நனிமதுர நங்கை 14

முரளியும் ராஜனும் இரவுணவு உண்டுவிட்டு தாங்கள் தங்கியிருந்த வீட்டின் நுழைவாயிலை அடைந்ததும், ராஜன் தரை தளத்தில் இருந்த இன்பா வீட்டின் கதவை ஆத்திரத்துடன் பார்த்தான்.

“சுந்தர், நீங்க மேல ரூம்க்கு போங்க! நான் இன்பாகிட்ட பேசிட்டு வரேன்” என சுந்தரை மாடிப்படியை நோக்கி நகர்த்தினான் முரளி.

இன்பா தனது கையில் தூக்க மாத்திரைகளை குவித்து பார்த்திருந்த நொடி, முரளி கதவை தட்ட, சட்டென அதிர்ந்தவனாய் கையிலிருந்த தூக்க மாத்திரைகளை தவறவிட்டான்.

தட்டிய கதவை முரளி சற்றே தள்ளி பார்க்க, திறந்து கொண்டது பூட்டாத அந்த கதவு.

உள்ளே வந்தவன் இன்பாவின் விழிகளை நனைத்திருந்த நீரையும், ஆங்காங்கே சிதறியிருந்த மாத்திரைகளையும் பார்த்தவனுக்கு நடக்கவிருந்த விபரீதம் புரிய, “என்ன காரியம் டா செய்ய பார்த்த?” என அவன் கையில் மீதமிருந்த மாத்திரைகளை தட்டி விட்டான்.

“நான் பாவிடா! நான் பாவி” தனது முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் இன்பா.

“எதுக்கு அப்படி பேசனும்? இப்ப எதுக்கு இப்படி அழனும்” எரிச்சலாய் கேட்டிருந்தான் முரளி.

பின் அவன் நிலையை புரிந்தவனாய், “சாகுறது எதுக்கும் தீர்வு ஆகாதுடா இன்பா! ஊர்ல என்ன‌ தான் நடந்துச்சு?” எனக் கேட்டான்.

“அப்பா அம்மாக்கிட்ட என் காதலை பத்தி சொன்னேன்டா! அம்மா கிச்சன்குள்ள போய் உடம்பை கொளுத்திக்க போய்ட்டாங்க” விழிகளில் கோர்த்திருந்த நீருடன் உரைத்தான் இன்பா.

“அய்யய்யோ” என பதறி வாய்விட்டே கூறியிருந்தான் முரளி.

“நீ அந்த பொண்ணை கட்டிக்கிட்டா கண்டிப்பா செத்து போய்டுவேன்னு கையில தீப்பெட்டியோட அம்மா நிக்கும் போது நான் என்னத்தடா செய்ய முடியும். சரி நீங்க பார்க்கிற பொண்ணையே கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு சத்தியம் செஞ்சி கொடுத்துட்டேன். அம்மாவோட இந்த ரியாக்ஷன் பார்த்து அப்பாக்கு நெஞ்சு வலி வந்து இரண்டு நாளா ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தேன்! அம்மாகிட்ட பேசவே இல்லை நானு‌! அப்பவே செத்து போய்டலாம் போல இருந்துச்சு” என கண்களை துடைத்தவாறு நிமிர்ந்து அமர்ந்தான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை இன்பா. உங்க அம்மா ஏன் இப்படி பிஹேவ் செய்றாங்க” எனக் கேட்டான்.

“எல்லாம் அண்ணா கல்யாணத்துனால வந்த பிரச்சனை தான். நானும் இப்படி காதல்னு வந்து நிப்பேன்னு அவங்க எதிர்பார்க்கலை. ரொம்பவே அதிர்ச்சியான விஷயமா இருந்துச்சு இது அவங்களுக்கு. எங்கே நானும் அண்ணனை மாதிரி சொல்லாம கொள்ளாம கல்யாணம் செஞ்சிட்டு வந்து நிப்பேனோனு அவங்க செஞ்ச இமோஷனல் பிளாக்மெயில் இது” உணர்வற்ற குரலில் உரைத்தான்.

“அதான் பிளாக்மெயில்னு தெரியுதுல! இதை எப்படி சரி செய்றதுனு பார்க்காம செத்து போய்ட்டா எல்லாம் சரியாகிடுமா! இதுல எதை பத்தியும் யோசிக்காம அந்த பொண்ணை வேற அப்படி பேசி வச்சிருக்க” என காய்ந்தான் முரளி.

நங்கையிடம் அவன் பேசியதை நினைக்கையிலேயே அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

“அவ காதலுக்கு நான் தகுதியானவன் இல்லடா! பிரிஞ்சிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்! நான் வேற என்ன சொல்லிருந்தாலும் அவ என்னை விட்டு பிரிஞ்சி போய்ருக்க மாட்டாடா! லாஸ்ட் இரண்டு மாசமா ரொம்பவே மனப் போராட்டம். அவகிட்ட நான் சரியாவே பேசாம அவளையும் அழ வச்சி காயப்படுத்தினு நிறையவே செஞ்சேன். அப்ப கூட என் நிலைமையை புரிஞ்சிக்கிட்டு எப்படி சரி செய்யலாம்னு யோசிச்சாலே தவிர எப்பவுமே என்னை விட்டு பிரியனும்னு அவ நினைச்சதே இல்லை. தான் தேர்ந்தெடுத்தவனே தவறானவன்னு அவளுக்கு தெரிய வரும் போது தான் பிரியுற முடிவை எடுப்பானு தான் அப்படி பேசினேன். அவளை காயப்படுத்திட்டேனேனு மனசுலாம் ரணமா வலிக்குது முரளி! இப்ப கூட அவளுக்கு ஃபோன் செஞ்சி சமாதானமா பேசி என் நிலைமையை எடுத்து சொல்லிடலாமானு மனசு கிடந்து தவிக்குது. இந்த வலியையும் வேதனையையும் தாங்க முடியாம தான் செத்துடலாம்னு மாத்திரையை எடுத்தேன் முரளி” கண்களில் வழிந்த கண்ணீரின் உவர்ப்பை வாயினுள் உணர்ந்த போதும் பேசிக் கொண்டே இருந்தான் இன்பா.

“எங்க வீட்டை பத்தி தெரிஞ்சும் அவளை காதலிக்கிறேன்னு நான் நின்னது தப்பு! நான் கஷ்டபடுறதும் இல்லாம அவளையும் கஷ்டப்பட வச்சிட்டேனே! எல்லாம் என் தப்பு தான்! நான் உயிரோட இருந்து என்ன சாதிக்க போறேன்” விரக்தியின் விளிம்பில் அழுதவாறு அவன் உரைக்க, முரளி அவன் தோளில் தட்டியவாறு அருகில் அமர்ந்தான்.

“செத்துட்டா எல்லாம் சரியாகிடுமா! என்னை காதலிச்சனால தான் இன்பாக்கு இவ்ளோ பிரச்சனை வந்து தற்கொலை செஞ்சிட்டான்னு அந்த பொண்ணு வாழ்நாளுக்கும் குற்றயுணர்வோட இருக்கும். அது ஓகேவா உனக்கு. அவ உன்னை விட்டு பிரியனும்னு பழி போட்டவன், அதுக்கான தண்டனையா இந்த ரணத்தோடயே வாழ்ந்து தான் ஆகனும். அப்ப தான் அந்த பொண்ணு அவ மேல தப்பில்லனு மனசை தேத்திக்கிட்டு அடுத்து அவ வாழ்க்கையை பார்த்துட்டு போவா! அவ நல்லாயிருக்கனும்னு நினைச்சீனா நீ உயிரோட இருந்தே ஆகனும் இன்பா” என்ற முரளி, அவனை அழைத்து கொண்டு சில தூரம் தெருவில் பேசியவாறே நடக்க வைத்து, அந்நேரத்தில் திறந்திருந்த டீ கடையில் தேநீர் அருந்த வைத்து, இரண்டு மணி நேரம் தெருவை அளந்தவாறு நடந்த பின்னரே அறைக்கு அழைத்து வந்தான்.

மன உலைச்சலும் உடலின் அசதியும் அவனை உறக்கத்தில் தள்ளியது‌. அது வரை உடன் இருந்து பார்த்து கொண்டான் முரளி.


இன்பாவின் இந்த எதிர்பாராத பேச்சும் செய்கையும் முற்றிலுமாய் அவளை நிலைக்குலைய செய்திருந்தது.

இன்பாவின் பேச்சை அங்கு கேட்டிருந்த அனைவரும் தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்ற எண்ணமே நங்கையை கூனி குறுக செய்ய, ஏற்கனவே தாயின் பேச்சில் மனவலியில் வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு, இனி ஒரு தரம் இப்படியான வார்த்தைகளை மற்றவர் வாயிலிருந்து கேட்க தெம்பில்லை என்ற நிலைக்கு சென்றவள், சாக துணிந்திருந்தாள்.

கையில் மாத்திரைகளுடன் அமர்ந்திருந்தவளை கலைத்தது அவளின் அலைபேசி அழைப்பு!

முரளி ராஜனை மேலறைக்கு செல்ல சொன்னதும், அறைக்கு சென்ற ராஜன் கட்டிலில் அமர்ந்து நங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

ஸ்கைப்பில் அழைத்திருந்த ராஜனின் அழைப்பை உடனே எடுக்க மனமில்லாது, அலைபேசியை வெறித்து பார்த்திருந்தாள்.

மீண்டுமாய் அவன் அழைக்க, அழைப்பை ஏற்றப்பின்பு தான் அது வீடியோ அழைப்பாக வந்ததை கவனித்தாள்.

பதற்றம் அடைந்தவளாய் முதலில் தனது கையிலிருந்த மாத்திரைகளை தான் அவனிடம் இருந்து மறைக்க முற்பட்டாள்.

அவள் கையில் எதையோ மறைப்பதை கண்ட ராஜனோ, “கைல என்னடா நங்கை! எதுவும் அடிபட்டிருக்கா?” எனக் கேட்டான்.

அவள் இல்லையென தலையசைத்தாலும், அவளின் முழியிலும் பாவனையிலும் ஏதோ சரியில்லை என்ற மனதின் அரட்டலிலும்,

“கைல என்ன நங்கை?” என மீண்டுமாய் கேட்டான்.

“ஒன்னுமில்ல சுந்தர்!” என்றவாறு சற்று எக்கியவாறு கையில் இருந்த மாத்திரைகளை அவனுக்கு காண்பிக்காது மேஜை மீது வைத்து விட்டு மீண்டுமாய் அவன் முகம் மீது கண்களை பதித்தாள்.

“என்னமோ என்கிட்ட மறைக்கிற தானே!” என நேரடியாக கேட்டவன், “இது வரைக்கும் என்கிட்ட சொல்லாம விட்டதுலாம் போதும் நங்கை. இனி உன் வாழ்க்கைல எனக்கு தெரியாம எதுவும் நடக்க வேண்டாம்னு நினைக்கிறேன்” தீர்க்கமான பார்வையுடன் தெரிவித்தவன்,

“இப்ப சொல்லு கைல என்ன வச்சிருந்த” எனக் கேட்டான்.

விழிகளில் நீர் திரண்டு அவள் பார்வையை மறைக்க, ” அன்னிக்கு பிரேமை பார்த்து எப்படி எவ்ளோ தைரியமானவங்களையும் கோழையான‌ முடிவை எடுக்க வச்சிடுது இந்த காதல்னு ஆச்சரியப்பட்டேன் சுந்தர். ஆனா இன்னிக்கு நானே அப்படி ஒரு கோழையா மாறுவேன்னு நினைக்கலை” என்றவாறு குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவளின் வார்த்தைகள் கூறிய செய்தியில் நெஞ்சம் பதறிப் போக, “நங்கை” என அதிர்வாய் அழைத்திருந்தான் ராஜன்.

ஸ்தம்பித்த நிலை தான் ராஜனுக்கு.

அழுது வீங்கிய கண்களும், உப்பிய கன்னங்களும், கலைந்த கூந்தலுமாய், கழுத்து எலும்பு தெரிய நலுங்கி போய் தன்னை தானே தேற்றியவாறு அமர்ந்திருந்தவளை கண்டவனின் நெஞ்சம் வலிக்க, பெருமூச்செறிந்தவாறு தன்னை மீட்டுக் கொண்டவனாய்,

“உன்னை பார்த்து உன்கிட்ட இருந்து தான் நான் செல்ஃப் லவ்வை கத்துக்கிட்டதே நங்கை! எது எப்படி நடந்தாலும் நம்மை நாமே ஹேப்பியா வச்சிக்கனும்‌. எப்பவும் நமக்காக வாழனும்னு சொல்வியே! எப்படி இப்படி மாறி போன நங்கை” எனக் கேட்டான்.

கண்களை அழுந்த துடைத்தவாறு ராஜனின் வார்த்தையை உள்வாங்கியவளுக்கு, அவள் அவ்வாறு வாழ்ந்த காலங்கள் எங்கோ ஒரு ஜென்மத்தில் நடந்தது போன்று தோன்றியது.

“நீ என் தேவதை நங்கை! என் வாழ்க்கைல வந்த தேவதை! நான் மனசொடஞ்சி கிடந்தப்போ தேடி வந்து எனக்கு சந்தோஷத்தை காட்டின தேவதை நீ” என்றவன் கூறியதும் அது வரை குனிந்திருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“சத்தியமா அப்படி தான் உன்னை என் மனசுல வச்சிருக்கேன் நங்கை. நீ என்னை விட்டு வந்த பிறகு தனிமை விரக்தினு எது வந்தாலும் நீ சொன்ன மாதிரி எனக்கு பிடிச்சதை செஞ்சிக்கிட்டு என்னை நானே சந்தோஷமா வச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்” என்றவனை ஆச்சரியமாய் பார்த்திருந்தாள் நங்கை.

“தெரியலை சுந்தர்! முன்னாடி எப்படி இருந்தேன், இப்ப எப்படி இருக்கேன் எதுவும் தெரியலை சுந்தர்! என் மனசு முழுக்க அவன் மேல் நான் வச்சிருந்த காதலும், எப்படியாவது இரண்டு குடும்பத்து சம்மத்தத்தோட எங்க கல்யாணம் நடந்துடனும்ன்ற நினைப்பு மட்டும் தான் இருந்துச்சு” என்றவாறு கண்களை துடைத்து கொண்டாள்.

இருந்துச்சு என்று இறந்த காலத்தில் கூறியதிலேயே இந்த உறவை விட்டு வெளியே வருவதற்கு அவள் தயாராகி விட்டதை உணர்ந்து சற்று ஆசுவாசமானான்.

மனதிலுள்ளதை எல்லாம் அவனிடம் கொட்ட தொடங்கினாள் நங்கை.

“இன்பாவை எனக்கு ரொம்ப பிடிச்சிது சுந்தர். எவ்ளோ கஷ்டமான வேலையையும் அசால்ட்டா செய்வான். எப்பவும் கிண்டல் கேலியாக பேசிட்டு கலகலப்பாவே இருப்பான். என்னை நிறைய இம்ப்ரெஸ் செஞ்சான் சுந்தர்!” என்று சற்று நிறுத்தியவள் உதடு துடிக்க, “இப்ப இப்படி ஒருத்தனை போய் காதலிச்சிருக்கேனேனு என்னை நினைச்சு எனக்கே அவமானமா இருக்கு சுந்தர்” என அழுதாள் நங்கை.

அவள் அழுது தீர்த்திடட்டும் என அமைதி காத்தவன், “போதும்டா அழுதது! நங்கை பொண்ணு செம்ம ஸ்ட்ராங் தானே” ஆற்றுப்படுத்த முனைந்தான்.

“அங்கிருந்தவங்கலாம் என்னை என்ன நினைச்சிருப்பாங்க சுந்தர்! உடம்பெல்லாம் கூசி போச்சு!” விழிகளில் நீர் நில்லாது வழிய தேம்பியவாறு கேட்டவளை பார்த்தவனின் விழிகளும் கலங்க தன்னை தேற்றி கொண்டவனாய்,

“மத்தவங்க யாருக்கும் நீ எப்படின்னு நிரூபிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை நங்கை. உலகத்துல எல்லாருக்கும் நாம நல்லவங்களா இருந்துட முடியாது! முட்டாள்தனமா அவன் பேசினதுக்கு அங்கேயே அவனை நீ அறைஞ்சிட்டு வராம உன்னை நீயே தாழ்வா நினைச்சிப்பியா!” சற்று கண்டனமாகவே கேட்டவன்,

“எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு நங்கை! இனி என்னிக்கும் இப்படி ஒரு கோழைத்தனமான முடிவை எடுக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு நங்கை” எனக் கேட்டான்.

“இல்ல சுந்தர்! அது அந்த நிமிஷம் அப்படி தோணுச்சு. இப்ப நினைக்கும் போது எனக்கே கில்டியா ஃபீல் ஆகுது” என்றவளை மென்மையாய் நோக்கியவன்,

“நான் ஏன் இந்தியா வந்தேன்னு நீ கேட்கவே இல்லையே” என்றான்.

“ச்சே ஆமா பாரேன்! மறந்தே போய்ட்டேன்! எப்ப வந்த? அங்க பிராஜக்ட் முடிஞ்சிடுச்சா?” என கேட்டாள்.

இல்லை என தலையசைத்தவன், “இரண்டு வாரம் லீவ்ல வந்திருக்கேன். உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சொல்லாம வந்தேன். நாளைக்கு ஆபிஸ்க்கு போய் என் டீம்மெட்ஸ்லாம் பார்த்துட்டு ஊருக்கு போகலாம்னு வந்தேன். கேஸ் அண்ணனுக்கு சாதகமா தீர்ப்பாகிருச்சு. என் பங்கு சொத்தை என் பேருல எழுதி தரதா அண்ணா சொன்னாங்க. என்னோட டிகிரியை அண்ணா தான் போய் வாங்கினாங்க. அதையும் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”

அவனின் பேச்சில் மகிழ்ந்தவளாய், “உங்க அண்ணாகிட்ட பேசிட்டியா ராஜன்” எனக் கேட்டாள்.

இல்லையென தலையசைத்தவன், “தீரன் கல்யாணி மூலமா தான் எல்லா பேச்சும் நடந்துச்சு” என்றான்.

“ஏன்டா” இவள் ஆற்றாமையுடன் கேட்க,

“ம்ப்ச் அது நாளாகும் நங்கை” என்றான்.

மேலும் சில மணி நேரம் அவன் வாழ்வின் நிகழ்வுகளை அவள் உறங்கும் வரை பேசியவன் அதன் பின்பு தான் நிம்மதியாக படுக்க சென்றான்.

காலை முரளி இன்பாவின் நிலையை ராஜனிடம் எடுத்து கூற, அலுவலகத்திற்கு செல்வதற்காக கிளம்பி நின்ற ராஜன், இன்பாவின் அறை நோக்கி சென்றான்.

அப்பொழுது தான் இன்பா எழுந்து முகம் கழுவி அமர்ந்திருக்க, இன்பாவுடன் தங்கியிருந்த அறை தோழன் ரஞ்சித் இரவு ஷிப்ட் முடித்து வந்திருந்தவன், “நேத்து நைட் நங்கை உன்னை தேடி வந்தாங்களே! உன்னை வந்து பார்த்தாங்களாடா?” எனக் கேட்டான்.

அப்பொழுது தான் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் ராஜன்.

இன்பாவிடம் தனியாக பேச வேண்டுமென அவன் கூறவும், ஏற்கனவே முரளியின் மூலம் அறிமுகமாகி இருந்த ராஜனிடம் பேசிவிட்டு மேலே முரளியின் அறைக்கு சென்று விட்டான் ரஞ்சித்.

“ஹௌ ஆர் யூ நௌ (எப்படி இருக்கீங்க)?” எனக் கேட்டான் ராஜன்.

“ஹ்ம்ம் பெட்டர்” என்றவன், “உட்காருங்க” என நாற்காலியை இழுத்து போட்டான்.

அதில் அமர்ந்த ராஜன், “இப்படி தூக்க மாத்திரையை எழுதி கொடுத்த அந்த சைக்கோ சைக்காட்ரிஸ்ட் யாருங்க?” சற்றே கோபமாய் தான் கேட்டிருந்தான்‌.

முரளியின் மூலம் ஏதோ மனோதத்துவ மருத்துவர் தான் இன்பாவிற்கு தூக்க மாத்திரையை எழுதி கொடுத்தது என அறிந்து கொண்ட ராஜனுக்கு நங்கைக்கு எப்படி இந்த மாத்திரை கிடைத்தது என்று விளங்கியது.

“அப்படியே எழுதி கொடுத்தாலும் இவ்ளோ நிறைய மாத்திரைகளை எந்த மெடிக்கல் ஷாப்ல கொடுக்கிறாங்க” எனக் கேட்டான்.

நங்கையின் தற்கொலை முயற்சியை பற்றி ராஜன் எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால், தன் மீதான அக்கறையினால் தான் ராஜன் இவ்வாறு கேட்பதாய் எண்ணி, “அந்த டாக்டர் அண்ட் அந்த மெடிக்கல் ஷாப் ஓனர் இரண்டு பேருமே எனக்கு பர்சனலா தெரிஞ்சவங்க” என்றான் இன்பா.

“மனசு வலிக்குதுனு செத்து போகனும்னு நினைச்சா நாம இந்த வாழ்க்கையை வாழவே முடியாது இன்பா. வலிக்காம தான் வாழ்க்கையே கிடையாதே! நீங்க வேண்டாம்னு சொன்னாலும் வலிக்க வலிக்க வாழ்நாள் முழுக்க வாழ்க்கை ஏதாவது பாடத்தை சொல்லி கொடுத்துட்டே தான் இருக்கும். உங்களை விட மோசமான சூழல்ல இருக்க மனிதர்களும் வாழ்ந்துட்டு தானே இருக்காங்க. நீங்களும் வாழனும் இன்பா! இனியும் இந்த மாதிரியான முட்டாள்தனமான காரியத்தை செய்ய மாட்டீங்கனு நம்புறேன்” என்ற ராஜனை பார்த்த இன்பா செய்ய மாட்டேன் என தலை அசைத்தான்.

இரவு ராஜன் அடித்த அடியிலேயே அவன் மீது பயம் உண்டாகி இருந்தது அவனுக்கு. அதோடு ராஜனை நங்கையுடன் இணைத்து அவதூறாய் பேசியது இன்பாவை குற்றயுணர்வுக்குள் ஆழ்த்தி இருந்தது.

“ஒரே ஒரு விஷயம் தான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்!” இது வரை இருந்த மென்மையான குரல் மாறியிருக்க அதட்டலாய் உரைத்திருந்தான் ராஜன்.

தலை தாழ்த்தியவனாய், “சொல்லுங்க ராஜன்” என்றான் இன்பா.

“எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட பொண்ணா இருந்தாலும் அவங்களை அவமதிச்சு பேசிட கூடாது இன்பா! திரும்பவும் இப்படி ஒரு தப்பை உங்க வாழ்க்கைல செஞ்சிடாதீங்க.
உங்க வாழ்க்கையை நீங்களா முடிவு செய்ற நிலையை எப்பவோ தாண்டிட்டீங்க இன்பா! என் நங்கைக்கு ஏத்த ஆள் நீங்க இல்லை.
இனி உங்க அப்பா அம்மாக்கு உண்மையா இருந்து அவங்க சொல்ற பொண்ணை கட்டிக்கோங்க! அதை தாண்டி நீங்க வேற எந்த முடிவு எடுத்தாலும் அது பலரோட வாழ்க்கையை பாதிக்கும். அந்தளவுக்கு நீங்க சுயநலவாதி இல்லைனு நினைக்கிறேன்.
இனி நீங்க நங்கை வாழ்க்கைல இல்லை. அவளும் அதுல தெளிவா இருக்கா! அவளை நீங்க டிஸ்டர்ப் செய்ற‌ மாதிரி கேள்விப்பட்டா கூட அவளுக்காக நான் வந்து நிப்பேன். அவளோட நண்பனா வந்து நிப்பேன்!” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்த ராஜன்,

“புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றவாறு கிளம்பி சென்றான்.

நங்கை காலை அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் தன் மீது வித்தியாசமாக படிவதை போல் உணர்ந்தாள்.

சோர்ந்த மனதை இழுத்து பிடித்து தனது வேலையை தொடர்ந்தவள், இடைவேளை எடுத்து தேநீர் அருந்த கேண்டீனுக்கு சென்றாள்.

காதில் ஒலி வாங்கியை மாட்டிக் கொண்டு ராஜனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தவாறு தேநீர் அருந்தி கொண்டிருந்தவளின், இருக்கைக்கு எதிரே வந்தமர்ந்தான் அவளுடன் பணிபுரியும் நிதின்.

உடன் பணிபுரிபவன் என்ற ரீதியில், இவள் நட்புடன் சிரிக்க, “நம்ம ராம் சொல்லும் போது நான் நம்பலை நங்கை! இன்பா மட்டும் தான் உன் பாய் ஃப்ரண்டுனு நினைச்சேன். ஏற்கனவே ராஜன்னு ஒரு பாய் ஃப்ரண்டு இருந்தானாமே! இப்ப இரண்டு பாய் ஃப்ரண்ட்ஸ்ஸூம் உன்னை கழட்டி விட்டுட்டாங்களாமே! ஏன் நீ அடுத்த சான்ஸ் எனக்கு கொடுக்க கூடாது” என இளித்தவாறு ஆங்கிலத்தில் கேட்டான்.

நல்லதை விட இங்கு கெட்டது தானே விரைவாக பரவும். அவ்வாறு முந்தைய நாள் இரவு நடந்த இன்பா நங்கையின் சண்டை இன்று அலுவலகத்தில் பரவியிருந்தது‌.

காதில் மாட்டிய ஒலிவாங்கியில் கவனம் வைத்திருந்தவள், எதிர்பாராத அவனின் இப்பேச்சில் அதிர்ந்து போனாள்.

நேற்றைய ராஜனின் பேச்சில் தெளிவாகி அரும்பாடுபட்டு தன்னை சமன் செய்து கொண்டிருந்தவளை அவனின் இப்பேச்சு நெஞ்சை ரணமாய் வலிக்க செய்ய, கண்களில் இருந்து முணுக்கென வந்த நீரை கடினப்பட்டு உள்ளிழுத்தவாறு, துக்கத்தில் வலித்த தொண்டையை சரி செய்தவாறு கண்கள் அலைபாய அமர்ந்திருந்தாள் நங்கை.

“நங்கை!” என அவள் காதில் அழைத்திருந்தான் ராஜன். கைபேசி அழைப்பில் ராஜன் இணைந்திருந்த போது தான் இதனை கேட்டிருந்தான் நிதின்.

இவளின் எதிர்வினையை அறிந்து கொள்ளவே சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். இவளிடம் இருந்து எவ்வித பேச்சு சத்தமும் வராமல் அவளின் சீரற்ற சுவாசமே அவனின் செவியினை தீண்டியிருக்க, அவளை அழைத்திருந்தான்.

“சார் கேட்குறாருல சொல்லு! உனக்காக நீ தான் பேசனும் நங்கை! ஸ்பீக் அவுட்” அழுத்தமாய் அவள் காதினில் உரைத்தான்.

சில நொடிகளில் விழிகளை நிறைத்த நீரை துடைத்தவாறு தண்ணீர் அருந்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்த நங்கை, “ஓ நிதின் இந்த மாதிரியான சோஷியல் சர்வீஸ் தான் இத்தனை நாளா செஞ்சிட்டு இருந்தியா? இது தெரியாம போச்சே” நக்கலாய் கேட்டாள்.

அவள் கூறியதன் பொருள் விளங்காது நிதின் புருவம் உயர்த்தி பார்க்க, “அதாவது யாருக்கு பாய் ஃப்ரண்ட் இல்லைனாலும் அவங்களுக்கு செகண்ட் ஹேண்ட்டா போறதை தான் உன்னோட சோஷியல் சர்வீஸா வச்சிட்டு இருந்தியானு கேட்டேன்” அதே நக்கல் தொனி அவளிடம்.

“ஏய்” என அவன் எகிறவும்,

“எனக்கு பாய் ஃப்ரண்ட்டா வரலாமா வேண்டாமாங்கிற உன்னுடைய கேள்விக்கான பதிலை ஹெச் ஆர் சொல்லுவாங்க நிதின்!” என்றவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

ஹெச் ஆர் என்ற வார்த்தையிலேயே சர்வமும் நடுங்க அவள் பின்னோடேயே நடந்தவன், “நங்கை! சாரி! சாரி நங்கை! I didn’t meant that way (நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை) உண்மையாவே உன்னை விரும்பி” என அவன் ஏதோ சமாளிப்பாய் சொல்ல வரவும்,

சட்டென நடையை நிறுத்தியவள், “ஓ என்னை லவ் பண்றியா நிதின்! அப்ப வா இன்னிக்கே போய் எங்கப்பா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் செஞ்சிக்கலாம்” என அவன் கையை இவள் பற்றவும், அரண்டு போனான் நிதின்‌.

“நோ! நோ! சாரி நங்கை! ப்ளீஸ் இதை ஹெச் ஆர் வரைக்கும் கொண்டு போகாத ப்ளீஸ்” என அவன் கெஞ்ச தொடங்கவும்,

“இது தான் லாஸ்ட் வார்னிங்! கெட் அவுட் ஃப்ரம் மை சைட் (என் பார்வைல இருந்து வெளியே போய்டு)” அடிக்குரலில் சீறியிருந்தாள்.

தப்பித்தோம் பிழைத்தோம் என அவன் அங்கிருந்து செல்ல, உள்ளே நுழைந்தான் ராஜன்.

அவளை பேச சொல்லி விட்டாலும், அவளால் இச்சூழலை சமாளிக்க முடியுமா என்ற கலக்கத்துடன் அவள் இருக்கும் இடத்தை அதன் சத்தத்தின் மூலம் அறிந்து கொண்டு அவசரமாய் லிப்ட் மூலமாக வந்திருந்தான் ராஜன்.

ஆனால் அச்சூழலை அவள் சமாளித்த விதம் கண்டு பெருமிதம் கொண்டவனாய் பொங்கிய சிரிப்புடன், “மை நங்காய் இஸ் பேக்” என அவள் தோளை தட்டியிருந்தான்.

அவனின் நங்காய் என்ற பதத்தில் இவள் முறைக்க, “நங்காய் நிலாவின் தங்காய்” என்று பாடி அவளை சீண்ட, சிரித்தவாறு அவன் முதுகில் அடித்திருந்தாள் நங்கை.

“ஹௌ டேர் யூ டு டீஸ் மீ வித் மை நேம்னு (என் பெயரை வச்சி கிண்டல் செய்ய எவ்ளோ தைரியம் உனக்குனு) முதல் சந்திப்புல என்கிட்ட சண்டைக்கு நின்ன நங்கை தான் எனக்கு ஞாபகம் வந்தா! ஐம்சோ ஹேப்பி! சீக்கிரம் நீ நார்மல் ஆகிடுவனு நம்பிக்கை வந்துடுச்சுடா” பூரிப்பாய் உரைத்திருந்த ராஜனின் மகிழ்வில் இதழ் விரிய சிரித்த நங்கையின் முகத்தில் அத்தனை தெளிவும் மகிழ்வும். ஏதோ சாதித்த உணர்வு. ஜெர்மனியில் இவ்வாறு தானே நிமிர்வுடன் இருந்தாள்.

தன்னை மீட்டெடுக்க தானே முன் வர வேண்டும். இந்த காதல் தோல்விக்குள் சிக்கி தன் வாழ்வை தானே சிதைத்து விடக் கூடாது என்ற மனதிடத்தையும் தெளிவையும் இன்றைய அவளின் செயலே அவளுக்கு அளித்திருந்தது.

“நீ தான் அதுக்கு காரணம். நீ இருக்கேன்ற தைரியம் மட்டும் தான் என்னை இப்படி பேச வச்சது சுந்தர்! தேங்க்ஸ் எ லாட் சுந்தர்” மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்திருந்தாள்.

இருவருமாய் மேஜையில் அமர, “காலைல சாப்பிட்டியா இல்லையா நீ? பப்ளிமாஸ்க்கு பதிலா ஒட்டகசிவிங்கினு தான் இனி நான் உன்னை கூப்ட போறேன் பாரு! வேளா வேளைக்கு சாப்பிடுறியா இல்லையா நீ?” ஆதங்கத்துடன் கேட்டிருந்தான் ராஜன்.

“இல்லடா பிடிச்சதைலாம் தேடி தேடி சாப்பிட்டதுலாம் ஒரு காலம்! இப்பலாம் ஏதோ வாழ்றதுக்கு சாப்பிட்டா போதும்ங்கிற அளவுக்கு தான் சாப்பிடுறது” என்றவள் கூறவும்,

“என்ன நீ கிழவி மாதிரி பேசுற!” அவளை முறைத்தவன், அவர்களின் கேண்டீனிலேயே இருந்த பீட்சா கடையில் அவளுக்கு பிடித்தமான பீட்சாவை ஆர்டர் செய்தான்.

“காலைலயே எதுக்குடா பீட்சாலாம்” என்றவள் கேட்க,

“இந்த டைம்ல சாப்பிடுறதுக்கு பேரு பிரேக் பாஸ்ட் இல்லை மேடம். அதுக்கு பேரு பிரெஞ்ச் (brunch) பிரேக் பாஸ்ட்க்கும் லன்ச்க்கும் இடையில் சாப்பிடுறது. மணி இப்ப பதினொன்னு ஆகுது” என்றான்.

அவர்கள் ஆர்டர் செய்த பீட்சா வந்திருக்க, அதனை உண்டவாறே, “ராம் மேல ஹெச் ஆர்க்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணு நங்கை” என்றான் ராஜன்.

“சுந்தர், ராம் இங்க பல வருஷமா வேலை செய்றாரு. நான் சொல்றதை யாரு நம்புவாங்க. வேணும்னே கம்ப்ளைண்ட் செய்றதா தான் நினைப்பாங்க! யார் அவருக்கு எதிராக நடந்ததை சொல்லுவாங்க” என்றவள் கேட்கவும்,


“ஏன் நானே இருக்கேனே! உன்னை பத்தி என்கிட்ட ஜெர்மனிலயே அவர் தப்பா சொன்னார் தானே! ஒருத்தர் புகார் சொல்லி வெளில இதை பத்தின பேச்சு வந்தா தான் அவர் மூலமா பாதிக்கப்பட்ட மத்தவங்களும் பேச வருவாங்க. உனக்கு நான் இருக்கேன். நீ தைரியமா கம்ப்ளைண்ட் பண்ணு. இனி இந்த மனுஷன் எந்த பொண்ணை பத்தியும் தர குறைவா பேசக் கூடாது” அத்தனை கோபம் தெறித்தது அவன் பேச்சில்.

இருவருமாய் உண்டு விட்டு அவரவர் வேலையை கவனிக்க சென்றனர்.

தனது இருக்கைக்கு சென்ற நங்கையிடம் வந்த சக பணியாள தோழி, “என்ன நங்கை இன்பா பத்தி இன்னும் எந்த விஷயமும் தெரியலையா?” நடந்த விஷயங்கள் பற்றி ஏதும் அறியாது அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவே அக்கேள்வியை கேட்டிருந்தாள் அத்தோழி.

வேறு ஏதோ பேசி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்த நங்கை, முதல் வேலையாக தன்னுடன் பிராஜக்ட்டில் பணிபுரிவோர் அனைவருக்கும் இன்பாவுடனான தனது பிரேக் அப்பை பற்றி மின்னஞ்சல் அனுப்பினாள். அவனுடனான தனது உறவு தொடங்கிய அந்த இடத்திலேயே அதற்கான முற்றுப்புள்ளியை வைத்திருந்தாள் நங்கை.