நனிமதுர நங்கை 2

எட்டு வருடங்களுக்கு முன்பு

“எதுக்காக இந்த வாழ்க்கை? யாருக்காக இந்த வாழ்க்கை?” மனம் முழுவதும் வெறுமை வியாபித்திருக்க, விரக்தியான மனநிலையில் ஜெர்மனியை நோக்கி விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான் சுந்தரராஜன்.

தானாக விரும்பி ஏற்கும் தனிமை எத்தனை இனிமையானதோ அதேயளவு வலிய திணிக்கப்படும் தனிமை கொடுமையானது‌.

அத்தகைய கொடூர தனிமையை வாழ்க்கை ராஜனுக்கு வலிய திணித்திருக்க, அச்சூழலில் இந்த இடமாற்றம் அவனது மனவலிக்கு மருந்தாக அமையும் என எண்ணி தன்னை தானே தேற்றிக் கொண்டு இந்த ஆன்சைட் வாய்ப்பை ஏற்று பயணித்திருந்தான் ராஜன்.

விமானம் தரையிறங்கவும், அவனை அழைத்து செல்ல வந்த சக பணியாளரான நந்தகுமாரனை அடையாளம் கண்டு அவருடன் தங்கவிருக்கும் அறையை நோக்கி பயணித்திருந்தான். அவ்வப்போது நந்தாவின் பார்வை தன் மீது சுவாரஸ்யமாக படிவதை கூச்சத்துடன் அவதானித்தவாறே அவருடன் சென்று கொண்டிருந்தான் ராஜா.

“வெல்கம் ஹோம் யெங் மேன் (young man)” என ராஜாவின் முதுகில் தட்டியவாறு மகிழ்வாய் அவனை அறையின் உள்ளே வரவேற்றார் நந்தா.

ராஜன் கழிவறை சென்று சுத்தப்படுத்தி வந்ததும் அவனுக்கான தேநீரை தானே தயாரித்து அவன் கையில் வழங்கிய நந்தா,

“இவ்வளோ சின்ன வயசுல ஆன்சைட் வாய்ப்பு கிடைக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா சுந்தர்! நான்லாம் பல வருஷம் தவமிருந்து மேனேஜர்கிட்ட வாய்ப்பு கேட்டு கேட்டு நச்சு பண்ணி வாங்கினது உனக்கு பிராஜக்ட்டுக்குள்ள வந்த சில மாசத்துலயே கிடைச்சிருக்கு. அதுவும் நான் இந்தியா போய் ஆக வேண்டிய சூழலை பத்தி கிளையண்ட்கிட்ட சொன்னதும், எனக்கு பதிலாக இங்க வேலை பார்க்கிறதுக்கு உன் பெயரை தான் அவங்க உடனே சொன்னாங்க.

நீ தான் வேணும்னு இங்க கிளைண்ட்டே கேட்டதால தான் நீ நியூ ஜாய்னியா இருந்தாலும் பரவாயில்லனு அனுப்பிருக்காங்க. இந்த நல்ல பெயரை கெடுத்துக்காம நல்லபடியா வேலை பார்த்து இன்னும் மென்மேலும் வளரனும்” என வாழ்த்துதலாய் உரைத்தார் முப்பது வயதான நந்தா.

“உங்களோட டிரைனிங்க்னால தான் நந்தா என்னால இவ்வளோ சீக்கிரம் கத்துக்கிட்டு வேலை பார்க்க முடிஞ்சிது. நீங்க சொல்லிக் கொடுக்க கூடாதுனு நினைச்சிருந்தா இது நடந்திருக்காது நந்தா” என்றான் சுந்தரராஜன்.

“உன் கூட இன்னும் நாலு பேர் நம்ம பிராஜக்ட்ல சேர்ந்தாங்க தானே! அவங்களுக்கும் சேர்த்து தானே நான் டிரைனிங் கொடுத்தேன். அவங்களுக்கு ஏன் இந்த வாய்ப்பு கிடைக்கலை? உன்னோட திறமையும், டெடிகேஷனும் (அர்ப்பணிப்பும்) அண்ட் கத்துக்கிற ஆர்வமும் தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு! அதை என்னிக்கும் விட்டுடாத சுந்தர்” என்று பாராட்டி அறிவுரை வழங்கியவர்,

“சரி உங்க வீட்டுக்கு யாருக்காவது நீ வந்து சேர்ந்துட்டனு தகவல் சொல்லனும்னா என் ஃபோன்ல கால் செஞ்சிக்கோ! அப்புறமா ஈவ்னிங் ஸ்கைப்ல பேசலாம்” என்றவர் உரைக்கவும்,

‘பேசுறதுக்குனு அங்க எனக்கு யாரு இருக்கா?’ இத்தனை நேரமாய் இயல்பாய் இருந்த ராஜனின் முகம் இறுகி போக, “இல்ல நந்தா! இப்ப அவசரம் இல்லை! நான் ஸ்கைப்ல அப்புறமா பேசிக்கிறேன்” என்று உரைத்து அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானான்.

நந்தா மறுநாள் இந்தியாவிற்கு பயணப்பட இருந்ததால் அவரின் பணியிடத்தினையும் அங்குள்ள கிளையண்ட்களையும் ராஜனுக்கு அறிமுகம் செய்து வைத்து, ஒரே நாளில் பல விஷயங்களை நந்தா ராஜனின் மூளைக்குள் ஏற்றிக் கொண்டிருக்க, வேறெதை பற்றியும் சிந்திக்கவும் நேரமின்றி பரபரப்பாக கழிந்தது அன்றைய நாள்.

நந்தா அங்கு தனக்காக வைத்திருந்த மிதிவண்டியை தவணை முறையில் பணம் செலுத்துமாறு கூறி ராஜனிடமே வழங்கிவிட்டு சென்றிருக்க, அவரை விமான நிலையத்திற்கு அழைத்து சென்று இந்தியாவிற்கு வழியனுப்பிவித்து விட்டு வந்திருந்தான் ராஜன்.

மறுநாள் அலுவலகத்தில் முன்பு நந்தா அமர்ந்திருந்த இடத்தினிலேயே ராஜன் இப்பொழுது அமர்ந்து தனது வேலையை கவனித்து கொண்டிருக்க, அவனருகில் அமர்ந்திருந்த பணியாளர் ஒருவர் தலையில் இருந்த ஒலிவாங்கியின் மூலம் ஸ்கைப் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தார்.

“நங்காய் I’m facing an issue in this application! Can you help me to solve this? (நங்காய் இந்த அப்ளிகேஷன்ல ஏதோ பிரச்சனை இருக்கு! இதை சரி செய்ய உதவ முடியுமா?)” என்று ஒலிவாங்கியில் அவர் பேசுவதை உள்வாங்கியவாறே வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராஜனின் மனமோ அவனையும் மீறி நங்காய் நிலாவின் தங்காய் என்ற பாடலை மூளைக்குள் ஒலிபரப்பி கொண்டிருந்தது.

அரை மணி நேரம் கழித்து அவரவர் உணவுண்ண நகர்ந்து கொண்டிருந்த நேரம், ராஜன் தனது இடத்தின் அருகே இருந்த பேன்ட்ரியில் குடிநீரை தனது போத்தலில் நிறைத்து கொண்டிருக்க, அவனது உதடுகளோ நங்காய் நிலாவின் தங்காய் என அப்பாடலை விசிலடித்து கொண்டிருந்தது.

அந்நேரம் அவனருகே தண்ணீர் பிடிப்பதற்காக நின்றிருந்த ஒரு பெண், “ஹௌ டேர் யூ டூ டீஸ் மீ வித் மை நேம் (என் பெயரை வச்சு கிண்டல் செய்ய எவ்ளோ தைரியம் உனக்கு)” என ருத்ரகாளியாய் அவனை முறைத்த வண்ணம் மிகுந்த சாந்தமான குரலில் கேட்டிருந்தாள்.

முதலில் வேறு எவரையோ அப்பெண் கேட்கிறாள் என எண்ணி பொறுமையாய் நீரை அருந்தியவாறு நின்றவனை மேலும் ஏறிய கடுப்புடன் நோக்கிய அப்பெண், ஹலோ என அவனின் முகத்திற்கு முன் சொடுக்கிட்டு,

“ஐம் ஆஸ்கிங் யூ ஒன்லி (உங்களை தான் கேட்கிறேன்)” என்றாள்.

அவளின் சொடுக்கிடலில் அவள் புறம் திரும்பியவன் கேள்வியாய் புருவத்தை உயர்த்தி என்ன என்று வினவ,

‘ஒன்னுமே தெரியாத மாதிரி எப்படி பாவமா முகத்தை வச்சிக்கிட்டு நடிக்கிறான் பாரு’ என மனதினுள் அவனை கடிந்தவாறு நின்ற அப்பெண்ணின் வாயும் கூட அவளையும் மீறி, “என்ன ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்க? என் பேரை வச்சி என்னை இப்ப நீங்க கிண்டல் செஞ்சீங்களா இல்லையா” என செந்தமிழில் பேசியிருந்தாள்.

“ஹே நீங்க தமிழா?” என கண்கள் மின்ன ஆச்சரியமாய் கேட்டவன் மனமோ, ‘மாநிறத்துக்கும் குறைவான நிறத்தோட, விரிந்த கூந்தலோட போட்டிருக்க ஃபார்மல் பேண்ட் சட்டைக்கு சம்பந்தமில்லாத அந்த சின்ன மூக்குத்தியை பார்த்தா தெரியலை தமிழ் பொண்ணுனு’ என அவனை சாடியது.

இரு நாட்களாய் நந்தாவை தவிர தமிழர்கள் எவரையும் காணாது தவித்திருந்தவன், நந்தாவை விமானத்தில் அனுப்பி வைக்கும் போது கூட தமிழ் மக்கள் யாரேனும் உடன் இருந்தால் நன்றாக இருக்குமே என ஏங்கி போய் வேறு இருக்க, இந்நிலையில் இவளின் இப்பேச்சு அவனுக்கு அப்பேச்சின் சாராம்சத்தை விட, அவனின் தாய் மொழியை தான் அவனுள் கடத்தி சென்று மகிழ்விக்க செய்திருந்தது‌.

‘நான் என்ன கேட்டா? இவன் என்ன சொல்றான்! லூசா இவன்?’ என்பது போல் அவனை பார்த்த அப்பெண்ணின் பார்வையில் தன்னை மீட்டு கொண்டவன், அதன் பிறகு தான் அவள் பேச்சின் பொருளை உணர்ந்து மன்னிப்பு கோரினான்.

“ஓ சாரி சாரி! நங்காய் உங்க பேரா? என் பக்கத்துல இருக்க மேத்யூ ஸ்கைப்ல நங்காய்னு பேசிட்டு இருந்ததை பார்த்து என் வாய் தானா இந்த பாட்டை முணுமுணுக்க ஆரம்பிச்சிடுச்சு!” என விளக்கம் அளிக்கவும் மலை இறங்கினாள்.

“ஆனா எப்படி பார்த்தாலும் இது தமிழ் பேரா தெரியலையே” என அவன் கேட்க,

“அது நங்காய் இல்லங்க நங்கை! என் பேரு மதுர நங்கை! இந்த பெயரை இவ்வளோ கொடூரமா உச்சரிக்க முடியும்னு இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சிக்கிட்டேன்” என பாவமாய் முகத்தை வைத்து அவள் கூறியதை கேட்டு மென்னகை புரிந்தவன்,

“உங்களுக்கு நங்காய்னு கூப்ட்டா பிடிக்காதா?” எனக் கேட்டான்.

“பிடிக்கவே பிடிக்காது! நங்கைன்ற பேரு எனக்கு ரொம்ப பிடிச்சனால தான் மதுவை விட்டுட்டு, கால் மீ நங்கைனு நானே சொல்லுவேன்! ஆனா இனி மேல் என்னை மதுன்னே கூப்டுங்கோங்கடா இந்த நங்கையை விட்டுடுங்கடானு கதற வச்சிடுவாங்க போல” என அவள் புலம்ப, தன்னை மறந்து வாய்விட்டு சிரித்திருந்தான் ராஜன்.

இரண்டு நாட்களாய் இருந்த மன அழுத்தம் தன்னை விட்டு முழுவதுமாய் நீங்கி, மனம் லேசானது போல் உணர்ந்தான் ராஜன்.

“என் கஷ்டத்தை பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என மேலும் அவனை அவள் முறைக்க,

“அய்யோ வெரி சாரிங்க! இல்ல நான் இங்க வந்து இரண்டு நாள் தான் ஆச்சு! தமிழ் ஆளுங்களே பார்க்காம கவலையா இருந்தேனா, திடீர்னு நீங்க தமிழ்ல பேசவும் வந்த சந்தோஷம் அது” என்று விளிக்கமளித்தவன்,

“ஐம் சுந்தர்! சுந்தரராஜன் ஃப்ரம் மதுரை! நைஸ் டூ மீட் யூங்க” என கையை நீட்ட,

“ஹே ஐம் ஆல்சோ ஃப்ரம் மதுரை” என குதூகலமாய் உரைத்தவாறு அவனுடன் கை குலுக்கினாள் மதுர நங்கை.

“மதுரைல எங்க?” என அவன் கேட்க, அதற்கு பதிலளித்தவள், “நான் பிறந்து வளர்ந்ததுலாம் சென்னைல தான் சுந்தர். மதுரை அப்பா அம்மாவோட சொந்த ஊரு” என்று கூற இருவருக்குமே தொடர்ந்து பேச இதுவே போதுமானதாய் இருந்தது.

“சரிங்க வேலை இருக்கு! அப்புறம் பேசலாம்” என சென்ற நங்கையை மென்னகையுடன் பார்த்திருந்தான் ராஜன்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அலுவலகத்தில் அவ்வப்போது காணும் நேரங்களில் எல்லாம் ராஜனும் நங்கையும் இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொள்வார்கள்‌. ஒன்றாய் தேநீர் அருந்த செல்வார்கள். அதுவே அவர்களுக்குள் மெல்லிய நட்பை வளர்த்திருந்தது‌.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த வேளையில், ஒரு வாரயிறுதி நாளில் மாலில் இருந்த உணவுண்ணும் இடத்தில் தனியாக அமர்ந்திருந்த ராஜனை கண்டாள் நங்கை.

எங்கோ வெறித்தவாறு கண்களில் வலியுடன் பார்த்திருந்த ராஜனின் பார்வையை தொடர்ந்து தானும் நோக்கியவளின் கண்கள் இரட்டையர்களான இரு சகோதரர்கள் அரட்டை அடித்து பேசி கொண்டிருந்த காட்சியை தான் கண்டது.

“ஹாய் சுந்தர்” என்றவாறு அவனின் நிலையை கலைத்து அவனது இருக்கையினருகில் சென்று அமர்ந்த நங்கை, “என்ன தனியா உட்கார்ந்திருக்கீங்க?” என கேட்டாள்.

“வாழ்க்கைல எல்லாரும் எப்பவும் நம்மோட வர போறது இல்லையே! இந்த தனிமை தானே நமக்கு நிரந்தரமானது” என்று அவன் தத்துவ மொழி உரைக்க,

அவனை கூர்ந்து கவனித்த நங்கையின் கண்களில் அவனது வாடிய வதனம் தென்பட, “ஆர் யூ ஆல்ரைட் சுந்தர்?” எனக் கேட்டாள்.

“என்னங்க! உண்மையை சொன்னா எனக்கு என்னமோ ஆகிடுச்சுன்ற மாதிரி பார்க்கிறீங்க” என மெலிதாய் சிரித்தவாறு கேட்டான்.

பேச்சுக்கு சிரித்தாலும் அச்சிரிப்பு அவனின் கண்களை எட்டாது இருப்பதை கண்ணுற்றவளாய், “சரி என்ன ஆர்டர் செஞ்சீங்க?” என கேட்டவாறு அங்கிருந்த மெனுவை நோட்டமிட்டவள், “உங்களுக்கு இங்க ஃபுட்லாம் செட் ஆகிடுச்சா சுந்தர்?” எனக் கேட்டாள்.

“வாழுறதுக்கு கிடைக்கிறதை சாப்பிட்டு தானே ஆகனும்” என்ற அவனின் பதிலில் நிஜமாகவே கடுப்பாகியது அவளுக்கு. ஆனால் அவனுள் ஏதோ அழுத்தி கொண்டிருப்பதும் அவளுக்கு புரிந்தது.

“சரி என் கூட வாங்க! இன்னிக்கு லன்ச் என்னோட ட்ரீட்” என்றவாறு அவனை அங்கிருந்து கிளப்பினாள்.

“வேண்டாம் நங்கை! நீங்க உங்க வேலையை பாருங்க. எனக்காக எதுக்கு உங்க நேரத்தையும் காசையும் செலவு செய்றீங்க” என அவன் ஒப்பு கொள்ளாது அமர்ந்திருக்க,

“ஓகே அப்ப இன்னிக்கு நான் லன்ச் சாப்பிடாம பட்டினியா இருக்கேன். ஆனா அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான்” என அவனை முறைத்தவாறு உட்கார்ந்து விட்டாள்.

“ஏங்க என்னை கம்பெல் செய்றீங்க” என எரிச்சலாய் மொழிந்தவன், அவளின் கெஞ்சும் பார்வையில் பெருமூச்செறிந்தவனாய், “சரி உங்க கூட வரேன். ஆனா என்னோட ட்ரீட் இது! அதுக்கு ஒத்துக்கனும்” என கறாராக உரைத்தான்.

“ஓசில சோறு வாங்கி கொடுத்தா யாரு வேண்டாம்னு சொல்லுவா” என சிரித்தவாறு உரைத்தவள் அவனோடு நடக்க தொடங்கினாள்.

இருவருமே மிதிவண்டியில் அந்த இடத்திற்கு வந்திருக்க, ‘வாங்க சைக்கிள்லயே போய்டலாம்’ என அவனை அழைத்தவள், அவனுடன் அலுவலக விஷயங்களை பேசியவாறே மெதுவாய் அவனுக்கு இணையாக மிதித்தவாறு சென்றாள்.

ஜெர்மனியில் மிதிவண்டியில் செல்பவர்களுக்கென்றே ஒரு வழி சாலை ஓரமாய் இருக்கும் என்பதால் அந்த இடத்தினில் ஓட்டியவாறு இருவரும் அரை மணி நேரத்தை கடக்க, “இன்னும் எவ்ளோ தூரம் போகனும் நங்கை” என மூச்சு வாங்க கேட்டான் ராஜன்.

“இன்னும் அரை மணி நேரம் ஆகும்” என்றவளை, “என்னது இன்னும் அரை மணி நேரமா?” என அவன் அவளை முறைக்க,

“நோ டென்ஷன் பாஸ்! அங்க போன பிறகு என்னை புகழ்வீங்க பாருங்க” என்றாள்.

“ஒழுங்கா நான் அங்கேயே சாப்பிட்டிருப்பேன்” என புலம்பியவாறே அவளுடன் சென்றவனின் விழிகள் அந்த உணவகத்தினை பார்த்ததும் விரிந்தன.

அன்னபூரணி என்ற பெயரிடப்பட்டிருந்த அந்த உணவகத்தினை கண்டவன், “ஏங்க தமிழ் ரெஸ்டாரன்ட்டா” என கண்கள் மின்ன சின்ன சிரிப்புடன் மகிழ்வாய் கேட்டான்.

அவனின் சிரிப்பினை நோக்கியவாறு ஆமென தலையசைத்தவள், “எப்படியும் நீங்க நம்மூரு சாப்பாடு சாப்பிட்டு இரண்டு மாசம் இருக்கும்ல. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்! ஆனா வெஜ் மட்டும் தான் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றவள், அந்த மெனு கார்டில் இருந்த அனைத்தையுமே ஒரு பிளேட் எடுத்து வருமாறு ஆர்டர் செய்தாள்.

“அய்யோ அவ்ளோ எதுக்கு நங்கை” என்றவன் கேட்க,

“இங்க அளவு கம்மியா தான்ங்க இருக்கும். ஆனா டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். கண்டிப்பா நீங்க சாப்பிட்டு முடிச்சிடுவீங்க பாருங்க” என்றாள்.

“நீங்க அடிக்கடி இங்க வருவீங்களோ?” என ராஜன் கேட்க, “ஆமா வாரத்துக்கு ஒரு தடவையாவது வந்துடுவேன்” என்றாள்.

இவர்கள் ஆர்டர் செய்த உணவு பதார்த்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வர, சாம்பார் சாதத்தை வாயில் எடுத்து வைத்த ராஜனின் முகம் பொலிவுற, “டெலிசியஸ்” என்றவாறு ரசித்து ருசித்து உண்டான்.

ராஜனின் முகம் பார்த்து அவன் ரசித்து உண்ணும் பதார்த்தங்களை அவனுக்கு எடுத்து வைத்து என அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் நங்கை.

சுற்றம் மறந்து நாவின் சுவையில் முகம் விகசிக்க மகிழ்வாய் உண்டு கொண்டிருந்த ராஜனின் முகத்தை மனநிறைவுடன் பார்த்து கொண்டிருந்தாள் நங்கை. அங்கு உணவகத்தில் வேதனை படர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தவனை தனது கவலை மறந்து மகிழ்வுடன் உண்ண வைத்ததில் மகிழ்வுற்றவளாய் அவனை பார்த்து கொண்டிருந்தாள் நங்கை.

பெயருக்கு தட்டில் வைத்து விட்டு அவள் தான் உண்பதையே கவனித்து பரிமாறுவதை கண்ட ராஜன், “நீங்களும் சாப்பிடுங்க! பிளேட்ல அப்படியே இருக்கு எல்லாம்” என அவளையும் உண்ணுமாறு உந்தினான்.

அப்பொழுதும் அவள் பிளேட்டில் இருப்பதை உண்ணாமல் கொறித்து கொண்டிருப்பதை கண்டவன், “எனக்காக தான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா?” எனக் கேட்டான்.

ஆமென அவள் தலையசைக்க, தனக்காக யோசித்த அவளின் செயலில் நெஞ்சம் நெகிழ்வுற்றவனாய், “தேங்க்யூ நங்கை” என்றான்.

“எங்க பெரியம்மா கையால சாப்பிட்ட மாதிரியே இருக்கு” கண்களில் நீர் கோர்த்து கொண்டது அவனுக்கு. அதனை உள்ளிழுத்தவாறு உரைத்திருந்தான்.

அலுவலகத்தில் எப்பொழுதும் உணர்வற்ற அழுத்தமான பார்வையுடன் சற்று கண்டிப்பான ஆளாகவே உலா வந்து கொண்டிருக்கும் ராஜனின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலை அவளின் மனதை பிசைந்தது.

“எல்லாரும் அம்மாவை தானே சொல்வாங்க! நீங்க என்ன பெரியம்மானு சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் அம்மாவை விட பெரியம்மா சமையல் ருசியா இருக்கும்! அவங்க கையால சாப்பிட்டது தான் அதிகம்” என கூறும் போதே மீண்டுமாய் அவன் கண்களில் கண்ணீர் கோர்க்க,

“வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?” எனக் கேட்டாள்.

ஆமெனவும் இல்லையெனவும் இரு புறமுமாக தலை அசைத்தவனை புரியாது அவள் நோக்க, “அவங்க எல்லாரும் இப்ப என் வீட்டாளுங்க இல்லையே நான் ஞாபகம் வச்சிருக்கிறதுக்கு” என அமைதியாய் உரைத்தவாறு கை கழுவ சென்றான்.

குழம்பி போனாள் நங்கை.

‘ஏதோ ஃபேமிலி பிராப்ளமா இருக்குமோ’ என தனக்குள்ளாகவே கூறி கொண்டாள்.

கை கழுவி வந்தவனிடம், “உங்க பிரதர் கூட இப்ப உங்க ஞாபகத்துல இல்லையா?” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் அதிர்வுற்றவனாய், “எனக்கு அண்ணா இருக்காங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டான்.

அவனின் அதிர்ச்சியான பார்வையில் சிரித்தவளாய், அங்கே டிவின்ஸ் சகோதரர்களை வலியுடன் அவன் கண்டதை கூறியவள், “நீங்க டிவின்ஸ்னு நினைச்சேன்” என்றாள்.

“இல்ல டிவின்ஸ் இல்ல! ஆனா அண்ணனும் நானும் டிவின்ஸ் மாதிரி ஒரே ஸ்கூல் ஒரே கிளாஸ் ஒரே காலேஜ்னு ஒன்னா தான் படிச்சோம். எப்பவுமே ஒன்னா தான் இருப்போம். என்னோட ஃப்ரண்ட், பிலாசபர், கைட் எல்லாமே அண்ணா தான். யூ நோ அவனுக்கு எஞ்சினியரிங் படிக்க சுத்தமா விருப்பம் இல்ல. ஆனாலும் என்னை தனியா சென்னைக்கு அனுப்ப மனமில்லாம எனக்காகவே நான் படிச்ச காலேஜ் நான் படிச்ச க்ரூப் எடுத்து எனக்காகவே இஞ்சினியரிங் படிச்சான்” மென்மையான பார்வையுடன் முகத்தில் பாச உணர்வு மின்ன, மனம் திறந்து பேசி கொண்டிருந்த ராஜனை நெகிழ்வுடன் பார்த்து கொண்டிருந்தாள் நங்கை.

“அப்ப இது தான் அண்ணா இல்லாம நீங்க முதல் முறையா தனியா இருக்கிறதா?” என கேட்டாள் நங்கை.

ஆமென அவன் தலையசைக்க, “எனக்கு இப்படி தனியா இருக்கிறதுலாம் காலேஜ் டேஸ்லயே பழகி போய்டுச்சு சுந்தர்” என்றாள்.

“ஏன் காலேஜ்லயே ஹாஸ்ட்டல்ல சேர்ந்துட்டீங்களா?” என ராஜன் கேட்க, ஆமென தலையசைத்தவள்,

“பெங்களூர்ல ஒரு இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சேன். அங்க ஆன் கேம்பஸ்ல டிரைக்ட்டா இந்த ஆன்சைட் பிராஜக்ட்டுக்காக தான் எடுத்தாங்க. அப்படியே இங்க வந்துட்டேன். நீங்க இங்க வரதுக்கு ஒரு மாசம் முன்னாடி தான் நானும் வந்தேன். ஆனா நான் கொஞ்சம் தனிமை விரும்பி தான். அதனால எனக்கு பெரிசா லோன்லினஸ்லாம் ஃபீல் ஆகலை” என்றாள்.

“கூட்டு குடும்பமாக அண்ணா தங்கச்சி பெரியம்மா பெரியப்பா அம்மா அப்பானு அவங்க கூட வாழ்ந்துட்டு இப்படி தனியா வாழுறது கொடுமை நங்கை!
அதிலும் யார்கிட்டேயும் பேச முடியாம, என்னோட உணர்வுகளை பகிர்ந்துக்க முடியாம, அவங்களுக்குலாம் நான் யாரோ போல சண்டை போட்டு பிரிஞ்சி வாழுற இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நரகமா போகுது நங்கை” கூறும் பொழுது அவனையும் மீறி சிந்திய கண்ணீரை சட்டென டிஸ்யூ எடுத்து துடைத்து கொண்டான்.

“காம் டவுன் சுந்தர்” மேஜை மீதிருந்த அவனது கையினை தட்டியவாறு உரைத்தவள், “ஏன் உங்களுக்கு யாருமே இல்லைனு நினைக்கிறீங்க? உங்களுக்கு எதுவும் பேசனும்னா ஷேர் பண்ணனும்னா என்கிட்ட சொல்லுங்க. ஐ தேர் ஃபார் யூ (நான் உங்களுக்காக இருக்கிறேன்)” என ஆறுதல் மொழி உரைத்தாள்.

“தேங்க்ஸ் நங்கை” அவனது மனம் சமன்பட்டதும் உணவுக்கான பணத்தை செலுத்தியவன் அவள் தங்கியிருந்த வீடு வரை உடன் சென்றான்.

வீட்டினுள் அவள் நுழைய போக, “நங்கை” என அழைத்தவன், தன்னை நோக்கி வந்தவளிடம், “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்! நிஜமாவே மனசு ரொம்ப லேசா இருக்கு!” மனம் உணர்ந்து நன்றி உரைத்தான்.

இதழ் விரிய சிரித்தவாறு அவனது நன்றியினை ஏற்று கொண்டதாய் அவள் உரைக்க, அன்பினால் நிறைந்த அவளின் மதிமுகத்தை பேரழகியாய் அவனின் கண்கள் ரசிக்க, அவனது மனக்கதவை அன்பெனும் ஆயுதத்தால் லேசாய் அசைத்திருந்தாள் அவள்.

“இனி இப்படி சோகமா உட்காராம உங்களுக்கு எப்ப எது சொல்லனும்னாலும் எனக்கு மெசேஜ் செய்யுங்க” என கூறி தனது கைபேசி எண்ணை அவனுக்கு அளித்து விட்டு அவனுடையதை அவளும் பெற்று கொண்டவாறு விடைபெற்றாள்.

அதன்‌பிறகு வந்த நாட்கள் எல்லாம் அவளின் குட் மார்னிங்க்கில் ஆரம்பித்து அன்றைய நாளின் நிகழ்வுகளை இருவருமாய் பகிர்ந்து பேசி சிரித்து இரவு குட் நைட் கூறி கொள்வதுடன் தான் முடிந்தது.

உற்ற தோழமைகளாய் இருவரும் மாறியிருந்த வேளையில் ஒரு நாள் ஓர் உதவி கேட்டவாறு அவன் முன்பு வந்து நின்றாள் நங்கை.