தேன் மழையிலே – 5

தேன் மழையிலே
ஆர்த்தி ரவி

அத்தியாயம் 05:

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ…

காதல்… காதல்… காதல்! என்னவொரு உணர்வு! புதிதாகத் தோன்றி விட்ட காதலில் சற்று அதிகமாக லயித்துவிட்டான் ஹரி.

சும்மா இணையத்தில் பார்த்த இரண்டு புகைப்படங்களில் மனம் தடுமாறி விடுமா என்ன? அதுவும் முப்பது வயதைத் தாண்டிய நிலையில்? தடுமாறி தான் விட்டது இங்கே.

உணர்வு என்பது உள்ளம் சார்ந்ததல்லவா? அதிலும் மெல்லிய உணர்வுகளில் முதன்மைப்பூ இந்தக் காதல்.

ஓர் ஈர்ப்பு சக்தியே காதலுக்கு முதல் புள்ளி என்றாலும் யாரின் பால் ஈர்ப்பு எழுகிறது, எப்போது, ஏன், எதற்காக? இதற்கான விடையை எளிய வார்த்தைகளில் சொல்லி விட முடியுமா?

பல கடினமான பரீட்சைகளை எளிதாகக் கடந்தவன் தான் மருத்துவர் ஹரி கிருஷ்ணன். அவனுள் தேன்மொழியிடம் வந்திருக்கும் இந்த ஈர்ப்பு எப்படி, ஏன் வந்தது எனக் கேட்டால் விடையில்லை.

அட்ராக்‌ஷன் எப்படி வேணும் என்றாலும், எந்த நிலையிலும் தொடங்கியிருக்கலாம்.

‘யோசித்துப் பார்த்து, மூளையின் அலசல்களுக்குப் பிறகு எடுக்கும் முடிவிற்கு காதல் எனப் பெயரிடவா முடியும்? பார்த்ததும் பிடிச்சிருச்சு. இதற்கு பெயர் தான் காதல்ன்னா, எஸ் ஐ’ம் இன் லவ். இவள் என் மனைவி ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.’

ஹரியின் நெஞ்சம் இதைத்தான் அவனிடம் சொன்னது.

பார்த்ததும் கவுத்துட்டாளே சுகர் பேபி. எந்தப் பொருத்தமும் பார்க்க வேண்டாம் என்று தன் பெற்றோரிடம் சொல்லத் தோன்றியது. ஆனால், அது சாத்தியப்படாது என்றும் தெரியும்.

தன் வீடு, அங்குள்ள ஆட்கள், அவர்களின் எண்ணப்போக்கு என்னவென்பதை நன்றாக அறிந்தவன் ஹரி. ஏற்கெனவே அம்மாவிடம் சில விசயங்களுக்கு ஒப்புக் கொண்டிருந்தான். அதை எக்காரணம் கொண்டும் மாற்ற விரும்பாமல், மகன் என்னும் கடமைக்குக் கட்டுப்பட்டவனாக இருந்தான்.

அவனுடைய நல்லவேளையோ என்னவோ, தேன்மொழியின் ஜாதகமும் அவனுடையதும் பொருத்தமாக இருக்கிறது என்று அன்றே தெரிந்து விட்டது. இனி எந்தக் கவலையோ தடையோ இல்லை என்று ஹரி நினைத்துக் கொண்டிருந்தான்.

அவன் அறியாத விசயம் ஒன்றும் இருக்கிறது. அதனால் எழப் போகும் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் பற்றிய எந்தவொரு அறிகுறியையும் ஹரி அறியவில்லை.

இனி தங்கள் பக்கம் தடையேதும் இல்லை என்கிற இறுமாப்புடன் இதய நிபுணனின் இதயம் உல்லாசமாக உலாப்போய்க் கொண்டிருந்தது.

இது காதல் என்று உணர்ந்த நொடியிலிருந்து ஹரியின் இதயம் கனிந்து, ரசகுல்லாவின் இனிமை கொண்டு ரசாயன மாற்றங்களுக்கு வித்திட்டுவிட்டது.

இனி இந்நிலையிலிருந்து அவன் பின்வாங்கப் போவதில்லை என்ற எண்ணம் தான் அவனுக்கு. ஆனால், அந்த ஒரு விசயம் அவன் பக்கமிருந்து பெரிய தடையைக் கொண்டு வரப் போகிறது.

அதைத் தாண்டியும் சந்திக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதையும் தற்சமயம் அவன் அறிந்திருக்கவில்லை.

அவனின் இதயத்தின் உல்லாசம் விரைவிலேயே சிதறியடிக்கப்படவிருக்கிறது. அப்போது ஹரியின் அதிரடி ஆக்‌ஷன்(!?) என்னவாக இருக்கப் போகிறது?

சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளேயே வந்திருந்தான் ஹரி. அந்த நள்ளிரவிலும் பரபரவென இயங்கி கொண்டிருந்தது விமான நிலையம்.

அங்கே காணப்பட்ட மக்களிடையே எத்தனை எத்தனை விதமான உணர்வுகள்? ஆவல், மகிழ்ச்சி, குதூகலம், நிம்மதி, எரிச்சல், பிரிவு துயரம், அழுகை, ஏக்கம், சோகம் என அப்பப்பா!

ஒரு மென் முறுவல் இதழ்களில் தோன்றியது ஹரியிடம். அந்த இடம் முழுவதும் உணர்வுகளின் கலவைக்கூடம் என்று அவனுக்குத் தோன்றியது.

கண்களை இங்கும் அங்கும் சுழல விட்டிருந்தான். பல விதமான உணர்வுகளை உள்வாங்கியபடி நின்றிருந்தவனின் தோளில் சொத்தென ஓர் அடி விழுந்தது.

சுர்ரென்று வலி எழும் போதே தன்னை அடித்தது யார் என ஹரிக்குத் தெரிந்துவிட்டது.

“ரிஷீ…ஈ டேய்…ய்!”

மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் சற்று முன்னர் தரையிறங்கி இருந்தது. ரிஷியும் வெளியே வந்து விட்டான். அவன் வந்ததைக் கூட ஹரி கவனிக்காமல் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் வந்ததைக் கூடக் கவனிக்காமல் அப்படி என்னத்த பார்த்திட்டு இருக்கடா? நின்னுட்டே ஆல்ஃப்ஸ்ல டூயட்டா இல்லை பகாமாஸ்ல அண்டர் வாட்டர் முத்தங்களா? உன் கனவுலகத்தில் இருந்து முழிச்சுக்கோ.”

அந்தப் பின்னிரவு நேரத்திலும் நண்பர்கள் இருவரும் புத்துணர்வுடன் மட்டுமின்றி ஃபுல் ஃபார்மில் இருக்க, கலாட்டா கிண்டல் என்று தொடங்கியது. இருவரும் சிரிப்புடன் தழுவி விலகினர்.

“என்னது? கனவுன்னாலும் டூயட்டும் கிஸ்ஸும் எப்படி இங்க இப்படியொரு கசகசப்புல வரும்? வாடா வா. இன்னைக்குப் பூராவும் ஒரு மார்கமாவே பேசிட்டு இருக்க நீ! நடு ராத்திரி வந்திறங்கிட்டு வந்ததும் நக்கல் வேற!”

“ஒரு மார்க்கமா தெரியுறது நீயா இல்லை நானாடா? உல்டாவா சொல்லிட்டிருக்க மவனே! இதெல்லாம் உனக்கு நக்கல்ல சேர்த்தியா என்ன?”

“நான் இந்த ஆட்டத்துக்கே வரலை… டோட்டல் சரண்டர்!” இரண்டு கைகளையும் உயர்த்தி ஹரி சிரிக்க…

“அது!” ரிஷியின் குரல் மிரட்டல் தூவி வந்தாலும் கண்களில் சிரிப்புத் தெரித்தது.

“அப்புறம் சொல்லு… அனு எப்படி இருக்காங்க? ரிஷப் குட்டி எப்படி இருக்கான். என்ன பண்றான்?”

“ரெண்டு பேரும் பைன்டா. ரிஷப் வீடியோஸ் மொபைல்ல இருக்கு. அப்புறம் காட்டறேன் பாரு. நல்லா வளர்ந்துட்டான்.”

“ஓ சூப்பர்! ஆள் மட்டும் தான் வளர்ந்திருக்கானா… அவன் சேட்டைகள் குறைஞ்சிருக்கா இல்லை இன்னும் பாம்பே வானரமா தாவிக்கிட்டு இருக்கானா?”

“அடிங்க! சந்தடி சாக்குல என் மகனை வானரம்னு சொல்றியா? அனு காதுல மட்டும் இது விழுந்தது, என்னை உன் கூட சேர விட மாட்டாள்.”

“த்ச்சோ அய்யோ பாவம்… உன் பொண்டாட்டி நம்ம பிரண்ட்ஷிப்பை கட் பண்ண நீ ஸ்கூல் கிட் பாரு! போடாங்… நீ சின்ன வயசுல ஒரு சென்னை வானரமா இருந்த. அந்த நெனப்புல நீ பெத்தவனை வானரம்னுட்டேன். இது ஒரு குத்தமா மை லார்ட்?”

“நீ என் நண்பன் ஹரி தானே? இல்லை எனக்குத் தெரியாம ஹரிக்கு டுவின் இருக்கா? கணபதி பப்பா… இவனா ஹரி? இந்த நடு ராத்திரியிலேயும் இந்தப் பேச்சுப் பேசுறானே!”

“இதுக்கெல்லாமா இந்நேரம் மும்பாய்ல ரெஸ் எடுத்திட்டு இருக்கிற கணபதி பப்பாவ டிஸ்டர்ப் பண்ணுவ ரிஷி? நாம வீட்டுக்குப் போற வழியிலே இருக்கிற ஃபிஃப்த் கிராஸ் பிள்ளையாரண்ட கேட்டால், உன் சந்தேகத்தை க்ளியர் பண்ணிட்டுப் போறாரு.”

“ஹாஹ்ஹாஹ்ஹா…”

மூச்சு விடாமல் இருவரும் சிரித்து ஓய்ந்தனர். ஹரி கிருஷ்ணன் ஜாலியான பேர்வழி தான். இருந்தாலும் ரிஷி கண்ணனுக்கு நண்பன் இன்று இன்னுமே அதிகம் பேசுவதும் சிரிப்பதுமாகப்பட்டது.

“டேய் நீ என் ஃபேமிலியை பற்றி விசாரிச்சது போதும். இப்ப உன் மேட்டருக்கு வா… நான் எதிர்பார்க்கவே இல்லை ஹரி. நீ தானா இதுன்னு இருக்குடா. அதெப்படிடா, ஒன் நெனப்பு ஒன் நெனப்பு பேபி.. செம!”

இப்போது ஹரியின் தோளில் நறுக்கென ஒரு கிள்ளு கிள்ளி வைத்தான்.

“ஸ்ஸ்.. விடுடா! வந்ததும் வராததுமாக ஆரம்பிச்சிட்டியா உன் வன்முறையை?”

“சரி சரி விட்டுட்டேன். அந்த லக்கி பேபி யாரு? பெயர், ஊர், எங்கே, எப்போ பார்த்த எல்லாம் சொல்லு.”

மிகவும் ஆவலாகிப் போய்ப் படபடத்த ரிஷியைக் கண்டு ஹரிக்குச் சிரிப்பு வந்தது. நண்பனின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அவன் தோள் பையை வாங்கிக் கொண்டு வெளி வாசல் தாண்டி நடந்தான் ஹரி.

தன் சிறிய டிராலி கேஸுடன் பின்னாடி விரைந்த ரிஷி,

“டேய்! பெயரைக் கூடச் சொல்லாமல் காலைல இருந்து இப்படிக் கடுப்படிக்கிற.” என்று முறைத்தான்.

“தேன்மொழி.”

சுகர் பேபியின் பெயர் ஹரியின் இதழ்களில் மென்மையாக மலர்ந்து, தேனினும் இனிதாக ஒலிக்க, நண்பனின் நெஞ்சம் ரசனையில் தொலைந்து கனிந்ததைப் பார்த்திருந்த ரிஷிக்கும் சந்தோஷம் பொங்கியது.

“நல்ல அழகான தமிழ் பெயர் ஹரி. மற்ற டீடெயில்ஸ் சொல்லுடா?” ஆர்வமாக ரிஷி கேட்டுக் கொண்டிருந்தான்.

“மார்னிங் எழரைக்கே நம்ம ஹாஸ்பிடல்ல இருக்கணும். கொஞ்ச நேரமாவது நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? வாடா, மத்ததெல்லாம் காருக்கு போய்ப் பேசிக்கலாம். பேஷண்ட் கேஸ் ஷீட் பார்த்துட்ட தானே? மறுபடியும் ஈவ்னிங் அப்டேட் பண்ணினேனே.”

“எல்லாம் பார்த்துட்டேன்டா. நோ இஸ்யூஸ். இன்னைக்கு நம்ம ஃபிக்ஸ் பண்ணியிருக்க அதே நேரத்திலேயே சர்ஜரி பண்ணீர்லாம்.”

ஹரி கிருஷ்ணன் இரண்டடி முன்னால் போக, ரிஷி கண்ணாவும் அவன் பின்னே கார் பார்க்கிங் இருக்கும் திசை நோக்கி திரும்பினான். அந்த நேரம் ரிஷியின் காலில் நங்கென்று ஏதோ மோதியது.

‘ஸ்ஆ…’, எனச் சத்தமாக வலியை வெளிப்படுத்தியவன் குனிந்து என்ன அது என்று பார்த்தான். ஒரு பெரிய சைஸ் ஹார்ட் (hard) லக்கேஜ் வந்து அவனுடைய முட்டிக்குக் கீழ் முட்டிக் கொண்டு நின்றிருந்தது.

தன்னை வழியனுப்ப வந்தவருக்குக் கையாட்டி விட்டு, திரும்பிப் பார்த்தபடி கவனக்குறைவுடன் வேகமாக வந்தாள் ஒரு பெண். அவளுடைய பெட்டி தான் நடை பாதையின் ஏற்றத்தில் ஒரு சிறு கல் இடறி ரிஷியின் காலில் மோதியிருந்தது.

மோதிய வேகத்தில் பெட்டியின் இழுப்புக் கைப்பிடியில் மாட்டிக்கொண்டு, பெட்டி மீது வீற்றிருந்த அவளின் பேக்பாக் தூரப் போய் விழுந்திருந்தது.

அதைப் பார்த்ததும் பதற்றம் அடைந்தாள். எதை முதலில் பார்ப்பது எனத் திண்டாடிப் போனாள்.

அந்த பேக்பாக்கில் மடிக்கணினி போன்ற முக்கியப் பொருட்களை வைத்திருந்தாள். ‘அச்சோ போச்சு!’ அவை என்னவாகியிருக்கும் என்கிற பதற்றத்தில் கண்களில் கவலை அப்பிக் கொண்டது.

சுற்றுப்புறத்தை அவதானிக்காமல் தன் பொருட்கள் மீது மட்டும் கண் வைத்து, ரிஷியை நிமிர்ந்து பாராமலே, “சாரி, ரொம்ப சாரி சார்! ஒன் மினிட் பெட்டியை பார்த்துக்கோங்க ப்ளீஸ்! இதோ வந்திர்றேன்.” என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

சரி என்று அவளுக்குப் பதில் கூறியபடியே நிமிர்ந்தவன், அவளைப் பார்த்த உடனே அதிர்ந்து போனான். அவள் யாரென்று அவனுக்குத் தெரியும். பார்த்த வினாடியிலேயே அடையாளம் கண்டு கொண்டான்.

எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் மறந்து போகுமா அவளைச் சார்ந்த ஞாபகங்கள்? நினைவு பெட்டகத்தில் மங்காத பளிச் பக்கத்தின் ஓர் அங்கமாக வீற்றிருந்தன.

அந்த ஒரு நாளின் நினைவே அவனின் நெஞ்சத்தில் ஒரு கலவையான உணர்வு குவியலை உண்டாக்கியது. கஷ்டம், வருத்தம், இரக்கம், பெருமிதம், ஆவல், மலர்ச்சி எனச் சிக்கிய நிலை!

அவளின் பின்பு பார்வையைப் பதித்தபடி அந்தப் பெரிய பெட்டியை ஓர் ஓரமாக நகர்த்தி வைத்தான். அந்த நேரம் ஹரியை மறந்தே போனான்.

முன்னே சிறுது தூரம் சென்றுவிட்டிருந்த ஹரி கிருஷ்ணன் ரிஷிக்காக திரும்பிப் பார்க்க, அவனோ பல அடிகள் பின்னால் தேங்கி இருந்தான்.

‘ஏன் என்னாச்சு இவனுக்கு?’ என்று பார்க்கவும் செய்ய, அவன் நின்றிருந்த இடத்திலிருந்து என்ன ஏதென்று சரியாகத் தெரியவில்லை.

சரி பக்கதில் போயே பார்க்கலாம் என்று நினைத்த ஹரி, வேக எட்டுகளுடன் வந்த வழியே திரும்பி விரைந்து செல்ல, அத்தனை வேகமும் அங்கிருந்தவளைக் கண்டதும் பிரேக் போட்டது போல் காணாமல் போனது.

அந்த இடத்தில் அப்படியே திகைப்பில் உறைந்து நின்று விட்டான். தான் காண்பது கனவா இல்லை நிஜம் தானா? கண்ணெதிரே நின்றிருப்பவளை நம்ப இயலாதவனாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

குனிந்து தன் உடைமைகளின் பத்திரம் பார்த்து நிமிர்ந்தவளின் முகத்தில் சிறு கவலை தோன்றியது… அச்சோ என்ற உதட்டுச் சுழிப்பு!

அவளுக்கு வெகு அருகில் நெருங்கியிருந்த ஹரியின் பார்வையில் அனைத்தும் துல்லியமாகப்பட்டது.

லேசர் கதிர்கள் மின்ன அந்த முதல் பார்வையின் தோற்றத்தை உள்வாங்கி, தன் விழி வழியே இதயத்திற்குள் ரசனையுடன் பதுக்கினான்.

“தேன்மொழி! வாவ்! வாட் எ சர்ப்ரைஸ்! ஹூர்ரே! ஹூஹூ!”

எம்பி எம்பி துள்ளி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ஹரியின் மனதின் சந்தோஷம், அவன் உதடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

எதிர்பார்க்கவில்லை
உன்னைக் காண்பேன் என்று,
எதிரில் நிற்கிறாய்!

சர்க்கரைப் பெண்ணைக் கண்டதும்
வேலை நிறுத்தம் செய்யத்
துடிக்கின்ற இமைகள்!

விழி மணிகளோ
விதியை மீறி மொய்க்கின்றன
ஈயாகவே மாறி!

முணுமுணுக்கவெல்லாம் இல்லை. அவளுக்குத் தன்னைத் தெரியவே தெரியாது என்று எந்தவொரு தயக்கமும் அவனிடம் எழவில்லை.

இப்போதைக்கு அடக்கி வாசிக்கும் ஜாக்கிரதை உணர்வும் ஹரிக்குக் கிடையாது.

“ஹோய் மை சுகர் பேபி! என்னாச்சுடா? எதுவும் பிரச்சனையா? நோ வொரீஸ்! நான் இருக்கேன் தானே?”

கவர்ச்சிப் புன்னகை, காதல் பார்வையுடன் பிசிரற்று, கரகரப்புமின்றி, சர்க்கரைக் குரலில், வெண்ணெய் வழுக்கலில் காற்றில் விழுந்த அவனின் அன்பு வார்த்தைகள் மிதந்து அவள் செவிகளைத் தொட்டிருக்கும் தான்…

சரியாக அதே நேரத்தில், ரிஷி கண்ணாவும் வாயைத் திறக்காமல் இருந்திருந்தால்!

மிகச் சரியாக மூவரும் அருகருகே வந்து நின்றிருக்க,

“ஹலோ Mrs. சூர்ய பிரகாஷ்!” என்று ரிஷி தேன்மொழியை விளித்திருந்தான்.

அதிகம் அதிர்ந்து பார்த்தது யார்? தேன்மொழியா அல்லது ஹரி கிருஷ்ணனா?

அப்படியே ஹரி திடுக்கிடலுடன் நண்பனைப் பார்க்க, அவனோ வாஞ்சையுடன் தேன்மொழியைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

தேன்மொழியிடம் ஒரு சிறு அதிர்வு வந்து போனது உண்மை. விழிகளில் நொடியில் நீர்த்திரையிட்டுச் சிகப்புப் பரவியதைக் கண்டு கொண்ட ஹரி, மனதிலும் அதனைப் பதித்துக் கொண்டான்.

ஒரு சில விநாடிகள் மட்டுமே துலங்கிய அவனின் திகைப்பு உடனே விலகியும் போனது. தான் அவளின் முழுச் சுய விவரங்கள் எதையும் இன்னும் பார்க்கவில்லை என்பதை நினைவில் கொண்டு வந்திருந்தான்.

அதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களைக் காணத் தவறியது தன்னுடைய அஜாக்கிரதைத்தனம் என்றும் புரிந்தது. அந்த நிமிடத்தில் வேறு எந்த நெகடிவ் எண்ணமும் தோன்றவில்லை.

தான் உணர்ந்து கொண்ட விசயத்தை சற்று இலகுவாகவே எடுத்துக் கொண்டு கடந்திருந்தான்.

இப்போது அவளையே விழி எடுக்காமல் உள் வாங்கிக் கொண்டிருந்தான். அழகோவியமாக நின்றிருந்தாள். சில வினாடிகளிலேயே அவளிடம் ஒரு மென் முறுவல் உதிக்கும் நிலை… கண்களில் சற்று முன்னே உதித்திருந்த மற்ற உணர்வுகள் மறைந்து போய்விட்டிருந்தன.

‘எதுவும் மாறி விடாது பெண்ணே! நீ என் சுகர் பேபின்னு நான் மைண்ட் ஃபிக்ஸ் செஞ்சு நாலு நாள் ஆச்சு! திடீர்ன்னு உன்னை இங்க பார்த்தது எவ்வளவு சந்தோஷம்ன்னு எனக்கு மட்டுமே தெரியும். சீக்கிரமே நாம ஒன்னு சேருவோம் மை ஹனி!’

“ஹலோ டாக்டர்!” என்றாள் ரிஷியைப் பார்த்து.

தேன்மொழியால் ரிஷியை என்றுமே மறக்க இயலாது. அவளின் உயிரின் உயிரை அந்தக் காலனிடம் போராடி சிறிது நேரமாவது பிடித்து வைத்திருந்தானே? அந்த நன்றிப் பெருக்கு இன்றும் அவள் நெஞ்சில் பொங்கியது!

ஹரி அவர்களின் பேச்சில் கலந்து கொள்ள முயலவில்லை. தன் இருப்பை நண்பனுக்குக் காட்டாமல் ஒதுங்கியே நின்று கொண்டான். அவர்கள் பேசியது இவனுக்கும் கேட்டது. அப்பேச்சில் இருந்து சிலவற்றை உணர்ந்து கொண்டான்.

சூர்ய பிரகாஷ் என்றால் ரிஷிக்கும் ஒரு ஸ்பெஷல் உணர்வு வந்து போகிறது. அவனால் தான் இவர்களுக்குள் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். தேன்மொழிக்குள் சூர்யா இன்னும் பசுமையாக வீற்றிருக்க வேண்டும். அவளின் உடல்மொழி அதனைக் காட்டிக் கொடுத்தது.

தேன்மொழியின் பெற்றோர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். அவளுக்கு மும்பையில் வேலை. அவளின் மிகச் சரளமான, தமிழ் வாசனையற்ற ஹிந்தி மொழி, சில வருடங்களாவது அவள் அங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.

மும்பையிலிருந்த சூர்யாவின் பெற்றோர் ஒரு பெரிய இடைவெளி எடுத்து வெளிநாடு சென்றிருக்கிறார்கள் என்பதில் ஹரிக்கு அவர்களின் மனமும் புரிவதாய்!

தங்களின் பேச்சுக்கு இடையில் தான் ஹரி அருகே இருந்ததைக் கவனித்தான் ஹரி.

“இங்க வாடா ஹரி.” என்று அழைக்க, நண்பனுக்குப் பக்கத்தில் சென்றான் ஹரி. “நீ திரும்பி வந்ததைப் பார்க்கலைடா சாரி!” சொல்லவும், “இட்ஸ் ஓகே! நீ அவங்க கிட்ட பேசு.” என்று நண்பனின் தோளில் ஓர் அழுத்தம் கொடுத்தான் ஹரி.

“மீட் டாக்டர் ஹரி கிருஷ்ணன், மை பெஸ்ட் ப்ரண்ட்.”, என்று ரிஷி ஹரியை உடனே தேன்மொழியிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

தென்மொழி மெல்லிய புன்னகையுடன் ஹாய் என்றாள் தான். ஆனால் பார்வை ஊன்றி ஹரியை அவள் கவனிக்கவில்லை.

ஹரிக்குத் தன்னை அவள் சரியாகப் பார்க்கவில்லை, தன்னை மூளையில் பதித்துக் கொள்ளவில்லை என்பது புரிந்தது.

அதில் கொஞ்சம் வருத்தம் எழுந்தது. சுணங்கிய இதயத்தை நொடிகளில் மலர்த்திக் கொண்டு, கிடைத்திருக்கும் அரிய பொன் மணித்துளிகளை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

‘என்னது, ஒரு பத்து நாள் லீவுக்கு மட்டும் வந்துட்டு இப்போ மறுபடியும் சிங்கப்பூர் போறாளா? ஹோ!’

வாடிப் போனான். பிரிவுத் துயர்!? என்ன, அதற்குள் எப்படி வரும்? அதெல்லாம் அப்படி அப்படித்தான். ஹரிக்கு ஆண்களுக்கான பசலை நோய் கூடத் தாக்கலாம்!

தேன்மொழி கிளம்பும் நேரம், அவள் வீட்டில் எல்லோரும் ஒரே செண்டீஸ். பயங்கர அட்வைஸ் மழை வேறு பொழிந்து தள்ளினர்.

அவர்களிடமிருந்து தப்பித்துத் தனிமை நாடி அவளின் ரூமிற்குள் சென்றால், அங்கு சூர்யா…

நினைவுகளால் அவளை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு இடமும் பொருளும் அவனிடமே இட்டுச் செல்ல, தவித்துப் போனாள்.

இம்முறை மறுமணத்திற்கு வேறு சம்மதம் சொல்லியாயிற்று. அது சரியா? தான் ஏதும் தப்பாக முடிவு செய்து விடவில்லையே? இப்படிக் குழப்பம் மேலோங்கியது.

என் சூர்யாவை பிரியப் போகிறேனா? குற்ற உணர்வு குத்தியது. போதும்! போதும்! எனத் தப்பித்துக் கிளம்பி வந்திருந்தாள்.

தம்பியை மட்டும் உடன் வரச் சொல்லி சீக்கிரமாகவே வீட்டிலிருந்து விமானநிலையத்திற்கு வந்து விட்டாள். அங்கு வந்ததும் அவனை வீட்டிற்கு அனுப்பிவிடப் பார்த்தாள்.

“நீ போய் செக் இன் பண்ணுக்கா. எல்லாம் ஓகேன்னு தெரிஞ்சா தான் வீட்டுக்குப் போவேன். அது வரை இப்படி வெயிட் பண்றேன்.”

“சரி காரில் போய் உட்காரு. வேஸ்டா இங்க நிக்கத் தேவையில்லை தேவ். ஏதாச்சும்னா கூப்பிடறேன்.”

தேவானந்த் விடைபெற்று கார் பார்க்கிங் நோக்கிப் போகவும், அவனிடம் விடைபெற்று வந்திருந்த தேன்மொழி ரிஷியைப் பார்க்க நேரிட்டது.

நடந்த நிகழ்வு சில நிமிடங்கள் ஒரு மாறுதலை அவளுக்குத் தந்திருந்தது என்றாலும், ரிஷியின் சந்திப்பு சூர்யாவைச் சுற்றியே அவளை மேலும் எண்ணமிட வைத்தது.

இவளின் பிய்ந்து போன பேக்பாக்கின் உடைமைகளைப் பத்திரம் கருதி ரிஷியின் சின்ன டிராலி கேஸ்க்கு மாற்றி வழி அனுப்பி வைத்தனர் நண்பர்கள் இருவரும்.

“பார்க்கலாம் Mrs. சூர்ய பிரகாஷ். டே கேர்! பை!”

ரிஷியை தொடர்ந்து ஹரியும்,”பை தேன்மொழி! ஹேப்பி ஜர்னி!” என்றான்.

‘தேன்மொழியா? நான் இவங்களை Mrs. சூர்ய பிரகாஷன்னு தானே சொன்னேன். இவனுக்கு எப்படித் தெரியும் அவங்க பெயர்?’

நண்பனைத் திகைத்த பார்வை பார்த்தான் ரிஷி.

“என்னடா ஷாக்காகிட்ட? அவளும் நானும்…” என்று ராகமிழுத்தபடி கண் சிமிட்டி மந்தகாசமாகப் புன்னகைத்தான் ஹரி.

புரிந்து போனது ரிஷிக்கு. ஹரியின் மலர்ச்சி உடனே இவனுக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், உள்ளுக்குள்ளே ஒரு மெல்லியப் பதட்டமும் சூழ்ந்தது.