நனிமதுர நங்கை 27

“இந்தாங்க மாமா தோசை” என வேங்கடத்திடம் உணவை அளித்த நங்கை,‌ “அத்தை நீங்களும் வந்து சாப்பிடுங்க” என்று செல்வாம்பிகையையும் அழைத்து வேங்கடத்துடன் அமர்ந்து உண்ண வைத்தாள்.

ராஜனுக்கும் சுரேந்தருக்கும் வேங்கடம் எடுத்து வந்த பதநீரை குடிக்க கொடுத்தாள்.

குலதெய்வக் கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பூஜை பொருட்களை செல்வாம்பிகையுடன் சேர்த்து எடுத்து வைத்தாள்.

காலை வீட்டில் வேலையை முடித்தவர்கள் இவர்களின் ஃபார்சூனர் வண்டியில் குடும்பமாய் கோவிலுக்கு பயணமானார்கள்.

அவர்களின் குல தெய்வமான அய்யனார் கோவிலினுள் செல்ல, அகல்யா, சுந்தரேஸ்வரன், மீனாட்சி அவர்களின் குட்டி மகள் சிவரஞ்ஜனி, கல்யாணி மற்றும் கருணாகரன் ஆகிய அனைவரும் அங்கே கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.

இவர்களை பார்த்து வேங்கடம் செல்வாம்பிகையின் முகம் வெறுப்பை காண்பிக்க, ராஜனும் நங்கையும் சுரேந்தரும் மகிழ்ச்சியுடன் அவர்களின் அருகே சென்றார்கள்.

வேங்கடமும் செல்வாம்பிகையும் பூசாரியிடம் பூஜைக்குரிய பொருட்களை வழங்குவதற்கு சென்றார்கள்.

“ஹே கல்யாணி நீங்கலாம் வரீங்கனு சொல்லவே இல்லை” என்று மகிழ்வுடன் கல்யாணியின் கையை பற்றிக் கொண்டாள் நங்கை.

“சர்ப்ரைஸ் அண்ணி! இதோ இந்த சந்தோஷத்தை பார்க்க தான் சொல்லாம வந்தோம்” என்றாள் கல்யாணி.

“ஈஸ்வரன் உங்க யூ டியூப் வீடியோஸ்லாம் பார்த்தேன்! சூப்பரா மார்க்கெட்டிங் செய்றீங்க! நல்ல பிசினஸ்மேன் நீங்க” என்று பாராட்டினார் சுரேந்தர்.

“தேங்க் யூ மாமா” என்று மென்னகை புரிந்தான் ஈஸ்வரன்.

ஈஸ்வரனுடன் அவனது தொழிலை பற்றி சுரேந்தரும் கருணாகரனும் பேசிக் கொண்டிருக்க, ராஜன் குட்டிப்பாப்பாவை கையிலேந்தி கொஞ்சி கொண்டிருந்தான்.

குழந்தை பிறந்ததும் ஒரு முறை நேரில் வந்து பார்த்த ராஜன், அதன் பிறகு அவனது திருமணத்தன்று தான் குழந்தையை பார்த்திருந்தான். இன்று தான் குழந்தையை முதல் முறையாக கையில் தூக்குகிறான்.

அகல்யா ராஜனிடம் குழந்தையை எவ்வாறு தூக்க வேண்டுமென கூறியவாறே அவன் கைகளில் கொடுத்தார். ராஜனின் கையில் இருந்த குழந்தையை நங்கை கொஞ்சியவாறு இருக்க, நங்கையின் முகபாவனைகளை பார்த்திருந்தான் ராஜன். இக்காட்சியை தனது கைபேசியில் புகைப்படமாக்கி இருந்தாள் கல்யாணி.

ராஜன் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அமர, அகல்யா அவனருகில் அமர்ந்து குழந்தைக்கு தேவையானவற்றை கவனித்துக் கொண்டிருந்தார்.

சற்று தள்ளி பேசியவாறு அமர்ந்திருந்த மீனாட்சி மற்றும் கல்யாணியின் அருகே வந்தமர்ந்த நங்கை, “சாரி மீனு உங்ககிட்ட நேத்து சரியா பேச முடியலை” என்றாள்.

“என்ன வெளியாளுங்க மாதிரி சாரி கேட்டுட்டு இருக்கீங்க! என்னால தான் முழுக்க உங்க கூட இருக்க முடியலை! பாப்பாவை வச்சிட்டு கூட்டத்துல ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்னு தான் கிளம்பிட்டோம். வீட்டுக்கு போய்ட்டும் உங்களை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்” என்றாள் மீனாட்சி.

திருமணம் நிச்சயமான பின்பு ஓரிரு முறை கல்யாணியின் மூலம் மீனாட்சியிடம் கைபேசியில் பேசியிருக்கிறாள் நங்கை. இருவருமே ஐடியில் பணிபுரிந்தவர்கள் என்பதால் பெயர் சொல்லி அழைக்குமாறே கூறிவிட்டனர்.

“அப்படியா? ஈஸ்வரண்ணா எங்களை பத்திலாம் பேசுவாரா என்ன? அவருக்கு தான் அவரோட தம்பியை பிடிக்காதே” என்றாள் நங்கை.

கல்யாணி அழைப்பதை போல் ஈஸ்வரண்ணா என்றே அழைக்க பழகிக் கொண்டாள் நங்கை.

“நான்‌ கூட இப்படி தான் கல்யாணமான புதுசுல இரண்டு பேரும் எதிரினு நினைச்சு ஏமாந்து போனேன் நங்கை. மனசுல மலையளவு பாசம் வச்சிக்கிட்டு வெளில ஆக்டிங் கொடுப்பாங்க இரண்டு பேரும்” என்று மீனாட்சி கூறியதை கேட்டு நங்கையும் கல்யாணியும் வாய்விட்டு சிரித்தனர்.

“எனக்கு டி எல்லா இருக்கும் போது சுந்தரை சிடுமூஞ்சினுலாம் திட்டியிருக்கேன்! ஆனா” என்று மீனாட்சி ஏதோ கூறவும்,

“ஆமா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்ங்கிற மாதிரி தான் நடந்துப்பான் அவன்” என்று படபடவென கூறிய நங்கை, பின்பு நாக்கை கடித்தவளாய், “அச்சோ சுந்தரை எனக்கு அப்படி பேசி தான் பழக்கம். அவன் இவன் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” கண்களை சுருக்கியவாறு கெஞ்சும் பார்வை பார்த்தவள், “என் அத்தை முன்னாடி இப்படி எதுவும் நான் வாயை விட்டுட கூடாது ஆண்டவா” என்று சத்தமாகவே வேண்டிக் கொள்ள,

அவளின் பாவனையில் சிரித்துக் கொண்டனர் இருவரும்.

“ஆனா சுந்தர் மேல எனக்கு எப்பவும் நல்ல அபிப்ராயம் உண்டு நங்கை! என் வீட்டுக்காரர் போடுற சண்டையை பார்த்துட்டு தான் பயந்துட்டேன்‌. எங்க கல்யாணத்துக்கு கூட அவரை கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று மீனாட்சி கூறிக் கொண்டிருக்கும் போதே,

“நான் உங்க கல்யாணத்தை பார்த்தேனே” என்றாள் நங்கை.

“எங்க கல்யாணத்தையா?” என்று ஆச்சரியமாக மீனாட்சி கேட்க,

“ஆமா மீனு! கல்யாணி தான் லைவ் டெலிகேஸ்ட் செஞ்சா! சுந்தரும் நானும் ஜெர்மனில லாப்டாப்ல உங்க மேரேஜை பார்த்தோம். செம்ம ஜோடி பொருத்தம் உங்க இரண்டு பேருக்கும்‌” என்ற நங்கை, ராஜன் இவர்களை விட்டு பிரிந்து ஜெர்மனியில் தனிமையில் வாடியதை பற்றி விவரித்தாள்.

அவளின் பேச்சை கேட்ட மீனாட்சி, “ஆமா அந்த நேரத்துல இங்க இவரும் ரொம்ப வருத்தப்பட்டுட்டு கஷ்டப்பட்டுட்டு தான் இருந்திருக்காரு! ஆனாலும் இரண்டு பேருக்கும் இவ்வளவு வீம்பு ஆகாதுங்க! இன்னமும் மூஞ்சை கொடுத்து பேசிக்கிறாங்களா பாருங்க. அவங்க காலேஜ் நாட்கள்ல இருந்த மாதிரியான இயல்பான பேச்சு இரண்டு பேர் கிட்டயும் வரலை! பாவம் இவங்களுக்கு நடுவுல நம்ம கல்யாணி தான் ரொம்பவும் இடிபட்டாங்க! இப்ப நாம இரண்டு பேரும் வந்து சிக்கிருக்கோம்” என்று கூறி சிரிக்க, கல்யாணியும் நங்கையும் உடன் சிரித்திருந்தனர்.

“ராஜாண்ணாக்கு குழந்தை பிறந்துட்டா  இரண்டு குடும்பமும் போய் வர இருப்பீங்கல அப்புறம் சரியாகிடுவாங்க இரண்டு அண்ணங்களும்” என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்கினாள் கல்யாணி.

“பாரு மீனு! கேப்ல பாசமலர் படத்தை ஓட்டுறா கல்யாணி” என்று நங்கை கேலி செய்ய, “போங்கண்ணி” என்று சிணுங்கினாள் கல்யாணி.

“சுந்தரும் நீங்களும் ஒன்னா வேலை பார்த்தீங்கனு கல்யாணி சொன்னாங்க! ஆனா இந்தளவுக்கு நெருங்கின ஃப்ரண்ட்டா இருப்பீங்கனு தெரியாது” என்றாள் மீனாட்சி.

“கிட்டதட்ட பத்து வருஷ ஃப்ரண்ட்ஷிப் மீனு” என்று நங்கை கூறவும், “வாவ் அப்புறம் எப்படி திடீர்னு கல்யாணம் செஞ்சிக்கனும்னு தோணுச்சு” என்று மீனாட்சி கேட்க,

‘இவனோட ஒன் சைட் லவ் ஸ்டோரியை யாருக்குலாம் சொல்லி வச்சிருக்கான்னு தெரியலையே! அப்பா வேற, அத்தை மாமாகிட்ட என்னலாம் சொல்லி வச்சாங்கனு தெரியலையே!’ என்று யோசித்தவாறு முழித்தாள் நங்கை.

நங்கையின் யோசனையான முகப்பாவனையில், “சாரி சட்டுனு கேட்டுட்டேன். எதுவும் பர்சனல்னா நீங்க சொல்ல வேண்டாம் நங்கை” என்றாள் மீனாட்சி.

“இப்ப நீங்க என்ன வெளியாளு மாதிரி என்கிட்ட சாரி கேட்டுட்டு இருக்கீங்க” என்று நங்கை கூறிக் கொண்டிருக்கும் போதே,

“அங்க பூஜைக்கு ரெடி செஞ்சாச்சு! வாங்க” என்று பொதுவாக அழைத்தார் வேங்கடம்.

அனைவரும் உள்ளே மூல ஸ்தானத்திற்கு அருகே சென்று நின்றனர்.

பல வருடங்களுக்கு பிறகு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து நின்று செய்யும் குல தெய்வப்பூஜை‌ அகல்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீரை பொழிய செய்தது.

“எங்க குடும்பம் எப்பவும் இப்படி ஒத்துமையா இருக்கனும்” என்று அகல்யா வேண்டிக் கொள்ள, கல்யாணியும் கருணாகரனும் குழந்தை வரத்துக்காக வேண்டிக் கொண்டனர்.

சுந்தரேஸ்வரன் தனது மகளை கைகளில் ஏந்தியவாறு நிற்க, அவனருகில் நின்றிருந்த மீனாட்சி, “நாங்க எப்பவும் நிம்மதியா சந்தோஷமாக வாழனும்” என்று வேண்டிக் கொண்டாள்.

வேங்கடமும் செல்வாம்பிகையும் தங்களது மகனின் நல்வாழ்விற்காக வேண்டிக்கொள்ள, ராஜனும் நங்கையும் நிர்மலமான மனத்துடன் நன்றி தெரிவித்திருந்தனர்.

மகள் தனது புகுந்த வீட்டினருடன் ஒட்டுறவாய் வாழ வேண்டுமென வேண்டிக் கொண்டார் சுரேந்தர்‌.

அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்ற அருள்புரிந்த அய்யனாரப்பன்  சுரேந்தரின் வேண்டுதலை மட்டும் நிலுவையில் வைத்தாரோ?

அனைவரும் சாமியை தரிசித்து விட்டு மூல ஸ்தானத்தில் இருந்து வெளியே வர, கோவிலின்  உள்ளே வந்து கொண்டிருந்தார் ராம்.

ஆம் ராஜன் நங்கையின் அலுவலகத்தில் பணிபுரிந்த அதே ராம் தான்.

கோவிலின் சுற்று பிரகாரத்தில் அனைவரும் ஆங்காங்கே நின்றுக் கொண்டு கையிலிருந்த திருநீறு குங்குமத்தை தாளில் வைத்து மடித்து கொண்டிருக்க, உள்ளே வந்த ராமை கண்ட நங்கை உள்ளம் அதிர, ராஜனின் கையை பற்றியவள், “இவர் எப்படி இங்க? இது தான் அவர் சொந்த ஊரா?” எனக் கேட்டாள்‌.

யாரென அவளின் பார்வையின் திசையில் தனது பார்வையை செலுத்தியவன் ராமை கண்டதும், “இவர் எங்க இங்க?” என்று அதே கேள்வியை கேட்டிருந்தான்.

தனது மனைவியுடன் வந்திருந்த ராம், நேராக நங்கை ராஜனின் அருகே வந்து நின்றவர், “எப்படியோ நான் சொன்னது தானே நடந்திருக்கு? என்னமோ தெய்வீக ஃப்ரண்ட்ஷிப் மாதிரி அத்தனை சீன் போட்டீங்க இரண்டு பேரும்” கேலியான‌ பார்வையுடன் கேட்டிருந்தார்.

“உங்க வேலையை பார்த்துட்டு போங்க ராம்” என கோபமாய் உரைத்த ராஜன் நங்கையின் கையை பற்றியவாறு நகர முற்பட,

அனைவரும் ஏதோ பிரச்சனையென ராஜனின் அருகே வந்தனர்.

“என்னமோ நான் இவளை பத்தி தப்பா பேசினேன்னு ஹெச் ஆர்கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சாளே! இப்ப வேறொருத்தனை காதலிச்சிட்டு தானே உன்னை கல்யாணம் செஞ்சிருக்கா! இதுக்கு என்ன அர்த்தமாம்?” வன்மத்துடன் இகழ்ச்சியான பார்வையுடன் கேட்டிருந்தார் ராம்.

“ராம்” என கத்தியிருந்தான் ராஜன்.

“ஹலோ யார் சார் நீங்க? என் பொண்ணை பத்தி தப்பா பேசிட்டு இருக்கீங்க?” என சுரேந்தரும் எகிறிக் கொண்டு வந்தார்.

நங்கை உடலின் நடுக்கத்தை அவளை பிடித்திருந்த தனது கைகளில் உணர்ந்தான் ராஜன். அவள் முகத்தினில் எவ்வித உணர்வும் காட்டாது அமைதியாக இருந்தாள்.

“உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து தான் நான் ஒதுங்கி போனேன். இதுக்கு மேல ஒரு வார்த்தை என் பொண்டாட்டிய பத்தி உங்க வாய்ல வந்துச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன் ராம்” என ஆக்ரோஷமாக உரைத்திருந்தான் ராஜன்.

ராஜனின் கோபமான பேச்சிலேயே ராமின் சட்டையை பிடித்த ஈஸ்வரன், “யார்யா நீ? எங்க வந்து என்ன‌ பேசிட்டு இருக்க! அவனை‌ மாதிரி நான் வயசுக்கு மரியாதை கொடுத்துட்டுலாம் இருக்க மாட்டேன்! பொலந்துடுவேன்! கிளம்பு இங்கிருந்து” என முகத்துக்கு நேராக கர்ஜித்திருந்தான்.

ஆங்காங்கே இவர்கள் நிற்பதை கண்டு ராஜனும் நங்கையும் தனித்து வந்திருப்பதாய் எண்ணி பேசியிருந்த ராமிற்கு, குடும்பம் மொத்தமும் சூழ ஈஸ்வரனின் இந்த பேச்சு மிகுந்த அவமானமாய் உணர செய்தது.

“என் சொந்த ஊர்ல வந்து என் சட்டையையே பிடிக்கிறியா? நீ இங்கிருந்து எப்படி முழுசா போறேன்னு நானும் பார்க்கிறேன்” என்று ராம் வாயை விட,

“நீங்க சொன்னதுலாம் வீடியோ எடுத்தாச்சு. நாங்க இங்கிருந்து போகலைனா நீங்க ஜெயிலுக்கு போவீங்க பரவாயில்லையா?” என கல்யாணி எடுத்திருந்த வீடியோவை காண்பித்தவாறு கேட்டிருந்தான் கருணாகரன்.

“வாங்க போகலாம்! எங்க போனாலும் ஏழுரையை கூட்டுறதே வேலையா வச்சிருக்கீங்க” என ராமின் மனைவி அவரது காதில் கூறியவாறு கையை பிடித்து இழுக்க, சட்டையை சரி செய்து கொண்டு இவர்களை எல்லாம் முறைத்தவாறே மனைவியுடன் சாமியை தரிசிக்க சென்றார் ராம்.

அவர்கள் அங்கிருந்து சென்றதும், ராஜன் நங்கையின் அருகே வந்த செல்வாம்பிகை, “என் மகனை கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி நீ வேற ஒருத்தனை காதலிச்சியா?” எனக் கேட்டார்.

நங்கை சுரேந்தரின் முகத்தை பார்த்தவாறு, ‘சொல்லலையா? ஏன்ப்பா’ என்று கண்களில் நீர் சூழ வாயசைத்து கேட்டிருந்தாள்.

“சம்பந்தி அது வந்து” என சுரேந்தர் ஏதோ கூற வர,

இன்னும் இறுக்கமாக நங்கையின் கையை பற்றிய ராஜன், “அப்பா! அம்மாவை இங்கிருந்து கூட்டிட்டு போங்க” என வேங்கடத்திடம் உரைத்தவன் நங்கையை தங்களது காரின் அருகே அழைத்து சென்றான்.

“எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசலாம் செல்வா! பப்ளிக்ல மானத்தை வாங்காத” என்று செல்வாம்பிகையை அதட்டினார் வேங்கடம்.

இருவரும் அமைதியாய் காரினுள்ளே அமர்ந்திருக்க, பிரகாரம் சுற்றி விட்டு வந்த அகல்யா குடும்பத்தினர் அனைவரும் நங்கை ராஜனிடம் விடைப்பெற்று கிளம்ப, ராஜனின் வீட்டினரும் கிளம்பினர்.

வீட்டை அடைந்ததும் செல்வாம்பிகை நங்கையை நிறுத்தி வைத்து அதே கேள்வியை கேட்க,

“நான் சொல்றேன் சம்பந்தி” என்று தானாகவே சுரேந்தர் முன் வர,

“என் பொண்டாட்டியை பத்தி யாரும் எதுவும் பேச வேண்டாம்” என கத்தியிருந்தான் ராஜன்‌.

“அவளை பத்தி, கல்யாணத்துக்கு முன்பான அவளோட வாழ்க்கையை பத்தி தெரிஞ்சிக்க வேண்டியது புருஷனான நான் மட்டும் தான்! உங்களுக்குலாம் அவ சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை. இனி என் பொண்டாட்டியை இப்படி பொதுவுல நிக்க வச்சி கேள்வி கேட்டீங்க நான் இந்த வீட்டுக்கே வர மாட்டேன் சொல்லிட்டேன்” என்று தனது தாயிடம் உரைத்தவன்,

“அப்பா மொத வேலையா மாமாகிட்ட வாங்கின பத்து லட்சம் ரொக்கத்தை நங்கையோட அக்கவுண்ட்க்கு அனுப்புங்க. அந்த பணத்தையும் நகையையும் அவ என்ன செய்யனும்னு நினைக்கிறாளோ செய்யட்டும்.

இது வரதட்சணை பணம்! நாங்க தான் யூஸ் பண்ணுவோம்ன்ற  உங்க எண்ணத்தை அழிச்சிடுங்கமா! அவ அப்பா மூலமா வந்த எல்லாமே அவளுக்கானது. அவ விருப்பப்பட்டு நமக்கு கொடுத்தா நாம யூஸ் பண்ணிக்கலாம் அவ்ளோ தான்”  தீர்க்கமாக இது தான் முடிவு என்பது போல் உரைத்திருந்தான்.

“பொண்டாட்டி பேச்சை கேட்டு ஓவரா தான்டா ஆடுற நீ” என செல்வாம்பிகை அழுகையுடன் கூற,

“நீ உன் புருஷனை ஆட்டி வச்சதை விட பெரிசா ஒன்னும் நான் ஆடிடலைமா” எனக் கூறிய ராஜன்,

“ஒருத்தருக்கு நாம என்ன செய்றோமோ அதே தான்மா நமக்கு திரும்ப கிடைக்கும். கர்மா யாரையும் விட்டுவைக்கிறது இல்லைமா” என்றான்.

“நங்கை, ரூம்க்கு போய் டிரஸ்லாம் பேக் பண்ணு! நாம லன்ச் சாப்பிட்டதும் சென்னைக்கு கிளம்பிடலாம்” என்றான்.

அவள் அமைதியாக அறைக்குள் செல்ல,

“என்னப்பா இன்னிக்கே கிளம்புறேன்னு சொல்ற! இன்னும் மறுவீடு அது இதுனு சடங்கு சம்பிரதாயம்லாம் இருக்குல” என்றார் வேங்கடம்.

“இல்லப்பா! இதுக்கு மேல இங்க இருந்தேனா அம்மா மனசை சங்கடப்படுத்துற மாதிரி ஏதாவது நான் பேசிடுவேன். இதோட கிளம்புறது தான் எல்லாருக்குமே நல்லது” என்றவன் அறைக்குள் சென்று விட்டான்.

— தொடரும்