நனிமதுர நங்கை 16

“உனக்கு சென்டிமென்ட்டாலாம் ஃபீல் ஆகாதா?” அன்று ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவிலில் நங்கையிடம் தான் கேட்டதை நினைத்தவாறு, அக்கோவிலில் தன்னெதிரே அமைதியாக அமர்ந்திருந்த நங்கையை பார்த்து கொண்டிருந்தான் ராஜன்.
‘அப்ப எவ்ளோ சந்தோஷமா இருந்தா! முகத்துல எப்பவுமே ஒரு சிரிப்பு ஒட்டிக்கிட்டே இருக்குமே! இவளுக்கு கவலையே இருக்காதானுலாம் நான் அப்ப நினைச்சிருக்கேனே! ம்ப்ச் காலம் எப்படிலாம் மனுஷங்களை மாத்திடுது’ மனதோடு நினைத்தவாறு அவளையே பார்த்திருந்தான் ராஜன்.
சத்யா இவளது ஜெர்மனி பயணத்தை பற்றி உரைத்ததும் ராஜனிடம் இதை பற்றி அவள் தெரிவிக்க, அத்தனை சந்தோஷம் அவனுக்கு.
ராஜன் பெங்களூரில் இருந்து ஜெர்மனி சென்ற பிறகும் அனுதினமும் அவளிடம் பேசுவதை தொடர்திருந்தான். அன்றாடம் அவளின் நிகழ்வுகளை கேட்டறிந்து கொண்டான். அங்கு பிராஜக்ட்டில் இவள் பிரேக் அப் பற்றி மெயில் அனுப்பியதை பற்றி கூறியதற்கு கோபம் வந்தது அவனுக்கு. “உன்னோட பெர்சனலை பத்தி மத்தவங்ககிட்ட எதுக்கு சொல்லனும்” எனக் கோபமாய் கேட்டிருந்தான்.
“இல்ல சுந்தர்! நான் நிம்மதியாக இருக்க தான் அந்த மெயில். அங்கே எல்லாருக்கும் நாங்க இரண்டு பேரும் லவ்வர்ஸ்னு தெரியும். இன்பா என்கிட்ட சொல்லாம கொள்ளாம எமர்ஜென்சி லீவ் எடுத்திருக்கான்னும் எல்லாருக்கும் தெரியும். இதுக்கு மேல இதை சொல்லாம விட்டா அவனை பத்தி என்கிட்ட கேட்டு என்னை ஒரு வழியாக்கிடுவாங்க. இதுக்கு மேல யாரு என்ன கேட்டாலும் மைண்ட் யுவர் பிஸ்ன்ஸ்னு நான் சொல்லிடலாம்னு தான் மெயில் போட்டேன்” என நீண்ட விளக்கம் அளித்திருந்தாள்.
இவ்வாறாக அவளின் செயல்கள் அனைத்திற்கும் தனது எதிர்வினையை கூறி அவளின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தான் ராஜன். முன்பு போல் அவள் வாழ்க்கை அவள் முடிவு அவள் விருப்பம் என விடாது, அவளின் ஒவ்வொரு செயலிலும் முடிவிலும் தனது கருத்தினை தெரிவித்தான். அதில் அவளுக்கு எது நல்லது கெட்டது என்பதை எடுத்து கூறியிருந்தான்.
ஆகையால் தான் ஜெர்மனியில் ராஜன் இருக்கிறான் என்பதை தாண்டி, அந்த ஆன்சைட் பயணம் பற்றி அவனிடம் முதல் ஆளாய் உரைத்திருந்தாள் நங்கை.
அவளது வீட்டினரிடம் இந்த பயணத்தை பற்றி உரைத்ததும், அவளது தாய் ஒப்புக்கொள்ளவே இல்லை.
“கையோட அவளுக்கு வேற கல்யாணம் செஞ்சி வச்சிடலாம்னு பார்த்தா, ஆன்சைட் போறேன்னு வந்து நிக்கிறாளே” என கோபம் கொண்டார் அவர்.
உடனே மற்றொரு திருமணத்தை பற்றி பேசிய அன்னை மீது மேலும் கோபமேறியது அவளுக்கு.
“எனக்குனு ஒரு மனசு இருக்குனு அம்மா யோசிக்கவே மாட்டாங்களாப்பா! அவங்க விருப்பப்படியே தான் எல்லாம் நடக்கனுமா! அவங்ககிட்ட சொல்லி வையுங்க. என் கல்யாணம் என் விருப்பப்படி எனக்கு என்னிக்கு செய்யனும்னு தோணுதோ அப்ப தான் நடக்கும்! நான் இப்ப ஜெர்மனி போறது உறுதி” என்று பெற்றோரிடம் கடுமையாய் பேசி விட்டு தான் கிளம்பி இருந்தாள் நங்கை.
இங்கு நங்கை வேலை செய்யப் போகும் பிராஜக்ட்டின் கிளைண்ட் ஆபிஸ் ராஜனின் கிளைண்ட் அலுவலகத்திற்கு முற்றிலும் எதிர் திசையில் இருந்ததால், நங்கை ஜெர்மனி வந்ததுமே அவளை காண முடியவில்லை இவனால்.
அதனால் அந்த வாரயிறுதியில் இரண்டு சிட்டிக்கும் மத்தியமாய் இருந்த இந்த காமாட்சி அம்மன் கோவிலில் சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தனர். அதன் பொருட்டே இவ்வாறு வந்து அமர்ந்திருக்கின்றனர்.
அந்த கோவிலை சுற்றியிருந்த பூங்காவில் இருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
முன்பு வந்த பொழுது இருந்த நங்கைக்கும் இப்பொழுது இருக்கும் நங்கைக்குமான வேறுபாட்டை சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான் ராஜன்.
‘நான் பெங்களூர்ல பார்த்ததுக்கு இப்ப கொஞ்சம் பெட்டர் தான். ஆனாலும் அந்த பப்ளிமாஸ் உடம்பு வரலையே! எங்க! தின்னா தானே! எவ்ளோ ஆசை ஆசையா சாப்பிடுவா! இப்ப சொல்லி சொல்லில சாப்பிட வைக்க வேண்டியதா இருக்கு’ எண்ணியவாறு அமர்ந்திருந்தவன்,
“ஹௌ டு யூ ஃபீல் நௌ (இப்ப எப்படி இருக்க)?” எனக் கேட்டான்.
“ஏன்? எனக்கென்ன? நல்லா தானே இருக்கேன்” என்றாள் நங்கை.
“ம்ப்ச் இல்ல! உன்கிட்ட முன்ன இருந்த துடுக்குத்தனம் குறும்புத்தனம்லாம் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிட்ட மாதிரி இருக்கு” சற்று வேதனையான குரலில் அவன் உரைக்க,
“தெரியலை சுந்தர்! அப்படியா மாறிப்போன மாதிரி தெரியுது?” என அவனிடமே கேட்டாள் அவள்.
அப்படியா மாறி போய் இருக்கிறேன் என்று எண்ணியவாறு முன்பு இவர்கள் வந்த போது நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டாள் நங்கை.
அன்று கல்யாணியின் பிறந்தநாளுக்கு இவன் வாழ்த்து தெரிவிக்காது இருந்தது நினைவிற்கு வர, “ஆமா உன் தங்கை கல்யாணிக்கிட்ட பேசுறியா இல்லையா? ஊருக்கு போனப்ப தான் யாரையும் பார்க்காம போய்ட்ட! ஃபோன்லயாவது பேசுறியா இல்லையா?” எனக் கேட்டாள்.
“இப்ப அவ தான் என்கிட்ட கோபப்பட்டு பேசாம இருக்கா! நான் ஃபோன் செஞ்சாலும் எடுக்கிறது இல்ல” என்றான் சோகமாக.
“ஏன்? அவ ஏன் பேசுறது இல்ல?” எனக் கேட்டாள் நங்கை.
“மதுரைக்கு போய்ட்டு அவளை பார்க்காம வந்துட்டேன்னு கோபம்” என்றான்.
“ஹ்ம்ம் நியாயமான கோபம் தான்” என்றவள் கூறவும்,
“நீயே அவளை ஏத்தி விடுவ போலயே” என்றான் பாவமாக.
அவனின் முகப்பாவனையில் சிரித்தவளாக, “நீ செய்யும் போது இனிக்குது மத்தவங்க செய்யும் போது கசக்குதோ! நீ செஞ்சது தப்பு அதுக்கு அனுபவிக்க தான் வேணும்” என்று அவள் மேலும் அவனை வறுத்தெடுக்க,
“அவகிட்ட பேசி எங்களை சேர்த்து வைப்பனு பார்த்தா, என்னை திட்டிட்டு இருக்க பக்கி” என்று முறைத்தான்.
“ஆமா எனக்கு வேற வேலை இல்லை! உன்னை குடும்பத்தோட சேர்த்து வைக்கிறதுக்கு தான் எங்கம்மா அப்பா பெத்து வச்சிருக்காங்க பாரு” என அவள் உதட்டை சுழிக்க,
“ஆத்தா பரதேவதை! நீ மாறலை அப்படியே தான் இருக்கனு நம்புறேன்! அதுக்காக என்னை வச்சி செய்யாத ஆத்தா” தலை மீது கையை தூக்கி வைத்து கொண்டு வணங்கியவாறு அவன் உரைக்கவும், வாய்விட்டு சிரித்திருந்தாள் அவள்.
அவளது கைபேசியில் எடுத்து பேசியவள், வீடியோ கால் வருமாறு உரைத்து ராஜனிடம் தனது கைபேசியை கொடுத்தாள்.
“உன் தங்கச்சிக்கு தான் ஃபோன் செய்வா! பேசு” என்றதும், அதிர்ச்சியுடன் அவன் முழிக்க,
“நீ இப்ப சொன்னதை கேட்டுட்டு தான் அவளுக்கு உடனே மெசேஜ் செஞ்சேன். உடனே ஆன்லைன்ல தான் இருக்கிறதா ரிப்ளை வந்துச்சு! அதான் கால் செஞ்சிட்டேன்! வீடியோ கால் வருது பாரு! பேசு” என்றாள்.
வீடியோ அழைப்பையேற்று கல்யாணியை கெஞ்சி கொஞ்சி திட்டு வாங்கி சமாதானம் செய்து பேசி முடித்து அழைப்பை துண்டித்தவன், “தேங்க் யூ நங்கை” என்றவாறு அவளிடம் கைபேசியை அளித்தான்.
“ஃப்ரண்ட்கிட்ட தேங்க்ஸ் சொல்லுவியா நீ?” என மண்டையில் குட்டினாள்.
பின் இருவருமாய் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, வெளியே உயரமாய் இருந்த வரதராஜ பெருமாள் முன்பு கண் மூடி அமர்ந்தனர்.
கண்கள் மூடி சற்று நேரம் அமைதியாய் அமர்ந்திருக்க, நங்கை தான் அவன் மனக்கண்ணில் சிரித்த முகமாய் வந்து நின்றாள்.
அன்றொரு நாள், ‘உன்னை கட்டிக்க போறவங்க கொடுத்து வச்சவங்க நங்கை’ என்று அவன் உரைத்தது நினைவினில் ஆட, அதே போல் அவளும் இவனிடம் உரைத்தது நினைவினில் வந்து போனது.
‘ஏன் நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க கூடாது’ அவனது மனதினில் எழுந்த கேள்வியில், பட்டென கண்களை திறந்திருந்தான் ராஜன்.
‘இப்ப இப்படி என்கிட்ட உரிமையா சண்டை போடுற என் நங்கை தான் வேணும்’ பெங்களூரில் நங்கையிடம் அவனுரைத்த வார்த்தைகளை மூளை நினைவுகூற,
‘நான் ஏன் இப்படி நினைக்கிறேன்’ என்றெண்ணியவாறு தலையை உலுக்கி கொண்டான்.
“சுந்தர் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் வச்சிருக்கேன்” என்றவாறு ஒரு பரிசு பொருளை வழங்கினாள் நங்கை.
“என்னது?” என ஆர்வமாய் அப்பரிசை பிரித்து பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“வாவ் இவ்வளோ அழகா வரைவியா நீ! நான் தானா இது! நேர்ல விட உன் கைவண்ணத்துல இன்னும் அழகா இருக்க மாதிரி தெரியுதே” உள்ளம் பரவசத்தில் பொங்க, கண்கள் மின்ன இதழ் விரிந்த புன்னகையுடன் உரைத்தான்.
“ஹ்ம்ம் ஆமா நான் தான் வரைஞ்சேன். மைண்ட் டைவர்ட் செய்ய ஏற்கனவே கத்துக்கிட்ட பெயிண்டிங்கை செய்யலாம்னு எடுத்தேன். கொஞ்சம் பிராக்டீஸ் செஞ்சி வரைய ஆரம்பிச்சேன். முதல் முதல்ல உன்னை வரையனும்னு தான் தோணுச்சு! இது ஜஸ்ட் பென்சில் ஸ்கெட்ச்ல வாட்டர் பெயின்ட் மாதிரி செஞ்சிருக்கேன். இதுல இன்னும் நிறைய கத்துக்கனும்ன்றது தான் இப்போதைய ஆசை” என்றாள்.
“அமேசிங் டா! இன்னும் நிறைய நிறைய நீ வரைய மை ஹார்ட்டி விஷ்ஷஸ்! அண்ட் இது என் லைஃப்ல எனக்கு கிடைச்ச பொக்கிஷமான பரிசு” என்றான் தன்னோடு அதை அணைத்துக் கொண்டு!
அத்தனை மகிழ்வு அவன் முகத்தில்! அதை கண்டு இவளின் இதழும் புன்னகையில் விரிந்தது.
கிளம்பும் வேளையில்,
“சரி உன்னோட ரூம் மேட்ஸ் நம்பர் கொடு! சப்போஸ் உன்னை ரீச் பண்ண முடியலைனா அவங்களை காண்டேக்ட் செய்ய வசதியாக இருக்கும்” எனக் கூறி அவளது அறை தோழியின் கைபேசி எண்ணை வாங்கியவன், நங்கையின் முன்பே அப்பெண்ணிடம் பேசி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
அவனின் செயலை அமைதியாய் பார்த்திருந்தவள், “ஏன்டா திரும்பவும் தற்கொலை அது இதுனு ஏதாவது செஞ்சிடுவேன்னு பயமா இருக்கா?” எனக் கேட்டாள்.
“ச்சே ச்சே என் நங்கை ஸ்ட்ராங் கேர்ள்! இது என்னோட மனதிருப்திக்காக” என்று கூறி கண் சிமிட்டினான் அவன்.
இருவருமாய் அவரவர் பாதையில் மீண்டும் பயணிக்க, ராஜனின் உள்ளம் முழுவதும் ‘தான் ஏன் அவ்வாறு சிந்தித்தோம்’ என்பதிலேயே உழன்றது.
ராஜன் அவள் மீது காண்பிக்கும் அதீத அக்கறை அவளை அவனுடையதாய் எண்ண வைக்கிறதோ என்று கூட தோன்றியது அவனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக அவளுடனான அன்றாட பேச்சுக்களை குறைத்து கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டான் ராஜன்.
நங்கை ஜெர்மனி வந்து ஒரு மாதம் கடந்திருந்தது! அன்றாடம் அவளிடம் பேசுவதை அவன் தொடர்ந்து கொண்டு தான் இருந்தான். எவ்வளவு முயன்றும் அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை அவனால். அவளிடம் பேசாத நாள்களில் உணரும் வெறுமையை அவனால் கையாளவே முடியவில்லை.
அவ்வப்போது வாரயிறுதி நாட்களில் அந்த கோயிலில் வைத்து சந்தித்து கொள்வதை வாடிக்கையாக்கி இருந்தனர். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அவன் உருவத்தை ஓவியமாய் வரைந்து அந்த தாளை அவனுக்கு பரிசளிப்பதை வழக்கமாகி இருந்தாள்.
ஒரு நாள் புதன்கிழமை மதியம் ராஜனுக்கு அழைப்பு விடுத்தாள் நங்கையின் அறைத்தோழி ரேகா!
“அண்ணா நங்கை ஆபிஸ்ல மயங்கி விழுந்துட்டாங்க! இப்ப ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்கோம்!” என்றவள் பதட்டமாய் உரைத்ததும், அவளின் பதட்டம் அவனை தொற்றிக் கொள்ள, உடனே இருக்கையில் இருந்து எழுந்தவன்,
“என்னாச்சுமா? இப்ப எப்படி இருக்கா?” என வினவினான்.
“இப்ப தான் ஹாஸ்பிட்டல் வந்தோம்! இன்னும் கண் முழிக்கலை! நீங்க தான் நங்கைக்கு எதுனாலும் உங்களுக்கு சொல்லனும்னு முன்னாடியே என்கிட்ட சொல்லிருந்தீங்கல! அதனால தான் உடனே ஃபோன் செஞ்சேன்ண்ணா” என்று அந்த பெண் கூறவும், “இதோ நான் உடனே கிளம்பி வரேன்மா! நீ கூடவே இருந்து பார்த்துக்கோமா! வந்துடுறேன்” என்று அலைபேசியை வைத்தவனுக்கு, பதட்டத்தில் நெஞ்சம் நடுங்க, கைகள் உதறியது. ஒரு நிமிடத்திற்கு அவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது. என்ன செய்ய ஏது செய்ய என்று புரியாத நிலையில் அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டான். அவனது இதய துடிப்பின் ஓசை அவனுக்கே கேட்டது.
மறுநிமிடம் சுதாரித்துக் கொண்டவனாய் உடனே பணியில் விடுப்பு தெரிவித்துவிட்டு ரயிலில் கிளம்பியவன், அவள் கண் விழித்து விட்டாள் என்று அங்கிருந்து வந்த செய்தியை கேட்டப்பிறகு தான் சற்றாய் ஆசுவாசமானான்.
தன்னுள் அவள் நிகழ்த்தும் மாயத்தை அவன் உணர்ந்த தருணம் அது!
— தொடரும்