நனிமதுர நங்கை 8

நங்கை பெங்களூரில் இருக்கும் அவளது கிளை அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்திருந்தாள்.

இந்தியா சென்றதும் ஒரு வாரம் விடுப்பெடுத்து சென்னையில் தாய் தந்தையருடன் நேரத்தை செலவழித்தவள், அதன் பின் பெங்களூருக்கு பயணப்பட்டாள்.

அங்கு பிஜியில் இருவர் தங்குவது போல் அமைந்த ஓர் அறையில் வாடகைக்கு தங்கியவள், அலுவலகத்தில் பழைய பிராஜக்ட் முடிந்ததால் புது பிராஜக்ட்டில் சேர்ந்திருந்தாள்.

இந்தியா வந்து சேர்ந்ததும் ராஜனுக்கு அழைத்து பேசியவள், அதன் பின்பான கலந்துரையாடல் எல்லாம் குறுஞ்செய்தியிலேயே தொடர்ந்தாள்.

அங்கு ராஜன் அவன் நினைத்ததை விட அவளை அதிகமாகவே மிஸ் செய்தான். முதல் சில நாட்கள் வெறுமையாய் சென்றாலும், அலுவலகத்தில் அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த புதிய பொறுப்புகள் அவனை உள்ளிழுத்து கொள்ள அதில் மூழ்கி போனான்.

அவளும் அங்கு கிடைத்திருந்த புது பிராஜக்ட் வேலைகளில் பிசியாகி விட, தொடர்ந்து அவனிடம் பேச முடியாமல் போனது. வாரத்திற்கு ஓரிரு முறை மட்டுமே பேசி கொண்டனர் இருவரும்.

கல்யாணியும் தீரனும் தொடர்ந்து இணையத்தை இணைப்பில் வைத்திருக்க மாட்டார்கள் என்பதால், முன்பே நேரத்தை குறித்து கொண்டு தான் இவர்களுடன் பேச இயலும். வாரயிறுதி நாட்களில் அவர்களுடன் பேசி விடுவான். மற்ற நாட்களில் குறுஞ்செய்தி வாயிலாக பேசி கொள்வான்.

நாட்கள் செல்ல செல்ல ராஜன் தனித்து வாழ பழகி கொண்டிருந்த வேளையில், தான் எடுத்திருந்த கல்லூரி விடுப்பு முடிய, அவனுடனேயே வந்து தங்கினான் பிரேம். மேலும் ஏழு மாதங்கள் படிப்பு இருந்ததால் பிரேமின் தாய் தந்தையர் ராஜனிடம் அவனை கவனித்து கொள்ளமாறு கேட்டு கொண்டனர்.

அன்றிரவு ராஜன் பிரேமுக்கும் சேர்த்து உணவு சமைத்து கொடுக்க, ஒன்றாக உண்டவர்கள் அவரவர் கட்டிலில் படுத்து கொண்டனர். ஒற்றை அறையில் இரண்டு கட்டில்கள் என இருந்த அந்த சிறிய அறையில் ராஜனை நோக்கி திரும்பிய பிரேம் பேச தொடங்கினான்.

“பணத்துக்கு பஞ்சமில்லாத வாழ்க்கைண்ணா! அதுக்கான அப்பா அம்மா உழைப்பும் கொஞ்ச நஞ்சம் இல்லை. பிள்ளைங்க சந்தோஷமா வாழனும் கேட்டதுலாம் வாங்கி கொடுக்கனும்னு நாள் பூரா உழைச்சாங்க. இரண்டு பேருமே பேங்க்ல வேலை செய்றாங்க. ஒழுக்கம் விஷயத்துல ரொம்பவே ஸ்ட்ரிக்ட்! நான் ஒரே பையன்னு செல்லமும் கூட! கேட்டதுலாம் வாங்கி கொடுத்துடுவாங்க. அம்மாக்கு அவ்ளோ வேலை இருந்தும் எனக்கு பிடிச்சதா பார்த்து பார்த்து சமைச்சு தருவாங்க. பத்தாவது படிக்கும் போது க்ரூப் ஸ்டடினு போய் தான் தண்ணியடிக்க பழகினது. அதுக்கு பிறகு எப்பவாவது பசங்க கூட பார்ட்டி மேரேஜ்னு வெளியூர் போகும் போது தண்ணியடிப்பேன். இது சுத்தமா அப்பா அம்மாக்கு தெரியாது. பசங்ககிட்ட பொண்ணுங்களை ஃப்ரண்ட்டுனு சொல்றது ஒரு மாதிரி கெத்தா இருக்கும்ண்ணா. அதுக்காகவே தான் ராகவி கூட பழகினேன். இங்க அவ கூட வெளிய போறது வரதுலாம் இந்தியால பசங்ககிட்ட சொல்லும் போது போட்டோ காண்பிக்கும் போதுலாம் என்னமோ சாதிச்சிட்ட பெருமை வரும். ராகவியோட ஃப்ரண்ட்ஸ் எப்பவும் ப்ரைடே பார்ட்டினு பப்க்கு போவாங்க. அப்படி தான் இங்க வந்த பிறகு வாரா வாரம் தண்ணியடிக்க பழகினது‌. போக போக நான் அவளை சின்சியரா லவ் பண்ணேன்ண்ணா. படிப்பு முடிஞ்சு போனதும் இவ தான்ம்மா உன் மருமகள்னு இன்ட்ரோ கொடுக்கனும்லாம் நினைச்சு வச்சிருந்தேன். ஆனா அவ சும்மா டைம் பாஸூக்கு பழகினதா சொன்னது! என்னை என்னவா அவ யூஸ் பண்ணிருக்கானு, அவகிட்ட எப்படி நான் ஏமாந்திருக்கேனு என்னை நினைச்சு எனக்கே வெறுப்பா இருந்துச்சுண்ணா. அதுல தான் தற்கொலை செஞ்சிக்கலாம்னு நினைச்சேன். அவளுக்காக தற்கொலை செய்யலைண்ணா. ஆனா அதை செய்யவும் தைரியம் இல்லை. அதான் உங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சா காப்பாத்திடுவீங்கனு சொன்னேன்.

நீங்க அப்பா அம்மாகிட்ட ஃபோன் செஞ்சி சொன்னதும், என்னை அவங்க அடிச்சு கொன்னுடுவாங்கனு நினைச்சேன். அந்தளவுக்கு நான் நல்லா பிள்ளையா வளரனும்ன்றது மட்டுமே அவங்க வாழ்நாள் லட்சியமா வச்சி அதுக்காகவே உழைச்சவங்க அவங்க. இத்தனை நாளா அவங்களை ஏமாத்தி நான் செஞ்ச தப்புக்கு அது தான்‌ சரியான தண்டனைனு நினைச்சேன்‌. அவங்க அடிச்சாலும் வாங்கிக்கலாம்னு நினைச்சேன். ஆனா”

என்று நிறுத்தியவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய எழுந்து அமர்ந்தான் பிரேம்‌.

தனது கட்டிலில் படுத்தவாறு அவனது கதைகளை கேட்டு கொண்டிருந்த ராஜன் சட்டென எழுந்து அவனருகில் அமர்ந்து முதுகை வருடி ஆற்றுப்படுத்தினான்.

“இட்ஸ் ஓகே டா! லீவ் இட்” என அவன் முதுகை தடவ,

“இல்லண்ணா! அப்பா அம்மா என்னை அடிக்கலைண்ணா” என தேம்பியவாறு கூறியவன், “கைல வச்சி தாங்கினாங்க. எங்கே நான் திரும்பவும் சூசைட் அடெம்ப்ட்னு ஏதாவது செஞ்சிடுவேனோனு அம்மா கூடவே இருந்தாங்க. எனக்கு பிடிச்சது எல்லாம் அம்மாவும் அப்பாவும் பார்த்து பார்த்து செஞ்சி கொடுத்தாங்க. வாங்கி கொடுத்தாங்க. லவ் பெயிலியர் தானே! பரவாயில்லை! இன்னும் வயசு இருக்கு நிறைய லவ் பண்ணலாம்னு அப்பா ஃப்ரண்டு மாதிரி பேசினாங்க” என்று கண்களை துடைத்தவன்,

“எனக்கு ரொம்ப கில்டியா ஃபீல் ஆகிடுச்சுண்ணா. இருக்க ஒரு பையனும் அவங்களை விட்டு போய்ட கூடாதுனு அவங்களோட மொத்த லவ்வையும் (அன்பையும்) என்கிட்ட காண்பிச்சாங்க. இந்த லவ்வை கண்டுக்காம உதாசீனப்படுத்திட்டு வெளில லவ்வை தேடி அலைஞ்சிருக்கேனேனு ரொம்ப மனசு கஷ்டமாகி போச்சு. உண்மையான உள்ளார்ந்த அன்பை ஒருத்தங்ககிட்ட இருந்து பெறுவதற்கும் நாம தகுதியா இருக்கனும்லண்ணா! அந்த தகுதியை நான் வளர்த்துக்கனும்னு முடிவு செஞ்சேன். இனி வாழ போற வாழ்க்கை அவங்களை பெருமைப்படுத்துற மாதிரி தான்‌ இருக்கனும்னு நினைச்சிக்கிட்டேன் அண்ணா. நான் தான் திரும்பவும் ஜாயின் பண்றேன்னு அம்மா அப்பாவை சம்மதிக்க வச்சி கூட்டிட்டு வந்தேன்” என்று கண்களை துடைத்து விட்டு அவனை பார்த்தவன்,

“இதெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா நான் திருந்திட்டேன்னு நீங்க நம்பனும்ண்ணா! இனி என் படிப்புல மட்டும் தான்ண்ணா என் கவனம் இருக்கும்” என ராஜனின் கைப்பற்றி சத்தியம் செய்வது போல் அவன் கூறவும், தோளோடு அணைத்து கொண்டான் ராஜன்.

சிறிது நேரம் மனம் விட்டு பேசிய பிறகே உறங்க சென்றனர் இருவரும்‌.

அடுத்து வந்த நாட்களில், ஒன்றாக உணவு சமைத்து உண்டு அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து, வாரயிறுதி நாட்களில் ஒன்றாக ஊர் சுற்றுவது என பிரேமும் ராஜனும் இணக்கமாகி இருந்தனர். பிரமிடம் இருந்து தெலுங்கையும், ராஜனிடம் இருந்து தமிழையும் கற்று கொண்டிருந்தனர் இருவரும்.

இவ்வாறு நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் வழமையாய் பேசும் நேரத்தில் ராஜனுக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்த நங்கை, “என் டீம்ல இருக்கவங்களை பத்திலாம் சொல்லிருக்கேன்ல சுந்தர். அதுல இந்த இன்பா பையன் என்கிட்ட ஃப்ளர்ட் (flirt) செய்ற மாதிரியே தோணுதுடா எனக்கு” தயங்கியவாறே உரைத்தாள்‌.

“ஃப்ள்ர்ட்னா? எதுவும் வழியுற மாதிரி பேசினானா? இல்ல அசிங்கமா எதுவும் பேசினானா சொல்லு! வார்ன் பண்ணி விடுறேன் ” என்றான் ராஜன்.

“அய்யோ அப்படிலாம் இல்ல! அவ்ளோ மோசமான பையன்லாம் இல்ல” சட்டென பதறியவாறு மறுத்தவள்,

“நல்ல பையன் தான் சுந்தர். எல்லார்கிட்டயும் ரொம்ப ஜோவியலா பேசுற டைப். அவன் இருக்கிற இடம் கலகலப்பா தான் இருக்கும். நிறைய பொண்ணுங்க டீம்ல இருக்காங்க ஆனா என்கிட்ட மட்டும் தினமும் என் டிரஸ் நல்லா இருக்குனு சொல்லுவான். என் ஹேர் ஸ்டைல் பேஸ் கட்கு செட் ஆகலை வேற‌ மாத்துங்கனு சொல்லுவான். இந்த மாதிரி ஃப்ளர்ட் செய்றதை சொல்றேன்” என்றாள் நங்கை.

“ஹ்ம்ம் இப்ப இப்படி சொல்றதுலாம் ஐடி கல்சர்ல நார்மல் ஆகிட்டு. நீ தான் உள்ளுணர்வு உள்ளுணர்வுனு ஒன்னு சொல்லுவியே! அதை முழுசா நம்பு! அவன் மேல சின்னதா சந்தேகம் வந்தாலும் இந்த மாதிரியான பேச்சைலாம் அவன்கிட்ட அவாய்ட் செஞ்சிடு சரியா! நீ தான் உன்னை பார்த்துக்கனும். புரியுதா” என்றான் கண்டிப்பாக.

அதன் பின்பு சில நாட்கள் அவனை பற்றி அவள் அவனிடம் பேசவில்லை.

அதன் பிறகு இன்பா தன்னிடம் நல்ல முறையில் பழகுவதாய் அவளாகவே ராஜனிடம் உரைத்தாள்.

ராஜன் ஜெர்மனி வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி இருந்த நிலையில் அலுவலக நேரத்தில் அவனை அழைத்த நங்கை, அவசரமாய் பேச வேண்டுமென உரைத்தாள்.

அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த ராஜன், “என்னாச்சு எதுவும் பிரச்சனையா? இந்நேரத்துல போன் செஞ்சிருக்க!” எனக் கேட்டான்.

“ஆமா! சாரி உன்னை டிஸ்டர்ப் செஞ்சிட்டேனா?” எனக் கேட்டாள்.

“இல்ல பரவாயில்ல சொல்லு! என்ன விஷயம்?” என்றவன் கேட்க,

“எனக்கு நெக்ஸ்ட் பிராஜக்ட் புனேல போட்டிருக்காங்க சுந்தர்‌. மனசு ரொம்ப குழப்பமா இருக்கு! அதான் ஃபோன் செஞ்சேன்” என்று சற்று தளர்வாகவே பேசினாள்.

“உனக்கு ஊர் ஊரா டிராவல் செய்றது தான் ரொம்ப பிடிக்குமே. அப்புறம் என்ன‌ யோசனை? அந்த பிராஜக்ட் உனக்கு ஏத்தது இல்லையா?” எனக் கேட்டான் ராஜன்.

“ஹ்ம்ம் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க?” என அவள் தடுமாற,

அவள் எதையோ நினைத்து மனதோடு உழன்று கொண்டிருப்பது புரிய, “என்னம்மா பிரச்சனை? சொன்னா தானே தெரியும்! நீ இப்படி குழம்புற ஆளு இல்லையே! என்னாச்சு உனக்கு” எனக் கேட்டான்.

நீண்ட பெருமூச்சு விட்டவளாய், “நான் இன்பாவை லவ் பண்றேன் சுந்தர்”

பேரதிர்ச்சி தான் ராஜனுக்கு. வேலையில் ஏதோ பிரச்சனை என எண்ணி கேட்டிருந்தவனுக்கு இந்த பதில் அதிர்ச்சியை அளித்தாலும், “இது அவனுக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.

“அவன் தானே எனக்கு பிரபோஸ் செஞ்சது” என்றாள்.

“இது எப்ப நடந்துச்சு?” சற்று அதட்டலாகவே கேட்டிருந்தான் ராஜன்.

“மூனு மாசம் இருக்கும்! நான் அவனுக்கு பதில் சொல்லலை‌. ஆனா இப்ப அவனை விட்டு வேற ஊருக்கு போறதுக்கு மனசு ஒப்பலை‌. ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு” என்றாள் நங்கை.

“சோ நீ அவனை லவ் பண்றதால அந்த பிராஜக்ட்டை அக்சப்ட் பண்ணலாமா வேண்டாமானு கன்ஃப்யூஷன்” என்று ராஜன் கேள்வியாக நிறுத்த,

“அதே தான் சுந்தர்” என்றாள்.

“அதை நீ அவன்கிட்டயே கேளு” என கைபேசியை வைத்து விட்டான் ராஜன்.

ஏனோ ராஜனின் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.

மூன்று மாதங்களாக தன்னிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் இருந்திருக்கிறாள் என்கின்ற கோபம் ஒரு புறமும், இந்த இன்பா நல்லவனாக இருப்பான் என்று ஏன் என் மனம் நம்ப மறுக்கிறது என்கின்ற கேள்வி மறுபுறமும் என உள்ளம் கொதி நிலையில் இருக்க நிரம்பவே குழம்பி போனான் ராஜன்.

அவளின் தொடர்ந்த அலைப்பேசி அழைப்புகள் அனைத்தையும் எடுக்காது தவறவிட்டான்‌.

நேரம் செல்ல செல்ல அவள் மீதான கோபம் குறைந்திருந்த போதிலும் மறுநாள் பேசி கொள்ளலாம் என தனது கைபேசியை அணைத்து வைத்திருந்தவன், மறுநாள் காலை ஆன் செய்து பொழுது பார்த்த முதல் செய்தி நங்கையுடையது தான்.

“நான் இன்னும் இன்பாக்கிட்ட கூட என் காதலை சொல்லலை! உன்கிட்ட தான் சொன்னேன். காதலே சொல்லாம அவன்கிட்ட போய் ‘உன்னை விட்டு என்னால போக முடியாதுனு தோணுது. இந்த பிராஜக்ட்டை ரிஜக்ட் செய்ய ஐடியா தான்’னு அவன்கிட்டயே எப்படி நான் கேட்க முடியும். இது எல்லாத்துக்கும் மேல நீ தான் என் ஃப்ரண்ட் அவன் இன்னும் எனக்கு ஜஸ்ட் கொலீக் தான்!” என்று அனுப்பியிருந்தாள் நங்கை.

இச்செய்தியை பார்த்ததும் தானாய் இதழில் குறுநகை தோன்ற, மனதில் இதம் பரவுவதை உணர முடிந்தது அவனால்.

மனதினை இலகுவாக்கிய இவ்வுணர்வினால், ‘நான்‌ ரொம்ப சுயநலமா யோசிக்கிறேனோ?’ தன்னை தானே கேட்டு கொண்டான்.

அவளுக்கு உடனே அழைப்பு விடுத்து காத்து கொண்டிருக்க, “எருமை! எருமை! கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா உனக்கு? அழ விட்டுட்டல என்னை” கரகரத்த குரலில் அவள் கூறவும்,

“ஹே பப்ளிமாஸ் அழுதியா என்ன?” பதறியவாறு இவன் கேட்க, “மவனே நீ நேர்ல மட்டும் இருந்திருந்தீனா இந்நேரத்துக்கு கைமா தான்டா” என கோபமாய் உரைத்திருந்தாள்.

“ஹப்பா மை ரியல் பப்ளிமாஸ் இஸ் பேக்” என இவன் சிரிக்க, “ஏன்டா பேசினா முழுசா கேட்க மாட்டியா? அதென்ன பாதிலயே ஃபோனை கட் செய்ற பழக்கம்” என வசைமாரி பொழிந்தாள்.

அனைத்தையும் சிரித்தவாறே கேட்டு கொண்டிருந்தவன், “சரி சரி ஆர் யூ ஆல்ரைட் நௌ! அந்த பிராஜக்ட் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்க?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் நான் போகலை. இங்கேயே வேற பிராஜக்ட் பார்த்துக்கிறேன். எனக்கு புனேல பிராஜக்ட் கிடைச்சது தெரியாம சென்னைல பிராஜக்ட் கிடைச்சிருக்குனு நினைச்சு இன்பாவும் அவனுக்கு கிடைச்ச ஹைதராபாத் பிராஜக்ட்டை ரிஜக்ட் செஞ்சிட்டானாம்” என்றாள்.

“அதான் முடிவு செஞ்சிட்டியே! அப்புறம் என்ன ‘அவன் இன்னும் எனக்கு கொலீக் தான். நீ மட்டும் தான் எனக்கு ஃப்ரண்ட்டுனு மெசேஜ் செஞ்சிருக்க” சற்று கோபமாகவே அவன் கேட்க,

“ஏன்டா கோபப்படுற? நான் இன்பாவை கல்யாணம் செஞ்சிக்கிறதுல உனக்கு விருப்பம் இல்லையா?” வருத்தமான குரலில் கேட்டாள்.

அவள் குரலில் இருந்த பாவத்தில் இளகியவனாய், “இது உன் வாழ்க்கை நங்கை! நீ தான் முடிவு செய்யனும். நீ லவ் பண்றது சரி தப்புன்னு சொல்றதுக்கு எனக்கு அவனை பத்தி என்ன தெரியும் சொல்லு! ஆனா லவ் எந்தளவுக்கு சுகத்தை கொடுக்குதோ அதே அளவுக்கு வலியையும் கொடுக்கும் நங்கை! அதனாலயே கல்யாணத்துக்கு பிறகு தான் காதலிக்கனும்னு முடிவோட இருக்கேன் நான்.

லைஃப் லாங் கூட வாழ போற பையன்றதை தான்டி உன்னோட அடுத்த ஜெனரேஷன் அவன் மூலமாக தான் உருவாகப் போகுது! இதுல அவன் குடும்பமும் அடக்கம்! அப்படிப்பட்டவன் எப்படி இருக்கனும்னு நீ தான் முடிவு செய்யனும் நங்கை! நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்” என்றவன்,

சற்று நிறுத்தி “புரியுது தானே” எனக் கேட்டான்.

“ம்ம்ம்” என்ற அவளின் சுருதியற்ற குரலே அவனுக்கு கேட்டது.

“குழம்பினா தான் தெளிவு கிடைக்கும் நங்கை. குழம்புறதுல தப்பில்ல ஆனால் தெளிவான முடிவோட வெளில வா! சரி நான் ஆபிஸ் கிளம்புறேன். டேக் கேர்” என்று இணைப்பை துண்டித்தான்.

அடுத்த வந்த நாட்களில் நங்கை அவனை காதலிப்பதில் தெளிவாக இருப்பதாக கூறி தன் காதலை இன்பாவிடம் முன் மொழிந்தாள். இருவரும் காதலர்களாய் உலா வந்த சமயத்தில் ராஜன் அவளிடம் பேசுவதை வெகுவாக குறைத்து கொண்டான்.

நங்கையிடம் பேசும் நேரங்களில் இன்பா உடனிருக்கும் போது அவனிடமும் பேசி இருக்கிறான் ராஜன். இன்பா மீது நல்ல அபிப்ராயம் உண்டானது அவனுக்கு. தோழியின் வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டுமென வேண்டிக் கொண்டான்.

நாட்கள் செல்ல நங்கையின் வீட்டில் அவள் திருமணத்திற்கான பேச்சை துவங்கவும், இன்பாவுடனான தனது காதலை உரைத்து பலத்த எதிர்ப்பை பெற்றாள் நங்கை. இன்பாவிடமும் அவனது வீட்டில் தங்களின் காதலை பற்றி உரைக்குமாறு வலியுறுத்தினாள் நங்கை‌.