நனிமதுர நங்கை 17

ராஜன் மருத்துவமனை வந்தடைந்த நேரம், மருத்துவரும் ரேகாவை பேசுவதற்காக அழைத்திருக்க, ராஜனையும் அழைத்துக் கொண்டு மருத்துவர் அறைக்கு சென்றாள் ரேகா.

மருத்துவரிடம் பேசி முடித்து வந்தவள், நங்கையை அனுமதித்திருக்கும் அறைக்கு அவனை அழைத்து சென்றாள்‌.

நங்கையின் கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

“நீங்க உட்கார்ந்திருங்கண்ணா! நான் ரூம் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டு சென்றாள் ரேகா.

நங்கையின் அருகில் அமர்ந்தவனின் இதயத்துடிப்பு மீண்டுமாய் இரு மடங்காய் துடிக்க, அவனையும் மீறி அவன் கைகள் அவளின் தலையை வருடியது‌.

வருடியப் பின்பே தனது செயலை உணர்ந்து கைகளை இறக்கியிருந்தான் அவன்.

பார்வை அவளை பாசமாய் ஸ்பரிசத்திருக்க, அவன் வருடலிலேயே விழிப்பதற்காக கண்களை சுருக்கினாள் நங்கை. 

ஆழ்ந்து பார்த்திருந்தான் அவள் முகத்தை! அவளது கண்ணுக்கு கீழே கன்னத்தில் இருந்த மச்சத்தையே இப்பொழுது தான் அவனது கண்கள் கண்டு கொண்டது. இத்தனை ஆழமாய் அவளின் முகத்தை அவன் பார்த்ததில்லை இது வரை!

விழிப்பு வந்து அவள் கண்களை திறக்க, அருகில் இருந்த ராஜனை கண்டு கண்களை விரித்தாள்.

“நீ எப்ப வந்த சுந்தர்? உன்கிட்ட சொல்லிட்டாளா அவ? இதுக்காக இவ்வளோ தூரம் வந்தியா?” கேள்விகளை அவள் அடுக்கிக் கொண்டே போக,

அவள் பேசும் போது இதழோரத்தில் விழும் குழியையும் சுருங்கும் கண்களையும் இமை சிமிட்டாது பார்த்திருந்தான் அவன். தோழமையாய் பழகிய இத்தனை நாட்களில் அவளை இத்தனை ஆராய்ந்தோ ரசித்தோ பார்த்ததில்லை அவன்.

“நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கேன்! அமைதியாவே இருக்க நீ? ஏதாச்சும் சொல்லுடா?” என்றவாறு அவள் எழுந்தமர முயற்சிக்க, சட்டென எழுந்து அவள் அமருவதற்கு உதவி செய்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.

“ஒரு நிமிஷத்துல உசுரு போற உயிர் வலியை அனுபவிச்சிட்டேன்டா பப்ளிமாஸ்” முகத்தில் அந்த வேதனையை தாங்கியவாறு அவன் உரைக்கவும்,

“ஏன்டா ரொம்ப பயமுறுத்திட்டேனா?” அவனின் வேதனையை உள்வாங்கிய குரலில் கேட்டிருந்தாள்.

ஆமென அவன் தலையசைக்க, “மயக்கம் போடுறது தான் எனக்கு வழக்கமாகி போச்சே! அதுக்கு போய் இப்படி பயப்படுவியா நீ?” எனக் கேட்டாள்.

“என்னனு தெரியலைடா! ரொம்ப ஒரு மாதிரி நீ இல்லனா நான் என்னாவேன்ற மாதிரி பதறி போச்சு மனசு!” அந்நேரம் தான் உணர்ந்ததை அப்படியே உரைத்திருந்தான்.

தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற பயத்தில் அவ்வாறு நினைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

ஆனால் அவன் தான் ஒரு மாதிரி ஏதோ குற்றம் செய்த உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

தன்னை சமன்படுத்தி கொண்டவனாய், “ஏன்மா உடம்புக்கு முடியலைனா லீவ் போட வேண்டியது தானே! ஏன் ஆபிஸ் போன? ஒழுங்கா சாப்பிடாம தான் மயக்கம் வந்திருக்குனு சொன்னாரு டாக்டர்! உடம்புல சத்தே இல்லனு சொன்னாரு! நல்லா சாப்பிடுனு சொன்னா கேட்குறியா நீ!” என அவன் பேசிக் கொண்டே போக,

‘ஆரம்பிச்சிட்டான்டா!’ என மனதோடு எண்ணிக் கொண்டவளாய், எப்பொழுதும் அவன் கூறும் அறிவுரையை கேட்பது போல், ஏதும் பேசாது குனிந்து போர்வையில் கையால் எதையோ கிறுக்கியவாறு அவள் அமர்ந்திருக்க, அவளின் தாடையை பற்றி தன்னை பார்க்க வைத்தான்.

அதன் பிறகே அவனின் உரிமையான செய்கையை உணர்ந்தவன், சட்டென கையை எடுத்துக் கொண்டான்.

“என்னடா உன் பிரச்சனை?” என்று அவள் கேட்க,

தடுமாறியவனாய் திக்கி திணறியவாறு, “இல்ல நான் பேசிட்டு இருக்கும் போது நீ பாட்டுக்கு கவனிக்காம ஏதோ செய்யவும் சட்டுனு உன் கவனத்தை திருப்ப முகத்தை திருப்பிட்டேன்” என்றான்.

“அதை கேட்கலை? ஏன் இப்படி அறிவுரை சொல்லியே கொல்ற?” எனக் கேட்டாள்.

‘ஓ அப்ப அதை கேட்கலையா’ ஆசுவாசமானவன், அவளின் இந்த அறிவுரை என்ற பதத்தில் இடுப்பில் கை வைத்தவாறு அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

“இனி நான் சொன்னா கேட்க மாட்ட நீ! உங்கப்பாகிட்ட சொல்லி வைக்கிறேன்! அது தான் சரியா வரும்” மிரட்டலாகவே உரைத்தான்.

“டேய் ஏன்டா ஏன்?” பதறி கொண்டு அவள் கேட்க, “அந்த பயம் இருக்கட்டும்” அவளின் கேள்வியிலும் பாவனையிலும் சிரித்திருந்தான்.

அவளுடன் சில மணி நேரங்கள் இருந்து விட்டு, அவளை அவளின் அறையினில் விட்டவனுக்கு அவளை விட்டு செல்ல மனமே இல்லை. அவளுடனேயே இருக்க வேண்டும்! கதை கதையாய் பேச வேண்டும் என்ற ஆசைகள் உந்தி தள்ள, அதை புறம் தள்ளியவனாய் கிளம்பி சென்றான்.

குழப்பமான மனநிலையிலேயே அவனது அறையை வந்தடைந்தான்.

இரவு முழுவதும் அவளின் மீதான தனது மனதின் இந்த மாற்றத்தினை எண்ணி உறங்காது கிடந்தவனுக்கு அதற்கான பதில் தான் கிடைக்கவே இல்லை.

அவளிடம் ஏற்பட்டிருக்கும் இந்த பிரியத்தின் விதையை ஆரம்பித்திலேயே கிள்ளி எரிந்திட நினைத்தவன், அவளிடம் பேசவே கூடாது என முடிவெடுத்து கொண்டான்.

அலுவலகம் சென்று தனது வேலையில் சுற்றம் மறந்து கவனத்தை செலுத்தியவனுக்கு அவளே குறுஞ்செய்தி அனுப்பி அவனின் முடிவை தளர்த்திட செய்தாள்.

அவளின் குறுஞ்செய்தியை கண்டதும் கண்கள் பளபளக்க, ஆவலாய் எடுத்து பார்த்தவன் உடனே பதில் அனுப்பி இருந்தான். அதன் பிறகு தான், தான் எடுத்திருந்த முடிவே அவனுக்கு நினைவுக்கு வந்தது‌. அன்று முழுவதும் அவளிடம் பேசாது இருக்க முடியாமல் தத்தளித்தவன்‌ மறுநாள் அவளின் எண்ணை பிளாக் செய்திருந்தான். ஒரு வாரத்திற்கேனும் அவளிடம் பேச கூடாது, மனதினை அதன் போக்கில் விடக் கூடாது என இறுக்கி வைக்க முற்பட்டான்.

மதிய உணவு இடைவெளியில், கைபேசியை எடுப்பதும் அவள் எண்ணை பார்ப்பதும் கைபேசியை வைப்பதும், மீண்டும் எடுப்பதும் பார்ப்பதும் கைபேசியை வைப்பதும் என கண்ணாமூச்சி விளையாடியவன் தானே அதனை அன்பிளாக் செய்து அவளிடம் பேசி விட்டான்.

இறுக்கம் தளர்ந்து சீரான சுவாசத்துடன் இதமான வருடலை உணர்ந்தான் மனதில். இந்நொடிகள் நீண்டு செல்லாதா என ஏங்கி தவித்தது மனது.

பேசி முடித்து கைபேசியை வைத்தவன், “டேய் பப்ளிமாஸ்! என்னை என்னடா செய்ற நீ?” என்றவாறு தலையை தாங்கி பிடித்து அமர்ந்து விட்டான்‌.

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்

நரக சுகம் அல்லவா

தமிழ் பணியாள் ஒருவன்‌ இவ்வரிகளை பாடிக் கொண்டே ராஜனின் இருக்கையை கடந்து செல்ல, நிமிர்ந்து அமர்ந்தான் ராஜன்.

தனது கட்டுப்பாட்டை மீறி செல்லும் வாழ்வின் இந்த அத்தியாயத்தை எவ்வாறு தான் கடந்து செல்வது என்ற அதீத பயம் அவனை பீடித்தது.

நங்கையை மட்டுமே இலக்காய் வைத்து பயணிக்கும் இம்மனதின் அசைவுகளை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை அவனால்.

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன்படுத்தியவன், ‘வாழ்க்கை போற போக்குல போவோம். சேதாரமாகி போகுமா இல்லை வாழ்வாதாரமாகி போகுமானு போய் தான் பார்ப்போமே!’ முடிவெடுத்தவனாய், ‘ஆண்டவா என்னை காப்பாத்து’ மேலே நோக்கியவாறு கைகளை குவித்து சத்தமாய் உரைத்தவன், சுற்றியிருந்த மனிதர்கள் தன்னை விசித்திரமாய் காண்பதை கூட பொருட்படுத்தாது இருக்கையை விட்டு எழுந்து சென்றான்.

தோழியாய் பழகி கொண்டிருப்பவளிடம், தானே முழுதாக உணராத தன் காதலை எவ்வாறு உரைக்க என்ற பெரும் போராட்டம் அவன் மனதிற்குள்‌.

தோழியா? காதலியா? என்ற குழப்பத்துடனேயே அந்த வாரயிறுதி நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான் ராஜன்.

இரண்டு மூன்று சட்டைகள் மாற்றி, தலையை பலவாறாய் வாரிப் பார்த்து, நெற்றியில் சந்தனம் வைத்து சரிப்பார்த்து என அவனின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டிருந்த அறைத்தோழன் பிரேம், “நம்ம நங்கை அக்காவை தானே பார்க்க போறீங்க! எப்பவும் பார்க்கிற மூஞ்சை தானே அவங்க பார்க்க போறாங்க. அதுக்கு எதுக்கு இந்த அலப்பறை” எனக் கேலி செய்ய,

‘அய்யோ இவனே கண்டுப்பிடிக்கிற மாதிரியா அலம்பல் பண்ணிட்டு கெடக்கோம்’ தனக்குள்ளே கேட்டுக் கொண்டவனாய், “ஒன்னுமில்லைடா  சும்மா இன்னிக்கு போட்டோ சூட் மாதிரி எடுக்கலாம்னு சொல்லிருந்தா அதான்” என்று வாய்க்கு வந்ததை உரைத்து விட்டு கிளம்பினான்.

அவளுக்காக பெரிய சாக்லேட்டை வாங்கியவன், கோவிலில் ஆவலாக காத்திருந்தான்.

எப்பொழுதும் போல் ஜீன்ஸ் குர்தியில் அழகாய் வந்தமர்ந்தவளை பார்த்தவன் அவளிடம் அந்த சாக்லேட்டை நீட்ட, “வாவ்! தேங்க்ஸ் சுந்தர்! சாக்லேட் சாப்பிட்டு பல மாசம் ஆகுது” என கண்கள் மின்ன உரைத்தவள், அவனுக்கு வழமையாய் அவள் வழங்கும் பரிசான அவனின் ஓவியத்தை வழங்கினாள்.

அதனை பிரித்து பார்த்தவாறு, “உனக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும் தானே! ஏன் அதை சாப்பிடாம இருந்த இத்தனை மாசமா?” எனக் கேட்டான்.

“அது சாக்லேட் பார்த்தாலே இன்பா ஞாபகம் வந்துடும்! அது ஒரு மாதிரி நெட்டிவ்விட்டி ஃபீல் ஆகிட்டு!” என்றாள்.

சட்டென்று ஜெர்க்கானது அவனின் மனது. இன்னும் பழைய வலிகளில் இருந்து முழுதாக வெளிவராதவளிடம் தனது குழப்பத்தை உரைத்து மேலும் குழப்பம் செய்ய வேண்டுமா என்று கேள்வி எழுப்பியது அவனின் மனது.

“இனி சாக்லேட் பார்த்ததும் என்னை நினைச்சிக்கோ! உடனே பூஸ்ட் குடிச்ச மாதிரி பாசிட்டிவ்விட்டி வந்துடும்” அவளை இலகுவாக்கவே அவ்வாறு உரைத்தான்.

கண்கள் பணிக்க, “உன்னை மாதிரி பெஸ்ட் ஃப்ரண்ட் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்! எப்பவுமே உன்னால் எனக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் சுந்தர்” என்றவள் கூறியதும்,

இவனுக்கு குற்றவுணர்வாகி போனது.

‘நான் ஃப்ரண்ட்டா இருந்தா மட்டும் தானே உனக்கு நல்லது நடக்கும்! ஆனா..’ தன் மனதின் அலைப்புறுதலை கட்டுக்குள் கொண்டு வந்தவனாய், அவளை அழைத்து கொண்டு சாமியை தரிசிக்க சென்றான்.

வழமைப்போல் அங்கிருந்த வரதராஜ பெருமாள் முன்பு கண் மூடி அமர்ந்தவன்,

‘என் மனசு போற போக்கு எனக்கு சுத்தமா பிடிக்கலை கடவுளே! என்னால அவளோட நினைவுகளை கட்டுப்படுத்தவும் முடியலை. உயிரா உள்ளுக்குள்ள என்னமோ அவ செய்யும் போது எப்படி நான் அவளை வேண்டாம்னு சொல்லவும் முடியும்! அவ வேணுமா வேண்டாமானு முடிவு செய்ற நிலைலாம் தாண்டி போய்ட்டேன்னு புரியுது. ஆனா என் நிலையை புரிஞசிக்கிற நிலைல அவ இல்லையே! அவ நார்மல் ஆகட்டும்‌! என்னோட காதல் மேலும் அவளை வலிக்க வச்சிடுமோனு பயமாவும் இருக்கு! நான் என்ன செய்ய எம்பெருமானே’ மனம் கசிந்துருக வேண்டியவாறு இரு கரங்களையும் நீட்டி அவன் கேட்ட நேரம், அவன் கரத்தின் மீது பூக்களை வைத்திருந்தாள் நங்கை.

பட்டென கண்களை திறந்து பார்த்தான் ராஜன்.

“என்னமோ பெரிய வேண்டுதல் போல! அதான் நிறைவேறட்டும்னு பூவை வச்சேன்” என்று மென்னகையுடன் அவள் உரைக்க, இதழ் விரிந்த புன்னகையுடன் தனது கையை அவளின் தலை மீது வைத்து ஆட்டியவன், அந்த பூவை அவளிடமே கொடுத்து, “உன் தலைல வச்சிக்கோ” என்றான்.

இனி இவள் தான் தனது வாழ்க்கை என அவன் தீர்க்கமாய் முடிவு செய்த தருணம் அது.

அடுத்து வந்த நாட்கள் அவன் வாழ்வின் வசந்த காலங்கள்.

நங்கையிடம் எப்பொழுதும் பிராஜக்ட் வேலை, அவளின் உடல்நலம், உணவு என அதை பற்றியே பேசி கொண்டிருப்பவன், அதையும் தாண்டிய உரையாடலில் ஈடுபட ஆரம்பித்தான்.

தனக்கு பிடித்தமான பாடலை, படங்களை, அப்பாடல்களின் வரியினை, தனது ரசனையை என அவளிடம் அவன் பகிர ஆரம்பிக்க, அவளும் தனக்கு பிடித்தமானவற்றை, தான் ரசிப்பவற்றை அவனிடம் பகிர ஆரம்பித்தாள்‌.

ராஜனின் உலகில் நங்கை மட்டுமே இருப்பதான மாய தோற்றத்தை உருவாக்கியது இந்த காதல்.

மேலும் மூன்று மாதங்கள் வசந்த காலமாய் கடந்திருந்த நிலையில், நங்கையிடம் தனது காதலை உரைக்க திட்டமிட்டான் ராஜன்.

— தொடரும்