நனிமதுர நங்கை 23

இன்று
“என்ன செஞ்சி வச்சிருக்கீங்க ராகினி! ரிலீஸ் பேக்கேஜ்ஜை இவ்வளோ தப்பு தப்பா செஞ்சி வச்சிருக்கீங்க. நான் ரிவ்யூ செய்யலாம்னு எடுத்தா அவ்ளோ கரெக்ஷன் இருக்கு. நாளைக்கு மறுநாள் கோட் ரிலீஸ் செய்யனும். கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உங்களுக்கு!” அலுவலகத்தில் தன்னிடம் பணிபுரியும் பெண்ணை கடுகடுவென பொரித்தெடுத்து கொண்டிருந்தான் ராஜன்.
அவன் திட்டிக் கொண்டிருந்த ராகினி என்ற பெண்ணோ பாவமான முகத்துடன், “சாரி சுந்தர்! நான் கரெக்ட் செஞ்சி அனுப்புறேன்” என்றவாறு அவன் முன் நின்றிருந்தாள்.
“வேலைல கொஞ்சமாவது டெடிகேஷன் வேணும் ராகினி. நாம செஞ்சி கொடுக்கிற வேலைல எந்த தவறும் இருந்திட கூடாதுன்ற பயபக்தி வேணும். பொறுப்புனா என்ன விலைனு கேட்பீங்க போலயே!” முறைத்தான் இப்பொழுது.
“சரியா செஞ்சிடுறேன் சுந்தர்” என்று அவள் மீண்டுமாய் மன்னிப்பு கேட்கவும்,
“சரி சீக்கிரம் சொன்ன கரெக்ஷன்லாம் செஞ்சிட்டு அனுப்புங்க. இன்னிக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் இதை முடிக்காம கிளம்ப கூடாது! போங்க சீக்கிரம் அனுப்புங்க” என்றவாறு தனது வேலையில் கவனத்தை செலுத்தினான்.
அவனது கேபினில் இருந்து வெளியில் வந்த ராகினியிடம், “என்னாச்சு? ஒரே சத்தமா கேட்டுச்சு?” என அந்த அறைக்கு வெளியே அவளுக்காக காத்திருந்த ராகினியின் தோழி கேட்க,
“சரியான சிடுமூஞ்சு டி எல்! காய்ச்சு எடுத்துட்டாருடி! எப்ப பாரு கடுகடுனு பொரிஞ்சிட்டே இருக்காரு! பொறுமையா சொன்னா தான் என்னவாம்! வீட்டுலயும் இப்படி தான் இருப்பாரா? அதான் இன்னும் கல்யாணமாக சுத்துறாரு போல! இப்படி இருந்தா எந்த பொண்ணு தான் இவரை கட்டிக்கும்! பாவம் தான் இவரோட பொண்டாட்டி புள்ளைங்க லாம்!” என ராகினி தனது தோழியிடம் கடுப்பாய் உரைத்தவாறு அங்கிருந்து சென்றாள்.
அலுவலகத்தில் தனது வேலையில் தீவிர கவனத்துடன் இருந்த ராஜனை அவனது அலைபேசி ஒலித்து கலைத்தது.
அலைபேசியின் பாடல் ஒலியிலேயே முகம் மென்மையுற, “ஹலோ ஆணிமா! எப்படிடா இருக்கு?” பாசமாய் கேட்டிருந்தான்.
இத்தனை நேரமாக கடுமையாக பேசியவனா இவன் என்று எண்ணுமளவிற்கு இருந்தது அவனின் குரல்.
கல்யாணிக்கு கல்யாணமாகி ஆறு மாதங்களாகி இருந்தன.
திருமணத்திற்கு பிறகு பெங்களூருக்கு சென்ற கல்யாணி, வாரத்திற்கு ஒரு முறையாவது இவனுக்கு அழைத்து பேசிவிடுவாள்.
இப்பொழுது தீவிரமாய் அவனுக்கு பெண் தேடும் வேலையில் இறங்கியிருக்கிறாள் கல்யாணி.
இருவரும் பரஸ்பரம் அவரவர் நலனையும் குடும்பத்தின் நலனையும் கேட்டறிந்து கொண்ட பிறகு, “அண்ணா உனக்கு பொண்ணு போட்டோ அனுப்பிருக்கேன் பாரு! பொண்ணோட அப்பாகிட்ட பேசினேன். நமக்கேத்த குடும்பமா தெரியுறாங்க. பொண்ணும் ரொம்ப அழகா குணமா தெரியுறாங்க” என்றவள் பேசிக் கொண்டே போக, இவனின் முகம் எரிச்சலை பிரதிபலித்தது.
ஆனாலும் அவளின் அக்கறையில் மனத்தை அமைதிக்கொள்ள செய்தவனாய், “ஆணிமா எனக்கு இப்ப ஆபிஸ்ல டைட் வர்க் போய்ட்டு இருக்கு! நாளைக்கு நான் பார்த்துட்டு சொல்றேனே!” என்றான்.
“அண்ணா இப்படியே தான்ணா நீ லேட் செஞ்சிட்டே இருக்க! போன தடவை அனுப்பின போட்டோவை ஒரு வாரம் ஆகியும் பார்க்காம வச்சிட்டிருந்த! இது வரைக்கும் ஐம்பது போட்டோ கிட்ட உனக்கு அனுப்பிருக்கேன்! எல்லாமே வேண்டாம்னு சொல்லிட்ட! என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ! கல்யாணம் செஞ்சிக்கிற எண்ணம் இருக்கா இல்லையா உனக்கு! இன்னும் உன்னோட முன்னாள் காதலியவே நினைச்சிட்டு இருக்கியா?” கோபமாய் கேட்டிருந்தாள் கல்யாணி.
“என்னது முன்னாள் காதலியா?” அவளின் கேள்வியில் அதிர்ந்து போனான் இவன்.
“யாரது முன்னாள் காதலி? நான் தான் யாரையும் லவ் பண்ணலை! அது தீரன் கிளப்பி விட்டதுனு சொன்னேன்ல! நம்பலையா நீ?” எனக் கேட்டான்.
“ம்ப்ச் நீ செய்றதை பார்த்தா நிஜமா ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு அவக்கிட்ட உன் லவ்வை சொல்லாம சூப் பாயா சுத்திட்டு இருந்த மாதிரி இருக்கு! லவ் பெயிலியர்ல இருந்தவன் மாதிரி தான் நீ ரியாக்ட் பண்ற! நீ லவ் செஞ்சியோ இல்லையோ! இல்ல நீ லவ் செஞ்ச பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சோ இல்லையோ! அதெல்லாம் மறந்துட்டு இப்ப நீ கல்யாணம் செஞ்சிக்கிற வழியை பாரு! அவ்ளோ தான் சொல்லுவேன்” என்று உரைத்தவள் இணைப்பை துண்டித்து விட்டாள்.
தலையை பிடித்து விட்டு அமர்ந்து விட்டான் ராஜன்.
கல்யாணியின் திருமணத்தன்று அவளின் மனநிலையை கெடுக்க விரும்பாதவனாய் அவளை தனக்கான பெண்ணை பார்க்க உரைத்து விட்டவனுக்கு இன்று அதை நடைமுறை படுத்தும் போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அங்கே கல்யாணியோ கடும் கோபத்துடன் அமர்ந்திருந்தாள்.
‘என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் இவன்! ஒரு வேளை அண்ணா லவ் செஞ்ச பொண்ணுக்கு கல்யாணமாகாம இருக்குமோ! அது யாருனு சொல்லி தொலைஞ்சாலாவது நான் போய் பேசுவேன்ல!’ மனதோடு புலம்பியவளாய் அமர்ந்திருந்தவள்,
‘சென்னைல ராஜாண்ணா கூட ரூம்ல தங்கியிருந்த ஃப்ரண்ட்ஸ்ஸை விசாரிக்கனும்! ஈஸ்வரண்ணாகிட்ட இதை பத்தி பேசனும்’ என்றெண்ணியவாறு தனது வேலையை கவனிக்க சென்றாள்.
—
இரண்டு நாட்கள் கழித்து கல்யாணி தனது கணவர் கருணாகரனுடன் பெங்களூர் ஃபோரம் மாலுக்கு சென்றிருந்தாள்.
அங்குள்ள ஃபுட் கோர்ட்டில் அமர்ந்து கணவனிடம் தனக்கு வேண்டியவற்றை உரைத்து விட்டு அமர்ந்திருந்தவள், தூரமாய் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை பார்த்து விட்டு அப்பெண் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே சென்று பார்த்தாள்.
அப்பெண்ணுடன் வயதான ஒருவரும் அமர்ந்திருக்க, “நங்கை அக்கா” என்றவாறு அவளின் முன் போய் நின்றாள் கல்யாணி.
“ஹே கல்யாணி! எப்படி இருக்க?” இதழ் விரிந்த புன்னகையுடன் கல்யாணியை அணைத்துக் கொண்டாள் நங்கை.
“உன் ஹஸ்பண்ட் எங்கே? தனியாவா வந்த?” எனக் கேட்டாள்.
கல்யாணி தனது திருமண பத்திரிக்கையை வாட்ஸ்அப் மூலம் நங்கைக்கு அனுப்பியிருந்தாள். கல்யாணியின் திருமணம் முடிந்ததும் நங்கை அவளை அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தாள்.
“ஹஸ்பெண்ட் கூட தான் வந்தேன்” என்றவள் தூரத்தில் உணவக ஸ்டாலில் எதையோ வாங்க நின்றிருந்த கணவனிடம் தான் அமர்ந்திருக்கும் இடத்தை கை காண்பித்து விட்டு நங்கையின் அருகில் அமர்ந்தாள்.
“நீங்க எப்ப ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்தீங்க?” என்று நங்கையிடம் கேட்டவள், அவளருகில் அமர்ந்திருந்த பெரியவரை நோக்கி, யாரிவர் என்பது போல் பார்த்து வைத்தாள்.
“கல்யாணி இவர் என் அப்பா!
அப்பா இவ சுந்தரோட தங்கச்சி கல்யாணி” என இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தவள்,
“நேத்து தான் இந்தியா வந்தோம் கல்யாணி” என்றாள்.
“இனி இந்தியால நான் வேலையா இல்ல லீவ்ல வந்தீங்களா?” எனக் கேட்டாள்.
“இனி பெங்களூர்ல தான் இருக்க போறோம். அப்பாக்கு இந்தியால தான் இருக்கனும்னு ரொம்ப ஆசை. அதான் அங்கே வேலையை விட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துட்டேன். இனி வெளிநாட்டுக்கு போற ஐடியா இல்லை” என்றாள் நங்கை.
கல்யாணியின் கணவன் கருணாகரனும் இவர்களுடன் இணைந்து கொள்ள, பரஸ்பரம் அவரவர் வாழ்க்கை வேலை பற்றி பேசிக் கொண்டவர்களின் பேச்சு திருமணத்தில் வந்து நிற்க,
“ராஜாண்ணா லவ் பண்ண பொண்ணு யாரு நங்கை அக்கா” எனக் கேட்டாள் கல்யாணி.
ராஜனின் காதலை பற்றி அவனின் சென்னை தோழர்களிடம் விசாரிக்க வேண்டுமென எண்ணியிருந்தவளுக்கு நங்கையின் நினைவே வரவில்லை. இன்று அவளை கண்டதும் நங்கைக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் இக்கேள்வியை கேட்டிருந்தாள்.
பல வருடங்களாக அவர்களது நட்பின் ஆழம் பற்றி அறிந்திருந்தவளுக்கு ராஜன் நங்கையை காதலித்திருப்பானோ என்ற எண்ணம் தோன்றவே இல்லை.
ஆகையால் நங்கையை கண்டதும் ராஜனின் காதலை பற்றி புலம்பி தீர்த்து விட்டாள்.
கல்யாணியின் கேள்வியில் நங்கையும் சுரேந்தரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.
“என்னது சுந்தர் லவ் பண்ணானா? அதை அவனே சொன்னானா?” அத்தனை ஆச்சரியத்துடன் வினவியிருந்தாள் நங்கை.
“ஆமா அக்கா! அண்ணா ஒன் சைட்டா லவ் பண்ணியிருக்காங்க போல! அவங்க லவ் பண்ற பொண்ணுக்கே அந்த லவ் பத்தி தெரியாதுன்னு சொன்னாங்க. நான் அவனுக்காக பார்க்கிற பொண்ணைலாம் ஏதாவது சில்லி ரீசன் சொல்லி ரிஜக்ட் செஞ்சிடுறான். இரண்டு நாள் முன்னாடி கூட ஒரு பொண்ணு போட்டோ அனுப்பினேன். பிடிக்கலைனு சொல்லிட்டான். இந்த வயசுக்கு மேல பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். சித்தி சித்தப்பாவும் கூட ஒரு பக்கம் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. இவன் எதுக்கும் ஒத்து வராம சுத்திட்டு இருக்கான்” கல்யாணி கவலையாய் கூற,
“எனக்கு தெரிஞ்சி அப்படி யாரும் இல்ல கல்யாணி. அவன் கட்டிக்கிற பொண்ணை தான் காதலிக்கனும்னு கொள்கை வச்சிருந்தான் சுந்தர். அதனால அவன் யாரையும் லவ் பண்ணியிருக்கலாம் வாய்ப்பே இல்லை. உனக்கும் உன் அண்ணனுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் தான் அவன் மேரேஜ் செய்யனும்னு முடிவு செஞ்சிருந்தான்” என்றாள் நங்கை.
“அப்பா உங்ககிட்ட எதுவும் அவன் சொன்னானா?” என தனது தந்தையிடம் வினவ,
“இல்லையேமா” பெருத்த யோசனையுடன் உரைத்தார் அவர்.
“சரி அக்கா! ஏன் அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறான்னு நீங்க கேளுங்க. ஒரு வேளை நீங்க கேட்டா சொல்வானா இருக்கும்” என்ற கல்யாணி,
“ஆமா நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க? உங்களுக்கும் அண்ணாக்கும் ஒரே வயசு தானே” யதார்த்தமாக கேட்டிருந்த கல்யாணிக்கு, அக்கேள்வியை கேட்கும் பொழுது தான் ஏன் இவர்கள் இருவரும் மணம் புரிந்து கொள்ள கூடாது என்கின்ற கேள்வி எழுந்தது.
‘ஒரு வேளை அண்ணா லவ் பண்ண பொண்ணு நங்கை அக்காவா இருக்குமோ’ அவளது மூளை கேள்வி எழுப்ப, ‘சே சே அப்படிலாம் இருக்காது! அண்ணா தோழியா நினைச்சு பழகிறவங்களை போய் லவ் பண்ணுவாங்களா’ தானே பதிலுரைத்து கொண்டாள்.
ஆனாலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் தானே! எண்ணும் போதே இவளின் மனம் பரவசத்தில் துள்ள, சுரேந்தரிடம் இதை பற்றி தனியாக பேச வேண்டுமென எண்ணிக் கொண்டாள் கல்யாணி.
அதே நேரம் சுரேந்தருக்கு ராஜன் யாரை காதலித்திருப்பான் என்கின்ற கேள்வி மனதை குடைய ஆரம்பித்தது.
அன்றைய நாள் இரவு பெருத்த யோசனையுடன் அமர்ந்திருந்தார் சுரேந்தர்.
அவருடன் அவன் தங்கியிருந்த நாட்களில் யாரையும் காதலித்தது போன்ற எந்த அறிகுறியும் அவனிடம் தென்படவில்லையே என்றவாறு யோசித்து கொண்டிருந்தார் சுரேந்தர்.
ஆனால் ஏன் வரும் வரன்களை எல்லாம் அவன் தட்டிக் கழிக்கிறான். இங்கு நங்கையுமே அதை தானே செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் இவள் திருமணத்தை தவிர்ப்பதற்கு காரணம் இருக்கிறது. இவன் ஏன் தவிர்க்கிறான்?
பலவிதமான சிந்தனைகள் சுழல சிந்தித்து கொண்டிருந்தவரை கைபேசியில் அழைத்தாள் கல்யாணி.
கல்யாணி சுரேந்தரிடம் நங்கையை சுந்தரராஜனுக்கு திருமணம் செய்து வைப்பதை பற்றி பேச, சுரேந்தருக்கு சுந்தர் தனது மகளை தான் காதலித்திருப்பானோ என்ற சந்தேகம் வலுத்தது.
நங்கையிடம் பேசிவிட்டு கூறுவதாய் வைத்து விட்டவர் உடனே ராஜனுக்கு அழைத்தார்.
அவரின் அழைப்பை ஏற்ற ராஜன், “என்ன அங்கிள் ஜெட் லாக்லாம் சரி ஆகிடுச்சா? பெங்களூர் எப்படி இருக்கு?” என இலகுவாக பேச ஆரம்பித்தவனிடம்,
“நீ மதுவை லவ் பண்ணியா சுந்தர்” நேரடியாக கேட்டிருந்தார்.
சட்டென அவன் இதயம் அதிர்ச்சியில் நின்று துடித்தது. அவனது சுவாசம் சீரற்று இருப்பதை உணர்ந்த சுரேந்தர், அவனின் இந்த நிமிட நேர மௌனத்தில் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தவராய்,
“ஏன் சுந்தர் சொல்லலை? உன்னை விட நல்ல பையன் என் பொண்ணுக்கு கிடைப்பானாடா” நா தழுதழுக்க கேட்டிருந்தார்.
“அங்கிள்” என அவன் ஏதோ கூற வர,
“நீ ஒன்னும் பேச வேண்டாம்! நங்கையை இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று இணைப்பை துண்டித்து விட்டார்.
— தொடரும்