நனிமதுர நங்கை 12


“இதை விட மோசமா எங்க அம்மா என் அண்ணியை பேசினாங்க” இன்பா கூறியதை கேட்ட நங்கைக்கு கோபத்திற்கு பதில் பயம் தான் மேலோங்கியது.

“அய்யோ அவ்ளோ கொடுமைக்கார அம்மாவா அவங்க?” மனதில் நினைத்ததை கேட்டே விட்டிருந்தாள்.

அவளின் கேள்வியில் முறைத்திருந்தான் இவன்.

“எங்க அண்ணி மட்டும் கொஞ்சம் நஞ்சம் பேசலை. அவங்க பேசினதுக்கு தான் எங்கம்மா பேசினாங்க. இதுல அம்மா மேல தப்பு எதுவும் இல்லை” என்றான் வெடுக்கென்று.

‘அவன் அம்மாவை சொன்னா அவனுக்கு கோவம் வர்றது நியாயம் தான்! இருந்தாலும்’ என்னமோ அவளின் மனதை நெருடியது.

தாயின் பேச்சையையே ஏற்கயியலாது தவித்திருப்பவள், மாமியாரின் பேச்சை கேட்டு எங்ஙனம் பொறுத்து போவது! இனி இப்படியான ஏச்சு பேச்சுகளுடன் தான் தன் வாழ்வு இருந்திடுமா என்றெண்ணியே நொந்து போனாள்.

அவளின் முகத்தினில் வந்து போன கலவையான உணர்வுகளை கண்ணுற்ற இன்பா, “அம்மாவை நினைச்சு நீ ஏன் டென்ஷன் ஆகுற! அண்ணி மாதிரிலாம் நீ ஒன்னும் படபடனு பேசுற ஆளு இல்லை. அதனால அம்மாவை ஹேண்டில் செய்றது ஈசி தான். உன்கிட்டலாம் அப்படி ஒன்னும் பேசிட மாட்டாங்க. அப்படியே பேசினாலும் நான் இருக்கேன்ல பார்த்துக்கிறேன்” ஆறுதல் மொழி உரைக்க,

‘ஆமா காதலை பத்தி அம்மாகிட்ட சொல்லவே இவ்ளோ யோசிக்கிறவன் எனக்காக அவங்க அம்மாவை எதிர்த்து பேசிட போறானாக்கும்’ அவளின் மனக்குரல் குமுறியது.

“ஹ்ம்ம் முதல்ல நல்லபடியா கல்யாணம் நடக்கட்டும். தினமும் இதை நினைச்சே எனக்கு பிபி ஏறுது‌. இதுல எங்கம்மா சம்மதிக்கலனா என்ன செய்றதுனு வேற யோசனையா இருக்கு” கவலையாய் உரைத்தவள்,

“நான் ஒன்னு கேட்பேன் திட்டாம உண்மையை சொல்லுவியா இன்பா?” எனக் கேட்டாள்.

“என்ன?” எனக் கேட்டான் ஒரே வார்த்தையில்.

“என்னிக்காவது ஒரு நொடியாவது இப்படி இவ்வளோ கஷ்டப்பட்டு இவளை கல்யாணம் செஞ்சிக்கனுமானு நினைச்சிருக்கியா இன்பா?” எனக் கேட்டாள்.

அவளை கோபமாய் முறைத்தவன், “அதென்ன எப்ப பார்த்தாலும் நான் உண்மையா தான் இருக்கேனானு டெஸ்ட் செஞ்சிட்டே தான் இருப்பியா? அப்படி நம்பிக்கை இல்லாதவ எதுக்குடி காதலிக்கிற?” எனக் கத்திவிட்டு தனது வேலையை கவனிக்க சென்று விட்டான்.

இவள் செல்லும் அவனை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்‌.

திருமண பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து அன்றாடம் சண்டையில் தான் முடிகிறது இவர்களின் உரையாடல்கள். ஆகையால் அவனின் இந்த கோபம் அவளை பெரியதாக ஒன்றும் பாதிக்கவில்லை.

ஆனால் பதில் கூறாது தப்பி செல்ல அவன் இந்த பொய்யான கோப முகமூடியை காட்டி செல்கிறானோ எனத் தோன்றியது அவளுக்கு.

எது எப்படியோ ஒருவனையே காதலித்து அவனையே தான் மணக்க வேண்டுமென்ற கொள்கையுடன் இருப்பவள் ஆதலால் எக்காரணம் கொண்டும் இவனை பிரிந்திட கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தாள்‌.


ஒரு மாதம் கடந்த நிலையில் நங்கையிடம் வந்த இன்பா, “இந்த வாரம் சனிக்கிழமை அம்மாகிட்ட நம்ம லவ் பத்தி பேச போறேன்” என்றான்.

“உங்க அண்ணன் அண்ணி விஷயம் என்னாச்சு? அது சரியாகிடுச்சா?” எனக் கேட்டாள்.

“இல்ல அண்ணா அண்ணி தனியா வீடு எடுத்து தங்கி இருக்காங்க. இப்ப அம்மா அப்பா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருக்காங்க. என் அண்ணன் வேற பிரச்சனையை இழுத்துட்டு வரதுக்குள்ள நான் நம்ம நம்மளை பத்தி பேசுறேன்” என்றான்‌.

“உங்க வீட்டுல ஒத்துக்கலைனா என்ன செய்றது இன்பா?” எனக் கேட்டாள்.

“ஆறேழு மாசம் பொறுத்து பார்ப்போம். இல்லனா ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கலாம்” தீர்க்கமாய் உரைத்தான்.

ஆச்சரியத்தில் விழிகள் விரிய அவனை பார்த்தவள், “ஆறேழு மாதத்துக்கு அப்பாவை வச்சி தான் அம்மாவை சமாளிக்கனும்‌. ஆமா ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய உனக்கு ஓகேவா? ஏற்கனவே உங்க அண்ணன் மேரேஜ்ல நொந்து போய் இருக்காங்க தானே உன் அம்மா அப்பா! நீயும் ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிட்டு போய் நின்னா அவங்க நிலைமை என்னாகுறது?”

“அதுக்காக எங்க அப்பா அம்மா வேண்டாம்னு சொல்லும் போது, உங்கப்பா அம்மா ஓகே சொல்றாங்கனு நான் அங்க வந்து உன்னை கல்யாணம் செஞ்சிக்க முடியாது! வீட்டோட மாப்பிள்ளையா போய்ட்டான்னு ஏச்சு பேச்சுலாம் என்னால வாங்க முடியாது! அதனால இரண்டு பக்கமும் பாதகம் இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் செய்றது தான் சரி” என்றான்.

அவனின் பதிலில் கடுப்பானவளாய், “நான் உங்கம்மா அப்பா நிலைமைல இருந்து அவங்களுக்கு பாதகமில்லாம என்ன செய்யலாம்னு யோசிக்க சொன்னா.. என்னமோ எங்கப்பா உன்னை வீட்டோட மாப்பிள்ளையாய் வரச் சொல்லி பேசின மாதிரியே பேசிட்டு இருக்க நீ” என முறைத்தாள்.

“ம்ப்ச்” தலையை அழுந்த கோதியவன், “சாரி” என்றான்.

“அண்ணா அப்படி அந்த வீட்டோட இணக்கமா இருக்கிறது வேற அம்மா அப்பாக்கு கவலை. அந்த நினைப்புல தான் அப்படி பேசிட்டேன்! சாரிடா” என்றான்.

நெடு நாளைக்கு பிறகு இருவருமே கோபம் மறந்து அவரவர் நிலையில் இருந்து இறங்கி வந்து இயல்பாய் பேசியது போன்றே தோன்றியது. அதிலும் இன்பாவிடம் இருந்து ஒருவித நேர்மறையாய் அடுத்த கட்டத்துக்கான பேச்சுகள் வருவதில் மகிழ்ந்திருந்தாள் நங்கை.

வெள்ளிக்கிழமை இரவு இவளே அவனை காஞ்சிபுரம் பேருந்தில் வழியனுப்பி வைக்க சென்றாள். ஆம் காஞ்சிபுரம் தான் இன்பாவின் சொந்த ஊர்.

“வீட்டுல என்ன சொன்னாலும் எனக்கு மெசெஜ்ல அப்டேட் செஞ்சிட்டே இரு! நீ சொல்ற வரைக்கும் எனக்கு இங்க மனசு உதறலாவே தான் இருக்கும் இன்பா. அதனால பதட்டத்துலயே என்னை வச்சிருக்காம அப்பப்ப அப்டேட் கொடு சரியா” பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவனின் கையினை பற்றியவாறு படபடக்கும் மனதோடு உரைத்தவளை மென்மையாய் நோக்கியவன்,

“நீ ஒன்னும் ஸ்டெரஸ் ஆகிக்காத! எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்! என்ன நடந்தாலும் சமாளிப்போம்” அவள் கையின் மீது கை வைத்து தட்டிக் கொடுத்தான்.

“பார்த்து பத்திரமா போய்ட்டு வா” அவள் கையினை விலக்கியவாறு கிளம்ப எத்தனிக்க, மீண்டும் அவள் கையினை பற்றி இழுத்தவனை திரும்பி நோக்கியவாறு என்னவென அவள் கேட்க, ஒன்னுமில்லை என தலையசைத்தவன், “டேக் கேர்” என்றான். தலையசைப்புடன் அவள் விடைப்பெற, கை அசைத்து விடைப்பெற்றான் இவன்.

அடுத்த இரண்டு நாட்கள் அல்ல ஒரு வாரத்திற்கு அவனிடம் இருந்து எந்தவித தகவலும் வரவே இல்லை அவளுக்கு. அவனது அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே சில நாட்கள் இருந்து அதன் பிறகு அணைந்தே போயிருந்தது.

சனி மற்றும் ஞாயிறு அன்று அவனது கைபேசிக்கு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியவள், திங்கட்கிழமை காலை அவனை காணவென விரைவாய் அலுவலகம் சென்று பார்க்க, அன்று அவன் வரவே இல்லை. அலுவலகத்திலும் விடுப்பு பற்றி எந்த தகவலும் அவன் பகிரப்படாமல் இருக்க, பயந்தே போனாள் நங்கை.

திங்கட்கிழமை மதியத்திற்கு பின்பே அவன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி இருக்குமோ என்ற சந்தேகம் எழ, உள்ளம் நடுங்க அந்த டிராவல்ஸ் எண்ணிற்கு அழைத்து பேசியவள், அனைவரும் அன்று பாதுகாப்பாய் அவரவர் இடத்தில் இறக்கி விடப்பட்டதை கேட்டு உறுதிப்படுத்திய பிறகே அவள் உள்ளம் நிதானமாய் துடித்தது.

அலுவலகத்தில் உள்ளோர் எல்லாம் அவன் ஏன் வரவில்லை என இவளிடம் கேட்க, என்ன பதில் கூறவென தெரியாது திணறிப் போனாள்.

“அவன் மட்டும் நேர்ல வரட்டும், ஒரு வழி பண்ணிடுறேன்! ஒரு மெசேஜ் அனுப்புறதுல என்ன பிரச்சனை அவனுக்கு! நான் அனுப்பினதையும் பார்க்காமலே இருக்கான்”
இந்த சங்கடங்கள் எல்லாம் அவன் மீதான கோபமாய் உருமாறி இருந்தது‌ அவளுக்கு.

“ஒரு வேளை அவன் அம்மா அப்பாக்கு இந்த விஷயத்தை கேட்டு எதுவும் ஆகியிருக்குமோ? ச்சே ச்சே அப்படிலாம் இருக்காது” கேள்வியும் அவளே பதிலும் அவளே என தடுமாறி கொண்டிருந்தாள்.

அவனை பற்றி எவ்வித தகவலும் தெரியாமல் மேலும் இரு நாட்கள் இப்படியே செல்ல, வியாழக்கிழமை காலை அவளை அழைத்திருந்தார் அவளின் மேனேஜர் சத்யன்.

அவரின் கேபினுக்கு சென்று அனுமதிக் கேட்டு உள்ளே வந்தவளை பார்த்த சத்யனுக்கு, அவளின் சோர்ந்த முகமும் வீங்கிய கண்களும் அவள் தன்னையே வருத்தி கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்லிற்று.

அவர் எதிரில் அமர்ந்திருந்தவளிடம் பேச ஆரம்பித்தவர், “இன்பாவை பத்தி உங்களுக்கு எதுவும் நியூஸ் தெரிஞ்சிதா?” எனக் கேட்டார்.

இல்லையென அவள் தலையசைக்க, “இன்பா கிட்ட இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு இன்னிக்கு” அவர் கூறிய நொடி,

கண்கள் மின்ன, “என்ன? என்னனு மெயில் செஞ்சிருக்கான் சத்யா?” பதட்டமாய் கேட்டாள்.

“மூனு நாளா அவங்க அம்மா ஹாஸ்பிட்டலைஸ்டா இருந்தனால லீவ் சொல்ல முடியாம போச்சுன்னு சொல்லி இன்னும் ஒரு வாரம் மெடிக்கல் லீவ் வேணும்னு கேட்டிருக்கான். பெர்சனல் ஃபேமிலி எமர்ஜென்சினு சொல்லி எமர்ஜென்சி டிரான்ஸ்ஃபர் டூ சென்னை இந்த மாசமே வேணும்னு வேற கேட்டிருக்கான்” என்றார் சத்யன்.

‘ஓ நாம நினைச்ச மாதிரியே அவன் அம்மாக்கு என்னமோ பிரச்சனை போல! அதனால தான் வராம இருந்திருக்கான். ஆனா ஒரு மெசேஜ் செஞ்சி சொல்றதுக்கு என்ன இவனுக்கு ஆனா ஏன் டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்கான்’ மனதோடு பேசியவளாய்,

“ஓ தேங்க்ஸ் சத்யா!” என்று இவள் முடித்துக் கொள்ள,

“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் நங்கை. உங்க பெர்சனல்ல தலையிடுறேன்னு நினைக்காதீங்க” அவர் பீடிகையுடன் தயங்கியவாறே தொடங்க,

“சொல்லுங்க சத்யா” என்றாள் இவள்‌.

“நீங்களும் இன்பாவும் லவ் பண்றது இங்க எல்லாருக்குமே தெரியும்‌. ஆனா உங்ககிட்ட கூட சொல்லாம இன்பா எனக்கு தனியா மெயில் செஞ்சிருக்கான்னா, உங்க லவ் சம்பந்தப்பட்ட குடும்ப பிரச்சனையா தான் இருக்கனும்ன்றது என் கெஸ்! இல்ல நிஜமாவே அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லாம இருக்கிறது உண்மைனா அதை ஏன் உங்ககிட்ட சொல்லாம இருக்கனும். ஏன் திடீர்னு டிரான்ஸ்ஃபர் கேட்கனும். இன்பா நல்லவன் தான்! நீங்க இரண்டு பேருமே நல்ல ஜோடினு இங்க எல்லாருமே பேசியிருக்கோம். ஆனா அவன் இப்ப செய்றது பார்த்தா அவன் உங்களை அவாய்ட் செய்றது நல்லாவே தெரியுது” என்று சத்யன் பேசி கொண்டிருக்கும் போதே, அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது. கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள் அவள்‌.

“இந்த பிராஜக்ட்க்குள்ள வரும் போது நீங்க எப்படி இருந்தீங்க‌ தெரியுமா நங்கை! நீங்க இருக்க இடம் கலகலப்பா தான் இருக்கும்‌. எல்லார்க்கிட்டயும் நீங்களே போய் பேசுவீங்க. இப்ப நீங்க இருக்கிற இடமே தெரியலை. அவ்ளோ அமைதியாகிட்டீங்க. எப்பவும் ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க. நீங்க காதலிக்க ஆரம்பிச்ச பிறகு உங்களோட சுயத்தையே இழுந்துட்டதா தான் எனக்கு தோணுது‌.

தன்னோட இயல்பை பறிக்கொடுத்து பெறப்படும் எதுவும் மகிழ்ச்சியை தராது நங்கை. இந்த காதல் உங்களுக்கு நல்லது செய்யுமா செய்யாதானு நல்லா யோசிச்சிட்டு முடிவெடுங்க!” அவர் நிறுத்த, அமைதியாகவே அமர்ந்திருந்தாள் நங்கை.

“ஏன் சத்யா, இதுவே வீட்டுல பார்த்த பையனை கட்டிக்கிட்ட பிறகு எனக்கு அவனால இப்படி இயல்பை மறந்து வாழுற வாழ்க்கை அமையுதுனு வச்சிக்கோங்க. அப்பவும் இப்படி தான் அட்வைஸ் செய்வீங்களா? கல்யாணமாகிடுச்சு மேனேஜ் செஞ்சி வாழுங்கனு தானே சொல்வீங்க! தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேயே தேவலைனு தானே தோணும் காதலிக்கிறவங்களுக்கு” எனக் கேட்டாள்.

தான் தனது காதலில் உறுதியாய் இருப்பதை அவள் இவ்வாறாய் எடுத்துரைக்க, அவளின் பதிலில் சிரித்த சத்யன்,

“நாம மனசார விரும்பி கைல எடுத்த ஒரு பொருள் நம்ம நிம்மதியை கெடுத்து வாழ்க்கையையே பாழாக்குதுனு தெரிஞ்ச பிறகு அந்த பொருளை கை விட்டுடுறது தான் புத்திசாலித்தனம் நங்கை” என்றார்.

“ஆனா இன்பா என் வாழ்க்கைல வந்த பிறகு என் வாழ்க்கை ஒன்னும் பாழாய்ப போகலை சத்யா! சோ இதை பத்தி இதுக்கு மேல பேச வேண்டாம்னு நினைக்கிறேன் அண்ட் தேங்க்ஸ் ஃபார் த இன்ஃபோ (உங்க தகவலுக்கு நன்றி) சத்யா” அழுத்தமாய் உரைத்து அங்கிருந்து சென்றிருந்தாள் நங்கை.

“காதலிக்கிற எல்லாருக்கும் அதெப்படி சொல்லி வச்சா மாதிரி மூளை வேலை செய்யவே மாட்டேங்குது” தனக்குள்ளேயே பேசியவனாய் தனது வேலையை பார்த்து கொண்டிருந்தார் சத்யன்.

சத்யனிடம் பேசி விட்டு வந்து இன்பாவின் எண்ணிற்கு தான் அழைத்திருந்தாள் நங்கை. அதே அணைத்து வைத்திருப்பதான செய்தி தான் வந்தது அவளுக்கு.

“ம்ப்ச் ஏன் இவன் இப்படி என்னை பாடாய் படுத்துறான். கண்டவனும் அட்வைஸ் செய்ற நிலைல கொண்டு வந்து நிறுத்திருக்கானே! இவன்‌ மட்டும் என் கைல கிடைச்சான்” ஏறிய கோபத்தை அடக்கி தனக்கு ஏதேனும் மின்னஞ்சல் செய்திருக்கிறானா என ஆராய்ந்தாள்.

அன்றைய நாள் முழுவதும் அவனிடம் இருந்து தனக்கு ஏதேனும் வகையில் தகவல் வருமா என காத்திருந்தாள்.

அன்றிரவு எட்டு மணியளவில் அவனது அறை தோழர்களிடம் விசாரிக்கலாம் என்ற யோசனை தோன்ற, பிரியாவிடம் கூறிவிட்டு இவள் கிளம்ப எத்தனிக்க, இரவு நேரமாகையால் நங்கையை தனியே அனுப்ப மனமில்லாது தானும் உடன் வருவதாய் உரைத்து அவளுடன் சென்றாள் பிரியா.

இன்பா தங்கியிருந்த வீட்டின் தெருவிற்குள் இவர்கள் நுழையும் போது எதிர்ப்பட்ட அவனது அறை தோழன் ரஞ்சித், “என்ன நங்கை இந்த பக்கம்? இன்பாவை பார்க்க வந்தியா? ஆமா இன்னிக்கு காலைல வந்ததுலருந்து ஆளே ஒரு மாதிரி தான் இருக்கான். என்ன விஷயம்னு கேட்டும் அவன் ஒன்னும் சொல்லவேயில்ல” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,

‘என்னது இங்க தான் இருக்கானா? இங்க இருந்துட்டே என்னை அவாய்ட் செய்றானா?’ மனம் வலிக்க நங்கையின் உடல் நடுங்க நிற்க,

அதே நேரம் ரஞ்சித்தின் கைபேசி அலற எடுத்து பேசினான்.

“சரி நான் கிளம்புறேன் நங்கை! எனக்கு நைட் ஷிப்ட் டியூட்டி இன்னிக்கு. கேப் மெயின் ரோடுல வெயிட்டிங். நான் போகனும். நீ போய் பேசு அப்பவாவது தெளியுறானானு பார்ப்போம்” என்றவாறு கிளம்பிவிட்டான் ரஞ்சித்.

பிரியா அதிர்ச்சியாய் நங்கையை பார்க்க, அதீத மனச்சோர்வும் அதிர்ச்சியும் சேர மயங்கி சரிந்திருந்தாள் நங்கை.

உடனே அங்கிருந்தவர்கள் ஆட்டோ பிடித்து இரு பெண்களையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரத்த அழுத்தத்தினால் வந்த மயக்கமெனக் கூறி அங்கே நங்கைக்கு டிரிப்ஸ் ஏற்ற, அருகே அமர்ந்திருந்தாள் பிரியா.

நங்கையின் நிலைப்பற்றி இன்பாவிடம் தெரிவிக்கலாமென அவனது எண்ணிற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டதாகவே செய்திகள் வர, என்ன செய்வதென தெரியாது அமைதியாக நங்கை அனுமதிக்கப்பட்ட கட்டிலினருகே அமர்ந்து விட்டாள் பிரியா.

ஒரு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த நங்கையின் முகத்தில் அத்தனை கோபம்.

“பிரியா டிரிப்ஸ் ஏறினது போதும். இதை ரிமூவ் செய்ய சொல்லுங்க. நான் அவனை பார்க்க போகனும்” அழுகையுடன் ஆத்திரமாக கூறியிருந்தாள்.

“நாளைக்கு போய் பாருங்க நங்கை‌. பத்து மணியாகுது! இப்ப எங்கேயும் போக வேண்டாம்” பிரியா அவளை அமைதிப்படுத்த, ஏதும் கூறாது விட்டத்தையே பார்த்திருந்தாள்.

அவளின் மனம் உலைகளமாய் கொதித்து கொண்டிருந்தது.

“எந்த பிரச்சனையையும் நேரடியா சமாளிக்க முடியாதவன் எதுக்கு லவ் பண்றான்? ஃபோன் செஞ்சி சொல்ல முடியாத அளவுக்கு அன்னியமா போய்ட்டேனா நான் அவனுக்கு! நேரடியா போய் நாக்கு புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டா தான் என் மனசு ஆறும்!” கண்ணில் பெருகிய நீரை துடைத்தவாறு நெஞ்சம் விம்ம ஆவேசமாய் அதீத கோபத்தில் இருந்தாள் நங்கை‌.

டிரிப்ஸ் முடிந்த மறுநொடி, மருத்துவரை சந்தித்து பேசிவிட்டு பணத்தை கட்டிவிட்டு கீழே வந்தவள், பிரியா சென்ற திசைக்கு எதிர் திசையில் செல்ல, பதறிய பிரியா, “அய்யோ இப்ப அங்க போக வேண்டாம் நங்கை! இப்ப நீங்க இருக்க மனநிலைல அங்க போனா பிரச்சனை தான் வரும். நைட் டைம் வேற சேப் இல்லை நங்கை” அவளின் கைப்பற்றி பிரியா தடுக்க,

“நீங்க போங்க பிரியா! நான் பார்த்துக்கிறேன்!” பிரியாவின் கையை விலக்கியவாறு நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள் நங்கை.

நங்கையை சமாதானம் செய்ய வழி தெரியாது, அவளை தனியே அனுப்பவும் மனமில்லாது அவளுடனேயே சென்றாள் பிரியா.

நங்கை பிரியா வருவதையும் கண்டுகொள்ளாது பார்வையை நேராய் சாலை மீது பதித்தவாறு அவசரமாய் நடந்தாள். அவளுக்கு இணையாக நடப்பது ஓடுவது போல் இருந்தது பிரியாவிற்கு.

அத்தனை ஆவேசத்துடன் நங்கையை இதற்கு முன் அவள் பார்த்ததில்லை என்பதால், ‘அங்க என்ன நடக்க போகுதோ’ என்ற பயமும் பிரியாவை பீடித்திருந்தது.

ஆயினும் அந்த இரவு நேரத்தில் அவளை தனியே அனுப்ப மனமில்லாது உடன் ஓடிக் கொண்டிருந்தாள் பிரியா.

இன்பா இரண்டு தோழர்களுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தான். கீழ் தளத்தில் இரண்டு வீடு முதல் தளத்தில் இரண்டு வீடு என பிளாட் போன்ற அமைப்பில் இருந்த வீடு அது‌.

இன்பாவின் வீட்டை அடைந்ததும் பிரியா கீழேயே அருகிலிருந்த கடைக்கருகே நின்றுக் கொள்ள, அந்த வீட்டின் கீழ் தளத்தில் இருந்த வீட்டின் கதவை, “இன்பா.. இன்பா” ஆவேசமாய் தட்டினாள் நங்கை.

அவளின் சத்தமான அதிரடியான தட்டுதலில் அருகிலிருந்த வீட்டினர் எட்டி பார்த்தனர்.

இன்பா கதவை திறந்து இவளை பார்த்தவன், “இப்ப எதுக்கு இங்க வந்திருக்க! உன்னை அவாய்ட் பண்றேன்னு தெளிவா தெரியுதுல! விட்டுட்டு போக வேண்டியது தானே” அடிக்குரலில் சீறினான்.

“கல்யாணம் செய்ய துப்பில்லாதவன்லாம் எதுக்குடா காதலிக்கிற! நேரடியா என்னை பார்த்து எங்க வீட்டுல ஒத்துக்கலை இந்த காதல்லாம் வேண்டாம் பிரேக் அப் செஞ்சிக்கலாம்னு சொல்ல தைரியம் இல்லாம அவாய்ட் செஞ்சி ஓடி ஒளியறவன் எதுக்குடா லவ் பண்றேன்னு என் பின்னாடி சுத்தின?” சுற்றம் மறந்து ஆக்ரோஷமாய் அவனது சட்டையை பிடித்து நங்கை கத்தியிருக்க,

“இப்படி பஜாரி மாதிரி பிஹேவ் செய்ற உன்னை மாதிரி பொண்ணலாம் காதலிச்சதே தப்புடி” அவளின் இந்த பேச்சில் கோபமுற்றவனாய், ஆவேசமாய் அவளின் கையை சட்டையில் இருந்து பிரித்து தள்ளிவிட,

அருகே இருந்த பூச்செடியில் இடித்து கீழே விழப்போனவளை வந்து தாங்கி பிடித்திருந்தான் சுந்தரராஜன்.