நறுங்காதல் பொழிபவனே – 11

வேல்விழியும் ஆதவனும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களாய் இருந்ததினால் இரு குடும்பத்தினரும் திருமண அழைப்பிதழில் யாருடைய ஜாதி பெயரையும் குறிப்பிட வேண்டாமென முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அழைப்பிதழில் ஆதவன் குடும்பத்தினருக்கு மட்டும் ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து வெகுவாய் கோபம் கொண்டனர் வேல்விழி குடும்பத்தினர். தங்களின் உறவினர்கள் இந்த அழைப்பிதழை கண்டால் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனக் கூறி வெகுண்டெழுந்தனர்.

ஆயினும் தனது கோபத்தை அடக்கியவாறு தான் பேசினார் சண்முகம்.

முன்னறையில் இருந்த ஆதவனின் தாய் தந்தையரிடம் சென்ற சண்முகம், “என்ன சம்பந்தி எங்க தாத்தா பேருலலாம் ஜாதி போடாம அடிச்சி வச்சிருக்கீங்க? உங்கள் தாத்தா பேர்ல மட்டும் ஜாதி போட்டிருக்கீங்க?” எனக் கேட்டார்.

“எங்க தாத்தா பேரோடயே ஜாதி பேரும் சேர்த்து தான் வரும்” என்றார் மனோகர்.

கலக்கத்துடன் வேல்விழி ஆதவனை பார்த்தாள்.

“அப்ப எங்களுக்கு மட்டும் எப்படியாம்?” எனப் பொங்கினார் மகேஸ்வரி.

“போட்டா இரண்டு குடும்பத்துக்கும் ஜாதி பேரு போடுங்க. இல்ல இரண்டு குடும்பத்துக்கும் போடாதீங்க” என்றார் சண்முகம்.

“சம்பந்தி எங்க சொந்தகாரங்க எல்லார்கிட்டயும் நீங்களும் எங்க ஜாதினு தான் சொல்லி வச்சிருக்கோம்” என்று மனோகர் உரைத்தது பேரதிர்ச்சியாய் இருந்தது பெண் வீட்டினருக்கு.

வேல்விழி ஆதவனைப் பார்த்து, ‘அடப்பாவி’ என வாயசைத்திருந்தாள்.

‘என்கிட்ட கூட இந்த விஷயத்தைச் சொல்லலையேடா நீ’ என மனதினுள் நினைத்து கொண்டாள்.

“என்ன சம்பந்தி இது! பின்னாடி உங்க சொந்தகாரங்களுக்குத் தெரிய வந்தா என்ன நினைப்பாங்க? நாங்க தான் உங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டோம்னு பேச மாட்டாங்களா” சற்று கோபமாகவே சண்முகம் கேட்க,

“சரி இப்ப என்ன தான் செய்யலாம்னு சொல்றீங்க?” மனோகர் சற்று விட்டேத்தியாய் கேட்டு வைக்க,

சண்முகம் கோபமாய் வாயை திறக்கும் முன்னே அவர் கையைப் பிடித்து அழுத்திய மகேஸ்வரி, “ஒன்னுமில்லைணா! இரண்டு சைட்லயும் ஜாதி போட வேண்டாம்! அவ்ளோ தான்” என்றார்.

இத்தனை நேரம் அமைதியாய் இதைப் பார்த்திருந்த ஆதவன், “அப்பா அவங்க சொல்ற மாதிரியே செய்யலாம்!”

இது தான் முடிவு என்பது போல் உரைத்தவன்,

“விழி, மாமாவையும் அத்தையையும் உள்ளே கூட்டிட்டு போ! அம்மா நீங்க அந்த ரூம்ல போய்ப் படுங்க! அப்பா வாங்க நாம வெளில போய்ட்டு வரலாம்” எனக் கூறி தந்தையை வெளியே அழைத்துச் சென்று விட்டான்.

“பொண்ணு வீட்டுக்காரங்க பையன் வீட்டாளுங்க எது சொன்னாலும் மண்டையை ஆட்டனும்னு நினைக்கிறாங்க போல” எனப் புலம்பினார் மகேஸ்வரி.

“அவங்க தான் வேலுமா இரண்டு வீட்டுக்கும் சேர்த்து ஒரே பத்திரிக்கையா அடிக்கலாம்னு சொன்னாங்க. இப்ப பாரேன் என்ன வேலை பார்த்து வச்சிருக்காங்கனு. நம்ம ஜாதி பேரு போட்டுப் பத்திரிக்கை அடிச்சிட கூடாதுனு ஒன்னா அடிச்சிருக்காங்க போல” அவர் தொடர்ந்து புலம்பி கொண்டிருக்க,

“விடுமா. அதான் உன் மாப்பிள்ளை பேசிட்டாரே! நீ எதுவும் யோசிக்காம படுத்து தூங்கு” என்றவளும் படுத்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் ஆதவனும் அவனின் தந்தை மனோகரும் உள்ளே வரும் அரவம் கேட்டது வேல்விழிக்கு.

அவள் உறக்கத்தில் அல்லாது ஏதோ சிந்தினையிலேயே உழன்றவாறு தான் இருந்தாள்.

“அப்பா நான் எங்க ரூம்ல போய் படுத்துக்குறேன். காலைல வந்து உங்களை எல்லாம் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போறேன். கதவை பூட்டிக்கோங்க” என்றுரைத்து விட்டு சென்றான் ஆதவன்.

படுக்கையறையை விட்டு வரவேற்பறைக்கு வந்த விஜயா, தனது கணவரிடம் புலம்ப ஆரம்பித்தார்.

“இவன் ஓவரா தான்ங்க பொண்ணு வீட்டுக்கு சப்போர்ட் செஞ்சி பேசிட்டு இருக்கான். ‘கல்யாணத்துக்குப் பிறகு வேல்விழி சம்பளம் முழுசும் அவ வீட்டுக்கு தான் கொடுப்பா… அதைப் பத்தி நீ என்னிக்கும் கேட்க கூடாதுனு’ நேத்து சொல்லிட்டு இருந்தான். இன்னிக்கு என்னடானா பத்திரிக்கை விஷயத்துலயும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டுப் போறான்”
என்றார் விஜயா.

“ஆமா அந்தப் பொண்ணு வீட்டுக்கு ஒரே பொண்ணுல விஜி! அவ தானே அவங்க அப்பா அம்மாவை பார்த்துக்கனும். நம்ம சம்பந்தி தொழில் இப்பவே நொடிஞ்சி போய் தானே இருக்கு” என்றவர் கூற,

“அது சரிதான்ங்க! ஆனா அவன் சம்பளத்துல அவன் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு நமக்கும் செய்யனுமே! நமக்கும் வேறென்ன வருமானம் இருக்கு” என்று கவலையாய் உரைத்தார் விஜயா.

“ஆதவன் பொண்டாட்டி பேச்சு கேட்டு நம்மளை கடைசிக் காலத்துல கவனிக்காம போய்டுவான்னு பயப்படுறியா விஜி” எனக் கேட்டார் மனோகர்.

“அய்யோ இல்லங்க!” பதறியவாறு உரைத்தவர், “என் பையனை எப்படிங்க நானே அப்படி நினைப்பேன்? மாமியார் மாமனாருக்காகனு யோசிச்சு அவன் பண நெருக்கடியில சிக்கிக்கக் கூடாதுனு நினைச்சேன். மத்தபடி அந்தப் பொண்ணு அவங்க அம்மா அப்பாக்கு காசு கொடுக்கிறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” தன்னிலையை விளக்கியவராய் உறங்க சென்றார் விஜயா.

பத்திரிக்கையை சொந்தங்களுக்கு வழங்குகையில் கண்டிப்பாய் கேள்வி எழும், இரு குடும்பத்தினரும் அவரவர் சொந்தங்களை சமாளிக்க வேண்டி வரும் என இரு வீட்டின் பெரியவர்களுமே நினைத்து கவலையுற்றனர். ஆயினும் அவர்களுக்கு வேறு உபாயமும் இல்லை என்பதும் இரு குடும்பத்தினருக்கும் புரிந்திருந்தது.

சண்முகமும் மகேஸ்வரியும் அன்றைய நாளின் அலைச்சலின் சோர்வில் படுத்ததும் உறங்கி விட்டனர்.

ஆதவன் மீதான கோபத்தில் அவனைத் திட்டியவாறு உறங்காது புரண்டு கொண்டிருந்த வேல்விழிக்கு இவர்கள் பேசியது அனைத்தும் காதில் விழுந்தன.

காதலிக்கத் துவங்கிய நாட்களில், திருமணத்திற்குப் பிறகு தனது சம்பளத்தைப் பெற்றோருக்கு வழங்கவே விருப்பமென உரைத்திருந்தாள் வேல்விழி. ஆனால் திருமண நிச்சயத்திற்குப் பிறகு இதைப் பற்றி மீண்டுமாய் அவள் ஆதவனிடம் பேசியிருக்கவே இல்லை. ஆயினும் இதை மனதினில் வைத்துப் பேசியிருந்த ஆதவனை எண்ணி மனம் நெகிழ்ந்து போனது அவளுக்கு.

அவன் மீதான கோபம் முழுதாய் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது. உடனே அவனிடம் பேச வேண்டுமென மனம் உந்தியது. கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தவள், மறுநாள் பேசிக் கொள்ளலாமென நினைத்தவாறு நிம்மதியான மனநிலையில் உறங்கி போனாள்.


வேல்விழியை சமாதானம் செய்ய மறுநாளே அவளின் இல்லத்திற்கு வந்திருந்தான் ஆதவன்.

“பாப்பா என்ன பண்றாங்க?” வேல்விழியின் அருகில் அமர்ந்தவாறு அவள் மடியிலிருந்த குழந்தையைக் கொஞ்சி கொண்டிருந்தான் ஆதவன்.

மகேஸ்வரி வந்து அவனிடம் தேநீர் அளித்து விட்டு சென்றார்.

விழி அவன் வந்த நேரத்திலிருந்து அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

தேநீர் அருந்தி விட்டு கோப்பையை வெளியே சென்று வைத்து விட்டு வந்தவன் கதவை அடைத்தான்.

அவள் மடியில் படுத்திருந்த மகளைத் தூளியில் போட்டு ஆட்டியவாறு உறங்க வைத்தான்.

அவளருகில் வந்தவன், “என்னடி இன்னும் கோபமா தான் இருக்கியா?” அவளின் கன்னத்தைக் கிள்ளியவாறு கேட்டான்.

அவனின் கையைத் தட்டிவிட்டவள், “என்னையும் பாப்பாவையும் தனியா விட்டுட்டு இருக்கிறதா பேசினவன் எதுக்கு இப்ப இங்க வந்திருக்க? அங்கேயே போய் தனியா இருந்துக்கோ!” மனதின் வலி கண்களில் நீரை நிறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் முகத்தில் பிரதிபலித்த வேதனையில் கவலையுற்றவனாய், “அழகம்மா” என்றவாறு அவளை அணைத்துக் கொண்டான்.

முதலில் முரட்டடியாய் முரண்டியவள் பின் அவனின் அணைப்பினுள் பொருந்தி போனாள். அவனை இறுக்கமாய் அணைத்தவளின் மன இறுக்கமும் கொஞ்சம் கொஞ்சமாய் தளர ஆரம்பிக்க கண்களில் நீர் கரை புரண்டோடியது.

அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைக்க, அவளின் முகத்தை நிமிர்த்தியவன், “ஏன்டா இப்படி அழுற?” எனக் கூறியவாறு கண்களைத் துடைத்து விட்டான்.

“தெரியாத மாதிரியே கேளு நீ! நேத்து என்ன பேச்சு பேசின!” என அவனை விட்டு விலகி அமர்ந்து அவள் பேச,

“அடியேய் நேத்து நான் பேசினதை எங்கயாவது முழுசா கேட்டியாடி! நீ பாட்டுக்கு படபடனு பேசிட்டுப் போனை வச்சிட்ட! போன் பண்ணாலும் எடுக்கலை! நான் என்ன முடிவா சொன்னேன். இப்படி செய்யலாமானு ஐடியா தானே கேட்டேன்!” அவளைப் போன்றே அவனும் பொரிந்து கொண்டிருந்தான்.

“நீ அப்படி யோசிச்சதே தப்பு! இதுல என் ஐடியா வேற கேப்பியா நீ” என அவன் காதை திருகினாள்.

“ஹே வலிக்குதுடி!” என அவள் கைப்பற்றித் தன்னை நோக்கி இழுக்க, மெத்தையில் அவன் மீதே விழுந்திருந்தாள் அவள்.

அப்படியே அவன் மார்பில் சாய்ந்தவளின் தலையை வருடியவன், “எனக்கு மட்டும் உங்களை விட்டு இருக்கிறது கஷ்டமா இருக்காதா விழி! ஆபிஸ் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது வீட்டுல யாருமில்லாம இருந்தா எவ்ளோ கடுப்பாகும் தெரியுமா! நீ பிரசவத்துக்காக இங்க வந்துட்ட டைம்ல நான் அங்க எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உனக்குத் தெரியும்ல! வாரா வாரம் டிராவல்லாம் எனக்கும் தானே கஷ்டம். அப்படி இருந்தும் நான் இப்படி யோசிச்சிருக்கேன்னா காரணம் இல்லாமலா இருக்கும்” எனக் கேட்டான்.

“என்ன காரணத்தைப் பெரிசா சொல்லிட போற நீ? உப்புக்கும் பெறாத காரணத்தைச் சொல்லி என்கிட்ட அடி வாங்காத” என எழுந்து அமர்ந்தாள்.

இன்னும் இந்த விஷயத்திற்காக அவன் விளக்கம் கூறி கொண்டிருப்பதே அவளுக்குக் கடுப்பை கிளப்பியிருந்தது.

தானும் எழுந்தமர்ந்தவனாய், “உங்களுக்காக தான்டி நான் யோசிப்பேன். என் உலகமே நீயும் பாப்பாவும் தானேடி! வேற யாருக்காக நான் யோசிக்கப் போறேன்” என்றான்.

“அப்படி என்ன எங்களுக்காக யோசிச்ச நீ?” எனக் கேட்டாள்.

“ஆபிஸ்ல ஆன்சைட்க்கு அடுத்து என்னைய அனுப்புறதா ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. இந்த கொரோனா டைம்ல இது உடனே நடக்காதுனாலும், நடக்கும் போது நீயும் பாப்பாவும் எங்க இருப்பீங்கனு நான் யோசிக்கனும்ல! இப்ப கொரோனா முடிஞ்சி நம்ம சென்னை கிளம்பி போய் வீடெல்லாம் செட் பண்ண பிறகு, என்னைய ஆன்சைட் போக சொன்னா.. என்ன செய்றது? நீயும் பாப்பாவும் அங்க தனியா இருக்க முடியுமா? அதான் கொரோனா முடிஞ்சி ஆபிஸ்க்கு போனாலும் உன்னையும் பாப்பாவையும் உடனே அங்க கூட்டிட்டு போக வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.

“சூப்பர்டா இதுக்காக எவ்ளோ வருஷமா காத்துட்டு இருந்த!” என்று மகிழ்வாய் உரைத்தவள்,

“ஹ்ம்ம் அப்ப உன்னைப் பிரிஞ்சி இருந்து தானே ஆகனும்” என சோகமாய் தொடர்ந்து உரைத்தவள்,

“ஆனாலும் பரவாயில்லைடா! அப்படி ஏதாவது ஆப்பர்சூனிட்டி உனக்கு வந்துச்சுனா எங்களுக்காக யோசிக்காத! அக்சப்ட் பண்ணிக்கோ” என்றாள்.

“நான் சென்னைல திரும்பவும் வேலைக்கு சேரலாம்னு ஆசை ஆசையா இருந்தேனேடா! நீயும் எத்தனை நாளைக்கு தான் எங்க வீட்டுக்கும் சேர்த்து கவனிச்சிட்டு இருப்ப! பாப்பா ஸ்கூல்க்கு போன பிறகு நானும் வேலைக்கு போகலாம்னு நினைச்சேன்” தன் மனதின் எண்ணங்களை அவள் உரைக்க,

“நீ இங்கேயே ஏதாவது சின்ன கம்பெனியில வேலைக்கு சேர்ந்துக்கோடி” என்றவன் அவளின் சோகமான முகத்தை பார்த்து நொந்தவனாய்,

“அடியேய் ஐடில எந்த நேரத்துல என்ன நடக்கும்னு நம்மளால கணிக்கவே முடியாது! இதுல இந்த கொரோனா வேற முழுசா நம்ம நாட்டை விட்டு போக எத்தனை மாசம் இல்ல வருஷம் ஆகுமோ! அதுக்கு பிறகு நடக்க போறதுக்கு இப்பவே ஏன்டி மூஞ்சை தூக்கி வச்சிருக்க?” என அவளின் தாடை பிடித்து ஆட்டினான்.

அதில் சிரித்தவளாய், “ஆமா பின்னாடி நடக்குமா நடக்காதானு தெரியாத விஷயத்தை நினைச்சு இப்பவே ஏன் நம்ம சந்தோஷத்தை கொடுத்துக்கனும்” என்றாள்.

அவளின் மனதை மாற்றும் பொருட்டு வேறு குடும்ப விஷயங்களை பேச ஆரம்பித்தான் ஆதவன்.

“முகில் அவன் பொண்டாட்டியோட தனிக் குடித்தனம் போறான் விழி” என்றான்.

சற்று அதிர்வாய், “ஏன் என்னாச்சு?”
எனக் கேட்டவள், “அந்தப் பொண்ணோட வீட்டுக்கே வீட்டோட மாப்பிள்ளையா போகப் போறானாமா?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் முறைத்த ஆதவன், “அப்படிப் போய்ட கூடாதுனு தான் அவன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கான்” என்றவன் மேலும் தொடர்ந்து,

“திருச்சி மெயின் ஜங்ஷன்லயே கடை பார்த்திருக்கானாம். அதனால அங்கேயே வீடு பார்த்துட்டான். அங்கேயே பொண்டாட்டி பிள்ளைகளோட போகப் போறதா முடிவு பண்ணிட்டான். இங்க இருந்தா அவன் பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்துட்டே இருக்கு. அவ அம்மா வீடு பக்கத்துல இருக்குனு அங்கே போய் இருந்துக்குறா வேற! அதான் இப்படி ஒரு முடிவு” என்றான்.

“அவ கர்ப்பமா இருக்கும் போது அவ தான் பெரிசுங்கிறது மாதிரி உங்கம்மா நடந்துக்கிட்டாங்கல! இப்ப என்ன சொல்றாங்க உங்க அம்மா?” எனக் கேட்டாள் வேல்விழி.

அவளை உற்று நோக்கியவன், “இன்னுமாடி இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்க? அம்மா மேல இன்னும் கோபமா தான் இருக்கியா விழி?” எனக் கேட்டான்.

“நான் கோபப்பட்டோ வருத்தப்பட்டோ இங்க என்னாகப் போகுது? நீதான் உங்கம்மா பேசினதுக்குலாம் ஏதாவது விளக்கம் சொல்ல வந்துடுவியே” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ம்ப்ச் ஏன்டி இப்படிப் பேசுற! இப்பலாம் அம்மா உன்கிட்ட நல்லா தானே பேசுறாங்க. இன்னும் ஏன் நீ மனசுல வெறுப்பை வளர்த்துட்டு இருக்க?” அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பியவாறு வேதனையுடன் கேட்டான்.

அவனின் வேதனையைக் கண்டவள், “வெறுப்புலாம் இல்லடா! ஆனா நானும் அவங்களும் ஒன்னா இருக்கனும்னுலாம் நீ என்னிக்கும் ப்ளான் செய்யாதே! அது கண்டிப்பா எங்களுக்குள்ள பிரச்சனையைத் தான் உண்டு பண்ணும்! இப்ப உன் தம்பி மனைவி பக்கமும் ஏதாவது காரணம் இருக்கும்” என்றவள் கூறவும்,

“ஆமாடி! எப்பவுமே இந்த மாமியார் மருமகள் சண்டைக்குள்ள பஞ்சாயத்து பண்ண மட்டும் போய்டவே கூடாதுடி! ஏன்னா இரண்டு பக்கமும் நியாயம் இருக்க மாதிரியே தான் இருக்கும்” எனச் சொல்லி சிரித்தான்.

அவனின் சிரிப்பில் இணைந்து சிரித்தவளாய், “சரி சென்னைல வீட்டை காலி பண்ணிட்டு செட்டில் பண்ணிட்டு வந்துடுடா! வாடகையாவது மிச்சமாகும்! அந்தக் காசை மாசாமாசம் என் அக்கவுண்ட்ல போட்டுடு, நகை வாங்கிடலாம்” கண் சிமிட்டி அவள் உரைக்க,

“அதானே பார்த்தேன்! நான் ஏதாவது சேவ் பண்ணலாம்னு நினைச்சா… நீ ஒரு ப்ளான் போடுவியே” என அவளின் தலையில் தட்டினான்.

“டேய் நான் என்ன எனக்கா சொன்னேன்! பொம்பளை பிள்ளை பெத்து வச்சிருக்கோம்டா! நகை சேர்க்க வேணாமா” என அவனின் கையில் குத்தினாள்.

“ஹே ஆறு மாசம் தான்டி ஆகுது பாப்பாக்கு! என் பிள்ளைக்கு நான் நிறைய நகை போடுவேன்” என்றவன் மேலும் அவளை வம்பிழுக்கும் பொருட்டு,

“நான் என்ன சண்முகம்னு நினைச்சியா பத்து பவுன் போட்டு துரத்தி விடுகிறதுக்கு” அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்பே, அவளின் முகம் கோபத்தில் கோவ பழமாவதை பார்த்து எஸ்கேப் ஆக அவன் எழ,

“டேய் இப்ப ஏன்டா என் அப்பாவ இழுக்கிற? அவனைப் பிடித்து இழுத்துக் கட்டிலில் சாய்த்தவள்,

“உனக்குலாம் அதுவே அதிகம் தான். நீதானே வந்து பொண்ணு கொடுங்கனு கேட்ட!” அவனை சரமாரியாய் அடித்தாள்.

அவளின் அடியை எல்லாம் பூ மாரியாய் ஏற்றுக் கொண்டவன், “ஆமா பொண்ணு தான் கேட்டேன். உங்கப்பா முட்டை போண்டாவை என் தலைல கட்டிட்டாரு” என அவளை வெறுப்பேற்றவும்,

அடிப்பதை நிறுத்தியவள், “அப்படி யாரும் கஷ்டப்பட்டு இங்க இருக்க வேண்டாம்” என உதட்டை சுழித்தாள்.

அவளை இழுத்துக் கட்டிலில் சாய்த்தவன், அவள் மீது படர்ந்தவனாய், “உடனே மூக்கு மேல கோபம் வந்துடுமே!” என மூக்கை பிடித்து ஆட்டியவன், “புசு புசுனு இருக்கே இந்தக் கன்னம் அது தான் முட்டை போண்டா!” எனக் கன்னத்தைக் கடித்தான். “லொட லொடனு பேசுற இந்த வாய் இருக்கே வாய், அது பப்பாளி பழம்” அவள் இதழை உரசியவனுக்கு முதன் முதலாக முத்தமிடும் போது அவள் கேட்ட அந்தக் கேள்வி நினைவிற்கு வர, வாய் விட்டுச் சிரித்திருந்தான். அவன் சிரிப்பின் காரணம் உணர்ந்தவளாய் வெட்கத்தில் சிவந்திருந்தாள் இவள்.

அவள் இதழில் முத்தமிடும் பொழுதெல்லாம் அந்தக் கேள்வியை எண்ணி அவன் சிரிப்பதும், அவள் வெட்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகி இருந்தது அவர்களின் வாழ்வில்.

அவளின் வெட்கத்தை ரசித்தவனாய், “மொத்தத்துல நீ ப்ளாக் கோல்ட்டி (Black Gold) என் கருப்புத் தங்கம்” எனக் கூறியவாறு அந்தத் தங்கத்தை மொத்தமாய் கொள்ளையிட துவங்கி இருந்தான்.

மனநிறைவாய் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள், எப்பொழுதும் கேட்கும் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள்.

“நான் எவ்ளோ சண்டை போட்டாலும் எப்படி உனக்கு என் மேல வெறுப்பே வர மாட்டேங்குதுடா?”

அவனிடம் தொடர்ந்து சண்டையிடுவது போன்ற சூழல் வரும் பொழுதெல்லாம் அவளின் மனம் குற்றவுணர்வுக்குள் சிக்கி கொள்ளும். அவ்வாறான உணர்வு வரும் பொழுதெல்லாம் இக்கேள்வியை அவள் கேட்டு விடுவாள்.

“பெத்த தாய்க்கு அவங்க குழந்தைங்க என்ன தப்பு செஞ்சாலும் வெறுக்க முடியாது! நான் உன் மேல வச்சிருக்க காதலும் அப்படித் தான்டி என் அழகம்மா” அவள் நெற்றியில் முத்தமிட்டு எப்பொழுதும் உரைக்கும் அதே பதிலை உரைத்திருந்தான்.

மனம் நெகிழ்ந்தவளாய் அவன் மார்பில் கன்னத்தை உரசி இறுக அணைத்தவள், “சினிமேட்டிக்கா இருந்தாலும் நீ ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் கேட்க நல்லா இருக்குடா” எனக் கூறி சிரித்தவள் அவன் இதழை பிடித்திழுக்க,

அவளுடன் இணைந்து தானும் வாய்விட்டு சிரித்திருந்தான் அவன்.

— தொடரும்