நறுங்காதல் பொழிபவனே – 1

அந்த அறையிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தாள் வேல்விழி.

பட்டு புடவை உடுத்தி நகைகள் அணிந்து கன்னத்திலும் கைகளிலும் சந்தனம் பூசி என அமர்ந்திருந்தவளின் முகம் வேதனையில் கசங்கியிருக்கக் கண்கள் கலங்கியிருந்தன.

தன்னிரு கைகளாலும் கட்டிலிலிருந்த மெத்தையை இறுக்கமாய் பற்றிக்கொண்டு அழக்கூடாது என அரும்பாடுபட்டுத் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவளின் மனம் ரணமாய் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

சரியாய் அச்சமயம் கதவு திறக்கும் ஓசை கேட்டு இவள் வாயிலை பார்க்க உள் நுழைந்தான் ஆதவன்.

அவனைக் கண்டதும் கோபத்தில் முகத்தினைத் திருப்பிக் கொண்டாள். அவளின் கண்கள் தரையையே வெறித்துப் பார்த்தன.

அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான் ஆதவன்.

அவளின் கோபமும் முகத்திருப்பலும் இவனுக்கு கோபத்தினை விளைவிக்க, “இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்க?” எனச் சற்று அதட்டலாய் அவன் கேட்க,

இது வரை அவள் கட்டுக்குள் வைத்திருந்த கண்ணீர் எல்லாம் மடை திறந்த வெள்ளமாய் கண்களில் இருந்து ஆறாய் பெருகி வழிந்தன.

அவளின் அழுகையில் எரிச்சல் கொண்டவனாய், “ம்ப்ச் செய்றதுலாம் செஞ்சிட்டு எதுக்கு இப்ப இந்த அழுகை?” என வினவினான்.

அவனின் கேள்வியில் கோபம் கொண்டவளாய், “நான் என்னடா செஞ்சேன்? என்னையவே குறை சொல்லிட்டு இருக்க!” என அவனை நோக்கி அமர்ந்தவாறு அவள் கேட்க,

“என்னது! நீ என்ன செஞ்சியா? அப்படியா அந்த பொண்ணை அடிப்ப?” என அவனும் அவளைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கேட்டான்.

“என்னடா சொல்ற? நான் யாரை எப்ப அடிச்சேன்?” அவனின் கேள்வியில் அதிர்ந்தவளாய் கேட்டாள் அவள்.

“உங்க வீட்டாளுங்க எதுவும் சொல்லி விட்டாங்களா என்னைப் பத்தி?” எனக் கண்களைத் துடைத்தவாறு அவனை முறைத்துக் கொண்டு அவள் கேட்க,

“அவங்க ஏன் சொல்லனும்! அதான் நானே கண்ணால பார்த்தேனே!” என்றான் அவன்.

உடனே அவளின் கண்ணிலிருந்து நீர் துளிகள் உருண்டோட, “என்னடா நீயே இப்படி சொல்ற? உங்களுக்குலாம் ஏன் அப்படி தெரிஞ்சிதுனு புரியவே இல்லடா” அழுகையில் குரல் விம்ம கூறியவள் தேம்பி அழவாரம்பித்தாள்.

அவளின் நிலை புரிந்தது அவனுக்கு.

“ம்ப்ச்” எனத் தலையை அழுந்த கோதியவனாய் தனது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“அழாதடி! நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு” எனக் கூறி அவளை அவன் அணைத்துக் கொள்ளப் போக,

அவனின் கையைத் தட்டிவிட்டவளோ, “உனக்கு என்னையும் என் உணர்வுகளையும் விட உன் வீட்டாளுங்க சொல்றது தானே பெரிசா போச்சு! அந்த இடத்துல என் மனசு என்ன பாடு பட்டிருக்கும்னு நினைச்சியா? உங்கம்மா சொன்னதுக்காக நீயும் என்னைய கட்டாயப்படுத்த தானே செஞ்ச” என இதழ் துடிக்கக் கண்ணீர் வடித்தவாறு விம்மிக் கொண்டு கூறினாள் அவள்.

தட்டிவிட்ட கையை மீண்டுமாய் அவளைச் சுற்றி போட்டவாறு தன்னோடு இழுத்து அணைத்து கொண்டவன், “பெரியவங்க எது சொன்னாலும் செஞ்சாலும் அது நம்ம நன்மைக்குத் தான்டி இருக்கும்! நம்ம நல்லாயிருக்கனும்னு தானே அவங்க நினைப்பாங்க! அவங்களை மீறி என்னால எதுவும் செய்ய முடியாதுடி. நீ இப்படி அழுறதும் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு! இங்க வலிக்குது” என நெஞ்சில் கை வைத்தவாறு வேதனை படர்ந்த முகத்துடன் அவன் கூறவும், அவன் நெஞ்சில் அமைதியாய் சாய்ந்து கொண்டாள்.

அவனின் கவலை அவளையும் வருத்துகிறதே! இருவரும் அதீத கோபம் கொள்பவர்கள்! எப்பொழுதும் சண்டை கோழிகளாய் சண்டையிட்டுக் கொள்பவர்கள்! ஆயினும் எந்நிலையிலும் அவன் கவலையுறுவதை அவளாலும், அவள் அழுவதை அவனாலும் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள்.

ஆதவன் அவளை மென்மையாய் அணைத்திருக்க, அவன் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்திருந்தவளின் கண்கள் உடைப்பெடுத்து அவனின் கழுத்தை நனைக்க, “எனக்கு ஒரு மாதிரி கில்டி ஃபீல் ஆகுதுடா!ரொம்ப இன்டீசன்ட்டா பிஹேவ் பண்ணிட்டேன்ல!” என அழுகையில் விம்மியது அவளின் குரல்.

அவளின் கண்ணீரை உணர்ந்து முகத்தை நிமிர்த்தித் தன்னைப் பார்க்க செய்தவனோ,

“எனக்காகத் தானே உனக்குப் பிடிக்கலைனாலும் அந்த சடங்குக்கு ஒத்துக்கிட்ட! எல்லார்கிட்டயும் நான் பேசிக்கிறேன். நீ ஒன்னும் கில்டி ஃபீல் ஆகிக்காத!” அவள் மீதிருந்த கோபம் முற்றிலுமாய் குறைந்திருக்க, தன்னாலும் அந்த சூழலில் அவளுக்காக ஏதும் செய்ய இயலவில்லையே என்ற அவனின் இயலாமை விளைவித்த மனதின் வலியில் கூறினான் அவன்.

“ஆனா உங்க வீட்டுல செய்ய சொன்னதுக்கு நீ என்ன செய்வ” என அவனுக்காக அவனிடமே அவள் வாதாட, தன் மீதான மனைவியின் அன்பில் மென்னகை புரிந்தவனோ,

“சரி வா நீ கொஞ்ச நேரம் தூங்கு! நான் மண்டபத்துக்கு போய் எல்லாரையும் வழி அனுப்பிட்டு வரேன்” என்றவாறு அவளை அவன் மெத்தையில் படுக்க வைத்து நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

அவனின் சட்டையைப் பற்றித் தன்னருகே இழுத்தவளோ அவனின் கண்களை நோக்கியவாறு, “நான் எவ்ளோ சண்டை போட்டாலும் எப்படி உனக்கு என் மேல வெறுப்பே வர மாட்டேங்குது?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் வாய்விட்டு சிரித்தவன், “பெத்த தாய்க்கு அவங்க குழந்தைங்க என்ன தப்பு செஞ்சாலும் அவங்களை வெறுக்க முடியாது. நான் உன் மேல வச்சிருக்க காதலும் அப்படித் தான்டி என் அழகம்மா” எனக் கூறி கண்களை சிமிட்டி அவளின் நெற்றியில் முட்டினான்.

அவனின் பதிலில் நெக்குருகி போனவளின் கண்களில் மீண்டுமாய் கண்ணீர் சூழ, “போடா என்னைய அழ வச்சிட்டே இருக்க நீ!” என அவள் சிணுங்க,

“ஆமா இன்னிக்கு எல்லார் முன்னாடியும் உன்னைய அழ வச்சிட்டேன்ல! எனக்கு வேறு வழி இல்லடி” முகத்தில் வேதனை ரேகைகள் படர அவன் உரைக்க,

“ம்ப்ச் அப்படிலாம் இல்லடா! நீ கவலைப்பட்டா எனக்கு இங்க வலிக்குது” அவனைப் போலவே தன் நெஞ்சை சுட்டிக்காட்டி அவள் கூற, சட்டெனத் தன்னை மீட்டு கொண்டவன்,

‘எங்களோட தேவையை விரைவாய் நிறைவேற்றி மகிழ்விக்க வேண்டும் இறைவா’ என அவசரமாய் இறைவனிடம் கோரிக்கை வைத்தவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு உறங்குமாறு கூறி அவளின் தலையைக் கோதிவிட்டான்.


அந்தக் காலை பொழுதில் திருச்சியில் இருந்த அந்த இல்லத்தில் சாம்பிராணி புகையை அனைத்து அறையிலும் காண்பித்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.

சிறிய வரவேற்பறையும், அதை ஒட்டியிருந்த சமையலறையின் ஓரத்தில் பூஜை அறையும், இரு சிறிய படுக்கையறைகள் என நடுத்தரக் குடும்பங்கள் வாழும் வகையிலான சிறிய இல்லம் அது.

இறைவனின் மந்திரத்தை உச்சரித்தவாறு அனைத்து அறைகளிலும் புகையைப் படரவிட்டு நடந்து கொண்டிருந்த மகேஸ்வரி, அந்தப் படுக்கை அறைக்குள் சென்றதும் அங்குத் தன் மகள் உறங்காது சோகமாய்ப் படுத்திருந்ததைப் பார்த்தவர்,

“என்ன இன்னிக்கும் உன் புருஷன் வர மாட்டேன்னு சொல்லிட்டாரா! பஸ்ல அவர் வீட்டுல இருந்து இங்க வரதுக்கு ஒரு மணி நேரம் தானே ஆகும். உன் மேல அக்கறை இருந்தா வராம இருப்பாரா” என அவர் பொரிந்து தள்ள,

“ம்மா.. சும்மா அவரைக் குறை சொல்லாதமா! அவரோட சூழ்நிலை என்னவோ!” தன் அன்னையிடமும் கூடக் கணவரை விட்டு கொடுக்க இயலாது அவனுக்காகப் பரிந்து வந்து அவள் பேச,

“அப்படி அவரோட சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டவ, எதுக்கு இப்படிக் கவலையா படுத்திட்டு இருக்காளாம்” எனக் கேலியாய் கேட்டார்.

“நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல அந்தப் பையனை தான் கட்டிப்பேன்னு அடம்பிடிச்சு கட்டிக்கிட்டல! நீ தான் அனுபவிக்கனும்” என்று கூறியவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

தன்னருகில் உறங்கி கெண்டிருந்த ஆறு மாத குழந்தையை வருடியவாறு சற்று முன் தன் கணவனிடம் பேசியதை நினைத்து பார்த்து கொண்டிருந்தாள் வேல்விழி.

அவள் அழைத்ததும் கைபேசியை எடுத்த மறுநொடி, “பாப்பா என்ன செய்றா?” என்று கேட்டவனின் மீது கட்டற்ற கோபம் வந்தது அவளுக்கு.

“ஏன் நான் ஒருத்தி இங்க இருக்கேனே! என்னைய பத்திலாம் கவலை இல்லைல உனக்கு! உன் பொண்ணு தானே உனக்குப் பெரிசா போய்ட்டா” ஆதங்கத்துடன் பேசியவளின் கூற்றில் மறுபக்கம் அவன் வாய்விட்டு சிரிக்க,

“என் புலம்பல் உனக்குச் சிரிப்பா இருக்கா” என முகத்தைத் தூக்கி வைத்து பேச,

“என்ன தான்டி பிரச்சனை உனக்கு?” என அவன் அலுத்துக் கொள்ள,

“என்னைப் பார்க்க வர ஐடியா இருக்கா இல்லையா உனக்கு?” எனக் கேட்டாள்.

“எனக்கும் உங்களைப் பார்க்கனும்னு ஆசை இல்லாமலா இருக்கும்! ஆனா இங்க வீட்டு சூழ்நிலை சரியில்லையே! உன்னை இங்க வர சொன்னாலும் நீயும் வர மாட்டேங்கிறே! நான் தான் இப்ப இரண்டு பக்கமும் அடி வாங்குற மத்தளம் மாதிரி ஆகிட்டேன்” கடுப்புடன் கூறினான் அவன்.

அவனின் கூற்றில் அவன் நிலை புரிய சற்றாய் தன் கோபத்தை மட்டுபடுத்தியவள், “சரி சரி சோக கீதம் வாசிக்காத! என் பிறந்தநாளுக்கு ஒழுங்கா வந்து சேரு! அப்ப இந்த மாதிரி காரணம்லாம் சொன்னா கண்டிப்பா ஏத்துக்க மாட்டேன்” என்றவளுக்கு அவனை அது வரை காண இயலாது என்ற ஏக்கம் மனதை வதைத்தது.

அவள் குரலில் இருந்த ஏக்கத்தைப் புரிந்தவனோ, “வீடியோ கால்க்கு வாடி” என வீடியோ காலில் அழைத்தவன்,

அவள் முகத்தைப் பார்த்ததும், “சரி சரி பாப்பாவை காமி! உன் முகத்தைப் பார்க்கவா வீடியோ காலுக்கு வந்தேன்” என அவளை வம்பிழுக்க,

“போடா பாப்பாவை பார்க்க வந்தவன்கிட்ட நான் மட்டும் ஏன் என் முகத்தைக் காமிக்கப் போறேனாம்” என்றவள் குழந்தையின் முகத்தைச் சில நிமிடங்கள் அவனிடம் காண்பிக்க,

அவன் உறங்கும் குழந்தையிடம் கொஞ்சி பேசி கொண்டிருப்பதை ரசித்துப் பார்த்திருந்தவள், அவன் தன் முகம் காண கேட்கவும், “அதெல்லாம் நேர்ல தான் காமிக்க முடியும். நீ தான் என் முகம் பார்க்கனும்னு ஒன்னும் ஏங்கி கிடக்கலையே. அப்புறம் என்ன” எனக் கூறி வீடியோ கால்லை துண்டித்தவளை ஆடியோ காலில் அழைத்துச் சமாதானம் செய்து அழைப்பை துண்டித்தவன், ‘எப்பொழுது தான் இவள் சமாதானம் ஆகி இங்கு வருவாளோ’ என்று எண்ணி பெருமூச்செறிந்தான்.

என்ன தான் இரு குடும்பத்தினருக்குள்ளும் பலவிதமான பிரச்சனைகள் சூழ்ந்து இவர்களின் நிம்மதியை கெடுத்தாலும், அது எதுவும் தங்களின் பிணைப்பை பாதிக்காத வண்ணம் தங்களின் உறவுமுறையைப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர் இத்தம்பதியினர்.

— தொடரும்