நனிமதுர நங்கை 25

இரவு சடங்கிற்காக அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது ராஜனின் அறை!

அன்றைய நாளின் மற்றைய சடங்குகளை இயந்திரத்தனமாக நங்கை செய்ய, மிகுந்த மகிழ்வுடனும் ஈடுபாட்டுடனும் செய்து கொண்டிருந்தான் ராஜன்.

சுந்தரேஸ்வரன் தனது மனைவி மகளுடன் திருமணம் முடிந்ததுமே கிளம்பி விட, கருணாகரனும் கல்யாணியை மட்டும் இருக்க வைத்து விட்டு சென்று விட்டான்.

இரவுணவு உண்டப்பின் மறுநாள் காலை வருவதாய் உரைத்து விட்டு சுரேந்தர் அவருக்கென அங்கிருக்கும் இல்லத்திற்கு சென்று விட, அது வரை அவர்களுடன் அங்கிருந்த அகல்யாவும் கல்யாணியும் தங்களது வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.

திருமணத்திற்கு முந்தைய நாளே ராஜன் தனது அன்னையிடம் பெரியம்மா குடும்பத்தாரை மனம் நோக பேசக்கூடாது எனக் கண்டித்து வைத்திருந்தான். அவ்வாறு அவர் பேசினால் திருமணம் முடிந்த கையோடு சென்னைக்கு சென்று விடுவேன் என அவரை மிரட்டி வைத்திருந்தான். அதன் பலனாய் தான் அகல்யாவின் குடும்பத்தினரிடம் அடக்கி வாசித்தார் செல்வாம்பிகை.

ராஜன் ஈஸ்வரனை அழைத்திருக்கவில்லை. அண்ணனாய் அவரே தம்பியின் திருமணத்திற்கு முன்னிருந்து அனைத்தும் செய்ய வேண்டுமென எண்ணினான். ஈஸ்வரனும் அவன் அழைக்க வேண்டுமென எண்ணவில்லை.‌ அண்ணனாய் செய்ய வேண்டிய செய்முறைகள் அனைத்தையும் செய்து ராஜனின் மனம் குளிர வைத்திருந்தான்‌‌.

அண்ணனும் தம்பியும் ஒதுங்கி இருப்பதாய் தோன்றினாலும் மனதால் மிக நெருக்கமாகவே இருந்தனர்.

அன்றைய அவர்களுக்கான இரவில், நங்கை அந்த அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்தவாறு சுற்றி பார்த்துக் கொண்டிருக்க அறைக்குள் வந்தான் ராஜன்.

பட்டுப்புடவை நகை அணிந்து தேவதையாய் அவளிருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தான் அவன்.

“சுந்தர் இது தான் உன் ரூமா?” மனதினுள் இருக்கும் பதட்டத்தை மறைத்து இயல்பாகவே பேசினாள்.

ஆமென அவன் தலையசைக்க, எழுந்து நடந்தவாறு அறையை சுற்றிப் பார்த்தவள் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவனிடம் நிறைய பேச வேண்டும் கேட்க வேண்டுமென எண்ணற்ற கேள்விகளை யோசித்து வைத்திருந்தவளுக்கு இப்பொழுது ஏனோ நெஞ்சம் படபடக்க ஏதும் நினைவிலேயே இல்லை.

“நங்கை இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க! உனக்கு ஓகேனா‌ ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” எனக் கேட்டான்.

“ஓ எடுக்கலாமே” என்றவள் எழுந்து நின்றாள்.

திருமணத்திற்கு பின்பு புகைப்பட கலைஞர் இவர்களை தனியே புகைப்படம் எடுக்க அழைக்க, நங்கைக்கு விருப்பமில்லை என்றதால் வேண்டாமென உரைத்து விட்டான் இவன்.

ராஜன் வெகு இயல்பாய் அவளின் தோள் மீது ஒரு கையை போட்டு முகத்தோடு முகம் உரச நின்று மறுகையால் கைபேசியை பிடித்திருக்க, தனது தோளை சுற்றியிருந்த அவனது கையை பார்த்தவள், கைபேசியை பார்க்காது வெகு அருகில் தெரிந்த அவனது முகத்தை தான் பார்த்தாள்.

அதை அப்படியே புகைப்படமாக்கினான் இவன். சட்டென முகத்தை கைபேசியை நோக்கி இவள் திருப்ப, இரண்டு மூன்று முறை க்ளிக்கிக் கொண்டான்.

இதற்கு முன்பு பல முறை சுயமி (செல்ஃபி) எடுத்திருக்கிறார்கள் தான்! ஆனால் அருகருகே நின்றாலும் துளியும் ஒட்டுதல் இல்லாமல் நின்றபடி அமர்ந்தபடி எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று இந்த நெருக்கம் அவளின் உடலில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

செல்ஃபி எடுத்ததும் தோளில் இருந்து கையை எடுத்தவன், அவளிடம் அந்த புகைப்படத்தை காண்பித்து, “ரொம்ப அழகா வந்திருக்குல” என்றான்.

எப்படி இவன் இத்தனை இயல்பாக இருக்கிறான்? காலையில் இருந்து தொடர்ந்து நடந்த சடங்குகளில் கலந்து கொண்டு அலைந்து திரிந்த போதும் இப்பொழுது வரை அவனின் முகத்தில் துளியும் சோர்வு இல்லை. அத்தனை மகிழ்ச்சியுடனும் பொலிவுடனும் இருக்கிறான் என்பதை அவனது முகத்தை நோக்கியப்படியே அவள் சிந்தித்து கொண்டிருக்க,

அவளின் ஆராய்ச்சி பார்வையை பார்த்தவன், “உன் புருஷன் உனக்கேத்த மாதிரி அழகா இருக்கேனா?” சிரித்தவாறு கேட்டுக் கொண்டே அவளருகில் ஒட்டியபடி அமர்ந்தான்.

இந்த சுந்தரராஜன் முற்றிலும் புதிது அவளுக்கு. அத்தனை கண்ணியத்துடன் தன்னிடம் நடந்து கொள்பவன், இன்று தன்னிடம் எடுத்து கொள்ளும் இந்த உரிமை நெஞ்சுக்குள் கிலி பிடித்தது.

‘அய்யய்யோ இன்னிக்கு எல்லாத்தையும் முடிச்சிடுவான் போலயே’ எண்ணியவளாய், “எனக்கு தூக்கம் வருது சுந்தர்” என்று அவசரமாய் கட்டிலின் ஓரமாய் சென்று சுருண்டு படுத்துக் கொண்டாள்.

“ஹே டிரஸ் மாத்திட்டு படுடா” என்றான் இவன்.

“இல்ல பரவாயில்ல” என்றவள் கூறவும், அவளின் புறமாய் வந்து நின்றவன்,

“நீ எழும்பு முதல்ல!” என அவளின் கையை பிடித்து எழுப்பி அமர வைத்தவன், “என்கிட்ட என்ன பயம் உனக்கு?” என்று அவளை முறைத்தான்.

“பயமா! அதெல்லாம் ஒன்னுமில்லையே! நான் ஏன் பயப்படனும் உன்னை பார்த்து! காலையிலேயே எழுப்பி விட்டுட்டாங்க! நிஜமாவே தூக்கம் வருது சுந்தர்” என்றாள் கொட்டாவியை விட்டப்படி!

“சரி போ துணியை மாத்திட்டு வந்து படு! உன்னோட டிரஸ், பேக்லாம் என்னோட கப்போர்ட்லயே அம்மாவை வைக்க சொல்லிருந்தேன். அந்த கப்போர்ட்ல தான் இருக்கும் எடுத்துக்கோ” என்றவன், தனக்குரிய உடையை எடுத்து கொண்டு ஓய்வறை நோக்கி சென்றான்.

அந்த கப்போர்ட்டை திறந்தவள், மேலே எட்டாத உயரத்தில் இருந்த அவளது துணி நிறைந்த பையை கட்டை விரலில் நின்று எக்கியவாறு இழுத்தாள். அவளின் இழுப்பில் பையுடன் அதனடியில் கிஃப்ட் கவரால் சுத்தப்பட்ட பரிசு பொருளும் அவளின் கையில் வந்து விழுந்தது.

அதனை எடுத்து பார்த்தவளுக்கு இந்த கிஃப்ட் கவரை இதற்கு முன்பே எங்கோ பார்த்த நினைவு வந்தது.

ஜெர்மனி விமான நிலையத்தில் இவனை வழியனுப்ப வந்த போது அவளுக்காக இவன் வாங்கியிருந்த பரிசாக இதை காண்பித்திருந்தான். ஆனால் அதனை அவளிடம் அளிக்கும் முன்னரே கேள்விப்பட்ட தாயின் உடல்நிலை பற்றிய செய்தியினால் இப்பரிசை அவளிடம் வழங்காது சென்றது அவளின் நினைவுக்கு வந்தது.

அவளின் கையில் இந்த பரிசை பார்த்ததும் ராஜனுக்கு திக்கென்று இருந்தது. இந்த பரிசு பொருளை கொடுத்து தனது காதலை கூறுவதாக தானே திட்டமிட்டிருந்தான்.

அந்த பரிசு கவரை இவள் கிழிக்க முற்பட, “நங்கை” என அழைத்தான் இவன்.

அவனை‌ நிமிர்ந்து பார்த்தவள், “சுந்தர் இது நீ அன்னிக்கு ஏர்போர்ட்ல  எனக்காக வாங்கின கிஃப்ட்னு காண்பிச்சது தானே! நாலஞ்சு வருஷம் இருக்கும்ல! இன்னும் அதை அப்படியே வச்சிருக்கியா?”  என்று மகிழ்ச்சி பொங்க கேட்டாள்.

தனக்கான பரிசு பொருளை கண்ட மகிழ்ச்சி அது!

“ஆமா உனக்கான கிஃப்ட் தான் இது! அதுக்கு பிறகு நானே இதை மறந்துட்டேன்! இப்ப தான் அதை பார்க்கிறேன்” என்றவன்,

“சரி‌ போ நீ! இதை அப்புறம் பார்க்கலாம்” என்று அவளிடம் இருந்து அதை வாங்க முற்பட, அதை அவனிடம் வழங்காது கையை பின்னோடு எடுத்து சென்று மறைத்தவள், “என்னோட கிஃப்ட் என் கைக்கு வந்துடுச்சு! இனி என்கிட்ட தான் இருக்கும்” என்றவாறு தனது பையினுள் வைத்தவள் வேறு உடையை எடுத்து கொண்டு குளியறைக்குள் சென்றாள்.

“உஃப்” என பெருமூச்சு விட்டவனாய் கட்டிலில் அமர்ந்தான் ராஜன்.

உடையை மாற்றி வந்தவள் முதல் வேலையாய் அந்த பரிசு பொருளை கையில் எடுக்க, ‘அய்யய்யோ’ என பதறிப்போனான் அவன்.

‘அய்யோ இந்த கிஃப்ட்டை பிரிச்சாலே நான் இவளை காதலிச்சது இவளுக்கு தெரிஞ்சிடுமே’ தடதடக்கும் இதயத்துடன் அவளை பார்த்தவன்,

“தூக்கம் வருதுனு சொன்னல! தூங்கு நீ! இதை நாளைக்கு பார்த்துக்கலாம்” என அதை வாங்க முற்பட்டான்.

அவனிடம் அளிக்காது அப்பரிசை நெஞ்சோடு அணைத்து பிடித்தவள், “நீயே எப்பவாவது தான் கிஃப்ட்னு வாங்கி கொடுப்ப! அப்படிப்பட்ட கிஃப்ட்டை பார்க்காம படுத்தா எனக்கு தூக்கமே வராது” என்றவள் அதை பிரித்தாள்.

கட்டிலில் அவனருகில் அமர்ந்து அதனை பிரித்து பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“ஹே வாவ்! போட்டோ புக்கா சுந்தர்” எனக் கேட்டாள்.

என்ன தான் இதயம் தடதடத்தாலும் அவளின் இந்த மகிழ்வையும் ஆச்சரிய பார்வையையும் கண்டு ரசித்தவனுக்கு கை தானாக அவற்றை தனது கைபேசியில் காணொளியாக எடுக்க முனைந்தது.

அவன் காணொளி எடுப்பதை பார்த்து சிரித்தவள், “ஹ்ம்ம் மெமரீஸ்” என்றாள்.

ஸ்பிரிங் பைண்டிங் போன்று ஒரு புத்தகம் அது! புத்தக முன் பக்க அட்டையிலேயே அவள் வரைந்து கொடுத்த அவனது புகைப்படமே இருந்தது.

“வாவ் ஜெர்மனில நான் உன்னை வரைஞ்சு கிஃப்ட் பண்ண பெயிண்ட்டிங்ஸ்லாம் பைண்ட் செஞ்சிட்டியா?” எனக் கேட்டவாறு அதை பிரித்தாள்.

முதல் பக்கத்தில் அவன் கணிணி முன்பு அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பது போன்று அவள் வரைந்திருந்த ஓவியம் இருந்தது.

இந்த நிரலாளனை (programmer) உன் நிரந்தரனாய் ஏற்றுக்கொள்வாயா சகி?

என்று அந்த ஓவியத்தின் கீழே எழுதியிருந்தான் இவன்.

“ஹே சுந்தர்! உனக்கு கவிதைலாம் எழுத தெரியுமா? சொல்லவே இல்ல” என்றவாறு அடுத்த பக்கத்தை திருப்பினாள்.

அவன் இருக்கையில் அமர்ந்து உணவுண்ணும் ஓவியம் அது!

உண்ணும் உணவின் சுவையை உன் இதழ் வழி உணர காத்திருக்கிறேன்!

என் காத்திருப்பின் பலனாய்

எனை சேர்வாயா சகி?

என்று அவன்‌ எழுதியிருந்ததை பார்த்தவள்,

“பார்ரா கவித கவித” என்று சிரித்தாள்.

அடுத்ததாய் அவன் கைபேசியில் பார்வையை பதித்தவாறு நிற்கும் ஓவியம்!

சட்டென இதற்கு என்ன எழுதியிருப்பானென கீழே சென்றது அவளின் பார்வை!

ஆறாம் விரலாய் கைக்குள் இருக்கும் கைபேசியை போல்

உயிரில் கலந்த சுவாசமாய்

என் கை வளைக்குள் இருப்பாயா சகி?

“வேற லெவல்” என்றவள், அடுத்த படத்தை பார்த்தாள்.

கண்ணாடி முன்நின்று அவன் தலை வாரும் ஓவியம் அது!

என்னுள் உன்னை கண்டுகொண்டேன் சகி!

உன்னில் என்னை உணர்ந்தாயா நீ?

“என்னடா எல்லாமே காதல் கவிதையா இருக்கு” என்று கேட்டவளுக்கு அப்பொழுது தான் கல்யாணி இவனுக்கு காதல் தோல்வி இருப்பதாய் உரைத்தது நினைவிற்கு வர,

“சுந்தர்! நீ யாரையும் காதலிச்சியா?” சட்டென கேட்டே விட்டாள்.

தோழனிடம் இயல்பாய் கேட்பது போல் கேட்டிருந்தாள்.

அது வரை வீடியோ எடுத்து கொண்டிருந்தவன், சட்டென அதை நிறுத்தி விட்டு அவளை கலவரமாக பார்த்தான்.

“இதை முழுசா பார்த்து முடிக்கும் போது உனக்கே தெரியும்” இறுக்கமான முகத்துடன் உரைத்தான்.

அவளின் முகம் சட்டென சுருங்கி போனது.

அவன்‌ யாரையும் காதலித்திருக்க மாட்டானென தீர்க்கமாய் நம்பி இருந்தவளுக்கு அவனது இந்த பதில் மனதினுள் ஏமாற்றத்தை அளித்து ஒருவித வலியை கொடுத்தது.

சட்டென கலங்கிய மனதின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியாமல், முயன்று முகத்தை இயல்பாக்கியவள் அடுத்த பக்கத்தை திருப்பினாள்.

அவன் மிதிவண்டியை ஓட்டிச் செல்லும் ஓவியம் அது!

உன் வாழ்வின் பயணத்தில்

உன்னவனாய் எனை ஏற்று

எனக்கு வாழ்வளிப்பாயா சகி?

“நைஸ்” என்றவள்,

அடுத்த ஓவியத்தை பார்த்தாள்.

ஒரு காலை சுவற்றில் மடித்து வைத்து, தலையை கோதியவாறு சுவற்றில் சாய்ந்து நிற்கும் ஓவியம் அது!

நித்தம் தவித்து

நித்திரை கொள்ளாது

சித்தம் கலங்கி

காத்திருக்கிறேன்

உனக்காக!

எனை ஏற்றுக்கொள்வாயா சகி?

யாருக்காக இதை இவன் எழுதியிருக்கிறான் என்கின்ற எண்ணத்தினூடே அடுத்தடுத்த கவிதைகளை வாசித்து வந்தவளுக்கு இவையெல்லாம் அவன் தனக்காக எழுதியிருப்பானோ என்ற சந்தேகம் துளியும் வரவேயில்லை.

அந்த கடைசி பக்கத்தை பார்த்தவளின் கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றது.

கையில் ஒரு பூனைக்குட்டியை வைத்து கொஞ்சிக் கொண்டிருப்பது போல் அவளே அவளை வரைந்த ஓவியம் அது!

‘அவன் காதலிச்ச பொண்ணு நானா’ சற்றாய் சந்தேகம் துளிர்த்தது.

அந்த ஓவியத்தின் கீழே சென்றது அவளின் பார்வை!

என் சகலமுமாகிய சகியே!

பரமனின் பாதியாம் பராசக்தி போல்

என் சரிபாதியாய் வருவாயா
என் வாழ்வில்
என் மனதிற்கினிய மதுர நங்கையே!

‘சுந்தர் காதலிச்ச பொண்ணு நானா?’

நம்ப முடியவில்லை அவளால்.

அவளின் பெரிய கண்கள் விரிய அவனை பார்த்தாள் நங்கை.

தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன். அவளை நிமிர்ந்து பார்க்க துளியும் துணிவில்லை அவனுக்கு.

திட்டப் போகிறாள், கத்தப் போகிறாள், தன்னை கேவலமாய் நினைக்க போகிறாள் என பலவிதமாக யோசித்தவாறு உடல் இறுக அமர்ந்திருந்தவனை விழிகள் நிறைத்த நீருடன் பார்த்தவள்,

“எப்போதுலருந்து சுந்தர்?” எனக் கேட்டாள்.

அவன் நிமிர்ந்து அவளை பார்க்க,

“எப்போதுலருந்து இந்த காதல்” அவளின் கண்களை விட்டு வெளியேறி இருந்தது கண்ணீர்.

தொண்டைக்குள் எச்சிலை விழுங்கியவனாய், “நீ செகண்ட் டைம் ஜெர்மனி வந்தப்ப ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருந்தல அப்ப தான் எனக்கே தெரிஞ்சிது” என்றான்.

அவனையே வெறித்து பார்த்தவாறு, “ஏன்டா சொல்லலை” எனக் கேட்டாள்.

“சொல்ல வந்தேன்.. ஆனா” அவன் ஏதோ சொல்ல வரும் முன்,

“சரி அன்னிக்கு ஏர்போர்ட்ல இதை என்கிட்ட கொடுக்க முடியாம போச்சு! ஆனா அதுக்கப்புறம் ஏன்டா சொல்லலை” விழிகளில் இருந்து நீர் நில்லாமல் வழிந்தோட கேட்டிருந்தாள்.

அவள் என்ன நினைக்கிறாள் என இவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவளின் அழுகையை காண சகிக்காது, “ஏன்டா உன்னையே கஷ்டப்படுத்திக்கிற” எனக் கேட்டு, அவளின் கையை பற்ற முனைந்தான்.

தனது கையை பிடிக்க விடாது உதறியவள், “ஏன்டா சொல்லலை” உதடு துடிக்க அழுகை குரலில் கேட்டாள்.

“டேய் பப்ளிமாஸ்” என அவளை அவன் அணைக்க,

அவன் சட்டையை பிடித்து உலுக்கி, “ஏன்டா சொல்லலை! உன்னை விட எனக்கு அந்த அஷ்வின் பெரிசா டா! அவனை கட்டிக்க மனசில்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமாடா! ஏன்டா என்கிட்ட சொல்லலை” என்றவள் அவன் மார்பிலேயே சாய்ந்து கதறி அழுதாள்.

அவளை அணைத்து முதுகை வருடியவனின் கண்களும் குளமாகின.

அவன் மார்பில் முகத்தை புதைத்தப்படியே அழுகையுடன் விம்மிய குரலில், “ஒரு வார்த்தை சொல்லிருந்தா உன் மேல எனக்கு காதலே இல்லைனா கூட, கல்யாணம் செஞ்சிட்டு காதலை வர வச்சிக்கலாம்னு அப்பா அம்மாவை எதிர்த்து கூட உன்னை கல்யாணம் செஞ்சிருப்பேனே! உன்னை விட எவன்டா என்னைய நல்லா பார்த்துக்க முடியும்”

அவனின் கை அணைப்பிற்குள்ளேயே மார்பில் இருந்து முகத்தை மட்டுமாய் நிமிர்த்தி அவனை பார்த்து கேட்டாள்.

கலைந்த தலை முடியும், கண்ணீரினால் சிவந்திருக்கும் கண்களும், அழுகையில் துடித்த உதடுமாய் அவனை பார்த்து கேட்டவளை கண்டவனின் உள்ளம் கசிந்துருகியது.

எனக்காய் என்னை மணந்து கொண்டிருப்பேன் என்றுரைத்தவளின் அன்பை எண்ணி நெகிழ்ந்திருந்தான்.

அவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்.

“நீ உன் அம்மாகிட்ட எங்க நட்பை கொச்சப்படுத்தாதீங்கனு சொன்னதை கேட்டேன்டா பப்ளிமாஸ்” என்றான்.

சட்டென அவன் மார்பில் இருந்து நிமிர்ந்தவள், “வேற வழியே இல்லாம உன்னை லாஸ்ட் ஆப்ஷன் மாதிரி அவங்க சொல்லும் போது அவங்க வாயை அடைக்க எனக்கு வேற வழியே தெரியலை சுந்தர்!” என்றவாறு எழுந்து அம்ர்ந்தாள்.

“உன்னோட வர்த் (worth) உன்னோட வேல்யூ (value) எதுவுமே புரிஞ்சிக்காம,  எனக்கு கட்டிக்க ஆளே கிடைக்கலைனு உன்னை கட்டி வைக்க கேட்டது சுத்தமா பிடிக்கலை. இப்ப அப்பாவும் அப்படி தானே எனக்கு மாப்பிள்ளையே கிடைக்காதுனு உன்னை பிடிச்சு கட்டி வச்சிட்டாருனு அவ்ளோ கோபம்”

“நீ தங்கம் சுந்தர்! சொக்க தங்கம்! உன்னோட மதிப்பு யாருக்குமே தெரியலை! உனக்கு மனைவியா யாரு வந்தாலும் உன் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்ப! அப்படிப்பட்ட உனக்கு ஏதோ போனா போகுதுனு என்னை கட்டி வைக்கிற மாதிரி அவங்க பேசினது தான் பிடிக்கலை. உன்னுடைய தரத்தை அவங்க குறைக்கிற ஃபீல்! அப்படி போனா போகுதுனு கட்டி வைக்கிற அளவுக்கு அவன் ஒன்னும் தரந்தாழ்ந்தவன் இல்லைன்ற கோபம் ஆதங்கம் தான் நான் அன்னிக்கு அம்மாகிட்ட பேசினதுக்கும் அப்பாகிட்ட சண்டை போட்டதுக்கும் காரணம்” என்றவாறு கண்களை துடைத்தாள்.

அழுகையினால் இன்னும் தொண்டையில் விம்மல் நிற்காது வந்தது.

இவர்கள் குடிப்பதற்காக வைத்திருந்த பாலை எடுத்து டம்ளரில் ஊற்றி அவளிடம் பருக அளித்தான்.

அமைதியாக பருகி முடித்தவள் சற்று ஆசுவாசமாகியதும், “அய்யோ ஃபுல்லா குடிச்சிட்டேன் சுந்தர்! உனக்கு இருக்கா பால்” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் மென்னகை புரிந்தவனாய், “பால் இருக்கு! ஆனா எனக்கு வேண்டாம்” என்றவன் கட்டிலில் அமர்ந்து இரு கரங்களையும் விரிக்க, பாந்தமாய் அவனின் அணைப்பிற்குள் தன்னை புகுத்திக் கொண்டாள் நங்கை.

இருவரும் மௌனமாய் அந்நொடியை சுகித்திருந்தனர். அவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணியவாறு அமைதியாய் இருந்தனர்.

“எனக்கு உன்னை பிடிக்கும் சுந்தர்! ரொம்ப ரொம்ப பிடிக்கும்! இப்பவும் உன்னை காதலிக்கிறேனானு தெரியாது சுந்தர்! ஆனா நீ என்னை காதலிக்கிறனு சொன்னா, என் கூட வாழ்ந்தால் தான் நீ சந்தோஷமா வாழுவனு சொன்னா, உனக்காக உன் கூட வாழ்வேன் சுந்தர்! உன் சந்தோஷத்துக்காக உன் கூட வாழ்வேன்! உன்னை காதலிக்க முயற்சி செய்வேன்! உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன்” நிமிர்ந்து அவனை பார்த்தவாறு உரைத்தாள்.

மீண்டும் மீண்டும் அவள் அன்பினால் அவனை திணறடித்துக் கொண்டிருந்தாள் நங்கை. உணர்வின் பிடியில் இருந்தான் அவன். இவள் என்னவள் எனக்கானவள் என்ற காதலின் பூரிப்பில் மிதந்து கொண்டிருந்தான்.

மீண்டுமாய் அவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான். கண்களை மூடி அந்த முத்தத்தினை உணரத் தொடங்கினாள் அவள்.

உதடுகள் நெற்றியில் இருந்து முத்த ஊர்வலத்தை கன்னத்துக்கு கொண்டு செல்ல, எச்சில் ஈரத்தின் குளுமையை உணர்ந்தாள் அவள்.

உடலெல்லாம் குளிர் பரவியது போன்று சில்லிட்டது அவளுக்கு. அடுத்தடுத்த முத்தங்கள் எல்லாம் அழுத்தமானதாய் அவனின் காதலை உணர்த்தி கொண்டிருக்க, உணர்வுகளின் கொந்தளிப்பை உள்ளுக்குள் உணர்ந்தாள் அவள்.

அவனின் முத்த ஊர்வலம் நின்று போக, லேசாய் கண்களை திறந்து அவனை பார்த்தாள். அவளின் கன்னத்தை தாங்கி கண்களை நோக்கியவாறே இதழோடு இதழ் சேர்த்திருந்தான் அவன். அவனுள் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.

அவள் இடை தீண்டி அவன் முன்னேறி செல்ல, அவள் இமை மூடி வெட்கம் கொள்ள, உடை சரிந்து விடை சொல்ல, அவனின் ஆளுமைக்குள் விரும்பியே அவள் அடங்கி செல்ல, அவனுள் அவளாய், அவன் மட்டுமே அவளின் யாவுமாய் மாறி இருக்க, ஈருடல் ஓருயிராய் கலந்திருந்தனர்.

நிறைவின் மகிழ்வில் சேயாய் அவளை தாங்கியவன், அவளின் தலையையும் முதுகையும் வருடியவாறு தன்னோடு சேர்த்தணைத்து கொள்ள, அவன் மார்போடு ஒன்றியவாறு உறங்கிப் போனாள் அவள்‌.

— தொடரும்