நனிமதுர நங்கை 29 (நிறைவு)

அந்த இரவு நேரத்தில் சாலையின் ஓரத்தில் பேருந்து நிற்க, அன்றிரவு உண்டதை எல்லாம் வாந்தி எடுத்து கொண்டிருந்தாள் நங்கை.

அவளருகே நின்று குடிக்க நீரளித்து உதவி புரிந்து கொண்டிருந்தான் ராஜன்.

அவனருகே நின்றிருந்த நடத்துனர், “என்ன சார்! பொஞ்சாதி மாசமா இருக்காங்களா?” எனக் கேட்டார்.

ராஜன் பதில் கூற வரும் முன்பே, “அப்புறம் ஏன் சார் மேலே சீட் புக் செஞ்சீங்க! கீழ நிறைய சீட் தான் ஃப்ரீயா இருக்கே! அங்கேயே புக் பண்ணிருக்கலாம்ல! அதான் மேடமுக்கு ஒத்துக்காம வாந்தி எடுக்குறாங்க” என்று அவராகவே பேசிக் கொண்டிருந்தவர், அவர்கள் இருவருக்கும் கீழுள்ள இருக்கையை மாற்றியளித்தார்.

மீண்டுமாய் பேருந்து இயங்க தொடங்கவும், கீழே கொடுக்கப்பட்ட இருக்கையில் சோர்வாய் அமந்திருந்த நங்கையிடம், “நைட் அந்த ஹோட்டல்ல சாப்பிட்டது ஒத்துக்கலையா நங்கை?” எனக் கேட்டான்.

“எனக்கு தான் பச்சை வெங்காயம் பிடிக்காது ஒமட்டும்னு தெரியும்ல” என்றாள் அவள்.

“வெங்காயமா?” என யோசித்தவன், “நீ எங்க வெங்காயம் சாப்பிட்ட? இட்லி தானே சாப்பிட்ட! நான் தான் பராத்தாக்கு வெங்காயம்…” எனக் கூறிக் கொண்டவனுக்கு அவளின் வாந்திக்கான காரணம் புரிபட வெட்கச்சிரிப்புடன் அவனின் நெற்றியில் அடித்து கொண்டான்.

அவனது பாவனையில் வாய்விட்டு சிரித்திருந்தாள் இவள்‌.

விடியற்காலை வேளையில் சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டை வந்தடைந்ததும், “கல்யாணம் முடிஞ்சி முதல் முறையா குடித்தனம் நடத்தப்போற வீட்டுக்குள்ள போறோம்! இந்திய கல்சர்ல ஆரத்தி எடுக்க தான் ஆளில்லை! ஃபாரீன் கல்சர் மாதிரி..” என்று முடிக்காது நிறுத்தியவன் அவளை கைகளில் ஏந்தியிருந்தான்.

“ரொம்ப வெயிட்டா இருப்பேன்டா!  முதுகு வலிக்க போகுது” என்று அவள் அலற, கதவை இடித்து தள்ளி திறந்தவாறு உள்ளே தூக்கி சென்றவன், கதவை காலால் தள்ளி மூடினான். அவளின் கையால் தாழ்ப்பாள் போட வைத்தான். அவளை தூக்கிக்கொண்டு அனைத்து அறைகளிலும் அவளின் கைக்கொண்டே ஸ்விட்ச்சை போட வைத்தவன், மெத்தையில் அவளை தொப்பென போட்டு தானும் அவளருகே விழுந்திருந்தான்.

“அம்மாஆஆஆ” என இடுப்பை இடமும் வலமுமாய் திருப்பியவனை பார்த்து எழுந்தவள், “எங்கேயும் வலிக்குதா என்ன?” அவனது இடுப்பை அழுத்தமாய் பிடித்து விட்டபடி கேட்டாள்.

அவளை பார்த்து மென்னகை புரிந்தவாறு இல்லையென தலையசைத்தவன், “உன்னோட இந்த கேரிங் தான் என்னை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு பப்ளிமாஸ்” என்றவன் அவளின் கைப்பிடித்து மெத்தையில் அவளுடன் அமர்ந்தான்.

“நான் ஜெர்மனில தனியா ஹோட்டல்ல உட்கார்ந்திருந்தப்ப என்கிட்ட வந்து பேசினது ஞாபகம் இருக்கா” எனக் கேட்டான்.

ஆமென அவள் தலையசைக்க, “சும்மா ஆபிஸ்ல கூட வேலை பார்க்கிறவன் தானேனு போகாம, நான் கவலையா இருக்கிறதை பார்த்துட்டு சாப்பிட வைச்சே ஆகனும்னு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் நம்மூரு சாப்பாடு சாப்பிட வச்ச! அன்னிக்கு உன் மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் வந்துச்சு. ஆயுளுக்கும் உன்னோட நட்பை விட்டுட கூடாதுனு தோணுச்சு! அப்புறம் எப்படி காதல் வந்துச்சுனுலாம் தெரியலை! ஆனா நீ எப்பவும் என் கூட இருந்தா போதும் நான் சந்தோஷமா இருப்பேன்னு புரிஞ்சிது” என்றான்.

“ஓவர் ஐஸ் வைக்காத! ஜலதோஷம் வந்துட போகுது” அவனின் தலை முடியை கலைத்து விட்டவள், “நான் குளிச்சிட்டு வரேன்” என்றவாறு குளியலறைக்குள் புகுந்தாள்.

அவள் வெளியே வரவும் இவனும் சென்று குளித்து விட்டு வர, இவள் இலகுவான உடைக்கு மாறி படுத்திருந்தாள்.

இவனும் உடை மாற்றி அவளருகில் அமர, “எனக்கு ஒரு சந்தேகம்!” என்றவாறு எழுந்து அமர்ந்தாள்.

“என்ன சந்தேகம்?” என்று கேட்டான்.

“என்கிட்ட உன் லவ்வே சொல்லாம எந்த நம்பிக்கைல என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்ட? ஐ மீன் எனக்கு உன் மேல லவ் வரும்னு அப்படி என்ன‌ நம்பிக்கை உனக்கு?” எனக் கேட்டாள்.

“உன்னை விட உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் நங்கை! நான்னு இல்லை நீ யாரை கல்யாணம் செஞ்சிருந்தாலும் அந்த கல்யாணம்ன்ற கமிட்மெண்ட்க்கு நீ உண்மையா இருக்க தான் முயற்சி செஞ்சிருப்ப! அந்தந்த உறவுக்கான மரியாதையை தரனும்னு உன்னை மாத்திக்க தான் முயற்சி செஞ்சிருப்ப! அவங்களோட இணைஞ்சு வாழ தான் பார்த்திருப்ப! அது தான் உன் நேச்சர்! அதனால் தானே இத்தனை வருஷமா கல்யாணத்தை தள்ளிப்போட்ட! அதுவும் நான் எனும் போது உனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தானே! என்ன, நட்பை தாண்டி இணக்கமாக உனக்கு நேரம் ஆகுமோனு தான் யோசனையா இருந்துச்சு! நேத்து எனக்காக என் காதலுக்காக நீ என் செயலுக்கு உடன்பட்டாலும், உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறியோனு ரொம்பவே பார்த்து பார்த்து தான் கையாண்டேன் ஆனா என் தொடுகையில சிலிர்த்து உருகி கரைஞ்சடா பப்ளிமாஸ்” அத்தனையாய் ரசித்து அவன் கூறியதை கேட்டு உடலில் புல்லரிக்க வெட்கத்தில் முகம் சிவக்க, “ச்சீ போடா” என அவன் மார்போடு தனது முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளின் வெட்கத்தில் வாய்விட்டு சிரித்தவனாய், “மேரேஜ் செய்யும் போது நீ என்னை லவ் பண்ணலைனாலும் உன்னோட அன்பும் கேரிங்கும் எனக்கு எப்பவும் கிடைச்சா போதும்னு தான் நினைச்சேன் பப்ளிமாஸ்” என்றவாறு அவளின் தோளில் சாய்ந்து கொண்டான்.

ஒரு நிமிடம் இருவரும் மற்றவரின் அணைப்பில் கட்டுண்டு இருக்க,

“சரி வா! நேத்து விட்டதுல இருந்து கன்டினியூ செய்வோம்” என்று அவளை படுக்கையில் சாய்த்தான் அவன்.

“என்னது நேத்து விட்டியா? எங்கடா விட்ட?” என்று அவள் கூறி முடிக்கும் முன்பே இதழ்களை ஸ்பரிசித்திருந்தான்.

அவனின் முகத்தை தனது முகத்தில் இருந்து தள்ளியவள், “டேய் திரும்ப வாந்தி எடுத்தேன்னா, அதுக்கு நீ தான்டா காரணம்” என்று கூற,

“இனி நீ எப்ப வாந்தி எடுத்தாலும் அதுக்கு நான் தான் காரணமா இருக்கனும் பப்ளிமாஸ்” என்று கண் சிமிட்டி சிரித்தவன் அவளது கழுத்தினில் முகத்தை புதைத்தான்.

அவனின் மீசை குறுகுறுப்பூட்டி அவளது உடலெல்லாம் சிலிர்க்க செய்ய, அவனின் உச்சி முடியை பிடித்து தூக்கினாள்.

“ஆஆஆஆஆ! அடியே! அப்படி என்ன தான் என் முடி மேல உனக்கு கோபம்” என்று தலையின் மேல் இருந்த அவளது கையினை எடுத்து விட்டான்.

தனது முகத்தருகே இருந்த அவனது முகத்தை பார்த்தவள், “உன் முடி மேல கோபமில்லை பக்கி! உன் மீசை மேல தான்” எனச் சொல்லி அவனது மீசையை இழுத்திருந்தாள்.

“ஆஆஆ ராட்சசி! ஏன் இப்படி இழுக்கிற” என மீசையிலிருந்த அவளின் கையை தட்டி விட,

“எரியுதுடா” என கழுத்தில் அவன் புதைந்த இடத்தினை அவள் சுட்டிக் காண்பிக்க, நன்றாக சிவந்திருந்தது அந்த இடம்.

“அச்சோ ஏன் இப்படி ஆகியிருக்கு!” அந்த இடத்தில் ஊதிவிட்டவாறு அவன் கேட்க,

“எல்லாம் நேத்து நீ செஞ்ச வேலை தான்” உள்ளே போன குரலில் கூறினாள்.

“சரி அப்ப இன்னிக்கு அந்த பக்கம்” என அவளின் முகத்தை திருப்பி மறுபுறமாக கழுத்தில் உரச, அவனை தள்ளி விட்டவள், “கொன்றுவேன்! இன்னிக்கு ஒன்னும் கிடையாது! ஒழுங்கா தூங்கு” என்றாள்.

நீண்ட பெருமூச்செறிந்தவனாய், “சரி தூங்கு” என்றவன் அவளருகே கண்களை மூடியவாறு படுத்துக் கொண்டான்.

சில நொடிகள் கழித்து கோபித்துக் கொண்டானோ என எட்டி பார்த்தவள் அவன் புறமாக திரும்பி படுத்தவாறு, “என்னடா டிஸ்அப்பாய்ண்ட் செஞ்சிட்டேனா?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் மென்னகை புரிந்தவனாய், “எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு! வாந்தி வேற எடுத்திருக்க! டயர்ட்டா இருக்கும்” என்றவாறு அவளை அணைத்து தட்டி கொடுத்தான்.

அவளுக்கு கண்கள் கலங்கி போனது. அவனின் அணைப்பிற்குள்ளேயே அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்னு கடவுள் என்னை உன்கிட்ட தூக்கி கொடுத்துட்டாரு போலடா!” இதழில் சிரிப்பும் கண்களில் நீருமாய்  அவனிடம் உரைத்திருந்தாள்.

அவளின் கண்களில் முத்தமிட்டவன், “நான் தான் அவபட்ட கஷ்டமெல்லாம் போதும் என்கிட்ட கொடுத்துடுங்க பொக்கிஷமா பார்த்துக்கிறேன்னு கேட்டு வாங்கிட்டேன்” என்று சிரித்தபடி கூறியவாறு நெற்றியில் முட்டினான்.

“எப்படி பேசினாலும் சிக்ஸர் அடிக்கிறடா! இந்த ரொமேண்டிக் ராஜன் எனக்கு ரொம்பவே புதுசு! ரொம்ப பிடிச்சிருக்கு கூட” என்று அவன் கன்னத்தை வருடியவாறு உரைத்தாள் நங்கை.

“வேண்டாம்னு தூங்க போனவனை உசுப்பேத்திட்டு இருக்க நீ” என தனது கன்னத்தில் இருந்த அவளின் கையை எடுத்தவன்,

“தூங்கு” என்று தனது மார்ப்போடு அணைத்து தட்டியவாறு உறங்க செய்தான்‌.

மறுநாள் காலை, “சரிப்பா! ஓகேப்பா” என்ற ராஜனின் பேச்சினை கேட்டவாறே விழித்த நங்கை, தனது நெற்றியில் இருந்த ஈர துணியை எடுத்து பார்த்து, ‘நெத்தில இது எப்படி வந்துச்சு?’ எண்ணியவாறே உடலை அசைக்க, அங்கமெல்லாம் வலி பின்னியெடுத்தது.

ராஜன் கைபேசியை வைத்து விட்டு இவளருகே வர, கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.

அவளது கழுத்தினில் நெற்றியில் கை வைத்து பார்த்தவன், “இப்ப பரவாயில்ல” என்றான்.

“என்னாச்சு? ஜூரம் அடிச்சிதா என்ன?” எனக் கேட்டாள்.

“அடிப்பாவி ஜூரம் அடிக்கிறது கூட தெரியாம தான் தூங்கிட்டு இருந்தியா? காலைல எழுந்திருக்கும் போது என் கைக்குள்ள ஒரே அனலு! என்னனு பார்த்தா உன்‌ உடம்பு கொதிச்சு கிடந்துச்சு! உன்னை எழுப்பி பால் கொடுத்து மாத்திரை கொடுத்து, நெத்தியிலே பத்து போட்டு படுக்க வச்சேன். எதுவுமே ஞாபகம் இல்லையா?” எனக் கேட்டான்.

உதட்டை பிதுக்கியவள், “என்னமோ கனவு கண்டா மாதிரியே இருக்கு! நல்ல தூக்கத்துல எழுப்பிருப்பியா இருக்கும்” என்றாள்.

“பஸ் டிராவல் உனக்கு ஒத்துக்காதா என்ன?” என்றவன் கேட்க, “அப்படிலாம் இல்ல! என்னமோ தெரியலை உடம்பெல்லாம் வலி! அதோடயே கோவிலுக்கு போயிட்டு அப்படியே பஸ்ல ‌டிராவல்னு நாள் முழுக்க அலைச்சலாவே இருந்தது இப்படி ஆகிடுச்சு போல” என்றவள் கூறவும்,

“ஓ அப்ப நான் தான் காரணமா” என்று நெற்றியில் தட்டிக் கொண்டவனை பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டாள் அவள்.

அவள் ரிப்ரெஷ் ஆகி வர, சூடாக கஞ்சியை எடுத்து வந்து ஆற வைத்து கொடுத்தான்.

“நீ சாப்பிட்டியா?” என்றவாறே அவள் கஞ்சியை சாப்பிட, “இதோ” என தனக்காக இன்னொரு கிண்ணத்தில் கஞ்சியை எடுத்து வந்து உட்கார்ந்தான்‌‌.

“ம்ப்ச் இன்னிக்கு அங்கிருந்திருந்தா உனக்கு கிடா விருந்து வடை பாயாசம் சாப்பாடுலாம் கிடைச்சிருக்கும்ல! என்னால இங்க வந்து இப்படி சமைச்சிக்கிட்டு கஷ்டப்படுற” என்று கவலையாய் அவள் உரைக்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை! கண்டதையும் நினைச்சு கவலைப்பட்டுக்காத! வீடு பார்த்ததும் வீட்டு வேலைக்கும் ஆள் பார்த்துட்டேன்! இன்னிக்கு வர சொல்லி காலைலயே ஃபோன் செஞ்சி சொல்லிட்டேன். அவங்க வந்து கிளீன்‌ பண்ணிடுவாங்க. மதியத்துக்கு சிம்பிளா ஏதாவது செஞ்சிடுறேன் இல்ல வெளிலனாலும் வாங்கிக்கலாம்” என்றவன் கூறியதும்,

“இல்ல நான் செஞ்சி தரேன். முதல் நாள் வீட்டுல விளக்கேத்தி பால் காய்ச்சி ஒன்னும் செய்யாம இப்படி படுத்துக் கெடக்கேன்! அத்தைக்கு தெரிஞ்சா என்னை பேய் ஓட்டுவாங்கல” எனக் கூறி அவள் சிரிக்க, உடன் சேர்ந்து சிரித்தவன்,

“காலைலயே அப்பா ஃபோன் செஞ்சாங்க!” என்றான்.

“யாரு மாமாவா?” என ஆச்சரியமாக கேட்டவள்,

“யூஸ்வலா மாமா உங்கிட்ட ஃபோன்ல பேச மாட்டாங்க தானே” எனக் கேட்டாள்.

ஆமென தலையசைத்தவன், “உன்னால தான் நானும் அப்பாவும் நெருக்கமாகி இருக்கோம்” என்றான்.

“என்னது என்னாலயா? எப்படி?” என்றவள் கேட்க,

“கல்யாணத்துக்கு விருப்பமானு அப்பா ஃபோன் செஞ்சி கேட்டப்ப என் காதலை பத்தி அப்பாகிட்ட சொன்னேன்‌” என்றவன் கூறியதும்,

“என்னடா ஷாக் மேல் ஷாக்கா கொடுத்துட்டு இருக்க” என்றவள்,

“மாமா என்ன சொன்னாங்க?” எனக் கேட்டாள்.

“முன்னாடியே சொல்லிருந்தா இந்நேரம் கல்யாணத்தையே முடிச்சிருப்பேனேனு சொன்னாங்க” என்றதும், “அப்படியா! மாமா லவ் மேரேஜ்க்கு எதிர்ப்பு கிடையாதா?” எனக் கேட்டாள்.

“ஹே எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ் தான்! உனக்கு தெரியாதா?” எனக் கேட்டான்‌.

தெரியாது என தலையசைத்தவள், “சரி இதனால எப்படி நீங்க நெருக்கமானீங்க?”‌ எனக் கேட்டாள்.

“எனக்கு இந்த பொண்ணுக்கூட கல்யாணம் செஞ்சி வைங்கப்பா! சந்தோஷமா இருப்பேன்னு சொன்னேன்‌. அந்த குடும்ப பிரச்சனைக்கு பிறகு ஒதுங்கியே இருந்தவன் இப்ப இப்படி கேட்கவும் அவரோட குரல் கமறிப்போச்சு. ரொம்ப வருஷம் கழிச்சி பையன் தனக்கிட்ட ஒன்னு கேட்டிருக்கான். செஞ்சி கொடுக்கனும்ன்ற உத்வேகம் அவரோட குரல்ல தெரிஞ்சிது!

அன்னிலருந்து அம்மாவை சமாளிக்கிறது அப்பா தான்! இந்த கல்யாணம் எந்த காரணத்தை கொண்டும் நின்னுட கூடாதுனு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சாங்க அப்பா! அதான் பெரியம்மா குடும்பம் வரது பத்தியும் பெரிசா எடுத்துக்கலை. பையனுக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சி நல்லா இருந்தா போதும்னு அவங்களோட நிறைய பிடிவாதங்களை எனக்காக தளர்த்திக்கிட்டாங்க. இப்ப அப்பவோட வேற முகத்தை பார்க்கிற மாதிரி இருக்கு நங்கை.

அப்புறம் இப்ப ஊருல இருந்து கிளம்பி வரும் போது கூட, உன்னை வச்சி அம்மா எதுவும் பிரச்சனை செய்யாம பார்த்துக்க சொன்னேன்‌! அதான் இன்னிக்கு ஃபோன் செஞ்சி சொல்லிட்டு இருந்தாங்க”

“இன்னிக்கு காலைல உங்கப்பா நம்ம வீட்டுக்கு போய்ருக்காங்க! மாமாவை பார்த்ததும் அம்மா ரொம்ப பேசிட்டாங்களாம்” என்றான்.

“அச்சோ அத்தை அப்பாவை ரொம்ப திட்டிட்டாங்களா? என் மேல உள்ள கோபத்தைலாம் அப்பாகிட்ட காண்பிச்சிட்டாங்களா?” எனக் கவலையாய் கேட்டாள்.

“கோபம்னு இல்ல! அம்மா பொதுவாவே அப்படி தானே! உங்க பொண்ணு பத்தி முழுசா தெரியாம எங்க பையனுக்கு கட்டி கொடுத்துட்டோம். வந்ததும் எங்க பையனை பிரிச்சி கூட்டிட்டு போய்ட்டானு சொன்னாங்களாம்” என்றவன் சொன்னதும்,

“ஓஹோ சார் அப்படியே பல வருஷமா உங்க குடும்பத்தோட சேர்ந்து வாழ்ந்துட்டு இருந்தீங்க! நான் வந்து பிரிச்சிட்டேனாக்கும்! ஓவரா தான் கற்பனை உங்கம்மாக்கு” என்றவள் நொடித்துக் கொண்டாள்.

“இதே தான் உங்க அப்பா சொன்னாங்களாம். உடனே வாயை மூடிட்டாங்களாம். இருந்தாலும் உங்க பொண்ணு வேறொருத்தனை காதலிச்சதை மறச்சிட்டீங்கனு அம்மா கேட்டிருக்காங்க. ஊரு பேசுறதுலாம் நம்பி என் மகளை சந்தேகப்படுவீங்களானு மாமா சத்தம் போடவும், அப்ப அது உண்மை இல்லையான்னு கேட்டாங்களாம்! உடனே அப்பா இடையில் புகுந்து நம்ம வீட்டு பொண்ணை நீயே நம்பாம பேசினா வெளில எப்படிலாம் பேசுவாங்க. அவங்க வாயை அடைக்க வேண்டிய நீயே இப்படி பேசலாமானு கேட்டாராம். அதோட வாயை மூடிட்டாங்களாம்” என்றான்.

“அப்ப அன்னிக்கு நான் மாமாவை ஐஸ் வச்சது சரி தான் போல” எனக் கூறி சிரித்தாள் இவள்.

அச்சமயம் ராஜனின் கைபேசி அலற, எடுத்து பார்த்தவன், “அம்மா தான் ஃபோன் செய்றாங்க” என்றவாறு அழைப்பை ஏற்று பேசினான்.

நங்கைக்கு உடல்நிலை சரியில்லை என்றவன் இருவருமாக கஞ்சி குடித்ததாக கூறினான்.

“ஏன்டா கல்யாணம் முடிஞ்ச மறுநாளே உன்னை வேலை வாங்கிட்டாளா அவ!” என்றவர் கேட்டதும்,

“அம்மா” என பல்லை கடித்தவன், “அவளுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னேன்” என்றான்.

“நாங்கலாம் அந்த காலத்துல உடம்பு முடியலைனு படுத்தா கிடந்தோம். அப்பவும் ஆடி ஓடி வேலை செஞ்சிட்டு தானே இருந்தோம். இந்த கால பிள்ளைங்க ஆஊனா படுத்துக்கிதுங்க” என்று அங்கலாய்த்தவர்,

“அவகிட்ட ஃபோனை கொடு! இரண்டு வார்த்தை பேசுறேன். அப்புறம் அத்தைக்கு என் மேல அக்கறையே இல்லைனு சொல்லிட போறா” என்றார்.

“அம்மா உன்கிட்ட பேசனுமாம்” என்றவாறு ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு நங்கையிடம் கொடுத்தான்.

திருமணத்திற்கு முன் ஓரிரு முறை செல்வாம்பிகையிடம் கைபேசியில் பேசியிருக்கிறாள். அதுவும் செல்வாம்பிகையே அழைத்து தான் பேசினார்‌. இவளாக இதுவரை அழைத்து பேசியதில்லை.

“உடம்பு எப்படிமா இருக்கு?” எனக் கேட்டவர்,

“கல்யாணம் முடிஞ்சி முதல் முறையா வெளில போய்ருக்கீங்க. சாங்கியம் சடங்குனு எதுவும் செய்ய விடாம கூட்டிட்டு போய்ட்டான் இவன். அதான் இப்படி ஆகி போச்சு” எனக் கூறி வருத்தப்பட்டார்.

“அதெல்லாம் இல்ல அத்தை! நான் நல்லா இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க” என்றவள் சொன்னதும்,

“ஹ்ம்ம் நல்லா இருக்கவ என் மகனை எதுக்கு சமைக்க விட்டியாம்?” என்றவர் கேட்டதும் திருதிருவென இவள் விழிக்க, அவளின் முழியில் சிரித்திருந்தான் அவன்.

“ஆசை அறுபது நாளு மோகம் முப்பது நாளு! என் மவன் எத்தனை நாளைக்கு உன் முந்தானையை பிடிச்சிட்டு சுத்துறான்னு நானும் பார்க்கிறேன். உடம்பை பார்த்துக்கோமா” என்றவாறு அழைப்பை துண்டித்திருந்தார்.

“ஓவர் குசும்பு தான் இந்த அத்தைக்கு! என்னை வம்பிழுக்கவே ஃபோன் செஞ்சிருப்பாங்க போல! நல்லா நாலு வார்த்தை கேட்கலாம்னு பார்த்தா டக்குனு கட் பண்ணிட்டாங்க பார்த்தியா!” என்று இவள் கோபமாய் பொரிந்து தள்ள,

“அவங்க அப்படி தான்னு தெரிஞ்சது தானே! விட்டு தள்ளு” என்றான் இவன்.

“எங்க அம்மா மட்டும் இப்ப இருக்கனும்‌. இவங்களுக்கு ஏத்த ஆளு எங்க அம்மா தான்! இரண்டு பேரும் எலியும் பூனையுமா சண்டை போட்டுட்டு இருந்திருப்பாங்க” என்று கூறி சிரித்தாள்.

அவளின் கூற்றில் மென்மையாக சிரித்தவாறு, “அம்மாவை மிஸ் செய்றியா?” எனக் கேட்டான்.

ஆமென தலையசைத்தவள் கண்களில் இருந்து இரு துளி நீர் சட்டென வந்து விழுந்தது‌.

அவளின் கண்ணீரை துடைத்தவாறு, “உன் கூடவே உன்னை ப்ளஸ் செஞ்சிட்டு தான் இருப்பாங்க!” என்றான்.

அடுத்து சிறிது நேரத்தில் கல்யாணி அழைத்தாள்.

“ஏன்ணா சொல்லாம கொள்ளாம போய்ட்ட! இன்னிக்கு உனக்கு விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தோம்! நங்கை அண்ணியோட அப்பா நம்ம கடை பக்கம் வந்தப்ப அண்ணாகிட்ட சொல்லி அப்படி நான் தெரிய வந்துச்சு” என்று ஆதங்கமாய் கல்யாணி கேட்க,

“சாரி ஆணிமா! அங்க இருந்த பிரச்சனைல எதுவும் யோசிக்கலை” என்றவன் மன்னிப்பு கேட்கவும்,

“சரி விடு! அண்ணி ஓகே தானே! சித்தி ரொம்ப திட்டிட்டாங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை நான் தான் இருந்தா பிரச்சனை அதிகமாகும்னு வந்துட்டேன்” என்றவன் நங்கையிடம் கைபேசியை அளித்தான்.

மீனாட்சி, அகல்யா, கல்யாணி அனைவரும் ஒன்றாக ஸ்பீக்கரில் ஃபோனை வைத்து அரை மணி நேரமாக நங்கையிடம் அரட்டை அடித்து பேசிவிட்டு தான் வைத்தனர்.

நங்கையின் காய்ச்சல் காணாமல் போயிருக்க, அவளின் முகத்தில் அத்தனை பொலிவு.

“உன் பெரியம்மா குடும்பத்தை ரொம்ப பிடிச்சிருக்கு சுந்தர்! எல்லாருமே எவ்ளோ கேரிங்‌! அண்ட் ரொம்ப ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க! அவங்ககிட்டலாம் பேசும் போது ஒரு மாதிரி பாசிட்டிவ் வைப்ஸ் வருது தெரியுமா” என்றவாறு அவனது கைபேசியை அவனிடம் அளித்தாள் நங்கை‌. மென்னகை புரிந்தான் இவன்.

அன்றைய நாள் முழுவதும் அவளுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்து போக, மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு ஓய்விலேயே செல்ல, அவளை கவனிப்பதிலேயே இவனுக்கு நாட்கள் சென்றது.

சென்னை வீட்டிற்கு வந்து மூன்று நாட்களான நிலையில் சமையலறையில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருக்க, பின்னிருந்து அவளிடையை அணைத்து கழுத்தோடு உரசியவன், “பப்ளிமாஸ் நாம ஹனிமூன் போலாமா?” எனக் கேட்டான்.

அவனை நோக்கி திரும்பியவாறு அவன் தோளில் கைகளை கோர்த்து கொண்டவள், “போகனுமா?” எனக் கேட்டாள்.

“ஏன்? உனக்கு போக ஆசை இல்லையா?” என்றவன் கேட்க,

“இல்லை” என தலையசைத்தவள், அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளின் முதுகை வருடியவாறு, “என்னடா?” என்றவன் கேட்க,

“ஹனிமூனுக்கு எதுக்கு போவாங்க?” என்று கேட்டாள்.

தனது மார்பில் இருந்து அவளது முகத்தை நிமிர்த்தியவன், “புதுசா கல்யாணமானவங்க தனியா போனா ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்க வசதியா இருக்கும்!” என்றவன் குறும்பாய் சிரித்து, “கூடவே எல்லாம் நாளும் ஃபர்ஸ்ட் நைட்டா கொண்டாட தான்” என்றான்.

அவனின் கன்னத்தை வருடியவள், “உனக்கு எல்லா நாளும் ஃபர்ஸ்ட் நைட்டா கொண்டாடனுமா இல்ல என்னை புரிஞ்சிக்கனுமா?” என்று கேட்டாள்.

“உன்னை புரிஞ்சிக்க என்ன இருக்கு! அதான் எல்லாம் எனக்கு தெரியுமே” என்றவன் சென்னதுமே,

“ஓ அப்ப எல்லா நாளும் ஃபர்ஸ்ட் நைட்டா கொண்டாடனுமா?” என்று புருவத்தை உயர்த்தியவாறு அவள் கேட்க, அவன் முகத்தில் வெட்க ரேகைகள்.

“அதுக்கு எதுக்கு ஹனிமூன்க்கு வெளியூர் போய் ரூம் எடுத்து வெளியே சுத்தியும் பார்க்காம காசையும் வேஸ்ட் செஞ்சிக்கிட்டு” என்று இவள் அக்மார்க் மனைவியாய் செலவுகளை கணக்கிட்டு கூறிக் கொண்டிருக்க,

“ஹே என்ன நீ இப்பவே வரவு செலவுனு பேசிட்டு இருக்க” என்று இவன் ஜெர்க்காகி கேட்க,

“பின்ன கல்யாணமாகி மூனு நாள் ஆகுதுடா! குடும்பம் நடத்துறதுனா சும்மாவா! இதை பத்தி நானே பேசனும்னு நினைச்சேன்” என்றவாறு அடுப்பை அணைத்தவள் அவனை முகப்பறைக்கு அழைத்து சென்றாள்.

“சரி சொல்லு நீ என்ன பிளான் வச்சிருக்க! நம்ம இரண்டு பேரும் சம்பளத்தை வீட்டு செலவுக்கு எப்படி பிரிச்சிக்கலாம்? எதெல்லாம் சேமிப்புனு வச்சிக்கலாம்” எனக் கேட்டாள்.

“நான் இதை பத்தி எதுவும் யோசிக்கலை நங்கை! மாமா பெங்களூர் வீட்டை காலி செஞ்சிட்டு நம்ம கூட வந்துடுவாங்க. நம்ம மூனு பேருக்கு என் சம்பளம் தாராளமா போதும். அதுல சேமிப்புனு எடுத்து வைக்கனும்னு நினைச்சேன். உன் சம்பளத்தை வச்சு நான் எதுவும் பிளான் செய்யலை. அது உன் விருப்பம்னு நினைச்சேன்” என்றான்.

“ஓகே! நான் சொல்றதை தப்பா எடுத்துக்க கூடாது” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவள், “வீட்டு செலவு நம்ம இரண்டு பேரும் பாதி பாதி பிரிச்சிக்கலாம். அப்பா நம்ம கூட இருக்க போறதுனால என்னிக்குலாம் அத்தை தவறா பேசிடுவாங்க‌. அதனால் அப்பா செலவுக்கு நான் காசு தரதாவே இருக்கட்டும்! நீ அத்தை மாமாவுக்கு எப்பவும் அனுப்புற‌ மாதிரி அனுப்பிடு!

இரண்டு பேருமே சேமிப்புக்கு தனியா ஒதுக்கிடுவோம். அப்பாவோட பென்ஷன் பணம் அவருக்கானது அதை வீட்டு செலவுக்கு வாங்கிக்க வேண்டாம். அதை வச்சி அவர் என்ன செய்யனும்னு நினைச்சாலும் செய்யட்டும். நமக்குனு சொந்த வீடு வாங்கனும். அதுக்கான சேமிப்பை தொடங்குவோம். முதல்ல இரண்டு பேர்கிட்டயும் இருக்கிற சேமிப்பு பணம் எவ்ளோனு பார்த்துட்டு மீதி பணத்தை சேமிக்க ஆரம்பிப்போம். என்னிக்கும் லோன் வாங்கிட கூடாது‌. பணத்தை சேமிச்ச பிறகு தான் சொத்து வாங்குறது பத்தி யோசிக்கனும். நம்ம பசங்களுக்கான சேமிப்பையும் ஆரம்பிக்கனும்” என்று அவள் கூறிக் கொண்டே போக, அவளின் திட்டமிடலில் வாயடைத்து போனான் அவன்.

“இதுக்கு தான் வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும்னு சொல்றது போல! என்ன தான் ஆம்பிளைங்க சம்பாதிச்சாலும் பொண்ணுங்க அளவுக்கு கணக்கு போட்டு குடும்பத்தை நடத்த முடியாதுனு சொல்றது உண்மை தான் போல” என்று கூறி சிரித்தான்.

வீட்டு வேலையாள் வந்துவிட, இருவரின் நேரங்களும் அன்றாட வேலைகளில் கடந்து விட, அன்றிரவு படுத்ததும் உறங்கி விட்டான் ராஜன்.

முதல் நாள் அவளை நெருங்கிய பிறகு, அவளுக்கு உடல்நிலை சரியில்லை என ஒதுங்கியே இருந்தான். ஆயினும் இன்று தேனிலவு பற்றி அத்தனை ஆசையாக பேசியவன் தன்னை நெருங்குவானென இவள் எதிர்பார்த்திருக்க, படுத்ததும் உறங்கி போனான் இவன்.

உறக்கம் வராது புரண்டவள், ராஜனின் மார்பில் இருந்த முடியை சுருட்டி இழுத்தவாறு அவனை முழிக்க செய்தாள்.

“ஆஆஆஆஆ ராட்சசி! என்னடி” என்றவாறு முழித்திருந்தான்.

“என்னது டியா?” பெரிய விழிகளை விரித்து அவள் கேட்க,

“அது தானா வந்துடுச்சுடா! என் மனசுல மனைவியா நச்சுனு நங்கூரமிட்டு உட்கார்ந்துட்ட போல! அதான் என்னை மீறி வந்துடுச்சு” என்று கூறி சிரித்தான்.

அவனின் பதிலில் சிரித்தவளாய் அவனை ஒட்டி படுத்துக் கொண்டாள்.

“எதுக்கு இப்ப என்னை எழுப்பின?” எனக் கேட்டான்.

“எனக்கு தூக்கம் வரலை” என்றாள்.

“ஏன்? உடம்பு எதுவும் சரியில்லையா?” அவளின் கழுத்தில் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.

“ம்ப்ச் உடம்புலாம் நல்லா தான் இருக்கு” என்று அவனின் கையை தட்டி விட்டாள்.

“அப்ப மனசு தான் சரியில்லையா? ஏன் சரியில்லை?” மார்பின் மீது சாய்ந்திருந்தவளை வருடியவாறு அவன் கேட்க,

“ஏன்னா என் புருஷன் எல்லா நாளும் முதல் ராத்திரியா கொண்டாடலாம்னு சொல்லிட்டு குறட்டை விட்டு தூக்கிட்டாரு! அதான் பொண்டாட்டி மனசு சரியில்லாம போச்சு” என்றவள் அவன் மார்போடு முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளின் பேச்சில் வாய் விட்டு சிரித்தவனாய், அவள் தாடையை பற்றி தனது முகத்தை பார்க்க செய்தவன், “ஆர் யூ ஆல்ரைட் நௌ! அன்னிக்கு ரொம்ப உடம்பு வலி சொன்னல! அதான் உடனே கஷ்டப்படுத்திட கூடாதேனு தயக்கமா இருந்துச்சு” என்றான்.

“இப்ப கூட என் நலனுக்காக தான் ஒதுங்கி இருந்தியா” என்று கேட்டவளிடம் ஆமென அவன் தலையசைக்க, “உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்குதுடா” என்றவாறு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

நீயின்றி நானில்லை என்ற ஆழ்மன சங்கமிப்புடன் காதலாய் அவளை ஆட்கொண்டிருந்தான் அவன். அவனுள் விரும்பியே கரைந்து கொண்டிருந்தாள் அவள்.

அடுத்து வந்த நாட்களில் சுரேந்தர் பெங்களூர் இல்லத்தை காலி செய்து விட்டு சென்னையில் இவர்களுடன் வந்து தங்கி கொண்டார்.

ராஜனும் நங்கையும் இப்பொழுது வெவ்வேறு அலுவலகத்தில் வேலை செய்வதால், அவரவருக்கென தனித்தனி வாகனமெடுத்து தனியாக பயணித்து அலுவலகம் சென்று வந்தனர். சமையலில் பெருமளவு மகளுக்கு உதவி புரிந்தார் சுரேந்தர்.

வாழ்வின் பல இன்னல்களுக்கு பிறகு இன்பமான காதல் வாழ்வை ரசித்து சுகித்து வாழ்ந்திருந்தனர் மதுரநங்கையும் சுந்தரராஜனும்.

— அடுத்த அத்தியாயத்தில் எபிலாக் வரும். அழகிய அன்னமே கதைக்கான லீட் அடுத்த அத்தியாயத்தில் இருக்கும்.