நனிமதுர நங்கை 9


வாரயிறுதி நாளில் சென்னைக்கு சென்றிருந்த நங்கை, திங்கட்கிழமை காலை ஆறு மணியளவில் பெங்களூரை அடைந்திருந்தாள்.

தனது அறையின் அழைப்பொலியை அழுத்தியவாறு நின்றிருந்தாள் நங்கை.
அவளுடன் தங்கியிருக்கும் பிரியா, “இன்னிக்கு பஸ் லேட்டா வந்துச்சா?” எனக் கேட்டவாறு கதவை திறந்து அவளை உள்ளே அனுமதித்திருந்தாள்.

“ஆமா பிரியா! பஸ் டயர் பஞ்சர் ஆகிடுச்சுனு நின்னு வந்தனால லேட்டாகிடுச்சு. இல்லனா நாலு மணிக்கே வந்திருப்பேன்” பிரியாவிடம் கூறியவாறு மென் முறுவல் பூத்தவளாய் அறையினுள் நுழைந்த நங்கை, தனது தோளில் மாட்டியிருந்த பையை கழட்டி ஓரமாய் வைத்து விட்டு ஓய்வறைக்கு சென்று வந்தாள்.

“வீட்டுல உங்க லவ் மேட்டர் பத்தி சொல்லிட்டீங்களா? என்ன சொன்னாங்க? நேத்து உங்களுக்கு மெசேஜ் செஞ்சி கேட்கனும்னு கை பரபரத்துச்சு! நீங்க என்ன நிலைமைல இருப்பீங்களோனு விட்டுட்டேன்” என்றாள் பிரியா.

“எந்த வீட்டுலங்க எடுத்த உடனே லவ்க்கு ஓகே சொல்லிருக்காங்க. இன்பாவை எங்க வீட்டுல வந்து பேச சொல்லிருக்காங்க” என்றாள் நங்கை.

“பரவாயில்லை வேண்டாம்னு சொல்லாம பேசி பார்க்கலாம்னு சொல்லிருக்காங்களே! பாசிட்டிவ் சைன் தானே இதுவே! கவலைப்படாதீங்க” பிரியா ஆறுதலாய் உரைக்க,

“இல்லங்க சொன்னதும் செம்ம திட்டு! அம்மா ரொம்ப பேசிட்டாங்க” பிரியாவின் கட்டிலின் அருகில் நின்று பேசும் பொழுதே நங்கைக்கு தலைச்சுற்றுவது போல் தோன்ற அருகிலிருந்த தனது கட்டிலை பிடித்தவாறு அமர்ந்து விட்டாள்.

“என்ன நங்கை? என்னாச்சு?” என நங்கை அருகே சென்று தண்ணீரை இவள் வழங்க, வாங்கி பருகியவள், “கோபத்துல நைட் சாப்பிடாம கிளம்பிட்டேன். அதான் ஒரு மாதிரி தலை சுத்துற மாதிரி ஆகிடுச்சு” என்றாள் நங்கை.

உண்ணாதிருந்ததும் நீண்ட நேரமாய் நீடித்திருந்த அதீத மன உளைச்சலும் தலை சுற்றலை அளித்திருந்தது நங்கைக்கு.

“இருங்க கீழே ஹால்ல டீ வச்சிருப்பாங்கல இந்த நேரம். நான் போய் எடுத்துட்டு வரேன்” நங்கை வேண்டாமென கூறியும் எடுத்து வந்து கொடுத்தாள் பிரியா.

இருவருமே தேநீர் அருந்தியவாறு அமர்ந்திருக்க, “அம்மா ரொம்ப திட்டிட்டாங்களா?” எனக் கேட்டாள் பிரியா.

“ஹ்ம்ம் ஆமா! என்னமோ லவ் செய்றதுக்காகவே நான் அலைஞ்சிட்டு இருக்க மாதிரி ஒரு மாதிரி பேசிட்டாங்க. இது வரைக்கும் அம்மா என்கிட்ட இவ்ளோ ஹார்ஷா பேசியதே இல்லங்க. அப்பா தான் அம்மாவை சமாதானம் செஞ்சி அந்த பையனை கூட்டிட்டு வா பேசி பார்க்கலாம்னு சொன்னாங்க” மன அழுத்தம் தாங்காது அனைத்தையும் பிரியாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

அலுவலகத்திற்கு சென்றதும் இன்பாவை அழைத்து கொண்டு தேநீர் அருந்த சென்றாள்.

இன்பாவும் நங்கையும் பேன்ட்ரியில் அமர்ந்திருந்த நேரம் ஜெர்மனியில் இருந்து சுந்தர் இவளை அழைத்து வீட்டில் பேசியதை பற்றி விசாரித்தான்.

இன்பாவை நேரில் வந்து பேச சொன்னதை மட்டும் உரைத்தவள், தாய் அவளை திட்டியதை கூறாது விட்டாள்‌.

அவனிடம் இயல்பாய் இருப்பது போல் சிரித்து பேசி அலைபேசியை வைத்தவள், இன்பாவை நோக்கி, “எப்ப வீட்டுக்கு வந்து பேச போற இன்பா?” என அயர்வான குரலில் கேட்டாள்.

“இப்ப உடனேலாம் வர முடியாது நங்கை” அமைதியாய் அவன் கூற,

“நேத்து பஸ் ஏறினதும் உனக்கு போன் செஞ்சி நேத்து நடந்தது முழுக்க சொன்னேனா இல்லையா?” கோபமாய் துவங்கியவள் தன்னை தானே ஆசுவாசப்படுத்தியவளாய்,

“சரி‌ இப்ப வர முடியாது! எப்ப வர முடியும்னு சொல்லு! நான் அப்பாகிட்ட பேசுறேன்” என்று கேட்டாள்.

“எல்லாமே உடனே நடக்கனும்னா எப்படிடி முடியும்? எனக்கு டைம் வேணும்! நேத்தும் ஃபோன் பண்ணி உடனே வீட்டுல பேசுனு சொல்ற! உன் வீட்டை பத்தி மட்டுமே யோசிக்கிறியே என் வீட்டை பத்தி யோசிக்கிறியா?” எனக் கோபமாய் கேட்டான்.

“உனக்கு என் நிலைமை புரியலைல! நேத்து எங்க அம்மா பேசின பேச்சு” எனக் கூறும் பொழுதே கண்ணிலிருந்து நீர் வர, துடைத்து கொண்டவளாய்,

“சரி உங்க வீட்டு நிலைமையை சொல்லு! நான் புரிஞ்சிக்க முயற்சி செய்றேன்! அப்பாகிட்டயும் புரிய வைக்கிறேன்” என்று பொறுமையாக கேட்டாள்.

“எனக்கு அண்ணா இருக்கான்னு தெரியும்ல நங்கை. அவனுக்கு மேரேஜ் ஆகாம எப்படி என் கல்யாணத்தை பத்தி நான் பேச முடியும்” என்றவன் கேட்க,

“சரி உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகி எங்க வீட்டுல வந்து பேச எவ்ளோ நாள் ஆகும்னு நினைக்கிற?” எனக் கேட்டாள்.

“அதுல ஒரு சிக்கல் இருக்கு! என் அண்ணனும் லவ் பண்றான். அம்மா அப்பாகிட்ட அவனோட லவ் பத்தி சொல்லி ஆறு வருஷம் ஆகுது. இன்னும் அவனோட லவ்வுக்கு எங்க வீட்டுல ஓகே சொல்லலை. அந்த பொண்ணை தான் கட்டிப்பேன்னு அவனும், முடியாதுனு எங்க வீட்டுலயும் போட்டி போட்டு அப்படியே இருக்காங்க! அண்ணா லவ் பண்ற பொண்ணும் அவனுக்காக அவங்க வீட்டுல சண்டை போட்டுட்டு காத்திருக்கு” என்றவன் கூறியதை கேட்டு விழிகளை விரித்து அவனை பார்த்தவள்,

“அடப்பாவி எவ்ளோ பெரிய விஷயம்! ஏன்டா என்கிட்ட முன்னாடியே சொல்லலை. எந்த தைரியத்துலடா என்னை லவ் பண்ண நீ? வீட்டுல ஒத்துக்கலைனா ஓடிப் போய் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு நினைச்சியா? அதுக்கு நான் ஒத்துப்பேன்னு நினைச்சியா? இல்ல லவ் பண்ணிட்டு கழட்டி விடலாம்னு நினைச்சியா” சத்தமாக கத்தியிருந்தாள்.

ஏதோ வகையில் தான் ஏமாற்றப்பட்டதாய் தோன்றியது அவளுக்கு. இதை அவன் காதலை முன்மொழிந்த போதே கூறியிருக்க வேண்டும் அல்லவா! இப்பொழுது திருமணம் என்று பேசும் பொழுது கூறினால் இதற்கு என்ன அர்த்தமென எடுத்து கொள்ள வேண்டும். விளங்கவில்லை அவளுக்கு.

“ம்ப்ச் நங்கை சீன் கிரியேட் பண்ணாத” கண்டன பார்வை வீசியவன் எழுந்து சென்று விட்டான்.

‘ஆமா பெரிய இவன் மாதிரி பேசும் போதே போனை கட் பண்றது இல்லனா இப்படி எழுந்து போய்டுறது! என்ன நினைச்சிட்டு இருக்கான் மனசுலனு தெரியலை’ தனக்குள்ளாகவே முணங்கியவள் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

காலையிலும் உண்ணாதது தலை வலியை உண்டு செய்திருக்க, தேநீர் அருந்தியவள் தனது இடத்திற்கு சென்று வேலையை தொடர்ந்தாள்.

‘என்ன கேள்வி கேட்டுட்டா! என்னை பார்த்தா டைம் பாஸ்ஸுக்கு லவ் செஞ்சிட்டு கழட்டி விடுற பொறுக்கி பையன் மாதிரி இருக்கா? ‘ மனதோடு புலம்பியவனாய் அவள் இருக்கையின் மீது ஒரு பார்வையும் தனது கணிணி மீது ஒரு பார்வையும் என வேலை செய்து கொண்டிருந்த இன்பாவிற்கு அவள் மயங்கி சரிய போவது தெரிய, சட்டென இருக்கையை விட்டு எழுந்தவன்,

“நங்கை” என அவளை தாங்கி கன்னத்தை தட்டினான்.

அருகிலிருந்தவர்கள் துரிதமாய் நீரினை எடுத்து அவளின் முகத்தினில் தெளிக்க, மயக்கம் தெளிந்து விழித்து பார்த்தவள், அவன் கைகளில் தான் இருப்பதை கண்டு பட்டென எழுந்து நின்றாள்.

“என்னாச்சு நங்கை! வா ஹாஸ்பிட்டல் போகலாம்” என அவன் அவளை அழைக்க,

“உன் கரிசனம் ஒன்னும் எனக்கு தேவையில்ல” அனைவரின் முன்னிலையிலும் அவள் இன்பாவை நோக்கி உரைக்க, அவளின் பேச்சில் அனைவரும் கலைந்து சென்றனர்.

“ம்ப்ச் வா போகலாம்! என்னை எவ்ளோ வேணாலும் திட்டிக்கோ! டாக்டரை பார்த்துட்டு மட்டும் வந்துடலாம்” அவளின் கையை பிடித்து வேகமாய் நடந்து சென்றான்.

உடன் பணிபுரிவோரிடம் மேனேஜரிடம் தங்களின் நிலைக்கூறி அரை நாள் விடுப்பு எடுப்பதாக உரைக்க சொன்னவன், தரிப்பிடத்திற்கு சென்ற பிறகே அவளின் கையினை விட்டான். வண்டியை இயக்கி விட்டு அவளை ஏறும் படி கூறினான். அவனை முறைத்து கொண்டே ஏறி அமர்ந்தாள்.

மருத்துவர் அவளை பரிசோதனை செய்து இரத்த அழுத்தம் இருப்பதாக கூறியவர், நன்றாக உண்ணுமாறு உரைத்து மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.

பரிசோதனை முடிந்த பிறகு உணவகத்திற்கு அவளை அழைத்து சென்றவன், அவனுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்தான்.

அவள் இன்னுமே கோபமாய் அவனை பார்த்து கொண்டிருக்க, “சாரி நங்கை” என்றான்.

“இன்னிக்கு உங்க அப்பாகிட்ட நான் போன்ல பேசுறேன் சரியா! எங்க வீட்டுல அப்பா அம்மாகிட்ட இந்த வீக்கெண்ட் போய் பேசுறேன்” அவளை சமாதானம் செய்தான்.

சரியென தலையசைத்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“உன்னோட கலகல நேச்சர் பிடிச்சு தான் லவ் செஞ்சேன் நங்கை. ஆனா நீ அப்படியே மாறிட்ட! எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டை போட்டுட்டே இருக்க! அவ்ளோ ஈசியா நான் டைம் பாஸ்ஸூக்கு லவ் பண்ணி கழட்டி விடுற பொறுக்கி மாதிரி கேள்வி கேட்டுட்டு இப்ப என் மேல் தப்பே இல்லங்கிற மாதிரி அமைதியா இருக்க! இப்ப கூட நான் தான் சாரி கேட்டு இறங்கி வந்திருக்கேன்” என்று படபடவென அவன் பேசி கொண்டே போக,

“உன்னை லவ் பண்ண பிறகு தான் இப்படி மாறிட்டேன் இன்பா! உன்கிட்ட என்னோட எதிர்பார்ப்பு என்னனு புரியலையா? காலைலருந்து இப்ப வரைக்கும் சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கேட்டியா? நேத்து எங்கம்மா என்னை அப்படி திட்டினாங்கனு சொன்னேன் தானே! அதையே டைஜஸ்ட் பண்ண முடியாம மனசுல வேதனையை சுமந்துட்டு இருக்கும் போது நீ சமாதானம் செய்யலைனாலும் பரவாயில்லை. மேலும் கடுப்பேத்தினா நான் என்ன தான் பண்ணட்டும். எப்பவும் நீ நினைச்சது தான் நடக்கனும். உனக்கு பிடிச்சது தான் நடக்கனும். இப்ப கூட எனக்கு என்ன வேணும்னு கேட்டு நீ ஆர்டர் செய்யலை. உனக்கு தேவையானதை தானே ஆர்டர் செஞ்சிருக்க! அதை நானும் அக்சப்ட் செஞ்சிட்டு அப்படியே சாப்பிடனும் அப்படி தானே” அமைதியான குரலில் அழுத்தமாய் கேட்டவளை உற்று நோக்கியவன்,

“சாரிடி! போதும்டி சண்டை போட்டது” கெஞ்சும் பார்வையில் உரைத்தான்.

“ஹ்ம்ம்ம்” பெருமூச்சு விட்டவளாய், “சாரி கேட்டே என்னை சரி பண்ணிடலாம்னு நினைக்கிறியா இன்பா” என்றாள்.

“எனக்கு சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்” என அவன் அவ்விடத்தை விட்டு கோபத்துடன் செல்ல,

அவன் ஆர்டர் செய்திருந்த உணவு வந்த பொழுதும் உண்ண மனமில்லாது அமர்ந்திருந்தவள், பசிக்கு உண்டு விட்டு பணத்தை செலுத்தியவள் தனதறைக்கு சென்று விட்டாள்.

மாத்திரையை விழுங்கியவளின் காதல் மனமோ அவன் உண்ணாது சென்றதில் கவலைக்குள்ளாகி அவனையே நினைத்து கொண்டிருக்க, ‘நீ சாப்பிடலைனு அவன் நினைச்சானா? நீ மட்டும் ஏன் அவனையே நினைச்சிட்டு இருக்க’ என அவளின் மனசாட்சி குட்டு வைக்க, கட்டிலில் படுத்திருந்தவளின் கைகள் கைபேசியில் அவனின் எண்ணை எடுத்து வைத்து கொண்டு அழைக்கலாமா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்த நேரம் அவனே அவளுக்கு அழைத்திருந்தான்.

“சாப்பிட்டியா நங்கை” எடுத்ததும் அவன் கேட்ட இக்கேள்வியில் அவன் உண்ணாது இவள் உண்ட குற்றயுணர்வு மேலோங்க,

“நீ சாப்பிட்டியா இன்பா” எனக் கேட்டாள்.

இல்லையென என அவன் கூற, சாரியென இவள் கேட்க, இருவரும் காதல் மொழி பேசி சமாதானம் செய்வதில் அடுத்த அரை மணி நேரத்தை செலவிட்டிருந்தனர். அவனிடம் பேசி கொண்டே உறங்கி இருந்தாள் இவள்.

மாலை ஏழு மணியளவில் நங்கையின் பிஜி அருகே இருக்கும் பூங்காவில் அமர்ந்திருந்தனர் இன்பாவும் நங்கையும்.

“அப்பாகிட்ட சரியா பேசிடுவ தானே இன்பா!” பதட்டமாய் கேட்டிருந்தாள் நங்கை.

“அதெல்லாம் பேசிடுவேன்! நீ முதல்ல கால் பண்ணு” என்றான் இன்பா.

ஹெட்செட் அணிந்து தனது காதில் ஒரு இயர் ஃபோனையும் அவன் காதில் ஒரு இயர் ஃபோனையும் சொருகியவள், தனது தந்தைக்கு அழைத்து ஓரிரு வார்த்தைகள் பேசியவள், இன்பாவிடம் போனை வழங்குவதாய் உரைத்து அவனிடம் பேச கூறினாள்‌.

அவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் உரைத்தானே தவிர, இவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை அதிகமாக வெளிப்படாது இருக்க, அருகில் அமர்ந்திருந்தவனை இடித்த நங்கை, ‘உங்க பொண்ணை நான் நல்லா பார்த்துப்பேன். எனக்கு கட்டுக் கொடுங்கனு சொல்லு! நீயா ஏதாவது நாலு வார்த்தை பேசுடா’ என அவனின் மறு காதில் ஹஸ்கி வாய்ஸில் உரைத்தாள்.

இவன் ஏதும் பேசாமலேயே இணைப்பை துண்டித்திருந்தான்.‌

“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு! பொண்ணோட அப்பா பேசனும்னா எதுக்காக பேசுவாங்க. நீ எப்படிபட்டவன்? தன்னோட பொண்ண கட்டிக்கொடுக்கிற அளவுக்கு தகுதியானவனா? நல்லவனா? கெட்டிக்காரனா? டைம் பாஸுக்கு லவ் பண்றியா? அவங்க பொண்ணை ஏமாத்த லவ் பண்றியா? இந்த காதல்ல உறுதியாக இருக்கியா? இதெல்லாம் தெரிஞ்சிக்க தானே பொண்ணு வீட்டுல இருந்து பேசுவாங்க! நீ என்னமோ கடனேனு அவர் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு இருக்க! உங்க பொண்ணை எனக்கு கட்டி வைங்கனு ஒரு வார்த்தை கேட்குறதுல குறைஞ்சா போய்டுவ” என அவள் கடுங்கோபத்துடன் பொரிந்து கொண்டிருக்க, ஏதும் கூறாது எழுந்து சென்று விட்டான்.

‘இவனாலேயே நான் ரத்த அழுத்தம் வந்து சாக போறேன்’ வாய்க்குள் முணங்கியவளாய் தலையில் கை வைத்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள் நங்கை.

சில நிமிடங்கள் கழித்து அழைத்த அவளின் தந்தை அவள் இணைப்பை ஏற்ற மறுநொடி, “என்னம்மா இந்த பையன் அவன் லவ்ல அவ்ளோ ஸ்டாரங்கா இருக்க மாதிரி தெரியலையே! நீ தான் அவனை உயிரா காதலிக்கிற மாதிரி இருக்கு” என்று கவலையுடன் வினவினார்.