நனிமதுர நங்கை 7


அன்று மாலை நங்கையிடம் கூறாமலே அலுவலகத்தில் இருந்து கிளம்பி இருந்தான் சுந்தரராஜன்.

நங்கை அவன் கிளம்பியதை அறிந்து நேராக அவனது அறைக்கு சென்றாள். பிரேம் தனது தாய் தந்தையருடன் இந்தியாவிற்கு சென்றிருக்க, ராஜன் அறையில் தனித்திருந்தான்.

அச்சமயம் அங்கு சென்ற நங்கையை உள்ளே அழைத்தவன் அவளுக்கு தேநீர் தயாரித்து கொடுத்தான்.

“இன்னும் கோபம் போகலையா?” தேநீரை அருந்தியவாறு அவன் முகம் நோக்கி அவள் கேட்க,

“உன் மேல நான் ஏன் கோபப்படப் போறேன்‌. கோபப்பட தான் என்ன உரிமை இருக்கு எனக்கு?” என அவன் முகத்தை திருப்பி கொள்ள,

“இங்க பாரு! மதியத்துல இருந்து இப்படியே பேசி என்னை வெறுப்பேத்திட்டு இருக்க நீ!” என அவன் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவள்,

“ஃப்ரண்ட்டா நினைக்காம தான் தனியா விட்டுட்டு போனா கஷ்டப்படுவானேனு உன் குடும்பத்தோட உன்னை சேர்த்து வைக்க பேசிட்டு இருக்கேன்னா” என கோபமாய் கேட்டாள்.

“ஆமா ரொம்ப தான் அக்கறை” என அதற்கும் அவன் அலுத்து கொள்ள,

நங்கென்று அவன் மண்டையில் குட்டு வைத்தாள் நங்கை.

“ஆஆஆ” என தலையை தேய்த்தவன், “பப்ளிமாஸ் ஏற்கனவே கடுப்புல இருக்கேன். வெறியேத்தாம கிளம்பிடு” முறைத்தவாறு உரைத்தான்.

“போடா போடா உன்‌ முறைப்புக்குலாம் பயந்த ஆளு நான் இல்ல” அசால்ட்டாக உரைத்தவளின் கைபேசி சிணுங்க, அதனை ஏற்று பேசியவள்,

“ஹான் அங்கிள்! அவங்க வீட்டுக்கு போய்ட்டீங்களா? ஃபோன் கொடுக்கிறீங்களா?” என கேட்டவாறு தனது கைபேசியை சுந்தரிடம் கொடுத்தவள், “இந்தா பேசு” என்றாள்.

கைபேசியை வாங்காது யாரு என புருவத்தை அவன் உயர்த்த, அவனின் கையை பிடித்து கைபேசியை திணித்தவள், “பேசு தெரியும்” என்றாள்.

கைபேசியை காதில் வைத்தவன் அங்கு கேட்ட ஒலியில், “பெரியம்மா” என இன்ப அதிர்ச்சியுடன் அழைத்திருந்தான்.

‘பெரியம்மா எப்படி இவ ஃபோன்ல பேசுறாங்க’ என யோசித்தவாறு இவளை பார்த்தவன், மறுபுறம் கேட்ட அவரின் அழுகுரலில், “அய்யோ பெரியம்மா நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல. என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க. அண்ணா கல்யாணிலாம் எப்படி இருக்காங்க?” தொண்டை கமற கேட்டான்.

“கல்யாணி காலேஜ்க்கு படிக்க போக மாட்டேன்னு சொல்லிட்டா ராஜா. உன் அண்ணனும் ராவும் பகலுமா வேலை பார்க்கான். ஒரே நாளுல எல்லாமே தலை கீழா மாறி போச்சு. ஈஸ்வரன் சாய்ந்திரம் கம்பெனி வேலை எதுக்கோ போவான். சின்ன கடையா பார்த்து பாத்திரங்கள் போட்டு வச்சிருக்கோம். காலைல அவன் கடையை பார்த்துப்பான். ஆறு மணிக்கு மேல் நானும் கல்யாணியும் கடையை பார்த்துப்போம். அவன் வேலை முடிஞ்சி நடு சாமத்துல வீட்டுக்கு வருவான். உன்னை அன்னிக்கு அவன் வீட்டை விட்டு போக சொன்னதும் எனக்கும் கல்யாணிக்கும் செம்ம கோபம் ராஜா. அவனை பிடிச்சு திட்டிட்டோம்‌. கல்யாணி கொஞ்ச நாளைக்கு அவன்கிட்ட பேசாமலே திரிஞ்சா. நீயும் என் பிள்ளை தானடா ராஜா‌. உன்னை அப்படி தானே வளர்த்தேன். நீ கஷ்டப்பட்டா என் மனசு தாங்குமா ராஜா! எங்க மேல கோபப்பட்டு போய் இப்படி அனாதையா யாருமில்லாத ஊருல தனியா கெடக்கிறியே! இன்னும் என் மேல கோபமா தான் இருக்கியா ராஜா” என கண்ணீர் வடித்தவாறு கேட்டார்.

அவரின் குரலும் பேச்சும் இவன் மனதை இளக்கியிருக்க,

“இல்ல பெரியம்மா! எனக்கு கோபம்லாம் எதுவும் இல்ல! இதை நினைச்சு நீங்க வெசனப்படாதீங்க” தனது குரலை செருமியவாறு அவருக்கு ஆறுதல் உரைத்தவன், “ஆணிமா எங்க பெரியம்மா?” எனக் கேட்டான்.

தனது தாயிடம் இருந்து போனை பறித்த கல்யாணி, “பேசாத நீ! நீயும் அண்ணனும் சண்டை போட்டுட்டு என்னை கழட்டி விட்டுட்டீங்கல!” என அழுதாள்.

“டேய் ஆணிமா! உன் மேல எப்படிடா அண்ணா கோபப்படுவேன்” கல்யாணியை சமாதானப்படுத்த அவன் உரைத்த நொடி,

‘அடப்பாவி! இங்க கோபமா சுத்தினது என்ன? இப்ப பேசுறது என்ன?’ தனது வாயில் கை வைத்தவாறு அவனை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து வைத்தாள் நங்கை.

தனது கண்களை துடைத்தவாறு கல்யாணியை வம்பிழுத்து சிரிக்க செய்து அவளை இலகுவாக்கியவன், “ஏன் படிக்க மாட்டேன்னு சொல்லிட்ட ஆணிமா! நான் வேணா காசு அனுப்பவா?” எனக் கேட்டான்.

“இல்லல்ல எனக்கு விருப்பம் இல்ல. காசுலாம் பிரச்சனையில்ல‌. அண்ணா தான் இங்க வேலைக்கு போகுதே! எனக்கு இப்போதைக்கு வேலை போக தான் விருப்பம்” படபடவென அவள் உரைத்ததிலேயே உண்மையை உணர்ந்தவனாய்,

“பொய் சொல்லாத ஆணிமா. பெரியம்மா அங்க இருக்க நிலைமையை சொன்னாங்களே! ஏன் நான் காசு கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? எல்லாரும் இன்னும் என்னைய ஒதுக்கி தானே வைக்கிறீங்க” என கோபமாய் கேட்டான்.

“அய்யோ ராஜாண்ணா! அப்படிலாம் இல்ல! ஈஸ்வரண்ணா சித்தி சித்தப்பா மேல கேஸ் போட்டிருக்காங்க! உங்களை வச்சி இந்த கேஸை திசை திருப்பிட கூடாதுனு அண்ணா நாங்க உன் கூட பேச கூடாதுனு சொல்லிட்டாங்க. இதுல நீ காசு வேற அனுப்பினா அண்ணாக்கு கோபம் வரும். இப்ப எதுவும் நீ செய்ய வேண்டாம். எனக்கு வேணும்னா நானே கேட்டுக்கிறேன்” என்றதும், ஈஸ்வரன் கூறியதை எண்ணி இவனுக்கு கோபம் துளிர்த்தாலும் அதிலிருந்த உண்மை புரிபட சரியென ஒப்பு கொண்டான்.

இப்பொழுது கல்யாணி கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு பேசியிருக்க, “உன் அம்மா அப்பா மேல கேஸ் போட்டதுல உனக்கு ஒன்னும் சங்கடம் இல்லையே ராஜா” எனக் கேட்டார் பெரியம்மா அகல்யா.

“அவங்களை நான் தலை முழுகி ரொம்ப நாளாச்சு பெரியம்மா! எந்த பையனுக்காக சொத்தை எல்லாம் ஏமாத்தி எழுதி வாங்கினாங்களோ அந்த பையனே இல்லாம சொத்தை வச்சி ஆளட்டும் அவங்க. அப்ப தான் புத்தி வரும்” காட்டமாய் உரைத்திருந்தான் ராஜன்.

அவனின் பெற்றோரும் இவன் வெளிநாட்டில் வேலை செய்வதை பற்றி அறிந்து மகிழ்ந்தனர். ஆயினும் அவனிடம் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை‌. ஏதோ அண்ணன் குடும்பத்தின் மீதிருக்கும் பாசத்தில் கோபத்தில் இருக்கிறான். தங்களுடன் வந்து சேர்ந்து விடுவான் என்று எண்ணி கொண்டனர்.

“ஆமா உன்கிட்ட பெரிய‌ ஃபோன் இருக்காதுல ஆணிமா. இது யாரோடது?” எனக் கல்யாணியிடம் கேட்டான் ராஜன்.

“இது தேவநாதன் அங்கிள் ஃபோன் அண்ணா! அவங்க மூலமா தான் நீ ஆன்சைட்ல இருக்கிறது எங்களுக்கு தெரிஞ்சிது. அவரோட ஃப்ரண்ட்டோட பொண்ணு நங்கைனு அவங்க தான் நீ அங்க இருக்கிறதை சொல்லி பேசனும்னு சொல்லி இன்னிக்கு இப்படி பேச வச்சிருக்காங்க. அவங்க பேச வைக்க முயற்சி செய்யலைனா நீ எங்ககிட்ட பேசியிருக்கவே மாட்ட தானே” என அவள் ஆதங்கத்துடன் கேட்க,

“அப்படிலாம் இல்லடா ஆணிமா! உங்ககிட்ட பேசாம எங்க போவேன் நான்” என்றவன்,

“சரி தீரன்கிட்ட சொல்லி நானே உனக்கு ஒரு ஃபோன் வாங்கி தர சொல்றேன்”

அவள் உடனே வேண்டாமென மறுக்க வாய் எடுக்க, “அண்ணா கிட்ட நான் தீரனை பேச சொல்லிக்கிறேன். அவனை எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும். உன் போன் பில் செலவுலாம் என்னுடையது. இனியும் என்னால் உங்ககிட்ட பேசாமலாம் இருக்க முடியாது” என்று அவளிடம் விடைபெற்று விட்டு தேவநாதனிடம் பேசிவிட்டு கைபேசியை நங்கையிடம் அளிக்க, விரிந்த புன்னகையுடன் அதனை பெற்று கொண்டவள்,

“தேங்க்யூ சோ மச் அங்கிள்!” என நன்றியுரைத்து கைபேசியை அணைத்தாள்.

ராஜன் முகத்தில் சற்று தெளிவும் மகிழ்வும் இருக்க, அதை பார்த்திருந்த இவள் முகத்திலும் மகிழ்ச்சியே!

“இப்படி சர்ப்ரைஸ்ஸா உன் குடும்பத்தோட பேச வச்சிட்டு தான், நான் இந்தியா போறதை பத்தி சொல்லனும்னு இருந்தேன். அதுக்குள்ள மதியம் நீ கேள்வி கேட்கவும், ஏதாவது யோசிச்சு இதை கண்டுபிடிச்சிடுவியோனு பயந்து தான்‌ இந்தியா போறதை பத்தி சொல்லிட்டேன். நேத்து நீ உங்க அண்ணன் குடும்பத்தை பத்தி சொல்லும் போது தான், இப்படி ஒரு குடும்பம் திடீர்னு தங்க இடம் வேணும்னு எங்களோட மதுரை வீட்டுல தேவநாதன் அங்கிள் யாரையோ குடி வச்சாரேனு சந்தேகம் வந்துச்சு. அவருக்கு போன் செஞ்சி கேட்டதும் அது உங்க அண்ணன் குடும்பம் தான்னு தெரிஞ்சிது” என்று அவள் கூறி கொண்டிருக்க,

“பெரியம்மா தங்கி இருக்கிறது உங்க வீடா?” என ஆச்சரியமாய் கேட்டான் ராஜன்.

“ஆமா! மதுரை தான் எங்க சொந்த ஊரு. அங்க அஞ்சு வீடு வாடகைக்கு விட்டிருக்கோம். அந்த வீடு எல்லாத்தையும் தேவநாதன் அங்கிள் தான் மெயின்டெய்ன் செய்றாங்க” என்றாள்.

“தேங்க்ஸ் நங்கை! என்னமோ மனசுல இருந்த பெரிய பாரம் இறங்கின ஃபீல்” மனதார நன்றியுரைத்தான்.

“எந்த பிரச்சனையுமே பேசினா தீர்ந்துடும் சுந்தர்! பேசாம அடமா இருந்து அதை மனசுல வச்சி கோபத்தை வளர்த்துட்டு போறது தான் வாழ்க்கையையே பாதிச்சிடுது!” என்றாள்.

“ஹ்ம்ம் உண்மை தான்” என்று அவன் கூற,

“ஹே ஆமா அது என்ன ஆணிமா?” கேள்வியாய் அவனை பார்க்க,

“அது அவளை வெறுப்பேத்த நான் வச்ச பெட் நேம். அண்ணா அவளை கல்லுமானு கூப்பிடுவான். நான் ஆணிமானு கூப்பிடுவேன்” சிரித்தபடியே உரைத்தான்.

“அடப்பாவிங்களா கல்யாணிங்கிற பேரை எப்படி கெடுத்து வச்சிருக்கீங்க! இப்படியுமா செல்லப்பெயர் வைப்பாங்க” அவர்களுக்குள் இருக்கும் அன்பான பந்தத்தினை ரசித்தவாறு சிரித்தவள்,

“இப்படிலாம் அண்ணா எனக்கில்லையேனு பொறாமை பட வச்சிட்ட நீ கல்யாணிக்கிட்ட பேசின கொஞ்ச நேரத்துல. கல்யாணி மாதிரி தங்கச்சி கூட இல்லையேன்னு தோணுச்சு” என்றவாறு மென்னகை புரிந்தாள்.

“ஹா ஹா ஹா.. அதான் ஃப்ரண்ட்டா கூடவே இருக்கேனே! அப்புறம் என்ன?” எனக் கேட்டான்.

“ஆமா இருந்தாலும் அண்ணா அக்கா தங்கச்சினு சொந்த பந்தங்களோடு வாழுறதும் ஒரு கொடுப்பினை தான். இதுக்காக நான் நிறையவே ஆசைப்படுவேன் சுந்தர்‌. உன்னை உன் குடும்பத்தோட சேர்த்து வைக்கணும்னு நினைச்சதுக்கு அதுவும் ஒரு காரணம். இல்லாதவங்களுக்கு தானே அதோட அருமை தெரியும்” என்று சிரித்தவள், “சரி கிளம்பு வெளில போய் சாப்பிட்டு வரலாம்” என்று அவனை அழைத்து கொண்டு வெளியே சென்றாள்.

மறுநாள் அவனது பால்ய சிநேகிதனான தீரனிடம் பேசியவன், தாய் தந்தையரை பற்றியும் சுந்தரேஸ்வரன் தொடுத்திருக்கும் வழக்கு பற்றியும் கேட்டறிந்து கொண்டான். சுந்தரேஸ்வரனிடம் பேசி கல்யாணிக்கு ஒரு அலைபேசியை வாங்கி கொடுக்குமாறு உரைத்தான்.

மதுரையில் சின்ன கடையாக இருந்த அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திர கடை முன் சென்று நின்றான் தீரன்.

கடையில் கல்லாவில் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த சுந்தரேஸ்வரனிடம் வந்த தீரன், “என்ன அண்ணா பலத்த யோசனைல இருக்கீங்க?” என்றவாறு வந்து அமர்ந்தான்.

இந்த கடையை உருவாக்குவதில் சுந்தரேஸ்வரனுக்கு தீரன் உதவியாக இருந்ததில் அவனுடன் சற்று ஒட்டுதலுடன் தான் பழகினான் ஈஸ்வரன்.

“ஹ்ம்ம் சரக்கு கொடுத்தவங்கலாம் காசு கேட்குறாங்க. அவ்ளோ வியாபாரம் ஒன்னும் நடக்கலை. எல்லா மக்களுக்கும் நம்ம பரம்பரையா வச்சிருக்க கடை தானே தெரியும். இந்த கடை என்னமோ அங்க இருக்க சின்ன பாத்திரங்களைலாம் போட்டு வச்சிருக்க கடைனு நினைச்சிட்டு போய்டுறாங்க! எப்படி மக்களை இங்க வர வைக்கிறதுனு யோசிச்சிட்டு இருக்கேன் தீரா” என புலம்பினான்.

“விளம்பரம் கொடுங்க அண்ணே” என்று தீரன் உரைக்க,

“யூ டியூப் சேனல் ஒன்னு‌ ஆரம்பிக்கலாமானு யோசனைல இருக்கேன் தீரா” என்றான் ஈஸ்வரன்.

“வாவ் அண்ணன் நல்ல ஐடியா” என்று தீரன் அதனை ஆமோதித்தான்.

அதன் பிறகு சில நிமிடங்கள் வியாபாரத்தை பற்றியே இவர்களின் பேச்சு இருக்க, “என்ன அண்ணே ராஜாவை பத்தி கேட்பீங்கனு பார்த்தா! அவனை பத்தி பேசவே மாட்டேங்கிறீங்க” என ஆதங்கத்துடன் கேட்டான்.

“அவனுக்கென்ன அவன்‌ சென்னைல சந்தோஷமா வேலை பார்த்துட்டு இருப்பான்” என்றான் ஈஸ்வரன்.

“இல்லண்ணே அவன் ஜெர்மனிக்கு ஆன்சைட் போய்ட்டான்” என்றான்.

“என்னது” என ஒரு நொடி அதிர்வை காண்பித்தவன் மறுநொடி தன்னை சுதாரித்தவனாய், சற்று இறுக்கமான முகத்துடன், “ஆன்சைட் கிடைச்சிருக்கிறது நல்லது தானே! இன்னும் அவனோட அப்பா அம்மாக்கு நிறைய சம்பாதிச்சு போடலாம்” என்றான்.

“ஏன் அண்ணே இப்படி பேசுறீங்க! உங்களைலாம் பிரிஞ்சி அங்க அவன் எவ்ளோ கஷ்டப்படுறான் தெரியுமா? கிட்டதட்ட ஏழு மாசமா அங்க இருக்கான். இங்க யாருக்கும் தெரியலை. நேத்து தான் எனக்கு தெரிய வந்து அவன்கிட்ட பேசினேன். ரொம்ப மனசொடுஞ்சு போய்ருக்கான் அண்ணா. நம்ம கல்யாணியையாவது அவன்கிட்ட தினமும் பேச வைங்கண்ணா! அவளுக்கு அவனே ஃபோன் வாங்கி தரேன்னு சொன்னான்” என்று தீரன் பேசி கொண்டிருக்கும் போதே இடையிட்ட ஈஸ்வரன், “என் தங்கச்சிக்கு என்ன வாங்கி தரனும்னு எனக்கு தெரியும்! அவன் சொல்லி நான்‌ செய்யனும்னு இல்லை. அதான் ஃப்ரண்ட்டுனு நீ இருக்கியே! நீ தினமும் பேசு அவன்கிட்ட!” என்று கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் பேச சென்று விட்டான் சுந்தரேஸ்வரன்.

“ம்ப்ச் எப்ப தான் இந்த மனுஷனோட கோபம் தீருமோ” என தனக்குள்ளாகவே புலம்பியவனாய் ஈஸ்வரனிடம் கூறிவிட்டு விடைபெற்றான் தீரன்.

அன்றிரவு தம்பிக்காக அழுத ஈஸ்வரனின் கண்ணீர் அவனின் தலையணையை நனைத்தது. வெளியே அவன் மீது கோபமாக இருப்பதாக காண்பித்து கொண்டிருப்பவனின் மனமோ அவனின் வலியை எண்ணி பாகாய் உருகி கொண்டிருந்தது.

கல்யாணி மற்றும் பெரியம்மா இருவருமே ராஜனிடம் பேசியதை ஈஸ்வரனிடம் உரைக்கவில்லை. ஈஸ்வரனும் தீரன் மூலம் ராஜனை பற்றி அறிந்து கொண்டதை வீட்டினரிடம் பகிரவில்லை. ஆயினும் அடுத்த மூன்று நாட்களில் மோதிரத்தை அடமானம் வைத்து தங்கைக்கு அலைபேசி வாங்கி கொடுத்தவன் அதை வைத்தே யூ டியூப் சேனல் ஆரம்பித்தான்‌.

தேவநாதன் மூலம் நங்கை மற்றும் ராஜனின் எண்ணை பெற்று கொண்ட கல்யாணி அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்‌‌.

அங்கு நிகழும் அன்றாட நிகழ்வுகளை தீரன் மற்றும் கல்யாணி மூலம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான் சுந்தரராஜன். கல்யாணி நங்கையிடம் பேசி அவளுக்கும் நல்ல நட்பாகி போனாள்‌.

கல்யாணியிடம் பேசி எவ்வாறேனும் அவள் மனதினை மாற்றி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டான் ராஜன்.


நங்கை விமான நிலையத்திற்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

தனது உடைமைகளை எல்லாம் அவள் முன்னறையில் எடுத்து வைக்க, ராஜன் அதனை எடுத்து வரவழைக்கப்பட்டிருந்த மகிழுந்தில் ஏற்றிக் கொண்டிருந்தான்.

நங்கை தனது அறையிலுள்ளோரிடம் விடைபெற்று வெளியே வர, இருவருமாய் அந்த வாடகை மகிழுந்தில் ஏறியதும் வண்டியை இயக்கினார் ஓட்டுனர்.

“எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கிட்டியா?” என ராஜன் வினவ, ஆமென தலையசைத்தவள், “விட்டுட்டு போனா கூட எடுத்து வச்சி அப்புறம் என்கிட்ட சேர்க்க தான் நீ இருக்கியே! அதனால கவலை இல்லை” என சிரித்தாள் நங்கை.

“இத்தனை நாளா பழகிட்டு ஒருத்தனை விட்டு பிரிஞ்சி போறோமேனு கொஞ்சமாவது கவலை இருக்கா உனக்கு! இந்த ஒரு வாரமும் இது வரைக்கும் பார்த்த இடத்தை எல்லாத்தையும் திரும்ப பார்க்கனும்னு சாய்ந்திரம் ஆனதும் ஊர் ஊரா சுத்த விட்டுட்ட வேற!” என கடுகடுவென அவன் பொரிந்து கொண்டிருக்க,

“எதுக்கு கவலைப்படனும்? இதெல்லாம் அழகான நினைவுகள் சுந்தர்! ஃபூச்சர்ல (future) எனக்கு பிறக்கும் பசங்க கிட்ட நான் ஜெர்மனில இருந்தப்ப கிடைச்ச ஃப்ரண்ட் இவன்னு இங்க எடுத்த ஃபோட்டோஸ்லாம் காண்பிச்சி இந்த மெமரீஸ்ஸை சந்தோஷமா சொல்வேன். வாழ்க்கைல எல்லாமே அனுபவம் தானே. டோன்ட் பீ சோ இமோஷனல் சுந்தர்” அவனை தேற்றினாள்.

விமான நிலையத்தில் அவள் விடைபெறும் தருணத்தில் கைகளை பற்றியவன், “என்னை மறந்துட மாட்டல பப்ளிமாஸ்” என விழிகளில் துளிர்த்த நீருடன் கேட்டான்.

அவளுக்கும் விழிகளில் நீர் கோர்த்து கொள்ள, “டேய் என்னமோ நாம பேசவே மாட்டோம்ங்கிற மாதிரி பேசுற! நம்மகிட்ட போன் இருக்கு! நினைச்ச நேரம் பேசிக்கலாம்” என்றவள் கூறியதும்,

“ஹ்ம்ம் நினைக்கனுமே” என்று அவன் கூற,

“எப்படி உன் நினைப்பு இல்லாம போய்டும் எனக்கு?” என்று அவள் அவனை கோபமாய் முறைக்க,

“அது தான் நிதர்சனம் நங்கை. காலேஜ் முடிக்கும் போது எல்லாரும் தினமும் மெசேஜ் செய்வோம் பேசுவோம்னு சபதம்லாம் போட்டு தான் ரூமை காலி பண்ணிட்டு வந்தோம். இன்னும் கான்வோகேஷன் கூட முடியலை. ஆனா இப்பவே யார் எங்க இருக்காங்க? என்ன செய்றாங்கனு ஒரு தகவலும் இல்லை. பிரையாரிட்டி மேட்டர்ஸ் (priority matters)
அந்தந்த காலகட்டத்துல நமக்கு முக்கியத்துவமா தோணுற விஷயத்துல கவனத்தை செலுத்திட்டு அதோட போக்கிலேயே போய்ட்டு மத்ததுக்கு நேரம் ஒதுக்காம கவனிக்காம போய்டுறோம்”

“என்னடா தத்துவம்லாம் பேசுற” என சிரித்தவள்,

“நீ எப்பவுமே என் வாழ்க்கைல முக்கியமான இடத்துல தான் இருப்ப சுந்தர்! என் வாழ்க்கைல என்ன நடந்தாலும் உன்கிட்ட பேசாம நான் இருக்க மாட்டேன்”

“சரி அழுது வடியாம என்னோட மெசேஜ்காக காத்திரு! இந்தியா போனதும் மெசேஜ் செய்வேன்! டேக் கேர்” என்று அவள் கனத்த மனதுடன் கண்ணீர் வழிய பிரியா விடை கொடுக்க,

“ஹேப்பி அண்ட் சேப் ஜர்னி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பப்ளிமாஸ்! டேக் கேர்” என்று கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினான் ராஜன்.