நனிமதுர நங்கை 10


இன்பாவிற்கு நங்கையை நிரம்பவே பிடித்திருந்தது. அவளின் அழகும், துறுதுறு பேச்சும் அவனை வெகுவாய் ஈர்த்தன. அவன் காதலித்த முதல் பெண் இவள் தான்‌. அவளை இவன் காதலிக்கிறான் என அவனின் மனது தெளிவாய் எடுத்துரைத்த போது, தனது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் வாங்குவது கடினமென அறிந்திருந்த போதும், அவளை விட முடியாத மனதின் உந்துதலால் காதலை மொழிந்திருந்தான் இன்பா.

காதலித்தாலும் இன்பாவுடன் தனியாக நெடும்பயணத்திற்கு எல்லாம் நங்கை சம்மதித்ததில்லை. சினிமாவுக்கு கூட அவனுடன் அவள் சென்றதில்லை.

‘ஃப்ரண்ட்ஸ்ஸா வெளில போய்ட்டு வரது தப்பில்லை. ஆனா லவ்வர்ஸ்ஸா அதுவும் இரண்டு வீட்டுக்கும் சொல்லாம ஊர் சுத்த போறது ஒரு மாதிரி கில்டி ஃபீல் ஆகுது இன்பா. கல்யாணத்துக்கு பிறகு லாங் டிரைவ் சினிமானு எங்கனாலும் போகலாம். இப்ப வேண்டாமே’ என்றிடுவாள்.

ஏற்கனவே வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள் என வாரயிறுதி நாட்களில் வெளியில் சந்திப்பதை வெகுவாய் தவிர்த்திடுவாள் நங்கை.

மார்டன் மங்கையாய் இருந்தாலும் அவளின் இந்த கொள்கைகளும் அதன் மீதான பிடிப்பும் அவள் மீதான காதலை அதிகரித்திருந்தது‌ அவனுக்கு.

நங்கையும் இனி தனது வாழ்க்கை பயணம் இவனுடன் தான் என பல கனவுகள் கண்டவாறு இன்பமுடன் உலா வந்து கொண்டிருந்தாள். இன்பாவின் இந்த சற்று சுயநலமான குணநலன் கூட அவளுக்கு பெரிய குறையாய் தோன்றவில்லை. பரஸ்பரம் இருவருக்கும் ஆழ்ந்த காதல் இருந்தால் போதும், டாம் அண்ட் ஜெர்ரி போல் சண்டையிட்டு கொண்டே கூட அந்த காதலுடன் வாழ்ந்து விடலாம் என அவன் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள் நங்கை.

அவளின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என துளியும் நினைக்கவில்லை அவள். தோழர்களுடன் பேசுவதை பழகுவதை இயல்பாய் எடுத்து கொண்டவர்கள் காதலிப்பதையும் ஏற்று கொள்வார்கள் என்றே நினைத்திருந்தாள்.

முற்றிலும் எதிர்பாராத அவளது தாயின் அவதூறான பேச்சு அவளை நிலைக்குலைய வைத்திருந்தது.

“கண்டவனையும் லவ் பண்ணிட்டு திரியத்தான் பெங்களூர்லயே பிராஜக்ட் வாங்கிட்டு இருந்தியா?”

“இத்தனை நாளா எங்களை ஏமாத்திட்டு இருந்திருக்கல நீ! லவ் பண்றேன்னு அவன் கூட ஊர் ஊரா சுத்திட்டு இருக்க தானே! எந்த நல்ல குடும்பத்து பொண்ணு இப்படி செய்வா?”

“அப்படி என்ன அவசரம்! நாங்க பார்க்கிறதுக்கு முன்னாடி நீயே உனக்கு ஒருத்தனை பிடிச்சிட்டு வந்து நிக்கிற”

ஆழ்ந்த உறக்கத்தில் காதில் ரீங்காரமிட்ட இவ்வார்த்தைகளில் படக்கென எழுந்து அமர்ந்தாள் நங்கை. முகமெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது.

மணி இரவு பத்தாகி இருந்தது. பூங்காவில் தந்தையிடம் ஏதேதோ பேசி சமாதானம் செய்துவிட்டு அறைக்கு வந்தவள் அன்றைய நாளின் அதீத மன உளைச்சலில் உறங்கி போனாள்.

படுக்கையில் படுத்தவாறு கைபேசியை பார்த்து கொண்டிருந்த பிரியா, திடீரென எழும்பிய நங்கையிடம் தண்ணீரை கொடுத்து பருக செய்தவள், “என்னாச்சு? எதுவும் கெட்ட கனவு கண்டீங்களா?” எனக் கேட்டாள்.

“அம்மா! அம்மா” என தடுமாறியவள், “அம்மா நேத்து திட்டினது என் காதுக்குள்ள கேட்ட மாதிரி இருந்துச்சு” என தட்டு தடுமாறி கூறினாள்.

அவளை பார்த்து பாவமாகி போனது பிரியாவுக்கு. ‘எதுக்கு காதலிப்பானேன் இப்படி அவஸ்தைப்படுவானேன்’ எனத் தோன்றியது அவளுக்கு‌.

“நீங்க சாப்பிடாம வேற தூங்கிட்டீங்க! எழுப்பலாம்னு நினைச்சேன்! நல்லா தூங்கிட்டு இருந்தீங்க! டிஸ்டர்ப் செய்ய மனசு வரலை. காலைல டிராவல் செஞ்சி வந்த டயர்ட்ல தூங்குறீங்க போலன்னு விட்டுட்டேன்” பிரியா அவளிடம் பேசி கொண்டே, கையில் உணவு தட்டுடன் வந்தாள்.

“உங்களுக்காக சோறும் ரசமும் மட்டும் கொஞ்சமா எடுத்து வச்சேன்” அவள் கையில் திணித்தாள்.

“தேங்க்ஸ்” என்றவாறு அதனை வாங்கி உண்ட நங்கையிடம்,

“பார்க்ல இன்பா அண்ணனை பார்த்தேன்! உங்களை பார்க்க வந்திருந்தாங்களா?” எனக் கேட்டாள் பிரியா.

ஆமென தலையசைத்து நடந்ததை அவள் கூற, “ஏன் இந்த அண்ணா இப்படி செய்றாங்க! உங்கப்பாகிட்ட ஒழுங்கா பேசி நம்பிக்கை கொடுத்திருந்தா உங்க அம்மாகிட்ட அவர் பேசியிருப்பாரு தானே. இப்ப அப்பா அம்மா இரண்டு பேரையுமே நீங்க சமாளிக்கனுமே” ஆதங்கத்துடன் கேட்டாள் பிரியா.

“அதே கோபம் தான் எனக்கும் பிரியா! ஏன் அவன் அப்படி பேசாம இருந்தான்னே புரியலை! அப்பா பேச்சை கேட்டு பயந்துட்டானோ என்னவோ! இன்னும் எவ்ளோ சமாளிக்க வேண்டியது இருக்கு! இப்பவே இப்படி இருக்கானேனு கவலையா இருக்கு” மனககவலையை அவளுடன் பகிர்ந்து கொண்டாள்.

“கவலைப்படாதீங்க! எல்லாம் சரியாகிடும்” ஆறுதல் அளித்தவள் தனது படுக்கையில் படுத்து கொண்டாள்.

நங்கையும் உண்டுவிட்டு படுத்து கொள்ள, மனம் இப்பிரச்சனையிலேயே உழன்றிருந்தது. உறக்கம் வராமல் புரண்டவள் நேரத்தை பார்த்தாள்‌.

பதினொன்று ஆகியிருக்க, இந்நேரத்திற்கு ஜெர்மனியில் என்ன நேரமிருக்கும் என கணக்கிட்டவள், சுந்தருக்கு அழைப்பு விடுத்தாள்.

தனது கட்டிலில் அமர்ந்து மடிக்கணினியில் எதையோ பார்த்து கொண்டிருந்தவன், நங்கையின் அழைப்பில் கண்கள் மின்ன அழைப்பை ஏற்றவன், “ஹே பப்ளிமாஸ்! ஹன்ட்ரட் இயர்ஸ் (நூறு ஆயுசு) உனக்கு” என்றான்.

‘ஏன்டா வாழுறோம்னு நினைச்சிட்டு இருக்கும் போது, நூறு ஆயுசுனு வாழ்த்துறானே இவனை என்ன செய்ய’ மனதோடு எண்ணிக் கொண்டவளாய்,

“அவ்ளோ வருஷம்லாம் வாழனும்னு ஆசை இல்லப்பா” என்றாள் சிரித்துக் கொண்டே!

“இப்ப தான் ஒரு குட் நியூஸ் சொல்ல நானே உனக்கு கால் செய்யனும்னு நினைச்சேன். அப்புறம் டைம் பார்த்துட்டு மெசேஜ் மட்டும் செய்யலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். நீயே செஞ்சிட்ட!” என்று மிகுந்த மகிழ்வுடன் உரைத்தான்.

“அப்படி என்ன ஹேப்பி நியூஸ்” என்றவள் கேட்க,

“எனக்கு பிரோமேஷன் கிடைச்சிருக்கு நங்கை! இப்ப தான் மெயில் வந்துச்சு” என்றான்.

“வாவ் கங்கிராட்ஸ் சுந்தர்” வாழ்த்திய இவளின் குரலிலும் அதீத மகிழ்ச்சி வெளிப்பட்டது.

“சரி என்ன‌ அதிசயமா இந்நேரத்திற்கு ஃபோன் செஞ்சிருக்க? எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான்.

சுந்தருக்கு பதிலுரைக்க வாயெடுக்கும் போதே அவளது அலைபேசியில் மற்றொரு அழைப்பு வருவதை போன்ற ஒலி கேட்க, யாரென்று பார்த்தவள் இன்பாவின் எண்ணை கண்டதும் கண்டு கொள்ளாமல் சுந்தரிடம் தொடர்ந்து பேசினாள்.

“ஏன் எதுவும் பிரச்சனைனா தான் நான் பேசனுமா? இதுக்கு முன்னாடி நான் உனக்கு இந்த நேரத்துலலாம் ஃபோன் செஞ்சதே இல்லையா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் செஞ்சிருக்க! ஆனா அது ஒரு காலம்!” என்றவன் உரைக்கவும் தான், இன்பாவிடம் தான் காதலை மொழிந்து பேசிய பிறகு சுந்தரிடம் பேசுவதை குறைத்து கொண்டதை உணர்ந்தாள்.

“சாரி சுந்தர்! இன்பா” என அவள் ஏதோ கூற வரவும், “ஹே நான் இதை குறையா சொல்லலைடா! ஃப்ரண்டாவே இருந்தாலும் நான் உனக்கு உன் வாழ்க்கைக்கான ஸ்பேஸ் கொடுக்கனும் தானே. எல்லாரும் எப்பவும் ஒட்டுக்காவே பேசி சிரிச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா என்ன! சோ அதை நான் தப்பாவே எடுத்துக்கலை” தன் பக்க விளத்தினை அவன் கூறவும்,

“ஸ்டில் ஐ ஃபீல் சாரி! அதனால் நீ அக்சப்ட் செஞ்சி தான் ஆகனும்” என அவள் மல்லுக்கு நிக்க,

“சரிங்க மேடம்! அடியேன் தங்களது மன்னிப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்” என்றவன் ஏற்ற இறக்கத்துடன் கூறியதும் வாய்விட்டு சிரித்திருந்தாள்.

“இப்ப சொல்லு பப்ளிமாஸ்! என்ன பிரச்சனை? இன்பாவோட எதுவும் சண்டையா?” எனக் கேட்டான்.

அவனின் கேள்வியில் ஒரு நொடி திகைத்து அவள் அமைதியாக இருக்க, “அப்ப சண்டை தான்! என்ன பிரச்சனை? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு” என்றான்.

“இல்ல சுந்தர்! பெரிய சண்டைலாம் இல்லை! சும்மா வாக்குவாதம் தான்” என்றவள்,

“சரி அதை விடு! நீ எப்ப ட்ரீட் தர போற” அவனின் மகிழ்வான மனநிலையை கெடுக்க மனமில்லாது பேச்சை மாற்றினாள்.

“ஹ்ம்ம் ஜெர்மனி வா தரேன்! உன்னை பார்த்தே ஒரு வருஷம் கிட்ட ஆகுதுல” அவள் பேச்சை மாற்றுகிறாள் என்பதை உணர்ந்து அவனும் கேள்விகள் ஏதும் கேட்காது அவளுக்கு பதிலுரைத்தான்.

“ஏன் என் கல்யாணத்துக்கு வர மாட்டியா? எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுனா முதல் ஆளாக உனக்கு தான் சொல்வேன். லீவ் சொல்லிட்டு கிளம்பி வந்துடனும் சரியா” என்று ஆணையிட்டாள்.

இருவரும் சிறிது நேரம் சிரித்து பேசி அளவளாவியப்பின் உறங்க சென்றனர்.

மறுநாள் காலை அலுவலகத்தில் இன்பாவுடன் அமர்ந்திருந்தாள் நங்கை.

“காதல்ல வர பிரச்சனையை சமாளிக்க முடியாதவன் எதுக்குடா காதலிக்கிற? அப்படி என்ன பயம் அப்பாகிட்ட பேச?” கோபமாய் கேட்டிருந்தாள் நங்கை.

“ம்ப்ச் அது என்னமோ ஒரு மாதிரி நெர்வஸ் ஆகிடுச்சுடி! சாரி நங்கை!” அவளின் கையை அவன் பற்ற, உதறியவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், “நான் இந்த சனிக்கிழமை ஊருக்கு போய் அம்மா அப்பாகிட்ட நம்ம லவ் பத்தி சொல்றேன்” என்றான்.

“நிஜமா?” ஆர்வத்துடன் அவள் கேட்க, “சத்தியமா பேசுறேன்டி!” என்றான்.

“ஹ்ம்ம் நான் எப்படியோ நேத்து அப்பாவை சமாதானம் செஞ்சி வச்சிருக்கேன். நீ ஊருக்கு போய்ட்டு வந்துட்டு அப்பாகிட்ட பேசு. நீ நம்ம லவ்ல ஸ்ட்ராங்கா இல்லனு நினைக்கிறாரு அப்பா. அப்புறம் எப்படி அம்மாகிட்ட நம்ம லவ்க்காக பேசுவாரு. அம்மா வேற புரோகர்கிட்ட எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லிருக்காங்க. அதனால் சீக்கிரமா இரண்டு வீட்டுலயும் பேசி முடிவு செய்றது தான் சரியா இருக்கும்” என்றாள்.

“ஹ்ம்ம் கவலைபடாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்” தனக்குமாக சேர்த்தே ஆறுதல் உரைத்து கொண்டான்.

“நேத்து நைட் போன்‌ செஞ்சேன்! பிசினு வந்துச்சு” என்றவன் கேட்க, “சுந்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இருந்துச்சு” என்றவள் சொன்னதும்,

“நேத்து காலைல தானே எனக்கு முன்னாடி அவன்கிட்ட வீட்டுல என்ன சொன்னாங்கனு பேசிட்டு இருந்த” எனக் கேட்டான்.

“இல்ல லாங் கால்லா ரொம்ப நேரம் பேசி ரொம்ப மாசம் ஆகிடுச்சு. நேத்து தான் அப்படி பேசிட்டு இருந்தேன்” என்றவள் நேற்று கண்ட கனவையும் இவளின் உணர்வுகளையும் உரைத்தாள்.

“அம்மா தானே பேசினாங்க விடு! அதையே நினைச்சு நீ ஏன் இவ்ளோ ஸ்டெரஸ் எடுத்துக்கிற?” ஆறுதல் படுத்த முனைந்தான்.

“அம்மா பேசினதுனால தான் என்னால டைஜஸ்ட் பண்ண முடியாம தவிக்கிறேன் இன்பா! அவங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பேச்சை சுத்தமா நான் எதிர்பாரக்கலை” கண்களில் வலியை தேக்கி வேதனையாய் அவள் கூற,

“எல்லாம் சரியாகிடும். சரி செஞ்சிடலாம்” என்று ஆறுதல் உரைத்தான்.
அதன்‌பின் அவரவர் பணியில் மூழ்கி போயினர்.

மாலை வேளையில் அவளை தன்னுடன் அலுவலகத்தில் இருந்து அழைத்துச் சென்றான்.

“எங்கடா போறோம்” நங்கை கேட்க,

“உன்னோட ஸ்ட்ரெஸ்ஸை போக்குற இடத்துக்கு போறோம்” என்றவன் ஒரு வீட்டினில் சென்று வண்டியை நிறுத்தினான்.

“என் ஃப்ரண்ட்டோட வீடு தான் இது. அவங்க அம்மாகிட்ட பேச தான் கூட்டிட்டு வந்திருக்கேன். வா போகலாம்” என அழைத்து சென்றான்.

இவர்களை வரவேற்று பேசிய சிந்தாமணி, இருவரையும் அந்த வீட்டின் உள்ளேயே சிறிய கிளினிக் போன்று இருந்த அறைக்குள் அழைத்து சென்றார்.

“சொல்லுமா என்ன ஸ்ட்ரஸ் உனக்கு?” தனது இருக்கையில் அமர்ந்தவாறு கேட்டார் சிந்தாமணி.

இவள் அந்த இடத்தினையும் அவரையும் புரியாது பார்த்தவள், அங்கிருந்த எழுத்து அட்டையில் சைக்காட்ரிஸ்ட் டாக்டர் சிந்தாமணி என்றிருந்ததை பார்த்து இன்பாவை முறைத்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்த சிந்தாமணி, “இன்பா சும்மா உன்னோட மனநிலை மாத்த தான்மா இங்க கூட்டிட்டு வந்திருக்கான். நேத்து நீ மயக்கம் போட்டது, கனவு கண்டது, சரியா சாப்பிடாம இருக்கிறதுனு எல்லாத்தையும் சொன்னான்‌. உன்னை எப்படி நார்மல் ஆக்கனு கேட்டான். நான் தான் எனக்கு ஒரு பேஷன்ட் கிடைச்சிருச்சுனு உன்னை கூட்டிட்டு வர சொன்னேன்” எனக் கேலியாகவே ஆரம்பித்தார்.

அவரின் பேச்சில் சிரித்தவளாய், அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தாள். அவர்களின் காதலையும் வீட்டின் எதிர்ப்பினையும் விளக்கி கூறினாள்.

அதற்கு தேவையான கவுன்சிலிங்கை அளித்த சிந்தாமணி அவளுக்கு சில தூக்க மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.

அன்றிரவு இன்பாவின் இச்செயலை பிரியாவிடம் நங்கை மகிழ்வாக கூற, “பரவாயில்லையே! நேத்து உங்க அப்பாகிட்ட ஒழுங்கா பேசாம இருந்ததும் நானுமே இவர் உங்க லவ்ல ஸ்ட்ராங்கா இல்லையோனு நினைச்சேன். ஆனா இப்ப உங்க மேல இருக்க அக்கறைல தானே இதெல்லாம் செய்றாருனு அவர் காதலை புரிய வச்சிட்டாரு” என்றாள் பிரியா.

அவளின் இந்த பதிலில், “ஒரு வேளை அப்பாகிட்ட இவன் பேசாததை வச்சி அவன் காதலை நான் சந்தேகப்படுவேன்னு நினைச்சி அதை நிரூபிக்கனு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனானா? என் மேல இருக்க உண்மையான அக்கறையில கூட்டிட்டு போகலையா?” என்ற கேள்வி எழ,

“ச்சே என்ன நானே அவன் என் மேல வச்சிருக்க காதலை சந்தேகப்படுற மாதிரி யோசிக்கிறேன்” என தலையை உலுக்கியவளாய் அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.

ஆனால் அடுத்தும் அவளது சந்தேகத்தினை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அவனின் செயல்கள் இருக்கப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை.