நறுங்காதல் பொழிபவனே – 10

நறுங்காதல் பொழிபவனே 10

“ஒன்னு மட்டும் மனசுல வச்சிக்கோ விழி!
நம்மளோட வாழ்க்கைன்றது நீயும் நானும் மட்டும் தான்! கல்யாணம் முடிஞ்ச பிறகு வாழ போறது நீயும் நானும் தான்! அதனால யார் என்ன பேசினாலும் பெரிசா எடுத்துக்கிட்டு பேசாத! நமக்குள்ள வர்ற சண்டை நம்ம பேசின வார்த்தைகளுக்காகத் தான் இருக்கனுமே தவிர மத்தவங்க பேசினதுக்காக இருக்கக் கூடாது. இங்க நான் மத்தவங்கனு சொல்றது உன் குடும்பத்தையும் என் குடும்பத்தையும் சேர்த்து தான்! இதை என்னிக்குமே நாம கடைப்பிடிச்சா தான் நம்ம வாழ்க்கைய நமக்காக நாம வாழ முடியும்”

தூளியில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் உறக்கம் கலையா வண்ணம் மெதுவாய் ஆட்டி கொண்டிருந்த வேல்விழியின் மனம், ஆதவன் தாங்கள் காதலித்த நாட்களில் உரைத்த இந்த அறிவுரைகளை எண்ணி கொண்டிருந்தன.

‘இதைச் சொன்னவனே இதை என்னிக்காவது கடைப்பிடிச்சிருக்கானா? இது வரை என்கிட்ட அவன் போடுற சண்டையும் காமிக்கிற கோபமும் அவன் குடும்பத்துக்காகத் தானே இருந்திருக்குது. இதுல பெரிசா எனக்கு அட்வைஸ் வேற’
மனதினுள் நொடித்துக் கொண்டாள்.

‘குடும்பம், குடும்பம்னு அவங்களுக்காக என்னைய வளைக்கிறதே இவனுக்கு வேலையா போச்சு’ புலம்பி கொண்டாள்.

அவனது தாயின் வலிக்காக இவளை அழைத்துத் திட்டியவனை எண்ணி கோபமுற்றிருந்தாள் அவள்.

வேல்விழி ஏதோ சிந்தனையிலேயே உழல்வதைக் கண்ட அவளின் தாய் மகேஸ்வரி, “இதுக்குத் தான் காதலிச்சுக் கல்யாணம் செய்ய வேண்டாம்னு சொன்னேன். எங்க கேட்ட நீ! இப்ப பாரு.. எப்பவும் அந்தத் தம்பி கூடச் சண்டைய போட்டுட்டு மூஞ்சை தூக்கி வச்சிட்டு திரியுற மாதிரி தானே இருக்கு”

“ஏன் நீங்க பார்த்து கட்டி வச்சிருந்தா அந்தப் பையன் என் கூடச் சண்டை போட்டிருக்க மாட்டானா? சண்டைங்கிறது எல்லாக் கல்யாண வாழ்க்கையிலும் வரது தானே! என் புருஷன் காலைல சண்டை போட்டா நைட் வந்து சமாதானம் செய்வாரு! அது எங்களுக்குள்ள இருக்கிறது! இதுக்கும் காதலிச்சுக் கல்யாணம் செய்றதுக்கும் ஏன்மா முடிச்சு போடுற!” தாய் தன்னவனைக் குறை கூறயதில் சற்று கோபமாய் அவள் பேச,

“என் பொண்ணு இப்படிச் சோகமா கிடக்கிறாளேனு நான் கவலைல சொன்னா.. நீ உன் புருஷனுக்குச் சப்போர்ட் பண்ணி என்கிட்ட கத்திட்டு இருக்க! நீயாச்சு உன் புருஷனாச்சு.. எப்படியோ போங்க” என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டார்.

இவர்கள் இருவரின் பேச்சை கேட்டுச் சண்முகம் சிரித்துக் கொண்டார்.

“அவ என்ன இன்னும் சின்னப் பொண்ணா ஈஸ்வரி! அவகிட்ட போய் வம்பு பண்ணிட்டு இருக்க” என்று தன் மனைவியை அவர் கேலி செய்ய,

“ஹ்ம்க்கும்” என்று நொடித்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டார் மகேஸ்வரி.

அவளை எவ்வாறு சமாதானம் செய்வது என யோசித்தவாறே அன்றைய நாளின் வேலைகளைச் செய்து கொண்டிருந்த ஆதவன், சென்னையில் இருந்து வந்த கைபேசி அழைப்பில் அவளை அழைத்துப் பேசியிருந்தான்.

பின் மாலை பொழுதில் அவளுக்கு அவன் அழைக்க, எடுக்கலாமா வேண்டாமா என மனதிற்குள் பட்டி மன்றம் நடத்தியவளாய் அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க சார்” அடக்கப்பட்ட கோபத்துடன் உரைத்தாள்.

“என்ன இன்னும் கோபமா தான் இருக்கியா?” என்று கேட்டான்.

“நான் யாருங்க சார் உங்க மேல கோபப்படுறதுக்கு” என்றவள் கூறவும்,

“ம்ப்ச் விழி!” என அழுத்தமாய் அழைத்தவன், “ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டி” என்றவன்,

“நம்ம சென்னைல தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கட்டனும்டி! அந்த ஓனர் போன் செஞ்சாரு. இந்தக் கொரோனாக்காக ஊருக்கு வந்து, அங்க வேஸ்ட்டா வாடகை கொடுக்கிற மாதிரி இருக்கு! நான் போய் வீடு காலி பண்ணிட்டுச் செட்டில் பண்ணிட்டு வந்துடவா” எனக் கேட்டான்.

“நீ ஏதாவது பண்ணு! அதே ஏன் என்கிட்ட கேட்குற?” யாரோ போன்று அவள் பதில் கூற,

“உன்கிட்ட இதுவரை ஏதாவது கேட்காம செஞ்சிருக்கேனா சொல்லு” சமாதானத்தில் அவன் இறங்க,

“ஆமா சார் எல்லாத்தையும் என்கிட்ட கேட்டுட்டு தான் செய்வாரு போடா” சலிப்பாய் உரைத்தாள் அவள்.

“சரி சொல்லுடி! நீ என்ன நினைக்கிற?” அவன் விடாமல் கேட்கவும்,

தனது கோபத்தைச் சற்றாய் ஒதுக்கி வைத்தவள், “ஹ்ம்ம் சரி! ஆனா நம்ம திரும்பச் சென்னை போகும் போது உடனே வீடு கிடைக்காதுல!” என்றாள்.

“நம்ம பொண்ணை இங்கயே படிக்க வச்சிடலாமானு யோசிக்கிறேன் விழி! நீயும் பாப்பாவும் இங்க இருங்க! பாப்பாவை இங்க இருக்க ஸ்கூல்ல சேர்த்துடலாம். நான் ஆபிஸ் திறந்த பிறகு வாராவாரம் வந்து உங்களைப் பார்த்துட்டு போறேன்! அம்மாவுக்கும் ஒத்தாசையா இருக்கும்ல! நீ என்ன நினைக்கிற?” என்றவன் கேட்கவும்,

“ஓ வாழ்நாளுக்கும் இப்படிப் பிரிஞ்சி இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? அப்ப என்னைய நீ பிரிஞ்சு சந்தோஷமா தான் இருக்கப் போல! அதனால தானே உனக்கு இப்படிலாம் யோசிக்கத் தோணுது. நான் தான் இங்க லூசு மாதிரி உன்னையே நினைச்சு எப்ப நம்ம ஒன்னா ஒரு வீட்டுல வாழ்வோம்னு ஏங்கிட்டு இருக்கேன். உனக்கு உங்க வீட்டை பத்தின கவலை மட்டும் தான்ல” மனதின் வலி தொண்டையைக் கமற செய்ய, கைபேசியை வைத்து விட்டாள் அவள்.

உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது அவளுக்கு.

‘எப்படி அவன் இப்படிப் பிரிஞ்சி இருக்கலாம்னு ஈசியா சொல்றான். நான் மட்டும் தான் அவனை உருகி உருகி நினைச்சிட்டு இருக்கேன் போல!’ அந்த எண்ணமே அவளுக்குக் கண்ணீரை வரவழைக்க, அழுதவாறே படுத்து விட்டாள் அவள்.

ஏற்கனவே கணவன் அருகிலில்லை என்பதில் வெகுவாய் கவலையுற்று வாழ்பவளை புரிந்து கொள்ளாது அவனே அவ்வாறு உரைத்தது அவளை வெகுவாய்ப் பாதித்தது.

அன்றைய நாள் முழுவதும் அவன் விடுத்த எந்த அழைப்பையும் அவள் ஏற்கவேயில்லை.

மறுநாள் அவள் முன் வந்து நின்றான் ஆதவன்.


சென்னை கடற்கரையை வேடிக்கை பார்த்தவாறு கரையோர மணலில் அமர்ந்திருந்தாள் வேல்விழி.

“எவ்ளோ தான் அமைதியா இருக்கிறதுடா? தினமும் அம்மா போன் பண்ணி மாப்பிள்ளை வீட்டில இது கூடச் செய்ய மாட்டாங்களானு ஏதாவது ஒரு கம்ப்ளைன்ட் செஞ்சிட்டே இருக்காங்க. நானும் இதைப் பத்தி பேசி நமக்குள்ள சண்டை வந்துட கூடாதுனு நினைச்சா முடியலைடா” கடற்கரை பார்த்தவாறு தான் பேசினாள் விழி.

அவளருகில் அமர்ந்திருந்த ஆதவனோ,
“ஆமா எனக்கும் தான் அம்மா போன் பண்ணி தினமும் புலம்புறாங்க. ஏன்டி ஒரு மூணு பவுன் மாப்பிள்ளைக்குப் போடுறதுல என்ன தான்டி பிரச்சனை? தினமும் இரண்டு வீட்டுலயும் இதைப் பத்தி தான் பேச்சு!”

“எங்க சைட் அப்படிலாம் செய்ற பழக்கம் இல்லைடா. ஏன் அந்தப் பத்து பவுன்குள்ளேயே மூனு பவுன் மாப்பிள்ளைக்குச் செய்றோம்னு நாங்க சொல்றதை உங்க வீட்டுல ஒத்துக்க வேண்டியது தானே! ரொம்பத் தான் மாப்பிள்ளை வீட்டு கெத்து காமிக்கிறாங்கடா உங்க வீட்டுல!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏன்டி எங்க வீட்டுல எது கேட்டாலும் உங்க வீட்டாளுங்களை சரினு சொல்ல சொல்லுனு தானே சொன்னேன். பின்னாடி நான் வேணா காசு தரேன்னு சொன்னேன்ல” என்றவனை முறைத்தாள்.

“அதெப்படிடா எங்க வீட்டுல அப்படி ஒத்துப்பாங்க? அவங்களுக்குக் கௌரவக் குறைச்சல் தானே! அப்படியே அவங்க சரி சொன்னாலும் பின்னாடி உங்க வீட்டுல தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?” எனப் படபடவென வெடித்தாள்.

“ஹ்ம்ம்” ஆழ்ந்த மூச்சை விட்டவன்,

“சரி உனக்குப் போடுற பத்து பவுன்ல மூனு பவுன் மாப்பிள்ளைக்குனு வாங்க சொல்லு. நான் வீட்டுல பேசுறேன்” என்றான்.

திருமணத்திற்குப் பின் சென்னையில் தங்குவதற்கு வாடகை வீட்டை தேடி கொண்டிருந்தனர் வேல்விழியும் ஆதவனும்.

வீடு கிடைத்ததும் பால் காய்த்து விட்டு இரு குடும்பத்தினரையும் வரவழைத்து திருமண உடைகளை வாங்க செல்லலாம் என முடிவு செய்தனர்.

திருமணத் தேதி குறித்து விட்டு மண்டபத்திற்குப் பணம் செலுத்தி இருந்தனர் ஆதவன் குடும்பத்தினர். அதன் பின்பான திருமணப் பேச்சுகளில் தான் இரு குடும்பத்தினருக்குள்ளும் மன கசப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

“ஆனா எனக்கு ரிசெப்ஷன் டிரஸ் நீங்க எடுத்துடுங்க. அது கூட உங்க வீட்டுல எடுக்க முடியாதுனு சொன்னதா அம்மா சொன்னாங்க” என அவன் கூறிக் கொண்டிருந்த சமயம்,

வேல்விழியின் அலைபேசிக்கு அழைப்பு வர, “என்னடா முகில் இப்ப போன் பண்றான்” எனக் கூறிவாறு அழைப்பை ஏற்றாள்.

“ஹை அண்ணி” என அவன் தொடங்கவும்,

“என்னடா இது அதிசயமா இருக்கு? உங்க ஊருல இடியுடன் கூடிய மழை எதுவும் பெய்யுதா என்ன?” எனக் கேட்டாள்.

அவளின் கேலிக்கு நகைத்தவனாய், “அதான் வீட்டுல எல்லாம் பேசியாச்சே! இதுக்கு மேல பேர் சொல்லி கூப்பிட்டா நல்லா இருக்காதே அண்ணி” என்றான்.

“சரி சொல்லுங்க கொழுந்து சார்! என்னைலாம் ஞாபகம் இருக்கா சார் உங்களுக்கு?”

கொஞ்ச நாட்களாக அவனிடமிருந்து இவளுக்குக் குறுஞ்செய்தி, அழைப்பு என எதுவுமே வராது இருந்தது. அதன் பொருட்டே இவ்வாறு கேட்டிருந்தாள் அவள்.

“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க? எங்க வீட்டோட முதல் மருமக உங்களைப் போய் மறப்பேனா?” என்றான்.

“என்னடா பணிவுலாம் ஓவரா இருக்கு! என்னமோ சரி இல்லையே” என்றாள்.

ஹெட்செட்டில் ஒரு இயர் போன் இவளும் மற்றதை ஆதவனின் காதிலும் வைத்திருந்தாள் அவள்.

இவர்களின் பேச்சை கேட்டுச் சிரித்திருந்தான் ஆதவன்.

“ஆமா எங்க இருக்கீங்க அண்ணி? அலை சத்தமா கேட்குது?” எனக் கேட்டான்.

ஆதவன் அவளுடன் அவன் இருப்பதை உரைக்க வேண்டாமென சைகை செய்ய, “ஆமாடா ஃப்ரண்ட்ஸோட பீச்க்கு வந்திருக்கேன்டா” என்றாள்.

“ஓ ஓகே! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் அண்ணி”

“நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன் அண்ணி” என்றான்.

ஆதவன் வேல்விழி முகத்தில் சிரிப்பு பொங்கி வழிந்தது.

“சூப்பர் முகில்! யாரந்த பொண்ணு?” என்றவன் கேட்க,

“நீங்க தான் எனக்கு அந்தப் பொண்ணயே அறிமுகப்படுத்தி வச்சீங்க அண்ணி! எங்க வீட்டுக்கு மருமகளா வந்ததும் அம்மா அப்பாகிட்ட பேசி நீங்க தான் எங்க காதலுக்கு ஹெல்ப் பண்ணனும் அண்ணி!” என்றான்.

முகிலன் தனது இல்லத்தில் மாடியில் நின்று கொண்டு இவளிடம் பேசி கொண்டிருக்க, சரியாக அந்நேரம் காயப்போட்ட துணி எடுக்கவென மாடி ஏறி வந்திருந்த விஜயாவின் காதினில் இந்த வார்த்தைகள் விழுந்தன.

“என்னது இவனும் லவ் பண்றானா” என்ற அதிர்ச்சி தான் மேலோங்கியது விஜயாவிற்கு.

“இதுல வேல்விழியும் ஆதவனும் கூட்டு களவாணிங்களா?” என எண்ணியவாறு கீழே இறங்கி வந்து விட்டார்.

அங்கே வேல்விழியோ, “என்னது நான் அறிமுகப்படுத்தி வச்சேனா? யாரடா சொல்ற?” எனக் கேட்டாள்.

“நாங்க முன்னாடி வாடகை வீட்டுல இருந்தப்ப பக்கத்து வீட்டு பொண்ணு ஆதவன்கிட்ட ரொம்பப் பேசுதுனு சொல்லி வருத்தப்பட்டீங்களே!”

“ஆமா அது லவ் பண்ண டைம்ல அவன் மேல இருந்த பொசசிவ்ல நான் பக்கத்துல இருக்கும் போதும் அந்தப் பொண்ணுகிட்ட மெசேஜ்ல பேசிட்டு இருக்கான்னு சொன்னேன். நீயும் நான் பார்த்துக்கிறேன் விடுங்கனு சொன்ன..” எனச் சொல்லி கொண்டே வந்தவள்,

“டேய் அந்தப் பொண்ணையாடா லவ் பண்ற? பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு பிக் அப் பண்ணிட்டியாடா பாவி” சிரிப்பும் அதிர்ச்சியுமாய் கேட்டாள் வேல்விழி.

ஆதவனுக்கோ யோசனையில் நெற்றிச் சுருங்கியது.

“அதான் அண்ணி அண்ணினு இவ்ளோ மரியாதையா பேசுறீங்களா கொழுந்து சார்” என்று அவனைக் கேலி செய்து தொடர்ந்து பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.

“ஏன்டி நான் அந்தப் பொண்ணுகிட்ட பேசினதை போய் என் தம்பிக்கிட்ட இப்படிச் சொல்லி வச்சிருக்க?” கடுப்பாய் அவன் கேட்க,

‘அய்யய்யோ இவன் இருக்கிறது தெரியாம வாயை விட்டுட்டோமே’ என முழித்தாள் இவள்.

“அந்தப் பொண்ணு நம்ம படிச்ச காலேஜ்ல தான் படிக்குது. காலேஜ் சேரும் போது என்கிட்ட பேசி நம்பர் கேட்டுச்சு. பாடத்துல சிலபஸ்ல சந்தேகம் இருந்தா அப்பப்ப மெசேஜ் பண்ணும். நான் சொல்லி தருவேன். அவ்ளோ தான்” அவளை முறைத்தவாறு கோபமாய் உரைத்திருந்தான்.

“அய்யோ நான் விளையாட்டா தான்டா பேச்சு வாக்குல முகில்கிட்ட சொன்னேன். உன்னை சந்தேகப்பட்டு ஒன்னும் சொல்லலை”

இப்படி நினைச்சிட்டானே எனப் பதறியவாறு வந்தது அவளின் பதில்.

“நீ சந்தேகப்பட்டேன்னு இதை சொல்லலை விழி! என் சைட்ல கொடுக்க வேண்டிய விளக்கத்தை கொடுத்தேன். ஆனா இப்ப காலேஜ் படிக்கிற பொண்ணைப் போய் லவ் பண்றேன்னு வந்து நிக்கிறானேனு சங்கடமா இருக்கு! ஏற்கனவே அந்த வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் ஆகாதுடி. பக்கத்து வீடா இருந்தாலும் அம்மா அடிக்கடி அந்தப் பொண்ணோட அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு தான் இருப்பாங்க” என்றான்.

ஆழ பெருமூச்சு விட்டவனாய், “ஹ்ம்ம் நம்ம கல்யாணம் முடியட்டும். அதற்கு பிறகு இந்த லவ் மேட்டரை டீல் பண்ணுவோம்” என்றவன்,

“சரி இதை நினைச்சு நீ ஒன்னும் மனசை போட்டு குழப்பிட்டு இருக்காத! அவன் திரும்பப் போன் செஞ்சி லவ்வு அது இதுனு பேசினா என்கரேஜ் பண்ணாத” என்றான்.

அவளும் மெல்லமாய்த் தலையசைத்தாள்.

அன்றிரவு ஆதவனுக்கு அழைத்த விஜயா, “என்னடா முகிலும் லவ் பண்றானாமே! ரெண்டு பசங்களும் என் பேச்சை கேட்குறதில்லைனு முடிவு பண்ணி தானே சுத்திட்டு இருக்கீங்க!” வருத்தமாய் பேசினார்.

“யார் சொன்னா?” எனக் கேட்டான் ஆதவன்.

“முகில் தான் அண்ணி அண்ணினு போன்ல வேல்விழிகிட்ட பேசிட்டு இருந்தான்! அப்ப அந்தப் பக்கமா போகும் போது என் காதுல விழுந்துச்சு” என்றார்.

‘என்னலாம் கேட்டாங்களோ தெரியலையே’ என எண்ணியவனாய்,

“அம்மா இப்போதைக்கு என் கல்யாணத்தைப் பத்தி மட்டும் யோசி! அவன் லவ்லாம் எத்தனை நாளைக்கு நிலைக்கும் முதல்ல பார்ப்போம். அவனா வந்து கட்டி கொடுங்கனு கேட்கும் போது பேசிக்கலாம்” என்றான்.

“அப்படியாடா சொல்ற? அப்ப அந்த லவ் ரொம்ப நாள் தாங்காதுனு சொல்றியா?”

“ஆமாமா! அவன் போக்குல விடுங்க! பார்த்துக்கலாம்” என்றான் ஆதவன்.

“யாருடா அந்தப் பொண்ணு” என விஜயா கேட்க,

“அம்மா இப்ப அதைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னேன்ல! எவ்ளோ நாள் இந்த லவ் நீடிக்குதுனு பார்ப்போம். நீங்க இதை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதீங்க” என்றான்.

விஜயா இதை அனைத்தையும் தன் கணவரிடம் உரைக்க, மகனை கண்காணிக்க வேண்டும் என எண்ணி கொண்டவர், “நீ எதுவும் யோசிச்சு கவலைப்பட்டு உடம்பு வலியை வர வச்சிக்காத! நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

கணவனும் மூத்த மகனும் இதைப் பார்த்து கொள்வதாய் உரைத்ததில் சற்று அமைதியானார் அவர். ஆனால் பின்னாளில் இந்தத் திருமணம் தனது நிம்மதியை குலைக்கும் என நினைத்திருக்கவில்லை அவர்.

திருமணத்திற்கு ஒரு மாதம் இருந்த நிலையில், சென்னையில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்குப் பால் காய்க்க இரு குடும்பத்தினரும் வந்திருந்தனர். அன்றே திருமணப் புடவையும் நகைகளும் எடுத்து விடலாம் என முடிவு செய்தனர்.

விடியற்காலை ரயிலில் வந்திருந்தனர் ஆதவன் மற்றும் வேல்விழியின் பெற்றோர்கள்.

காலை பால் காய்த்து விட்டு, உணவகத்தில் உணவினை உண்டு விட்டு அனைவருமாய் தி நகர் சென்றனர்.

ஆதவனுக்கு ஏற்கனவே ஷாப்பிங் என்றாலே அலர்ஜி. கூட்ட நெரிசல் அவனுக்கு ஆகவே ஆகாது.

தி நகருக்குள் நெரிசலில் நுழையும் போதே கடுப்பாகியது அவனுக்கு.

இதில் இரு குடும்பத்தினரையும் ஒருங்கிணைத்து இந்த நெரிசலில் சென்று வருவது என்பது அவனுக்கு ஆரம்பமே எரிச்சலை விளைவித்தது. முடிந்தவரை விரைவாய் வாங்கி விட்டு செல்ல வேண்டுமென எண்ணி கொண்டான்.

முதலில் முகூர்த்த புடவை வாங்க செல்லலாம் என முடிவு செய்து இரண்டு கடை ஏறி இறுங்கினர். அங்கே இவர்களின் பட்ஜெட்டில் பிடித்தமான புடவை கிடைக்காமல் போக, அதிலேயே இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.

அடுத்தக் கடைக்குள் நுழையும் போதே, “அடியேய் எவ்ளோ புடவை தான் பார்ப்படி! சட்டுனு பார்த்தோமா எடுத்தோமானு வர மாட்டியா?” என விழியிடம் கடுகடுத்தான் அவன்.

“ஆயுசுக்கும் வச்சிருக்கப் போற புடவைடா! ஏனோ தானோனுலாம் எடுக்க முடியாது” எனக் கூறியவாறு புடவையைப் பார்க்க தனது தாயுடன் சென்று விட்டாள் விழி.

ஆதவனின் அன்னைக்குக் கால் வலிக்க ஆரம்பிக்க அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். அவருடன் மனோகரும் அமர்ந்து கொள்ள, விழி தனது பெற்றோர்களுடன் புடவை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாய் இருந்தாள்.

தனது தாய் தந்தையரிடம் குடிக்க ஏதேனும் வேணடுமா என ஆதவன் வந்து கேட்க, “எவ்ளோ நேரமா தான் அவ புடவையைச் செலக்ட் பண்ணுவா! எனக்கு இப்பவே டயர்ட் ஆகிட்டு! பத்தாயிரத்துல ஒரு பட்டு புடவை எடுக்கிறதுக்கு எவ்ளோ நேரம் பண்ணுவாங்க இவங்க! இன்னும் மோதிரம் வாங்கனும், உனக்கு ரிசப்ஷென் டிரஸ் எடுக்கனும்” விஜயா எரிச்சலாய் மொழிந்து கொண்டே போக,

“அம்மா அவ கல்யாண புடவைனு ஆசையா எடுக்குறா! விடுமா” என்றவன் அவர்களுக்குக் குடிக்க நீரளித்து விட்டு இவளருகில் வர,

“என்னங்க இது நல்லா இருக்குல! அம்மா நீ என்னமா சொல்ற” எனக் கேட்டவாறு ஆகாய நீல புடவையை அவள் ஆதவனிடம் எடுத்து காண்பிக்க, அவளின் தாய் தந்தையர் இருவரும் தலையை ஆட்ட, இவனும் அதை வாங்கிப் பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது எனத் தலையாட்டி சென்று விட்டான்.

இவள் மேலும் சில புடவையை அந்த விற்பனையாளரிடம் எடுக்கச் சொல்லி பார்த்துக் கொண்டிருக்க, “இன்னும் என்ன புடவையைப் பார்த்துட்டு இருக்க? அந்தப் புடவையை நான் பில் போட்டுட்டேன்” என்றவன் சொன்னதும்,

“அதுக்குள்ள ஏன்டா பில் போட்ட?” அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெல்லமாய் அடிக்குரலில் அவள் கேட்க,

“என்னடி நினைச்சிட்டு இருக்க நீ! ஒரு புடவை எடுக்க எவ்ளோ நேரம் எடுத்துப்ப?”

இருந்த எரிச்சலிலும், நெரிசலில் இடிபாடுகளில் சிக்கி பில் போட்டு வந்த கலைப்பிலும் சத்தமாய் கத்தியிருந்தான்.

சுற்றி இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகி இவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு கடந்து சென்றனர்.

வேல்விழிக்கு கோபத்தில் முகம் சிவந்து கொண்டிருந்தது. அவளின் தாய் தந்தையர் இருவரும் ஆதவனை முறைத்து பார்க்க, அவனிடம் ஏதோ கூற வந்த நேரம், இவர்களின் அருகினில் வந்த மனோகரும் விஜயாவும் அவனைத் திட்டி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

அடுத்து இரண்டு புடவையைத் துரிதமாய் எடுத்து அங்கிருந்து புறப்பட்டவர்கள் நகை கடைக்கு சென்றனர்.

ஆதவனுக்கு இரண்டு பவுனில் சங்கிலியும் ஒரு பவுனில் மோதிரமும் வேல்விழியின் வீட்டார் வாங்கிக் கொடுத்தனர். அரை மணி நேரத்திலேயே அதைத் தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தான் ஆதவன்.

அடுத்து இரண்டு கிராமில் வேல்விழிக்கு மோதிரத்தை பார்க்க கூறினர் ஆதவன் குடும்பத்தினர்.

இரண்டு கிராமில் அங்கு மோதிர டிசைங்கள் வெகு குறைவாய் இருக்க, வாழ்நாளுக்கும் போட்டுக் கொள்ளவிருக்கும் மோதிரம் பிடித்ததாய் இல்லையே என நெளிந்து கொண்டிருந்தவள், ‘சரி ஆதவன் சொல்ற மோதிரம் வாங்கிப்போம். அவன் வாங்கிக் கொடுத்ததுன்ற திருப்தியாவது இருக்கும்’ என எண்ணியவாறு அருகில் நின்றிருந்தவனை அழைத்து செலக்ட் செய்யுமாறு அவள் கூற, கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு தந்தையின் அருகினில் அமர்ந்து கொண்டான் அவன்.

இப்படிப் பொது இடத்தில் தன்னைக் கோபமாய் பேசி வைத்து விட்டாளே என்ற கோபமும், மீண்டுமாய் அவ்வாறு ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என்ற பயமும் சேர்ந்து அவனை அவ்வாறு நடந்து கொள்ள வைத்தது.

அன்றிரவு ஏழு மணியளவில் உணவு பொட்டங்களை வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தனர் அனைவரும்.

பெரியவர்கள் பேசியவாறு உண்டு கொண்டிருக்க, இளையவர்கள் இருவரும் முகத்தைத் தூக்கி வைத்து கொண்டிருந்தனர்.

ஆதவனின் அலைபேசிக்குத் திருமணப் பத்திரிக்கையின் பிரதி அச்சமயம் வந்திருக்க, அதை வேல்விழியின் புலனத்திற்கு அனுப்பி வைத்தான்.

உள்ளறையில் தாயினருகில் அமர்ந்திருந்த வேல்விழி, கைபேசியில் வந்த பத்திரிக்கையைப் பார்த்து விட்டு தனது தாய் தந்தையிடம் காண்பிக்க, அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள்.

முன்னறையில் இருந்த ஆதவனின் தாய் தந்தையரிடம் சென்ற சண்முகம், “என்ன சம்பந்தி எங்க தாத்தா பேருலலாம் ஜாதி போடாம அடிச்சி வச்சிருக்கீங்க? உங்கள் தாத்தா பேர்ல மட்டும் ஜாதி போட்டிருக்கீங்க?” எனக் கேட்டார்.

— தொடரும்