நனிமதுர நங்கை 6


“அண்ணா ஒன்னும் செய்யலை. எனக்கே தெரியாம என்னை வச்சி என் அண்ணணை ஏமாத்தி சொத்தெல்லாம் வாங்கிட்டாங்க என் அம்மா அப்பா! மதுரைல புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திர கடை வியாபாரம் செஞ்சிட்டு இருக்க குடும்பம் எங்களுடையது‌. எங்க அம்மா அப்பாக்கு நான் ஒரே பையன் தான் நங்கை. என் பெரியப்பாவோட பிள்ளைங்க தான் சுந்தரேஸ்வரனும் கல்யாணியும். அவங்களை தான் நான் என் அண்ணா தங்கச்சினு சொல்றது. நாங்க கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்துட்டு இருந்தோம். கல்யாணி பிறந்து இரண்டு மூனு வருஷத்துல ஆக்சிடெண்ட்ல பெரியப்பா இறந்துட்டாங்க‌. பெரியம்மா தான் வீட்டு வேலைலாம் செய்வாங்க. அம்மா, அப்பா கூட சேர்ந்து கடை வேலைலாம் பார்த்துப்பாங்க. அதனால பெரியம்மா கையால சாப்பிட்டது தான் அதிகம். சின்ன வயசுலருந்தே டிவின்ஸ் போல ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ்னு ஒன்னாவே வாழ்ந்துட்டு இருந்த எங்களை பிரிச்சது எங்க அம்மா தான். அவங்களோட பேராசை தான். காலேஜ் படிக்கும் போது அண்ணா பேர்ல சொத்து வாங்க போறதா சொல்லி என்கிட்ட சில பத்திரங்களை கொடுத்து அண்ணாகிட்ட சைன் வாங்க சொன்னாங்க. நானும் அம்மா அப்பா மேல உள்ள நம்பிக்கைல அதை படிக்கலை. அண்ணாவும் என் மேல் இருந்த நம்பிக்கைல அதை படிக்காம கையெழுத்து போட்டான். எனக்கு ஐடி ஜாப் தான் கனவா இருந்தனால நான் கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்துட்டேன். அண்ணாக்கு பிசினஸ் செய்ய ஆசை இருந்தனால அதுக்காக பணம் வேணனும்னு சில சொத்துக்களை விற்கலாம்னு அம்மா அப்பாகிட்ட கேட்கும் போது தான் அண்ணா பேருல எந்த சொத்துமே இல்லைனு எங்க எல்லாருக்குமே தெரிஞ்சிது” இத்தனை நேரமாய் இறுகிய முகத்துடன் வருத்தமான குரலில் தனது குடும்ப கதையை சுந்தரராஜன் கூறி கொண்டிருக்க,

“ஓ மை காட்! எவ்ளோ பெரிய துரோகம்! உங்க அண்ணனுக்கு மட்டுமில்ல உனக்குமே இது எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம்! உன் அண்ணன் நீ தான் வேணும்னே எழுதி வாங்கிட்டனு சொல்லி திட்டிட்டாரா?” அசையாது எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருந்த ராஜனை கலைத்தாள்.

“ஹ்ம்ம்” துக்கம் தொண்டையை அடைக்க அன்றைய நாளின் நினைவுகள் நெஞ்சை அழுத்த ஆமென தலையசைத்தவன், “அண்ணா பெரியம்மாவையும் தங்கச்சியையும் கூட்டிட்டு வீட்டை விட்டு வெளிய போட்டாங்க. இந்த பிரச்சனை நடந்தப்ப நான்‌ சென்னைல இருந்தேன். அப்ப தான் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச மாசம் ஆகியிருந்துச்சு. என் ஃப்ரண்ட் தீரன் மூலமாக தான் இதை தெரிஞ்சிக்கிட்டேன்” என்று நிறுத்தியவன்,

“அப்ப என் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டுச்சு தெரியுமா! என் அம்மா அப்பாவே எனக்கு துரோகம் பண்ணிட்டாங்களேனு நான் அழுது கரைஞ்சது எனக்கு தான் தெரியும் நங்கை. தீடீர்னு நடுரோட்டுக்கு போன மாதிரி வீட்டை விட்டு எங்கே போகன்னே தெரியாம குடும்பத்தோட அண்ணன் வெளிய போனதை கேட்டதும், ‘உனக்கு நான் இருக்கேன் அண்ணே! எனக்கு அந்த அம்மா அப்பா வேண்டாம். அந்த சொத்து வேண்டாம். உங்களுக்கு உறுதுணையா பக்கபலமா நான் இருக்கேன் அண்ணேனு சொல்ல தான் உடனே மதுரைக்கு கிளம்பினேன். எனக்கான ஆறுதல் என்‌ அண்ணன்கிட்ட கிடைக்கும்னு நம்பி கிளம்பினேன். ஆனா அவன் என்னை பார்த்ததும் இன்னும் என்னத்தை பறிக்கிறதுக்கு உங்க அம்மா உன்னை அனுப்பி வச்சிருக்காங்கனு கேட்டான். என்னை அவன் நம்பலை நங்கை” தொண்டை குழி ஏறி இறங்க அழுகையை அவன் அடக்குவது அப்பட்டமாய் தெரிந்தது நங்கைக்கு.

“காம் டவுன் சுந்தர்! ரிலாக்ஸ்” என அவன் கை மீது கை வைத்து தட்டியவாறு ஆற்றுபடுத்தினாள். நீர் அளித்து அருந்த வைத்தாள். சற்று இடைவெளி விட்டு தன்னிலை அடைந்தவன், “அவன் அப்படி பேசின கோபத்துல ஏமாற்றதுல நானும், என்னை நம்பாம போய்ட்டல! உன் தம்பியை நம்பாம போய்ட்டல! என்னை நம்பாத என் அண்ணன் எனக்கும் தேவையில்லை! இனி நீ யாரோ நான் யாரோ! உன் வாழ்க்கைல ராஜானு ஒருத்தன் இல்லவே இல்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். சரியா அந்த சமயம் இந்த ஆன்சைட் வாய்ப்பு வரவும், அவங்களை விட்டு தள்ளி வரதுக்கு இதை பயன்படுத்திக்கிட்டேன்” என்று கூறி அமைதியானான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சுந்தர். நிஜமாவே செம்ம ஷாக்கிங்கா இருக்கு. அப்ப உன் நிலைமை என்னவா இருந்திருக்கும்னு புரியுது. ஆனாலும் உன் பெரியம்மாவையும் தங்கச்சியையும் நினைச்சி பார்த்தியா? அவங்க என்ன தப்பு செஞ்சாங்க? உன் ஃப்ரண்ட் தீரன்கிட்டயாவது நீ பேசலாம் தானே!” எனக் கேட்டாள் நங்கை.

“நான் பேசனும் பேசனும்னு சொல்றீயே! அவங்க ஏன் என்னை தேடி பேச வரலை. சரி அன்னிக்கு ஏதோ கோபத்துல திட்டிட்டாங்கனே வச்சிப்போம். அதுக்கு பிறகு நான் என்ன ஆனேன் என்ன செஞ்சிட்டு இருக்கேன் எதையுமே அவன் விசாரிக்காம போய்ட்டானே! சென்னை எனக்கு புது இடம்னு எனக்காக இஞ்சினியரிங் கோர்ஸ் எடுத்து படிச்சவன், தனியா வெளிநாட்டுக்கு போய்ருக்கானே, யார்கிட்டயும் பேசாம இருக்கானே அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு யாருக்காவது எண்ணம் இருந்துச்சா?” என கோபமாய் ஆவேசத்துடன் கேட்டிருந்தான் சுந்தரராஜன்.

“நீ ஜெர்மனிக்கு வந்தது அவங்களுக்கு தெரியுமா? சரி அப்படியே தெரிஞ்சாலும் உன் நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள் நங்கை.

“அக்கறை இருந்திருந்தா இந்நேரம் என்னோட சென்னை ரூம் மேட் மூலமா நான் எங்க இருக்கேன் என்ன செய்றேன்னு கேட்டு தெரிஞ்சி நம்பரும் வாங்கி பேசியிருக்கலாம் நங்கை. அவங்க வந்து கேட்டா கொடுனு சொல்லியே தான் என் சென்னை ரூம் மேட் கிட்ட நம்பரை கொடுத்தேன்!” என கோபமாய் உரைத்தவன் சற்று இடைவெளி விட்டு,

“தினமும் நீ பேசுனியா? பேசுனியானு என்னை கேட்குறியே! தினமும் அவங்ககிட்ட இருந்து கால் வராதா வராதானு நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன் தெரியுமா” தினமும் எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதை வேதனையான குரலில் உரைத்திருந்தான் ராஜன்.

“ஹ்ம்ம் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை டா! சீக்கிரம் நீ இது எல்லாத்தையும் கடந்து வரனும்னு உனக்காக நான் கடவுள்ட்ட வேண்டிக்கிறேன்” என்று அவள் முடிக்க,

“இது ஆயுளுக்கும் ரணமா மனசுல இருக்கும் நங்கை. ஒரு நேரம் உடைஞ்சிட்டா ஒட்ட வைக்க முடியாது. காதல் வலிலாம் என்ன வலி நங்கை. உறவுகளோட சந்தோஷமா வாழ்ந்துட்டு மனசால காயப்பட்டு‌ பிரிஞ்சி இருக்கிற வலி இருக்கே அது ரணம் நங்கை. ஆயுளுக்கு அதை சரி செய்ய முடியாது” என்றவாறு எழுந்து சென்றான்.

இவளும் அவனுடன் அமைதியாக நடந்தாள். கனத்த அமைதி அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்தது.

நங்கையை அவளது அறை வரை சென்று வழியனுப்பியவன் தனது அறைக்கு சென்றான்.

அன்றிரவு இருவருக்குமே உறக்கம் பிடிபடவில்லை. ராஜனுக்கு பழைய நினைவுகள் மனதினுள் ஊர்வலம் வந்து இம்சித்தது‌.

நங்கையோ, “சுந்தர் சொல்றது சரி தானே! அவங்களா ஏன் இவனை தேடி போன் செய்யலை” என சிந்தித்த வண்ணம் உறக்கி போனாள்.

மறுநாள் காலை அலுவலகம் சென்றதும் சுந்தரிடம் பிரேமை பற்றி கேட்டறிந்து கொண்ட நங்கை, “நீ உன் நிலைமையை மட்டுமே யோசிச்சு பேசுற சுந்தர்! உன் அண்ணனோட நிலைமைல இருந்து பாரு! நடுரோட்டுல நிக்கிற நிலைல வீட்டை விட்டு வந்தாருனு சொன்னியே! இந்த நிலைல அவர் உன்னை பத்தி யோசிப்பாரா இல்லை அவரோட அம்மாவையும் தங்கச்சியையும் பத்தி யோசிப்பாரா! நீ நல்ல கம்பெனில ஏசி அறைல சொகுசான வேலைல இருக்க! உனக்குனு இப்பவும் எந்த பொறுப்பும் இல்லை. ஆனா அவருக்கு அம்மா தங்கச்சியை காப்பாத்தனும். அடிமட்டத்துல இருந்து அவர் முன்னேறுற நிலைமைல தானே இருப்பாரு! அப்ப அவர் கவனம்லாம் அதுல தானே இருக்கும். இதெல்லாம் நீ சொன்னதை வச்சி நேத்து நான் யோசிச்சதுல தோணின விஷயங்கள்! நீயும் யோசிச்சு பாரு” என்றுரைத்து விட்டு தனது பணியினை கவனிக்க சென்று விட்டாள் நங்கை‌.

இவனுக்கு தான் அதற்கு மேல் பணியில் ஈடுபட இயலாது மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.

சென்னையில் இருந்து இவன் ஈஸ்வரனின் குடும்பத்தவர்களை மதுரைக்கு பார்க்க சென்ற அன்றே அவர்கள் ஒரு சிறிய வீட்டினில் தான் இருந்தார்கள். பெரியப்பாவின் நண்பர் யாரோ ஒருவரின் உதவியால் அந்த வீடு அவர்களுக்கு வாடகைக்கு கிடைத்ததாய் உரைத்திருந்தான் தீரன்.

இதையெல்லாம் எண்ணியவனுக்கு அவர்கள் இப்பொழுது எந்நிலையில் இருப்பார்களோ என்று மனம் பதைபதைத்தது‌. கண்டிப்பாக தனது தாய் தந்தையர் அந்த கடையினை அவனுக்கு வழங்கியிருக்க மாட்டார்கள்! மாலை வேளையில் பிபிஓவில் ஈஸ்வரன் வேலை செய்வதாய் கேள்விப்பட்டிருந்தான். சின்ன பாத்திர கடை வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தான். குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு கொண்டிருப்பான் என்று நன்றாகவே புரிந்தது.

கோபத்தில் இவை எதையும் யோசிக்காமல் போனோமே என தன் மீதே கோபம் வந்தது அவனுக்கு.

மதிய வேளையில் உணவுண்ண ராஜனை நங்கை அழைக்க, சாப்பிட மனமில்லை என்று கூறிவிட்டான். இவள் தான் வற்புறுத்தி அவனை உண்ண அழைத்து சென்றாள்.

“ஆமா நங்கை! உனக்கு ஏன் எங்க குடும்பத்து மேல இவ்வளோ அக்கறை” என உண்டவாறே யோசனையுடன் கேட்டான் ராஜன்.

“எனக்கு என்ன‌ ஸ்பெஷல் அக்கறை! நீ தான் அண்ணா அண்ணானு அழுது கரையிறியேனு சொன்னேன்” என்றாள்.

“நிஜமா! ஒரு வேளை என் குடும்பத்துல யாரும் ஃபோன் செஞ்சி பேசினாங்களா! அதுவும் இந்த இரண்டு வாரமாக தான் என் குடும்பத்து ஆளுங்க கூட என்னை பேச வைக்க ரொம்ப முயற்சி செஞ்சிட்டு இருக்க! ஆனா என்கிட்ட பேசாம உன்கிட்ட எப்படி பேச முடியும்” என தனக்குள்ளாகவே அவன் பேசி கொண்டே போக,

“ஹே ஸ்டாப் ஸ்டாப்! உன் கற்பனை குதிரைக்கு கொஞ்சம் கடிவாளம் போடுறியா?” என அவன் சிந்திப்பதை நிறுத்தியவள்,

“நான் இன்னும் ஒரு வாரத்துல இந்தியாக்கு போய்டுவேன்!” என்று பெரிய குண்டை அவன் தலையில் தூக்கி போட்டாள்.

“வாட்” என பேரதிர்ச்சியுடன் அவளை அவன் நோக்க,

“ஆமா சுந்தர்! இங்க என் பிராஜக்ட் வேலை முடிஞ்சிடுச்சு. நான் இந்தியா போய் ஆகனும்னு ஒரு மாசம் முன்னாடியே சொல்லிட்டாங்க. நீ ரொம்பவே ஃபேமிலி டிபென்டென்ட் பெர்சன்னு தெரியும். நானும் இல்லாம நீ எப்படி இங்க இருப்பனு எனக்கு உன்னை நினைச்சு தான் கவலையா இருந்துச்சு. அதான் நீ உன் ஃபேமிலி கூட சேர்ந்துட்டா நான் இங்க இல்லனாலும் யூ வோன்ட் ஃபீல் லோன்லினு (u won’t feel lonely) தோணுச்சு” என்று நிறுத்தினாள்.

கேள்வியுற்ற செய்தியை இன்னும் அவனால் ஜீரணிக்க இயலவில்லை. கையில் கொடுத்த இனிப்பை பறிப்பதை போன்ற உணர்வில் திகைப்பு குறையாது அப்படியே அமர்ந்திருந்தான்.

“என்னடா எதுவும் பேச மாட்டேங்கிற?” அவனை கலைத்தாள்.

உண்ணும் உணவு உள்ளே இறங்காது சண்டித்தனம் செய்தது. தண்ணீரை பருகியவன், “ஏன் இத்தனை நாளா என்கிட்ட சொல்லலை. நான் என் மைண்ட்டை செட் பண்ணி வச்சிருப்பேன்ல. இப்ப ஒரு மாதிரி தொண்டைய அடைக்குது நங்கை” என்று உணவு டப்பாவை மூடி வைத்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

கவலையுடன் செல்பவனை பின் தொடர்ந்து சென்றாள் நங்கை.