நனிமதுர நங்கை 3


“சுந்தர்! ஒரு ஹெல்ப்” என்றவாறு அவனமர்ந்து இருந்த இருக்கையின் அருகில் வந்து நின்ற நங்கையை கண்ட மேத்யூ,

“ஹாய் நங்காய்” என்றவர் தொடர்ந்து, “எனக்கு சுந்தர் உன் பேருல ஒரு பாட்டு சொல்லி கொடுத்தானே” என ஆங்கிலத்தில் உரைத்து அதை நினைவுக்கூற முற்பட்டவராய் தலையில் தட்டினார்.

“ஹான் ஐ காட் இட்” என்றவர்,

“நங்காய் நிலாவி தங்காய்! ஆவா ஏ தோசி ஆவா” என தலையை ஆட்டியவாறு அவர் வாயில் வந்த வார்த்தைகளை வைத்து ஆர்வமாய் பாட, பற்களை கடித்தவாறு சுந்தரை தீயாய் முறைத்திருந்தாள் மதுர நங்கை.

அவளின் முறைப்பினில் இவன் சிரிக்க, “உன் வேலை தானே இது” என்றவாறு அவன் முதுகில் நான்கடிகள் இவள் போட, மேத்யூ வந்து தடுக்க, அச்சமயம் இவர்களை முறைத்தவாறு கடந்து சென்றார் நாற்பது வயதான இந்தியர் ராம்.

ராமை கண்டதும் சுந்தரை அடிப்பதை நிறுத்தியவள், “என்னவாம் இவருக்கு? எப்ப பார்த்தாலும் நம்மளை முறைச்சிக்கிட்டே போறாரு” என சுந்தரிடம் பொரிந்தாள்.

நங்கையின் முக உணர்வுகளை கண்ட மேத்யூ, “சாரி நான் உன்னை ஹர்ட் செஞ்சிட்டேனா?” என ஆங்கிலத்தில் மன்னிப்பு கோர,

“நோ நோ நோ மேத்யூ! நான் இந்த சுந்தர் மேல தான் கோபமா இருக்கேன்” என்று மேத்யூவிடம் சில நிமிடங்கள் இயல்பாய் பேசிவிட்டு சுந்தர் பக்கம் திரும்பியவள்,

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் சுந்தர்” என்றாள்.

“என்னாச்சு! ஏன் முகம் வாட்டமா இருக்கு!” எனக் கேட்டான் சுந்தர்.

“வா பேன்ட்ரில பேசலாம்” என காபி அருந்தும் இடத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்த மேஜையில் சுந்தருடன் அமர்ந்தாள் நங்கை.

“எனக்கு ஒரு இஷ்யூ சம்பந்தமா ஒருத்தர்கிட்ட சர்வர் ரிலேடட் டீடெய்ல்ஸ் சிலது வாங்க வேண்டியது இருக்கு. வாங்கி தர்றியா சுந்தர்?” எனக் கேட்டாள்.

“ஏன் நீயே வாங்க வேண்டியது தானே! என்னை ஏன் கேட்க சொல்ற?” என புரியாமல் சுந்தர் கேட்க,

“அந்தாள் பேச்சே சரியில்லை சுந்தர்!” என முகத்தை சுழித்தாள் நங்கை.

“அப்படி என்ன பேசினான்? தப்பா எதுவும் பேசினானா? யாரவன்? எங்க இருக்கான்?” என சற்று ஆக்ரோஷமாய் கேட்டான் சுந்தர்.

“அவன் லண்டன்ல இருக்கான்‌ சுந்தர். ஆபிஸ் சம்பந்தமான வேலைக்கு தான் முன்னாடி ஒரு தடவை ஆபிஸ் ஸ்கைப்ல சாட் (chat) செஞ்சி டீடெயில்ஸ் கேட்டேன். அதை உடனே கொடுத்துட்டான். அதுக்கு பிறகும் இரண்டு மூனு நேரம் இப்படி கேட்கும் போதெல்லாம் உடனே ஹெல்ப் செஞ்சான். அதனால அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்துச்சு. என் பெயரை பார்த்துட்டு தமிழானு கேட்டான். ஆமானு சொல்லி அவன் என்ன ஊரு? நான் எந்த ஊருனு அப்படியே எங்க சாட் போச்சு. நானும் அவன் லண்டன்ல இருக்கிறதால தமிழ் ஆள் ஒருத்தர் கிடைக்கவும் நம்மூருங்கிற பாசத்துல என்கிட்ட பேசுறான்னு அவன் கேட்டதுக்குலாம் பதில் சொல்லிட்டு இருந்தேன். இங்க எங்க தங்கியிருக்கீங்க யார் கூடனுலாம் கேட்டவன், பையன் கூட ஒரே ரூம்ல தங்கியிருக்கீங்களானு கேட்டான்” என உள்ளே போன‌ குரலில் நங்கை கூறியதும்,

“ஹௌ டேர்!” என கோபமாய் மேஜையை கையால் தட்டினான் சுந்தர்.

“அவனோட அக்கா தங்கச்சி வெளியூர்ல யார் கூட எப்படி தங்கியிருப்பாங்களோ அப்படி தான் நானும் தங்கியிருக்கேன்னு சொல்லிருக்க வேண்டியது தானே” என கத்தியவன் தன்னை சமன்படுத்தியவனாய்,

“சரி நீ என்ன சொன்ன அதுக்கு?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் அவன் அப்படி கேட்டதும் தான் அவன் என்கிட்ட பேசின இன்டன்ஷனே எனக்கு புரிஞ்சிது சுந்தர். அதுக்கு பிறகு நான்‌ ரிப்ளை பண்ணலை. பிளாக் செஞ்சிட்டேன்” என்றாள்.

“அதுக்கு பிறகு ஆபிஸ் வேலையா கூட அவனை கான்டேக்ட் செய்ற மாதிரி சூழல் வரவே இல்லை. ஆனா இன்னிக்கு ஒரு அர்ஜன்ட் இஷ்யூவை சால்வ் செய்ய அவன்கிட்ட இருந்து சில டீடெயில்ஸ் எனக்கு கண்டிப்பா தேவை! அவன்கிட்ட பேசி எனக்கு வாங்கி தர்றியா சுந்தர்” என்றவள்,

“அவன்கிட்ட சண்டை கிண்டை போட்டு வச்சிடாதடா! நமக்கு வேலை முடியனும்” என்று அவள் அவனை அமைதிப்படுத்த,

“உனக்கு தேவையான டீடெய்ல்ஸ் உன்னை வந்து சேரும்” என்று அவளிடம் உரைத்தவன், ‘அதுக்கு பிறகு அவனை என்ன‌ செய்றேன்னு பாரு’ என வாய்க்குள் முணங்க,

அது அட்சரம் பிசகாமல் அவளின் செவியில் விழ, “இப்ப மட்டும் இல்ல சுந்தர்! எப்பவுமே அவன்கிட்ட நமக்கு வேலை இருக்கு! அதனால அடக்கி வாசி! அதுவும் இல்லாம லண்டன்ல இருக்கிறவனை நீ என்ன செய்ய முடியும்” என கேட்டாள்.

“என்ன செய்ய முடியும்னு செஞ்ச பிறகு தெரியும் உனக்கு” என தனது இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான் சுந்தர்.

அவளுக்கு தேவையான விவரங்களை அவனிடம் கேட்டு வாங்கி கொடுத்த சுந்தரின் மனமோ உலைக்களமாக கொதித்தது.

‘இங்க வெளிநாட்டுல நம்மூரு ஆளுங்க இருங்காங்களே, தமிழ் ஆளு ஒரே ஊருனு நம்பி தானே நங்கை என்கிட்ட பேசி பழக ஆரம்பிச்சா! இதே மாதிரி அவன்கிட்டயும் லண்டனுக்கு புதுசா போகும் தமிழ் பொண்ணுங்க அவன் தமிழ் ஆளுனு நம்பி பேசினா எந்த மாதிரி பேசி ஏமாத்துவான் இவன்! இவனைலாம்’

தனக்குள் பேசியவாறு தன்னுள் எழுந்த ஆத்திரத்தை அடக்க முற்பட்டவாறு அமர்ந்திருந்த ராஜனிடம் வந்த நங்கை மதிய உணவு உண்ண அழைத்தாள்.

உணவுண்ணும் இடத்திற்கு சென்றவர்கள் இருவர் அமர கூடிய வகையில் இருந்த மேஜையில் சென்று அமர, தான் எடுத்து வந்திருந்த சிறிய தட்டில் அவனுக்கான உணவினை எடுத்து வைத்தாள் நங்கை.

இவள் தங்கியிருந்த வீட்டிலேயே தனக்கான மதிய உணவை சமைத்து எடுத்து வருபவள், ராஜனுக்குமாய் சேர்த்து எடுத்து வருவதை வழக்கமாக்கி இருந்தாள்.

அவனின் கவனம் உணவில் இல்லாமல், அவன் கொறித்து கொண்டிருப்பதை கண்ட நங்கை, “என்னடா சாப்பிடாம பலத்த யோசனைல இருக்க! உனக்கு பிடிக்கும்னு தான் உருளைக்கிழங்கு செஞ்சி எடுத்துட்டு வந்தேன். ஒழுங்கா காலி செய்ற மவனே” என்றாள்.

“ஏன் நங்கை எப்படி இந்த பெண்ணுங்கலாம் சட்டு சட்டுனு இந்த ஆம்பளைங்களை நம்பிடுறீங்க? இப்ப என்‌ இடத்துல அந்த லண்டன்காரன் இருந்திருந்தா தமிழ் ஆளுனு அவனை நம்பி பேசி பழகியிருப்ப தானே” என இவளும் நம்பி ஏமாந்து போயிருப்பாளோ என மனதில் எழுந்த ஆதங்கத்தில் அவன்‌ கேட்டிருக்க,

“என்னை பார்த்தா எப்படிடா தெரியுது உனக்கு! தமிழ் ஆளுனு யார் சொன்னாலும் அவங்க கூட ஈஈஈனு இளிச்சிட்டு பேசுற ஆளு மாதிரி தெரியுதா?” என புசுபுசுவென மூச்சு வாங்க கோபமாய் அவனின் கேள்விக்கு எதிர்வினையாற்றி இருந்தாள் நங்கை.

அவளின் கோபத்தில் தான் கேட்டது இத்தனை அபத்தமான கேள்வி என்று அவனுக்கு விளங்கியது.

“அய்யோ நங்கை நான் அப்படி நினைச்சு கேட்கலைம்மா! உன்‌ பாதுக்காப்பு பத்தி நினைச்சிட்டு இருந்ததுல வந்த கேள்வி அது” என அவன் விளக்கம் கூறியும் மலையிறங்காது முறைத்தவள்,

“இனி என்கிட்ட பேசாத” என்றவாறு உணவு கூட உண்ணாது எழுந்து சென்று விட்டாள்.

“ம்ப்ச்” என தன் தலையில் தானே அடித்து கொண்டான் ராஜன்.

அதற்கு பிறகு அவள் அவனிடம் பேசவே இல்லை. மறுநாள் அவளிடம் இருந்து வழமையாய் வரும் குட் மார்னிங் வரவில்லை.

அலுவலகத்தை அடைந்ததும் அவளது இருக்கைக்கு சென்ற சுந்தரை காலியான இருக்கையே வரவேற்றது. அடுத்து அவன் தனது அலுவல் வேலையில் சுற்றம் மறந்து ஈடுபட்டிருக்க, தேநீர் அருந்தும் வேளையை தாண்டி நேரம் சென்ற பிறகும் அவள் வந்து அவனை அழைக்கவில்லை.

மதிய உணவு வேளையில் கூட அவள் தன்னிடம் வராது இருக்கவும் அவளின் எண்ணிற்கு அழைத்தான். அது ஏற்கப்படாமல் போக, காலையிலும் உண்ணாது இருந்தது பசி வயிற்றை கிள்ளியது.

மேத்யூ அவனிடம் நங்கை அளித்ததாய் உரைத்து உணவு டப்பாவை அவன் கையில் திணித்தார். உடனே அவள் இருக்கைக்கு சென்று பார்க்க, அவள் அங்கே இல்லை. கேண்டீனில் அவளை தேடி அலைந்தவன் பசியால் வாடிய வயிறை கவனிக்கலானான். அன்றைய நாள் முழுவதும் அவன் கண்களில் அவள் சிக்கவில்லை. அவன் ஓய்வறைக்கு சென்ற நேரமாய் பார்த்து அந்த உணவு டப்பாவை எடுத்து சென்றிருந்தாள். இரவு குட் நைட் எதுவும் வரவில்லை. அவன் அனுப்பியதற்கும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

அடுத்து வந்த நாட்களிலும் அவள் இந்த கண்ணாமூச்சியே ஆட, அவளுடனான முதல் ஊடலில் மனம் வெகுவாய் தவித்து போனது அவனுக்கு.

ஆயினும் ‘பேசலைனா போய்ட்டு போறா’ என அவனும், ‘போடா உனக்கே அவ்ளோ இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்’ என்று அவளும் முகத்தை திருப்பி கொண்டு அந்த வாரம் முழுவதும் சுற்றி திரிந்தனர். அவள் மதிய உணவு வழங்குவதை நிறுத்தவும் இல்லை. அவன் அதை உண்ணுவதையும் நிறுத்தவில்லை.

சனிக்கிழமை காலை இந்தியாவில் இருந்த இவளது பிராஜக்ட் தோழி அழைத்து கூறிய செய்தியில், அவன் மீதிருந்த கோபங்கள் அனைத்தும் காணாமல் போக, அவனறை நோக்கி விரைந்து சென்றாள் நங்கை.

— தொடரும்