நனிமதுர நங்கை 13


சுந்தரராஜன் நங்கைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க அவளிடம் சொல்லாமல் இந்தியா வந்திருக்க, இவள் அவனுக்கு பேரதிர்ச்சியை அளித்திருந்தாள்‌.

அன்று மதியம் இந்தியா வந்தடைந்திருந்தவன், அவனது பிராஜக்டின் பெங்களூர் கிளையில் பணிபுரியும் முரளி தனது தோழர்களுடன் தங்கியிருந்த பேச்சிலர் வீட்டில் தங்கவென இன்பா தங்கியிருந்த வீட்டின் முதல் மாடியில் இருக்கும் முரளி வீட்டிற்கு வந்திருந்தான் ராஜன்.

அன்று ஓய்வெடுத்து விட்டு மறுநாள் அலுவலகத்தில் நங்கையை சந்தித்து இன்ப அதிர்ச்சி அளிக்கலாமென எண்ணியிருந்தான் இவன்.

முரளியும் ராஜனும் இரவுணவு உண்பதற்காக கிளம்பி வெளியே வந்து படிக்கட்டில் இறங்கி கொண்டிருந்த பொழுது தான் நங்கையின் பேச்சை கவனித்தனர்‌.

அவளது குரலிலேயே நங்கையென அறிந்து கொண்ட ராஜனுக்கு ஒன்றும் புரியாத நிலை. இப்படியெல்லாம் நாகரீகமற்று சூழலை மறந்து பேசுபவள் அல்லவே அவள் என்ற குழப்பத்துடனேயே அவளருகில் சென்றவன் கீழே விழ இருந்தவளை தாங்கி பிடித்திருந்தான். அதற்குள் பிரியாவும் அங்கே அவளருகே வந்து பிடித்து தன்னுடன் நிறுத்தி இருந்தாள்‌.

அவளின் முகம் கண்டவன் மேலும் அதிர்ந்து தான் போனான். மெலிந்த தேகமும், வாடிய முகமும், கருவளையங்களுடன் சோர்ந்து அழுது வடிந்த கண்களும், கையில் இருந்த டிரிப்ஸ் ஏறிய தடயமும் என நொடிப்பொழுதில் அனைத்தும் பார்த்து அதிர்ந்து கோபமுற்றவன்,

“என்னடா செஞ்ச அவளை? எப்படி இருந்த பொண்ணை என்ன செஞ்சி வச்சிருக்க நீ?” இன்பாவின் சட்டையை பிடித்திருந்தான்.

‘யார்டா நீ?’ என்பது போல் ராஜனை இன்பா பார்க்க, ராஜனை கண்ட அதிர்ச்சியில் நின்றிருந்த நங்கை, ராஜனின் இந்த செயலில், “விடு சுந்தர்!” இவள் அவனது கையினை சட்டையில் இருந்து எடுக்க முயல,

“ஓ நீ தான் அந்த சுந்தராஆஆ!” அவனை இகழ்ச்சியாய் பார்த்தவன், நங்கையை நோக்கி, “ராம் கூட சொன்னாரு, ஏற்கனவே சுந்தரை லவ் செஞ்சி கழட்டி விட்டவ! இவளை நம்பி உன் வாழ்க்கையை கெடுத்துக்காதனு! நான் தான் உன்னை பத்தி தெரியாம அவர்கிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன். நான் இல்லைனு தெரிஞ்சதும் உன்னோட பழைய பாய் ஃப்ரண்டு கூடவே ஒட்டிக்கலாம்னு வர வச்சிட்டியா அவனை” வக்கிரமாய் அவன் பேசி கொண்டே போக,

கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ராஜன்.

கண்களில் நீர் வழிய சிலையென சமைந்து போனாள் நங்கை.

“யாரை பார்த்து என்ன பேச்சு பேசுறடா” ஆத்திரம் கொண்டவனாய் மேலும் ராஜன் இன்பாவை அடித்து கீழே தள்ள, முரளியும் பிரியாவும் தான் ராஜனை இழுத்து பிரித்து வந்தனர்.

நங்கை அவன் கூறிய பழிச்சொல்லில் உடல் கூச, சிலையென கண்ணீர் கோடுடன் அப்படியே நிற்க, “வா நங்கை! இவன் உனக்கு வேண்டவே வேண்டாம்” அவளின் கைப்பற்றி அங்கிருந்து இழுத்து வெளியே வந்திருந்தான் ராஜன்‌.

சுற்றம் மறந்து ராஜன் இழுத்த இழுப்பிற்கு வந்தவளை, நடந்து செல்லும் தூரத்தில் இவர்களின் பிஜி இருந்தும், அவளை பிரியாவுடன் ஆட்டோவில் ஏற்றி, பிரியாவிடம் தனது கைபேசி எண்ணை வழங்கியவன், சென்று சேர்ந்ததும் குறுஞ்செய்தி அனுப்புமாறு கூறி அனுப்பியிருந்தான்.

அவர்களை ஆட்டோவில் ஏற்றிய இடத்தில் ரோட்டோரமாய் இருந்த சிமெண்ட் திண்டில் அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் ராஜன்‌.

‘என்ன நடக்குது இங்க? நல்லா தானே இருந்தான் இந்த இன்பா! இவங்களுக்குள்ள என்ன பிரச்சனை?’ சிந்தித்தவாறு வேதனையோடு அவன் அப்படியே அமர்ந்துவிட, முரளி அவன் தோள் தொட்டு நிகழுலகுக்கு கொண்டு வந்தவன், “சாப்பிட போலாமா சுந்தர்? ஏற்கனவே மணி பதினொன்னு ஆச்சு! தள்ளு வண்டி கடை ஏதாவது இருக்குதானு தான் பார்க்கனும்” என்றான்.

இருவரும் சற்று தொலைவில் இருந்த தள்ளுவண்டி கடையில் சென்று அமரவும், பிரியாவிடம் இருந்து அழைப்பு வந்தது‌. அவர்கள் அறைக்கு சென்று விட்டதை அவள் கூறவும், இன்பா மற்றும் நங்கையின் பிரச்சனை பற்றி கேட்டறிந்தான்‌. ஏற்கனவே பிரியாவுக்கு ராஜனை நங்கையின் தோழனாய் தெரியும் என்பதால் அனைத்தையும் உரைத்திருந்தாள்.

அனைத்தையும் கேட்டு கோபம் மேலோங்க, “லூசாயிட்டானா இந்த இன்பாஆஆ!” என சுற்றம் மறந்து கத்தியிருந்தான்.

முரளி மேஜையில் இருந்த அவனது கையை தொட்டு சுற்றத்தை கண்களால் சுழற்றி காண்பிக்க அமைதியான சுந்தர், “எவ்ளோ கஷ்டப்படுத்திருக்கான் இந்த பொண்ணை! ஏன் இவ என்கிட்ட எதையுமே சொல்லலை” ஆதங்கமாய் கேட்டவன்,
“இப்ப நங்கை எப்படி இருக்கா? சாப்பிட்டீங்களா இரண்டு பேரும்?” எனக் கேட்டான்.

பிஜியிலேயே கொடுத்த சாப்பாத்தியை இருவருக்கும் எடுத்து வைத்திருப்பதாய் உரைத்த பிரியா, “அண்ணா நங்கை அப்படியே வெறிச்சு பார்த்துட்டு கட்டில்ல உட்கார்ந்திருக்காங்க. கண்ணுல இருந்து தண்ணியா வருது! எனக்கு பயமா இருக்குண்ணா” என்றாள்.

“நீ எப்படியாவது அவளை சாப்பிட வச்சி மாத்திரை கொடுத்துட்டு எனக்கு மெசேஜ் செய்மா! நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

பிரியா வற்புறுத்தி நங்கையை இரண்டு சப்பாத்தி உண்ண வைத்தவள், மாத்திரை அளித்து படுக்க சொன்னாள்‌‌.

இங்கே சுந்தருக்கு சிற்றுண்டியை அவன் மேஜையில் வைத்த முரளி, “இன்பாவை எனக்கு நல்லா தெரியும் சுந்தர்! என் ரூம்மேட்ஸ் அண்ட் அவன் ரூம்மேட்டஸ்லாம் ஒன்னா தான் மூவி போவோம். வீக்கெண்ட்ல சமைச்சி சாப்பிடுவோம்‌. இன்பாவோட காதலை பத்தி எங்க எல்லாருக்குமே தெரியும். இன்பா இப்படி பேசுற ஆளு இல்லை சுந்தர்! ஊருல தான் என்னமோ நடந்திருக்கு” இன்பாவை பற்றி தான் அறிந்ததை கூறி, அவன் மீதான ராஜனின் கோபத்தை குறைக்க முயன்று கொண்டிருந்தான் முரளி.

“உங்களுக்கு நங்கையை எப்படி தெரியும்?” எனக் கேட்டான் முரளி‌.

நங்கைக்கும் தனக்குமான ஆத்மார்த்த நட்பை பற்றி உரைத்தான் சுந்தர்‌‌.

அங்கே படுக்கையில் விழுந்த நங்கை, அவனின் அவச்சொல்லில் மன வலியில் அழுது கரைய, பிரியா முடிந்த வரை சமாதானம் பேசி தனது கட்டிலில் படுத்து விட்டாள்‌.

“நான் என்ன தப்பு செஞ்சேன்! எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை!” நடந்ததை ஏற்றுக்கொள்ள இயலாது தனக்குள்ளேயே பிதற்றியவள், “அங்கிருந்தவங்கலாம் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க!” அழுது கரைந்தவளுக்கு வாழ்க்கையே சூனியமாக தெரிய, தூக்க மாத்திரையை கையில் எடுத்து பார்த்தவாறு அமர்ந்து விட்டாள்.

அதே நேரம் அங்கே இன்பாவும் கையில் தூக்க மாத்திரையை எடுத்து பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

இருவருமே ஏன் இனி தாங்கள் வாழ வேண்டுமென்ற விரக்தியின் நிலையில் மாத்திரையை விழுங்க முயற்சித்த நேரம், இன்பாவின் வீட்டு கதவு தட்டப்பட்டது.

அங்கே நங்கையின் கைபேசி அலறியது!