நனிமதுர நங்கை 21

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அமர்ந்திருந்தான் ராஜன்.

காதல் தோல்வியில் குடிகாரனாக மாறவில்லை. எவ்விதமான போதை வஸ்துகளுக்கும் அடிமையாகவில்லை‌. அடிடா அவளை வெட்றா அவளை என ஒட்டுமொத்த பெண்ணினத்தின் மீதும் வன்மத்தை கொட்டவில்லை மாறாக தனது மனத்தின் ரணங்களை ஆற்றுப்படுத்துமாறு வேண்டி இறையடியை பணிந்திருந்தான் ராஜன்.

எவ்வகை சூழ்நிலையிலும் சுய ஒழுக்கத்தை மீறாது வாழ்வதே தனது கொள்கையென வாழ்பவனுக்கு வாழ்க்கை பூப்பாதையாய் இருக்கவில்லை. ஆயினும் தனது கொள்கையை எந்நிலையிலும் தளர்த்தி கொள்ளவில்லை அவன்.

‘சும்மா இருந்தவனை காதலிக்க வச்சி இப்ப இப்படி அல்லாட விட்டுருக்கீங்களே! உங்களுக்கே இது நியாயமா?’ மனம் ரணமாய் வலிக்க வரதராஜ பெருமாளிடம் மனதோடு பேசிக் கொண்டிருந்தான் ராஜன்.

‘காதலை சொன்னாலும் பிரச்சனை! சொல்லலைனாலும் பிரச்சனைன்ற நிலைல என்னை கொண்டு வந்து நிறுத்திட்டு அவளுக்கு வேறொருத்தனோட கல்யாணத்தையே ஃபிக்ஸ் செஞ்சி வச்சிட்டீங்களே! அப்புறம் எதுக்கு அன்னிக்கு ஜெர்மனில அவ கையால எனக்கு பூ கொடுக்க வச்சீங்க! அன்னிக்கு மனசு வித்தியாசமான யோசிக்குதேனு உங்ககிட்ட தானே வந்து நின்னேன். இவ வேணாம்டா உனக்குனு சொல்லிருந்தா நான் ஆசையை வளர்த்துக்காம ஒதுங்கி போய்ருப்பேன் தானே! எல்லாம் உங்களால தான் பெருமாளே!’ அத்தனை கோபமாய் அவரிடம் முறையிட்டவன் அவரை முறைத்துக் கொண்டிருந்தான்.

‘அவ இனி எனக்கு இல்லை!’ எண்ணும் போதே அவனின் மூடிய விழிகளில் இருந்து நீர் வழிந்தோடியது.

அதனை துடைக்கவும் மனமற்றவனாய், ‘அவ எனக்கு இல்லைனாலும் பரவாயில்லை! அவ எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அவளுக்கு எப்ப எந்த உதவினாலும் செஞ்சி தரக் கூடிய நண்பனாவே நான் இருந்துக்கிறேன்! இதையும் கடந்து போகுற மன வலிமையையாவது தாங்க இறைவா’ என்று கை கூப்பி வேண்டியவாறு விழுந்து வணங்கியவன்,

கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக சுற்று பிரகாரத்தில் அமர்ந்து கொண்டான்.

நங்கைக்கு அவளது தாய் பார்த்து வைத்த மாப்பிள்ளையான அஸ்வினுடன் திருமணம் நிச்சயமான நாளிலிருந்து வாரம் தவறாமல் இங்கு வந்து புலம்பி அழுது நிறைவாக நங்கையின் நல்வாழ்வையே வேண்டிக் கொண்டு சென்று விடுவான்.

நங்கையின் திருமணத்தை பற்றிய செய்தி அறிந்த நொடியில் ஸ்தம்பித்து நிலை தான் அவனுக்கு. இவனின் மனமும் வரதராஜ பெருமாளும் மட்டுமே அறிந்த இவனது காதலை அதன் வலியை எவரிடம் கூறி ஆறுதல் தேடுவது என மனமுடைந்து அழுத சமயம் தான் இந்த கோவில் அவனின் நினைவிற்கு வந்தது. அன்றிலிருந்து அவர் பாதமே தஞ்சமென அவரிடம் புலம்புவதற்காகவே வாரயிறுதி நாளில் கிளம்பி வந்திடுவான் ராஜன்.

நங்கை அஸ்வினிடம் பேசி தனது சம்மதத்தை தெரிவித்ததுமே அவர்களின் திருமண தேதியை குறித்து விட்டார் சரோஜா.

“சாப்ட் ஸ்போக்கனா இருக்காங்க சுந்தர். இன்பா பத்தி சொன்னேன். அம்மா சொல்லிருந்தாலும் நானும் என் பக்கத்தில் சொல்றது தான் சரின்னு பட்டுது. எல்லாத்தையும் கேட்டுட்டு உங்க மேல தப்பு இல்லைனு புரியுதுனு சொன்னாங்க. எனக்கு நோ சொல்ற மாதிரியான எந்த விஷயமும் அவங்ககிட்ட பேசும் போது தோணலை. நான் உங்க விருப்பப்படி செய்யுங்கனு அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டேன்” நங்கை அஸ்வினிடம் பேசிய பிறகு ராஜனிடம் இவ்வாறு உரைத்திருந்தாள்.

மூன்று மாதங்களில் இவர்களின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்க, அதில் இரண்டு மாதங்கள் முடிந்து இன்னும் மூன்று வாரத்தில் திருமணம் என்ற நிலையில் நாட்கள் விரைவாக ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் பெருமாளிடம் புலம்பிக் கொண்டிருந்தான் ராஜன்.

கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்திருந்தவனின் மனம் சமன்பட்டதும், ‘ஒரு மாசம் லாங் லீவ் எடுத்துட்டு மதுரைக்கு போய்ட வேண்டியது தான். இங்கிருந்தா நெஞ்சு வலி வந்தே செத்துடுவேன்’ என்றெண்ணியவாறு தான் தங்கியிருக்கும் அறைக்கு பயணப்பட்டான் ராஜன்.

கோவிலில் இருந்து கிளம்பியவன் ஒரு மணி நேர பயணத்திற்கு பின்பு,  தான் தங்கியிருந்த வீட்டின் அறைக்கு வந்து கதவை திறக்க, ராஜனின் வீட்டு வாசலில் வந்து நின்றாள் நங்கை.

“சுந்தர்” என்ற அவளது அழைப்பில் திடுக்கிட்டு திரும்பியவன், “ஹே பப்ளிமாஸ் ஜெர்மனிலருந்து எப்ப வந்த?” எதிர்பாராத  சந்திப்பில் அவனுள்ளம் பரவசத்தில் துள்ளியது.

“இன்னிக்கு காலைல தான் வந்தேன்! உனக்கு சர்ப்ரைஸ் தரலாமேனு தான் சொல்லாம வந்தேன்” சிரித்த முகமாய் மகிழ்ச்சி பொங்க அவளுரைக்க,

“எப்பவும் நீ இப்படியே சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கனும்டா பப்ளிமாஸ்” என்று மனதார உரைத்து கோவிலில் இருந்து வாங்கி வந்த பூவையும் குங்குமத்தையும் அவளிடம் நீட்ட, “கோவிலுக்கு போய்ட்டு வந்தியா?” எனக் கேட்டவாறு அதை வைத்து கொண்டாள்.

இருவரும் சிறிது நேரம் பேசிய பின்பு அவனிடம் அவள் தனது திருமண அழைப்பிதழை நீட்ட, இத்தனை நேரமாக இருந்த உற்சாக மனநிலை முற்றிலுமாய் வடிய, முகம் வாடிப்போக அதை பெற்றுக் கொண்டான் ராஜன்.

கண்டிப்பாக அந்த திருமணத்திற்கு போக கூடாது என்று மனதோடு எண்ணியவாறு அந்த பத்திரிக்கையை அவன் வாங்கி கொள்ள, “கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும். நான் உன்னை ரொம்பவே எதிர்பார்த்துட்டு இருப்பேன்!”  என்றாள் அவள்.

“அஸ்வின்கிட்ட உன்னை பத்தி நிறைய சொல்லிருக்கேன். அவரும் உன்னை நேர்ல பார்க்க ஆவலா இருக்காரு” என்று இவள் கூறிக் கொண்டிருந்த நொடி இவளின் அலைபேசி அலறியது.

அவளின் தந்தை சுரேந்தர் தான் அழைத்திருந்தார். அவசரமாக உடனடியாக வீட்டிற்கு வருமாறு மட்டும் உரைத்தவர் வேறெதுவும் கூறவில்லை.

“அப்பா அவசரமா வீட்டுக்கு வர சொல்றாங்க சுந்தர். அவங்க குரலே சரியில்ல! அம்மாக்கு எதுவும் முடியாம போய்ருக்குமோ! என்னனு சொல்ல மாட்டேங்குறாங்க” சட்டென சுருங்கிய முகத்துடன் அவள் கூற, “அதெல்லாம் ஒன்னும் ஆகிருக்காது! வா நானே உன்னை டிராப் பண்றேன்” எனக் கூறி தனது இரு சக்கர வாகனத்திலேயே அவளது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீட்டிற்குள் நுழையும் போதே நங்கையின் தாய் சரோஜாவின் அழுகுரல் தான் அவர்களின் செவியை தீண்டியது.

“அம்மா எதுக்கு இப்படி அழுறாங்க சுந்தர்” என்று பதறியவாறு வீட்டிற்குள் சென்று பார்க்க, தாய் தந்தை இருவருமே தொலைகாட்சியை பார்த்தவாறு கண்கலங்க அமர்ந்திருப்பதை கண்டு அந்த செய்தியை பார்த்தாள்.

விமான விபத்து பற்றிய செய்தி அது! துபாயில் இருந்து இந்தியா வந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருந்தது‌! அதில் தான் இன்று அஸ்வின் பயணிப்பதாய் தெரிவித்திருந்தான்.

துபாய் ஸ்டீல் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அஸ்வின் திருமணத்திற்காக விடுப்பு எடுத்து துபாய் விமானத்தில் இன்று பயணித்திருந்தான். அதன் விபத்து செய்தியை கேட்டு தான் அதிர்ந்து அம்ர்ந்திருந்தனர் அனைவரும்.

அதை பார்த்ததும், “அஸ்வின்” என அலறியவள் மயங்கி இருந்தாள்.

அஸ்வினின் இறப்பு செய்தி உறுதி செய்யப்பட, அனைத்து காரியங்களும் துரிதமாய் நடந்தேறியது.

ராஜன் நங்கையின் குடும்பத்துடன் அனைத்திலும் உறுதுணையாக நின்றான்.

நங்கையின் மொத்த குடும்பமும் இடிந்து போய் அமர்ந்திருந்தது. வழக்கம் போல் இவளின் பொல்லா ராசி அவனை காவு வாங்கிவிட்டதென்ற பேச்சுக்களும் வந்தன. எதையும் கேட்கும் நிலையிலேயே அவள் இல்லை.

அடுத்த ஒரு வாரத்தில் தான் இயல்பாகி விட்டதாய் காண்பித்து கொண்டாள் நங்கை. வீட்டிலுள்ளோர்கள் இவளுக்காக தங்களது அழுகையை மறைக்க, இவளும் தனது பெற்றோருக்காகவென தனது அழுகையை மறைக்க, அனைவருமே இறுக்கமாக உலவி கொண்டிருந்தனர்.

அவர்கள் திருமணத்திற்காக பேசியிருந்த மண்டபத்தினை ரத்து செய்வது பற்றி சுரேந்தர் சரோஜாவிடம் பேச, “அவ ஆசைப்பட்டது தான் நடக்கலைனு நம்ம ஒரு பையனை பார்த்து வச்சா இதுவும் இப்படி ஆகிடுச்சேங்க” என்று அழுதார்‌ அவர்.

“ம்ப்ச் உடம்பு இருக்க நிலையில இப்படிலாம் நீ அழுக கூடாது. மனசை திடப்படுத்திக்கோ சரோஜா. நம்ம பொண்ணுக்கானவன் அந்த பையன் இல்லனு நினைச்சிக்கோ” என்று ஆறுதல் உரைத்தார் சுரேந்தர்.

அஸ்வினின் இறப்பு செய்தி சரோஜாவின் உடல்நிலையை நிரம்பவே பாதித்திருந்தது‌. மகளின் வாழ்வை எண்ணி வெகுவாகவே கலங்கி போனார் அவர்.

“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காம இது சரியா வருமானு‌ யோசிச்சு பதில் சொல்வீங்களா?” என கண்களை துடைத்தவாறு கேட்டார் சரோஜா.

“சொல்லு சரோ” என்றவரிடம்,

“ஏன் நம்ம நங்கையை ராஜனுக்கு கட்டிக் கொடுக்க கூடாது” எனக் கேட்டார்.

“எந்த நேரத்துல என்ன பேசுற நீ? அந்த அஸ்வின் பையன் வேற பொண்ணை கட்டிக்கிட்டான் இல்ல நம்ம பொண்ணை வேண்டாம்னு சொல்லிருந்தான்னா கூட அடுத்து உடனே நம்ம பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பத்தி யோசிக்கலாம். இங்க ஒரு உயிரே போய்ருக்கு. இந்த நிலைல உடனே வேற மாப்பிள்ளை பார்க்கிறது சரியில்ல சரோஜா ” என்றார் சுரேந்தர்.

“இல்லங்க நம்ம பொண்ணு நிலைமையை யோசிச்சு பாருங்க. இன்பாவை நம்ம சமூகம் இல்லனு தான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா இப்ப ஏற்கனவே இருக்க லவ் பிரேக் அப் பழி பத்தாதுனு இப்ப ராசி இல்லாதவனும் இந்த ஊரு உலகம் நம்ம பொண்ணை பேசுதே! இதெல்லாம் தெரிஞ்ச அவளை புரிஞ்ச சுந்தரை ஏன் நம்ம பொண்ணுக்கு கேட்க கூடாதுனு தாங்க எனக்கு தோணுது! நீங்களும் யோசிச்சு பாருங்க” என்றார் சரோஜா.

சரோஜாவின் பேச்சுக்களை நங்கை அந்த அறையின் வாயிலில் இருந்து கேட்டிருக்க, ராஜன் நங்கையின் வீட்டு வாயிலில் இருந்து இதை கேட்டிருந்தான். அப்பொழுது தான் வீட்டின் உள்ளே நுழைய முற்பட்ட ராஜன்‌, சரோஜாவின் இந்த பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டான்.

“எங்க ஃப்ரண்ட்ஷிப்பை கொச்சைப்படுத்தாதமா” என்று கோபமாய் உரைத்தவாறு அறைக்குள் நுழைந்திருந்தாள் நங்கை.

நட்பா? காதலா? என ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருந்த ராஜனுக்கு, தங்களது நட்பை அத்தனை புனிதமாய் உரைத்த நங்கையின் இந்த வாக்கியங்களே, நட்பின் நிலையிலேயே இனி தான் நின்று கொள்ள வேண்டும், ஆயுளுக்கும் தனது காதலை அவளிடம் உரைக்க கூடாதென்ற முடிவை அவனை எடுக்க வைத்திருந்தது.

இதனை கேட்ட உடனேயே அந்த இடத்தை விட்டு அவன் சென்றுவிட, “அவன் ரொம்ப நல்லவன் மா! மனசால கூட இது வரைக்கும் யாரையும் நினைச்சது இல்லை! கட்டிக்க போற பொண்ணை தான் காதலிப்பேன்னு கொள்கையோட இருக்கான் மா! அவனுக்கு நான் வேண்டாம்!” சொல்லும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகி கன்னத்தை தீண்டியது.

மேலும் அவளின் தாய் ஏதோ கூற வர, அவரை தடுத்தவளாய், “இதோட இந்த பேச்சை நிறுத்திக்கோமா! இப்படி நீங்க நினைச்சீங்கனு கூட அவனுக்கு தெரிய வேண்டாம். அவனோட நட்பை நான் கலக்கப்படுத்தின மாதிரி ஆகிடும். அந்த நிலைக்கு என்னை தள்ளிடாதீங்க” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

சென்னையில் இருந்தால் இவர்களின் அனுதாப பார்வையே தன்னை குற்றுயுயிராக்கி விடும் என விடுப்புகளை ரத்து செய்துவிட்டு ஜெர்மனிக்கு புறப்பட்டாள்.

திருமணம் நின்று போவதால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் நங்கையின் குடும்பத்தினர் அனுபவித்து கொண்டிருந்தனர். அஸ்வினின் குடும்பத்தினர் இவர்களுக்கு தூரத்து சொந்தம் என்பதால் அவர்களுக்கு ஆறுதலாய் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ரத்து செய்யும் வேலையில் உதவி புரிந்தார் சுரேந்தர். அஸ்வினுக்கு தம்பி ஒருவன் இருந்ததால் அவர்கள் பக்கம் அவனே பெரும்பாலான வேலைகளை எடுத்து செய்திருந்தான்.

காலம் காயம் ஆற்றும் என்பதற்கேற்ப நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு அவரவர் பணியில் இயல்பாய் தங்களை ஒப்புக்கொடுத்து அதன் போக்கில் சென்று கொண்டிருந்த சமயம், சரோஜாவின் மரணம் அடுத்த பேரடியாய் அவர்களின் குடும்பத்தை தாக்கியது.

— தொடரும்