நனிமதுர நங்கை 5


“என்ன‌ சுந்தர் தனியா உட்கார்ந்திருக்க?” அலுவலக பேன்ட்ரியில் தனியாக அமர்ந்திருந்த சுந்தரிடம் கேட்டார் ராம்.

நாற்பது வயதான இந்தியர் ராம் அலுவலுக்காக குடும்பத்துடன் ஜெர்மனி வந்து நான்கு வருடங்களாகிறது‌. சுந்தர் வேலை பார்க்கும் அதே கிளையண்ட் கம்பெனியில் தான் இவரும் வேலை செய்த போதிலும் வேறு பிராஜக்ட்டுக்காக இவர் வேலை செய்வதால் அவ்வப்போது காணும் சமயங்களில் சுந்தரிடம் ஹாய் பை அளவில் தான் பேசியிருக்கிறார்.

இன்று அவரே தானாக வந்து பேசியதில், ‘அந்த ரஞ்சித்தை லண்டனை விட்டு அனுப்பினது பத்தி தெரிஞ்சி பேச வந்திருக்கிறாரோ’ என நினைத்தவாறே,

“நங்கை கொஞ்சம் நேரத்துல வந்துடுவா ராம்” என்றான்.

“ஹ்ம்ம் வேலைலாம் எப்படி போகுது!” எனக் கேட்டவாறு அவனின் குடும்பத்தை பற்றி கேட்டறிந்து கொண்டார்.

“ஓ மதுரைல பரம்பரையா பெரிய பாத்திர கடை வச்சிருக்க குடும்பமா! நைஸ்” என்றவர் அவனது வாழ்வின் லட்சியம் கனவு என அதைப்பற்றி வினவினார்.

திடீரென இவர் இவ்வாறு வந்து இவனிடம் அளவளாவுவதில் ஏதோ சரியில்லை என இவனின் மனம் நெருடிக் கொண்டிருக்க,

“ஹ்ம்ம் ஐடி வேலை பிடிச்சி செய்ற! யாருக்கும் கிடைக்காத ஆன்சைட் ஆப்பர்சூனிட்டி உனக்கு ஃப்ரஷ்ஷரா இருக்கும் போதே கிடைச்சிருக்கு! நிறைய லட்சியம் கனவுலாம் வேற வச்சிருக்க! சோ உன்னோட ஃபோகஸ் உன் வேலைலயும் வளர்ச்சியிலையும் தான் இருக்கனும் சுந்தர். என் அனுபவத்துல பார்த்த வரைக்கும் பொண்ணுங்க கூடவே சுத்தின எவனும் உருப்பிட்டதே இல்லை. காதல் கீதல்னு தடம் மாறி போய்டுவாங்க. உனக்கு நீ சம்பாதிச்சு தான்‌ குடும்பத்தை ஓட்டனும்னு எந்த கட்டாயமும் அவசியமும் இல்லை. ஆனா குடும்பத்துக்கு அவங்க சம்பாத்தியம் முக்கியம்னு இங்க சம்பாதிக்க வந்து காதல்னு தடம் மாறி போய் அது ஒரு தலை காதலா போய், இல்ல காதல் ஃபெயிலியரா போய் வேலைல கவனம் செலுத்த முடியாம ஆன்சைட்ல இருந்து கெட்ட பேரோட இந்தியாவிற்கு போன பலரை நான் பார்த்திருக்கேன். அப்படி நீ ஆகிட கூடாதுனு தான் நான் வந்து சொல்லிட்டு இருக்கேன். நீ புரிஞ்சிப்பனு நினைக்கிறேன்” என்றவாறு அவனின் பதிலுக்கு கூட காத்திருக்காது எழுந்து சென்று விட்டார் ராம்.

‘என்னடா இவரு! வந்தாரு பேசினாரு! போனாரு’ என்பது போல் அவர் சென்ற திசையையே பார்த்திருந்த சுந்தரின் முன்பு வந்தமர்ந்தாள் மதுர நங்கை.

“அங்க யாரை பார்த்துட்டு இருக்க சுந்தர்? எதுவும் அழகான பொண்ணு இருக்குதா?” எனக் கேட்டவாறு அவன் பார்த்து கொண்டிருந்த திசை நோக்கி இவள் பார்க்க, அவளின் மண்டையில் நங்கென குட்டு வைத்தான் இவன்.

“ஸ்ஸ்அஆஆ! ஏன்டா கொட்டின” என அவனை முறைத்தவாறு அவள் தலையை தேய்த்து கொண்டிருக்க,

“நான் இது வரைக்கும் சைட் அடிச்சதே இல்லைனு‌ சொன்னா நம்பனும். உடனே உனக்கு உணர்வே இல்லையா ஃபீலிங்க்ஸ்ஸே இல்லையான்னு பசங்களை மாதிரி நீயும் படுத்தாதே! ஒருத்தன் நல்லவனா இருந்தா.. அது எப்படி அப்படி இருக்க முடியும்னு அவனை சந்தேகப்பட்டு கேலி செஞ்சி ஒரு வழியாக்கி தான்‌ விடுறாங்க. நீயும் அப்படி இருக்காத நங்கை” ஆத்திரத்துடன் ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தான்.

“என்னடா! ஏன் இவ்வளோ கோபம்! நான்‌ சும்மா விளையாட்டா தானே கேட்டேன்” இவள் அவனை சமாதானம் செய்ய முயல,

“ம்ப்ச்” என தலையை அழுந்த கோதி தன்னை நிதானப்படுத்தியவனாய் ராம் வந்து உரைத்து சென்றதை அவளிடம் கூறியிருந்தான்.

“ஓ அவரு ஏற்கனவே உன்னை கடுப்பேத்திட்டு போய்ட்டாரா! இதுல நானும் எரியுற நெருப்புல எண்ணையை ஊத்திட்டேனா” என சிரித்தாள்.

“நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன். கிண்டல் செஞ்சிட்டு இருக்க நீ! அவர் உன்னை தான் என்னமோ லவ் செஞ்சி ஏமாத்துற பொண்ணு மாதிரி சொல்லிட்டு போனாரு. எனக்கு அது தான் செம்ம கடுப்பு! ஏன் பையன் பொண்ணுங்க நட்பாவே இருக்க மாட்டாங்களா?” என அவன் பல்லை கடிக்க,

“அதான் அவர் நாம இரண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு இருக்கும் போதெல்லாம் முறைச்சிட்டு போனாரா!” என்றவள் தொடர்ந்து,

“அட விடு சுந்தர்! அவர் லைஃப்ல அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வச்சு அவர் சொல்றாரு. அப்படி இல்லாம ஆணும் பெண்ணும் உண்மையான நண்பர்களாய் இருக்கிற ஆளுங்களும் உண்டுன்னு நாம வாழ்ந்து காண்பிச்சிட்டு போவோம்” என்றாள்.

காலம் அவர்களுக்காக வைத்திருக்கும் திருப்பத்தை அறியாமல் இருவரும் தாங்கள் வாழ்நாள் முழுவதும் உற்ற தோழமைகளாகவே இருப்போம் என்று தீர்க்கமாய் நம்பினர்.


சுந்தரராஜன் ஜெர்மனி வந்து ஏழு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள், அலுவலகத்தில் அவனது இருப்பிடம் அருகே வந்த நங்கை, “சுந்தர் உங்க வீட்டுல பேசுனியா?” எனக் கேட்டாள்.

ஏதோ தீவிரமான வேலையில் இருந்தவனை அவளின் இந்த கேள்வி கடுப்பேற்ற, “என்ன தான் ஆச்சு உனக்கு? ஏன் தினமும் வீட்டுல பேசிட்டியா! வீட்டுல பேசிட்டியானு கேட்டு டார்ச்சர் செஞ்சிட்டு இருக்க நங்கை! என் வீட்டை பத்தி உனக்கென்ன அக்கறை? நான் பேசுறேன் பேசாம போறேன் அது என் பிரச்சனை! நான் பார்த்துக்கிறேன்! நீ இப்படி தினமும் கேள்வி கேட்குறதை நிறுத்து” சற்று அதட்டலாகவே கூறியிருந்தான் சுந்தர்.

அவளின் கண்கள் கலங்கி போக, அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

அதன் பின்பு அவனின் முழு கவனமும் அவனது வேலையினில் இருக்க, அவனுக்கு கைபேசியில் வந்த அழைப்பினை ஏற்று பேசியவன் அலுவலகத்திற்கு விடுப்பு கூறிவிட்டு அவசரமாய் தனது அறை நோக்கி சென்றான்.

அங்கு பிரேம் பத்துக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கையிலெடுத்து வாயில் போடுவதற்காக பார்த்து கொண்டிருக்க, அவனின் கையை தட்டி விட்டு, “லூசு பயலே! அறிவிருக்கா உனக்கு!” என திட்டிவிட்டு,‌ ‘அய்யோ இவனுக்கு தமிழ் தெரியாதுல’ என தலையில் அடித்து கொண்டவனாய் ஆங்கிலத்தில் திட்ட ஆரம்பித்தான்.

ஆந்திராவை சேர்ந்த பிரேம் மேற்படிப்பு படிப்பதற்காக ஜெர்மனிக்கு வந்தவன்.

“செத்து போறவன் எனக்கு எதுக்குடா போன் செஞ்சி சூசைட் செய்ய போறேன்னு சொன்ன? சிம்பதி கிரியேட் செய்ய பார்க்கிறியா?” என திட்டியவன் அவனை அறைய கை ஓங்கியிருந்தான்.

ஏற்கனவே இரண்டு நாட்களாய் அரைகுறையாய் உண்டு மது அருந்தியிருந்தவனின் உடல் பலம் முழுவதும் இறங்கியிருக்க, இவன் கை ஓங்கியதில் பயந்து பின்னே நகர முனைந்தவன் மயங்கி சரிந்தான்.

பதறி போய் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி அமர வைத்த சுந்தர், அப்பொழுது தான் அவன் உடல் நெருப்பாய் தகிப்பதை உணர்ந்தான்.

“கிளம்பு நீ முதல்ல! உடம்பு நெருப்பா கொதிக்குது! ஹாஸ்பிட்டல் போய்ட்டு வருவோம்” என கூறி கொண்டிருக்கும் போது தான், ‘இங்கு இந்தியா போல் நினைத்த நேரத்துக்கு போக முடியாது! அப்பாய்ட்மெண்ட் வாங்க வேண்டும்’ என மூளை எடுத்துரைத்தது.

பிரேம் கண்களில் நீர் வழிய அமர தெம்பில்லாது படுத்தவாறே இருக்க, அவனை பார்த்து பாவமாகி போனது இவனுக்கு.

அவனருகே அமர்ந்து அவனின் தலைகோதியவன், “ம்ப்ச் ஏன்டா இப்படி இருக்க! வீட்டுல பேசி அம்மா அப்பாவை வர சொல்லவா?” எனக் கேட்டான்.

சுந்தரின் தலைகோதலில் கண் மூடியிருந்த பிரேம், ஏதும் பதில் உரைக்காது அப்படியே உறங்கி போனான்.

மனம் கனத்து போனது இவனுக்கு.
“இப்ப என்ன செய்றது?” என யோசித்த சுந்தர், “முதல்ல இவனுக்கு எதையாவது செஞ்சி கொடுத்து சாப்பிட வைப்போம்! ஹாஸ்பிட்டல் போகவாவது தெம்பு வேணுமே” எண்ணியவனாய் சமையலறைக்குள் சென்றான்.

அந்நேரம் மதிய உணவு இடைவெளியில் இவனை காணாது தேடிய நங்கை, இவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

“ஏன்டா திடீர்னு லீவ் சொல்லிட்டு போய்ட்ட! எதுவும் எமர்ஜென்சியா? என்னாச்சு?” என பதட்டத்துடன் கேட்டாள்.

“நங்கை ஒரு ஹெல்ப்! பக்கத்துல இருக்க ஏதாவது ஹாஸ்பிட்டல்ல ஒரு அப்பாய்மெண்ட் வாங்க முடியுமானு பார்க்கிறியா?” எனக் கேட்டான்.

“என்னாச்சு? உடம்பு எதுவும் முடியலையா சுந்தர்?” என நீங்காத பதட்டத்துடன் அவள் வினவ,

அப்பொழுது தான் அவள் வார்த்தையில் இருந்த பதட்டத்தினை உணர்ந்தவன், “ஹே எனக்கு ஒன்னுமில்ல நங்கை! பிரேம்க்கு தான் உடம்பு முடியலை. ஃபீவர்! அவனுக்காக தான் இப்ப சமைக்க போறேன். அப்படியே அவனுக்கு ஈவ்னிங் அப்பாய்ட்மெண்ட் வாங்கி கொடுத்தீனா ஹாஸ்பிட்டல்ல காண்பிக்கலாம்னு தான் கேட்டான்” என்றான்‌ சுந்தர்.

“எருமை! இதை முதல்லயே சொல்றதுக்கு என்ன! உனக்கு தான் என்னமோ ஆகிடுச்சோனு பயந்து போய்ட்டேன்” என்றவளின் பேச்சில் இங்கு இவன் மென்னகை புரிந்தான்.

“சரி நான் அப்பாய்ட்மெண்ட் வாங்கிட்டு சொல்றேன்! துணியை நனைச்சு நெத்தியில பத்து போடு முதல்ல! அப்புறம் மிளகு போட்டு ரசம் வச்சி கொடு! நான் அம்மாகிட்ட கேட்டு கசாயம் சொல்றேன்” என்று அவள் பேசி கொண்டே போக, “சரி சரி நான் பார்த்துக்கிறேன். நீ அப்பாய்ட்மெண்ட் வாங்கிட்டு சொல்லு” என இணைப்பை துண்டித்தான்.

மாலை ஐந்து மணியளவில் சுந்தர் பிரேமுடன் மருத்துவரை சென்று பார்த்து கொண்டிருந்த நேரம் நங்கையும் அங்கே வந்து சேர்ந்தாள்.

மூவருமாய் இணைந்து அவரவர் படிப்பு வேலை பற்றி பேசியபடி நடந்தவாறே சுந்தர் பிரேம் தங்கியிருந்த இல்லத்தினை அடைய, பிரேம்மை உள்ளே ரெஸ்ட் எடுக்க உரைத்து போக செய்தவன் நங்கையிடம், “வா ஒரு வாக் போகலாம்” என்றான்.

“முடியாது! எனக்கு வேலை இருக்கு” என முகத்தை தூக்கி வைத்து கொண்டு உஷ்ணப் பார்வையுடன் அவள் கூற,

“சாரி நங்கை! காலைல ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்” கண்களை சுருக்கி மன்னிப்பை யாசிப்பவனாய் அவளை நோக்க,

“இந்த சாரி கேட்க இவ்ளோ நேரம் ஆச்சா உனக்கு?” என அவனை முறைத்தவள், “உன் மன்னிப்பை ஏத்துக்கிட்டா எனக்கு என்ன தருவ?” புருவத்தை உயர்த்தியவாறு அவனிடம் குறும்பாய் கேட்டாள்.

“என்ன வேணும்னாலும் கேளு! வாங்கி தரேன்” உடனே அவன் ஒப்புக்கொள்ளவும்,

‘ஆஹா ஆடு தானே தலையை கொடுத்து வசமா சிக்கிருக்கு! பெரிசா எதுவும் கேட்போமா?’ இவள் தாடையில் கை வைத்தவாறு தீவிர சிந்தனையில் இருக்க,

‘அய்யோ ரொம்ப யோசிக்கிறாளே! பெரிசா எதுவும் கேட்குறதுக்கு முன்னாடி கட்டையை போட்டுடா சுந்தராஆஆ’ என தனக்கு தானே கூறிக் கொண்டவனாய்,

“மால்ல இருக்க உனக்கு ரொம்ப பிடிச்ச கடைல பிட்சா, ஐஸ்கிரீம் அண்ட் டோநட் வாங்கி தரேன்! ஓகேவா?” அவளுக்கு பிடித்ததாய் உரைத்து திசை திருப்ப பார்த்தான்.

“சரி சரி உனக்கு ரொம்ப செலவு வைக்க கூடாதேனு ஒத்துக்கிறேன்! சாரி அக்சப்டட்” என்று அவள் ஏதோ போனா போகுது என மன்னிப்பை ஏற்று கொண்டது போல் பிகு செய்ய,

‘எல்லாம் என் நேரம்’ வாய்க்குள் முணங்கியவனாய், “டூ மினிட்ஸ்! அவன் சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுட்டானானு பார்த்துட்டு வரேன்” என்று அவளை வெளியே காத்திருக்க செய்தவன்,

உள்ளே பிரேம் அவனது தாயிடம் வீடியோ காலில் பேசி கொண்டிருப்பதை பார்த்து ஆசுவாச மூச்சை விட்டவனாய், உண்ணுமாறு உரைத்து விட்டு கிளம்பினான்.

நங்கைக்கு பிடித்தமான மாலிற்கு சென்றவர்கள், அங்கிருந்த ஃபுட் கோர்ட்டில் அவளுக்கு பிடித்த பீட்சா, ஐஸ்கிரீம், டோநட்டினை இரண்டு மூன்று கடைகளில் ஆர்டர் செய்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தனர்.

“பிரேம்க்கு என்னாச்சு? ஏன் கண்ணுலாம் வீங்கி இவ்வளோ சோர்வா தெரியுறான். ஹாஸ்பிட்டல்லயே கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்ட!” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் அவன் சூசைட் அடெம்ப்ட் செய்ய டிரை பண்ணான் நங்கை” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.

“அய்யோ” அதிர்ச்சிக்குள்ளானவளாய் இவள் பதற, “ஏன் பரீட்சைல எதுவும் ஃபெயில் ஆகிட்டானா?” எனக் கேட்டாள்.

பிரேம் இளங்கலை மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கிறான். அவன் காண்பதற்கும் ஒல்லியாக பதின் பருவ வயதினர் போன்று இருப்பதால் அவனை பெரியவனாக இருவருமே எண்ணியதில்லை. சுந்தரராஜன் ஜெர்மனி வந்ததில் இருந்தே அவனுடன் பிரேம் தான் தனது அறையை பகிர்ந்து கொண்டிருக்கிறான்.

இவள் சுந்தரை காண செல்லும் சமயங்களில் பிரேமுடன் தம்பி போன்ற உரிமையுடன் தான் உரையாடுவாள்.

நெஞ்சம் அதிர்ச்சியிலும் கவலையிலும் வலித்தது நங்கைக்கு.

“லவ் ஃபெயிலியர்” என்றான் சுந்தர்.

“என்னது லவ் ஃபெயிலியரா?” மீண்டுமாய் அதிர்ந்து போனாள் நங்கை.

“ஆமா நான் இங்க வந்தப்பவே நந்தா இவனை பத்தி சொல்லிட்டு இவன் கிட்ட பேச்சு வச்சிக்காத! நல்ல பழக்கம் எதுவும் கிடையாது இவன்கிட்டனு என்கிட்ட சொல்லிட்டு தான்‌ போனாரு. நாள் ஆக ஆக தான் இவன் ரொம்ப வெள்ளந்தியான மனசார உண்மையான பையன்னு புரிஞ்சிது‌. எனக்கு தெரிஞ்சி இவன்கிட்ட இருந்த ஒரே கெட்ட பழக்கம் சோசியல் டிரிங்கிங்னு அப்பப்ப ஏதாவது பார்ட்டி போய் மைல்ட்டா டிரிங்க் பண்றது தான். அப்புறம் இவன் இங்க வந்த நாள்லருந்தே ஒரு பொண்ணை லவ் பண்றான்னு தெரிஞ்சிது‌. எப்பவும் அந்த பொண்ணு கூட தான் போவான் வருவான். கிட்டதட்ட மூனு வருஷம் லவ்!” என்று இவன் கூறும் போதே,

“அந்த பொண்ணும் தெலுங்கா?” என இடையிட்டாள் இவள்‌.

“ஹ்ம்ம் ஆமா! அந்த பொண்ணு மேல உயிரா இருந்தான். அவங்க காதலை பத்தி நிறைய சொல்லுவான். அந்த பொண்ணு இவங்க காலேஜ் இல்லை. அது வேற கோர்ஸ் வேற இடத்துல படிக்குது. இப்ப அந்த பொண்ணுக்கு இந்தியால வேலை கிடைச்சதும் இவன்கிட்ட இனி என்னை தொந்தரவு செய்யாத, அங்க என் அம்மா அப்பாகிட்டலாம் உன்னை லவ் செய்றேன்னு கூட்டிட்டு போய் காண்பிக்க முடியாது. இதோட நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லிடுச்சாம்”

“ஓ மை கடவுளே! பிரேம்மை இங்க இவளோட பாதுகாப்புக்காகவும் தேவைக்காகவும் யூஸ் செஞ்சிருக்கா! அவளுக்கு இந்தியால வேலை கிடைச்சதும் இவனை கழட்டி விட்டுடாளா?” ஆதங்கத்துடன் கேட்டாள் நங்கை.

“ஆமா அதே தான்! அது வரை சோஷியல் டிரிங்கிங்னு அப்பப்ப குடிச்சிட்டு இருந்தவன் இரண்டு நாளாக மொட குடிகாரன் மாதிரி தண்ணியே கெதினு இருந்தான். இன்னிக்கு போதை தெளிஞ்சதும் சூசைட் செய்ய போறேன்னு எனக்கு போன் செய்தான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? உயிரே போய்டுச்சு நங்கை! லீவ் சொல்லிட்டு பதறியடிச்சிட்டு ரூம்க்கு ஓடி போனேன்.‌ அங்க போனா கையில் தூக்க மாத்திரையை வச்சிட்டு உட்கார்ந்திருக்கான். வந்த ஆத்திரத்துக்கு அறைஞ்சிருப்பேன்‌. பாவமா போச்சு. இவன் சூசைட் செய்ய போறதா என்கிட்ட சொல்லவும் நான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி இவனுக்காக பேசுவேன்னு நினைச்சான்‌ போல! எனக்குனு வந்து வாய்க்கிறீங்களேடானு இருந்துச்சு. நான் அவனோட அம்மா அப்பாகிட்ட பேசிட்டேன். நாளைக்கு வந்து அவனை கையோட இந்தியாவுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டேன். சீக்கிரம் கிளம்புறேன்னு சொல்லிருக்காங்க” என்று பெருமூச்செறிந்தான் சுந்தரராஜன்.

“ஹ்ம்ம் இதுக்கு தான் சோசியல் டிரிங்கிங்னு கூட தண்ணி அடிக்க கூடாதுனு சொல்றது. என்னிக்காவது வாழ்க்கைல கஷ்டமான சூழ்நிலையை ஹேண்டில் செய்ய முடியாம போகும் போது அந்த போதையை தான் மனசு கேட்கும். அப்படி குடிக்காரன் ஆனவங்களைலாம் நான் பார்த்திருக்கேன் நங்கை” தன் மனப்பொருமலை ராஜன் கூறிக் கொண்டிருக்க,

“எனக்கு ராம் சொன்ன மாதிரியே ஒரு இன்சிடென்ட் கண்ணெதிரே நடந்துடுச்சேனு அவர் சொன்னது தான் மைண்ட்ல ஓடுது” என்றாள் நங்கை.

“ஆமா பனமரத்துக்கு கீழே நின்னு இளநீரை குடிச்சாலும் கள்ளுனு நினைப்பாங்கல. அதே மாதிரி தான் நீயும் நானும் இந்த கால சூழல்ல பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்ஸா தான் பழகுறோம்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க” என்றான் ராஜன்.

இவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் தயாராகி இருக்க, இவர்கள் சென்று அதனை எடுத்து வந்து தங்களது இடத்தில் உண்ண தொடங்கினர்.

“இந்த காதல் எப்படி எவ்ளோ தைரியமானவங்களையும் கோழையான‌ முடிவை எடுக்க வச்சிடுது பாரேன். பிரேம் எவ்ளோ ஸ்ட்ராங் பெர்சன். எப்பவும் சிரிச்சிட்டே கிண்டல் கேலி செய்துட்டு எவ்ளோ ஜாலியா சுத்திட்டு வருவான். அவனுக்கு எவ்ளோ லட்சியங்கள் இருக்கு. அவனா இப்படி தற்கொலை முடிவை எடுத்தான்னு நம்பவே முடியல சுந்தர்” நம்ப முடியாத பாவனையில் மனதின் ஆதங்கத்தினை கூறி கொண்டிருந்தாள் நங்கை.

“அதை காதலிச்சவங்க கிட்ட தான் கேட்கனும்” என சிரித்த சுந்தர், “உனக்கு என்ன ஆசை நங்கை? லவ் மேரேஜ் ஆர் அரேஜ் மேரேஜ்?” எனக் கேட்டான்.

“எதுவா இருந்தாலும் ஒருத்தரையே காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கனும். ஒருவனுக்கு ஒருத்தியை போல ஒருத்திக்கு ஒருவனாக இருப்பவனா இருக்கனும். அது லவ்வா இருந்தாலும் சரி அரேஜ்ட்டா இருந்தாலும் சரி எதுனாலும் ஓகே” என்றாள்.

“உனக்கு?” எனக் கேட்டாள் நங்கை.

“எனக்கு என் அண்ணா தங்கை பார்த்து வைக்கிற பொண்ணை தான் கட்டிக்கனும்னு காலேஜ் முடிக்கிற வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன். இப்ப அவங்களே என் குடும்பம் இல்லனு ஆனப்பிறகு நானே எனக்கு பிடிச்ச பொண்ணை பார்த்து கட்டிக்க வேண்டியது தான்” என்றான்.

“குடும்பமே இல்லாம அவனவன் கஷ்டப்பட்டுட்டு இருக்கும் போது, உனக்குனு ஒரு குடும்பம் அதுவும் எவ்ளோ பாசமா உன்னை வளர்த்திருந்தா இப்ப வரைக்கும் அவங்களை நினைச்சிக்கிட்டு கவலைப்பட்டுட்டு இருப்ப! அப்படியான குடும்பத்தை இப்படி முரட்டடியா ஒதுக்கி வைக்கிறது சரியில்லைன்னு தான் நான் சொல்வேன். அதனால் தான் நீயே சமாதானமாகி பேசிடுனு தினமும் உன்னை பேச சொல்லி வற்புறுத்திட்டு இருக்கேன். சரி தெரியாம தான் கேட்குறேன், அப்படி என்ன தான் உனக்கும் உங்க அண்ணனுக்கும் பிரச்சனை?” எனக் கேட்டாள்.

ஆழ்ந்த மூச்சை வெளியே விட்டவனாய் குடும்பத்துடனான தனது விலகலுக்கான காரணத்தை கூறலானான்.

எதற்காக நங்கை இவனின் குடும்பத்துடன் இவனை சேர்த்து வைக்க முனைகிறாள் என தெரிய வந்த போது நெகிழ்ந்து போனான் சுந்தரராஜன்.