியவள், ‘அவ பத்ரகாளி ஆகுறதுக்கு முன்னாடி ஆப் பண்ணிடுடா ஆதவா’ என மனதினுள் பேசிக் கொண்டவன், “சரி சரி விடுடி ஹனிமூனுக்கு வந்த இடத்துல எதுக்கு சண்டை?” என அவளிடம் சரண்டரானான்.

“ஹ்ம்ம் அது அந்தப் பயம் இருக்கட்டும்” என்றவள்,

“எங்கிருந்துடா அந்த ஐயரை பிடிச்சீங்க? அவ்ளோ லேட்டா வந்தாரு. நான் மேரேஜ் நின்னுடும்னே நினைச்சிட்டேன் தெரியுமா?” அன்றைய நாளின் பதட்டத்தைக் குரலில் தேக்கி கூறினாள் அவள்.

“ஆமாடி வேற ஏதோ மேரேஜ்க்கு போய்ட்டு நம்ம மேரேஜேக்கு லேட்டா வந்து கல்யாணத்துக்கு முன்னாடி செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் தாலி கட்டின பிறகு செய்ய வச்சிட்டாருனு அம்மா அப்பாக்கும் வருத்தம் தான்” என்றான்.

“அதுக்காக மேரேஜ் செஞ்சி வச்ச ஐயரையே அடிக்கப் போவாங்களாடா? உங்க மாமா செஞ்சது டூ மச்” என்றாள் விழி.

“பின்னே கல்யாணத்துக்கு வந்ததும் லேட்டு, இதுல கூட ஒரு சின்னப் பையனை கூட்டிட்டு வந்துட்டு அவனுக்கும் சேர்த்து காசு கொடுக்கனும்னு சொன்னா கோபம் வருமா வராதா?” என்ற ஆதவன்,

“அதுலாம் விடு! ஒரு பணியாரம் கூடச் செய்ய முடியாதுனு உங்க வீட்டுல சொன்னாங்க பாரு! எனக்கே கோபம் வந்துடுச்சு” என்றான்.

“டேய் எங்க வீட்டு சைட்ல இப்படிச் சடங்குலாம் இல்லைடா! அதுவுமில்லாம நாங்க எப்படிப் பணியாரம் செஞ்சி கொடுத்தாலும் தீஞ்சு போய்டுச்சுனு தான் பேச்சு வரும்னு சொல்லி தான் அம்மா பணியாரம் வாங்க பணமா கொடுத்தாங்க. அப்புறமும் என்ன பிரச்சனை உனக்கு?” என முறைத்தாள்.

“ஐயாயிரம் கொடுத்தா எப்படிடி பத்தும்? பணம் கொடுத்தாங்களாம் பணம்! ஆளை பாரு” அவளை அவன் வெறுப்பேற்ற,

உக்கிரமடைந்தவள் அவன் தொடையில் நறுக்கெனக் கிள்ளி வைத்தாள்.

ஆஆஆ என அலறியவன் அவளை முறைக்க, “பெரிசா பேசுறியே உங்க வீட்டுல மட்டும் என்னவாம்! பொண்ணுக்கு பூ வாங்கிக் கொடுக்கனும்னு தெரியாது? எல்லாக் கல்யாணத்துலயும் பொண்ணு மாப்பிள்ளை கையில பூச்செண்டு இருக்கும். என் தலைலயும் பூ இல்லை. கையிலயும் பூச்செண்டு இல்லை. கேட்டா அது பொண்ணு வீட்டுல தான் ஏற்பாடு பண்ணிருக்கனும்னு எங்களையே கேள்வி கேட்டாங்க பாரு” என மேலும் அவள் தொடர்ந்து பேசி கொண்டே போக,

“சரி விடுடி இரண்டு வீட்டு பக்கமும் பிரச்சனை பண்ணாங்க! இருந்தாலும் எப்படியோ சமாளிச்சுக் கல்யாணம் முடிச்சு ஹனிமூனுக்கே வந்தாச்சு இன்னும் எதுக்கு இந்தப் பேச்சு” என அவளை அமைதிப்படுத்தினான்.

“ஆமா நேத்து உங்க அப்பா அம்மா கூடத் தனியா ஏதோ மீட்டிங் போட்டு பேசிட்டு இருந்தியே! என்ன அது?” என்று கேட்டாள்.

“அதுவா! உங்க வீட்டுல 50 பத்திரிக்கை அடிச்சா போதும்னு சொன்னீங்களாம். ஆனா 100 பத்திரிக்கை அளவுக்கு ஆளுங்க வந்தாங்கனு சமையல்காரர் எக்ஸ்ட்ரா ஒரு லட்சம் பில் கொடுத்திருக்காங்களாம். அதனால இந்த ஒரு லட்சத்தை உங்க வீட்டாளுங்களைத் தான் கட்ட சொல்லனும்னு அப்பா சொல்லிட்டு இருந்தாங்க” என்றவன் கூறியதும்,

“அதெப்படிடா வந்தவங்க எல்லாம் எங்க வீட்டு சொந்தகாரங்க தான்னு தெரியும்?” என மீண்டுமாய் அவள் சண்டைக்கு நிற்க,

விழி என அழுத்தமாய் அழைத்தவன், “கல்யாண செலவு விஷயத்துல நம்ம ரெண்டு பேரோட பேரண்ட்ஸ் பேசிக்கிட்டும். இதுல நம்ம தலையிட வேண்டாம்னு தான் நான் சொல்லுவேன். அவங்களுக்குள்ள எதையாவது பேசி சண்டை போட்டு முடிவு பண்ணிக்கட்டும். இதுக்காக நம்ம சண்டை போட்டுக்க வேண்டாம்” எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“ஆனாலும் உங்க வீட்டுல ஓவரா சடங்கு செய்முறைனு சொல்லி என்னை ஒரு வழியாக்கிட்டாங்கடா!” என்றவள் கூறவும்,

“எந்த சடங்கை சொல்ற?” யோசனையாய் அவன் கேட்க,

“நம்ம பர்ஸ்ட் நைட்டை தான் சொல்றேன்! உங்க சொந்தகார உறவுல உனக்கு அண்ணி முறை உள்ளவங்கலாம் எனக்கு அட்வைஸ் பண்ணி செம்ம டார்ச்சர்” என்றவள் கூறவும்,

ஆர்வமாய், “அப்படி என்ன அட்வைஸ் பண்ணாங்க?” எனச் சிரித்தவாறு கேட்டான்.

“நம்ம ரூம்ல வச்சிருந்த விளக்கை நான் ரூம்க்குள்ளே வந்ததும் ஏத்தனும், நம்ம தூங்குறதுக்கு முன்னாடி தான் அணைக்கனும், காலைல கண் விழிக்கும் போது புருஷனை தான் பார்க்கனும் இல்ல கண்ணாடிய தான் பார்க்கனும்னு ஒரே அட்வைஸ் டார்ச்சர்! இதுல பர்ஸ்ட் நைட்ல நீ பண்ணி வச்ச வேலையில எனக்கு மறுநாள் அசிங்கமா போச்சு! எப்படியோ பேசி சமாளிச்சேன்” என்றவள் கூறவும்,

‘அய்யய்யோ நம்ம மானத்தை எதுவும் வாங்கிட்டாளா’ பதறியவனாய், “நான் என்னடி பண்ணேன்?” எனக் கேட்டான்

“நீ தானே ஃபேன் போடனும்னு ஏத்தின விளக்கை உடனே அணைக்கச் சொன்ன” என்றவள் கூறவும்,

“ஆமா அதுக்கு என்ன?” எனக் கேட்டான் அவன்.

“டேய் நம்ம தூங்கும் போது தான் அதை அணைக்கனும்னு சொன்னாங்க. மறுநாள் அந்த விளக்குல இருந்த எண்ணையப் பார்த்து என்னைய கலாய்ச்சி தள்ளிட்டாங்க!” என்றாள்.

“இதை நீ அன்னிக்கே விளக்கை அணைக்கும் போது சொல்லிருக்கனும்டி” என்றவன் கூறவும்,

“நீ எங்கடா என்னைய பேச விட்டே” என சற்று நாணத்துடன் அவள் கூறவும், அவனின் முகமும் வெட்கத்தைப் பூசி கொண்டது.

என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

சரியாய் அந்நேரம் பேருந்தில் இப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, இருவரும் தத்தமது இணையின் அருகாமையைச் சுகித்த வண்ணம் காதலில் திளைத்து இப்பாடலை ரசித்துக் கேட்டிருக்க, ‘நீதானே பொஞ்சாதி’ என்ற வரிகளில் அவளை நோக்கி விரல் நீட்டியவன், ‘நானே உன் சரிபாதி’ எனத் தன்னை நோக்கி நீட்டியவாறு வாயசைக்க,

“பெரிய ரொமேன்ட்டிக் ஹீரோனு நினைப்பு?” என அவள் நாக்கை துருத்த,

“அடிங்க” என அவளைப் போலியாய் முறைத்தான் அவன்.

கிண்டலும் கேலியுமாய் கால் வாரலுமாய் இனிமையாய் நகர்ந்தன அந்தப் பயண நொடிகள்.

மகிழ்வில் மிளிர்ந்த அவளின் முகத்தை அழகான சுயமியாய் படம்பிடித்துக் கொண்டான் தனது கைபேசியில். காற்றோடு கலந்த யூக்கலிப்டஸ் வாசனையை நுகர்ந்தவாறு பலவிதமான சுயமிகளை எடுத்த வண்ணம் அந்தப் பேருந்தில் பயணித்திருந்தனர் இருவரும்.

மதிய வேளையில் உதகை பேருந்து நிலையத்தில் இறங்கியதும் உதகை ஸ்பெஷல் தேநீர் அருந்தினர் இருவரும். அந்தக் குளிருக்கு இதமாய்த் தொண்டையில் இறங்கியது அந்தத் தேநீர்.

“விழி, எந்த ஹோட்டல் புக் பண்ணிருக்க?” எனக் கேட்டவாறே தேநீரை பருகி கொண்டிருந்தவனை முறைத்தாள் வேல்விழி.

“பொதுவா ஹனிமூன்க்கு எல்லா ஏற்பாடும் புருஷன் தான் பண்ணுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே எல்லா ப்ளானும் பொண்டாட்டி தானே பண்ண வேண்டியதா இருக்கு” போலியாய் அலுத்துக்கொண்டாள்.

“என் பொண்டாட்டி செய்ற பிளானிங்க் செம்மயா இருக்கும் தெரியுமா! என் பொண்டாட்டி எனக்காக ப்ளான் செஞ்சிருக்கா.. உனக்கு ஏன் பொறாமை?” என வாய்க்குள் சிரித்திருந்தான் அவன்.

இத்தனை நாட்கள் காதலர்களாய் உலவி கொண்டிருந்த இருவருக்கும் தங்களைக் கணவன் மனைவி என விளித்தவாறு பேசிக் கொள்வது ஒருவித சிலிர்ப்பை அளித்திருந்தது.

அவனின் பதிலில், “பார்ரா! என்ன திடீர் பெருமை பொண்டாட்டி மேல” என வம்பிழுத்தாள்.

இருவரும் பேசியவாறே பத்து நிமிட நடைபயணத்தில் அவர்கள் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

அங்கு அளித்த வரவேற்பு தேநீரை பருகிவிட்டு அறைக்குச் சென்றனர்.

அப்பொழுது அவனுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர, கட்டிலில் அமர்ந்தவாறு பேசி கொண்டிருந்த ஆதவனை விழி அகலாது பார்த்திருந்தாள் விழி.

முதலிரவு அன்று அவளைத் தனது கை வளைக்குள் வைத்து அணைத்தவாறு படுத்திருந்தவன், “இப்படி உன்னை என் கைக்குள்ள வச்சிக்கிற உரிமை எனக்குக் கிடைக்கத் தான் அவ்ளோ பிரச்சனையையும் கடந்து வந்தேன்” எனக் கூறி நெற்றியில் இதழ் பதித்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டது இப்பொழுது இவளின் நினைவிலாடியது.

காதலித்த நாளில் இருந்து மணமாகும் நாள் வரை அவன் அவளிடம் காத்த கண்ணியம், முதலிரவு அன்று அவனுக்குள் அவளை வைத்துக்கொள்ளவே இந்தத் திருமணம் என உரைத்தது என அனைத்துமாய் அவளை அவன்பால் வெகுவாய் ஈர்த்திருந்தது.

‘என் புருஷன்! என்னவன்! எனக்கே எனக்கானவன்’ உரைத்தவாறு பேருவகைக் கொண்டது அவளின் மனது! குறுநகை அவளிதழில்!

அதே சமயம் அந்த முதலிரவு அன்று தான் கேட்ட அந்தச் சிறப்புமிக்கக் கேள்வியை எண்ணி குறும்பும் நாணும் இழையோடியது அவளின் முகத்தில்.

அலைபேசியில் பேசி முடித்து அழைப்பை துண்டித்தவன், தன்னையே கண் சிமிட்டாது பார்த்திருக்கும் மனைவியவளை பார்த்துப் புருவத்தை உயர்த்த, அவனின் கேள்வியான பார்வையில், “எனக்கு ஒரு சந்தேகம்டா?” எனக் குறும்பு பார்வையை வீசினாள்.

கட்டிலில் அமர்ந்தவாறு அவளின் கைப்பற்றித் தன்னருகே நிறுத்தி இடையோடு வளைத்தவன் முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்தவாறு, “என்ன சந்தேகமாம் என் பொண்டாட்டிக்கு” எனக் கேட்டான்.

அவனின் தலை முடியை கோதியவளோ, முதலிரவு அன்று கேட்டது போன்றே குறும்பு புன்னகையுடன், “இந்தக் காதல் கதைகள்லலாம் என்னமோ கிஸ் பண்ணா தேன் மிட்டாய் மாதிரி தித்திப்பாய் இருக்கும்னுலாம் சொல்றாங்களே, அது உண்மையா பொய்யானு ஒரு சந்தேகம்” எனக் கேட்டாள்.

அவனும் புன்னகை சிந்தியவனாய், “என் அழகம்மாக்கு முத்தம் வேணுமா?” எனக் கேட்டு அவளின் சந்தேகத்தைத் தீர்க்க ஆரம்பித்தான்.

மாலை ரோஸ் கார்டன் சென்றுவிட்டு இரவு வேளையில் படுக்கையறைக்குள் நுழைய, அழகிய ரோஜா இதழ்களால் படுக்கையை அலங்கரித்திருந்தனர் அந்தப் பணியாளர்கள்.

அறையினுள் நுழைந்த இருவரின் விழிகளும் அந்த அலங்காரத்தைக் கண்டு ஆச்சரியத்தில் விரிய, “ஹே இதுவும் உன் ப்ளானாடி?” சிரிப்பாய் ஆதவன் கேட்க,

“அடேய்” என அவனை முறைத்தவள், “நான் எதுவும் இதுக்குனு எக்ஸ்ட்ரா பே பண்ணலைடா!” என்றாள்.

அங்கிருந்த அலைபேசியில் வரவேற்பறைக்கு அழைத்துக் கேட்டவன்,
“நம்ம இரண்டு பேரும் ஒட்டிக்கிட்டே சுத்துறதை வச்சி நியூலி மேரீடு கப்புள்னு தெரிஞ்சி அவங்களே செஞ்ச ஏற்பாடாம் ” எனக் கூற,

“அய்யய்யோ அப்படியா சுத்திட்டு இருக்கோம் இரண்டு பேரும்” என வெட்கத்துடன் உரைத்தவள், அவ்வெட்கத்தை அவன் மார்பிலேயே சாய்ந்து ஒளித்துக் கொண்டாள்.

“ஹாஹாஹா சும்மா சொன்னேன்டி! கப்புள் சூட் எடுத்தாலே இப்படி அரேஜ் செய்வாங்களாம்” எனக் கூறி அவளை அணைத்திருந்தான் அவன்.

அங்கிருந்த ஏழு நாட்களும் இவர்கள் வாழ்நாளுக்கும் எண்ணி பார்த்து மகிழும் வண்ணம் பொக்கிஷ நாட்களாய் நினைவடுக்கில் சேமிக்க வைத்திருந்தது இந்தப் பயணம்.

தேனிலவு பயணத்தை முடித்து இருவரும் திருச்சி நோக்கி தங்களது பயணத்தை இரயிலில் தொடர்ந்து கொண்டிருந்த சமயம் வந்தது அந்த அழைப்பு விஜயாவிடம் இருந்து.

தனது அன்னையிடம் பேசி முடித்ததும், தன்னவனின் முகம் யோசனையில் இருப்பதைக் கண்டவள், “என்னடா? என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள்.

“முகில் அவனோட லவ்வை பத்தி வீட்டுல சொல்லிட்டான்! அம்மாக்கு அந்தப் பொண்ணு வீட்டாளுங்க யாரையும் பிடிக்காது! அதான் அம்மா இப்படிப் பண்ணிட்டானே அவன்னு போன் பண்ணி புலம்புறாங்க” என்றான்.

“ஓ” என்றவள் அமைதியாய் இருக்க,

“முகில் இப்பலாம் உன்கிட்ட பேசுறது இல்லயா விழி?” எனக் கேட்டான்.

“அந்தப் பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து அவன் என்கிட்ட போன்ல பேசுறது இல்ல! நேர்ல பார்த்தா மட்டும் தான் பேசுவான்” என்றாள்.

“ம்ப்ச் நம்ம கல்யாண விஷயத்துல அவனைக் கவனிக்காம விட்டுட்டேன்” என நெற்றியை அழுத்தி யோசித்தவாறு ஆதவன் கூற,

“லவ் பண்றதுல என்னடா தப்பு! அத்தை தான் ஓவரா ரியாக்ட் பண்றாங்களோனு தோணுது” என விழி கூறியதும் அவளைப் பார்த்து முறைத்தவன்,

“காலேஜ்ல படிக்கிற பொண்ணுடி அவ! படிக்கிற பொண்ணைக் காதலிக்கிறதே தப்புனு சொல்வேன் நான்! இதுல அம்மாக்கு பிடிக்காத வீட்டுப் பொண்ணைப் போய் லவ் பண்ணி வச்சிருக்கான். அவங்க வீட்டுல அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை நிச்சயம் பண்ண போறாங்களாம். அதனால தான் முகில் அம்மாகிட்ட வந்து அந்தப் பொண்ணு வீட்டுல பேசுங்கனு சொல்லிருக்கான்” என்றான்.

“ஹ்ம்ம் அத்தை முடியாதுனு சொல்லிட்டாங்களா?” எனக் கேட்டாள்.

ஆமென அவன் தலையசைக்க, “ஹ்ம்ம் அப்ப வீட்டுல அடுத்தப் பிரச்சனை ரெடியா இருக்கு! இதை வச்சி நமக்கு எதுவும் பிரச்சனை வருமா ஆதவ்!” பயத்துடன் அவள் கேட்க,

“நம்ம இரண்டு நாள்ல சென்னை போய்ட போறோம்! இதுல நமக்கென்ன பிரச்சனை வர போகுது! இருந்தாலும் இந்த ரெண்டு நாள்ல அம்மா உன்னை எது சொன்னாலும் கொஞ்சம் பொறுத்து போ” என்றான்.

ஏனோ அவன் அவ்வாறு கூறியது அவளின் மனதை வாட்ட, “ஏன் நீ எனக்காகப் பேச மாட்டியா அத்தைக்கிட்ட” எனக் கேட்டாள்.

‘அய்யய்யோ ஆதவா வாய்விட்டு வாங்கிக் கட்டிக்காத!’ மனசாட்சி அவனை அலர்ட் செய்ய,

“அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது நான் என்ன செய்றேன்னு பாரு” அவளைச் சமாளிக்க வாய்க்கு வந்ததை உரைத்திருந்தான்.

வீட்டிற்கு வந்த இருவரும் முதலில் சென்று முகிலனிடம் தான் பேசினர்.

மொட்டை மாடியில் மூவரும் நின்றிருந்தனர்.

“என்னடா பிரச்சனை உனக்கு?” ஆதவன் கேட்க,

“கவிதாக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க அண்ணா” என்றான்.

“அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு சரிப்பட்டு வராதுனு உன்கிட்ட சொன்னேனா இல்லையா? இன்னும் அந்தப் பொண்ண தான் கட்டிப்பேன்னு வந்து நிக்கிற” எனக் கோபமாய் ஆதவன் கேட்க,

“ஏன் நீ மட்டும் லவ் பண்ணி பிடிச்ச பெண்ணைக் கல்யாணம் செஞ்சிப்ப? ஆனா நான் செய்யக் கூடாதா?” சற்று சீற்றமாகவே முகிலன் கேட்டான்.

ஏதேனும் சண்டை வந்திடுமோ இருவருக்குள்ளும் எனப் பயம் வந்தது விழிக்கு.

முகிலனை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்த ஆதவன், “உன்னைக் காதலிக்கக் கூடாதுனு நான் சொல்லலையே! அந்த வீட்டு பொண்ணு வேண்டாம்னு தான் சொல்றேன். அந்தப் பொண்ணு வீட்டாளுங்களோட ஏற்கனவே நம்ம வீட்டாளுங்க சண்டை போட்டிருக்காங்க. அங்க பொண்ணு எடுத்தா பிரச்சனை தான் வரும்”

“அதுவுமில்லாம படிக்கிற பொண்ணைக் காதலிக்கிறதுலாம் சரி கிடையாது! நீ அந்தப் பொண்ணு கூடப் போன்ல தினமும் சாட் பண்ணிருப்ப! அது ஒரு விதமான நெருக்கத்தை உங்களுக்குள்ள உண்டு பண்ணிருக்கும். அவளுக்கு உன் மேல பொசசிவ் வந்திருக்கும், நீ அவளைக் கேர் பண்ணிருப்ப! இதெல்லாம் இயல்பா நடக்கிற விஷயம்! அவளின் வயசு அதைக் காதலா நினைச்சிருக்கும். ஆனா உன் வயசுக்கு நீ அவளுக்கு எடுத்து புரிய வச்சிருக்கனும். இப்படி அவளைக் காதலிக்கிறேன்னு வந்து நிக்கக் கூடாது” என்றான்.

“ம்ப்ச் அண்ணா! என்னைலாம் ஒரு பொண்ணு லவ் பண்றேனு சொல்றதே பெரிசு! அதுல இப்படிலாம் நீ ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பியா?” என அவன் கேட்க,

“நல்ல ஆம்பிளை, தன்னை ஒரு பொண்ணு லவ் பண்றேனு சொல்லும் போது அவ நிலைல இருந்து பார்த்து யோசிப்பான். அவளுக்குத் தான் ஏத்தவனா, அவளை வாழ்நாளுக்கும் தன்னால சந்தோஷமா வச்சிக்க முடியுமா? இந்தக் காதலால அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் ஏதேனும் பிரச்சனை வருமா? இதெல்லாம் யோசிப்பான்” ஆதவன் கூறவும்,

“நானும் யோசிச்சேன்! நான் அவளை ஆயுசுக்கும் சந்தோஷமா வச்சி காப்பாத்துவேன்னு அவ நம்புறா” என்றான்.

“படிக்கிற பொண்ணுக்கு என்னடா தெரியும்? வெளியுலக அனுபவம்னு அவளுக்கு என்ன இருக்கும்?” எனக் கத்தியிருந்தான் ஆதவன்.

“அவ வீட்டை பார்த்திருக்கத் தானே! அவங்க அப்பா அரசாங்க உத்தியோகத்துல நிறையச் சம்பாதிச்சு ஆடம்பரமா அவளை வளர்த்திருக்காரு. ஆடம்பரமா வாழுற பொண்ணு அவ! நம்ம வர்ற சம்பளத்துல லோன் கட்டி இருக்கிறதை மிச்சம் பிடிச்சி வாழுறவங்க. நீ சம்பாதிக்கிற பத்தாயிரத்துல அவளுக்கு என்னலாம் செஞ்சிட முடியும்னு நினைக்கிற? அவ மேலும் படிக்கனும்னு நினைச்சா நீ தான் அவ படிப்புக்கும் செலவு பண்ணனும்” ஆதவன் முகிலன் தேர்ந்தெடுத்த வாழ்க்கையின் சாதகப் பாதகங்களை விளக்க,

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது அண்ணா. வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். நீயும் அண்ணியும் இப்ப சென்னைக்குப் போய்டுவீங்க. நான் காலைல கடைக்குப் போனா நைட்டு தான் வருவேன். அம்மா அப்பா தனியா தானே இருப்பாங்க. கவி அவங்க கூட இருந்து பார்த்துப்பா அண்ணா!” ஆதவனைச் சமாதானம் செய்யும் பொருட்டு இப்படி ஒரு காரணத்தைக் கூறியிருந்தான் அவன்.

“சரி இந்தப் பொண்ணையே நீ கட்டிக்கிறதா முடிவு பண்ணினாலும் இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி செய்றது தான் சரியா இருக்கும்ன்றது தான் என்னோட எண்ணம். நீயும் இப்ப தானே பார்ட் டைம் எம்பிஏ படிச்சிட்டு இருக்க முகில்! நீ படிச்சு முடிச்சுக் கொஞ்சம் செட்டிலான பிறகு கல்யாணம் செஞ்சிக்கிறது தான் சரியா இருக்கும்னு தோணுது! அதுக்குள்ள அந்தப் பொண்ணும் படிப்பை முடிச்சி ஒரு வேலைல இருப்பா..” என்ற ஆதவன் பெருமூச்சு விட்டவனாய்,

“நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்டா! இதுக்கு மேல உன் விருப்பம்” என அங்கிருந்து சென்று விட்டான்.

தனது அத்தையுடன் இணைந்து அன்றைய இரவுணவை தயாரித்தாள் வேல்விழி. முகிலன் பற்றிய தனது கவலையைப் புலம்பியவாறு அவளுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

அன்றிரவு ஆதவனின் அருகில் வந்து அவள் படுக்க, ஏதோ சிந்தனையில் உழன்றிருந்த ஆதவனின் மீசையைப் பிடித்து இழத்துத் தன்னை நீக்கி அவனின் கவனத்தைத் திருப்பி இருந்தாள் அவள்.

அவள் இழுத்ததில் ஆஆஆ என அலறியவன், “அடியேய்” எனக் கத்தியிருந்தான்.

“பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போது வேறென்ன யோசனை உனக்கு?” என அவன் கன்னத்தைக் கிள்ளியவள் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“முகிலன் வாழ்க்கையைப் பத்தி நினைச்சி பார்த்தேன்! என்னமோ அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்குச் செட் ஆகும்னு தோணலை விழி” ஆதவன் உரைக்க,

“அது அவன் வாழ்க்கை! அவன் முடிவு! அண்ணனா அறிவுரை சொன்னதோட உன் வேலை முடிஞ்சது. அவன் எடுக்குற முடிவோட வீரியத்தை அவன் தான் அனுபவிக்கப் போறான்” என்றாள் விழி.

“அப்படி இல்ல விழி! நம்ம ஒரு குடும்பமா வாழும் போது, ஒருத்தர் எடுக்கிற தவறான முடிவு ஒட்டு மொத்த குடும்பத்தோட நிம்மதியையும் கெடுக்க நிறைய வாய்ப்பிருக்கு! அதனால தான் நான் வாழ்க்கைல ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் அவ்ளோ யோசிப்பேன். அந்த முடிவு குடும்பத்தைப் பாதிக்காத மாதிரி தான் எடுப்பேன்” என்றான்.

“என்னை லவ் பண்ணுறதுக்கும் இப்படிலாம் யோசிச்சியாடா நீ? இதெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல நீ?” என ஆச்சரியமாகக் கேட்டாள்.

“உனக்கு அழகம்மானு பேர் வச்சதும் அப்ப தான்” என்றான் மென்னகை புரிந்தவனாய்.

ஆர்வ மிகுதியில் படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், “அப்படியா? எப்ப இந்தப் பேர் வச்ச? என்னைய எப்ப கல்யாணம் செஞ்சிக்கலாம்னு நினைச்ச?” அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டிருந்தாள்.

“உன்னைப் பஸ்ல பார்த்தாலும் பேசாம இருந்தேன்ல. அந்த டைம்ல ஒரு வீக்கெண்ட்ல மத்திய கைலாஷ் சிவன் கோவில்ல உன்னைய பார்த்தேன்! நான் பிரகாரத்தைச் சுத்தி வந்து உட்காரும் போது பக்கத்துல பொண்ணு அழுகுற சத்தம் கேட்டு தான் திரும்பி பார்த்தேன். நீ அழுதுக்கிட்ட ரேவதிகிட்ட பேசிட்டு இருந்த! ‘காப்பாத்த கூடிய நிலைல இருந்தும் காப்பாத்தாம போய்ட்டேனே! ஒரு உயிர் போய்டுச்சே ரேவதினு’ சொல்லி அழுத” என அவன் முடிக்கும் முன்பே,

இவள் அந்நிகழ்வை எண்ணி கலங்கியவாறு கூற ஆரம்பித்தாள்.

“ஆமாடா அன்னிக்கு மதியம் தைக்கக் கொடுத்த துணியை வாங்கிறதுக்கு டெய்லர் கடைக்கு நடந்து போகும் போது, ஒரு பெரியவர், எப்படியும் 70 வயசு இருக்கும், ரோட்டுல விழுந்து கிடந்தாரு. எனக்கு அவர்கிட்ட போகலாமா ஹெல் பண்ணலாமானு ஒரு எண்ணம்! மயக்கம் போட்டு விழுந்திருக்காரானு பார்க்கலாம்னு போகும் போது, தண்ணியடிச்சிட்டு விழுந்து கிடக்கிறதா சிலர் பேசிக்கிட்டாங்க! தானா போய்ப் பிரச்சனைல சிக்கிக்கக் கூடாதேனு பயம் வந்து நான் நிக்காம போய்ட்டேன். டெய்லர் கடைல கூட்டம் இருந்தனால திரும்பி வரதுக்கு ஒரு மணி நேரம் கிட்ட ஆச்சு. நான் திரும்பி வரும் பொழுது அந்த வழியில ஆம்புலன்ஸ் நின்னுச்சு. நான் என்னாச்சுனு அங்கிருங்கவங்க கிட்ட கேட்டேன். அந்தப் பெரியவர் இறந்துட்டதா சொன்னாங்க. மனசு அப்படியே துடிப்பை நிறுத்துற மாதிரி ஆகிடுச்சு எனக்கு! அவர் நெஞ்சு வலி வந்து தான் மயங்கி விழுந்திருக்காருனு பேசிக்கிட்டாங்க”

“ஒரு உயிர் போய்டுச்சேனு மனசு கஷ்டமா இருந்துச்சுடா! அவரோட ஆத்ம சாந்தியடைனும்னு வேண்டிக்கத் தான் அன்னிக்கு கோவிலுக்கு வந்தேன்! அப்படியே என் மனசுக்கும் அமைதி கொடு தெய்வமேனு வேண்டிக்கத் தான் வந்தேன்” இன்றும் அதே வேதனையைப் பிரதிபலிக்கும் குரலில் உரைத்திருந்தாள் விழி.

“யாரோ ஒருத்தருக்காக அழுற உன்னோட உள்ளம் தான் எத்தனை அழகானதுனு உன்னை ரொம்பப் பிடிச்சிது” கண் சிமிட்டி அவன் உரைக்க அவள் கண்களில் கோடி மின்னல்!

“அழகம்மா! மனசால பேரழகி அந்தப் பொண்ணு! அழகம்மான்ற பேரு தான் அந்தப் பொண்ணுக்கு சரியா இருக்கும்னு உன்னைப் பத்தி அக்ஷயாகிட்ட சொன்னேன். அதை எங்க கூட வேலை செய்றவங்ககிட்ட அவள் சொல்ல, எல்லாரும் என்னைய அழகம்மானு ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க” என்றான் சிரித்தவாறு.

“ஓ அதான் அக்ஷயா ட்ரைன்ல என்னைப் பார்த்ததும் அழகம்மானு சொன்னாளா?” எனக் கேட்டாள்.

“ஆமாடி என் அழகம்மா! அவங்க அப்படி தினமும் என்னைக் கிண்டல் செய்ய, நீ பஸ்ல தினமும் என்னைப் பார்த்துட்டே வேற இருப்பியா அப்படியே பிடித்தம் காதலா மாறிடுச்சு என் மனசுல” தன்னை அணைத்தவாறு இந்நிகழ்வை கேட்டுக் கொண்டிருந்த வேல்விழியின் நெற்றியில் முட்டியவாறு உரைத்தான் ஆதவன்.

“உன்னைக் காதலிச்சதை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குடா” அவனை முத்தமிட்டிருந்தாள்.

அவளின் முத்தத்தை முற்றுகையாக்கி காதலால் அவளைக் கொண்டாடி தீர்த்திருந்தான் அவளின் கணவன்.

— தொடரும்