நனிமதுர நங்கை 22

இரண்டு வருடங்களுக்கு பிறகு
நங்கை ஜெர்மனியில் இருந்த நாட்களில் ராஜன் சுரேந்தருக்கு உற்ற தோழனாய் மாறியிருந்தான். அவரின் தனிமையை போக்குவதற்காக நங்கையின் வேண்டுகோளுக்கிணங்க சுரேந்தருடன் அந்த வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக (paying guest) தங்கியிருக்கிறான் ராஜன்.
“அங்கிள் இன்னும் டென் மினிட்ஸ் ப்ளீஸ்” என இழுத்து போர்த்தி தூங்கி கொண்டிருந்த ராஜனை பத்து நிமிடங்கள் கழித்து வந்து எழுப்பினார் சுரேந்தர்.
“டேய் சுந்தர்! இதுக்கு மேல லேட்டாச்சுனா கோவில் நடை சாத்திடுவாங்கடா” என்றவாறு எழுப்பினார்.
சுணங்கியபடியே எழுந்து அவன் அமர்ந்ததும், “போ போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வா! நான் காபி போடுறேன்” என்றவாறு சமையலறை நோக்கி சென்றார்.
முகத்தை துடைத்தவாறு உணவருந்தும் இருக்கையில் சுந்தர் வந்தமர, சூடான காபி கோப்பையை அவன் முன் வைத்தார் சுரேந்தர்.
கோப்பையை கையிலெடுத்து ஒரு மிடறு பருகியவன், “செம்ம அங்கிள்! கொஞ்ச நாள்ல எவ்ளோ ருசியா சமைக்க கத்துக்கிட்டீங்க நீங்க” என பாராட்டினான்.
“சரோவோட இழப்புல இருந்து வெளில வர தான் சமையலை கத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா இப்ப தான் அவளை ரொம்பவே மிஸ் செய்றேன் சுந்தர்! அவ இருக்கும் போது இப்படி ஒரு காபி கூட அவளுக்கு நான் போட்டு கொடுத்தது இல்ல. அப்பல்லாம் கிச்சன் பக்கமே போக மாட்டேன். சமையல் வேலைக்கு ஆள் இருந்தாலும் அவ போட்டு தர காபி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு அவளே தான் காபி செஞ்சி தருவா” கூறியவரின் முகத்தினில் வலி ரேகைகள்.
“இப்ப நான் சமைக்கிற ஒவ்வொரு டிஷ்ஷூம் அவ சாப்பிட்டிருந்தா என்ன சொல்லிருப்பானு யோசிச்சு யோசிச்சு செய்றேன். ஐ மிஸ் ஹெர் எ லாட்! அவ இருக்கும் போதே இதெல்லாம் செய்யாம போய்ட்டேனேனு கில்டியாவும் ஃபீல் ஆகுது” அவரின் விழிகளை நீர் நிறைக்க,
“என் மகளுக்காக தான் இந்த உயிர் துடிச்சிட்டு இருக்கு! அவ நல்லா வாழுறதை பார்த்தா போதும்டா எனக்கு” காபியை பருகியவாறே தனது மனத்தின் எண்ணங்களை உரைத்திருந்தார்.
அவ்வப்போது பழைய நினைவுகளில் நீந்தி அவரது வாழ்வின் பயணங்களை கலவையான உணர்வுகளுடன் அவர் பகிர்ந்துக் கொள்ளும் போது அப்படியே அதை கேட்டுக் கொள்வான் ராஜன். இவருடன் தங்க தொடங்கிய நாட்களில் அவர் பகிர்பவனவற்றுக்கு ஏதேனும் ஆறுதல் மொழி உரைத்து வந்தவன், நாட்களின் போக்கில் அவர் எதிர்பார்ப்பது ஆறுதல் மொழியல்ல, அவர் உரைப்பவற்றை பொறுமையாய் கேட்க ஒரு செவி என்பதனை புரிந்து கொண்டான்.
இப்பொழுது சுரேந்தர் கூறியதை கேட்டதும் நங்கையை தேடி சென்றது அவனின் மனம்.
அடுத்தடுத்து தொடர்ந்த இழப்புகள் நங்கையை துவண்டிட செய்திடுமே என்று அவன் வெகுவாய் வருந்தியிருந்த வேளையில் வேறு விதமான நங்கையை கண்டிருந்தான் ராஜன்.
நங்கையின் மனவலிமையை எண்ணி அவன் வியந்த நாட்கள் அவை.
எச்சூழலை தம்மால் கையாளவே முடியாது என நம்பிக் கொண்டு நாம் வாழ்ந்திருப்போமோ, அச்சூழலுக்குள்ளேயே நம்மை தள்ளி விட்டு, எவ்வாறு கடந்து வந்தோம் என்றே தெரியாமல் அதனை கடக்க வைப்பது தானே வாழ்க்கை.
அச்சூழலில் தனது தந்தைக்காக அவள் திடமாக இருக்க வேண்டியதாக இருந்தது. எவ்வாறு அதனை கடந்து வந்தாள் என அவளே அறியாள்.
எதனை கொண்டும் நிரப்ப முடியாத வெற்றிடம் அது! என்ன தான் திட்டினாலும் ஏசினாலும் பேசினாலும் தனது பிள்ளைகளுக்காக துடிக்கும் உயிர் பெற்றோருடையது தானே! மனதில் பாராங்கல்லை ஏற்றிய வலி அவளுடையது.
தந்தையும் நொடிந்து அமர்ந்து விட, அவருக்கு ஆறுதலளித்து தேற்றி விடும் நிலைக்கு அவள் தள்ளப்பட, அதனை எதிர்கொள்ளும் திடத்தையும் வலிமையையும் அவளே உருவாக்கி கொண்டு கடந்து வந்தாள்.
வாழ்வில் ஏற்படும் இழப்பிலும் பிரிவிலும் நாம் அங்கேயே தேங்கி விடாமல், நம்மை முன்னோக்கி ஓடிச் செல்ல உந்தி தள்ளுவதே குடும்பம் என்ற அமைப்பு தானே! இங்கே சுரேந்தருக்காக நங்கையும், நங்கைக்காக சுரேந்தரும் வாழ்வின் அடுத்த நிலை நோக்கி ஓடத் துவங்கினார்.
மாற்றம் ஒன்று தானே மாறாதது. இட மாற்றம் நிரம்பவே அவளின் மனபாரத்தை குறைத்தது. நங்கை ஜெர்மனி பணிக்கு சென்று விட, சுரேந்தர் தனது அலுவல் வேலையை செய்ய தொடங்கினார்.
தனித்திருந்த சுரேந்தரின் மனமும் உடலும் நாளுக்கு நாள் குன்றிப்போக, நங்கை ராஜனை அவருடன் தங்குமாறு கேட்டுக் கொண்டாள். பணம் செலுத்தி தான் தங்குவேனென்ற நிபந்தனையுடன் அவருடன் தங்கியவாறு அவரை கவனித்துக் கொண்டான் ராஜன்.
“அங்கிள் உங்க குலதெய்வ கோவில் எங்க இருக்கு? குடும்பத்துல தொடர்ந்து இழப்புகளும் பிரச்சனைகளும் வரும் போது குல தெய்வத்தை பார்த்துட்டு வந்தா சரியாகும்னு எங்க பெரியம்மா சொல்வாங்க! போய்ட்டு வாங்களேன் அங்கிள். கண்டிப்பாக ஏதாவது மாறுதல் நடக்கும்” என்றான் ராஜன்.
“மதுரைல தான் குல தெய்வ கோவில் இருக்கு சுந்தர்! அங்க போய் பல வருஷம் ஆகுது. இப்ப போகவும் மனசில்லை! எங்களை என்ன நல்லா வச்சிருக்கு இந்த சாமினு கோபம் தான் வருது! நான் வாழ்ந்து முடிஞ்சிட்டேன்! என் பொண்ணு என்ன பாவம் செஞ்சா? அவளுக்கு எதுக்கு இவ்வளோ கஷ்டத்தை கொடுக்கனும்” என்று விரக்தியாய் கூறினார்.
“கஷ்டத்தை அவர் கொடுக்கிறது இல்லை அங்கிள். நாம தான் உருவாக்கிக்கிறோம். சில நேரங்கள்ல நம்மளோட சூழ்நிலை நாம வேண்டாம்னு சொன்னாலும் நம்மளை கையை பிடிச்சி உள்ளே இழுத்து கஷ்டத்துக்குள்ள தள்ளிடுது. இந்த மாதிரி நேரத்துல இதை கடந்து போக வழிகாட்டியா இருக்கிறதே குல தெய்வம் தான்! நமக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டினு வீட்டுல இருக்க பெரியவங்க மாதிரி தான் நம்ம குலதெய்வம்! அவங்களை மதிக்காம வெளில மத்த சாமிக்குலாம் ஓடி போய் செய்யும் போது வீட்டுல இருக்க பெரியவங்களான நம்ம குல தெய்வத்துக்கு வருத்தம் இருக்கும் தானே!” என்று அவனுக்கு தெரிந்த வகையில் ராஜன் விளக்கமளிக்க,
“ஹ்ம்ம்” என பெருமூச்செறிந்தவராய்,
“என்னமோ சொல்ற! உனக்காக வேணா போய் பார்க்கிறேன்!” என்றவர்,
“மதும்மா இந்தியா வரும் போது பிளான் செய்றேன் சுந்தர்!” என்றார்.
“சரி இப்ப நீ கிளம்பு! டைம் ஆகிடுச்சுல! காஞ்சிபுரம் வரைக்கும் போகனும்” என்று அவனை குளிக்க அனுப்பினார்.
வார நாட்களில் சுரேந்தரும் அவனும் அவரவரின் அலுவல் வேலையில் பிசியாகி விட, வாரயிறுதி நாட்களில் தன்னுடன் அவரையும் வரதராஜ பெருமாளை தரிசிக்க அழைத்து சென்றிடுவான் ராஜன். இருவரும் வாரயிறுதி நாட்களில் பல்வேறு ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தனர்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, இரண்டு வருடங்கள் கழித்து நங்கையின் திருமணப் பேச்சை தொடங்கலாம் என இவர் நினைத்திருந்த நேரம் பணியில் ஓய்வு பெறும் நாளை நெருங்கியிருந்தார் சுரேந்தர்.
ஓய்வுப்பெற்றப்பின் சுரேந்தரை ஜெர்மனியில் தன்னுடன் வந்து தங்குமாறு நங்கை வற்புறுத்த, ஜெர்மனி சென்ற பிறகு அவளது திருமணத்தை பற்றி பேச முடிவு செய்தார்.
இரண்டு வருடங்கள் கழித்து சுரேந்தர் ரிடையர் ஆகிவிட ஜெர்மனிக்கு சென்று நங்கையுடன் தங்கி கொண்டார்.
ராஜன் தனது நண்பர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுடன் தங்கி கொண்டான்.
அந்நேரம் தான் ஈஸ்வரன் ராஜனை காணச் சென்றான். இத்தனை நாட்களாய் ஈஸ்வரன் தன்னை அந்நியனாய் நடத்தியதற்காக, அவனை தனக்கு யாரென்று தெரியாது எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டான் ராஜன்.
——
சில வருடங்கள் கழித்து…
ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் முன்பு அமர்ந்திருந்தான் ராஜன்.
இக்கோவிலில் நங்கை மீதான தனது காதலை உணர்ந்த அந்நாட்களை எண்ணியவாறு கண்மூடி அமர்ந்திருந்தான்.
‘அன்னிக்கு நங்கை கையால என்கிட்ட நீங்க கொடுக்க வச்ச அந்த பூவுக்கான அர்த்தம் தான் என்ன பெருமாளே? இனி ஆயுளுக்கும் அவளோட நல்வாழ்வை விரும்புற நண்பனா மட்டுமே நான் இருந்துட்டு போறேன்! போதும் சாமி நீங்க என்னைய வச்சி விளையாண்டது! அவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுங்க”
மனதோடு வரதராஜ பெருமாளிடம் பேசி கொண்டிருந்தவனின் கையை பிடித்து அவனது உள்ளங்கையில் பூவை வைத்தாள் நங்கை.
சட்டென கண் விழித்து அவளை அவன் நோக்க, “ரொம்ப பெரிய வேண்டுதலோ! நான் வந்த சத்தம் கூட கேட்காம ஆழ்ந்து வேண்டிட்டு இருந்த! அதான் வேண்டுதல் நிறைவேறட்டும்னு பூ கொடுத்தேன்” என்றவாறு மென்னகை புரிந்தாள்.
கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு அவளை காண்கிறான்.
அவளை பார்த்ததும் கண்கள் பொலிவுற, “ஹே பப்ளிமாஸ்! இப்ப தான் பேருக்கேத்த மாதிரி சப்பியா பப்ளி பப்ளியா இருக்க பப்ளிமாஸ்” அவளை அவன் கேலி செய்ய,
புசுபுசுவென மூச்சு வாங்க கோபமாய் அவனை முறைத்தவாறு, “கிண்டலா செய்ற குண்டா குண்டா!” தனது கையில் இருந்த பையின் மூலம் அவனது முதுகில் அடித்தவள்,
“சார் மட்டும் அப்படியே ஒட்டகம் மாதிரி இருக்கிறதா நினைப்பு” உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாள்.
இருவருமே முதன் முதலாய் அவர்கள் சந்தித்த நாட்களை நினைவுகூர்ந்தனர். அன்றைக்கும் இன்றைக்குமான உடல் மாற்றத்தை நினைத்துக் கொண்டே இவ்வாறு கிண்டலடித்து கொண்டிருந்தனர் இருவரும்.
அவளின் செய்கையில் வாய்விட்டு சிரித்தவன், “மை நங்கை இஸ் பேக்! நங்காய் நிலாவின் தங்காய்” என்று பாடினான்.
மீண்டுமாய் அவள் அவனை அடிக்க வர, இவன் எழுந்து ஓட இருவருமாய் அங்கேயே ஓடி பிடித்து அடித்து கொண்டிருந்த நேரம்,
ஆணி முத்து வாங்கி வந்ததேன்
ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்த்திருந்தேன்
அழகு கைகளிலே
ராஜனின் கைபேசியில் இந்த பாட்டு ஒலிக்க,
“என்ன பாட்டு டா இது” என்றவாறு மூச்சு வாங்க அவனருகில் வந்தமர்ந்தாள் நங்கை.
அவளின் கேள்வியில் வாய்விட்டு சிரித்தவன், “ஹே டைம் ஆகிடுச்சு! அந்த லேப்டாப் ஆன் பண்ணு! ஆனிமா தான் வாட்ஸ்அப் கால் செய்றா” என்றான்.
“கல்யாணிக்காக வச்ச பாட்டா இது” என்று வாய்விட்டு சிரித்திருத்தவாறு மடிகணினியை இயக்கியவள், அதில் கல்யாணியின் வாட்ஸ்அப்பை கனெக்ட் செய்தாள்.
மடிகணினி மூலமாய் வாட்ஸ்சப்பில் கல்யாணிக்கு வீடியோ அழைப்பு விடுத்தாள் நங்கை.
அழைப்பை ஏற்ற கல்யாணி, “ஹாய் நங்கை அக்கா! எவ்ளோ நேரம்ண்ணா! தாலி கட்ட போறாங்க! நான் அவங்க பக்கம் வீடியோவை வைக்கிறேன்” என்றவள் ஈஸ்வரன் மீனாட்சியின் திருமணத்தை லைவ் வீடியோவாக காண்பித்து கொண்டிருந்தாள்.
“உங்க அண்ணி செம்ம அழகு சுந்தர்! பேருக்கு ஏத்த மாதிரி உன் அண்ணன் அண்ணி ஜோடியும் செம்ம பொருத்தம் சுந்தர்” மீனாட்சி சுந்தரேஸ்வரன் கோவிலில் அமர்ந்திருக்க, அவர்களை கண்சிமிட்டாது பார்த்தபடி பூரிப்பான மகிழ்வுடன் உரைத்திருந்தாள் நங்கை.
அவர்களை பார்த்து மென்னகை புரிந்தவனாய் ஆமென தலையசைத்தான் ராஜன்.
சுந்தரேஸ்வரன் மீனாட்சியை பெண் பார்த்து அவளிடம் மனதை பறிக்கொடுத்து மணம் புரியவிருந்த சமயம், தொடர்ந்து தடங்கல்கள் வந்த வண்ணமிருக்க, ஈஸ்வரனின் சித்தப்பாவும் ராஜனின் தந்தையுமான வேங்கட சுந்தரம் தான் இதற்கு காரணமென உறுதியாக நம்பிய ஈஸ்வரன், அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ய முடிவு செய்து, எவருக்கும் தெரிவிக்காமல் மீனாட்சியின் குலதெய்வக் கோவிலில் எளிமையாய் திருமணம் செய்ய இரு குடும்பத்தாரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்திருந்தான்.
அச்சமயம் ராஜன் பணி நிமித்தமாய் ஜெர்மனி வந்திருக்க, கல்யாணி இவ்விஷயத்தை அவனிடம் கூறியிருந்தாள்.
நங்கையுடன் இணைந்து இத்திருமண நிகழ்வை காண திட்டமிட்டவன், அவளை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வர செய்தான்.
நங்கையும் சுரேந்தரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தாலும் அது சிறிய அறைப்போன்று இருக்கும் இல்லம் என்பதால், இங்கு இவளுடன் இதை காணலாம் என முடிவு செய்து அவளை வரவழைத்திருந்தான்.
திருமண நிகழ்வுகளை இருவருமாக பார்த்து விட்டு தம்பதியர்களின் நல்வாழ்வுக்காக காமாட்சி அம்மனை தரிசித்து வேண்டி விட்டு வந்தமர்ந்தனர்.
“என்ன சுந்தர்? அண்ணன் அண்ணி கல்யாணத்தை நேர்ல பார்க்க முடியலைனு கவலையா இருக்கா?” ராஜன் ஏதோ யோசனையுடன் முக வாட்டத்தோடு அமர்ந்திருப்பதை பார்த்து கேட்டாள் நங்கை.
“ம்ப்ச் அது இல்லை! கல்யாணத்தை எனக்கு சொல்லாம செய்யனும்னு அண்ணா நினைச்சது தான் மனசு வலிக்குது நங்கை. அண்ணாவோட தொழில் பிரச்சனைக்கும் கல்யாண பிரச்சனைக்கும் கண்டிப்பா அப்பா காரணம் இல்லை. இதை சொன்னாலும் புரிஞ்சிக்காம இருக்காரேனு தான் கவலையா இருக்கு. அண்ணா கூட இருக்க யாரோ தான் பிளான் பண்ணி பிரச்சனையை கிளப்பி விடுறாங்க. அண்ணிக்கிட்ட சொல்லி அண்ணாகிட்ட இதை சொல்ல சொன்னேன்! சொன்னாங்களானு தெரியலை” மனதின் எண்ணவோட்டத்தினை அவளிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தான் ராஜன்.
“சரி இதை விடு! அண்ணன் அண்ணி மேரேஜ் பார்த்ததுல நீ ஹேப்பி தானே” என நங்கையை கேட்டான்.
“நான் டபுள் ஹேப்பி! அடுத்து கல்யாணி மேரேஜ். அதுக்கடுத்து உனக்கு தானே! உன் மேரேஜ்காக தான் நான் ஆவலா காத்துட்டு இருக்கேன். யாரந்த அதிர்ஷடசாலி பொண்ணுனு பார்க்க ஆசையா இருக்கேன்” என்று கண்களில் ஆசையை தேக்கி பரவசமாய் நங்கை உரைத்திருக்க,
‘வேற பொண்ணை கட்டிக்கிறதா?’ நினைக்கும் போதே நெஞ்சம் கசந்து வழிய, அமைதியாய் அவளை பார்த்திருந்தான் ராஜன்.
“ஆமா நீ கல்யாணமே வேண்டாம்னு சொன்னியாமே! அங்கிள் சொல்லி வருத்தப்பட்டாங்க” எனக் கேட்டான் ராஜன்.
சட்டென சுருங்கிய மனதை பிரதிபலித்த அவளின் முகத்தை பார்த்தவன், “என்னமா! என்னாச்சு? கல்யாணம் செஞ்சிக்கிறதுல என்ன பிரச்சனை?” என ஆதுரமாக கேட்டான்.
“ஒரு காலத்துல கல்யாணம்ன்ற எண்ணமே அவ்ளோ சந்தோஷத்தை கொடுத்துச்சு! எனக்கான ஒருத்தன்! அவனும் நானுமான ஒரு வாழ்க்கைனு நிறையவே கனவு ஆசைகள்லாம் இருந்துச்சு சுந்தர்! லவ் பிரேக்அப்னு இல்லாம அந்த ஒருத்தன், ஒருத்தனா மட்டும் தான் இருக்கனும்னு ரொம்ப ரொம்பவே ஆசைப்பட்டேன்” முகம் கசங்க கூறியவள்,
“ம்ப்ச் ஆசைப்பட்டதுலாம் நடந்துட்டா வாழுற வாழ்க்கைல என்ன சுவாரசியம் இருக்கு” எனக் கூறி சிரித்தாள்.
“அம்மா இருந்திருந்தா இன்பா இல்லனா அஸ்வின்! அஸ்வின் இல்லனா சு..” சுந்தர் என கூற வந்தவள் நாக்கை கடித்து விட்டு, “அஸ்வின் இல்லனா சூர்யா! சூர்யா இல்லனா கார்த்தினு அடுக்கடுக்கா யாரையாவது மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்திட்டே இருந்திருப்பாங்க! நல்ல வேளை அப்பா என்னை அப்படி எதுவும் கம்பெல் செய்றது இல்லைனு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன்! இங்க ஜெர்மனி வந்ததுலருந்து என் கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டே இருக்காரு! எரிச்சலா இருக்கு சுந்தர்” ஆற்றாமையுடன் உரைத்தாள்.
“கல்யாணம் செஞ்சிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை? ஏற்கனவே 29 வயசு ஆகிடுச்சு! இந்த வயசுல மாப்பிள்ளை தேடுறதே அவருக்கு கஷ்டம் தானே! உன் அப்பா நிலைமையை யோசிச்சு பாரு! அவருக்கு பிறகான காலத்துல நீ பாதுகாப்பா இருப்பனு தெரிஞ்சா தானே அவரால் நிம்மதியா இருக்க முடியும். உனக்கான பாதுகாப்பான வாழ்க்கையை அமைச்சு கொடுத்தா அவருக்கு நிம்மதியாகும்ல”
தனது மனதை கல்லாக்கி கொண்டு சுரேந்தரின் கவலையை போக்கும் பொருட்டு அவருக்காக அவளிடம் பேசியிருந்தான்.
“கல்யாணத்துல விருப்பமில்லை சுந்தர்! கல்யாணத்துக்கு பிறகு ஏற்கனவே இரண்டு பேரை கட்டிக்க இருந்தவ தானே நீனு எதுவும் தப்பா பேசிட்டா என்னால தாங்கிக்க முடியாது சுந்தர்!” என்றாள் நங்கை.
“நீ ஏன் நெகட்டிவ்வா பேசுற! உன்னை புரிஞ்சிக்கிட்டு உன் மனசு கோணாம நடந்துக்கிறவங்களா கிடைக்க மாட்டாங்கனு ஏன் நினைக்கிற! நீ முதல்ல அங்கிள்கிட்ட மாப்பிள்ளை பார்க்க ஓகே சொல்லு! அதுக்கு பிறகு உனக்கேத்த பையனா இருந்தா மட்டும் கட்டிக்கோ அதுல யாரும் உன்னை கம்பெல் செய்ய மாட்டோம்” என்றான் ராஜன்.
அவனின் பேச்சை கேட்டு சற்று நேரம் சிந்தித்திருந்தவள், “சரி சுந்தர்! மாப்பிள்ளை பார்க்க ஓகே சொல்றேன்” என்றாள்.
வருங்காலத்தின் நிகழ்வுகளை அறிந்தவராய் அதே புன்சிரிப்புடன் இவர்களின் உரையாடலை கேட்டவாறு நின்றிருந்தார் வரதராஜ பெருமாள்.
— தொடரும்