நனிமதுர நங்கை 26

“பப்ளிமாஸ்! மை பப்ளி பப்ளிமாஸ்” அவளின் கொழுத்த கன்னத்தை கடித்தவாறு எழுப்பினான் அவன்.

“ஆஆஆஆஆ” என அலறியவள் அவனின் முகத்தை தள்ளி விட,

“எப்படி இப்படி டெடி பியர் மாதிரி சாஃப்ட் சாஃப்ட் ஸ்பாஞ்ச்சியா இருக்க” அவள் இடையோடு கையிட்டு அணைத்து கன்னத்தோடு தனது கன்னத்தை வைத்தவாறு கேட்டான்.

“ம்ப்ச் நேத்து முழுக்க தூங்க விடாம ஒரு வழியாக்கிட்டு இப்பவும் டார்ச்சர் செய்றியே! போடா” என அவனை தள்ளி விட்டவள், போர்வையை இழுத்து மூடி கொண்டு தூங்கினாள்.

அவளின் பேச்சில் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டவனாய், “நானும் தான் தூங்கலை! நீ தூங்கின பிறகும் நான் தூங்கலை தெரியுமா?” என்றான்.

“ஏன்?” முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்காது கேட்டாள்‌.

போர்வையோடு அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன், “ஏன்னா நீ என்கிட்ட வந்ததும் உலகத்துல இருக்க மொத்த சந்தோஷமும் என்கிட்ட வந்த மாதிரி இருக்கு பப்ளிமாஸ்! சந்தோஷத்துல தூக்கமே வரலை” அத்தனை சந்தோஷமாய் உரைத்திருந்தான்.

சட்டென போர்வையை விலக்கி அவன்புறமாய் திரும்பி படுத்தவள், அவன் முகத்தை பார்த்தாள்‌.

அவளின் முகத்தை பார்த்தவாறு, “நிறைய நாள் கவலைல தூங்காம இருந்திருக்கேன். இது தான் ஃபர்ஸ்ட் டைம் சந்தோஷத்துல தூங்காம இருந்தது தெரியுமா” என்றான்.

அவனின் கன்னத்தை வருடியவள்,
“என்கிட்ட லவ் சொல்ல முடியாம தவிச்சியா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப காதலோட வலியை அனுபவிச்ச நாட்கள் அது” என்றான்.


வருடிய கன்னத்தில் பட்டென அடித்து,

“என்கிட்ட அப்பவே உன்‌ காதலை சொல்லிருந்தா இந்த கவலைலாம் தேவையே இல்லாம போய்ருக்கும்‌” என்று அவனை முறைத்தாள்.

“இப்ப கூட நீயா ஒன்னும் உன் லவ்வை சொல்லலை! நான் நேத்து அந்த கிஃப்ட்டை பார்த்தனால தெரிஞ்சிது. இல்லனா இப்படி ஒன்னும் ஒட்டிக்கிட்டு இருந்திருக்க மாட்டோம்” என்று உதட்டை சுழித்தவள் மீண்டுமாய் கண்களை மூடி உறக்கத்திற்குள் செல்ல,

அவளின் காதில், “மொத ராத்திரில மொத்தத்தையும் முடிக்கிறது தானே வழக்கம்! அதனால ஒட்டிக்கிட்டு தான் இருந்திருப்போம்” உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவாறு உரைத்தான்.

‘என்ன இவன் நம்ம மைண்ட் வாய்ஸ்ஸை கேட்ட மாதிரியே சொல்றான்’ என்று அவளின் பெரிய விழிகளை மேலும் பெரியதாய் விரித்து அவனை பார்க்க,

அவளின் கண்களில் முத்தமிட்டவன், “நேத்து மைண்ட் வாய்ஸ்னு நீ வாய்க்குள்ள பேசினது எனக்கு கேட்டுச்சு பொண்டாட்டி” என்று சிரித்தான்.

“அய்யய்யோ!” என்று இவள் வெளிப்படையாகவே அலற, சிரித்தவாறு அவளின் இதழை சிறை செய்தவன் தனக்குள் அவளை சுருட்டிக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து,

“போதும் தூங்கினது! மணி ஏழு ஆகுது! இன்னிக்கு காலைல குலதெய்வ கோவிலுக்கு போகனும்னு சொன்னாங்க! அம்மா இப்பவே உன்னை தேட ஆரம்பிச்சிருப்பாங்க!” என அவளின் கைப்பிடித்து எழுப்பி அமர வைத்தான்.

கண்களை மூடியவாறே சாமியாடிக் கொண்டிருந்தவள், “இதுக்கு தான் நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு சொன்னேன்‌. அப்பா டார்ச்சர் பண்றான்ப்பா இந்த பையன்” என்று சிணுங்கியவாறு மீண்டுமாய் அவள் படுக்க போக,

அவளின் கையை பிடித்து படுக்க விடாமல் தடுத்தவன், “அடி விழும்! படுக்காத! எழுந்திரி” என்று எழுப்பினான்.

சட்டென கண்ணை திறந்து அவனை பார்த்தவள், “அப்பா என்னை அடிக்கிறேனு சொல்றான்ப்பா இவன்! இவனை நம்பி என்னை கட்டிக் கொடுத்துட்டீங்களேப்பா” அழுகை பாவனையில் உரைத்தவாறு எழுந்தவள்,

“எருமை! தடியா! என்னை அடிப்பியா நீ” என்றவாறு அவனது முதுகில் நாலு அடி போட்டாள்‌.

அவளின் கையை பிடித்து நிறுத்தியவன், “அப்புறம் இன்னிக்கு நைட் கைல  கிடைக்கும் போது கைமா ஆக்கிடுவேன் பப்ளிமாஸ்” என்று சிரித்தான்.

“பாரு இன்னிக்கு இந்த ரூம் பக்கம் வரேன்னானு பாரு!” என்று பழிப்பு காட்டியவளாய் குளியலறைக்குள் நுழைந்தாள்‌.

அவளின் பேச்சையும் முக பாவனைகளையும் ரசித்து சிரித்தவனாய் சொகுசாய் கட்டிலில் சாய்ந்து கொண்டான்.

குளித்து முடித்து வெளியே வந்தவளிடம், “சீக்கிரம் கிளம்பி போ! நான் குளிச்சிட்டு வரேன்” என்றவாறு குளியலறைக்குள் நுழைந்தான்.

முகப்பறையில் செல்வாம்பிகை தேநீர் அருந்தியவாறு அமர்ந்திருக்க, “என்ன அத்தை! காபி குடிக்கிறீங்களா?” என்றவாறு வீட்டிற்குள் வந்தார் அவரது தூரத்து உறவினர் ரஞ்சிதம்.

இவர்கள் வீட்டில் இருந்து ஒரு தெரு தள்ளியே ரஞ்சிதத்தின் வீடு இருந்தது.

“ஆமா ரஞ்சிதம்! நீ குடிச்சியா? காபி எடுத்துட்டு வர சொல்லவா?” எனக் கேட்டவாறு செல்வாம்பிகை சமையலறையில் இருந்த பணியாளை ஏவ முற்பட,

“இல்ல வேணாம் அத்தை! அதான் டிபன் சாப்பிடுற நேரமாச்சே!” என்றவர், “என்ன, மருமக இன்னும் அறையை விட்டு வெளில வரல போல” என அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தவாறு கேட்டார்.

“ஆமா ரஞ்சிதம்! வெளிநாட்டுலலாம் வேலை பார்த்த பொண்ணு! நேரத்துக்கு எழுந்திரிச்சி பழகிருக்காதுல” என்றார் செல்வாம்பிகை‌.

“அத்தை கேட்குறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க! வெளிநாட்டுல வேலை பார்க்கிற பொண்ணு, சொத்து பத்துலாம் நிறைய இருக்குனு தான் இப்படி குண்டா இருக்க பொண்ண, ராசா கணக்கா இருக்க நம்ம ராஜாக்கு கட்டி வச்சீங்களா?” என்று கேட்டார்.


அவரின் கேள்வியில்

அதிர்ந்து விழித்தவராய், “அப்படிலாம் இல்லை ரஞ்சிதம்! யாரு அப்படி சொன்னது? வெளில அப்படி பேசிக்கிறாங்களா என்ன?” எனக் கேட்டார் செல்வாம்பிகை.

“ஆமா அத்த! நம்ம சாதியிலேயே நல்லா கலரா அம்சமா படிச்ச பொண்ணுங்கலாம் இருக்கும் போது இந்த பொண்ணுக்கு ஏன் கட்டி கொடுத்தாங்க? ராஜா அந்த பொண்ணை லவ் பண்ணிருப்பானோனு பேசிக்கிறாங்க அத்த” என்றார் ரஞ்சிதம்.

“அதுலாம் ஒன்னும் இல்லை. என் பிள்ளை நாங்க கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான். எனக்கும் இந்த பொண்ணுக்கு கட்டிக் கொடுக்க பெரிசா ஆசை ஒன்னும் கிடையாது ரஞ்சிதம். அந்த பொண்ணோட அப்பா தான் நம்ம ராஜாவுக்கு தான் அவரு பொண்ண கட்டி வைப்பேன்னு கிடையா கெடந்து எங்களை ஒத்துக்க வச்சாரு. அறுபது பவுன் நகை பத்து லட்சம் பணம் தரேன்னு சொல்லும் போது கூட நான் ஒத்துக்கலையே! ராஜாவோட அப்பா தான் நமக்கும் ஒத்த பிள்ளை அவருக்கும் ஒத்த பொண்ணு ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்துக்கலாம்னு சம்மந்தத்துக்கு ஒத்துக்கிட்டாரு” என்று செல்வாம்பிகை கூறிக் கொண்டிருக்க,

ராஜனின் அறையிலிருந்து இதனை கேட்டவாறே வெளியே வந்தாள் நங்கை. 

நங்கை இவர்களின் பேச்சை  கேட்டுக் கொண்டே வந்ததை கவனிக்கவில்லை அவர்கள் இருவரும்.

நேராக சமையலறையில் இருந்த பணியாளிடம் காலை உணவை வாங்கி வந்து இவர்களின் அருகே அமர்ந்த நங்கை, “நீங்க சாப்பிட்டீங்களா அத்தை?” எனக் கேட்டவாறு உண்ண தொடங்கினாள்.

ரஞ்சிதம் செல்வாம்பிகை காதில், “அத்தைனு மட்டு மருவாதை இருக்கா இந்த பொண்ணுக்கு! புருஷன் சாப்பிட்டானா? புருஷன் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டாங்களானு எதுவும் கேட்காம அவ பாட்டுக்கு வந்து உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கா” என்று மெதுவான குரலில் கூறினார்.

செல்வாம்பிகை நங்கையை உறுத்து பார்த்தவாறே இல்லையென தலையசைக்க, “மணி எட்டரை ஆகப் போகுது இன்னுமா சாப்பிடலை! லேட்டா சாப்பிட்டா அல்சர் வந்துடும் அத்தை! டைம்க்கு சாப்பிடுங்க! என்னால பசி தாங்க முடியாது அத்தை” என்றவாறு உண்டு கொண்டிருக்கும் போது அங்கே வந்தான் ராஜன்.

அவசர அவசரமாக உண்டவளுக்கு விக்கல் எடுக்க, “மெதுவா சாப்பிட வேண்டியது தானே” என்றவாறு அவளிடம் தண்ணீரை பருக அளித்தான் ராஜன்.

“சுந்தர் ஒன் மோர் தோசை! எடுத்துட்டு வரியா ப்ளீஸ்?” கண்களை சுருக்கி அவள் கேட்க, இதோ என சமையலறை நோக்கி அவன் செல்லும் முன்னமே,

“நில்லுடா! உன்னை உட்கார வச்சி அவ சாப்பாடு போடனும்டா! அவ என்னடானா உன்னை வேலை வாங்கிட்டு இருக்கா! நீயும் சரி‌ சரின்னு மண்டையை ஆட்டிக்கிட்டு இருக்க! சுந்தர்னு பேர் சொல்லி கூப்பிடுறா!” என்று ஆக்ரோஷமாக கேட்டிருந்தார் செல்வாம்பிகை.

“சும்மா இல்லை அத்தை! 60 பவுன் நகையும் பத்து லட்சம் பணமும் கொடுத்து உங்க பையனை விலைக்கு வாங்கிருக்கேன்! நான் அவருக்கு எஜமானி! அப்ப அவர் நான் சொன்னதை கேட்டு தானே ஆகனும்” வாய்க்குள் சிரிப்பை அடக்கியவாறு நங்கை கூற,

அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்த சுரேந்தர் அவளின் பேச்சில் அதிர்ந்து போனார்.

‘இவளுக்கு எப்படி இது தெரிஞ்சிது’ என்று சுரேந்தர் அவளை பார்க்க, ‘அப்படியா’ என்பது போல் ராஜன்‌ சுரேந்தரை பார்த்திருந்தான்.

ஏதோ வகையில் பேசி தனது பெற்றோரை சுரேந்தர் சம்மதிக்க வைத்திருக்கிறார் என எண்ணியிருந்தவனுக்கு அவர் வரதட்சணை அளித்த விஷயம் தெரியாது.

நங்கையின் பேச்சில், “அய்யோ” என வாயில் கை வைத்து விட்டார் செல்வாம்பிகை.

‘போச்சு! மொத நாளே மாமியார் மருமக சண்டையை ஆரம்பிச்சிட்டா!’ மனதோடு கதறிய ராஜன்,

“அம்மா அவ சும்மா விளையாட்டுக்கு சொன்னாமா! நீங்க தப்பா எடுத்துக்காதீங்க! ரஞ்சிதம் அண்ணி உங்களை பக்கத்து வீட்டு கீதா அக்கா கூப்பிட்டாங்க! என்னனு போய் பாருங்க” என்று அவரை அங்கிருந்து அனுப்பியவன்,

செல்வாம்பிகை மேலும் பேசும் முன் அவரை சமையலறைக்குள் நகர்த்தி சென்றான்.

“நாங்க எப்படிலாம் உன்னை வளர்த்தோம்! நாங்க உன்னை வித்துட்டோம்னு சொல்றா! அவ தான் எஜமானினு சொல்றா! அவளுக்கு மட்டும் தான் உன் மேல உரிமை இருக்கிற‌ மாதிரி பேசுறா! அப்ப எங்களுக்கு உன் மேல உரிமை இல்லையாடா! நீயும் அவளை கேள்வி கேட்காம என் வாயை அடைச்சு கூட்டிட்டு வர!” என கண்களை கசக்கினார் செல்வாம்பிகை.

“இதை நீ வரதட்சனை வாங்கும் போது யோசிச்சிருக்கனும்மா” என்று முறைத்தவன்,

“இதுக்கு ஒரு வழி செய்றேன்” என்றவாறு தோசையை தட்டில் வைத்து எடுத்து வந்தான்.

சுரேந்தர் நங்கையிடம் கோபமாய் பேசி கொண்டிருந்தார்‌.

“என்ன பேச்சு பேசுற நீ? முதல் நாளே இப்படி பேசுனா அவங்க உன்னை பத்தி என்ன நினைப்பாங்க. இது ஒரு நாள் இரண்டு நாள்ல முடிய போற பந்தம் இல்ல மது! ஆயுளுக்கும் தொடரும் சொந்தம்! ஒருத்தருக்கொருத்தர் முகத்தை பார்த்து பேசிக்க முடியாத நிலைக்கு இந்த உறவுகளை தள்ளிடாத மது. இது சுந்தரையும் பாதிக்கும். நான் சொல்றது புரியுதா இல்லையா உனக்கு” என்று கோபமாய் நங்கையிடம் சுரேந்தர் பேசிக் கொண்டே போக,

“நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்! என் பாஸ்ட்லாம் தெரிஞ்சி, வரதட்சணை டிமாண்ட் செய்யாத, வரதட்சணை கொடுக்கிறதும் கொடுக்காததும் நம்ம விருப்பம்னு‌ சொல்ற சம்பந்தமா பாருங்கனு தானே சொன்னேன். நீங்க என்னடானா பணமும் கொடுத்து பொண்ணையும் விக்கிற மாதிரி இவ்வளோ வரதட்சணை கொடுத்து வச்சிருக்கீங்க” என்று கோபமாய் கேட்டிருந்தாள் நங்கை.

அவளின் பேச்சில் கோபம் கொண்டவனாய், “நங்கை” என பல்லை கடித்தவாறு அடிக்குரலில் கத்தியிருந்தான் ராஜன்.

“என்ன பேச்சு பேசுற? வித்துட்டாங்க வாங்கிட்டாங்கனு! இதுக்கு மேல மாமா மனசு கஷ்டபடுற மாதிரி ஒரு வார்த்தை பேசினாலும் அவ்ளோ தான் சொல்லிட்டேன்! ஒழுங்கா சாப்பிடுற வேலையை பாரு” என அவளின் தட்டில் இரண்டு தோசையை வைத்து சட்னியை ஊற்றினான்.

‘ஆமா மாமானை சொல்லிட்டா அப்படியே பொத்துக்கிட்டு வந்துடும்’ உதட்டை சுழித்தவள், அவனை‌ முறைத்தவாறே தோசையை உண்டு கொண்டிருந்தாள்.

சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டே இவர்கள் பேசுவதை கேட்ட செல்வாம்பிகை, ‘அவ என்னை பேசினதுக்கு ஒரு வார்த்தை கேட்டானா? மாமனாரை பேசினதும் கோபப்பட்டு கேட்குறான்! இவளை கட்டி வச்சது தப்பா போச்சே! ஒரே ராத்திரில என் மகனை மாத்திட்டாளே’ என்று மனதோடு புலம்பினார்.

“மாமா சாப்பிடுறீங்களா? தோசை எடுத்துட்டு வரவா?” என்று ராஜன் கேட்க,

“இல்லடா நான் சாப்பிட்டேன்! நீ போய் எடுத்துட்டு வா! நீ இன்னும் சாப்பிடலை தானே! எதையும் கவனிக்காம அவ பாட்டுக்கு கொட்டிக்கிட்டு  இருக்கா பாரு” என்று சுரேந்தர் நங்கையை முறைத்தார்.

“மாமா! சாப்பிடுறதை சொல்லி திட்டாதீங்க மாமா! ஒரு காலத்துல சாப்பிடவே மாட்டேங்கிறானு எவ்ளோ கவலைப்பட்டிருப்போம்” என்றவன்,

“ஏன் மாமா என்னை கேட்காம அவ்ளோ வரதட்சணை கொடுத்தீங்க?” எனக் கேட்டான்.

“என் பொண்ணுக்கு செய்றதுல எனக்கு சந்தோஷம் தான் சுந்தர்” என்றவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, கை கழுவி விட்டு ராஜனுக்கும் சுரேந்தருக்கும் தோசை எடுத்து வந்து கொடுத்தாள் நங்கை.

இருவரும் உண்டவாறே பேசி கொண்டிருக்க, “செல்வா” என்றவாறு வீட்டினுள்ளே வந்தார் வேங்கட சுந்தரம்.

செல்வாம்பிகை வந்து நிற்க, “இந்தா பதநீர் பனை மரத்துல இருந்து இறக்கின கையோட வாங்கிட்டு வந்திருக்கேன். சம்பந்திக்கும் மருமகளுக்கும் கொடு” என்றார்.

‘அவ ஏற்கனவே என்னை மதிக்க மாட்டேங்குறா! இதுல நீங்களும் தலைல தூக்கி வச்சிட்டு ஆடுங்க’ வாய்க்குள்  முணங்கியவராய் சமையலறைக்குள் சென்றார் செல்வாம்பிகை.

“வாவ் தேங்க்யூ மாமா! பாருங்க என் அப்பாக்கு கூட இதெல்லாம் எனக்கு வாங்கி தரனும்னு தோணவே இல்லை” என்று சுரேந்தரை முறைத்தவாறு ஒழுங்கு காட்டியவள், “நீங்க ரொம்ப நல்லவங்கனு சுந்தர் உங்களை பத்தி நிறைய சொல்லிருக்காங்க மாமா” என்றாள் வேங்கடத்திடம்.

சுரேந்தரை வெறுப்பேற்றவே வேங்கடத்திடம் இவ்வாறு கூறியிருந்தாள்.

‘எதுக்கு இவ அப்பாக்கு இவ்வளோ ஐஸ் வைக்கிறா’ என்பது போல் அருகில் அமர்ந்திருந்த நங்கையை அவன் பார்க்க,

“மாமா மனசு குளிர மாதிரி நடந்துக்கிட்டா தானே அத்தையை நான் எவ்ளோ வச்சி செஞ்சாலும் எனக்கு சப்போர்ட் செய்வாரு” ராஜனின் காதில் மெதுவாய் உரைத்தாள்.

“அடிப்பாவி” என்று வாயசைத்தவன் தொண்டைக்குள் தோசை சிக்கி இரும, தலையை தட்டிவிட்டு தண்ணீரை அருந்த அளித்தாள்.

‘இவ இப்படி பேசுற ஆளு இல்லையே! அம்மா என்னமோ பேசி இவளை உசுபேத்திருக்காங்க போலயே!’ என்று எண்ணியவாறே தோசையை உண்டு கொண்டிருந்தான் ராஜன்.

— தொடரும்