தேன் மழையிலே – 4

தேன் மழையிலே

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 04:

அன்று அதிகாலையில் கடலூரிலிருந்து வந்திருந்த கோபாலகிருஷ்ணன், சில மணி நேரம் மட்டும் மகனுடன் செலவழித்துவிட்டு, கையோடு மனைவியை அழைத்துச் சென்றிருந்தார்.

பானுமதிக்கு மகனுடன் இருக்க வேண்டும் போலிருக்க, அதற்கு வழியில்லாத நிலையில் புலம்பலுடன் தான் கிளம்பியிருந்தார்.

அவர்கள் கிளம்பிப் போகும் முன், அம்மாவின் தோளில் கை போட்டு இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட ஹரி, “சீக்கிரம் உங்க மருமகளைக் கண்டு பிடிச்சுடலாம். கவலைப்படாமல் போங்கம்மா.” என ஆறுதல்படுத்திச் செல்லம் கொஞ்சி அனுப்பி வைத்திருந்தான்.

அப்பாவிடமும், “என் அம்மாவை உங்க அம்மா ரொம்ப டார்ச்சர் கொடுக்காமல் பார்த்துக்கோங்க!” என்று போலியாக மிரட்டியிருந்தான்.

“சரி தான் போடா படவா. பானு உனக்கு அம்மா ஆவதற்கு முன் அவ என் மனைவிங்கிறதை மறந்துறாத. என் பொண்டாட்டி மேல் எனக்கில்லாத அக்கறையா? பெருசா பேச வந்துட்டான். 

எங்கம்மாவை எப்படிச் சரி கட்டணும்னும் எனக்குத் தெரியும். அப்படியே என் பொண்டாட்டிக்கு என்ன வேணும்னும் பார்த்துக்கவும் தெரியும்.

நீ முதல்ல கொஞ்சம் உன் நேரத்தை ஒதுக்கி மேட்ரிமோனியல் பாரு. இரண்டு மூணு சைட்ல பதிவு செஞ்சு வை. நீங்களே பொண்ணு பாருங்கன்னு சொல்லி தப்பிச்ச வரைக்கும் போதும். 

நாங்க சொல்லி வச்சு ஊர்ல பொண்ணு பார்க்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப முன்னத்த மாதிரி இல்லை ஹரி. காலமும் மாறிப் போச்சு. மக்க மனுசங்க சூழ்நிலையும் மாறிப் போச்சு. 

ஆன்லைன்ல தான் எல்லாம் நடக்குது. பொண்ணும் மாப்பிள்ளையும் அவங்கவங்களே தேடி, பார்த்துப் பேசி, கல்யாண ஏற்பாடு வரைக்கும் நடத்திக்கிறாங்க. 

நீயும் ஐ.டி ஃபீல்ட்ல இருந்திருந்தா இந்நேரம் அப்படி ஏதாவது பார்த்திருப்பியா இருக்கும். உங்க வேலை, டியூட்டி, செடியூல்ட்ல சொந்த விசயம், குடும்பம் எல்லாம் பின்னுக்குப் போயிருது!”

“அப்பாஆ! நீங்களுமா? அம்மா தான் கல்யாண விசயத்திலேயே குறியா இருக்காங்கன்னு பார்த்தா… நீங்களும் கமா போட்டுப் பேசிட்டே போறீங்க?”

“எங்க வயசுல நீ கூட உம் பிள்ளட்ட இப்படித்தான் பேசப் போற ஹரி.” பானுமதி இடைபுக,

“முதல்ல கல்யாணம் பண்ண வழிப் பார்க்கணும். அப்புறம் தானே பிள்ளை குட்டி, அப்பா ஆகுறதெல்லாம்!” ஹரி நொந்த குரலுடன் பேசினான்.

“ஏன்டா மகனே நீ பேசுறதைப் பார்த்தா எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு.”

“என்னம்மா?”

“ம்ம் பிள்ள குட்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டு அப்புறம் மெதுவா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கியோ?”

“பானுமதீ! என்ன பேசுற? இங்க நின்னு உளறிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணாம போயி கார்ல ஏறு!” கோபாலகிருஷ்ணன் கோபத்துடன் மனைவியின் பேச்சைக் கண்டிக்க, பானுமதியின் முகம் விழுந்துவிட்டது. உம்மென்று காரில் போய் அமர்ந்து கொண்டார்.

“ஏம்பா நீங்க? அம்மா சும்மா என்கிட்ட வம்பிழுத்திட்டு விளையாட்டா பேசினாங்க…”

“எதுல விளையாட்டுன்னு வரமுறை இருக்கணும். தேவையில்லாம பேசிட்டு… வயசாகுதே ஒழிய பக்குவம் கம்மி உங்கம்மாக்கு.”

“நீங்க தான் இப்ப தேவையில்லாம கோபப்பட்டு இருக்கீங்க. ஊருக்குக் கிளம்புற நேரத்துல மூட் ஆஃப் பண்ணிட்டு…” ஹரிக்கு மனது கஷ்டமாகிப் போனது.

மகனது முக வாட்டம் பெற்றவருக்கும் வருத்தத்தைத் தர, “டேய் நீ எதுக்கு இப்ப சங்கடப்படுற? அம்மாவை நான் சமாதானப்படுத்திக்கிறேன். இதை விட்டுட்டு, நீ உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஆன்லைனில் பார்த்துச் சொல்லு.”,


கோபாலகிருஷ்ணனும் மகனின் தோளில் கை போட்டு அழுத்திவிட்டு காருக்கு செல்ல, ஹரி அவருக்குத் தலையாட்டி விடை கொடுத்தான்.

அப்பாவுக்குப் பேசாமல் விடை கொடுத்தாலும், அம்மாவிடம் பேசிக் கொஞ்சியே அனுப்பி வைத்தான்.

தங்கள் ஒரே மகனுக்குச் சீக்கிரம் மணம் முடித்து மருமகளைக் கொண்டு வர வேண்டும் எனத் தற்போது துடித்துக் கொண்டிருக்கும் இதே பானுமதி, இன்னும் சில நாட்களுக்குள் மகனின் மனதைக் கவரும் பெண்ணை மறுக்கப் போவதை இவர்கள் யாரும் இப்போது அறிந்திருக்கவில்லை.

அந்தத் தருணம் வரும் போது? யார் யாருடைய மனதை உடைக்கப் போகிறார்கள்? ஹரி தன் மனதைத் தொடும் பெண்ணைக் கை பிடிப்பானா?

சனியன்று குமரன் கை மணத்தில் செட்டி நாட்டு ருசியில் தயாராகியிருந்த கோழிக் குருமாவையும் புல்கா ரொட்டியையும் மொக்கி விட்டு, கூடுதலாக இரண்டு ஸ்கூப் இளநீர் மற்றும் சீத்தா பழ சுவையில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட சுகத்தில் சற்று முன்னதாகவே படுத்து விட்டான் ஹரி கிருஷ்ணன்.

நள்ளிரவைக் கடந்த பொழுது. அவன் டிம்பிளுடன் சயனித்திருக்க, வீட்டில் வேறு யாரும் இல்லையே. இரு ஜீவன்களும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, திடீரென ஹரியின் மொபைல் துடிப்புடன் அலறியது.

சட்டெனத் தூக்கம் கலைந்தது அவனுக்கு. மருத்துவனுக்கு இரவு பகல் என்ற பாகுபாட்டின் லக்சுரி ஏது? எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும் நோயாளிகளின் நலன் கருதி உதாசீனப்படுத்த முடியாது. அதிலும் மிக அவசியத்தேவை எனும் போது தானே இரவில் அழைப்பு வருவது?

இதோ இப்பவும் மொபைலின் ஒலி அவனை உடனே உசுப்பி விட்டது.

அந்தப் பெரிய கட்டிலில் நடுநாயகமாகப் படுத்து தலையணைக்குள் புதைந்திருந்தவன், வேகமாகப் புரண்டு கை நீட்டி சார்ஜரிலிருந்து மொபைலை எடுத்தான். அழைப்பு யாரிடமிருந்து என டிஸ்ப்ளே காட்டிக் கொடுத்தது.

இரவின் அயர்விலும் ஹரியின் புருவங்கள் சுருங்கி உதட்டோரம் இளநகையின் படர்வு. அவன் பேச முனையும் போது அறையில் கேட்ட சீறலான கோப மூச்சில் திரும்பினான். நியான் விளக்கின் ஒளியை ஏந்திய கண்களுடன் டிம்பிள் தூக்கம் கலைந்து அவனை முறைத்துப் பார்த்தது.

“சாரி பேபி! ம்மூஆ!”

டிம்பிளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தைத் தந்து படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு ஹாலுக்குள் சென்றான். வாகாக ரெக்லைனரில் அமர்ந்தவன் கால்களை அதில் சௌகரியமாக நீட்டிக் கொண்டான்.

அவனுக்குத் தெரியும் இந்த அழைப்பு சிக்கலானது என்று. ஏனென்றால் அது வந்திருந்த நேரம் அப்படி. அழைத்திருந்தது டாக்டர் ஆதித் சாப்ரியா. இதய அறுவை சிகிச்சை நிபுணர். புது தில்லியிலிருந்து.

இருவரின் உரையாடல் ஹிந்தியில் தான். ஆதித்திற்கு தமிழ் மொழி கொஞ்சமே கொஞ்சம் புரியும். பேச முனைந்ததில்லை. அவன் தில்லிவாலா.

“ஹலோ ஆதித்! என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்க.”

சுகமான தூக்கம் கலைந்ததில் உடம்பில் சோர்வு, குரலில் கரகரப்பு இருந்தாலும் எரிச்சலெல்லாம் படவில்லை ஹரி.

‘வேறெதுக்குக் கூப்பிடப் போறான், பயபுள்ள பாவந்தான்!’

உதட்டிலிருந்து வெளி வரத் துடித்த மென்னகையை உள்ளேயே அடக்கி, சிரித்துவிடாமல் கவனமாக இருந்தான்.

“சாலா… ஒரு அவசரத்துக்கு ஃபோன் பண்ணினா எடுத்துப் பேச இவ்வளவு நேரமா?”

‘இந்த நேரத்துல கூப்பிட்டிட்டு கேள்வியைப் பாரு இவனுக்கு.’ செல்லமாக முணுமுணுத்துக் கொண்டான் ஹரி கிருஷ்ணன்.

“சாரி மேன்! நல்லாத் தூங்கிட்டேன்.”

மிக அடக்கமாக ஹரி சொன்னான். எப்பவும் ஆதித்திற்கு கொஞ்சம் மரியாதை கொடுத்துப் பழகிவிட்டது.

“ஏன்டா தூங்க மாட்டீங்க… நல்லாத்தான் தூங்குவீங்க. இங்கேயும் ஒருத்தி தூங்குறா பாரு.”

‘அர்த்த ராத்தரியில் பேய் பிசாசு தான் தூங்காம சுத்திட்டுத் திரியும். தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டுப் பேசுறான் பாரு… இவனோட, ஹய்யோ! 

எல்லாம் இவனின் செல்லக்குட்டியால் வந்த அவஸ்தை. கோர்த்து விட்டுட்டுக் கும்மியடிக்கிறா. இவன் அவளோட சேர்த்து என்னையும் பேய் பிசாசுக்கு இணையக் கூட்ட வந்துட்டான்.

நீத்து! நீ என் மித்ரு (நண்பி) இல்லையடி. என் துஷ்மன்டி (எதிரி) நீ! எம். பி. பி. எஸ்., முடிச்ச கையோட சென்னையிலேயே உன் பிரண்ட்ஷிப்புக்கு கத்திரி போடாம டெல்லி வரைக்கும் கொண்டு போனேனே, என்னைச் சொல்லணும்.’

நீத்து, ரிஷி கண்ணா, ஹரி கிருஷ்ணன் மூவரும் பாண்டட் நட்பூஸ் (bonded friends). இதில் ஹரி, ரிஷி இருவருக்கும் டிரௌசர் கால நட்பு. பள்ளியில் தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. இவர்களுடன் மருத்துவக் கல்லூரியில் ஒட்டிக் கொண்டவள் நீத்து. 

டாம் பாய் தான் அவள். ஹரி கிருஷ்ணனும் ரிஷி கண்ணாவும் நீத்துவைப் பெண்பிள்ளை போல் பார்ப்பதே இல்லை.


ஆதித் சாப்ரியா நீத்துவின் காதல் கணவன். ஹா, டாம் பாய்க்குள் காதலா? தில்லிக்கு ஹரியுடன் குழந்தைகள் நல மருத்துவம் படிக்கப் போனவளின் இருதயம், ஆதித் எனும் இளைஞனின் இருதயத்துடன் இடம் மாறிப் போனது.

படிப்புடன் நீத்து ~ ஆதித் வித்திட்ட காதல் பயிரும் வளர்ந்தது. தோழி ஆதித்தை படுத்தியதைப் பார்த்தும் ரிஷி, ஹரி பக்கம் காதல் காற்று வீசுமா? ம்கூம்… இருவரும் அப்போது படிப்பில் மட்டும் கவனம் கொண்டிருந்தனர்.

ரிஷியும் ஆதித்தும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிப் போக, ஹரியும் நீத்துவும் குழந்தைகள் இருதய நலம் நிபுணர்களாகினர்.

ஆதித் இம்மூவர் அணிக்கு ஒரு வருடம் முன்னோடி. நண்பியின் கணவன் ஆகிப் போனவன். வயதில் இரண்டு வருடங்கள் மூத்தவன் வேறு.


படிப்பு முடிந்து தற்போது மனைவி அனுராகாவுடன் மும்பையில் வசிக்கும் ரிஷி கண்ணா தப்பித்துவிட்டான். அவனுக்குத் திருமணமானதால் மட்டும் தப்பித்துக் கொள்ளவில்லை. 

ஹரியைப் போல் நேரங்காலம் பார்க்காமல் பொறுமையை இழுத்து வைத்துப் பேசுவது அவன் அகராதியில் கிடையாது.

ஆதித்தை ஆட்டிப்படைப்பது நீத்து. ஆதித் வறுத்தெடுப்பது என்னவோ ஹரியைத் தான்.

‘டீ நீத்தூஊ! என்னடி செஞ்சு வச்ச? ஷப்பா, உன்னால் இன்னொரு ‘முடில டா’ மொமண்ட்டை இப்போ நான் எதிர்கொள்ளணுமா! ஆவ்!’

“ம்க்கும்… ஆதித். தூங்குறதைப் பற்றிப் பேசத்தான் இப்ப கூப்பிட்டயா? ஹாவ்வ்… கொட்டாவியா வருது. தூக்கம் கண்ணைச் சுழட்டிட்டு வருது. நாம அப்போ காலைல பேசுவோமா? நாளைக்கு எனக்கு நோ டியூட்டி. சன் டே ஆஃப். மீ முழு நாளும் ஃப்ரீ தான்.”

“டேய் கொழுப்பாடா, ஒருத்தன் அல்லல்படுறானேன்னு அக்கறை இருக்கா? அர்த்த ராத்திரியில் பொண்டாட்டியை கொஞ்சுற நேரத்துல உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல. எல்லாம் என் நேரம்.”

“போய் அவளைக் கொஞ்ச வேண்டியது தானே? எனக்கு எதுக்கு கால் பண்ணியிருக்க? சும்மா புலம்பிட்டு இருக்காம என்னத்த பண்ணி வச்சிருக்கா உன் செல்லக்குட்டின்னு சொல்லு.”

“இதோடு மூணு சனிக்கிழமை அவகிட்ட சொன்னது போல் நேரத்திற்கு வீட்டுக்கு வர முடியலை ஹரி. எமர்ஜன்சி சர்ஜரின்னா மட்டும் போங்கிறா. இல்லைனா சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து வார இறுதி பூராவும் அவ டைம் தானாம். லூசுத்தனமா கண்டிஷன் போட்டிட்டு இருக்கா.

எப்படிடா, ஒரு டாக்டரா இருந்து கூடப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா? அவளுக்கும் வீக் எண்ட் கால் ரொடீன் வராமயா இருக்கு? லைஃப் சக்ஸ் ஹரி!

சில சமயங்களில் தவிர்க்க முடியாம இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். இன்னைக்கும் ஒரு சர்ஜரி. எமர்ஜன்சி இல்லைன்னாலும் எடுக்க வேண்டியதாப் போச்சு. எதிர்பாராத வகையில் அந்த சர்ஜரி முடிய‍ ரொம்ப லேட் ஆகிடுச்சி. சர்ஜரி ஸ்கெட்யூல் பண்ணது நீத்துக்குச் சொல்லலை.

செல்லக்குட்டியா அவ? புசு புசுன்னு பொங்கி கோபக்குட்டியா மாறி இப்ப கதவை தாள் போட்டு வச்சிருக்கா. என்னால வீட்டுக்குள்ள போக முடியலை.”

“ஹ்ம்ம்… இப்போ வாசல்லயா நிக்கிற ஆதித்?”

“ஆமாம்டா, அரை மணி நேரமா நிக்கிறேன். சாவி இருக்கு. ஆனால் சேஃப்டி லாக் போட்டுட்டு ஹாய்யா உள்ள இருக்கா. பழி வாங்கறா. முதல்ல ஒரு குளியலைப் போடணும். பசி வேற ஆளைக் கொல்லுது.”

“ஓகே சில் மேன். நீ மொபைலை கட் பண்ணு. நான் நீத்துவுக்குக் கூப்பிட்டு பார்க்கிறேன்.”

“ம்ம். வேற வழி?”

உடனே தோழிக்கு அழைக்க, அவள் எடுக்கவேயில்லை. காண்டான ஹரி, வாட்ஸ் அப்பில் தொடர்ச்சியாகக் குறுஞ்செய்திகளை அனுப்பினான்.

அத்தனை கூத்துக்கும் சட்டை செய்யாமல் படுத்து இருந்தவள், கடைசியாக வந்து சேர்ந்த அந்தக் குறுஞ்செய்தியில் மலையிறங்கி வந்தாள் நீத்து.

(அப்படி என்னய்யா சொன்ன ஹரி?) 


“கதவைத் திறடி தண்டமே!

பாவம்டி ஆதித். உன்னைக் காதல் பண்ணி அவன் சட்டையைக் கிழிச்சிட்டு ரோட்ல நின்னு கதறாதது தான் மிச்சம். கொடுமைக்காரி!நீத்து, நம்ம ஃப்ரண்ட்ஷிப் டூர் வேணுமா இல்லையாடி?

சரி வேணாம்னா போடி!

இந்தத் தடவை உன் சாய்ஸ்ல நம்ம டூர் ஸ்பாட்டை முடிவு பண்ண நினைச்சோம். நீ ஒத்து வர மாட்டேங்கிற. சரி விடு. நாங்க மட்டும் போறோம்.”

அதெப்படி அவங்க வழக்கத்தை உடைக்க முடியும்? இன்றா நேற்றா? கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மூவர் அணியினர் வருடம் ஒரு முறை சுற்றுலாவிற்கு போய் வருகிறார்கள். 

தங்கள் வீடு, படிப்பு, வேலைப்பளு, அது சார்ந்த பிரச்சனைகள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த நாட்களை மகிழ்ச்சியாக நண்பர்களுடன் செலவளிப்பதை மூவருமே விரும்புவர். 

அதை ஹரி கட் பண்ணி விடுவேன் என்று சொன்னதும் நீத்து கொஞ்சம் ஆடித்தான் போனாள். எதுக்கு வம்பு? 

வாயிலை நோக்கி விரைந்தவள் பட்டெனக் கதவைத் திறந்துவிட்டாள். அத்துடன் நிற்காமல் கணவனை உள்ளே இழுத்து இதழோடு இதழ் பொறுத்தி நச்சென்று இச்சொன்று வைத்தாள்.

அழுத்தமான முத்தத்தின் சத்தம் ஹரியின் செவியைத் தீண்டியதும் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டான்.

எதிர்பாராமல் கிடைத்த பரிசில் உறைந்து நின்ற ஆதித்தை, ஹரியின் அழைப்புக் கலைத்தது. கணவனிடமிருந்து அவன் மொபைலை பறித்தாள் நீத்து.

“ஹலோ ஆதித்!”

“இன்னும் என்னடா ஹலோன்னுட்டு. உள்ள வந்துட்டான். எங்களைத் தொந்தரவு பண்ணாமல் போ போய்த் தூங்கு.”

“நான் உங்களைத் தொந்தரவு பண்றேன்னா? எல்லாம் என் நேரம்டி… முதல்ல ஸ்பீக்கரை ஆன் பண்ணு.”

“பேசு ஹரி. ஸ்பீக்கர்ல தான் இருக்க.”

ஆதித் சொல்லவும்,

“புருசனும் பொண்டாட்டியும் நான் சொல்றத நல்லாக் கேட்டுக்கோங்க. இனியொரு தடவை இப்படி அர்த்த ராத்திரியில உங்க பஞ்சாயத்தைக் கூட்டுனீங்க, என் பொண்டாட்டி வந்ததும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்களை வச்சு செஞ்சிருவோம்.”

ஹரியின் மிரட்டலை காற்றில் ஊதித் தள்ளிய நீத்து, “டேய், முதல்ல பொண்ணைப் பார்த்து கரெக்ட் பண்ணு. அப்புறம் வந்து பேசு.” என்றாள்.

“என்ன கிண்டலாடீ? போடி போ! கூடிய சீக்கிரமே நடக்குதா இல்லையான்னு பாரேன்.”

ஹரியின் எதிர்பார்ப்பு விரைவில் நடக்குமா?

என்ன தான் உயிர் காக்கும் பணியைக் கையில் எடுத்திருந்தாலும், குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பவள் நீத்து. வாயிலைக் கடந்துவிட்டால் வீட்டை மறப்பவன் ஆதித். 

அதனாலேயே அவ்வப்போது இத்தகைய நிகழ்வுகள் வரும்… அதனைத் தொடர்ந்து சிறு போராட்டம்.

“என் செல்லக்குட்டி, உன்னைப் போலவொரு அமுல் பேபியை எப்போ பெத்துத் தரப் போற நீ? நாம இப்பவே ப்ளானிங்கில் இறங்குவோமா?”

வெள்ளைக்கொடியைப் பறக்க விட்ட மனைவியை, ஆசை முட்ட கொஞ்சிக் கொண்டிருந்தான் ஆதித்.

“உன் அட்டவணையில் மாற்றம் வந்தாலொழிய பேபிக்கு நோ நோ தான் ஆதித்!”

நீத்து அவனுடன் ஒன்றிக் கொண்டே பேச்சில் மட்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள்.

“பிடிவாதக்காரி! இதுக்கும் உன் ப்ரெண்ட் கிட்ட ரெகமெண்டேஷனுக்கு போக வச்சிராத.”

கணவனின் தீண்டலில் சிவந்திருந்த நீத்து கலகலவெனச் சிரித்தாள்.

“ஆள் மயக்கி!”

மனைவியின் சிரிப்பில் ஈர்க்கப்பட்டவனாய் அவளுள் புதைந்து, மலர்ந்திருந்த அந்த ஈர இதழ்களைத் தன் வசமாக்கினான்.

‘இந்த ஆதித் வாசலுக்கு வெளியே தான் மருத்துவன் என்னும் அடையாளத்தை ஏந்தி நிற்பான். வீட்டிற்குள் உன் உயிர் காதலன் மட்டுமே செல்லக்குட்டி.’

அவர்களுக்குள் இன்னுமொரு சுகமான தேடல் தொடங்கியது. 

மறுநாள் காலை ஹரி தன் வழமை போல் டிம்பிளுடன் கடலோரம் நடை பயில சென்று வந்து, அபார்ட்மெண்ட் ஜிம்மில் சிறிது பொழுதைக் கழித்தான். 

காலை உணவை எளிமையாகச் செய்து உண்டான். தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துவிட்டுப் பாடல்களை ஓட விட்டான். விடுமுறை நாளின் சுகத்தை அனுபவித்தவனின் பின்னாடியே வாலாட்டியபடி திரிந்தது டிம்பிள்.

மெடிக்கல் ஜெர்னல், வாராந்திர, மாதாந்திர இதழ்கள் எனப் புரட்டியவன், கணிணியில் சில வேலைகளைச் செய்தான். ஒரு வழியாகக் கடைசியில் மனமுவந்து மேட்ரிமோனியல் பக்கத்தில் பதிவு செய்தான்.

சிறிது நேரத்தில் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது. புது இணைப்பிற்கான செயல்படுத்தும் குறியீடு (activation code) வந்திருந்தது.

அதை மேட்ரிமோனியல் பக்கத்தில் ஏற்றியதும் இவனின் விவரங்களைக் காண முடிந்தது. உடனேயே, இவனின் விவரங்களுக்குப் பொறுத்தமானதாக இருக்கக் கூடும் எனச் சில மணமகள் தேர்வுகளும் வந்தன.

ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்து வந்தவன், ஒன்றில் நிலைத்து விட்டான். நொடிகளா, நிமிடங்களா, மணித்துளிகள் கடந்தும் விழி எடுக்கவில்லை.

தேன்மொழியின் புகைப்படம் தான் ஹரியின் விழிகளைக் கவர்ந்து மனதையும் கொள்ளை கொண்டது. 

‘பார்த்த நொடியே கவுந்துட்டான் பயபுள்ள.’

மற்றவர்களை விட அவளைத் தனித்துக் காட்டியது அந்த எளிமையும் எதார்த்தமும். ஒரு புகைப்படத்தில் சிங்கப்பூரின் பின்னணியில் மிகையில்லா தோற்றமும் இயற்கையான மலர்ந்த சிரிப்பில் தேன்மொழி.

மற்றொன்றில் க்ளோஸ் அப் ஷாட். விரிந்திருந்த விழிகளில் நீளமான இமைக்காம்புகள். கருமணிகள் இரண்டும் இவனிடம் பேசுவது போல் ஓர் உணர்வு. 

அழகிய சிறு அதரங்களில் பூத்தும் பூக்காமல் மொட்டெனப் புன்னகை. செதுக்கி வைத்தது போன்றிருக்கும் நாசி. காது மடல்களும் அம்முகத்திற்கு அம்சமான வகையில் அமைந்திருந்தன.

நீண்ட நேரம் புகைப்படத்தில் ஒன்றியவன் வேறு விபரங்களைப் பார்க்க விழையவில்லை. அந்நேரம் ஒன்று தான் அவன் மனதில்.

‘தேன்மொழி! ஹனி…’ அவள் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்துப் பார்த்துக் கொண்டான். அந்த இனிமையை நாவில் உணர்ந்தான். ஸ்வீட் சாப்பிடாமலேயே தித்தித்தது!

‘இந்த ஹரியிடம் வந்து விடேன். எனக்கே எனக்காக, என் ஹனியாக!’

‘ஹனி ~ ஹரி’ எவ்வளவு பொருத்தம் என நினைக்கவும் நெஞ்சில் ஓர் இனிய உணர்வு எழுந்தது.

அப்புறம் அப்படியே வீட்டை நினைக்க… அம்மா ஜாதகம் பார்ப்பார்கள் என்கிற ஞாபகம் வந்தது. ஜாதகப் பொருத்தமில்லை என்றால்? உடனே நெஞ்சோரம் ஒரு சுணக்கம் எட்டிப் பார்த்தது. 

ஒரு பெருமூச்சில் தன் சுணக்கத்தைப் போக்க முயன்றான். பின்னர் தன் கையில் என்ன இருக்கு… பொருத்தம் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தபடி, அப்போதே தேன்மொழியின் ஜாதகத்தைப் பெற்றோருக்கு அனுப்பி வைத்தான்.

கடலூருக்கு அழைத்தும் பேசினான். மகனின் குரலில் தெரிந்த மாற்றமே அவனின் விருப்பத்தை அவர்களுக்கு எடுத்துச் சொன்னது.

அன்று நல்ல நாளாக இருக்கவும், பானுமதி உள்ளூரிலிருந்த நாத்தனார் சியாமளாவை உடன் அழைத்துக்கொண்டு தங்கள் குடும்ப ஜோசியரிடம் சென்றார். கார் டிரைவர் காரை எடுக்க, கடைசி நிமிடத்தில் கோபாலகிருஷ்ணனும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள, வீட்டிலிருந்து நால்வராகக் கிளம்பினர்.

நல்ல நேரத்தில் இருவருக்கும் பொருத்தம் பார்க்க, இரண்டு ஜாதகங்களும் நன்றாகவே பொருந்திப் போயிற்று. ஆனால், ஜோசியர் ஏதோ யோசித்தபடி நெற்றிச் சுறுக்கத்துடன் இருந்தார்.

பானுமதிக்குச் சந்தோஷத்தில் வேற எதுவும் பிடிபடவில்லை. அவருக்கு ஜோசியரின் முக மாறுதல் கண்களில் படவில்லை. சியாமளாவும் பானுமதியும் தங்களுக்குள் பேசிக்கொண்டு அங்கிருந்து பரபரப்பாக வெளியேறினர்.

கோபாலகிருஷ்ணன் ஜோசியரின் யோசனையைப் பார்த்து விட்டுச் சற்றுப் பின் தங்கினார். பெண்கள் வெளியேறும் வரை அமைதியாக நின்றார். 

பிறகு என்ன விபரம் எனக் கேட்டுவிட, அவரும் தான் போட்டிருந்த கணக்கு, கட்டங்களின் அமைப்பு என விவரித்தார். அவர் சொன்ன விசயத்தைக் கேட்டு கோபாலகிருஷ்ணன் முகம் சஞ்சலத்தைக் காட்டியது.

இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அங்கிருந்தே கோபாலகிருஷ்ணன் மகனுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். ஆனால், அவர் பேசும் முன்பே காரில் அமர்ந்ததும் பானுமதி ஹரியிடம் ஜாதகம் பொருந்திவிட்டது என்கிற செய்தியைச் சொல்லியிருந்தார்.

தந்தையும் சில நிமிடங்களில் அழைக்கவும் ஹரி சந்தோஷமாக அழைப்பை எடுத்தான்.

“சொல்லுங்கப்பா அம்மா இப்ப தான் ஜாதகம் பொருத்தம் பார்த்துட்டீங்கன்னு சொல்லி வச்சாங்க.”

மகனின் குரலில் அவன் மகிழ்ச்சியின் அளவை உணர்ந்து கொண்ட கோபாலகிருஷ்ணன், தனியாக ஜோசியர் தன்னிடம் பேசியதைப் பற்றி மூச்சு விடவில்லை.

“அம்மா அதுக்குள்ள உனக்குக் கூப்பிட்டுட்டாளா? சரியான முந்திரிக்கொட்ட…” எப்பவும் போல் சாதாரணமாகப் பேசினார்.

“அப்பாஆ…” அம்மாவைச் சொல்லவும் உடனே ஒற்றை வார்த்தையில் ஹரி தன் கண்டனத்தைத் தெரிவித்தான்.

“சரிடா உங்கம்மாவை நான் எதுவும் சொல்லலை போதுமா? ஏன் ஹரி பொண்ணு ஜாதகத்தை மட்டும் அனுப்பி வச்சிருக்க… பொண்ணு பேரு, சென்னைன்னு சொன்னா மட்டும் போதுமா? மற்ற விபரங்களையும் எங்களுக்கு அனுப்பி வை. பொண்ணோட அப்பா அம்மா யாரு? அவங்க சொந்த ஊரு என்ன? பொண்ணு கூடப் பிறந்தவங்க எத்தனை பேரு? வேற…” என்று கோபாலகிருஷ்ணன் மகனிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, 

அவரை இடை வெட்டிய ஹரி கிருஷ்ணன், “நான் வேற எதையும் பார்க்கலைப்பா இன்னும்.” எனவும்,

“என்ன சொல்ற ஹரி? நானும் முதலில் நீ ஃபோன் பண்ணவுமே கேட்டிருக்கணும். அப்ப இருந்த மனநிலையில் கேட்கத் தோணலை.”

தான் தப்புச் செய்து விட்டோம். நெடுங்காலமாய்க் காத்திருந்த நல்ல விசயம்… மகனின் மகிழ்ச்சியில் சற்றுத் தடுமாறி விட்டோம். அவசரப்பட்டு ஜாதகப் பொருத்தமும் பார்த்து… அதை அவசரக்குடுக்கைத்தனமாக மனைவி வேறு பிள்ளையிடம் பகிர்ந்துவிட, இனி மேற்பட்டு என்ன செய்வது?

ஜோதிடர் சொன்ன விசயம் தவறாய் இருக்க வேண்டும் என்று மட்டுமே கடவுளிடம் அவரால் வேண்ட முடிந்தது. அப்பாவின் விசனம் மகனை எட்டவில்லை. 

அவன் ஒரு பக்கம் மனப்பூரிப்பில் இருந்தான். வேலையிடத்தில் பிஸியாக வேறு இருந்தான்.

தந்தை மற்ற விபரங்களைப் பற்றிக் கேட்க, பிறகு பார்த்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனே தொடர்பை துண்டித்து விட்டான் ஹரி.

கோபாலகிருஷ்ணனுக்கு ஜாதகம் பொருந்தியதில் மகிழ முடியாமல் அந்த விசயம் தடை போட்டது. தன் யோசனையில் இருந்தவர், பானுமதியிடமோ வீட்டிலோ எதையும் பகிரவில்லை.

“பானு உடனே ஃபோனை போட்டு எல்லார்கிட்டயும் ஜாதகப் பொருத்த கதையை சொல்லணும்னு அவசியமில்லை. கொஞ்சம் அடக்கியே வாசி. மற்றதெல்லாத்தையும் பார்க்க வேணாமா? பொறுமையா இரு.” என மனைவியை அடக்கி வைத்தார்.


ஹரி அவசர கேஸ் ஒன்று வரவே அப்பா அழைக்கும் நேரத்திலே மருத்துவமனையில் இருந்தான்.

அவன் முதலில் பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த வேறு எந்த விபரங்களை ஊன்றிப் பார்க்கவில்லை. தனக்குப் பெண்ணைப் பிடித்து ஜாதகமும் ஓகே ஆகிவிட்டால் போதும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான்.


அப்பா பேசிய பிறகு, அன்றும் அடுத்த வந்த இரு நாட்களும் வேலையில் ஆழ்ந்துவிட்டான். இரவில் தூக்கம் சில மணித்துளிகளே எனும் நிலையில் மருத்துவமனையே கதி என்றானது. 

சில மருத்துவர்கள் வேறு விடுமுறையில் சென்றிருந்தார்கள். அதனாலும் அவனுக்குக் கூடுதல் பணி நேரம் என்றானது. தொடர்ந்து மூன்று நாட்களுமே ஹரி கிருஷ்ணன் மிகவும் பிஸியாக இருந்தான். மற்ற அனைத்தும் பின்னுக்குச் சென்றது.

மருத்துவமனையில் அவன் செயல்பாடு கண்டு திலோத்தமா கூடக் கவனமாக ஒதுங்கிப் போனாள். தந்தை அடுத்து அழைத்த போதும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டான்.

ரிஷியை மும்பையிலிருந்து வரச் சொல்லியிருந்தான். ஹரியின் கவனிப்பில் இருந்த ஒரு குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு. நண்பர்கள் இருவருக்கும் தொழில்துறை வகையில் நல்ல புரிந்துணர்வு உண்டு.

இப்போது சென்னை பந்நாட்டு விமானநிலையம் நோக்கி போய்க் கொண்டிருந்தான் ஹரி. மார்கழி மாதம் பனி இரவு. சிலுசிலுவென வீசியது காற்று. 

தன் க்யூட்டி கொரோல்லாவை மிக லாவகமாகச் செலுத்திச் செல்ல, திறந்திருந்த சன்னல் வழியாக உடலை வருடிய பனிக்காற்று தந்த சுகத்தில் மனதில் இதம் பரவியது.

அழுத்தமான இதழ்க்கடையில், ஆளை அடித்துப் போடும் அளவு அவனிடம் கவர்ச்சியாக உதித்திருந்த புன்னகை… கனிந்திருந்த முகத்தில் அத்தனை உணர்ச்சி… விழிகளில் காதல் மயக்கம்.

ஒன் நெனைப்பு ஒன் நெனைப்பு பேபி
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி…


உதடுகள் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருக்க, தேன்மொழி ஹரியின் நினைவுகளைச் சிறை பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

கடந்திருந்த மூன்று நாட்களில் ஹரியின் பிற சிந்தனைகள் தற்காலிக ப்ரேக் எடுத்திருந்தாலும், ஏனோ அத்தனை வேலைப்பளுவின் ஊடே, அடிக்கடி நட்சத்திர நொடி போல் மின்னிச் சென்ற தேன்மொழியின் முகம் ஹரியை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது.

அவனின் ஹனி இதயப்பரப்பில் இனிமையைச் சேர்க்கத்தான் செய்தாள். கிடைத்த நேரத்தில் மொபைலின் போட்டோ கேலரிக்குள் சென்று அவளை விழி விழுங்கத் தவறவில்லை அவன்!

இதோ இப்போது முணுமுணுப்பது போல்,

ஒன் நெனைப்பு ஒன் நெனைப்பு பேபி
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி…’


என்று பாட்டும் பாடினான். ரிஷி கூப்பிடும் போது ஒரு முறை அப்படிச் சிக்கிக்கொள்ள,

“யார் டா அந்த மோகினி, இத்தனை ப்ரஷெரிலும் உன் நினைப்பை தீண்டிப் பார்க்கிறாளா?” எனக் கொக்கி போட்டான்.

“மோகினின்னு சொன்ன உன் வாயை நாலு அப்பு அப்பணும். ஹனின்னு சொல்லு. மை சுகர் பேபிடா அவ.” நண்பனிடம் பாய்ந்து கண்டிக்க,


“பார்டா! எப்டி இப்டி? நீயும் கவுந்திட்டியா? எப்போத்தலிருந்து இந்த லவ் ஃபீலிங்க்ஸ் கிருஷ்?” ரிஷி கிண்டலுடன் கேட்டான்.

“ஹஹ்ஹா… போதும்டா, ஆளை விடு இப்போ. ரௌண்ட்ஸ் போகணும். இன் பேஷண்ட்ஸ் காலிங். நேர்ல வர்றேல்ல. வா, வந்ததும் உன் கேள்விகளைக் கேள் நண்பா. ஏர் இந்தியா ஃப்ளைட் தானேடா? அப்போ பந்நாட்டு வருகையில் சந்திப்போம்.”

(ஹரி மாப்பு, கொஞ்சம் பொறு. ரிஷி வந்து இறங்கியதும் கேள்விக்கணையைத் தொடுப்பது யார்ன்னு பார்ப்போம் அப்பு!)

“ஓகே ஓகே கூல் மச்சி! ஃபோனை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போ.”

“என்ன கேக்கணுமோ கேட்டுத் தொலை.”

“மைதா மாவு தான் உன் சுகர் பேபியா?”

“மைதா மாவா? ஓ… யு மீன் திலோ?”

“ஓஹோ! திலோ! அப்டி அப்டி… அப்டி போகுதா கதை?”

“அடச்சீ, அடங்குடா டேய்! திலோத்தமா இல்லை. போதுமா? பேச்சைப் பார். ஒரு ஹார்ட் சர்ஜன் போல எப்ப நீ பேசப் போற?”

“நட்புக்குள்ள ஹார்ட் சர்ஜன் எங்க இருந்து வர்றான்? ஏன்டா, டாக்டருக்கு படிச்சா நார்மலா எல்லோரையும் போல இருக்கக் கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?”

“இன்னைக்கு ஒரு மாதிரி ஃபார்ம்ல தான் வந்து இறங்கப் போற நீன்னு தெரியுது ரிஷி. இப்ப வேணாம். விட்டிரு என்னை.”

இருவரும் விரிந்த புன்னகையினூடே தங்கள் வேலைக்குத் திரும்பினர்.

அத்தனை வேலையிலும் ஹரி பிரைட்டாக வளைய வந்த போதும் அவனது மயக்கம் கொஞ்சம் கூட வெளியே தெரியவில்லை. 

சேவாவில் உடன் வேலை பார்ப்பவர்களுக்கு ஹரியின் மாற்றம் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் அவனின் உயிர் நண்பன் கண்டு அவனுடைய மாற்றத்தை எளிதாகக் கண்டு கொண்டான்.

ஹரியின் ஆழ் சிந்தனையும்,

எனை சாய்த்தாளே உயிர்த் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீழ்வேனோ முழுதாக…’


எனும் வரிகளை மீண்டும் மீண்டும் மீட்டிக்கொண்டு இருந்தது.

(கண்டிப்பாய் மீள மாட்டேடா ஹரி. சிக்கி கிச்சு சிக்கி கிச்சு உன் மனசு, சிறுக்கி அவளிடம். அம்புட்டுத்தேன் போ! இது மீட்சியில்லாத ஒரு வழிப்பாதை.

இனி நீ இனிதாக வாழ்வாயா என்பது உன் ஹனி கிட்ட தான் இருக்கு கிருஷ் பையா.)

ஹரி மீட்ஸ் ஹனி சூன்!