தேன் மழையிலே – 2

தேன் மழையிலே

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 02:

ஆனந்தமே சாய் நாமமே
அற்புதமே சாய் கீதமே
அகண்டமே ஜோதிர்மயமே
சுந்தரமே சாய் ரூபமே (அதி)…

சென்னை மாநகர வாகன நெரிசலில் மூச்சு முட்டிப் போகாமல் புத்துணர்வுடன் வந்திறங்கினான் ஹரி கிருஷ்ணன்.

மற்றவர்களைப் போல் சிக்னலில் மாட்டி, நெரிசலைச் சமாளித்து, வேர்வையில் குளித்து, புகை, தூசு என மாசுபட்டுத் தான் இவனும் வந்தான். எனினும் எரிச்சலோ சலிப்போ எதுவுமில்லாமல் முகமலர்ச்சியுடன் காணப்பட்டான்.

எப்போது எதையும் எளிதாகக் கடந்து விடுபவனுக்கு எதிலும் சலிப்பென்பதே கிடையாது. அலட்டிக் கொள்ளாமல் எந்த ஒரு தருணத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டவனை அநேகமானோருக்குப் பிடிக்கும்.

இன்று ஹரி கிருஷ்ணன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்திருந்தான். தன் உபயோகத்திற்காக கார் வைத்திருந்தாலும் அழகுராஜா அபாச்சி அவனுடைய ஃபேவரைட். அவ(த)ன் மேல் தனியொரு பாசம். அவ்வப்போது சவாரி செய்யும் சாக்கில் சிநேகித்துக் கொள்வான்.

கியூட்டி கொரோல்லா (Toyota Corolla) ஹரி கிருஷ்ணனின் பிரேமம். அழகுராஜா அபாச்சி (TVS Apache) இவனின் சிநேகம். வாகனங்களில் சிநேகத்தையும் பிரேமத்தையும் கொண்டிருந்தவனுக்கு நிஜத்தில் இன்னும் பிரேமிக்கும் அமைப்பு வரவில்லை.

ஹரிக்குப் பிரேமம் செய்ய வாய்ப்பு கிட்டவில்லை எனச் சொல்ல முடியாது. இத்தனை வருடங்களில் வாய்ப்புகள் நிறைய வந்திருந்தன. ஆனால், காதலில் அவன் எண்ணம் போயிருக்கவில்லை. படிப்பில் மட்டுமே அவனின் நாட்டம். 

பட்டங்கள் வாங்கிய பிறகும் காதலோ திருமணமோ அவனைக் கவரவில்லை. தேர்ந்தெடுத்திருந்த துறையில் தனக்கான முத்திரை பதித்துக் கொள்ளுதலில் தான் கவனமாக இருந்தான்.

லைஃப் பாட்னரில் சுவாரசியம் காட்டாதவன், எப்போதும் நட்புகளுக்கு வாழ்க்கையில் இடமளித்து நல்ல சிநேகிதங்களைப் பெற்றிருந்தான். நட்புகளில் குறிப்பிட்டுப் பேசும்படி இருவர் இடம் பிடித்திருக்கின்றனர். அவர்கள் – நீத்து சாப்ரியா, ரிஷி கண்ணா.

ஹெல்மெட்டை கழற்றியவனின் உதடுகளில் இளம் புன்னகை வந்திருந்தது. அடர்ந்த சுருள் கேசத்தை விரல்களைக் கொண்டு கோதி சரி செய்தவன், தன் உடைமைகளுடன் அந்த அதி நவீன மருத்துவமனையை நோக்கி நடந்தான்.

வேக எட்டுக்களுக்கு அவசியமின்றி நெடு நெடுவென வளர்ந்திருந்தவனின் நடையே துரிதமாக இருந்தது. மூன்றாம் தளத்தில் சிறப்பாக அமைந்திருக்கும் மருத்துவர்களுக்கான பிரத்தியேக வாகன நிறுத்தத்திலிருந்து அந்தத் தனிப்பட்ட நுழைவு வாயிலை நிமிடத்தில் எட்டியிருந்தான்.

கீ கார்டை உபயோகித்து உள்ளே சென்றவன், தன் வருகையைப் பதிவு செய்யும் பொருட்டு அதற்குரிய மருத்துவமனை கணினியை நாடினான்.

‘சேவா ஹாஸ்பிடல்’ என அழைக்கப்படும் அந்தப் பல்நோக்கு மருத்துவமனையில் அனைத்துமே நவீனம். மருத்துவமனை மிகவும் நவீனமயமாக்கப்பட்டிருந்தாலும், செயல்பாடுகள் யாவும் மிக எளிமையாய் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தன.

ஹரி கிருஷ்ணன் அங்குப் பணியாற்றும் குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் (Pediatric cardiologist).

காலை வணக்கம், புன்னகை, தலையசைப்பு எனப் பணி செய்யப் போய்க் கொண்டிருந்தவனைத் தடுப்பது போல வந்தது பெண் புயலொன்று. திடீரெனப் பாதை வளைவில் வந்து ஹரியின் மீது மோதி நின்றாள் திலோத்தமா குமார்.

ஒரு நொடி தடுமாறிய ஹரி, பின் உடனே விலகி நின்றான்.

“டாக்டர் குமார்! கவனத்தை இங்கே வச்சு நடங்க.” பலத்த குரலெழுப்பாமல் கடிந்தான்.

“சாரி ஹரி! அவசரமாக வந்ததுல கவனிக்கலை. உங்களைப் பார்க்காமல் வந்து இடிச்சிட்டேன். பை தி வே, கால் மீ திலோ.”

அவனிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டவளின் உள் மனதில் மகிழ்ச்சி ஊற்று குபுகுபுவென எழும்பியது. வந்ததுமே அவனைப் பார்த்துவிட்ட ஆனந்தம்.

சில மாதங்களாக இவளுடன் சில டேஷுகள்… அவன் கவனத்தில் பட்டு கருத்தில் பதிந்து போயிருக்க,

“நீங்க பார்த்து வந்திருந்தாலும் இப்படித் தான் ஆகியிருக்கும்.” என்று அவளிடம் வள்ளென விழுந்தான்.


“நோ நோ! இப்போது நடந்தது தற்செயல் ஹரி. நம்புங்க.” யாசிக்கும் குரலில் தழைந்து பேசினாள் திலோத்தமா.


எதிரே நின்றிருந்தவளை முறைத்தபடி,“அப்போ இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது எல்லாம் நீங்க வேணும்ன்னு செஞ்சதா?” கேட்க,


“பர்பஸ்ஃபுள்ளா நான் எதுக்கு மோதி விழணும்? இல்லை எதுவுமே வேணும்ன்னு செஞ்சதில்லை.” சிரிப்புடன் சொன்னாள்.

மிக லவ்லி அவளின் சிரிப்பு. என்னமோ இவளுக்கும் ஹரிக்கும் இடையில் ஒரு ராசி போல்… இப்போதெல்லாம் அடிக்கடி இயற்பியல் சூத்திரங்கள் தப்பிப் போகின்றன. அதனால் இரசாயன எதிர்வினைகள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் எந்தளவு?

ஹரி அவளின் சிரிப்பைக் கண்டு கொள்ளவில்லை. ஏன் அவளையே என்றும் வேறு பார்வை பார்த்ததில்லை. இடுங்கிய பார்வையுடன் அங்கிருந்து விலகியவனின் உதடுகளில் முணு முணுப்பு.

“நீ தெரிஞ்சே தான் வந்து மோதியிருப்பேடி திலோ. மைதா மாவு மைதா மாவு.”

மைதா மாவின் நிறம் கொண்டிருந்தாலும், உண்மையில் திலோத்தமா ‘அழகி’ எனும் வர்ணனையில் சேர்த்தி. அம்சமான உடலமைப்பு உடையவள்.

ஹரிக்கு அதெல்லாம் கண்களுக்குத் தெரியவில்லையோ என்னவோ… அவனுக்கு திலோ சக மருத்துவர் மட்டுமே. வேறு விதமான ஈர்ப்பு அவனுக்கு வரவில்லை. வேதியியல் வொர்க் அவுட் ஆகவில்லை.

ஆனால், திலோத்தமாவிற்கு ஹரி கிருஷ்ணனை மிகவும் பிடித்திருந்தது. அதை மறைமுகமாக அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள்.

அவசரமாக வந்தவள் தெரியாமல் தான் இன்று அவன் மீது மோதியிருந்தாள். இதற்கு முன்பு நடந்த டேஷுகள் எதேச்சையாக, அவளின் கவனக் குறைவால், ஒன்றிரண்டு தடவை தவிர்த்திருக்க முடியும் என்றாலுமே நிகழ்ந்திருந்தன.

ஏதோ வேலையாக அத்தனை அவசரமாக வந்த திலோத்தமாவிற்கு, தான் வந்த அவசரம் ஒரு சில நிமிடங்களுக்குக் காணாமல் போய் ஒளிந்து கொண்டது. வந்த வேலையை மறந்து அங்கிருந்து வேகமாக விலகிச் செல்பவனையே இரசித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

‘ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக வெயிட் பண்றேன் கிருஷ். மனம் திறந்து உங்க கிட்ட பேசுவேன். நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் கான்ட்ராஸ்ட் கலரா இருந்தாலும் வெரி குட் மேட்ச். ஒரே ஃபீல்ட்ல இருக்கிறோம். நமக்குள்ள நல்லா ஒத்துப் போகும்.’

அவள் விழிகளின் முன் எதிர்காலம் வானவில்லின் வண்ணங்களுடன் அழகாய் விரிந்தது.

திலோ பெண்ணே! நிறம், ஃபீல்ட், இப்படியா வாழ்க்கை துணையுடன் மேட்ச் பண்ணுவது? குட் மேட்ச் என்பது மனம் சார்ந்தது.

ஹரி கிருஷ்ணனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன என்பது திலோத்தமாவிற்கு தெரியாது.

பெற்றோர் கோபாலகிருஷ்ணன் பானுமதி, ஹரியிடம் அவனுடைய பட்டங்களுக்கிடையிலும் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளக் கேட்ட போது மறுத்து விட்டிருந்தான். இப்போது தான் தானாகவே மனமுவந்து பார்க்கச் சொல்லியிருக்கிறான்.

“டாக்டர் தான் வேணும்ன்னு இல்லை. ப்யூச்சர்ல எங்களுக்குப் பிறக்கப் போற குழந்தைகளுக்கு நல்லா சிந்திக்கவும், சிறந்த ஒழுக்கம் பண்பாட்டைச் சொல்லித் தரவும் பக்குவப்பட்டவளா இருக்கணும். எந்த ஃபீல்டுனாலும் ஓக்கே. இல்லை டிகிரி முடிச்சிருந்து வேலைக்குப் போகலைன்னாலும் சரி. பொருத்தம் பார்த்துட்டுச் சொல்லுங்க. என்ன பொருத்தத்தை நீங்க பார்த்தாலும், ரொம்ப முக்கியம்… அந்தப் பொண்ணை என் மனசுக்குப் பிடிக்கணும்.”

ஹரி கிருஷ்ணன் தன் விருப்பத்தை அம்மா, அப்பாவிடம் சொன்னதையும் டாக்டர் திலோத்தமா அறியாள். அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தக்க சமயம் வருமா?

“ஹாய் இதயா, குட் மார்னிங்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இன்னைக்கி இந்த இதயா குட்டியின் லிட்டில் ஹார்ட் என்ன சொல்லுது?”

“குட் மார்னிங் டாக்டர்!”

எட்டு வயது சிறுமி இதயா. ஹரியைக் கண்டதும் புன்னகைக்க முயன்றாள். அயர்ச்சியாக இருந்தாலும் சரி, தூக்கக் கலக்கமாக இருந்தாலும் சரி, ஹரியின் வருகையின் போது இதயாவின் முகம் மலர்ந்துவிடும்.

அவளின் இதயத்துடிப்பை தன் சிகிச்சையின் மூலம் சீராக்கி இருக்கும் டாக்டர் ஹரி கிருஷ்ணன் மேல் அந்தச் சின்ன இதயத்திற்கு அன்பு தோன்றி இருந்தது.

“இதயா நேத்து என்ன செய்தீங்க? டிராயிங் பண்ணீங்களா இல்லை அம்மா கூட போர்ட் கேம்ஸ் விளையாடினீங்களா?”

“டிராயிங் பண்ணேன். அம்மா, என் ஸ்கெட்ச் நோட் தாங்க.”

இதயாவை பரிசோதனை செய்தவன் சில நிமிடங்கள் அவளிடம் உரையாட, அச்சிறுமியும் ஆர்வமாகிப் போனாள். தான் முந்தைய நாள் வரைந்த படங்களை அவனுக்குக் காண்பித்தாள்.

அன்றைய காலை ரௌண்ட்சில் இருந்தான் ஹரி. ஒவ்வொருவராகப் பார்த்துவிட்டு வந்தவன், நியோனேட்டல் பிரிவில் நுழைந்தான். அங்கு பிறந்து சில நாட்களேயான இரண்டு பூ மொட்டுகள்.

அந்த பேபீஸ்க்கு பரிசோதனை எல்லாம் முடித்து அவன் கடைசியில் போனது தீவிரச்சிகிச்சை பிரிவு. அங்கும் அவன் பார்க்கும் பேசண்ட்ஸ் அனுமதிக்கப்படிருந்தனர்.

சில மாதங்களே நிரம்பிய சிறுவன் அமீஷ். சயனோடிக் இதய நோய் ~ ப்ளூ பேபி சின்ட்ரோமினால் பாதிக்கப்பட்டிருந்தான். சவாலான கேஸ். அறுவை சிகிச்சைக்காகத் தயாராகிக் கொண்டிருந்தவனையும் பார்த்துவிட்ட பிறகு ஹரி தனது அறைக்குள் நுழைந்திருந்தான். 

வெளி நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது திலோத்தமா ஹரியை அழைத்தாள். குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் திலோத்தமா குமார், பிறந்த குழந்தை முதல் பதினாறு பதினேழு வயது பிள்ளைகள் வரை பார்ப்பதுண்டு.

ஒரு பதினான்கு வந்து பையன் வந்திருந்தான். அவனின் உடல்நிலையில் அவள் கண்டிருந்த அறிகுறிகளைக் கொண்டு இருதய நிபுணனிடம் பேச வேண்டி இருந்தது. அதனால் தான் ஹரியை அழைத்திருந்தாள்.

வேலையின் பொருட்டு இருவருக்கும் இப்படிச் சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. ஹரி தனது துறையில் கொண்டிருக்கும் திறமையே திலோவிற்குப் பிரமிப்பு. அப்படியே மெல்ல மெல்ல அவளின் ஹார்ட், அந்த ஹார்ட் ஸ்பெஷலிஸ்டின் புறம் சரிந்திருந்தது.

அன்று வியாழக்கிழமை. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களாக இருந்ததால் சென்னை வீதிகளில் மக்கள் வெள்ளம்.

ஹரி தன்னுடைய அம்மாவுடன் சாய்பாபா கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

“ஹரி, உனக்குன்னு ஒருத்தி எந்த ஊர்ல பிறந்திருக்கான்னு தெரியலையேடா. ஜாதகங்கள் எதுவும் செட்டாகாமலேயே நாள் போகுது. நீ பொண்ணு பார்க்கச் சொல்லி மூணு மாசமாச்சு. வர்ற தை மாசம் இல்லை மாசி மாசம் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தோம். எதுவும் இன்னும் தகைஞ்சு வராம தள்ளிப் போய்ட்டே இருக்கு. எங்கே அமைப்பு எழுதி இருக்கோ தெரியலையே?”

கவலை சொட்டும் குரலில் பானுமதி பேசிக்கொண்டு வந்தார்.

“பார்த்துட்டே இருங்க. எனக்குன்னு ஒரு பொண்ணு எங்கேயாவது காத்திட்டிருப்பா. அவ வரும் போது வரட்டும்மா. ஏன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க.”

அலட்டிக் கொள்ளாமல் ஹரி தோளைக் குலுக்க, கடுப்பானார் பானுமதி.

“என்னத்தைச் சொல்ல, போடா! ஒரு நாளைக்கு எத்தனை இதயங்களைப் பார்க்கிறே? இதய நிபுணனான என் மகனுக்கு லவ் பண்ண ஒரு இதயம் கூடவா கிடைக்கலை? டெல்லிக்குப் படிக்கப் போனியே அப்படியே ஒரு நல்ல பொண்ணா, உன் மனசுக்குப் பிடிச்சவளா பார்த்துக் காதலிச்சு இருக்கலாமில்லை.”

“அம்மா! நான் படிக்கப் போனேனா இல்லை பொண்ணுங்களை சைட் அடிக்கப் போனேனா? ஒரு டாக்டரின் அம்மா மாதிரி பொறுப்பா பேசுங்கம்மா. அந்தப் பேச்சை விட்டுட்டு இப்போ கீழே இறங்கி வாங்க. கோவில் வந்துருச்சு.”

“என் வருத்தமும் ஆதங்கமும் உனக்கு எங்கே புரியுது. ஒரே மகனைப் பெத்து வச்சுருக்கேன். காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணினோமா, பேரன் பேத்தியைப் பார்த்தோமான்னு இல்லாம இப்படி இழுத்துட்டுப் போகுது.”

கவலையுடன் பேசிய பானுமதியின் கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்துவிட்ட ஹரிக்கு மனது கஷ்டமாகிவிட்டது. அம்மாவின் மனதைச்  சங்கடப்படுத்திவிட்டேனே என்று வருந்தினான். கார் கதவைத் திறந்து கீழே இறங்கி அம்மாவின் பக்கம் வந்தவன், அவர் தோளை ஒரு கையால் அணைத்தபடி மறு கையால் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“உங்க செல்ல மகனுக்கு உங்களைப் புரியாதாம்மா, ஹ்ம்? நீங்க வீணா கவலைப்பட்டு என்னையும் சங்கடப்பட வைக்கிறீங்க. எது நடக்குதோ எல்லாம் நல்லதுக்கேன்னு எடுத்துக்கோங்க. ரைட் டைம் வந்ததும் அந்தப் பொண்ணு நம்ம கண்ல படுவா. அவ்வளவு ஏன், இப்ப இதே நேரத்திலே நம்மளுடன் இந்தக் கோவில்ல கூட இருக்கலாம். யாரு கண்டா? வாங்க, நாம பாபாவைப் பார்த்துட்டு வரலாம்.”

மிகச் சரியாக அந்த நொடி, “இப்ப இதே நேரத்திலே நம்மளுடன் இந்தக் கோவில்ல கூட இருக்கலாம். யாரு கண்டா?” என்று ஹரி சொல்லிக் கொண்டிருந்த அதே நொடியில், க்யூட்டி கொரோல்லாவின் வலது பக்கம் வேறொரு வாகனம் வந்து நின்றது.

அதிலிருந்த தேன்மொழி தேவானந்துடன் இறங்கி கோவிலை நோக்கிச் செல்ல, ஹரி கிருஷ்ணன் பானுமதியுடன் இரண்டடி முன்னால் நடந்து கொண்டிருந்தான்.

ஹரியும் ஹனியும் சந்தித்துக் கொள்வார்களா?