நனிமதுர நங்கை 18


அந்த அதிகாலை வேளையில் தனது பயணப் பெட்டியை எடுத்து வைத்து கொண்டிருந்தான் ராஜன்.

“கேப் வந்துடுச்சுண்ணா” என்று பிரேம் வந்து நிற்க,

“இதோ கிளம்பிட்டேன் டா” என்றவாறு அனைத்தையும் எடுத்து விட்டோமா என சரி பார்த்த ராஜன், “டேக் கேர் டா! இந்தியா வந்தா கண்டிப்பா என் வீட்டுக்கு வரனும்” என்றான் பிரேமிடம்.

“நீங்களும் ஆந்திரா வந்தா எங்க வீட்டுக்கு வரனும்ண்ணா” என்றான் பிரேம்.

“நான் எங்கடா ஆந்திரா வர போறேன்! நீ தான் தமிழ்நாட்டு மாப்பிள்ளை ஆக போற! நீ எனக்கு சொல்லி கொடுத்த தெலுங்கு யூஸ் ஆச்சோ இல்லையோ, நான் உனக்கு சொல்லி கொடுத்த தமிழ் உனக்கு நல்லா யூஸ் ஆகிருக்குடா. தமிழ்ல பேசி பேசி தானே அந்த திவ்யா பொண்ணை உன்னை லவ் பண்ண வச்ச?” ராஜன் கேலி செய்ய,

“அண்ணா” என அசடு வழிந்தான் அவன்.

தன்னுடன் பணிபுரியும் தமிழ் பெண்ணை விரும்ப தொடங்கியதும் ராஜனிடம் தான் அதை தெரிவித்தான் பிரேம். திவ்யாவிற்கும் பிரேமை பிடித்திருக்கிறது என்று தெரிந்த பிறகு ராஜனே நேரடியாக திவ்யாவிடம் பேசியிருந்தான். மீண்டுமாய் காதலில் பிரேம் ஏமாந்து விடக் கூடாதே என்ற கரிசனத்தினால் அந்த பெண்ணிடம் பேசியிருந்தான். இருவரின் குடும்பத்தாருக்கும் இந்த காதலை பற்றி உடனே கூறவும் வைத்தான். பெண்ணின் வீட்டினரிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் எதிர்ப்பு அலைகளுடன் போராடி கொண்டிருக்கிறான் பிரேம்.

“திவ்யா பொண்ணு மதுரை தானே! நீ மதுரை மாப்பிள்ளை ஆனதும் கண்டிப்பா மீட் பண்ணலாம். திரும்பவும் சொல்றேன் காதல் கடமை இரண்டையும் காம்ப்ரமைஸ் செய்யாம எடுத்துட்டு போகும் போது தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும். காதலிக்கிறேன் அதுல வர்ற பிரச்சனையை சமாளிக்கிறேனு தடுமாறி வேலைலயோ உன்னோட மேற்படிப்புலயோ கவனம் செலுத்தாம விட்டுடாத!”

சரியென பிரேம் தலையசைக்க, “நான் என் அண்ணன் கூட இருக்கும் போது ரொம்ப விளையாட்டுத்தனமா இருப்பேன் பிரேம். அவன் தான் இருக்கானே எல்லாம் பார்த்துப்பான்னு இருப்பேன். உங்க கூட இருந்த இத்தனை நாள்ல நான் அந்த பொறுப்பான அண்ணனா மாறின உணர்வை நீ கொடுத்த! எனக்கு கிடைச்ச தம்பிடா நீ! எப்ப என்ன உதவி வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு! டேக் கேர்” எனக் கூறி அவனை ஆரத் தழுவினான். இருவரின் விழிகளையும் நீர் நிறைக்க, உள்ளிழுத்தவாறு சிரித்து கொண்டனர் இருவரும்.

அவனது பயணப்பெட்டியை மகிழுந்தில் எடுத்து வைக்க உதவிய பிரேம், “நங்கை அக்கா ஏர்போர்ட்டுக்கு கிளம்பிட்டாங்களா?” எனக் கேட்டான்.

“ஆமா கேப் ஏறிட்டேன்னு மெசேஜ் செஞ்சிருக்கா!” என்றவாறு மகிழுந்தில் ஏறியவன் அவனிடம் விடைப்பெற்று கிளம்பினான்.

ஆழ்ந்த மூச்செடுத்து சுற்றும் முற்றும் அந்த இடத்தை தான் பார்த்தான். சோர்ந்து நொந்த மனதோடு வந்திருந்த போது தன்னை தோளோடு அணைத்து தாங்கிய இந்த நகரம் தனது வாழ்க்கையெனும் பயணத்தில் நீங்காத நினைவுகளாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

தலையை இருக்கையில் சாய்த்து கொண்டவனுக்கு, எவ்வாறு தனது காதலை நங்கையிடம் தெரிவிக்க போகிறோமென்ற எண்ணமே நெஞ்சை பாரமாய் அழுத்தியது.

நங்கை மீதான தனது காதலை உணர்ந்த நொடியில் இருந்து, தனது காதல் நங்கையை எவ்விதத்திலும் காயம் செய்து விட கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தான் ராஜன்.

அதனால் மேலும் ஒரு வருடம் கடந்த பிறகு, நங்கைக்காக அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த பிறகு தான் தனது காதலை நங்கையிடமோ அல்லது அவளது பெற்றோரிடமோ தெரிவிக்க வேண்டுமென எண்ணியிருந்தான் ராஜன்.

ஆனால் விதியோ இவனுக்கு வேறு ஆப்ஷனை வைத்திருந்தது.

இவனது ஜெர்மன் கிளையண்ட் பிராஜக்ட்களை வேறு கம்பெனி வாங்கிவிட, இவன் அந்த கம்பெனிக்கு மாறு விட்டு இதே கிளையண்ட்டும் தொடர்ந்து வேலை செய்யலாம் என்று தான் எண்ணியிருந்தான். அதனால் தொடர்ந்து பல வருடங்கள் தான் ஜெர்மனியிலேயே இருக்கலாம் என்று திட்டமிட்டிருந்தான்.

ஆனால் இவன் தற்பொழுது வேலை செய்யும் கம்பெனியில் அவ்வாறு ஒரே கிளையண்ட்டுடம் வேறு கம்பெனிக்கு மாறுவது சட்டப்படி குற்றமென அவர்களின் ஒப்பந்தத்தில் போடப்பட்டிருப்பதை தாமதமாய் அறிந்தவனுக்கு உடனே இந்தியாவிற்கு செல்வதை தவிர வேறு உபாயம் இருக்கவில்லை.

ஆக இப்பொழுது இந்தியா சென்றால், மீண்டும் அவன், என்று நங்கையை காண்பான் என அவனே அறியான். இச்சூழலில் தனது காதலை உரைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.

தான் இந்தியாவிற்கு செல்ல போகிறோம் என அறிந்த இந்த ஒரு வார காலத்தில், தினமும் அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு பயணித்து சந்தித்து விட்டு வந்தான். அவளுடனான தனது நேரத்தை நீட்டிக்க முயற்சித்தான்.

நங்கை எவ்வாறு தனது காதலை புரிந்து கொள்வாள் என்கின்ற பயமே அவனை வெகுவாக ஆட்டிப்படைத்தது‌. அதுவே இந்த ஒரு வாரமாக முயற்சித்தும் அவன் காதலை சொல்ல விடாமல் தடுத்திருந்தது.

இன்று விமான நிலையத்தில் அவளுக்காக தான் வாங்கி வைத்திருக்கும் பிரத்யேக பரிசினை வழங்கி தனது காதலை முன்மொழிய திட்டமிட்டிருந்தான் ராஜன்.

அவனின் மகிழுந்து விமான நிலையம் வந்தடைய இவனுக்காக காத்திருந்தாள் நங்கை.

இருவருமாக ஓர் உணவகத்தில் அமர்ந்தனர்.

“வாழ்க்கை ஒரு வட்டம்னு எனக்கு சுத்தி சுத்தி காமிக்கிற மாதிரி இருக்குடா சுந்தர்” என்றாள் நங்கை.

அவளின் பேச்சில் சிரித்தவனாய், “ஏன் அப்படி சொல்ற?” எனக் கேட்டான்.

“அன்னிக்கு நான் போகும் போது நீ எவ்ளோ ஃபீல் செஞ்ச! நான் என்னமோ தத்துவம்லாம் பேசினேன். இப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா! அன்னிக்கு நீ எவ்ளோ கவலைப்பட்டிருப்பனு இப்ப எனக்கு புரியுது. மனசுல என்னமோ செய்யுது! கூடவே இருந்துட மாட்டியானு இருக்கு!” என்று கவலையாய் அவள் கூற,

அவளின் பேச்சில் இவன் மனதில் தென்றல் காற்று வீசியது.

“என்ன‌ செய்ய! எனக்கும் உன் கூட இருக்கனும்னு தான் ஆசை. வேற வழி இல்லை. போய் தான் ஆகனும்” என்றான்.

அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் அமைதியாய் உண்டவாறே இருக்க, “உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும் நங்கை” என்று ஆரம்பித்தான் ராஜன்.

“நானும் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள் நங்கை.

“என்ன விஷயம்?” என்றான் ராஜன்.

“எனக்கு தெரிஞ்ச ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் மீடியால பெரிய ஆளாகனும்னு அவர் ஊரை விட்டு வந்து சென்னைல தங்கியிருந்தாரு.

இரண்டு மூனு வருஷம் சீரியல்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்டு இருந்தப்ப, அவருக்கு ஒரு டான்ஸ் ஷோ போட்டில கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சிது‌. அந்த டான்ஸ் ஷோ டிவில டெலிகாஸ்ட் ஆகும் போது அவரோட அப்பாக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கனும்னு சொல்லிட்டு டான்ஸ் பிராக்டிஸ்ல இருக்கும் போது அவர் அப்பா கால் செஞ்சப்ப, பிசியா இருக்கேன்ப்பா அப்புறம் பேசுறேன்னு வச்சிட்டாங்களாம்!”

“ஹ்ம்ம் அப்புறம் என்னாச்சு?” கதை கூறுவது போலவே அவள் கூறுவதை சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தான் ராஜன்.

“அப்புறம் மறுநாள் அவங்க ஊருல இருந்து அவரோட அப்பா இறந்துட்டாங்கனு செய்தி தான் வந்துச்சாம்” என்றதும் அவன் சிரிப்பு நின்று தானாய் அவன் வாய், “அச்சச்சோ” என மொழிந்தது.

“அப்பாவோட காரியம் லாம் முடிச்சிட்டு மறுநாளே அவர் அந்த டான்ஸ் போட்டி ஷூட்டிங்ல கலந்துக்கிட்டாரு. இப்ப தொடர்ந்து அவருக்கு நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிடுச்சு‌. ஆனா அப்பாகிட்ட கடைசியாக பேசும் போது பிசியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டேனே. வேற ஏதாவது பேசியிருக்கலாமேனு அவர் நம்பர்லருந்து கால் வராதானு ஏங்கிட்டு இருக்கார் இப்ப” என்று கூறி நிறுத்தினாள்.

“இது என் ரூம்மேட் அக்கா என்கிட்ட சொன்னாங்க சுந்தர்! நாம ஆசைப்பட்டு இந்த உலகத்துக்கு வரலை. ஆனா நம்மளை இந்த உலகத்துக்குள்ள ஆசையா வரவேற்று நம்மளை அரவணைச்சிக்கிட்டவங்க அப்பா அம்மா தானே! அவங்க நம்மளை கவனிச்சி வளர்க்கலைனா நாம இந்த நிலைமைல இருக்க முடியாதே! மனுஷங்கனா நல்லது கெட்டது இரண்டுமே இருக்கும் தான். அது அப்பா அம்மாவுக்கும் பொருந்தும். அந்த நல்லது கெட்டதோட அவங்களை அக்சப்ட் பண்ணிக்கிட்டு அவங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சிடனும். நாம பேசனும்னு நினைக்கும் போது அவங்க இல்லாம போய்ட்டா அது காலத்துக்கும் ஆறாத ரணமா மனசுல நின்னுடும்னு சொன்னாங்க. எனக்கு பகீர்னு இருந்துச்சு சுந்தர். நேத்து நைட் தான் இதெல்லாம் பேசிட்டு இருந்தோம்.

அம்மாகிட்ட கோபத்தை விட்டுட்டு பேசனும்னு நினைச்சிக்கிட்டேன். நீயும் உங்க அம்மா அப்பாகிட்ட பேசு சுந்தர்”
பேசுவியா என்ற கேள்வியோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் நங்கை.

அவன் அவள் கூறிய விஷயத்திலேயே நெஞ்சில் அடி வாங்கியது போல் ஸ்தம்பித்து போயிருந்தான்.

நாளை அவன் தாய் தந்தையிடம் பேசும் போது அவர்கள் இல்லாமல் போனால் என்ற சிந்தனையே அவனின் நெஞ்சை பிசைந்தது.

“நான் அன்னிக்கு சொன்னது தான் சுந்தர்! விட்டுக்கொடுக்கிறவங்க கெட்டுப் போக மாட்டாங்க. அவங்களுக்கான நல்லது ஏதோ வகையில் அவங்களை வந்து சேரும். நாம விட்டுக் கொடுக்கிறவங்களா இருந்துட்டு போவோமே” என்றாள்.

நீண்ட பெருமூஞ்செறிந்தவனாய், ஆமென தலையசைத்தவன், “இனி ஆயுசுக்கும் அப்பா அம்மாகிட்ட பேசாம இருக்க மாட்டேன் நங்கை! இட்ஸ் எ பிராமிஸ்” என அவளின் கை பிடித்து அவன் கூற, கண்கள் மின்ன “நானும்” என்றாள் அவளும்.

“ஆமா நீ ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே! என்னது?” எனக் கேட்டாள்.

“ஆமா சொல்லனும்” என்றவனுக்கு சற்றாய் நெஞ்சில் நடுக்கம் பரவியது.

“இல்ல உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கிருக்கேன். வெயிட்டிங் ரூம்ல வச்சி சொல்றனே” என்றான்.

“இல்ல இப்பவே சொல்லு! என்ன அந்த கிஃப்ட்? நானும் உனக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்” என்று அதை அவள் அவனிடம் கொடுக்க முனைந்த நொடி, அவனது அலைபேசி அலறியது.

தீரனிடம் இருந்து வந்திருப்பதை பார்த்தவன், “இவன் ஏன் இந்நேரத்துல கூப்டுறான்! நாம இந்தியா போறது தான் அங்க யார்க்கிட்டயும் சொல்லலையே” என்று யோசித்தவாறு அழைப்பை தவறவிட்டவன், தானே அவனுக்கு அழைத்தான்.

தீரன் அங்கு கூறிய செய்தியில், “அம்மா” என சற்று சத்தமாய் அலறிவிட்டான் சுந்தர்.

அவனின் அதிர்ச்சியிலும் அலறலிலும், “என்னாச்சு? என்னாச்சு சுந்தர்?” என நங்கை பதறிக்கொண்டு கேட்க,

“அம்மா சூசைட் அட்டென்ட் பண்ணிட்டாங்களாம்” தலையில் கை வைத்து தொண்டை கமற உரைத்தான் சுந்தர்.

அதன் பின் தீரனிடம் பேசி நிலைமையை அறிந்து கொண்டு, சுந்தரை தேற்றி சமாதானம் செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தாள் நங்கை.