நனிமதுர நங்கை 19 & 20

அத்தியாயம் 19

“நான் இந்தியால இருக்கேன்” என்ற நங்கையின் குறுஞ்செய்தியை பார்த்து குழப்பத்தில் இருந்தான் ராஜன்.

‘இவ எதுக்கு இப்ப இந்தியாவுக்கு வந்திருக்கா’ என்றெண்ணியவாறே அவளுக்கு அழைப்பு விடுக்க அது அடித்து ஓய்ந்தது.

எதற்காக வந்திருக்கிறாள் என்ற கேள்வி எழும்பினாலும், ஒரு வேளை தன்னை காண வந்திருப்பாளோ என்ற அல்ப சந்தோஷமும் குறுகுறுப்பும் அவன் மனதை குடைந்தது.

ராஜன் இந்தியாவிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது‌.

அவன் இந்தியா வந்த பொழுதே அவனின் தாய் செல்வாம்பிகை சிகிச்சை எடுத்து ஓரளவிற்கு உடல்நலம் தேறியிருந்தார்.

மகனின் பிரிவும், அப்பிரிவு அளித்த வெறுமையும் விரக்தியும் அவரை இவ்வாறு செய்ய வைத்திருந்தது.

இவன் மருத்துவமனையில் அவரை சந்தித்ததும் அவனின் கைப்பிடித்து கதறி அழுதுவிட்டார் செல்வாம்பிகை‌.

“இனி அம்மாவை விட்டு எங்கேயும் போக மாட்ட தானே! என்கிட்ட பேசாம இருக்க மாட்ட தானே” எனக் கேட்டு அவர் அழுவதை காண சகிக்காது அவனது கண்களிலும் கண்ணீர் பொங்கியது‌.

“உனக்காக தானடா நாங்க சொத்து சம்பாத்தியம்னு பார்த்து பார்த்து சேர்த்து வச்சிருக்கிறதுலாம். நீயே இல்லாம நீ அனுப்புற பணம் மட்டும் அதெல்லாம் ஈடு செஞ்சிடுமா!” என்றெல்லாம் அவர் புலம்பி அழ,

“இனி பேசாமலாம் இருக்க மாட்டேன்மா. கண்டதையும் நினைச்சு கவலைப்படாம ரெஸ்ட் எடு” என்று ஆறுதல் மொழிந்தான் ராஜன்.

அவனின் தந்தை வேங்கட சுந்தரம் அமைதியாக இதை பார்த்திருந்தார்‌. மனைவியின் பேச்சை கேட்டு, தான் செய்தது தவறு என புரிந்திருந்தாலும் மகனிடம் மன்னிப்பு கேட்கவெல்லாம் அவரின் ஈகோ இடம் தரவில்லை. மகனிடமே கேட்காதவர் எங்கிருந்து அண்ணன் குடும்பத்தினரான அகல்யாவிடமும் ஈஸ்வரனிடமும் மன்னிப்பு கேட்பார். ஆக அனைவரிடமும் முறுக்கி கொண்டு தான் திரிந்தார். பரம்பரை கடையை ஈஸ்வரன் நீதிமன்றம் மூலம் பறித்துக் கொண்டப்பின் எந்த வேலையையும் பார்க்காது ராஜன் அனுப்பும் சம்பளத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர் இருவரும்.

தனியாக சிறிய கடையை வைக்க வேண்டுமென்ற தனது எண்ணத்தை வேங்கடம் உரைக்க, பணம் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்து தருவதாய் கூறிவிட்டான் ராஜன்.

ராஜன் இந்தியா வந்த அன்றே  அகல்யாவும் கல்யாணியும் சொல்வாம்பிகையை காண மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களுடன் தீரனும் சென்றான்.

“உங்களால் தான் என் மகன் என்கிட்ட பேசாம இருந்தான். இப்ப திரும்பவும் அவனை உங்க பக்கம் இழுக்கிறதுக்காக தானே இப்ப என்னை பார்க்கிற சாக்குல ஓடோடி வந்திருக்கீங்க” என்று செல்வாம்பிகை வார்த்தையை விடவும்,

“ஏன் சித்தி இப்படி பேசுறீங்க?” தாள மாட்டாமல் கேட்டிருந்தாள் கல்யாணி.

“உங்க பசப்புற வேலைலாம் இங்க வேண்டாம். கோர்ட்ல கேஸ் போட்டு அசிங்கப்படுத்துவானாம் மகன். அம்மாவும் தங்கச்சியும் வந்து பாசமா பேசுவாங்களாம். உங்க நாடகத்தை எல்லாம் வேற எங்கேயாவது வச்சிக்கோங்க. நடுத்தெருல நிக்க விட்டதும் இல்லாம எங்க மகனையும் எங்ககிட்ட இருந்து பிரிச்சு நாதி இல்லாம நிக்க விட்டுட்டீங்கல! நீங்க எப்படி நல்லா வாழுறீங்கனு பார்க்கிறேன்” ஆங்காரமாய் கொதித்து கொண்டு அவர் பேச,

“வீடு வாசல் இல்லாம நடுத்தெருல எங்களை நிக்க வச்சது நீங்க தான் சித்தி! அண்ணன் உங்க வீட்டை உங்களுக்கே கொடுத்து கௌரவமா தான்‌ இருக்க வச்சிருக்கு” சண்டைக்கு அஞ்சும் கல்யாணியே அவரது பேச்சின் வீரியம் தாளாது பேசியிருந்தாள்.

செல்வாம்பிகையின் சாபமான பேச்சு கல்யாணியின் கோபத்தை ஏற்றியிருக்க, அண்ணனுக்காக பேசியிருந்தாள் அவள்‌.

இருவரின் பேச்சையும் கேட்டவாறு அறைக்குள் நுழைந்த வேங்கடம், “செல்வா! என்ன பேச்சு இது! மத்தவங்களுக்கு நாம விடுற சாபம் நம்ம பிள்ளையை தான் பாதிக்கும்னு நான் எத்தனை தடவை சொல்றது! உன் பிள்ளை நல்லா வாழனும்னு ஆசை இல்லையா உனக்கு” செல்வாம்பிகையை கடிந்து கொண்டு அகல்யாவிடம் திரும்பியவராய்,

“நீங்க வெளில இருங்க. ராஜா வீட்டுக்கு குளிக்க போய்ருக்கான். இப்ப வந்துடுவான்” என்றார்.

செல்வாம்பிகை தனது ஆங்காரமான பேச்சில் ரத்த அழுத்தம் அதிகமாகி மூச்சிளைக்க அமர்ந்திருக்க, “தீரா கொஞ்சம் டாக்டரை வந்து பார்க்க சொல்றியா! பிரஷர் கூடியிருக்கும்னு நினைக்கிறேன். கொஞ்சமாவது அமைதியா இருனு சொன்னா கேட்குறாளா?” செல்வாம்பிகையை முறைத்தவாறு அமர்ந்து விட்டார்.

தீரன் மருத்துவரை அழைத்து வந்து பார்க்க கூறிவிட்டு வெளியே வர ராஜன் வந்திருந்தான்.

வீட்டிற்கு சென்று குளித்து முடித்து மருத்துவமனைக்கு வந்த ராஜனிடம் தீரன் நடந்ததை தெரிவிக்க, “ஏன் பெரியம்மா அம்மாவை பத்தி தெரிஞ்சும் வான்டட்டா வந்து வாங்கி கட்டிக்கிறீங்க! எனக்கு தான் அவங்க அம்மாவாகி போய்ட்டாங்க. ஆயுசுக்கும் அவங்களை நான் வெறுக்கவும் முடியாது. ஒதுக்கவும் முடியாது. நீங்க ஒதுங்கி போகலாம்ல‌! அண்ணன் எப்படி உங்களை விட்டுச்சு?” என்றவன்,

“நீ எதுக்கு பெரியம்மாவை கூட்டிட்டு வந்த?” என கல்யாணியை முறைத்தான்.

அவளும் அவனை முறைத்துக் கொண்டு தான் நின்றாள்.

“என்ன‌ ராஜா இப்படி சொல்லிட்ட! சொந்தம் விட்டு போகுமா! அவ என்ன தான் என்னை ஏசினாலும் பேசினாலும் அவ உசுர பிடிச்சிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டு பார்க்காம போனா நல்லாவா இருக்கும்” என்ற அகல்யா,

“நீ எப்படி இருக்க ராஜா? பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு!” என ஆசையாய் அவன் கன்னம் தடவி கேட்க,

அவரின் பாசமான ஸ்பரிசத்தில் பூத்த மென்னகையுடன், கன்னத்தை தடவிய கையை பற்றியவன், “நான் இன்னும் என்ன சின்ன பிள்ளையா பெரியம்மா” என்று சிரித்தான்.

“எனக்கு என்ன குறை பெரியம்மா! நீங்கலாம் என்னை பார்த்துக்க இருக்கும் போது நான் நல்லா தான் இருப்பேன்” என்றவனை இடையிட்ட கல்யாணி,

“ஓ நாங்கலாம் இருக்கோம்னு ஞாபகம் இருக்கா சார் உங்களுக்கு! அதான் எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம இந்தியா வந்தீங்களோ” தீயாய் முறைத்திருந்தாள்.

‘ஓ சொல்லாம வந்துட்டேன்னு கோவமா இருக்காளா?’ மனதோடு எண்ணிக் கொண்டவனாய், “அப்படி இல்லடா ஆணிமா” என்று அவளின் கையை பிடிக்க போக, “நீ ஒன்னும் சொல்ல தேவையில்ல” அவனின் கையை தட்டி விட்டவள்,

“பேசாத என்கிட்ட” எனும் போதே கண்களை நீர் நிறைத்தது அவளுக்கு.

“டேய் ஆணிமா” என மீண்டுமாய் அவன் அவளிடம் ஏதோ கூற வரவும்,

“ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க பிள்ளைக்கிட்ட என்ன சண்டை இது கல்யாணி!” கல்யாணியை அதட்டிய அகல்யா,

“ராஜா வீட்டுக்கு வாப்பா! உனக்கு பிடிச்சதை என் கையால சமைச்சு போடனும். எம்பூட்டு வருஷமாச்சு” என்றார் ஆசையாக.

ராஜனின் முகம் இறுக்கமாக, “இல்ல பெரியம்மா! இப்ப நான் வரலை. அண்ணனோட கோவம் போகட்டும். அவரா வந்து என்னிக்கு பேசுறாரோ வீட்டுக்கு வானு கூப்டுறாரோ அப்ப தான் வருவேன்” என்றான்.

“ஓஹோ அப்ப எங்களுக்காக வர மாட்ட! எங்களை விட உனக்கு உன் பிடிவாதம் கௌரவம் தான் முக்கியம்ல! இனி என்கிட்ட பேசாத! அண்ணா பேசின பிறகு என்கிட்ட பேசினா போதும்” கோபமாய் உரைத்த கல்யாணி, கண்களை துடைத்தவாறு தாயின் கையை பிடித்து இழுத்து மருத்துவமனை வாயிலை நோக்கி நடக்க,

“ஆணிமா! நான் சொல்றதை கேளுடா” என்றவனின் பேச்சை எல்லாம் வாங்கிக் கொள்ளாது விறுவிறுவென சென்று விட்டாள்.

அப்படியே வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவனுக்கு தலை வலி மண்டையை பிளந்தது.

தீரன் வந்து அவனின் தோளை தொட, “என்னடா இவ புரிஞ்சிக்காம பேசுறா?” என்று ராஜன் ஆதங்கத்துடன் கேட்க,

“நீ தான் புரிஞ்சிக்காம பேசுற! பாவம் அந்த பொண்ணு உங்க இரண்டு பேருக்கும் இடையில கெடந்து அல்லாடுது! கொஞ்சம் விட்டு கொடுத்து போகலாமே! அப்படி என்ன கௌரவம் உனக்கு” என்று கேட்டான் தீரன்.

தீரனின் விட்டு கொடுக்கலாமே என்ற சொல், நங்கையின் விட்டுக் கொடுக்கிறவங்க கெட்டுப் போறதில்லை என்ற அவளின் அறிவுரையை நினைவுப்படுத்த, அடுத்த இரண்டு நாட்களில் அவனாகவே ஈஸ்வரன் வீட்டில் இல்லாத சமயமாய் பார்த்து, வீட்டிற்கு சென்று கல்யாணியை  சமாதானம் செய்து அகல்யாவின் கை மணத்துடன் வயிறார உண்டிருந்தான்.

அதன் பிறகு தான், கல்யாணிக்காக என்று பெரும்பாலான தனது பிடிவாதங்களை தளர்த்த தொடங்கினான். ஈஸ்வரனிடம் பேச வேண்டும் என்கின்ற அவளின் கோரிக்கையை தவிர, அவள் கேட்கும் மற்ற அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்தான்.

நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் தீரன் மூலமாகவே கேட்டறிந்து கொண்டான் ஈஸ்வரன். ராஜன் வீட்டிற்கு வந்து போவது தெரிந்தாலும் தெரியாததை போலவே இருந்து கொண்டான்.

—-
ராஜன் இந்தியா வந்த இரு நாட்களிலேயே நங்கை இந்தியாவிற்கு கிளம்பி இருந்தாள்.

மீண்டுமாய் நங்கையின் கைபேசிக்கு அழைத்தவன், அவள் அழைப்பை ஏற்ற நொடி, “என்ன திடீர்னு இந்தியா வந்திருக்க? இப்ப எங்க இருக்க பெங்களூர்லயா மதுரைலயா?” படபடவென கேட்டிருந்தான்.

“சென்னைல இருக்கேன். அம்மாக்கு உடம்பு சரியில்லை” என்றாள்.

தாயிற்கு உடல்நலக்குறைவு என்று இந்தியா வரை வந்திருக்கிறாள் என்றாள் பெரிய பிரச்சனையாக தான் இருக்க வேண்டுமென அவனின் மனது அதிர்ந்து தெரிவிக்க, “அச்சோ என்னாச்சு?” பதறியவாறு கேட்டான்.

“ஹார்ட் அட்டாக்” கூறும் போதே அவளது குரலின் கரகரப்பினை உணர்ந்தவனாய், “இப்ப எப்படி இருக்காங்க?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் இப்ப பரவாயில்ல! அவங்க உடம்பு கொஞ்சம் தேறினதும் ஆப்ரேஷன் செய்யனும்னு சொல்லிருக்காங்க. இரண்டு வாரத்துல செய்வாங்க” குரல் தழுதழுத்தது.

“அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது! கவலைப்படாத” ஆறுதல் உரைத்தான்.

ஹ்ம்ம் என்றவாறு அழுகையை அடக்க முற்பட்டாள்.

“எப்ப எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேளுடா! உங்க அப்பா ஓகே தானே! ஏன் இங்க வந்ததும் என்கிட்ட சொல்லலை?” எனக் கேட்டான்.

தன்னை சமன் செய்தவளாய், “ஏற்கனவே கவலைப்பட்டுட்டு இருக்கிறவனை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான் உங்க அம்மா நல்லான பிறகு பேசிக்கலாம்னு சொல்லலை. உங்கம்மா இப்ப எப்படி இருக்காங்க?” என நலம் விசாரித்தாள்.

“அவங்க நல்லா இருக்காங்க! பூச்சி மருந்து குடிச்சனால தொண்டை அலர்ஜி ஆகி சரியா சாப்பிட முடியலை. அது மட்டும் இன்னும் முழுசா சரியாகலை. பிரஷர் அப்பப்ப ஏறி இறங்கிட்டு இருக்கு! வீட்டுக்கு வந்துட்டோம். இன்னும் ஒரு வாரம் கழிச்சி நான் சென்னைல இருக்க புது பிராஜக்ட்ல ஜாய்ன் செய்யலாம்னு இருக்கேன்”

இருவருமாய் நெடு நேரம் அவரவர் வீட்டின் நிலையையும் அலுவல் விஷயங்களையும் பேசி முடித்தே வைத்தனர்.

மேலும் ஒரு வாரம் தாயுடன் இருந்த ராஜன், சென்னையில் ஏற்றுக் கொண்ட புதிய பிராஜக்ட்டின் பணியில் சேர்ந்தான்.

அன்று மாலை நங்கையின் தாய் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தான்.

இருவரின் அசாதாரண சூழ்நிலையின் பொருட்டு பின்னொரு நாளில் காதலை கூறிக் கொள்ளலாமென இவன் ஒத்திப்போட, அதற்குள் காலம் இவனுக்கு வேறொரு அதிர்ச்சியை வைத்திருந்தது.

அத்தியாயம் 20

நங்கையின் தாய் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்ததும் ஜெர்மனிக்கு பயணப்பட்டிருந்தாள் நங்கை. ராஜன் சென்னையிலேயே பணிபுரிந்து வந்தான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, நங்கை ஜெர்மனி சென்று மூன்று மாதங்களான நிலையில் ராஜனின் தாய் அவனுக்காக பெண் பார்த்து வைத்திருப்பதாய் உரைத்தார்.

வாரயிறுதி நாளில் வீட்டிற்கு வந்த மகனிடம் இவ்வாறு செல்வாம்பிகை உரைக்க கடுப்பாகி போனான் ராஜன்.

“எனக்கு என்ன வயசாகுதுனு பொண்ணு பார்த்துட்டு இருக்கீங்க? என்னை கேட்காம நீங்க ஏன் பொண்ணு பார்த்தீங்க முதல்ல?” எனக் கோபமாய் கேட்டிருந்தான்.

“நமக்கு தூர‌த்து சொந்தம்டா ராஜா! கொள்ளை அழகுடா அந்த பொண்ணு! நீ அந்த பொண்ணை பார்த்தா வேண்டாம்னு சொல்ல மாட்ட” என்று செல்வாம்பிகை ஆசையாய் கூறியவாறு அந்த பெண்ணின் புகைப்படத்தை கைபேசியில் எடுத்து அவனிடம் காண்பித்தார்.

சுண்டினால் ரத்தம் வரும் நிறம், பெரிய கருவிழிகள், சராசரியான உயரம் அதற்கேற்ற உடல்வாகு என பார்க்க அத்தனை அம்சமாய் இருந்த பெண்ணை பார்த்ததும்,

“ஆமா அழகா இருக்காங்க தான். இந்த பொண்ணை பார்த்ததும் யாரும் பிடிக்கலைனு சொல்லவே முடியாது தான். ஆனா எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்” என்றான் ராஜன்.

“ஏன்டா வேண்டாம்? காரணத்தை சொல்லு” என்றவர் கேட்க,

“எனக்கு இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம்” என்றான்.

“ஏன்டா ஏன்? வரன் வரும் போது ஏத்துக்கிறது தான்‌ புத்திசாலித்தனம். அப்புறம் நாம தேடினாலும் கிடைக்காம கஷ்டப்பட வேண்டியதா இருக்கும்” என்று செல்வாம்பிகை எடுத்து கூற,

“25 வயசு தான்மா ஆகாது. கல்யாணம் செஞ்சிக்கிற வயசா இது!

அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் கல்யாணமான‌ பிறகு தான் நான் கல்யாணம் செஞ்சிப்பேன்” என்றவனை தீயாய் முறைத்த செல்வாம்பிகை,

“யார்டா உனக்கு அண்ணன் தங்கச்சி? நம்மளை கஷ்டப்படுத்தினவங்க அவங்க! அவங்களுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் செஞ்சி பேரன் பேத்திகளோட நாங்க சந்தோஷமா வாழுறதை பார்த்து அவங்க வெம்பி சாகனும்” வன்மமான அவரின் வார்த்தையில் அதிர்ந்து நோக்கிய ராஜன்,

“அம்மா நீ பேசுறது சரியே இல்லமா! நீ தான் அவங்களை நிறைய கஷ்டப்படுத்தி இருக்க! அப்படி இருந்தும் உன்னை பழி வாங்க நினைக்காம அவங்க வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டு இருக்கவங்களை நீ தான் எதிரியா நினைச்சு உன் மனசையும் உடலையும் கெடுத்துட்டு திரிஞ்சிட்டு இருக்க!

நான் இப்ப சொல்றது தான் கடைசி! உன்னோட ஆசைக்காகவும் பழி வெறிக்காகவும்லாம் என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாது. வற்புறுத்தி பிளாக்மெயில் செஞ்சி கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு நினைச்சீனா, ஆயுளுக்கும் இந்த ஊர் பக்கமே வராம ஒத்தையா கிடந்தே செத்து போய்டுவேன் சொல்லிட்டேன்” ஆங்காரமாய் உரைத்து சென்றவன் அன்றைய நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் செல்வாம்பிகையை கிலி பிடிக்க வைத்திருந்தான்.

செல்வாம்பிகை வேங்கடத்திடம் இவனை பற்றி புகாரளிக்க, “இப்ப தான்‌ மனசு மாறி நல்லா பேசிட்டு இருக்கான். அது பொறுக்கலையா உனக்கு” என அவரும் செல்வாம்பிகையை வசைப்பாட, இப்போதைக்கு திருமணத்தை பற்றி பேச வேண்டாமென ஒத்திப் போட்டார் செல்வாம்பிகை.

அந்த வாரயிறுதியை நிறைவு செய்து சென்னைக்கு சென்ற ராஜன் நங்கையை குறித்த சிந்தனையிலேயே உழன்றான்.

ஆணான தனக்கே இந்த வயதில் பெண் பார்க்க தாய் துடிக்கும் பொழுதும், நங்கையின் தாய் அமைதியாகவா இருப்பார். இந்நேரம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கி இருப்பார் தானே! இனியும் தனது காதலை உரைக்காது ஒத்திப் போடுவது சரியானதல்ல என்ற சிந்தனையில் உழன்ற ராஜன் அந்த வாரயிறுதி நாளில் நங்கையின் பெற்றோரிடம் நேரடியாய் இதை பற்றி பேசலாம் என முடிவு செய்திருந்தான்.

ராஜன் சென்னை அலுவலகத்தில் பணியில் அமர்ந்த நாளில் இருந்து வாரத்திற்கு ஓரிரு முறையேனும் நங்கையிடம் பேசி விடுவான். அவனிடம் பெரும்பாலான விஷயங்களை பகிர்ந்து கொள்வாள் நங்கை.

அவ்வாறு இந்த வாரத்தில் ஒரு நாள் ராஜன் நங்கையை அழைத்து அவனது தாயுடனான அவனது திருமணம் குறித்த உரையாடலை அவளிடம் உரைத்திருந்தான்.

“இந்த வயசு ரொம்ப எர்லி ஃபார் மேரேஜ்னு சொல்றது சரி தான். ஆனா உங்க அண்ணன் தான் உன்னை கண்டுக்கவே மாட்டேங்கிறாரே! நீ ஏன் அவங்க கல்யாணம் ஆகனும்னு காத்திட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“எங்க மேரேஜ் பத்தி காலேஜ் படிக்கும் போது நாங்க பேசிக்கும் போது, நான் எப்பவுமே சொல்வேன். அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நான் தான் பொண்ணு பார்ப்பேன். ஆணிமாவும் அண்ணாவும் சேர்ந்து தான் எனக்கு பொண்ணு பார்க்கனும்னு சொல்வேன்” மலரும் நினைவுகளில் மூழ்கியவனாய் உரைத்தவன்,

“இன்னும் கொஞ்சம் வருஷம் போனா எங்களுக்குள்ள இருக்க இந்த பிரிவு இன்னும் சரியாகி ஒற்றுமையாகிடுவோம்ல நங்கை. அதுக்கு பிறகு கல்யாணம்னு வச்சா எல்லாரும் ஒன்னா இருக்கலாம்ல. இப்ப செஞ்சா அண்ணா எட்டிக் கூட பார்க்க மாட்டாங்க” என்றான்.

“எங்கண்ணன்‌ ரொம்ப தான் பண்றாரு நங்கை. இது வரைக்கும் எத்தனை தடவை அவங்க வீட்டுக்கு போய்ட்டேன் தெரியுமா! இரண்டு‌ மூனு தடவை நேருக்கு நேரா என்னை பார்த்தும் பேசாம போய்ட்டாரு. நான் அவர் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் அவர் எங்கேயாவது வெளில கிளம்பி போய்டுறாரு. இதுக்குலாம் சேர்த்து வச்சி அவர் என்கிட்ட கெஞ்சும் போது நான் வச்சி செய்றேனா இல்லையா பாரு” தன்னுடைய ஆதகங்களை ராஜன் கலவையான உணர்வுகளுடன் உரைத்துக் கொண்டிருக்க,

“எதுக்கிந்த பழி வெறி! அவர் முன்ன நின்னு உன் கல்யாணத்தை நடத்தனும்னு சொல்ற! அவரை வச்சி செஞ்சா எப்படி முன்ன நிப்பாரு! இந்த வன்மம்லாம் வேண்டாம் சுந்தர்” அறிவுறுத்தினாள் நங்கை.

“ஹா ஹா ஹா.‌ நீ நினைக்கிற அளவுக்கு சீரியசான பழி வாங்கல்லாம் இல்ல இது! நான் இப்ப பணிஞ்சு போகும் போது மூஞ்சை தூக்கிட்டு போறாருல. அது மாதிரி அவர் பணிஞ்சு போகும் போது நான் மூஞ்சை தூக்கிட்டு போவேன். அவ்ளோ தான்” என்றான்.

“நல்ல அண்ணன் தம்பிங்கப்பா! பாவம் இந்த கல்யாணி பொண்ணு உங்களுக்கு இடையில சிக்கி தவிக்குது” தலையிலடித்து கொண்டாள் நங்கை.

வாய்விட்டு சிரித்தவனாய், “ஆமா உங்க வீட்டுல உனக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்கலையா?” என்று கேட்டான்.

“ஏன்டா ஏன்! நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா உனக்கு?” என்றாள் இவள்.

“ஏன் கல்யாணம் செஞ்சிக்க வேண்டியது தானே! இன்னும் இன்பாவை நினைச்சிட்டு இருக்கியா என்ன?” அவளின் மனநிலையை அறிய முற்பட்டான்.

“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல சுந்தர்! பயமா இருக்கு! இந்த காதல் தோல்வியை கடந்துட்டேன்னு தான் நினைக்கிறேன். ஆனாலும் கல்யாணம்னாலே பயமா இருக்கு‌. அம்மா கல்யாணம் பத்தி பேசினாங்க தான். அவங்க ஹெல்த் சரியானாலும் ஏதாவது ஆகிடுமோனு பயப்படுறாங்க. அதுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிடனும்னு நினைக்கிறாங்க. என் காதல் தோல்வியை பத்தி தெரிஞ்சிக்கிட்டு அதுக்கு பிறகும் என்னை புரிஞ்சி ஏத்துக்கிற பையனா பாருங்கனு சொல்லிட்டேன். இதை சொல்லாம மறைச்சிலாம் என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாதுனு சொல்லிட்டேன்” என்றவள் கூறியதும்,

“அப்ப உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா?” சற்று அதிர்ச்சியுடனே கேட்டிருந்தான் ராஜன்.

“ஆமா சுந்தர்! ஆனா ஏற்கனவே லவ் ஃபெயிலியர் ஆன பொண்ணை எவன் கட்டிப்பான் சொல்லு! இந்த உலகத்துல ஆண்கள் தவறு செஞ்சி திருந்தினா அவன் தியாகி! அதுவே பெண்கள் தவறு செஞ்சி திருந்தினா அவ பாவி! இந்த பாவியை ரட்சித்து ஏற்றுக் கொள்ளும் ஆளை தேடி பிடிங்க முதல்ல. அப்படி‌ ஒருத்தன் கிடைச்சானா கட்டிக்கிறேன்னு சொல்லிருக்கேன்” என சிரித்தாள் நங்கை‌.

“நான் கட்டிக்கிறேன்னு சொன்னா ஒத்துப்பியா நங்கை”

அவனையும் மீறி பேச்சுவாக்கில் கேட்டிருந்தான் ராஜன்.

கேட்ட பின்பு தான் கேட்டதின் பொருள் உணர்ந்தவனாய் திடுக்கிட்டு, “நங்கை” என அழைக்க அவளிடம் இருந்து பதிலே இல்லை‌.

இரண்டு மூன்று முறை அழைத்து விட்டு, “சாரி நங்கை! உன்னை ஹர்ட் செஞ்சிருந்தா வெரி சாரி” என்றான்.

தன்னை தவறாக எண்ணிக் கொண்டாளோ என முகமெல்லாம் வியர்த்து நெஞ்சம் நடுங்க ஆரம்பித்துவிட்டது அவனுக்கு‌.

மறுபக்கம் அவளிடமிருந்து பதில் வராமல் போக, அலைபேசியை காதில் இருந்து எடுத்து பார்த்தவன், அப்பொழுது தான் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததை கவனித்தான்‌.

மீண்டுமாய் வேறொரு ஆப் மூலம் ஆடியோ காலில் இவன் அழைக்க, லைன் போனதே தவிர அவள் எடுக்கவில்லை. அவளை ஆஃப்லைனில் காண்பித்தது.

‘அச்சச்சோ போச்சு போச்சு! ஒரு வார்த்தை பேசிட்டு ஃபோனை வச்சிருந்தா என்னவாம்! என் பக்கம் காரணத்தை கூட கேட்காம இப்படி பேசாம வச்சா என்ன அர்த்தம்! நான் காதலிக்கவா கேட்டேன். கட்டிக்கிறியானு தானே கேட்டேன். என்ன பிரச்சனை இவளுக்கு!’ மனதோடு புலம்பியவனாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.

‘உன்னை ஃப்ரண்ட்டா தானே நினைச்சேன். இப்படி கேட்டுட்டியேனு அதிர்ச்சி ஆகிட்டாளோ’

‘இதுக்கு தான்‌ இந்த காதலே வேண்டாம்னு ஒதுங்கி இருந்தேன்‌. அய்யோ இனி நீ என்கிட்ட பேசாதனு சொல்லிட்டா என்ன செய்றது? அவகிட்ட பேசாம இருக்க முடியுமா? காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்னு அவ கூட ஃப்ரண்ட்டாவே இருந்திருக்கலாம்! தேவை தான் இது எனக்கு’ தலையில் அடித்து கொண்டான்.

மனது சமன்பட மறுத்தது. அவளின் தற்போதைய மனநிலை அறியாது தன்னால் உறங்கவே இயலாது என்பதை உணர்ந்தவன், அவளின் அறைத்தோழி எண்ணிற்கு ஸ்கைப் காலில் அழைக்க முற்பட, அதுவும் ஆஃப்லைனில் இருந்தது.

இன்டர்நேஷனல் காலில் தனது பணம் போனாலும் பரவாயில்லை என்றெண்ணியவாறு நங்கையின் எண்ணிற்கு அழைக்க, அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

அவளின் அறைத்தோழிக்கு அழைக்க, இணைப்பே போகவில்லை. அனைத்து கதவுகளும் அடைப்பட்ட நிலை தான் அவனுக்கு.

அன்றைய இரவை பதட்டத்திலேயே கடத்தியவன் அவ்வப்போது அவளின் அலைபேசிக்கு அழைத்த வண்ணம் இருந்தான்.

காலை அலுவலகத்திற்கு சென்றவன் அலுவலக  ஸ்கைப்பில் இருந்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். அதிலும் அவள் ஆஃப்லைனில் இருந்தாள்‌.

மறுநாள் மதிய பொழுதில் அலுவலக எண்ணிலிருந்து அவனுக்கு அழைத்தாள் நங்கை.

அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அலைபேசி கை தவறி தண்ணீரில் விழுந்து விட்டதாகவும், அதனால் அலைபேசி வேலை செய்யவில்லை என்றும், புதிய அலைபேசி வாங்கிய பின்பு அவளே அவனுக்கு அழைப்பதாகவும் உரைத்தாள். அவளின் இயல்பான பேச்சே அவன் கூறியதை அவள் கேட்டிருக்கவில்லை என்பதை உணர்த்தியது அவனுக்கு.

‘ஹப்பாடா’ என்று அப்பொழுது தான் இயல்பான மூச்சே வந்தது அவனுக்கு.

அவனின்‌ சுவாச சத்தத்தில், “என்னடா ரொம்ப பயந்துட்டியா?” எனக் கேட்டாள் நங்கை.

“என்ன? என்ன கேட்ட?” என ராஜன் மீண்டுமாய் கேட்க,

“நேத்து ஃபோன் எடுக்கலைனதும் பயந்துட்டியானு கேட்டேன்” என்றாள்.

“ஆமா ரொம்பவே” என்றவனிடம்,

“நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேனோனு நினைச்சு பயந்திருப்பேனு நினைச்சேன்! அதான் இப்ப ஃபோன் செஞ்சேன். கூடவே ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்! மனசே சரியில்லை” என்றாள்‌.

“என்ன விஷயம்?”

“நேத்து நைட் அம்மா ஒரே புலம்பலாம். ஆப்ரேஷன் செஞ்சதுல இருந்தே அவங்க நார்மலா இல்ல சுந்தர்! சீக்கிரம் செத்து போய்டுவேன்னே சொல்லிட்டு இருக்காங்க” என்று கூறும் பொழுதே அழுதிருந்தாள் நங்கை.

“டேய் பப்ளிமாஸ் அப்படிலாம் ஒன்னும் ஆகாது. அவங்க உடம்பு வலில அப்படி சொல்லிருப்பாங்க” ஆறுதல் உரைத்தான்.

“ஆப்ரேஷனுக்கு பிறகு டாக்டர், அம்மாவை ரொம்ப ஸ்டெரஸ் ஆக்க கூடாது. கவலைபடுற மாதிரி எதுவும் சொல்ல கூடாது. நல்லா பார்த்துக்கனும்னு சொன்னாங்க. அதான் நான் அவங்க கல்யாணத்தை பத்தி பேசும் போது கூட வேண்டாம்னு சொல்லாம இதெல்லாம் சொல்லி ஒத்து வர பையனா பாருங்கனு சொன்னேன்!” என்றவாறு விசும்பினாள்.

“சரி‌ நீயும் அம்மாக்கு ஸ்டெரஸ் கொடுக்காம நல்லபடியா தானே நடந்துக்கிற! எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்” என்று அவன் ஆறுதல் உரைக்க,

“இல்ல இன்னிக்கு காலைல ரூம்மேட் ஃபோனுக்கு கால் செஞ்சி ஒரு பையன் உன்னை கட்டிக்க தயாரா இருக்கான். நம்ம ஃபேமிலியோட தூரத்து சொந்தம் தான். அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டோம். நல்ல குடும்பம். நீ ஓகே சொன்னா அடுத்த மூனு மாசத்துல கல்யாணம் வச்சிக்கலாம்னு அம்மா நேரடியா என்கிட்ட கேட்டாங்க. அவங்க உடல்நிலை வச்சி என்னால் ஒன்னும் சொல்ல முடியலை. உங்க விருப்பம் போல் என்னமோ செய்யுங்கனு சொல்லிட்டேன்” என்று அழுதாள்.

‘என்னது வேறொருத்தனை கட்டிக்க சம்மதம் சொல்லிட்டியா’ பேரதிர்ச்சி தான் ராஜனுக்கு.

அவளின் அழுகை சத்தம் கேட்டு தன்னை சமன்படுத்தியவனாய், “ஏன் அழுற நங்கை! அந்த பையனை பிடிக்கலையா?” எனக் கேட்டான்.

“எல்லா பக்கமும் என்னை கார்னர் பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிற மாதிரி இருக்கு சுந்தர்!” என்று அழுதாள்.

“இப்ப ஜஸ்ட் அம்மாக்காக ஃபோன்ல ஓகே சொல்லிருக்க அவ்ளோ தானே! இன்னும் நீ அந்த பையனை பார்க்கனும் அவங்க ஃபேமிலியை உனக்கு பிடிக்கனும்” என்று அவன் கூறிக் கொண்டே போக,

“எனக்கு பிடிச்சிருக்கா இல்லையானு இங்க யாரு பார்த்தா சுந்தர்!” என்று அழுதாள்.

“அம்மா அவங்ககிட்ட எல்லாம் பேசிட்டாங்க. தேதி குறிக்கிறது தான் பாக்கின்ற மாதிரி பேசுறாங்க. பையன்கிட்ட இன்னிக்கே பேசுனு நம்பர் கொடுத்திருக்காங்க அம்மா. நல்லவேளை என் ஃபோன் உடைஞ்சு போச்சுன்னு நினைச்சிக்கிட்டேன். இதை வச்சே இரண்டு நாள் ஒத்தி போடனும்” கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சமன் செய்தவளாய் உரைத்தாள்.

ராஜனுக்கு அவளிடம் என்ன கூறவென்று தெரியாத நிலை.

தனக்கே ஆறுதல் தேவைப்படும் இந்நேரத்தில் அவளிடம் என்னவென்று ஆறுதல் சொல்ல என அமைதியாக இருந்தான்.

“சரி‌ நீ வேலையை பாரு! நான் உன்னோட வேலை நேரத்தையும் டிஸ்டர்ப் செஞ்சிட்டு இருக்கேன். நான் இரண்டு‌ நாள்ல அந்த பையன்கிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்தாள்.

ராஜனுக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டுமென புரியாத நிலை!

நட்புக்கு மரியாதை அளித்து தனது காதலை விட்டுக் கொடுக்க வேண்டுமா? அல்லது எது நடந்தாலும் பரவாயில்லை என்று நங்கையிடம் தனது காதலை உரைக்க வேண்டுமா?

தத்தளித்துக் கொண்டிருந்தான் ராஜன்.

— தொடரும்