நனிமதுர நங்கை 15

பிரேக் அப்!

சொல்வதற்கு எவ்வளவு எளிதோ அதனை கடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல உண்மையாய் காதலித்தவர்களுக்கு! உயிரற்று வெற்றுடலாய் வாழும் நிலை அது! அத்தகைய நிலையில் தான் இருந்தாள் நங்கை.

“ஆமா நான் தவறானவனை காதலிச்சு வாழ்க்கைல தவறான முடிவை எடுத்துட்டேன்! அதுக்கான தண்டனையா இந்த வலியையும் வேதனையும் அனுபவிக்கிறேன்” என தன்னை தானே தேற்றிக் கொண்டு தான் நாட்களை கடத்தினாள் நங்கை.

அன்று மின்னஞ்சல் அனுப்பிய பிறகு தனது மேனேஜர் சத்யன் முன்பு போய் நின்றவள், “எனக்கு பிராஜக்ட் டிரான்ஸ்ஃபர் கிடைக்குமா சத்யா?” எனக் கேட்டாள்.

அவளின் மின்னஞ்சல் மூலம் அவளின் நிலையை அறிந்தவராய், “ஏற்கனவே இன்பா எமர்ஜென்சி டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்கானே! ஒரே நேரத்துல இரண்டு பேரு டிரான்ஸ்ஃபர் கேட்டா என்ன செய்ய?” என யோசித்தவர்,

“ஒரு மூனு மாசம் வெயிட் பண்ணுங்க நங்கை! நான் உங்களுக்கு வேற ஆப்சன் வச்சிருக்கேன்” என்று உரைத்தார்.

ராம் மீது ஹெச் ஆர்ரிடம் புகார் அளித்திருந்தாள்‌. அதற்கான விசாரணை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, ராஜன் மதுரை பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட்டு தனது பத்திரங்களை வாங்கி வந்திருந்தான். தீரனை தவிர வேறு எவரையும் பார்க்காது கிளம்பி இருந்தான்.

ராஜனின் தந்தையும் தாயும் ஏற்கனவே அவர்களின் கையை விட்டு போன அவர்களின் பாரம்பரிய கடையையும் சொத்தையும் எண்ணி மனம் நொந்து போயிருக்க, இந்நிலையில் மகனும் தங்களை காணாது சென்றது அவர்களை கவலைக்குள் ஆழ்த்தியது.

எப்பொழுதும் போல் ராஜன் தனது சம்பளத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான பணத்தை மாதா மாதம் அக்கவுண்ட்டிற்கு அனுப்பினாலும், சுற்றமும் நட்புமுமே அவர்களை ஏளனமாய் பார்க்கும் இந்நாட்களில் மகனும் தங்களை தவிர்ப்பது அவர்களை வேதனையடைய செய்தது. மகன் அவர்களை வெறுத்து ஒதுக்கி தள்ளி வைத்திருப்பது அப்பட்டமாய் தெரிய அவர்களின் மனத்திடமும் ஆங்காரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது‌.

சுந்தரேஸ்வரன் தனது பரம்பரை கடையை மீட்டதில் வெகு மகிழ்வாய் இருந்தான். அவனது யூ டியூப் சேனல் பெரியதாக வரவேற்பை பெறாவிடினும் கிடைக்கும் நேரங்களில் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருந்தான். கடை கைக்கு கிடைத்ததும் தொழிலை முன்னேற்றுவதில் முனைப்பாய் செயல்பட தொடங்கினான்.

கல்யாணியும் இளங்கலை பயில முடிவு செய்து கல்லூரி தேடுதலில் இருந்தாள். ராஜன் அவ்வளவு தூரம் வந்தும் தன்னை பார்க்காது சென்றதில் அவளுக்கு நிரம்பவே வருத்தமும் கோபமும் இருந்தது‌.

மதுரைக்கு சென்ற பொழுதும் நங்கையிடம் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் அவளின் நலனை கேட்டு கொண்டிருந்தான் ராஜன்.

எங்கே மீண்டும் தற்கொலை முயற்சியை இன்பாவும் நங்கையும் மேற்கொள்வார்களோ என்றொரு பயம் அவனின் அடி மனதில் இருந்தது.

இன்பாவின் நடவடிக்கைகளை முரளி மூலம் கேட்டு தெரிந்து கொள்பவன், நங்கையை தனது பார்வை வட்டத்துக்குள்ளே தான் வைத்திருந்தான்.

நங்கையின் பெற்றோரிடம் அவளது பிரேக் அப் பற்றி இப்போதைக்கு எதுவும் கூற வேண்டாம் என உரைத்திருந்தான். ஏற்கனவே மனம் நொந்து போய் இருப்பவளிடம் அவளின் பெற்றோரும் குற்றயுணர்வை தூண்டும் விதமாக ஏதேனும் பேசிவிட கூடாது என்பதற்காக தான் அதனை சொல்லாது தள்ளிப் போட வைத்தான்.

அந்த வாரயிறுதி நாளில் அறைக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தவளை, “உன்னை பார்க்கிறதுக்காகவே தான் ஜெர்மனிலருந்து நேரா பெங்களூர் வந்தேன். இல்லனா சென்னை ஆபிஸ் போயிருக்க மாட்டேனா! என்னோட டீம் இங்கே பாதி அங்கே பாதினு இருக்கனால நான் பெங்களூருக்கே போறேன்னு சொல்லி உன்னை பார்க்க வந்தேன். நீ என்னடான்னா வந்தவனுக்கு ஊர் சுத்தி காண்பிக்கலைனாலும் பரவாயில்ல நாலு நல்ல இடத்துல சோறு வாங்கி கூட தராம அனுப்ப பார்க்கிற” என பேசி பேசியே வெளியே அழைத்து செல்ல வைத்திருந்தான்.

ராகிகுட்டா ஹனுமான் கோவிலில் காற்று வாங்கியவாறு பாறை மீது அமர்ந்திருந்தனர் இருவரும். எங்கோ வேடிக்கை பார்த்தவாறு அமைதியாய் அமர்ந்திருந்தவளையே தான் பார்த்திருந்தான் ராஜன்.

ஜெர்மனியில் துறுதுறுவென எப்பொழுதும் ஏதேனும் கேலி பேசி சிரித்த முகமாய் வளைய வந்தவளா இவள் என்று ஐயம் கொள்ளுமளவு மாறியிருந்தவளை வேதனையுடன் பார்த்திருந்தான் ராஜன்.


கடந்த ஒரு வாரமாக

அன்றாடம் இரவு அவள் உறங்கும் வரை அலைபேசியில் அவளுடன் பேசினான் ராஜன். அவளின் பேச்சில் இன்பா வராத நாளில்லை! தினமும் ஏதேனும் ஒரு வகையில் அவனை பற்றி கூற ஆரம்பிப்பவள் இறுதியில் இப்படி இருப்பானு நினைக்கலையே சுந்தர் என அழுகையிலேயே தான் முடித்திடுவாள்.

“சுந்தர்” நங்கையின் அழைப்பில் திடுக்கிட்டு தனது எண்ண அலைகளில் இருந்து விடுபட்டவனாய், “என்ன நங்கை?” எனக் கேட்டிருந்தான்.

“இன்பா ஏன் அப்படி பேசினான்? அவங்க வீட்டுல என்ன தான் நடந்துச்சுனு எனக்கு தெரிஞ்சிக்கனும் சுந்தர்! எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இன்பா பொண்ணுங்ககிட்ட ரொம்ப மரியாதையா நடந்துப்பான். இப்படி பேசுற ஆளே இல்லை. அன்னிக்கு அவன் அப்படி பேசவும் ஏற்பட்ட அதிர்ச்சில எதுவும் யோசிக்க முடியலை. இப்ப மனசு கொஞ்சம் அமைதியான பிறகு யோசிக்கும் போது அவன் பக்கம் காரணத்தை தெரிஞ்சிக்க தோணுது” வருத்தமான குரலிலேயே கேட்டிருந்தாள்.

“ஏன் காரணம் தெரிஞ்சிக்கிட்டு பிரேக் அப்பை பேட்ச் அப் ஆக்கலாம்னு ஐடியாவா?” சற்று கடுமையாகவே கேட்டிருந்தான் ராஜன்.

அவள் ஏதோ கூற வாயெடுக்கும் முன், “இங்க பாரு நங்கை, கல்யாண வாழ்க்கைக்கு எந்தளவுக்கு பரஸ்பரம் காதலும் அன்யோன்யமும் முக்கியமோ அதே அளவுக்கு தன்மானமும் சுயமரியாதையும் முக்கியம்! அது இல்லாத இடத்துல வாழ்க்கை நரகமா தான் இருக்கும்” என்று கோபமாய் உரைத்தவன்,

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்! அப்புறம் உன் விருப்பம்” என முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவனின் செயலிலும் சொல்லிலும் புசு புசுவென மூச்சு வாங்க கோபமாய் அவனை முறைத்தவள் அவனருகே எழுந்து சென்று, “எருமை! எருமை!” அவன் தலையில் கொட்டியவாறு திட்டினாள்.

“நான் சொல்றதை காது கொடுத்து கேட்காம, நீயா உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க” இன்னும் கோபம் அடங்காது அவன் தோளில் சரமாரியாக அடித்தாள்.

அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஈஈஈ என இளித்தவாறு அவன் நிமிர, “அவார்ட்டா கொடுக்குறாங்க உனக்கு! என்னத்துக்கு இந்த இளிப்பு” என அதற்கும் முறைத்தவளை வாய்விட்டு சிரித்தவாறு பார்த்தவன், “நீ என்கிட்ட இப்படி உரிமையா திட்டி சண்டை போட்டு எவ்ளோ நாள் ஆகுது தெரியுமா நங்கை” மென்மையாய்  ஒருவித ஏக்கத்துடன் கூறியிருந்தான்.

நங்கையுடனான தனது நட்பின் நிலை அவளது காதலில் தேயவாரம்பித்ததை உணர்ந்து அவன் மனம் கவலைக்கொண்ட போது, ‘இது தான் நிதர்சனம்’ என தன்னை தானே தேற்றிக் கொண்டவன், இன்று அவனையும் மீறி அவ்வுணர்வுகளை அவளிடம் வெளியிட்டிருந்தான்.

அவன் கூற வருவதன் பொருள் விளங்க சட்டென அமைதியாகி அமர்ந்து விட்டாள் நங்கை. ஏனோ தான் சுயநலமாக நடந்து கொண்டது போல் தோன்ற அவளின் கண்களை நீர் நிறைத்தது.

“ஹே நங்கை! ஏன்டா” அவளின் அழுகையில் பதறி அவன் கேட்க,

“நான் இன்பாவை லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு ரொம்ப செல்பிஷ்ஷா நடந்துக்கிட்டேனோ சுந்தர்! உன்னை ரொம்ப கவலைப்பட வச்சிட்டேனா?” ஆற்றாமையால் அவள் வினவ,

“டேய் பப்ளிமாஸ்! அப்படிலாம் ஒன்னும் இல்லை. உலகத்துல இருக்க எல்லா காதலர்களும் காதல் வந்தா அப்படி தான் இருப்பாங்க. அவங்களை சுத்தி யாருமே அவங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க. இது இயற்கை தான்! இதுக்கு போய் ஃபீல் செய்வாங்களா” என அவளை தேற்றினான்.

அவள் சாரி என அவன் முகத்தை பார்க்க, “எனக்கு சாரிலாம் வேண்டாம்! இப்ப இப்படி என்கிட்ட உரிமையா சண்டை போட்ட என் நங்கை தான் வேணும்” கண் சிமிட்டி இதழ் விரிந்த சிரிப்புடன் அவன் கூற, அவளும் சிரித்திருந்தாள்.

மனதில் கள்ளமில்லாமல் அவன் கூறியிருந்தாலும், அதனை கேட்ட நொடி அவன் மனமே ஒரு நிமிடம் தான் நங்கையிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என ஜெர்க்கானது.

“சாரி நீ இன்பா பத்தி கேட்கவும், அவன் மேல் உனக்கு இன்னும் சாஃப்ட் கார்னர் இருக்கோனு கோபத்துல தான் அப்படி சொல்லிட்டேன்” என்று சுந்தர் இப்பொழுது மன்னிப்பு வேண்ட,

“இல்ல சுந்தர்! ஒருத்தனுக்கு ஒருத்தியாக ஒருத்தரையே காதலிச்சி கல்யாணம் செஞ்சிக்கனும்ன்ற கொள்கை வச்சிருந்தேன் தான். அதுக்காக நீ சொன்ன மாதிரி தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டு கொடுத்துட்டு தான் அப்படி ஒருத்தன் கூட வாழனும்னா கண்டிப்பாக அப்படியான வாழ்க்கையை என்னால வாழ முடியாதுனு இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சு”

“இன்பா என் வாழ்க்கைல இனி இல்லங்கிறதுல நான் தீர்க்கமா இருக்கேன் சுந்தர்! ஆனா அவன் மேல் வன்மமும் கோபமுமாய் இந்த பிரிவு இருக்க வேண்டாமேனு தான் அவன் பக்க விளக்கத்தை கேட்க விரும்புறேன்” என தன்னிலை விளக்கத்தை அளித்தாள்.

அதை கேட்டதும் ஆசுவாசமானவனாய், முரளி மூலம் இன்பாவின் வீட்டில் நடந்ததை பற்றி தான் அறிந்தவற்றை அவளிடம் உரைத்தான் சுந்தர்‌‌.

“ஹ்ம்ம்” என பெருமூச்செறிந்தவளாய், “அவனும் சூழ்நிலை கைதி ஆகிட்டான்” என்றவள், “ஆனா சுந்தர் அவன் சொன்னது உண்மை! இப்படி ஒரு பழிச் சொல்லை சொல்லாம இருந்து சாதாரணமா நாம பிரிஞ்சிடலாம்னு அவன் சொல்லிருந்தா நான் கண்டிப்பாக ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன். எப்படியாவது அவன் குடும்பத்தை கன்வின்ஸ் செய்ய சொல்லிருப்பேன்‌! அவன் அம்மா மனம் மாறுற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு சொல்லிருப்பேன்” என்றவளை வினோதமாய் பார்த்தான் சுந்தர்.

“காதலிக்கிறது கல்யாணம் செய்ய தானே சுந்தர்! என்ன நடந்தாலும் அவனை நான் விட்டு கொடுத்துட கூடாதுனு திடமாய் இருந்தேன்! காதல் எல்லாத்தையும் மாத்தும்னு அப்ப தீர்க்கமா நம்பினேன் சுந்தர்! காதலுக்காக எந்த மாதிரியான ஏச்சு பேச்சுக்களை வாங்கவும் தயாராக தான் இருந்தேன். இன்பா மட்டும் எனக்கு கிடைச்சா போதும். எங்க காதல் எல்லாத்தையும் மாத்தும்னு நம்பினேன்.

ஆனா இப்ப அடிபட்டு புரிஞ்சிக்கிட்டேன்‌. இதே வார்த்தையை அவன் கல்யாணத்துக்கு பிறகு என்கிட்ட சொல்லிருந்தா என் உயிரே போய்ருக்கும் சுந்தர்! என்னால ஜீரணிச்சிக்கவே முடிஞ்சிருக்காது!

நீ சொன்ன மாதிரி தம்பதிகளுக்குள்ள காதல் மட்டும் போதாது, செல்ஃப் ரெஸ்பெக்ட் ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன். அதனால இன்பாவே வந்து கெஞ்சினாலும் என் மனசு மாறாது”

தெளிவாய் பேசியவளை கண்டு நிம்மதியானான் ராஜன்.

அடுத்த ஒரு வாரத்தில் ராஜன் ஜெர்மனி சென்று விட, நங்கை கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு மாறி கொண்டிருந்தாள்.

ராம் மீது அளிக்கப்பட்ட புகாரின் விசாரணையில் ஆதாரபூர்வமாக அவரின் பேச்சுகள் ஹெச் ஆர்ரிடம் நிரூபிக்கப்பட, அவருக்கு வார்னிங் உடனான சஸ்பென்ஷன் அளித்திருந்தனர். அது அவரின் ரேட்டிங்கையும் ஆன்சைட் வாய்ப்பையும் வெகுவாகவே பாதித்தது.

ஒரே மாதத்தில் இன்பா பிராஜக்கிட்டில் இருந்து ரிலீஸ் செய்யப்பட, பூனேவில் கிடைத்த பிராஜெக்ட்டிற்கு மாறுதலாகி போனான் அவன்.

நங்கை இன்பாவுடனான பிரேக் அப்பை வீட்டினில் கூற, அவளின் தந்தை சுரேந்தர் அவளுக்கு ஆதரவாக இருக்க, அவளின் தாய் சந்தோஷமாகி அவளிடம் இயல்பாக பேச முனைந்தார். ஆனால் இப்பொழுது இவள் அவளின் தாயிடம் பேசாது தள்ளி நின்றாள்.

‘அவங்களுக்கு பிடிச்சதை செஞ்சா கண்ணே மணியேனு கொஞ்சி பேசுவாங்க! பிடிக்காததை செஞ்சா அசிங்கமா பேசுவாங்களா’ என அத்தனை கோபம் அவளின் தாய் மீது! எப்பொழுது இக்கோபம் தீருமோ அப்பொழுது பேசிக் கொள்கிறேன் என தாய்க்காக பேச வந்த  தந்தையிடம் உறுதியாய் உரைத்து விட்டாள். வீட்டிற்கு செல்வதையே முற்றிலுமாய் நிறுத்தி இருந்தாள்‌. அவ்வப்பொழுது அவளின் தந்தை தான் பெங்களூர் வந்து இவளை பார்த்துவிட்டு சென்றார்.

மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் நங்கையை தனது கேபினுக்கு அழைத்த அவளின் மேனேஜர் சத்யன், “நீங்க கேட்ட டிரான்ஸ்ஃபரை கொடுக்கலாம்னு முடிவு செஞ்சிட்டேன் நங்கை” என்றார்.

இன்பா டிரான்ஸ்ஃபர் ஆகி இப்பொழுது இங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை சென்று கொண்டிருக்கும் போது இந்த டிரான்ஸ்ஃபர் தனக்கு தேவையா? இதை ஏற்கலாமா வேண்டாமா? என்று அவள் மனதோடு சிந்தித்து கொண்டிருக்கும் போது,

“நீங்க இதே பிராஜக்ட்டுக்கு ஜெர்மனில வர்க் செய்ய போறீங்க” என்றவர் கூறியதும்,

விழிகளை விரித்து ஆச்சரிய அதிர்ச்சியுடன் பார்த்தவளை கண்டு புன்னகை பூத்தவராய், “நம்ம பிராஜக்ட்க்கு ஆன்சைட் ஆப்பர்சூனிட்டிக்காக கிளைண்ட்கிட்ட ரொம்ப நாளா டிமான்ட் செஞ்சிட்டு இருந்தோம். அது அப்ரூவ் ஆகவும் உங்ககிட்ட ஜெர்மனி விசா இருக்கிறதால உங்களையே முதல் ஆளாக அனுப்பலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். இன்னும் இரண்டு வாரத்துல நீங்க ஜெர்மனி போகனும். அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிக்கோங்க. ஆல் த பெஸ்ட்” என்றார்.

நெடு நாளைக்கு பிறகு அவளின் மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. அம்மகிழ்வு அவள் முகத்தினில் பிரதிபலிக்க, “தேங்க் யூ! தேங்க் யூ சோ மச் சத்யா” என்று நன்றியுரைத்து விட்டு வெளியே வந்தவள், முதல் ஆளாய் ராஜனுக்கு அழைத்து இவ்விஷயத்தை பகிர்ந்திருந்தாள்.

— தொடரும்