நனிமதுர நங்கை 1

“கெட்டிமேளம்! கெட்டி மேளம்” நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்க கல்யாணியின் கழுத்தில் மங்கல நாணை பூட்டி அவளின் மணாளனாகி இருந்தான் கருணாகரன்.

சுந்தரம் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு கல்யாணி. மதுரையில் புகழ்ப் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஹோம் அப்ளையன்ஸஸ் கடையின் உரிமையாளரான சுந்தரேஸ்வரனின் ஒரே தங்கையான கல்யாணிக்கு மதுரையில் இருந்த அந்த பெரிய மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று கொண்டிருந்தது.

பூரித்த மனநிலையில் நெகிழ்வுடன் கணவனின் தாய் தந்தையரிடமும், அவளின் தாய் அகல்யாவிடமும் ஆசிர்வாதம் வாங்கியவள், அண்ணன் சுந்தரேஸ்வரன் மற்றும் அண்ணி மீனாட்சியிடம் ஆசிர்வாதம் வாங்க குனிய, அவர்களை தடுத்து நிறுத்திய ஈஸ்வரன், “தீர்க்க சுமங்கலியா இருப்படா கல்லுமா” என பூக்களை தூவி வாழ்த்தினான்.

“எப்பவும் இதே போல தம்பதியா சந்தோஷமா இருக்கனும்” என கல்யாணியின் கன்னம் வழித்து வாழ்த்தினாள் மீனாட்சி.

அடுத்து கல்யாணி தனது கணவன் கருணாகரனுடன் நமது நாயகன் சுந்தரராஜனிடம் வந்து நின்றாள்.

அவனின் காலில் விழுந்து வணங்க இவள் முற்பட, அவளின் கைப்பிடித்து தடுத்தவன், உச்சந்தலையில் கை வைத்து, “நல்லா இருப்படா ஆணிமா” என கண்கள் கலங்க உரைத்தான்.

சுந்தரேஸ்வரன் மற்றும் அகல்யாவின் கண்களும் குளமாகின.

“ஏன் இன்னும் கத்தி கடுப்பாறைனு கூப்பிட வேண்டியது தானே! செல்லப்பேரு வச்சிருக்காங்க பார்த்தீங்களா கருணா இரண்டு பேரும்! கல்லு ஆணினு” என வழமைப்போல் கூறி கல்யாணி முகத்தை சுளிக்க,

கண்களில் ஆனந்த கண்ணீரோடு சிரித்திருந்தனர் அனைவரும்.

சுந்தரராஜன் கல்யாணியின் சித்தப்பா மகனாக இருப்பினும், உடன் பிறந்த அண்ணனான சுந்தரேஸ்வரனை விட அதீத அன்பை ராஜன் மீது தான் வைத்திருந்தாள். ஈஸ்வரனுமே இவர்களின் பாசத்தை அறிவான்‌. ராஜனுக்கு செல்லமான தங்கை அவள்.

எட்டு மாத கர்ப்பவதியாக இருந்த மீனாட்சியை திருமண நிகழ்வுகளில் கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டான் ஈஸ்வரன் (சுந்தரேஸ்வரன்).

திருமண சடங்குகள் முடிந்து மாப்பிள்ளையின் வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைக்கும் பொழுதே கண்கள் கரித்து கொண்டு வந்தது கல்யாணிக்கு.

இரு அண்ணன்களும் ஆறுதல் மொழிந்து அனுப்பி வைத்தனர்.

மாலை பொழுதில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல, கல்யாணி இவர்கள் அனைவருடனும் அரட்டை அடிக்க அமர்ந்து கொண்டாள்.

மீனாட்சியின் மாமன் மகளான அன்னமும், மீனாட்சியின் தாய் வழி ஆச்சி சிவகாமியும் இங்கு வந்திருந்தார்கள்.

சுந்தரராஜனின் பால்ய தோழனான தீரனும் தனது மனைவி மகனுடன் வந்திருந்தான்.

அனைவரும் அந்த வீட்டின் தோட்டத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து ஒரே இடத்தில் வளைவாய் அனைவரின் முகத்தையும் பார்க்குமாறு போட்டு அமர்ந்திருந்தனர்.

“அப்புறம் அன்னம் காலேஜ் எப்படி போகுது!” எனக் கேட்டாள் கல்யாணி.

“நல்லா போகுது அக்கா! ராஜா அண்ணா (சுந்தரராஜன்) தான் அந்த காலேஜ் அண்ட் கோர்ஸ் செலக்ட் செஞ்சி கொடுத்தாங்க. எனக்கு ஐடி வேலை பார்க்கனும்னு தான் ஆசைனு மீனுக்கிட்ட சொன்னதும், அவ தான் ராஜா அண்ணா ஐடில டீம் லீட்டா தானே இருக்காரு! என்னை விட அவரு நல்லா கைட் பண்ணுவாரு! அவருக்கு கீழே ஒரே கம்பெனில வேலை செய்யும் போது மீனாட்சிக்கு நல்லா கைட் செஞ்சாருனு சொல்லி ரெக்கமெண்ட் பண்ணா அக்கா” என்றாள்.

ராஜன் அன்னத்தின் பதிலில் அவளை பார்த்து மென்னகை புரிந்தான்.

“அடுத்து சீக்கிரம் ராஜா அண்ணாக்கு பொண்ணு பார்த்துடுங்க‌. அப்ப தான் இதை சாக்கா வச்சி நான் காலேஜ் லீவ் போட முடியும்” என அன்னம் விளையாட்டாய் உரைக்க,

“நீ லீவ் போட நான் பலிகடா ஆகனுமா அன்னம்” என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு ராஜன் கூற, அனைவருமே சிரித்திருந்தனர்.

“சரி நாங்க பார்க்கிற பொண்ணுக்கிட்ட நீ பலிகிடா ஆக வேண்டாம். நீ பார்த்திருக்க பொண்ணு யாருன்னாவது சொல்லிட்டீனா எங்களுக்கு பேச வசதியா இருக்கும்ல ராஜா” என தீரனும் தனது நண்பனை வாரிவிட,

“ராஜா அண்ணா! லவ் பண்றீங்களா? யாரந்த பொண்ணு” என ஆவலாய் கேட்டாள் அன்னம்.

‘இவ வாய் அடங்குதா பாரு! அந்த பையனை வம்பிழுத்துட்டு இருக்கா’ என அன்னத்தை முறைத்தவாறு மீனாட்சியின் காதில் உரைத்திருந்தார் ஆச்சி சிவகாமி.

“அது தெரிஞ்சா இந்நேரம் கட்டி வச்சிருக்க மாட்டோமா” என ஈஸ்வரன் இப்பொழுது கேலியாய் உரைக்க,

‘ஆமா அப்படியே தம்பி மேல் அக்கறை தான்’ என வாய்க்குள் முணங்கியவாறு ஈஸ்வரனை முறைத்த ராஜன்,

“அப்படிலாம் எதுவுமில்லை அன்னம்! அவங்க என்னை சும்மா கலாய்க்கிறாங்க” என்றான்.

“அன்னம்! அண்ணா பொய் சொல்றாங்க! அந்த பொண்ணுக்கு அண்ணனை தெரியும் ஆனா அண்ணன் லவ் பண்றது அந்த பொண்ணுக்கே தெரியாது” என சிரித்த கல்யாணி,

“யாரந்த பொண்ணுன்னு கண்டுப்பிடிக்கிறது தான் என்னோட அடுத்த முக்கியமான வேலையே” என முடித்தாள்.

“இந்த நல்ல காரியத்துல நானும் பங்கு பெறனும்னு என் மனசு பிராண்டுது கல்யாணிக்கா! என் சேவை உங்களுக்கு தேவைனு தோணுச்சுனா உடனே கான்டாக்ட் செய்யுங்கள் ‘அன்னம் மேரேஜ் அசம்ப்ளர் சர்வீசஸ்'” என அவள் கூறி முடிக்கவும், ஆச்சி அவளின் தலையில் கொட்டவும் சரியாக இருந்தது.

“ஆஆஆஆ ஆச்சி” என தலையை தடவியவாறு அவள் ஆச்சியை பார்க்க, அனைவரும் சிரித்திருக்க,

“அடுத்தடுத்து நிறைய சடங்கு இருக்கு! கல்யாண பொண்ணை இங்கன உட்கார வச்சிருக்கீங்க” என்றவாறு மணமகன் வீட்டிலுள்ள உறவினர் வந்து கூறவும் அனைவரும் கலைந்து சென்றனர்.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பும் சமயம் சோர்ந்த மனதினை இழுத்து பிடித்து சிரித்தவாறு பேசியே வழியனுப்பினாள் கல்யாணி.

ராஜனிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்த கல்யாணி, “அண்ணா, யாரந்த பொண்ணு? என்கிட்ட சொல்லு! பொண்ணுக்கிட்டயே கூட நானே பேசுறேன்” பாசமாய் அவள் கேட்க,

“அப்படிலாம் எதுவும் இல்லடா ஆணிமா! தீரா ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டு இருக்கான்! நானும் சும்மா அவனை வெறுப்பேத்த ஆமாம்னு சொல்லி வைப்பேன்” என்றான் ராஜன்.

ராஜன் இயல்பாய் கூறுவது போல் தோன்றினாலும், ஏதோ சரியில்லை என அவனின் இறுக்கமான பாவனையில் உணர்ந்த கல்யாணி,

“ஓ அப்ப நான் எந்த பொண்ணை பார்த்தாலும் கல்யாணம் செஞ்சிப்பியா?” எனக் கேட்டாள்.

“என் தங்கச்சி எனக்காக பார்க்கிற பொண்ணை நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன்” என இவன் அவளின் கன்னம் கிள்ள,

அவனின் கையை தட்டி விட்டவள், “அப்புறம் பேச்சு மாற கூடாதுண்ணா! நான் பெங்களூருக்கு போய் செட்டில் ஆனதும் செய்ற முதல் வேலை உனக்கு பொண்ணு பார்க்கிறதா தான் இருக்கும்” என்றாள்.

“டேய் ஆணிமா! முதல்ல உன் வாழ்க்கையை பாருடா! உனக்கு குழந்தை பிறக்கட்டும்! அப்புறம் என் வாழ்க்கையை பத்தி யோசிக்கலாம்” என அவன் கூறி முடிக்கும் முன்பே,

“இன்னும் எப்புறமா கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்க! இந்த வருஷம் பிறந்தநாள் வந்தா முப்பது வயசு ஆகிடும் உனக்கு” என கோபமாய் இடையிட்டாள்.

தாயளவு தன் மீது பாசம் வைத்திருக்கும் தங்கையை எண்ணி மனம் நெகிழ்ந்தது.

அவளின் கோபத்தை ரசித்தவாறு சிரித்தவன், “சரி உன் விருப்பம்! இதை எல்லாம் நினைச்சிட்டு மனசை போட்டு குழப்பிட்டு புகுந்த வீட்டாளுங்களை கவனிக்காம விட்டுடாத” என அவளின் உச்சந்தலையில் கை வைத்து அவன் ஆட்ட,

“அதெல்லாம் பர்ஃபெக்ட்டா செய்வா உன் தங்கச்சி! நீ எதுவும் மனசை போட்டு குழப்பிக்காம நிம்மதியா தூங்கு” என அவனை அனுப்பி வைத்தாள்.

அகல்யா மற்றும் சுந்தரேஸ்வரன் மீனாட்சியும் அவர்களின் வீட்டிற்கு செல்ல, சுந்தரராஜன் தனது வீட்டிற்கு சென்றான்.

அவன் வீட்டினுள் நுழையும் போதே புலம்ப ஆரம்பித்து விட்டார் அவனின் அன்னை செல்வாம்பிகை.

“எங்களை மதிக்காம கூப்பிடாம அவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் செஞ்சிருக்காங்க! நீ அதை கண்டுக்காம அண்ணன் சீர் செஞ்சி குதூகலமா கலந்துக்கிட்டு வந்திருக்க! உனக்கு மானம் ரோஷம்னு எதுவும் இல்லையா” என கோபத்தில் ஆங்காரமாய் மகனிடம் அவர் பேச,

“உங்க பையன் உங்களை மாதிரி தானேம்மா இருப்பேன். மானம் ரோஷம்லாம் இருந்திருந்தா இந்த வீட்டுல மூனு வேலை சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருப்பேனா” என மிக அமைதியாய் தாயிடம் உரைத்தவன், தனது அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்.

“பார்த்தீங்களா! அவன் பேசினதை கேட்டீங்களா! அந்த குடும்பத்துல யாரும் நம்மளை மதிக்கவே மாட்டேங்குறாங்க! இவன் அவங்ககூட போய் கூடி குலாவிட்டு வரான். நம்ம அந்தஸ்து கௌரவம் என்னாகுறது! கேள்வி கேட்டா நமக்கு மானம் ரோஷம் இல்லனு சொல்றான்” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கணவனிடம் கோபமாய் உரைத்தார் செல்வாம்பிகை.

“அவனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சி, என் அண்ணன் குடும்பத்தோட அவனுக்கு இருக்க ஒட்டு உறவு மொத்தத்தையும் அறுக்கனும்” என்று ராஜனின் தந்தை வேங்கடசுந்தரம் அவனறையின் மீது அழுத்தமாய் பார்வையை பதித்தவாறு கூற,

“ஆமாங்க நம்ம சொல் பேச்சு கேட்குற பொண்ணா பார்த்து தான் இவனுக்கு கட்டி வைக்கனும். அப்ப தான் இவனை நம்ப கைக்குள்ள கொண்டு வர முடியும்” என அவரின் யோசனைக்கு ஒத்து ஊதினார் செல்வாம்பிகை.

இவர்களின் பேச்சு காதில் விழாத வண்ணம், காதில் ஒலிவாங்கியை மாட்டிவிட்டு கைபேசியில் பாடலை இயக்கிய சுந்தரராஜன் மெத்தையில் படுத்திருந்தான்.

கல்யாணி அவனிடம் பேசிய வார்த்தைகளை மூளை நினைவுக்கூற, ‘அவளை மறந்துட்டியா நீ? அவளில்லாம வேற ஒரு பொண்ணை கட்டிக்கிட்டு உன்னால சந்தோஷமா வாழ முடியுமா?” என மனசாட்சி கேள்வி எழுப்பியது.

காதில் ஒலித்து கொண்டிருந்த பாடல்களில் துளியேனும் மனம் லயிக்காமல் இக்கேள்வியினில் வந்து நிற்க, ‘அவளை எப்படி மறக்க முடியும்! எனக்காக யாருமே இல்லாதப்போ, நானிருக்கேன்னு எனக்காக இருந்தவ அவ தானே’ என்று நினைத்தவனின் மனமோ மறுகணம்,

‘மறந்து தானே ஆகனும்! இன்னொரு ஏமாற்றத்தை தாங்குற சக்தி அவளுக்கு இல்லை! அவளை தொந்தரவு செய்ற எண்ணமும் எனக்கு இல்லை! வேற வழி இல்லை கல்யாணி சொல்ற பொண்ணை கட்டிக்கிட்டு தான் ஆகனும்’ என தன்னை தானே தேற்றி கொண்டிருந்தவனின் காதில் ஒலித்த அந்த பாடலில் அவனையும் மீறி கண்ணீர் பொங்கி காதினோரமாய் வழிந்து சென்றது.

நங்காய் நிலாவின் தங்காய்

ஜெர்மனியில் கிளையண்ட் இவளை நங்கை என அழைக்க வராது நங்காய் என அழைப்பதை பார்த்து அவளை இவன் கிண்டல் செய்யும் இப்பாடலை கேட்டதும் அன்றைய நாட்களின் நினைவினில் மனம் கனத்து போனது.

முதன் முதலாய் காதல் எனும் உணர்வை அவனுள் விதைத்தவள். ஆழமாய் அவ்வுணர்வை ரசித்து உணர்ந்து வாழ்ந்த அந்நாட்களை அசைப்போட்டது உள்ளம். எண்ணும் பொழுதில் எல்லாம் பனிக் கூழாய் மனம் குளுமையாவது போல் இப்பொழுதும் சிலிர்த்தது நெஞ்சம்.

எட்டு வருடங்களுக்கு முன்பு, ஜெர்மனியில் நங்கையை முதன் முதலாய் அவன் கண்ட நாளுக்கு பயணித்தன அவனின் நினைவுகள்.