தீராதது காதல் தீர்வானது – 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 9 :
அன்பே, உன்னை
விட்டுவிடவா தொடர்ந்து வந்தேன்?
வாய்மொழியைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கும்
உன் விழி பேசும் மொழியைக்
கற்றுத் தேர்ந்தவனடி நான்
எளிதாக ஓய மாட்டேனடி பெண்ணே!
“குக்கூ..” என அழைப்பு மணி கூவியது. அப்போது தான் சமையலறையில் சிறிது வேலையை முடித்து வந்து லிவிங் ரூமில் அமர்ந்திருந்தார் டெய்சி.
“இந்த நேரத்தில் யார் காலிங் பெல்லை அடிப்பது? இப்பத்தானே ராஜ் கிளம்பிப்போனார். பெட்ரோவும் இரண்டு நாளா வெளியூருக்கில்ல போய் இருக்கான். ம்ம்.. ஸ்ஸ்.. அம்மா.. இந்த மூட்டு வலி வந்ததிலிருந்து என்ன அவஸ்தை? படக்குன்னு எந்திருச்சு போக முடியுதா?”
முன்னர்க் குளிர் காலத்தில் மட்டுமே வருத்திய மூட்டு வலி தற்போது எந்நேரமும் அவரை அவஸ்தைக்குள்ளாக்கிக் கொண்டிருந்ததில் வேதனை அடைந்திருந்தார்.
“ஒரு வேளை அமேசான் ஆன்லைன் டெலிவெரி வந்திருக்கோ.. பாக்கேஜை வெளியே வச்சிட்டு போயிருப்பான். அதான் திருப்பிப் பெல்லடிக்கலை.”
இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆன்லைனிலேயே தனக்கும் வீட்டிற்கும் பொருட்களை வாங்கும் டெய்சிக்கு, எதிர்பாராமல் ஒலித்த வாயில்மணி அழைப்பு யுபிஎஸ் அல்லது ஃபெடெக்ஸ் டெலிவரியாக இருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது.
மெதுவாக எழுந்து கதவின் அருகே செல்ல, அவரின் நினைப்பை பொய்யாக்கியபடி மற்றொரு முறை குக்கூ கூவியது. அந்தப் பக்கம் சில நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்த நபர் யாரென டோர் வியூயரில் பார்த்தார் டெய்சி.
வாட்டசாட்டமாக நின்றிருந்த இளைஞன் யாரென்று தெரியவில்லை டெய்சிக்கு. ஆனாலும், களையான அந்த முகம் அவன் தமிழன் என்றுணர்த்த கதவைத் திறந்தார்.
அதற்காகவே காத்திருந்தவன் விழிகளை ஒரு முறை வீட்டினுள் செலுத்திவிட்டு அவரை நோக்கி சிறு புன்னகையைச் சிந்த..
“நீங்க.. யூ தமிழ்?”
“எஸ் பாட்.. ஆன்ட்டி…” வெளியே நின்றிருந்தவன் ஒரு நொடி குழம்பினான். இது பாட்டியா இல்லை ஆன்ட்டியா?
டெய்சியின் மனம் ஆன்ட்டி என்ற அவனின் விளிப்பில் இளமையாகத் துள்ளியது. பின் அறுபதுகளில் இருந்தாலும் பத்து வயது குறைந்த தோற்றம்.. அவரின் உடையலங்காரம் அப்படி. முகப் பொலிவும், காருண்யமான விழிகளும்… வந்தவனுக்கு அவரைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. தன்னவள் கொஞ்சம் அவரின் சாயலில் இருந்தது தான் காரணமோ?
“என்னப்பா அப்படிப் பார்க்கிறே.. நீ யாரைப் பார்க்கணும்?”
நொடிகளில் தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவன், இரு கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லி, “ஐ’ம் ஆரியன் நேத்தன்.. டானியாவைப் பார்க்க வந்திருக்கேன்” என்றான்.
“ஆரியன்.. கேள்விப்பட்ட பெயரா இல்லையே..” மெல்லிய குரலில் அவர் தனக்குள் முணுமுணுத்தாலும், ஆரியனுக்கும் கேட்டது.
‘உங்களுக்கு என்னைப் பற்றி அவளாகச் சொல்லியிருந்தால் தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன்’ என்று நினைத்தவன், புன்னகைத்தான்.
ஆரியனின் கண்ணியமான தோற்றமும், பேச்சில் காட்டிய பணிவும், அவனின் அழகுத்தமிழ் உச்சரிப்பு மற்றும் ஆன்ட்டி என்ற அழைப்பும் டெய்சிக்கு அவனின் மேல் நன்மதிப்பை கொடுத்தது.
“உள்ளே வாப்பா” என்று அழைத்துப் போய் “டானியா” என்று விளித்தார்.
சில நிமிடங்கள் வெளியே காத்திருந்ததால் ஃப்ளோரிடாவின் வெப்பக் கதிர்கள் அவனை வேர்வையால் குளிக்கச் செய்திருந்தன. டிஷ்யூ பேப்பரால் முகத்தையும் கழுத்துப் பகுதியையும் துடைத்துக் கொண்டு, மனதில் சிறு குழப்பமும் சஞ்சலமும் இருந்தாலும் விழிகளில் ஆர்வம் படர டானியாவைக் காணும் ஆவலில் பார்வையைச் சுழற்றினான்.
மறுநாள் சந்திக்கலாம் என்றவன் நான்காம் நாள் தான் அவளைக் காண வந்திருக்கிறான். அவன் மேல் தப்பில்லை.
சொன்னபடி மறுநாளே அவளை அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை. சில முறைகள் முயன்றவன் விட்டுவிட்டான். ரொம்பவே அவளை வற்புறுத்துகிறோமோ என்ற எண்ணம் எழ, அவளை மேலும் வருத்த மனமற்றுக் காத்திருந்தான்.
அவள் அவனைத் திருப்பி அழைக்கவேயில்லை.. அந்த இரவு போய் மறுநாளும் கரைந்தது.
அதற்கடுத்து, ஆரியனுக்கு டானியாவைப் பற்றிச் சிந்தனையும் கவலையும் மூளையினதும் மனதினதும் பின்னணியில் ஓடிக் கொண்டிருந்தாலும் செயலில் இறங்க நேரமின்றிப் போனது.
வேறு வேலைகள் எதிர்பாரா வண்ணம் முளைத்தன. தான் இருந்து உடனே தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள். இருந்தும் இடையேயான இரவின் சில மணித்துளிகளின் ஓய்வில் அவளை அழைக்கத்தான் செய்தான். சுவிட்ச் ஆப் என வர கோபமும் இயலாமையும் சேர்ந்து அவனை எரிச்சல் படுத்தியது தான் மிச்சம்.
டாரியன் வில்லாஸின் அடுத்த ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தார்கள்.
ஆரியனுக்கு வான்கூவர் ப்ராஜெக்ட்டைப் போல் இந்த டாரியன் ப்ராஜெக்ட்டும் அதிமுக்கியமானதும் நெஞ்சிற்கு மிக நெருக்கமானதாகவும் இருக்க, அதற்கான ஆட்கள் இருந்தும் ஆரம்பக் கட்டத்திலிருந்து வழமைக்கு மாறாகத் தானே தலையிட்டு கவனித்து வந்தான்.
டாரியன் வில்லாஸ் முதல் தொடக்கக் கட்டத்திலேயே முக்கால்வாசிக்கும் மேலேயே விற்றிருந்தது. தற்போது செல்லர்ஸ் மார்க்கெட் — விற்பனையாளர்களின் கை ஓங்கியிருக்க, நிறையப் பையர்ஸ் டைம் சேர்ஸ்-யை போட்டி போட்டுக் கொண்டு வாங்கியிருந்தார்கள்.
டைம் சேர் (Time share) என்பது பகுதி நேரப் பங்குகள். ஒரு சொத்தை முழுமையாக வாங்காமல், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உபயோகிக்கும் வகையில் உரிமம் கொள்ளுதல்.
பொதுவாக விடுமுறை காலத்தில் தங்குவதற்கு ஏதுவாகக் கட்டப்பட்டிருக்கும் ரிசார்ட்டுகளில் சூட்ஸ், காண்டோமினியம், வில்லா வீடுகள் எனப் பல தரப்பட்ட பங்குகளை டைம் சேர் முறையில் விற்பனை செய்வதுண்டு.
வருடத்தில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரக் காலத்திற்கு எனக் குறிப்பிட்ட ஒரு ப்ரோபர்ட்டியை தங்கள் பெயரில் வாங்கிக் கொள்ளலாம். சீசனைப் பொறுத்து பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும்.
மூன்று ரிலீஸ் முடிந்து அடுத்த நாலாவது ரிலீஸ் தேதி, கோடை விடுமுறையை முன்னிட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென, அந்தத் தேதிக்குள் தாங்கள் தயாராக முடியாத நிலையில் இருக்கிறோம் என அந்த ப்ராஜெக்டின் சீனியர் இன்ஜினியர்ஸ் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டனர்.
அந்தத் தேதியில் வில்லாஸ் ரிலீஸ் ஆகவில்லையெனில் பையர்ஸூம் இன்வெஸ்ட்டர்ஸூம் அதிருப்தி ஆவதோடு, அந்த டைம் பீரியடுக்கு அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். கோடை காலத்திற்கான தங்களின் ஹோட்டல்ஸூம் டைம் சேர்ஸ் ரிசார்ட்ஸூம் மாதங்களுக்கு முன்பே முன்பதிவாகிவிட்ட நிலையில்.
வேறு வழியே இல்லை. தங்கள் தொழிலின் மேல் எந்தவொரு கரும்புள்ளி வரக்கூடாது. ரிலீஸ் திட்மிட்டபடி தேதியில் நடந்தாக வேண்டும். மிக முனைப்பாகவும் தீவிரமாகவும் செயல்பட்டான்.
தொழலில் சின்னமாக ஒரு சறுக்கலுக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது எனக் கவனமாக இருப்பவன் ஆரியன். அப்படி இருந்தும் அவ்வப்போது இப்படி இக்கட்டான நிலையில் சிக்கிக் கொள்வதுண்டு.
சிறப்பாகத் திட்டமிட்டு இயங்கி வரும் தொழில்களில் நித்தமும் ஏதாவது புது பிரச்சனைகள் முளைவிடத் தான் செய்தன. மிக முக்கியமானவைகளில் இவன் நேரிடையாகத் தலையிட்டு உடனே தீர்த்து வைப்பான்.
இரு நாட்களை இந்தப் பிரச்சனைகளே முழுங்கிவிட, ஒருவாறாகச் சமாளித்துத் தீர்த்து வைத்துவிட்டு, இதோ வந்து நிற்கிறான்.
“டானியாம்மா.. டானீ…”
அவள் மேலே தனது அறையில் இருந்தாள். வரும் அரவமே இல்லை.
“மூணு நாளா நல்ல ஃபீவர் அவளுக்கு. மார்னிங் தான் கீழேயே வந்தா. கொஞ்ச நேரம் தாத்தாட்ட பேசிட்டு இருந்தா. பிறகு ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு அவ ரூமிற்குப் போனவ தான்.. கதவைச் சாத்திவிட்டு தூங்குறாளோ, இல்லை, காதுல ஹெட் செட் மாட்டிட்டு இருக்காளோ.. தெரியலையே…”
“ஃபீவரா.. இப்ப எப்படி இருக்கா பாட்டி?”
சற்றுப் பதட்டத்துடன் கேட்டவனைப் புருவம் உயர வியப்பைத் தேக்கி டெய்சி பார்க்க..
“அது தான் ஃபோன் ரீச் ஆகலையா? என்னாச்சு திடீர்னு ஃபீவர்.. இஸ் ஷி ஆல்ரைட் நௌ?” அவன் தொடர்ந்து கேள்வி எழுப்பினான்.
ரெஸ்ட்லெஸ்ஸாக நின்றிருந்தவனைக் கண்டவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால், வெறும் ஊகத்தினால் என்ன செய்வதாம்.
‘எத்தனை நாளா நடக்குதாம்? சரியான அமுக்குணி.. எதையும் ஓபனா பேச மாட்டா. தனக்குள்ள ஒரு வட்டம் போட்டுட்டு நத்தை மாதிரி சுருண்டுக்கிறது. வித்தியாசமான பிறவி.’ இது டெய்சியின் மைண்ட் வாய்ஸ். பேத்தியை அறிந்தவராக அவர் மனதினுள் யோசனையோடு ஆரியனிடம்,
“இன்றைக்கி கொஞ்சம் பெட்டர்ப்பா.. ஃபீவர் இல்லை. தலைவலியும் இல்லைன்னு காலைல சொன்னா. எதையும் மனசுவிட்டுப் பேசணும். அப்பத்தானே என்ன ஏதுன்னு எங்களுக்குத் தெரியும்.
வயசான காலத்தில் இந்தப் பேத்தியின் கவலை தான் பெருங்கவலை. ஹ்ம்ம்.. உட்காருப்பா. நான் என்னன்னு போய்ப் பார்த்துட்டு, நீ வந்திருக்கன்னு சொல்லிட்டு வர்றேன்” என்றார்.
ஆரியனுக்கு வீட்டிற்குள் வரும் முன்னமே அவர் தான் டானியாவின் பாட்டி டெய்சி எனப் புரிந்து போனது. அவரின் டானியாவைப் பற்றிய கவலைகளுக்குத் தற்போது இவனால் என்ன சொல்ல முடியும்? எப்போதும் தனக்குள் சுருண்டு கொள்பவள் தான் தன் இதயம் தொட்டவள்.
ஆனாலும் இப்போதைய அவளின் மனநிலையும், அதனால் ஏற்பட்டக் குழப்பத்தின் காரணகர்த்தாவாகவும் இருப்பது தானல்லவோ? தன்னாலல்லவோ அவள் காய்ச்சலில் படுத்தது.
ஏன் தன் ஃபோன் கால்களை நிராகரிக்கிறாள் என்ற குழப்பத்தில் வந்தவன், அவளுக்கு உடம்பிற்குச் சுகமில்லை எனக் கேட்டதும் தவித்துப் போனான்.
டானியாவின் தந்தையிடம் தன்னைத் தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து கொண்டவன், தாத்தா பாட்டியிடம் இதுவரை பேசியதில்லை. டானியா சம்மதிக்கும் வரை தள்ளிப் போட்டான். வீணாகப் பெரியவர்களிடத்தில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் குழப்ப வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அவ்வாறு இருந்தான்.
‘நான் தவறு செய்துவிட்டேனோ? ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தால் இந்நேரம் இப்படிக் கீழே நின்று தவித்துக் கொண்டிருக்க வேண்டாம். அவளருகில் உடனேயே சென்றிருக்கலாம். சேச்சே.. என் ப்ரின்சஸ் மனமறிந்த பின்னர் தான் அனைவரிடமும் சொல்ல வேண்டும். அஸ்வின், பெட்ரோ, அவள் அப்பா… இவர்கள் மூவருக்கும் சொல்ல வேண்டியதா போச்சு. அதையே அவளிடம் எப்படியும் சொல்லி சமாளிக்கணும்.’
பலவாறாக, நொடிகளில் அவன் எண்ணங்கள் பயணித்தன.
மாடியை நோக்கிச் சென்றவரின் நடையில் தெரிந்த சோர்வில் அவரின் வலியை கண்டு கொண்டவன், “இஃப் யு டோண்ட் மைண்ட், நான் போய் டானியாவைப் பார்க்கவா? இவ்வளவு வலியோட இத்தனை ஸ்டெப்ஸ் ஏறி இறங்கினால் வலி அதிகமாகும்.”
நெற்றியை சுருக்கி டெய்சி யோசிக்க.. அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “ட்ரஸ்ட் மீ பாட்டி. டானியாவிற்கு என்னைத் தெரியும். பெட்ரோவிடம் விசாரித்துப் பாருங்க. அவருக்கும் எனக்கும் நல்ல பரிச்சயம் உண்டு. இந்தாங்க ஃபோன்..”
ஃபோனுடன் தன் விசிட்டிங் கார்டையும் அவரிடம் நீட்ட, அவனின் கண்களில் தெரிந்த நேர்மையும் பேச்சிலிருந்த கண்ணியமும் அவரைக் கவர்ந்து சம்மதம் சொல்ல வைத்தன.
“மேலே ரைட் சைட் இருக்கு அவ ரூம்.”
ஃபோனை மறுத்துவிட்டு விசிட்டிங் கார்டை மட்டும் வாங்கிக் கொண்டார். இரண்டிரண்டாகப் படிகளைக் கடந்து ஏறியவன், அவளின் அறைக்கதவை தட்டிவிட்டு அனுமதிக்காகக் காத்திருந்தான். பதிலில்லை. மீண்டும் சற்றுப் பலமாகத் தட்டினான்.
“கம் இன் கிராண்ட்ப்பா…” அயர்வாக ஒலித்த குரலில் உருகிப் போனவனாய் கதவை திறந்தான் ஆரியன்.
மாடிப்படிகளைக் கடந்து டானியாவின் அறை வாசல் வரை விரைவாக வந்தவன், சற்று நிதானித்து மெதுவாக உள்ளே சென்றான்.
டானியா விழிகளை மூடிப் படுத்திருந்தாள். இடது கையை மடக்கி நெற்றியில் வைத்திருந்தவளின் தோற்றத்தில் ஓர் அயர்ச்சி தெரிந்தது. விழிகளைச் சுற்றிப் படர்ந்திருக்கும் லேசான கருமை.. சோர்ந்து காணப்படும் முகம்.. நான்கு நாட்களுக்குள் அவள் உடல் கொண்டிருக்கும் மெலிவு…
நொடிகளில் கவலையுடன் தன்னவளை ஸ்பரிசித்த அவன் கண்கள் அவளின் சிறு மெலிவைக் கண்டதும் சுருங்கி விரிந்தன.
‘இப்ப தான் பேபி என் டிரீம் கேர்ள் மாதிரி சிக்குனு அம்சமா இருக்கிற.’
அந்நேரத்திலும் அவன் எண்ணத்தின் போக்கை எண்ணி உதடுகளில் மெலிதாகப் புன்னகை படர்ந்தது.
ஒல்லியாகத் தன் ப்ரின்சஸை அவன் பார்த்ததில்லை. உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு டானியாவினது என்றாலும் தற்போதைய மெலிவு அவளுக்கு அழகாகவே இருந்தது. முகத்தில் சோர்வு மட்டும் இல்லையென்றால்… தன் மனம் போகும் போக்கை எண்ணி லேசாகத் தலையில் தட்டிக்கொண்டான்.
தாத்தாவின் குரலை எதிர்பார்த்திருந்தவளுக்குச் சலனமே இல்லாமல் போக, அப்போது தான் அவனின் புதிய பெர்யூம் வாசனை நாசியை எட்டியது போலும். இமைகளைப் பிரித்தாள் டானியா.
ஆரியன் கொஞ்சம் தள்ளி நின்று அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைக் கண்டவள் விதிர்த்துப் போய் எழுந்தாள். அவள் எழுந்த வேகத்திற்குத் தலை சுற்றுவது போலிருக்க, தடுமாறியவள் அப்படியே அந்தக் குவீன் சைஸ் பெட்டில் தளர்வாக அமர்ந்தாள்.
“ஹே… பார்த்து. எதுக்கு இந்த அவசரம்? மெதுவா எழலாமில்ல?”
அவள் ஆரியனைக் கண்டதும், இது கனவா, இல்லை, நிஜமா எனப் புரியாமல் குழம்பி விரல்களால் ஒரு பக்கம் தலையைப் பிடித்தபடி இருக்க,
“தலை வலிக்குதா பேப்ஸ்” என அக்கறையாகத் தலயணைகளை ஹெட் போர்டில் அடுக்கியபடி விசாரித்தான்.
டானியா இன்னும் அந்நிலையிலிருந்து மீளவில்லை.
“ஹலோ” என்று அவள் விழிகளுக்கு முன் கையை விரித்து ஆட்டினான். அவனின் அசைவில் மலங்க மலங்க விழித்தவள், புறங்கையால் விழிகளைத் தேய்த்து விட்டுக் கொண்டு இமைகளைச் சிமிட்ட, ஆரியன் அவளின் கைகளில் கிள்ளினான்.
“ஸ்ஸ்ஆ.. ஏன் கிள்ளினீங்க?”
“அப்பாடா பேசிட்டியா. ஒரு வழியா இந்த உலகத்திற்கு வந்துட்டா என் ப்ரின்சஸ். இது நிஜம். கனவில்லைன்னு புரிய வைக்கத் தான்.”
கண் சிமிட்டி மிகக் கவர்ச்சியாகப் புன்னகைத்தான்.
“நிஜம்.. ஓ.. ஆரியன்! எப்படி நீங்க.. ஏன் வந்தீங்க? கிராண்ட் ம்மா கிராண்ட் ப்பா..”
ஆச்சரியமாய் இதழ்களைப் பிரித்தவள்.. பின் தன் வீட்டின் நிலையறிந்து படபடத்தாள்.
“ஹே ஏன் இந்த டென்ஷன்.. தாத்தா இல்லை. பாட்டிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.”
“சொல்லிட்டீங்களா.. அச்சோ.. வொய்?”
பரிதாபமாகப் பார்த்தவளின் நிலையைக் கண்டு மனம் நெகிழ, அவளின் தலையைப் பரிவாகத் தடவிவிட்டவன், “உன்னைத் தெரியும்னு மட்டும் சொல்லியிருக்கேன்” என்றான்.
“ஓ.. தேங்க்ஸ்! நான் உங்களைப்பற்றி யாரிடமும் ஷேர் பண்ணதில்லை.”
“தெரியும்.”
அவள் தன்னையும் தன் காதலையும் அங்கீகரிக்கவில்லை என்ற ஏக்கமும் சிறு வருத்தமும் எழ, ஒரு மாதிரி ஒலித்த அவனின் குரலில் சங்கடமுற்றாள்.
“பாட்டிக்கு என் நேம் சொல்லியும் யார்னு தெரியலை. நானே இன்ட்ரடியூஸ் பண்ணிக் கொண்ட பிறகும் தயங்கினாங்க. பெட்ரோவிடம் ஃபோன்ல கேட்டுப் பாருங்கன்னு சொன்னேன். அலௌவ் பண்ணாங்க. அப்படித்தான் மேலே வந்தேன்.”
ஆரியன் சொன்ன விதத்தில் பாதிக்கப்பட்டவளாய் முதல் முறையாகத் தானாகவே கை நீட்டி அருகில் இருந்தவனின் விரல்களைப் பிடித்து அழுத்தினாள். நம்ப முடியாமல் திகைத்தவனுக்குச் சிறு புன்னகையைப் பரிசாகத் தந்தாள்.
“இப்போ எப்படி இருக்கிறே பேபி? இன்னும் ஃபீவர் இருக்கா.. தலைவலி?”
“ம்ம்.. பெட்டரா இருக்கு. ஃபீவர் இல்லை…”
“யு லுக் வெரி டையர்ட். வா.. இப்படி வந்து பில்லோவில் சாய்ந்து கொள்.”
டானியா உணரும் முன், இரு புறமும் கை கொடுத்து இடையோடு பிடித்தவன் அப்படியே நகர்த்தி அவளைத் தலையணையில் சாய்த்து அமர வைத்தான்.
கூச்சத்தில் நெளிந்தவள் முகம் சிவந்து போனாள். அவளையே ரசனையுடன் பார்த்தவனை இமை உயர்த்திப் பார்த்தவளின் பார்வையில் காதலோடு சொட்டிய நாணம்.
காதலை பார்வையால் வெளியிட்ட காதலிக்கும் அதைப் பார்த்து நின்ற காதலனுக்கும் இதயத்தில் படபடப்பு! முதல்முறை தன் மனமுணர்ந்து வெளிப்படுத்திய காதலியின் காதலில் மயங்கி நின்ற ஆரியன், “ப்ரின்சஸ், இது நிஜமா? நான்கு இரவுகளும் மூன்று பகல்களும் என்ன மாற்றம் செய்தன? ஃபீவரின் மேஜிக்கா?” எனக் குறுகுறுவெனப் பார்த்தவனை ஏறிட முடியாது மறுபுறம் திரும்பிக் கொண்டு,
“யு டிஸ்டர்ப் மீ எ லாட்” என்க,
“ஹஹா” எனத் தன் அழகிய வெண்பற்கள் தெரிய மனம்விட்டுப் பலமாகச் சிரித்தான். அவசரமாக அவன் பக்கம் திரும்பி, “ஷ்ஷ்.. பாட்டி” என்றாள் ஜாக்கிரதையான பார்வையுடன்.
“கூல் டானியா.. இட்ஸ் ஓக்கே.. சரி கம்மிங் டு தி பாயிண்ட், சொல்லு என்ன முடிவு செய்திருக்கிறாய்?”
விழிமொழி சொல்வது போதாது, வாய்மொழியாய் பதிலைச் சொல் என்ற பிடிவாதத்தில் நின்றவனிடம்,
“ப்ளீஸ் சிட்” என்று அருகிலிருந்த ரெக்லைனரைக் காட்டினாள். அவள் சொன்னதும் அவளுக்காக ஆரியனும் அமர்ந்து கொண்டான்.
“நிறைய யோசிச்சேன்.. குழப்பமா இருந்தது. நோ சொன்னால் ஐ வில் மிஸ் யு டில் மை டெத்!!” கலங்கிய அவள் விழிகளில் ஏக்கமும் இயலாமையும் தெரிந்தது.
அவளின் உள்ளப்பூர்வமான காதலின் உணர்வுகளையும், போராட்டங்களையும் உணர்ந்தவனின் இதயம் அவளுக்காகத் துடித்து மருகியது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதையும் கரங்களையும் கஷ்டப்பட்டு அடக்கினான்.
அவள் முதன் முதலாய் மனம் திறக்கிறாள்.. பேசட்டும் என்ற நோக்கமாகப் பார்வையாளனாகினான்.
“ஆனால், ம்ம்.. ஐ குடிண்ட்.. ஹ்ம்ம்.. ஓகே சொல்ல பயம்.. தயக்கம். காரணம் என் லைஃப். அம்மா அப்பாவை பிரிந்..”
அவசரமாக டானியாவின் பேச்சில் இடையிட்டான் ஆரியன்.
“உஷ்ஷ்.. அதெல்லாம் பாஸ்ட். முடிஞ்சு போனதை மாத்த முடியுமா? குழப்பிக்காதே டியர்…”
திகைப்புடன் பார்த்தவளுக்கு இமைகளை மூடித் திறந்து அர்த்தத்துடன் புன்னகைத்தான்.
“உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன். பெட்ரோவிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. அப்படியே பேசி நல்ல பழக்கமாகிட்டோம்.”
“ஓ.. நோ க்ளூ. பெட்ரோ காமிச்சிக்கவே இல்லை. வரட்டும் அவன்.. மாட்டினான்.”
ஒரு குழந்தை போல் கோபம் கொண்டவளை ரசித்தவன், “உன் அப்பாவையும் எலைனையும் மீட் பண்ணியிருக்கேன்” என்றான்.
“வாட்!” அதிர்ச்சியில் எழுந்தமர்ந்தாள்.
“ஒரு பிஸ்னஸ் மீட்டிங்கில் அங்கிளை சந்திச்சேன். அதற்கப்புறம் சில தடவை பார்த்து பேசினோம்.”
“அப்போ நீங்கள்.. என்னை முதலில் பார்த்தலிருந்து எல்லாம் அப்பா.. அப்பாவின் ஏற்பாடா?”
திகைப்புடன் ஏமாற்றத்தோடு வெளி வந்த அவளின் குரல் ஆரியனை தாக்கியது. அவளின் எண்ணப்போக்கு சென்ற திசை சரியல்லவே..
வேகமாக அவளருகில் சென்று ஒரு காலை மடக்கி முட்டியை தரையில் பதித்து அமர்ந்த நிலையில் அவளின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“ஒரு மீட்டிங்கில் எதேச்சையாக அங்கிளை சில மாதங்களுக்கு முன்பு தான் டைரக்டா மீட் பண்ணேன். பட், ஐ நோ ஹிம் பிஃபோர். அதுவும் உன்னால் தான். ஃபர்ஸ்ட் டைம் நாம் வான்கூவரில் சந்திச்சமே… நியாபகம் இருக்கா?”
அவள் ஆமோதிக்க..
“நெக்ஸ்ட் டே, நீயும் அங்கிளும் வெளியே போகும் போது பார்த்தேன். தென் நீங்க டின்னர் சாப்பிடும் போதும்.. அந்தளவு தான் அவரை எனக்குத் தெரியும். உன் அப்பா என்ற நிலையைத் தாண்டி அவருக்கும் என் காதலுக்கும் நோ கனெக்ஷன். அவரை மீட்ல தற்செயலாகப் பார்த்த போது, உன் அப்பா எனத் தெரிந்தும் பேசாமல் வருவது சரியா?”
“இல்லை தான்..” என்று தலையசைத்தவள், நிம்மதி பெருமூச்சுடன் அவனைப் பார்த்து கேள்வியாய், “அம்மா?” எனவும்,
“உன் அம்மாவை பார்த்ததேயில்லை. தாத்தாவிடம் அறிமுகம் இல்லை. வேற ஏதாவது தெரியணுமா டியர்? என் பேமிலி.. அக்கா ஒருத்தி. நேம் ஆதிரா. மேரீட்.. ஒரு தம்பி.. நேம் அஸ்வின்” எனக் கடகடவெனப் பேசினான்.
எவ்வளவு அருமையானவன்? தன் அபரிதமான காதலால் என் மனதை கரைத்து விட்டானே. வருவது வரட்டும் என அக்கணத்தில் முடிவு செய்தாள்.
அவன் கடைசியாகச் சொன்னதில் அவள் கவனம் இல்லை. அஸ்வின் பற்றி அவன் சொல்லும் முன் அவசரமாக அவனின் வாயை பொத்தினாள்.
“ஐ வில் மேரி யு.. உங்களுக்காக.. உங்க காதலுக்காக.. கல்யாணத்திற்குச் சம்மதிக்கிறேன்.”
இருவரும் சில நிமிடங்கள் அசையாமல் அத்தருணத்தை உணர்வுப்பூர்வமாய் உணர்ந்தனர்.
“தேங்க் யூ சோ மச் ப்ரின்சஸ்…” அவளின் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான் ஆரியன்.