நனிமதுர நங்கை 24

சுரேந்தர்  ராஜனிடம் பேசிவிட்டு கைபேசியை வைத்ததும், அடுத்தடுத்த நிகழ்வுகளை திட்டமிட தொடங்கினார்.

அவரின் மனம் ஆறவே இல்லை. ஒரு வார்த்தை முன்பே கூறியிருந்தால் இந்நேரம் பேரன் பேத்தி என தனது மகள் மகிழ்வாய் வாழ்வதை பார்த்திருக்கலாமே! இவ்வாறு மாப்பிள்ளைக்காக அலைந்து திரிந்திருக்க வேண்டியது இருந்திருக்காதே என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டிருக்க, மீண்டுமாய் அழைத்தான் ராஜன்.

“அங்கிள்! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்றவன் தொடங்கியதும்,

“என்ன சொல்ல போற நீ? இத்தனை நாள் சொல்லாம விட்டதுக்கே உன் மேல செம்ம கோபத்துல இருக்கேன். இதுக்கும் மேல் என்ன சொல்ல போற நீ?” கோபத்துடனேயே கேட்டார்.

தான் காதலை உணர்ந்த நொடியில் இருந்து நங்கை தனது தாயிடம் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்த வேண்டாமென கூறியது வரை அவரிடம் கூறி முடித்தவன்,

“நான் அவளோட நட்பை தவறாக யூஸ் பண்ணிக்கிட்டதா  அவ நினைச்சிட்டா என்னால் தாங்கிக்கவே முடியாது அங்கிள்! இத்தனை நாளா ஃப்ரண்ட்டா என்கிட்ட நடிச்சிட்டு இருந்தியானு கேட்டா நான் செத்தே போய்டுவேன் அங்கிள்” அத்தனை வேதனையுடன் கூறினான்.

அவனின் மன உணர்வுகளை புரிந்து கொண்டவராய், “இந்த கல்யாணம் நடக்கும் சுந்தர்! ஆனா காதல் கல்யாணமா நடக்காது! நானா இஷ்டப்பட்டு நடத்தி வைக்கிற கல்யாணமா தான் நடக்கும். உன் காதலை அவகிட்ட சொல்றதும் சொல்லாததும் உன் விருப்பம்” என்று அலைபேசியை வைத்து விட்டார்.

மறுநாளே ராஜனின் தாய் தந்தையரிடம் நேரில் சென்று பேச மதுரைக்கு கிளம்பி விட்டார். ராஜன் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்ததால் அவனிடம் அதற்கு மேல் ஏதும் அவர் பேசவில்லை. நங்கையிடம் தாங்கள் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டினை பார்க்க போவதாய் உரைத்து பயணித்திருந்தார்.

“பொண்ணுக்கு வயசு அதிகம்! சம வயசா வேற இருக்காங்க! பொண்ணு குண்டா இருக்கு! பார்க்க சுமாரா வேற இருக்கு! ராஜனுக்கு வயசு கம்மியா நல்ல கலரான பொண்ணுங்க ஜாதகம்லாம் வந்துட்டு தான் இருக்கு” செல்வாம்பிகை விருப்பமில்லாது இழுக்கவும்,

“எனக்கு ஒரே பொண்ணுன்றனால என் பொண்ணுக்கு தான் என் சொத்து முழுக்க வந்து சேரும்! அவளும் நல்ல வேலைல இருக்கா! கல்யாண செலவு முழுக்க நானே ஏத்துக்கிறேன். நீங்க கேட்ட நகையை விட அதிகமாவே போடுறேன்” என்றார் சுரேந்தர்.

ஏற்கனவே ராஜன் மூலம் அவனின் குடும்பத்தினரை பற்றி அறிந்து வைத்திருந்த சுரேந்தர், செல்வாம்பிகையிடமும்  வேங்கடத்திடமும் அவர்களுக்கு ஏற்றவாறு பேசி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்தார்.

நங்கையின் புகைப்படத்தை தான் பார்த்திருந்தார் செல்வாம்பிகை. அவருக்கு நங்கையின் தோற்றம் அத்தனையாய் ஈர்க்கவில்லை‌! சுரேந்தருக்கு நங்கை ஒரே பெண் என்பதும், நங்கையின் சொத்துக்கள் அனைத்தும் தனது மகனுக்கே வந்து சேரும் என்பதும், இவர்கள் கேட்ட நகையை விட அதிகமாய் நகையையும்  வரதட்சணையையும் வழங்குவதாய் அவர் உரைந்திருந்ததும், செல்வாம்பிகையை இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தது. வேங்கடத்திடம் பேசி ஒப்புக் கொள்ள வைத்தாலும், அவர் தனது மகனிடம் பேசி அவனுடைய சம்மதத்தை கேட்டறிந்து கொண்ட பின்னரே திருமண தேதியை குறிக்க ஒத்துக் கொண்டார்.

எவரிடமும் ராஜன் நங்கையை காதலித்ததை உரைக்கவில்லை. இத்திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணமாய் நடந்தேற வேண்டுமென்பதற்கேற்ப அனைத்தையும் திட்டம் போட்டு செய்தவர் ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொள்ள பேசி முடிவு செய்த பின்னரே பெங்களூர் கிளம்பினார்.

கல்யாணியும் ஈஸ்வரனிடம் இருவரின் நட்பை பற்றி உரைத்து திருமண தேதி குறிக்கப்பட்டதை தெரிவித்தாள்.

மதுரை முழுக்க இருக்கும் அவர்களின் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் ராஜனின் திருமணம் பற்றிய செய்தி பரவியிருந்தது.

மதுரையிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த சுரேந்தருக்கு எவ்வாறு நங்கையை சம்மதிக்க வைப்பது என்ற யோசனை தான் அதிகமாக இருந்தது.

நங்கையிடம் தான் பேசி கொள்வதாய்  சுரேந்தர் உரைத்திருக்க, ராஜனுக்கு நங்கை இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பதில் அத்தனை பதட்டமாய் இருந்தது.

அன்றிரவு பெங்களூர் அடைந்து ஓய்வாக உறங்கி எழுந்தவர் மறுநாள் காலை நங்கையிடம் பேசுவதற்காக அவளது அறைக்கு சென்றார்.

தன் கையினாலேயே அவளுக்கு காபி போட்டு கொடுத்தவர், “இது வரைக்கும் அப்பா எதுக்காகவும்  உன்னை கம்பெல் செஞ்சது இல்ல! ஆனா இப்ப நான் ஒன்னு கேட்பேன். எனக்காக செய்வியா?” எனக் கேட்டார்.

“என்னப்பா பீடிகைலாம் பலமா இருக்கு! அப்படி என்ன‌ விஷயத்தை கேட்க போறீங்க?” எனக் கேட்டாள் நங்கை.

“நீ சுந்தரை கல்யாணம் செஞ்சிக்கனும்” பட்டென போட்டு உடைத்திருந்தார்.

“என்னப்பா? என்ன சொன்னீங்க?” தான் சரியாக தான் கேட்டோமா என்று யோசித்தவளாய் மீண்டும் கேட்டாள்.

“நீ நம்ம சுந்தரராஜனை கல்யாணம் செஞ்சிக்கனும்னு சொன்னேன். அப்பாவோட கடைசி ஆசைனு வச்சிக்கோயேன்” அவரின் கண்கள் அவளிடம் இறைஞ்சியது.

“என்னப்பா கடைசி ஆசை அது இதுனு” பட்டென நாற்காலியில் இருந்து எழுந்து தந்தையினருகில் சென்றவள் அவரின் கைகளை பற்றிக் கொண்டாள்.

“என்னாச்சு திடீர்னு உங்களுக்கு? நீங்களும் இல்லனா நான் என்னாவேன்னு யோசிச்சு பார்த்தீங்களா? இப்படிலாம் பேசாதீங்கப்பா” அவளின் விழிகளில் நீர் கோர்த்து கொண்டது.

“அதே கவலை தான் எனக்கும்! நான் இல்லனா நீ என்னாவ? உனக்குனு யார் இருப்பா! வேறொருத்தனை நம்பி உன்னை கட்டிக் கொடுக்கிறதுக்கு ஏன் நம்ம சுந்தரையே நீ கல்யாணம் செஞ்சிக்க  கூடாது” என்று கேட்டார்.

“அப்பா! எனக்காக அவன் வாழ்க்கையை தியாகம் செய்ய சொல்றீங்க! இது எந்த விதத்துல நியாயம்! அதுவுமில்லாம அவன் என்னை ஃப்ரண்ட்டா தான் பார்க்கிறான். நீங்க இப்படி நினைக்கிறது தெரிஞ்சாலே அவன் மனசொடஞ்சு போய்டுவான்” என்றாள்.

“அவன் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான் மதும்மா” என்றார் சுரேந்தர்.

“என்னது?” அவளின் பெரிய கண்கள் விரிய அத்தனை ஆச்சரியத்துடன் வந்து விழுந்தன அவளின் சொற்கள்.

“ஆமாடா அவன் ஓகே சொல்லிட்டான்‌!” என்றவர் கூறிய நொடி, அவர்களினருகே மேஜையில் இருந்த சுரேந்தரின் கைபேசி அலறியது.

ராஜன் தான் அழைத்திருந்தான்.

ராஜன் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருப்பானென அவளால் சுத்தமாக நம்ப முடியவில்லை. தந்தை அவனை ஏதேனும் பிளாக் மெயில் செய்து சம்மதிக்க வைத்திருப்பாரோ என்று தான் தோன்றியது நங்கைக்கு.

அந்த அலைபேசி அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்ட நங்கை, ராஜன் ஹலோ எனக் கூறும் முன்பே,

“சுந்தர் என்னை கல்யாணம் செஞ்சிக்க உனக்கு சம்மதம்னு அப்பாகிட்ட சொன்னியா?” எனக் கேட்டாள்.

சுரேந்தரின் அலைபேசியில் திடீரென கேட்கப்பட்ட அவளின் குரலிலும் அதில் வெளிப்பட்ட கேள்வியிலும் ஸ்தம்பித்து நின்ற ராஜன் உள்ளே போன குரலில், “ஆமா நங்கை! சம்மதம் சொன்னேன்” என்றான்.

அவனது குரலின் மாறுபாட்டை குறித்து கொண்டவளாய், “அப்பா அவங்க ஹெல்த் இஷ்யூஸ் ஏதாவது சொல்லி உன்னை பிளாக்மெயில் செஞ்சி ஒத்துக்க வச்சாங்களா சுந்தர்?” எனக் கேட்டவாறு தந்தையை முறைத்தாள்.

அவளின் கேள்வியிலும் முறைப்பிலும், “ஈஸ்வரா” என தலையில் கை வைத்து விட்டார் சுரேந்தர்.

‘அடேய் லவ் பண்றேன்னுலாம் சொல்லி தொலைஞ்சிடாதடா! அவ எப்படி ரியாக்ட் செய்வானே தெரியலை’ என்றவாறு அவளையும் கைபேசியையும் மாறி மாறி பார்த்தார் சுரேந்தர்.

ஆழ்ந்த பெருமூச்சு விட்டவனாய், “அப்படிலாம் இல்லடா பப்ளிமாஸ்! நீ ஏன் இப்படிலாம் யோசிக்கிற! உனக்கு என்னை கட்டிக்க விருப்பமில்லையா? உனக்கு ஓகே இல்லனா சொல்லு நிறுத்திடலாம். உனக்கே என்னை பிடிக்கலைனா வேற யாரு என்னை கட்டிப்பாங்க சொல்லு! நான் அப்புறம் ஆயுளுக்கு ஒத்த ரோசாவா சுத்த வேண்டியது தான்” அப்பாவியான பேச்சு குரலில் கேலியாய் கூறினான்.

“எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்!” என்றவள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

“யப்பா சாமி! உன்னோட காதலை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லிக்கோ! அதுக்கு அவ எப்படி ரியாக்ட் செய்வானே தெரியலை! இப்ப தான் என் பிளான் படி சரியா போய்ட்டு இருக்கு! அதனால கல்யாணம் வரைக்கும் வாயை திறந்துடாத நீ” என ராஜனை எச்சரித்து விட்டு இணைப்பை துண்டித்தார் சுரேந்தர்.

நங்கைக்கு ராஜன் எப்படி தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதித்தான் என்று விளங்கவேயில்லை. தந்தை என்ன கூறி அவனை சம்மதிக்க வைத்திருப்பார் என்று யோசித்தவளுக்கு கல்யாணிக்கு அன்று ராஜன் யாரையோ காதலிப்பதாக கூறியது நினைவில் வந்தது. ஒரு வேளை ராஜனுக்கு காதல் தோல்வி இருக்குமோ! அதனால் எனக்கும் அவனுக்கும் ஒத்துப்போகும் என கல்யாணியும் தந்தையுமாக  இணைந்து இந்த திட்டத்தினை செயல்படுத்தி இருக்கிறார்களோ என்று தோன்ற, உடனே கல்யாணிக்கு அழைத்திருந்தாள்.

நங்கையின் அழைப்பை ஏற்ற கல்யாணி, “அண்ணி” என்று தான் விளித்திருந்தாள்.

‘என்னது அண்ணியா?’ நங்கை மனதோடு எண்ணிக் கொண்டிருக்கும் போதே,

“ஹாய் அண்ணி! நானே உங்களுக்கு ஃபோன் செய்யனும்னு நினைச்சேன். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிச்ச நங்கை அக்காவே எனக்கு சின்ன அண்ணியாக வரதுல அவ்ளோ சந்தோஷம்” என்று அத்தனை மகிழ்வுடன் கல்யாணி பேசிக் கொண்டே போக, அவளின் மகிழ்வை குலைக்கும் வண்ணம் ஏதும் கூற மனமே வரவில்லை அவளுக்கு.

“இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்! எக்கச்சக்க வேலை இருக்கு! உங்களுக்கு இந்த கல்யாணத்துல என்ன மாதிரி டிரஸ் வேணும் நகை வேணும் எல்லாம் என்கிட்ட சொல்லுங்க. நானும் மீனாட்சி அண்ணியும் எல்லாமே ரெடி செய்றோம்” என்று அவள் மேற்கொண்டு பேசிக் கொண்டே போக,

“என்னது ஒரு மாசத்துல கல்யாணமா?” வாய்விட்டே கேட்டிருந்தாள்  நங்கை.

“என்ன அண்ணி! தெரியாத மாதிரி கேட்குறீங்க! இங்க உங்க அப்பா வந்து சித்தப்பா சிந்திக்கிட்ட பேசி தேதியை குறிச்சிட்டு போய்ட்டாங்களே! இங்க எல்லா சொந்தகாரங்களுக்கும் உங்க கல்யாண சேதியை சொல்லியாச்சு! நீங்க எதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம கல்யாண பொண்ணா ஹேப்பியா இருங்க” என்றவள்,

“அண்ணி எங்க அத்தை கூப்டுறாங்க! அப்புறமா கூப்டுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு சென்று விட்டாள்.

தந்தை திருமண தேதியே குறித்து வந்து விட்டதை அறிந்து அவரிடம் கோபத்தில் கொந்தளித்து விட்டாள் நங்கை.

“ஓ எல்லாம் பேசிட்டு தான் என் சம்மதம் கேட்டீங்களோ? நீங்க எங்க கேட்டீங்க இன்பர்மேஷன் தானே கொடுத்தீங்க! நான் தான் புரிஞ்சிக்காம யோசிச்சிட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். உங்களுக்கு நான் பாரமாகிட்டேன்ல! வயசாகிடுச்சு யாரும் இனி அவளை கட்டிக்க கிடைக்க மாட்டாங்கனு நினைச்சு தானே சுந்தருக்கு என்னை கட்டிக் கொடுக்க பேசுனீங்க” பொரிந்து தள்ளினாள் நங்கை.

“ஏன்டா நீயா ஏதாவது யோசிச்சு மனசை கஷ்டப்படுத்திக்கிற! அப்பா இப்படிலாம் நினைக்கவே இல்ல மதும்மா” என்றவரின் சமாதானத்தை எல்லாம் அவள் காதில் வாங்கவே இல்லை.

“என்னை கார்னர் செஞ்சிட்டீங்கள்ல! நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும்ன்ற நிலைல என்னை கொண்டு வந்து நிறுத்திட்டீங்கல” என்றவாறு அவரை முறைத்தாள்.

“அப்படிலாம் இல்ல மதும்மா” என்றவர் கூற,

“என்ன அப்படிலாம் இல்ல! இப்ப நான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னா நிறுத்துவிடுவீங்களா?” அத்தனை கோபம் அவள் முகத்தில்.

“மது” என்றவர் அதிர்ச்சியுடன் பார்க்க,

“எல்லா பேச்சும் நடந்து தேதியும் குறிச்ச பிறகு ஒரு கல்யாணம் நிக்கிறது எவ்ளோ பெரிய பாதிப்பை அந்த குடும்பத்துக்கு ஏற்படுத்தும்னு எனக்கும் தெரியும்ப்பா. நாம அதை ஏற்கனவே அனுபவிச்சிருக்கோம் தானே! தெரிஞ்சே அந்த கஷ்டத்தை நான் சுந்தருக்கு தர மாட்டேன்! அந்த மாதிரியான ஒரு நிலைல சுந்தரை நான் நிறுத்தவும் மாட்டேன்! இதெல்லாம் தெரிஞ்சு தானே தேதியை குறிச்சிட்டு வந்து என்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசுனீங்க! என்னை கார்னர் செஞ்சி ஒத்துக்க வைக்கிற பிளான் தானே இது” என்றவாறு தளர்ந்து அமர்ந்தவள்,

“உங்க விருப்பப்படி என்னமோ செய்யுங்க! ஆனா இனி என்கிட்ட பேசாதீங்க” என்று சென்று விட்டாள்.

அவளால் தந்தை தனது விருப்பமில்லாமல் எடுத்த இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயம் அவரை மீறி வேண்டாம் என சொல்லவும் மனம் வரவில்லை. தந்தை தான் ராஜனிடம் ஏதோ கூறி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார் என்பதை தீர்க்கமாக நம்பினாள். அதுவும் அவளுக்கு அவர் மீதான கோபத்தை ஏற்றிவிட்டிருந்தது. எல்லாத்தையும் சேர்ந்து வைத்து அவரை முறைத்துக் கொண்டே திரிந்திருந்தாள் நங்கை.

ராஜனை தனது கணவனாய் நினைக்கவே அவளுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் காலம் நிற்காது அனைத்தையும் துரித கெதியில் செய்ய வைத்து அவர்களின் திருமண நாளிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.

இடையில் ராஜனும் நங்கையும் பேசிக்கொள்ளவென நேரமே இருக்கவில்லை. திருமணம் குறித்த அனைத்து விஷயத்திற்கும் கல்யாணியே நங்கையிடம் பேசியிருந்தாள்.

அன்று தந்தையின் அலைபேசியில் பேசிய பிறகு அவனிடம் பேசவில்லை. என்ன பேசவென அவளுக்கு தெரியவில்லை. தந்தைக்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா இல்லை தன்னை மணக்க ஒத்துக்கொண்டதற்காக நன்றி கூற வேண்டுமா! என்னவென்று அவனிடம் பேச என்ற குழப்பத்திலேயே அவனிடம் பேசாது இருந்தவள்,

இன்று திருமணத்தில் மணக்கோலத்தில் தான் அவனை காண்கிறாள்‌. 

“அழகா இருக்கடா பப்ளிமாஸ்” கண்களில் மகிழ்வும் கன்னங்களில் பூரிப்பும் இதழ்களில் தவழ்ந்த புன்னகையுமாய் உரைத்திருந்தான் ராஜன்.

இன்று அவள் காணும் ராஜன் அவளின் பார்வைக்கு அழகனாய் தெரிந்தான். தன்னை மணக்க அவன் முழு சம்மதத்துடன் மனநிறைவுடன் நின்றிருப்பதை அவனின் முக பொலிவிலேயே அவளால் உணர முடிந்தது.

நங்கையின் குல தெய்வக் கோவிலான கருப்பசாமி கோவிலில் மணக்கோலத்தில் சாமியின் சன்னதியில் நின்றிருந்தனர் ராஜனும் நங்கையும்.

நங்கையை பொறுத்த வரை இது தந்தையின் வற்புறுத்தலால் ராஜன் தன்னை மணக்க ஒத்துக் கொண்ட திருமணம் என்பதால் இனி இந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற அச்சமும் கலக்கமும் சூழ விழிகளை நிறைத்த நீருடன் நங்கை ராஜனை பார்த்திருக்க,

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்ற மங்கல ஒலிக்கிணங்க,

அவளது கழுத்தினருகே தாலியை எடுத்து சென்ற ராஜன் அவள் காதினருகில்,

“I will be there for you as always (உனக்காக எப்பவும் நான் இருப்பேன்) ஜஸ்ட் என்ஜாய் திஸ் மொமன்ட் பப்ளிமாஸ்” என்று கண் சிமிட்டி சிரித்தவாறு தாலியை கட்டினான்.

அவனது பேச்சில் கண்களை விரித்து அவனை பார்த்தவாறு அவள் நிற்க, தாலியை கட்டி முடித்தவன் அவள் நெற்றியில் முட்டினான்.

அழகாய் இத்தருணத்தை படம் பிடித்திருந்தார் புகைப்பட கலைஞர்.

சுரேந்தரின் கண்களில் நீர் வழிய, கல்யாணி மகிழ்ச்சியில் தனது கணவனின் கைப்பற்றியவாறு சிரித்தவாறு நின்றிருந்தாள்.

சுந்தரேஸ்வரன் தனது மனைவி மீனாட்சியுடனும் மூன்று மாத குட்டி மகளுடனும் வந்திருந்தான். மீனாட்சியின் குடும்பத்தினரான ஆச்சி, அன்னம், மீனாட்சியின் தந்தை, அன்னத்தின் தாய் தந்தை ஆகிய அனைவரும் வந்திருந்தனர்.

தனது தாய் தந்தையிடம் ஆசி பெற்றப்பின் அகல்யாவிடம் ஆசியை பெற்றவன், ஈஸ்வரனிடம் வந்து நின்றான்.

ராஜனின் கழுத்தில் தங்க சங்கிலியை அணிவித்த ஈஸ்வரன் அவனை ஆரத்தழுவிக் கொண்டான்.

மீனாட்சி நங்கைக்கு கையில் தங்க சங்கிலியை அணிவித்தாள். இருவருமாய் பூத்தூவி தம்பதியர்களை வாழ்த்தினர்.

கல்யாணியும் கருணாகரனும் ராஜனும் நங்கையும் இணைந்த மாதிரியான பெரிய புகைப்படத்தை பரிசளித்தனர். வெள்ளி குத்து விளக்கையும் வழங்கினர்.

தீரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தான். நண்பனை அணைத்தவாறு வாழ்த்து தெரிவித்தான்.

சுரேந்தரிடம் இவர்கள் சென்று நிற்க, நங்கை கோபமாய் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“நங்கை வா” என அவளின் கைப்பற்றி இழுத்து காலில் விழ வைத்தான் ராஜன். அவர் ஆசிக்கூறி முடிக்கும் முன்பே எழுந்தவள் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

அவளின் செயலில் புருவம் முடிச்சிட, “என்னாச்சு மாமா அவளுக்கு? உங்களுக்குள்ள எதுவும் சண்டையா?” என்று சுரேந்தரிடம் கேட்டான் ராஜன்.

“அடேய் உன் காதலுக்காக என் பாசத்தையே பணயம் வச்சிருக்கேன்டா. ஒழுங்கா என் பொண்ணை என்கிட்ட பேச வச்சிடு” என்று கேலியாக மிரட்டியவர், இந்த திருமணம் குறித்து நங்கை தன்னிடம் போட்ட சண்டையை உரைத்தார்.

“ரிஸ்க் எடுத்து இந்த கல்யாணத்தை செஞ்சி வச்சிருக்கேன்டா மருமகனே! நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழுறதை பார்த்தா தான் என் மனசு நிம்மதியாகும்! சீக்கிரம் எனக்கு அந்த நிம்மதியை கொடுத்துடுடா போதும்” என்று அவனை அணைத்துக் கொண்டார்.

அவர் கூறியதை கேட்டவனுக்கு மனம் நெகிழ்ந்து போனது.

“கண்டிப்பா நங்கைக்கு என் காதலை புரிய வச்சி எங்க பிள்ளையை உங்களை கொஞ்ச வைக்கிறேன் மாமா” என்று அவன் சுரேந்தரிடம் கூற,

“ஆஹா இதுவல்லவோ சபதம்” கவுண்டமணியின் குரலில் கிண்டலாய் தீரன் கூற, சுரேந்தரும் ராஜனும் சிரித்திருந்தனர்.

— தொடரும்