நனிமதுர நங்கை 28

மதுரையிலிருந்து சென்னை நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனர் ராஜனும் நங்கையும்.

ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் முன்பதிவு செய்திருந்தான் ராஜன். வார நாட்கள் என்பதால் பேருந்தில் ஆட்கள் வெகு குறைவாகவே இருந்தனர். ஸ்லீப்பர் பேருந்தில் ஒவ்வொரு பெர்த்திற்கு ஸ்க்ரீன் போடப்படுவதால் பிரைவசி இருக்கும் என்று இதில் பதிவு செய்திருந்தான் ராஜன்.


பேருந்தில்

அமைதியாக படுத்து உறங்கி கொண்டிருந்த நங்கையை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ராஜன்‌.

அவனது தாயிடம் பேசியப் பின் ராஜன் அறைக்கு செல்ல, நங்கை இயல்பாக இருப்பது போலவே காட்டிக் கொண்டாள்.

எந்தெந்தப் பொருட்கள் எல்லாம் தேவையென இருவருமாக பேசிக்கொண்டே தங்களது பயணப்பையை எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.

மதிய உணவு வேளையிலும் கூட எந்த பேச்சுமின்றி அமைதியாகவே கழிந்தது‌. வேங்கடம் செல்வாம்பிகையிடம் இயல்பாக பேசியவாறே தான் உணவு பரிமாறி உண்டு கொண்டிருந்தாள் நங்கை.

ஆனால் அவளது தந்தையிடம் மட்டும் ஒரு வார்த்தை பேசவில்லை. பாவமாய் அவளை பார்த்திருந்தார் சுரேந்தர்.

சுரேந்தரையும் தங்களுடன் வருமாறு கேட்டிருந்தான் ராஜன். ஆனால் மதுரையில் அவர்களுக்கு இருக்கும் வாடகை வீட்டு நிலவரங்களை பார்த்து விட்டு பெங்களூர் சென்று அங்கு அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்னை வருவதாய் உரைத்து விட்டார் சுரேந்தர்.

சென்னையில் இருந்த சுரேந்தரின் சொந்த இல்லத்தை வாடகைக்கு விட்டிருந்தபடியால், திருமண தேதி குறித்ததும் இவர்கள் தங்குவதற்கென அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை பார்த்து குடித்தனம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருந்தான் ராஜன்.

சுரேந்தர் தான் இவர்களை பேருந்தில் வழியனுப்ப வந்திருந்தார். நங்கையிடம் அவர் பேச முற்பட, தூக்கம் வருவதாக கூறி வந்து படுத்தவள் தான், இன்னும் விழிக்க வில்லை.

ஏழு மணியளவில் கிளம்பிய பேருந்து ஒன்பது மணியளவில் இரவுணவிற்காக உணவகத்தில் நிறுத்தப்பட, நங்கையை எழுப்பினான் ராஜன்.

“சென்னை வந்துட்டோமா?” என சோம்பலாய் கைகளை நெறித்தவாறே அவள் எழும்ப,

“உன்னை சென்னை வரைக்கும் தூங்க வச்சிட்டே கூட்டிட்டு போவேன்னு வேற உனக்கு நினைப்பு இருந்துச்சா?” என சிரித்தவாறு கேட்டான் ராஜன்.

“அடப்பாவி!” என விழிகளை விரித்து அவள் அவனை முறைக்க,

“சும்மா பேசுறதுக்காவது எழுப்பிருப்பேன்னு சொல்ல வந்தேன் பப்ளிமாஸ்! நீ என்ன நினைச்ச?” கேலியாக வினவினான்.

“நான் ஒன்னும் நினைக்கலையே” என்றவள் கூறவும்,

“கேடி” என்றவன் வாய்விட்டு சிரித்தான்.

“சரி வா! பஸ் எடுக்குறதுக்குள்ள போய் சாப்பிட்டு வருவோம்” என அவளை அழைத்து சென்றான்.

இருவருமாய் இரவுணவை உண்டு விட்டு வரவும், பேருந்தை நகர்த்தி இருந்தனர்.

படுக்கும் வசதியுள்ள இருக்கை என்பதால் ஏறியதும் அவள் மீண்டும் படுத்துக் கொள்ள போக, அவளின் கைப்பிடித்து இழுத்தவன், “சாப்பிட்டதும் தூங்காத! கொஞ்ச நேரம் உட்காரு! பேசுவோம்” என்றான்.

அவனருகில் அவனை போலவே கால்களை நீட்டியவாறு அமர்ந்தவள், அவனது புஜங்களை பற்றியவாறு தோளில் சாய்ந்து கொண்டாள்.

தனது கைபேசியில் ஏதோ அழைப்பு வர எடுத்தவன், “சொல்லுங்க மாமா” என்றான்.

“நங்கைக்கு ஃபோன் செஞ்சீங்களா? அவ ஃபோன் பேக்ல இருக்கு மாமா? அதான் கவனிக்கலை! இருங்க நான் ஸ்பீக்கர்ல போடுறேன்! அவகிட்டயே பேசுங்க” என்றவன் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டு விட்டு, “உங்க அப்பா தான் பேசுறாங்க! பேசு” என்றான் அவளிடம்.

அவள் முடியாது என தலையசைக்க, “உதை வாங்குவ! ஒழுங்கா பேசு” என முறைத்தவாறு ஹஸ்கி குரலில் கூறினான்.

ராஜனின் குரலை கேட்டு சுரேந்தர் ஏதோ கூற வரும் முன்பே, “அப்பா, உங்க மாப்பிள்ளை என்னை உதைப்பேன்னு சொல்றான்ப்பா” என்று தன்னிச்சையாக தந்தையிடம் புகாரளித்திருத்தாள் நங்கை.

அவளின் குரலிலும் பாவனையிலும் வாய்விட்டு சிரித்திருந்தனர் ராஜனும் சுரேந்தரும்.

“சாப்பிட்டியாடா?” என சுரேந்தர் கேட்க,

“சாப்பிட்டேன்ப்பா! நீங்க சாப்டீங்களா?” எனக் கேட்டாள்.

“சாப்பிட்டேன்மா!” என்றவர்,

“அப்பா மேல இன்னும் கோபமா தான் இருக்கியா?” எனக் கேட்டார்.

“ஆமா ரொம்ப ரொம்ப கோபமா இருக்கேன்! ஏன்ப்பா இப்படி செஞ்சீங்க? எத்தனை நாளா என்னை இப்படி பழி வாங்கனும்னு பிளான் செஞ்சிருந்தீங்க?” எனக் கோபமாய் கேட்டாள் நங்கை‌.

உடனே ராஜன், “நங்கை என்ன பேச்சு இது? மாமா அப்படி நினைக்கிற ஆளா என்ன?” என்று அவருக்காக பரிந்துக் கொண்டு பேச,

“நீ முதல்ல வாயை மூடுடா! எல்லாம் உன்னால தான்! அவருக்காக சப்போர்ட் செஞ்சிட்டு வந்த நான் உதைப்பேன் உன்னை” என்றாள் கோபத்துடன்.

“மதும்மா மாப்பிள்ளயை திட்டாதம்மா” என்று சுரேந்தர் இப்போது ராஜனுக்காக பரிந்துக் கொண்டு வர,

“ஓஹோ உங்க இரண்டு பேருக்கும் என்னை பார்த்தா எப்படி தெரியுது? சரியான ஏமாளி! என்ன வேணா சொல்லி ஏமாத்தலாம்னு இரண்டு பேரும் கூட்டா பிளான் போட்டு ஏமாத்திருக்கீங்க! அப்படி தானே” எனக் கோபமாய் கேட்டிருந்தாள் நங்கை.

“இல்லடா பப்ளிமாஸ்” என்று ராஜனும்,

“இல்ல மதும்மா” என்று சுரேந்தரும்

ஒருசேர குரல் கொடுக்க,

அவர்களின் பாசமான பேச்சில் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன் செய்தவளாய், “எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சாகணும்” என்றாள்.

“சொல்லு மதும்மா” என்று சுரேந்தர் கேட்க,

“முதல்ல சுந்தருக்கு என்னை கட்டி வைக்கனும்ன்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சு?” எனக் கேட்டாள்.

“அது சுந்தர் உன்னை லவ் பண்றதை நான் கண்டுபிடிச்சிட்டேன்மா. அவனும் என்கிட்ட ஆமானு‌ ஒத்துக்கிட்டான். அவனை விட வேற யாரும் உன்னை புரிஞ்சி ஏத்துக்க மாட்டாங்கனு தான்‌ உடனே சம்பந்திக்கிட்ட பேசினேன்” என்றார் சுரேந்தர்.

“அப்பாக்கிட்ட கூட நீயா உன் காதலை பத்தி சொல்லலையா? நான் யாரை கல்யாணம் செஞ்சிருந்தாலும் உனக்கு ஓகே அப்படி தானே” என்று ராஜனை முறைத்தவள், “உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்றாள்.

‘அய்யோ என்ன செய்ய போறானு தெரியலையே’ என திருதிருத்தவாறு அவளை பார்த்திருந்தான் ராஜன்‌.

சுரேந்தரிடம், “அத்தை மாமாக்கிட்ட என்னனு பேசி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சீங்கப்பா?” எனக் கேட்டாள்.

“ஏற்கனவே உனக்கு கல்யாணம் தேதி குறிச்சி மேரேஜ் நின்னு போனதை சொன்னேன்‌. அப்புறம் அம்மா இறந்து போனதை சொன்னேன். அப்புறம் நீ ஆன்சைட்ல வேலைக்கு போய்ட்டதால கல்யாணம் தள்ளி போட வேண்டியதாகிடுச்சு! அதான் இவ்வளோ வயசாகிடுச்சுனு சொன்னேன்‌. சுந்தரும் நீயும் ஒரே ஆபிஸ்ல வேலை செய்றீங்க. ஜெர்மனிலயும் ஒன்னா வேலை செஞ்சிருக்கீங்கனு சொன்னேன். இரண்டு பேரும் ஃப்ரண்ட் தான். எனக்கு தான் உங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க ஆசை! உங்களுக்கு விருப்பம்னா மேற்கொண்டு பேசலாம்னு சொன்னேன்”

“முதல்ல இரண்டு பேருமே வயசு ஜாதினு ஒத்துக்கலை! அப்புறம் நீ ஒரே பொண்ணுனு சொல்லி நமக்கிருக்க சொத்துலாம் உனக்கு தான்னு சொன்னதும் சுந்தர் அம்மா ஒத்துக்கிட்டாங்க. அவங்க அப்பா ஒத்துக்கலை. சுந்தர்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னவர், உடனே அவன்கிட்ட பேசிட்டு தேதி குறிக்க சம்மதிச்சிட்டாரு! இது தான்மா நடந்துச்சு” என்றார்.

“ஏன்ப்பா என்னோட லவ் பிரேக் அப் பத்தி சொல்லலை. அத்தை கேள்வி கேட்குறதுல என்ன தப்பிருக்கு! உண்மைய மறைச்சு கல்யாணம் செஞ்சவங்க நாளைக்கு இன்னும் என்ன பொய்லாம் சொல்லி ஏமாத்துவாங்களோனு தானே அவங்களுக்கு தோணும்” என ஆதங்கத்துடன் கேட்டாள் நங்கை.

அதற்கு ராஜனோ, “அதெல்லாம் ஒன்னும் அவங்களுக்கு தோணாது. அப்படியே அவங்க கேட்டாலும், நான் சமாளிச்சிப்பேன். இதெல்லாம் நினைச்சு நீ ஒன்னும் கவலைப்படாத” என்றான்.

“இதெல்லாம் அவங்களுக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை மதும்மா! சுந்தருக்கு தெரிஞ்சா போதும். அவன் தானே உன் கூட வாழ போறவன்” என்றார் சுரேந்தர்‌.

“ஆனா இந்த பேச்சு என்னை துரத்திக்கிட்டே தானே இருக்கும்ப்பா!” எனும் போது அவளின் கண்கள் கலங்கி விட்டது.

“டேய் பப்ளிமாஸ்” என்று ராஜன் அவளை அணைக்கப்போக, “தொடாத என்னை! கொன்றுவேன் உன்னை” என அவனிடம் அவள் சண்டையிட்டு இருக்க,

“மாப்பிள்ளைக்கிட்ட சண்டை போடாதமா” என்றார் சுரேந்தர்.

“நீங்க பேசாதீங்க! காதலிக்கிற பொண்ணுக்கிட்டயும் லவ்வை சொல்லலை! பெத்த அம்மா அப்பாகிட்டயும் சொல்லலை. ஆனா கல்யாணம் மட்டும் நடக்கலைனு ஏங்கி தவிச்சி போனானாம். எனக்கு வர கடுப்புக்கு” என்றவள், அவனின் தலைமுடியை கொத்தாக பிடித்திழுத்து ஆட்ட,

“ஆஆஆஆஆ மாமா காப்பாத்துங்க! காப்பாத்துங்க! பொண்ண பெத்துக்க சொன்னா.. பிசாசை பெத்து வச்சிருக்கீங்களே” என அலறினான் ராஜன்.

“பாவம்மா சுந்தர்! விடும்மா” என்று கெஞ்சினார் சுரேந்தர்.

“நீங்க ஃபோனை வைங்கப்பா! நான் அப்புறமா பேசுறேன்” என ராஜனின் கையில் இருந்த கைபேசியை வாங்கி இணைப்பை துண்டித்தாள்.

ராஜன் பாவமாக அவளை பார்த்துக் கொண்டிருக்க, “இப்படி அப்பாவி லுக் விட்டே என்னை ஏமாத்திடு” என்றவள் அவன் மடி மீது சாய்ந்து கொண்டாள்.

ராஜன் அவளின் தலைமுடியை கோதியவாறு இருக்க, இவள் அவனது விரல்களை பிடித்து விளையாடியவாறே, “நான் இப்படி தான்! என் வாழ்க்கை இப்படி தான்னு உண்மையை பேசுறவங்க எங்கேயும் கூனி குறுகி நிக்க வேண்டாம் சுந்தர்! நான் அப்படி இருக்கனும்னு தான் நினைக்கிறேன் சுந்தர்! நான் சொல்றது புரியுதா?” என்றவாறு முகத்தை நிமிர்த்தி அவனது முகத்தினை பார்த்தாள்.

ஆமென தலையசைத்தவனின் கண்களை பார்த்தவள், “அதனால தான் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் சொல்லிடனும்னு அப்பாகிட்ட சொன்னேன். இதுவே ஏற்கனவே அத்தை மாமாக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா, ‘ஆமா இப்ப அதுக்கு என்னனு’ ராமை கேட்டிருப்பாங்க. இல்லனாலும் அதிர்ச்சியாகாம சுலபமா கடந்திருப்பாங்க. இப்ப அவங்க மனசுல என்னை பத்தி ஒரு குறுகுறுப்பு இருந்துட்டே இருக்கும் தானே. இதுவே உறவுமுறைக்குள்ள பிரிவினை உண்டு பண்ணும் தானே! இதெல்லாம் நினைச்சு தான் கவலை எனக்கு சுந்தர்” தனது மனநிலையை பொறுமையாக நங்கை எடுத்துரைக்க,

“புரியுதுடா பப்ளிமாஸ்! நேரம் காலம் பார்த்து அப்பா அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன். நீ இதை பத்தி இனி எப்பவும் யோசிக்க வேண்டாம் சரியா?” என்றான்.

சரியென தலையசைத்தவள், அவன் இடையை கட்டிக் கொண்டு வயிற்றோடு முகத்தை புதைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

அவளுக்காக தாய் தந்தையிடம் பேசுகிறேன் என்றானே ஒழிய அவர்களிடம் இவளின் கடந்த காலக்காதலை பற்றி உரைப்பதில் துளியும் அவனுக்கு உடன்பாடில்லை.

தனது

அம்மாவின் வாயிற்கு தானே அவல் கொடுத்தது போல் ஆகிவிடும். ஆகையால் அவரிடம் இதை கூறாமல் இருப்பது தான் நல்லது என எண்ணிக் கொண்டான்.

“எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சாகணும்” நங்கை போலவே ராஜனும் கேட்க,

“என்ன சுந்தர்?” என்றவாறு எழுந்து அமர்ந்தாள்‌.

இப்பொழுது அவளின் மடியில் இவன் தலை வைக்க, “எப்படா எழுந்திரிப்பேன்னு காத்துட்டு இருந்தியா?” என சிரித்தாள்.

ஆமென கண் சிமிட்டி சிரித்தவன், “இன்னியோட இதெல்லாம் பேசி முடிச்சிடலாம்னு தான் கேட்கிறேன்” என்று ஆரம்பித்தவன்,

“அஸ்வினை கல்யாணம் செஞ்சிக்க விருப்பமில்லாம தான் சம்மதம் சொன்னியா?” எனக் கேட்டான்.

“ஏன் அப்படி கேட்குற?” எனக் கேட்டாள் நங்கை.

“இல்ல அன்னிக்கு என் லவ் பத்தி தெரிஞ்சதும், ஏன் முன்னாடியே சொல்லலைனு கேட்டு அழும் போது, அவனை கட்டிக்க மனசில்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமானு சொல்லி அழுத! அதான் கேட்குறேன்” என்றான் ராஜன்.

“முதல்ல சும்மா பேசும் போது நல்லவனா தான் தெரிஞ்சான். ஆனா அப்புறம் அவனுக்கு ஸ்மோகிங் அண்ட் டிரிங்கிங் பழக்கம் இருக்குனு தெரிய வந்ததும் அவனை கட்டிக்க விருப்பமில்லைனு அம்மாகிட்ட சொன்னேன். இதுலாம் இந்த காலத்துல சகஜம்னு அம்மா என்னை தான் கன்வின்ஸ் செஞ்சாங்க சுந்தர். நான் இன்பாவை மறக்க முடியாம இவனை ரிஜெக்ட் செய்ய அப்படி சொல்றதா நினைச்சிக்கிட்டாங்க. என் பேச்சை அம்மா காது கொடுத்து கேட்கவேயில்லை சுந்தர்.

அதுவுமில்லாம அவன் அங்க ஏற்கனவே ஏதோ பொண்ணு கூட லிவ் இன் ரிலேசன்ஷிப்ல இருந்திருக்கான்‌. அதுவும் போதைல பேச்சு வாக்கில் என்கிட்ட உளறிட்டான். அம்மாகிட்ட சொன்னதும் நான் கல்யாணத்தை நிறுத்த பொய் சொல்றேன்னு ஒரே சண்டை. அப்பாகிட்ட சொன்னதும் அவன்கிட்ட பேசினாரு. அப்படிலாம் இல்லவே இல்லை அங்கிள்னு அப்பாகிட்ட பேசி கவர் பண்ணிட்டான்‌. பெரியவங்ககிட்ட போய் இதெல்லாமா சொல்லுவனு என்கிட்ட சண்டை வேற போட்டான். நான் ஸ்டெரஸ்ஸோட எக்ஸ்ட்ரீம்ல இருந்த காலகட்டம் அது சுந்தர்!

அந்த நேரத்துல நீ என்னை காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் உன்னை கூட்டிட்டு ஓடிருப்பேன்” என்றவள் சொன்னதும்,

பக்கென சிரித்து விட்டான் ராஜன்.

“ஆனா அந்த நேரத்துல தானே ஆன்டி என்னை கல்யாணம் செஞ்சிக்கிறதை பத்தி கேட்டாங்க” என்று ராஜன் கேட்க,

“எப்ப கேட்டாங்க? அஸ்வின் இறந்த பிறகு கேட்டாங்க! எனக்கு அவ்ளோ கோபம்! அஸ்வின் இல்லனா சுந்தர்னு யோசிக்கிற ஆப்ஷனா போய்ட்டானா அவன் உங்களுக்குனு அப்படி ஒரு கோபம்!

உன்னோட வாழ்க்கைனு நான் யோசிச்சு வச்சிருந்ததே வேற சுந்தர்! அழகா அம்சமா குடும்ப குத்து விளக்கு மாதிரி உன்னை பார்த்து பார்த்து கவனிச்சிட்டு, உன் குடும்பத்தோட அட்ஜஸ்ட் செஞ்சிட்டு வாழுற ஒரு பொண்ணை தான் உன் பொண்டாட்டியா வரும்னு நான் நினைச்சி வச்சிருந்தேன். என்னை அந்த இடத்துலே நான் ஒரு நொடி கூட நினைச்சு பார்த்ததில்லை‌. அதான் அம்மாகிட்ட அப்படி சொன்னேன்‌.


நீ

அப்பவாவது வந்து உன்னை காதலிக்கிறேனு என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே!” என்று அவனை முறைத்தவள்,

“ஆனா இப்ப அப்படிலாம் உன்னை வேற பொண்ணுக்கு விட்டுக் கொடுத்திட மாட்டேன். உனக்கு குடும்ப குத்து விளக்குலாம் கிடையாது! இனி இந்த ராட்சசி தான்” என்று சிரித்தாள்.

“எனக்கு இந்த அழகான ராட்சசியே போதும்” என்று அவளை குனிய செய்தவன் இதழோடு இதழை பிணைத்திருந்தான்.

திடீரென அவனை தள்ளி விட்டு நிமிர்ந்தவள் பேருந்தை நிறுத்த சொல்லுமாறு செய்கை செய்திருந்தாள். அவளின் முக பாவனைகளை பார்த்து ஓட்டுனரிடம் கூறி பேருந்தை நிறுத்தியிருந்தான் ராஜன்.

— தொடரும்