தேன் மழையிலே – 3

தேன் மழையிலே
ஆர்த்தி ரவி

அத்தியாயம் 03:

சில சந்திப்புகள் கடவுளால் நிச்சயிக்கப்படுபவை. எதை எப்போது எதற்காக நிகழ்த்த வேண்டும் என்பதை முற்றிலும் அறிந்தது இறை சக்தி ஒன்றல்லாமல் வேறு யார்? மூன்று வருடங்களுக்கு முன்பே சில கணக்குகளைப் போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.

வியாழக்கிழமை, விடுமுறை நாள் என்பதால் சாய்பாபா கோவிலில் கூட்டம் அதிகமாகத் தென்பட்டது.

வெண்ணிற சல்வாரில் அமைதிப்புறாவாக தேன்மொழி. நெற்றியில் அரக்கு நிறத்தில் பொட்டு. உற்று நோக்கினால் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் எனும் வகையில் சிறிய சைஸில் இட்டிருந்தாள்.

செவிகளில் சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட நட்சத்திரத்தோடு. லேயர்ட் கட் செய்யப்பட்டிருந்த கூந்தல் நடு முதுகு வரை கருகருவென வளர்ந்திருந்தது.

அவள் அணிந்திருந்த சல்வார் டாப்பின் கைகள், முழங்கையின் சற்றுக் கீழ் வரை நீண்டிருந்தன. கழுத்தைச் சுற்றியும், கைகளிலும் பார்டராக இலைப்பச்சை, மஞ்சள் நிற பட்டு நூல் வேலைப்பாடு. அதற்கு தோதாக ஒரு சில்க் துப்பட்டா.

மிகையில்லாத வகையில் சிம்பிளாக வந்திருந்தாள். அதிலேயே அவள் பளிச்சென்று தெரிய, தம்பி தேவானந்த் கூட அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி வரும்போது,

“இந்த டிரெஸ்ல உன் முகம் பளிச்சுன்னு இருக்குக்கா. கொஞ்சம் சிரியேன். இன்னும் ரொம்ப அழகா தெரிவ.” என்று தன் அக்காவின் அம்சமான தோற்றத்தைப் பாராட்டியிருந்தான்.

“எப்படி? இவ்ளோ போதுமா?” உதடுகளை இழுத்துப் பிடித்துப் பற்களை ஈயெனக் காண்பித்தாள் தேன்மொழி.

“போக்கா! எத்தனை மாசங்கழிச்சு வந்திருக்க. உன் சிரிப்பைப் பார்க்க ஆசைப்பட்டுப் போய்க் கேட்டா, இப்படித் தான் பயங்காட்டுவியா நீ?” தன்னை முறைத்துப் பார்த்த தம்பியை தலையில் கொட்டினாள்.

“டேய் அவ்வளவு மோசமாவா இருக்கு என் சிரிப்பு, நீ பயப்படுற மாதிரி? போடா! தேனு ரொம்ப ஃபீல் ஆகிட்டா.”

பொய்யாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவளை கொஞ்சிக் கெஞ்சிக் கோவிலுக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தான்.

தங்கள் மக்கள் இருவரும் நீண்ட காலத்திற்கு பிறகு கலகலவென்று பேசி வம்பிழுப்பதைப் பார்த்திருந்த வனிதாவின் மனதில்,‘ஹப்பா! எல்லாம் சரியாகி போயிட்ட மாதிரி தான்!’ என்ற நிம்மதி பரவியது. இருவரையும் கண்டும் காணாமல் தன் வேலையினூடே ரசித்துக் கொண்டிருந்தார்.

வெற்றிமாறனுக்கு அந்த நிம்மதி வந்திருக்கவில்லை. இன்னும் கடக்க வேண்டிய பாதை இருக்கே? கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருப்பவருக்குத் தன் மகளைக் கணிப்பது கடினமா என்ன? நித்தமும் கல்லூரியில் எத்தனை மாணவர்களைக் கையாள்கிறார்?

தேன்மொழியிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார் தான்.

“கண்ணம்மா, நீ ஆறு மாசம் டைம் கேட்ட. இன்னும் ஆறு மாசம்ன்னு சொல்லி சொல்லி இப்ப ரெண்டு வருசத்துக்கு மேலேயே ஓடிப் போயிருச்சு. இனியும் உன் போக்குல விட்டா, நீ எப்பவும் கல்யாணத்துக்கு ஒத்துக்கப் போறதில்லை.”

“அப்பா… ப்ளீஸ்! எனக்குக் கல்யாணம் பண்ண வேண்டாம்ப்பா. இப்படியே விட்டுடுங்க.” மனம் கலங்கிப் போனதில் குரல் நடுங்கச் சொன்னாள்.

“சூர்யா இப்போ உன் லைப்ல இல்லை, புரிஞ்சிக்கடா! முடிஞ்சு போன சேப்டரை நினைச்சு இனி எத்தனை காலத்தைக் கடத்தப் போற?” அவரும் மகளின் கலக்கத்தை உள்வாங்கியவராக எடுத்துச் சொல்ல,

“ப்பா, என் சூர்யா ப்பா.” விழிகளில் கலக்கம், தவிப்புக் கூடி குளம் கட்டியது. இதழ்களில் சேர்ந்து கொண்ட துடிப்புடன் அப்பாவிடம் கெஞ்சினாள்.

“சூர்ய பிரகாஷ் உன்னை விட்டுட்டுப் போய் மூணு வருசம் முடிஞ்சிருச்சு கண்ணம்மா. அதை… இந்த நிலைமையை நீ ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். சூர்யாவை மற. மனசை மாத்திக்கிட்டு உன் வாழ்க்கையை வாழப் பாரு.”

“என்னால் அப்படி ஈஸியா மனசை மாத்திக்க முடியாது. உங்களுக்கு என்னை, என் மனசை புரியலையாப்பா? மறக்கச் சொல்றீங்களே? நீங்க அவரை மறந்துட்டீங்களாப்பா? அம்மா, அங்கிள், ஆன்ட்டிக்குத்தான் புரியலை. உங்களுக்குமாப்பா?”

அத்தனை வேதனையுடன் கெஞ்சிக் கொண்டிருந்த மகளை, தன் உயிரே என நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றவருக்குப் புரியாதா என்ன?

“புரியாம என்னம்மா. எனக்கு மட்டுமல்ல, எங்க எல்லோருக்கும் நல்லாப் புரியுது. உன் மனசைப் பார்த்ததுனால தான் ரெண்டு வருசம் உனக்காக, உன் மனசை ஆத்திக்க டைம் கொடுத்திட்டு நாங்களும் எங்களை ஆத்திக்கிட்டுக் காத்திட்டு இருந்தோம்.

ஆனால், இனி அப்படி உன்னை விட முடியாதும்மா. ரெடியாகிக்கோ கண்ணம்மா. நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நான் காமிக்கிற மாப்பிள்ளைங்க விபரங்களையும் போட்டோக்களையும் பார்த்துட்டு அபிப்பிராயத்தைச் சொல்லு. அப்புறம் அப்பா பார்த்துக்கிறேன்.”

அப்பா இந்தளவு அழுத்திச் சொல்லவும் கதி கலங்கிப் போனாள் தேன்மொழி. இனி எந்தக் காரணத்தையும் கேட்பதாக இல்லை எனும் நோக்கில் செவிடாகிப் போயிருந்த பெற்றோர்களை என்ன செய்ய முடியும்?

அந்த நேரத்தில் அவளுக்கும் அப்பா சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை.

“நான் எதையும் பார்க்க வேண்டாம்ப்பா. நீங்களே ஃபோட்டோ, டீடெயில்ஸ் எல்லாம் பார்த்து, இது தான் மாப்பிள்ளைன்னு ஆளை மட்டும் காமிங்க போதும்.”

ஆதரவு தேடும் சிறுமியாய் தன் மடியில் புதைந்து சத்தமில்லாமல் கண்ணீர் விட்ட மகளைக் கண்டு இதயம் கனமானது. மகளின் தலையை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தாலும், இம்முறை வெற்றிமாறன் மிகவும் உறுதியாக இருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பே தேன்மொழியின் சுயவிவரங்களைத் தமிழ் மேட்ரிமோனியல் இணைய தளத்தில் பதிந்து வைத்திருந்தார். அவளின் கல்யாணத்தைத் தள்ளிப் போடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?

இன்னும் இரண்டு ஜோடி கைகள் வெற்றிமாறன் ~ வனிதாவுடன் இணைந்து கொண்டனர். உறுதியான கூட்டணியின் பிடியில் சிக்கித் தவித்த தேன்மொழி கடைசியில் ஒப்புக் கொண்டாள்.

தன் மனைவியைவிட மகளின் குணத்தைத் துல்லியமாக அறிந்தவர் வெற்றி. அவருடைய மனதில் மகளைப் பற்றிய உணர்வுகள் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்தன.

வனிதாவும் தேன்மொழியை அறிந்தவர் தான். ஆனால், அவர் இயல்பு குணங்கள் வேறு. தன் மனைவியைப் போல் படபடவென்று பேசி, ஆழமான உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல், செண்டிமெண்டிற்கு இடம் கொடாமல் நகர்ந்து செல்ல வெற்றிமாறனால் முடியாது.

அதனால் தான் வனிதாவைப் போல் இவருக்கு மனம் நிம்மதி அடையவில்லை. மனைவியின் எண்ண போக்கை அறிந்தவருக்கு எப்போதும் போல் வியப்பு வந்தது.

அழகையும், வண்ணக் கலவைகளையும் கொண்டு விதவிதமான படைப்புகளை உருவாக்குபவள். கலையைப் பயிற்றுவிப்பவள். மெல்லிய உணர்வுகளில் சிக்காமல் எப்படி எல்லாவற்றையும் மேம்போக்காகக் கடக்க முடிகிறது?

வனிதா ஒரு ஆர்ட் டீச்சர். கலையை விரும்பி பாடமாகக் கற்று, அதனையே வேலையாக்கிக் கொண்டவர்.

நினைவுகளிலிருந்து மீண்டு இப்போது கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த மகன், மகள் மீது ஆராய்ச்சி பார்வையை வீசிய வெற்றியின் முகத்தில் வேறு உணர்ச்சிகள் எதுவும் வரவில்லை. கணிணியில் மணமகன் தேடலில் இறங்கினார்.

அக்காவின் மனதில் எத்தனை வேதனை என்பதை தேவானந்தும் அறிவான். தங்களுக்காக அவள் செய்யும் முயற்சிகளையும் புரிந்து வைத்திருந்தான். இவனுக்குள்ளும் வேதனையின் அரிப்பு இருக்கிறது தானே?

ஆனால், நெஞ்சத்தில் இருந்த அலைக்கழிப்பை கடந்து போக அவளுக்கு உதவ வேண்டுமல்லவா? அதனாலேயே குதூகலமான மூடுக்கு மாறியிருந்தான்.

தியேட்டர், ஷாப்பிங், வீட்டருகில் இருந்த பேக்கரி… இப்படி தினமும் ஏதோ ஒரு ப்ளான் வைத்துக் கொண்டிருந்தான் தேவானந்த். தேன்மொழியும் மறுப்புச் சொல்லாமல் உடன் சென்று வந்தாள்.

மும்பையில் வீற்றிருக்கும் மின்னணு விளையாட்டு நிறுவனம் (electronic gaming company) ஒன்றில் வேலையில் இருக்கிறவளை, சீனியர் லெவல் டிரெயினிங்கிற்காக சிங்கப்பூர் அனுப்பி இருந்தனர்.

ஆறு மாதம் டிரெயினிங் முடிந்ததும், அங்கேயே இன்னும் சில மாதங்கள் தங்கியிருந்து வேலையைச் செய்ய விருப்பமா எனக் கேட்க, சரியென்று விட்டாள்.

தான் இந்தியாவில் இருந்தால் தன்னைச் சும்மா இருக்க விட மாட்டார்கள். திருமணப் பேச்சு எழும். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கிடைத்திருக்கும் வழி என்று அலுவலக ஆஃபரை ஏற்றுக் கொண்டாள்.

அதுவுமில்லாமல் மும்பையிலும் இப்போது யாருமில்லை. அவளால் அங்குத் தனியாகப் போய் இருக்க முடியாத நிலை.

இப்படித் திடீரெனத் தனிமைப் படுத்தப்பட்டவளுக்கு இட மாற்றம், புதிய வேலைப்பளு, சூழல் யாவும் பெரிதும் உதவியது.

தன் மனவுளைச்சலிலேயே சிக்கிச் சுழன்று மூச்சு முட்டிப் போய் தவித்தவளுக்கு சிங்கப்பூர் அரவணைப்பைத் தந்தது என்றால் மிகையல்ல.

தேன்மொழி சிங்கப்பூர் சென்று எட்டு மாதங்கள் கடந்திருந்தன. பெற்றோரும் தம்பியும் ஒரு புறம், “உன்னைப் பார்க்கணும் போல இருக்கு தேனு. ஒரு வாரத்துக்காவது லீவ் எடுத்துட்டு வா.” என்று நச்சரித்து வரச் சொல்ல, இவளுக்குமே ஹோம் சிக்.

எட்டு மாதப் பிரிவும் தனிமையும் ஆறுதலளித்தது போலிருக்க, மனம் சற்று சமன்பட்டுவிட்டது போல் உணரவும், பத்து நாட்கள் விடுமுறை எடுத்து வந்துவிட்டாள். சென்னை வந்தும் நான்கு நாட்கள் பறந்து விட்டிருந்தன.

இங்கு வந்ததும் மீண்டும் பழைய நினைவுகள், ஏக்கங்கள், இதயத்தில் வலியைப் பெருக்கும் உணர்வுகள் ஏராளம் தான். முதல் இரண்டு நாட்களும் தன் நினைவிலேயே உழன்று, சோகப் பதுமையாக வலம் வந்தவளுக்கு, பெற்றோர்களின் மனக் கவலையால் வந்திருந்த தொய்வும், தம்பியின் வாட்டமும் துன்புறுத்தியது.

இப்படியே போனால் சரி வராது. தன்னால் அவர்கள் படும் வேதனையை முற்றிலும் களைந்திட முடியவில்லை, ஆனால் கொஞ்சம் நிம்மதியைத் தர முடியும் என நினைத்து அவர்கள் முன்னிலையில் தன் சோகத்தை இன்முக முகமூடிக்குள் பூட்டி வைத்தாள்.

திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாலும், மனதில் அத்தனை கலக்கம். வேறு எதிலும் ஒன்ற முடியாமல் ஒரு தவிப்பு!

தம்பியுடன் வெளியே கிளம்பி வந்தவளின் உள்ளத்தில் குழப்பம். கோவிலுக்குள் வந்தவள், இன்னது என வேண்டாமல், பாபாவின் மீது விழிகளை ஊன்றியவளுக்குத் தான் தேடும் அமைதி கிட்டியது போல் ஓர் உணர்வு.

பாபாவை தரிசித்துவிட்டு, அக்கா, தம்பி இருவரும் அக்கூட்டத்தின் ஊடே நடந்து கொண்டிருந்தனர்.

தேவானந்தின் கண்கள் அமைதியாகத் தன்னுடன் நடந்து வந்தவளை அவ்வப்போது தழுவி விலகின. அவள் முகத்தில் பலத்த சிந்தனை வந்திருந்தது. அப்பா முதல் நாள் பேசியதை நினைத்து தான் அக்கா யோசிக்கிறாள் எனப் புரிந்து கொண்டான்.

எப்படிக் கலகலவென இருந்தவள்? கலீரென்ற சிரிப்பும், சரவெடி போன்ற பேச்சும், குறும்பு கொஞ்சும் விழிகளும், பூவிதழ் புன்னகையும்… அந்தக் காலமும் மீண்டு வருமா?

அவனுள்ளம் சில நினைவுகளில் பயணிக்க எத்தனித்தது. நண்பன் அஜித் குமாருடன் சூர்ய பிரகாஷ் கவர்ச்சியான புன்னகையுடன் மனக்கண்ணில் தெரிய, இமைகளை இறுக்க மூடினான். ஒரு நொடியே இமை கூடியவனின் கண்ணோரங்கள் கசிந்து விட்டன.

அக்கா பார்த்து விடக் கூடாது என அவளைப் பார்த்தவாறே அவசரமாகக் கர்சீப்பை கொண்டு முகத்தைத் துடைத்தான்.

சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இனி வரப் போகும் காலங்கள் மாற்றங்களுடன் சந்தோஷத்தை திருப்பித் தர வேண்டும் என வேண்டியவாறு வாயில் நோக்கி நடந்தான்.

அதே நேரம், பானுமதியுடன் தரிசனம் முடிந்து திரும்பிய ஹரி கிருஷ்ணனை மென் ஸ்பரிசமாகத் தீண்டியது ஒரு சில்க் துப்பட்டா. அழகிய மஞ்சள் நிற வேலைபாடுடன் இருந்த இலைப்பச்சை நிறம் கொண்ட மெல்லிய துணி இவன் புஜத்தில் பட்டு, விரல் நுனி வரை மென்மையாக வருடியது.

அத்தீண்டலில் ஓரிரு விநாடிகள் விழி மூடி நின்ற ஹரியிடம் ஒரு சிலிர்ப்புப் பரவியது. அந்தத் துணியின் மென்மையில் லயித்தவனின் இதயத்தில் புது விதமான உணர்வு.

இவனின் நிலை இப்படியிருக்க, தேன்மொழி வேறு விதமாகத் தாக்கப்பட்டிருந்தாள். ஹரியிடம் இருந்து புறப்பட்ட வாசனை திரவியத்தின் நறுமணம் அவளை ஈர்த்தது.

ஒரு சில நொடிகள் அசையாமல் அப்படியே நின்று ஆழமான மூச்செடுத்து சுவாசித்தாள். பின்பு அவள் விழிகளில் ஒரு தேடல். மனதில் இனம் புரியாத தவிப்புச் சேர்ந்தது.

ஹரி சுதாரித்துத் தன் விரல்களின் இடையில் சிக்கியிருந்த துணியை நீக்கி, யாரவள் என அப்பெண்ணின் முகத்தைப் பார்க்க விழைந்தான்.

சரியாக… மிகச் சரியாக அந்த விநாடி தேன்மொழி ஆவலும் பரபரப்புமாக விழிகளில் ஏக்கம் சொட்ட அவளின் அவனைத் தேட ஆரம்பித்தாள்.

அவள் இங்கும் அங்கும் தலையைச் சுழற்றி வேகமாக நகர, அவளின் துப்பட்டா பறந்து ஹரியின் முகத்தில் விளையாடி விட்டு விலகிப் போனது. ஹரி அவளைக் காணும் முன் கூட்டத்தில் கலந்திருந்தாள்.

ஏனோ ஹரி அந்நிமிடம், அவனே அறியாத வகையில் ஏமாற்றத்தை உணர்ந்தான். ஆனால், அடுத்த நிமிடத்தில் தெளிந்து விட்டான். அவன் மனதில் உறுதியான நம்பிக்கை குடிகொண்டது.

“எனக்குன்னு பிறந்தவளைக் கூடிய சீக்கிரம் பார்க்கப் போறேன்.”

உதடுகளில் தவழும் புன்னகையுடன் காரை செலுத்திய மகனை குறுகுறுவெனப் பார்த்தார் பானுமதி.

“என்ன விசயம் ஹரி கண்ணா? ரொம்ப சந்தோஷமா தெரியுற. சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல.”

“பெருசா சொல்ற மாதிரி ஒன்னுமில்லமா. மனசு லேசா இருக்கு. அவ்ளோ தான். சரி நீங்க எப்ப கடலூருக்குப் போகணும்? அப்பா வந்து
கூட்டிட்டுப் போவாரா, இல்லை நான் உங்க கூட வரணுமா?”

“உன் கூடக் கொஞ்ச நாள் இருக்கலாம்ன்னு தான் கிளம்பி வந்தேன்டா. நாலு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள அப்பா நான் எப்ப வருவேன்னு எதிர்பார்க்கிறார்.

உள்ளூர்ல இருந்தும் பாட்டியை உங்க பெரியத்தையால சமாளிக்க முடியலையாம். மதியம் பேசும் போது அப்பா என்னைய வரச் சொல்லிக் கேட்டார்.

வீட்ல ரெண்டு ஆளை வேலைக்கு வச்சிருந்தாலும், ரெண்டு நாளு இப்படியும் அப்படியும் நகர முடியலை. நானில்லைன்னா அவங்களை உன் பாட்டி நச்சி எடுத்துருவாங்க.”

“ஹாஹா… அது தெரிஞ்ச கதை தானம்மா. அவங்களைச் சென்னைக்கு வந்து இருக்கச் சொன்னா, கேட்காம உங்க ரெண்டு பேரையும் கடலூருக்கு ஷிப்ட் பண்ண வச்சிருக்காங்களே!”

“அதானேடா, டெல்லிக்குப் படிக்கப் போன மகன் ஆறேழு வருசங் கழிச்சு வரப் போறான்னு ரொம்ப ஆசையா காத்திட்டிருந்தா, சரியா உங்க அப்பா அந்த நேரம் ரிடையரானார்.

‘என் அம்மாவை தனியா இருக்க வேண்டாம், அவங்களுக்கு இப்ப ரொம்ப வயசாகிப் போச்சு’ன்னு உங்க அப்பா அவங்களை இங்க வரச் சொல்லிக் கூப்பிட, சொந்த வீட்டையும் ஊரையும் விட்டு வர மாட்டேன்னு பிடிவாதமாகச் சொல்லிட்டாங்க.

கடைசில, நீ பிறந்து வளர்ந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாங்க தான் அங்க போறாப்ல ஆகிடுச்சு. பாரேன், அவங்க சாமர்த்தியத்தை?”

முகவாயில் கையை வைத்துக் கண்களை விரித்தவரை ஓரக்கண்ணால் பார்த்த ஹரி சிரித்தான்.

“சிரிக்காத டா. இப்ப நீ ஒரு இடத்துல, நாங்க ஒரு இடத்துலன்னு இருக்கும்படி ஆகிப் போச்சு. எனக்கு இது நல்லாவே இல்லைடா. அண்ணி கூட அத்தைகிட்ட சொல்லிப் பார்த்துட்டாங்க. ஆனால், அவங்க கேட்கவே மாட்டேங்கறாங்க.”

“ஹ்ம் புரியுதும்மா. சிலருக்குச் சில பிடிவாதங்கள். பாட்டி அப்படித் தான். முன்னமே அவங்க பிடிவாதம் பிடிச்சவங்க. இதுல அங்கேயே இருந்து பழகிட்டாங்க வேற.

நம்ம என்ன செய்றது. கடலூரை விட்டு சென்னைக்கு இனி அவங்க வந்தாலும் செட்டாகாதும்மா. அவங்க இருக்கிற வரை நீங்க விட்டுக் கொடுத்துப் போங்க.

என்னைப் பற்றி வொரி பண்ணிக்காதீங்க. நான் சமாளிச்சுக்கிறேன். வாரத்தில் நாலு நாள் குமரன் வந்திர்றான். விதவிதமான சமையல். நல்லாச் சுத்தமா, வாய்க்கு ருசியா, உடம்புக்கு ஆரோக்கியமா சமைச்சு வைக்கிறான்.

நேரங் கிடைக்கும் போது நான் அங்க வந்திர்றேன். அப்பாவும் நீங்களும் வந்து பார்த்துட்டுப் போறீங்க. வேற என்ன வேணும்? டெல்லியில இருந்ததை விட இப்ப பரவாயில்லைன்னு நினைச்சிக்கோங்க. சும்மா போட்டு மனசைக் குழப்பிக்காம, நீங்களும் அப்பாவும் நிம்மதியா இருங்கம்மா.”

அம்மாவுக்குச் சமாதானம் சொன்னான் ஹரி. பாட்டி பல வருடங்கள் அப்பாவைப் பிரிந்து இருந்திருக்கிறார். இப்போது அம்மாவின் டர்ன். இது தவிர்க்க முடியாத சுழல் வட்டம்.

படிப்பு, வேலை எனப் பலத்தரப்பட்ட காரணங்கள். விஞ்ஞானம், பொருளாதாரம் என்று மாற்றங்கள் வரும் போது, குடும்பம் மட்டும் அப்படியேவா இருக்கும்?

மனதில் நினைத்துக் கொண்டவன், இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லவில்லை. கண்டிப்பாக வருத்தப்படுவார் என்றே சொல்லவில்லை.

இவர்கள் வீட்டில் பணி புரிந்த தோட்டக்காரரின் மகன் குமரன். இவர்களின் உதவியால் படித்து வளர்ந்தவன். கேட்டரிங் படித்து முடித்துத் தற்போது ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் பணி புரிகிறான்.

அவன் தான் அடிக்கடி வந்து ஹரிக்கு வெகு ருசியாகச் சமைத்துத் தருகிறான்.

பானுமதி சென்னைவாசி. பிறந்து வளர்ந்தது, படிப்பு எல்லாம் சென்னையில். கடலூரில் திருமணம் முடித்திருந்தாலும் சென்னையில் தான் குடும்பம் இருந்தது. அவரும் பிரைவேட் செக்டர் கம்பெனியில் பணி புரிந்தவர். ஐந்தாறு வருடங்கள் முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.

ஹரி கிருஷ்ணனின் அப்பா கோபாலகிருஷ்ணன், தமிழக அரசு சுகாதாரத் துறையில் உயர் பதவியில் இருந்தார். அவர் ஓய்வு பெற்றதும் தான் அவர்கள் குடியிருந்து வீடு வாடகைக்கு விடப்பட்டு, கடலூருக்கு ஜாகை மாறியது.

சென்னையிலேயே இருந்திருந்தாலும், நல்லது கெட்டது என அடிக்கடி கடலூர் போவது தான். அதனால் பானுமதிக்கு கடலூரின் சூழலில் பெரிதாகக் குறையேதுமில்லை.

மகனை விட்டுப் பிரிந்து இருப்பது மட்டும் தான் பெரிய கஷ்டமாக இருந்தது. அவனுக்கு மணம் முடித்து மருமகள் வந்து விட்டால் அந்தக் கஷ்டமும் கொஞ்சம் நீங்கிவிடும் என்றே நினைத்தார்.

ஆனால், தான் மாமியார் ஆகும் போது மனதிலும் குணத்திலும் வேறு மாற்றங்கள் வரும் என்று பானுமதி எதிர்பார்க்கவில்லை.

“குமரன் வந்து சமைக்கப் போய்த் தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கேன் ஹரி. உனக்கொரு கல்யாணம் பண்ணி, நம்ம வீட்டுக்கு மருமகளைக் கொண்டு வந்துட்டா ஹப்பாடான்னு மூச்சு விடுவேன்.”

“இப்போ மட்டும் என்னவாம். அய்யோடான்னா மூச்சு விடுறீங்க.”

“டேய்! என் நிலமை உனக்கு நக்கலா போச்சா?“

கிண்டலாகக் கூறி கண் சிமிட்டிய மகனின் தோளில் முறைப்புடன் ஓர் அடி வைத்தார் பானுமதி.

“ஹஹ்ஹா… பின்ன என்னம்மா ஒரு கார்டியாலஜிஸ்ட்… என் கிட்டேயே மூச்சு விடுறதைப் பற்றி இப்படிச் சொன்னா?”

க்யூட்டி கொரோல்லா ‘தி க்ராண்ட் மேனர்’ என்கிற அந்த அழகிய லக்சுரி அபார்ட்மெண்ட் வளாகத்தில் வந்து பதுமையாக நிற்க, இருவரும் பேசிக் கொண்டே ஹரியின் இரட்டை படுக்கை அறை வீட்டை நோக்கிச் சென்றனர்.