தீராதது காதல் தீர்வானது – 10

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 10 :

கொட்டும் மழை வெளியே..
கொட்ட கொட்ட விழித்திருந்தேன்
தழுவாத உன் கைகளிலும்
தழுவிய உன் நினைவுகளிலும்
தொலைந்து போனவளாய்!

டானியாவின் சம்மதம் பெற்றவுடன் ஒரு நொடி கூடத் தாமதிக்க ஆரியன் விரும்பவில்லை. இம்முறை வித்தியாசமாகத் தன் மனதிற்கினியவளை அணுக வேண்டும் என்று தான் வந்தான். காதல், அல்லது, திருமணம். இரண்டில் ஒன்று என்ற உறுதியுடன் இருந்தவனுக்குத் திருமணத்தின் மீது தான் அதிக நோக்கம்.

தன்னவளின் நிலையை அறிந்து வைத்திருந்தவனானதால் அவளைத் தன்னுடன் விரைவில் இணைத்துக் கொள்ளவே விரும்பினான்.
மேலும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னவள் எந்த மனநிலையில் சொன்னாள்… அதில் எந்தளவு உறுதி கொண்டிருந்தாள் என அவனுக்குத் தெரியவில்லை.

தன் மீதுள்ள அவளின் நேசம் உண்மையானது.. அவளின் காதல் மாறாத உறுதிகொண்டது. அதில் துளியேனும் சந்தேகமில்லை, அந்த அன்புக் காதலனுக்கு. ஆனால், அவளின் திருமண முடிவின் உறுதி பற்றி ஐயம் கொண்டான். ஆகையால், மிகத் தீவிரமாகவே செயல்பட்டான்.

அவளின் விரல்களோடு தன்னதையும் கோர்த்துக் கொண்டு டானியாவின் பாட்டி டெய்சி மற்றும் தாத்தா ராஜ்கிரண் முன் ஆஜரானவன் தன்னைப் பற்றிச் சொன்னதுடன் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்திலிருப்பதைப் பற்றியும் பேசிவிட்டான்.

டெய்சிக்கு ஆரியனின் வரவு யூகத்தைக் கொடுத்திருந்தாலும் தடாலெனத் திருமணத்தில் வந்து நிற்பார்கள் இருவரும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் அதிர்ச்சியில் சில நொடிகள் உறைந்து தான் போனார்.

ராஜ்கிரண் அரசல்புரசலாக ஆரியன் டானியாவை விரும்புவதை அறிந்திருந்தார். அதனால் அவனைப் பற்றிய குடும்ப விபரங்கள், அவனின் தொழில், பின்புலம் எனத் தெரிந்து வைத்திருந்தார். இருந்தாலும் பேத்தியின் படிப்பு முடியும் முன்பே திருமணமா என்று தயங்கினார்.

பேத்தி ஆரியனின் கை பிடித்தவண்ணம் அமர்ந்திருக்கும் நெருக்கமும், அவளின் விழிகளில் தெரிந்த மயக்கமும், உதடுகளில் உதிர்ந்த அழகிய புன்னகையும் டெய்சியின் கண்களுக்குத் தப்பவில்லை.

தன் மகள் மீதிருந்த வெறுப்பினால் எங்கே பேத்தி தன் வாழ்வினைச் சரியாக அமைத்துக் கொள்ளாமல் போய் விடுவாளோ என உள்ளூர பயந்திருந்தவர், இந்த அரிய சம்மந்தத்தை தெய்வம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என நன்றி சொல்லிக் கொண்டார்.
ராஜ்கிரண் ~ டெய்சி இருவரும் தனியாகச் சென்று பேசினர்.

“நம்ம மகளால் அவள் வயிற்றில் பிறந்தவள் எத்தனை பாட்டுக்கு ஆளாகி இப்படி அவஸ்தைப்பட்டுட்டு.. கல்யாணம்னா வெறுப்பாவே பேசிட்டு, கோபப்பட்டுகிட்டு என்கிறது தானே பெரும் கவலையா நம்மைப் படுத்திச்சு. நல்ல வேளையா நித்தம் நித்தம் நான் வச்ச வேண்டுதலுக்குப் பலன் கிடைச்சிருக்குங்க.”

“ஆமாம் டெய்சி. இருபத்தி ரெண்டு வயசுல மகள் நம்ம பேத்தியை பெற்றுக் கொடுத்துட்டா. ஆனால், அதே வயசுல பேத்தியின் படிப்பும் முடியலை. காதல், கல்யாணம் எதிலும் நாட்டமின்றிக் குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவில் பிடிவாதமும் அதிகம்.

நமக்குப் பின் என்ன செய்யப் போறான்னு மருகிட்டு இருந்தோம். பட்டப் படிப்புக்குப் பிறகாவது தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கச் சிந்திப்பாளான்னு பதக், பதக்ன்னு மனசுல எந்த நேரமும் ஒரு பதைப்பு இருந்துகிட்டே இருந்துச்சு நம்மளுக்கு.

அதுக்கெல்லாம் தீர்வாகக் கடவுள் ஆரியனை அனுப்பி வச்சிருக்கிறார். டானியாவின் மனசை எப்படியோ கவர்ந்துட்டான். அவளைப் போலவே பிடிவாதம் தான். சாதிச்சுட்டான். ஆனால், டானி படிப்பு முடிய இன்னும் ஒரு வருசம் இருக்கே. அதான் யோசனையா இருக்கு டெய்சி.”

“நல்ல நேரம் காலம் கூடி வந்திருக்குன்னு சந்தோஷப்பட்டுக்குங்க. இப்படி ஒரு நாள் அமையவேண்டும் என்பது தானே நம் விருப்பம். அவள் படிப்பைப் பற்றி எதுக்கு யோசிக்கணும்? இந்த நாட்டில் எப்ப வேணும்னாலும் படிச்சுக்கலாம். வயசு ஒரு தடையே இல்லை.

கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்தாலும் சமாளித்துப் படிக்கிறவங்க இருக்காங்க இல்லையா? ஒரு ப்ரேக் வந்தாலும் திரும்பப் போய்க் கண்டினியூ செய்யும் வசதி இங்குள்ள காலேஜஸ்ல இருக்கு. டானி திறமைசாலி. எந்த நிலையையும் சமாளிக்க அவளால் முடியும்.

எதுக்கும் டானிகிட்ட நிச்சயமா சரிங்கிறாளான்னு கேட்டுக்குவோம். படிப்பை நினைச்சு நல்ல திகைஞ்சு வந்திருக்கும் சம்மந்தத்தை விட வேண்டாம். கொஞ்சம் டிலே பண்ணாலும் அவள் பின்னடையும் வாய்ப்பிருக்கு.”

பின், இருவரும் டானியாவிடம் வாய் வார்த்தையாகச் சம்மதம் பெற்று ஆரியனிடம் தங்கள் சம்மதத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருமணம் சம்மந்தமான பேச்சுக்கள், தேதி, இடம், நிகழ்வுகள் என மற்றவைகளைப் பேச, தன் சார்பில் மாமா கௌதம் மற்றும் அக்கா ஆதிராவும் தொடர்பு கொள்வார்கள் எனச் சொல்லி, கிளம்பி விட்டான் ஆரியன்.

அதுவரை ஏதோ ஒரு தாக்கத்திலிருந்த டானியா, ஆரியன் விடைபெறுவதை அறிந்ததும் திருதிருத்தாள். விழிகளில் இன்னதென்று சொல்ல முடியாத உணர்வினைப் பிரதிபலித்து நின்றாள்.

ஆரியன் அவளின் தோற்றத்தை உள்வாங்கினாலும் விடுவிடுவென வெளிக்கதவை நோக்கிச் சென்றான். அவன் அப்படிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றவள், ஏமாற்றத்தால் கசங்கிய மனதின் எதிர்பார்ப்பை முகத்தில் தேக்கி அவன் பிம்பம் மறையும் வரை பார்த்திருந்தாள்.

கதவின் பின் மறைந்தவன் மீண்டும் கதவை திறந்து எட்டி பார்த்தான்.

“டானியா…”

இனிமையாக ஒலித்தவனின் குரலுக்காகவே காத்திருந்தவள், சிட்டாகப் பறந்து அவனருகினில் நின்றாள். அவள் வந்த வேகம் கண்டு மனதினுள் மகிழ்ச்சி குமிழ்ந்தாலும் அலட்டாமல் நின்றிருந்தான்.
இருவரின் விழிகளும் சில நொடிகள் சந்திக்க…

“ரொம்பக் குழப்பிக்காதே. ரிலாக்ஸ்டா இருடா. உன் அப்பாவிடம் நானே பேசறேன். டேக் கேர்!”

அவளின் மென்மையான கன்னத்தில் தன் அழுத்தமான நீள விரல்களால் மிக லேசாகத் தட்டியவன், “பை” என்றுவிட்டு, தன் காரில் ஏறி மறைந்தான்.

ஜே. பி. நேத்தன் வணிக நிறுவனக் குழுமங்களின் முடி சூடா மன்னனாகத் திகழ்பவன் ஆரியன். இருபத்தி ஒன்றில் ஆரம்பித்த அவனின் ஓட்டம் எங்கும் தொய்வின்றிச் சீராகச் சென்று கொண்டு இருக்கையில், இளைப்பாற அவனுக்கு ஏது நேரம்?

அவனது நாளேட்டில் ஒவ்வொரு மணித்துளியும் மிக இன்றியமையாததாகும். அப்படி இருக்கையில், டாம்பா – ப்ளோரிடாவில் இத்தனை நாட்கள் தயங்கி நின்றதிற்கான காரணம் அவனின் உயிரான டானியா மட்டுமே.

நினைத்தபடி அவளின் சம்மதம் பெற்றாயிற்று. இனி ஆரியன் அங்கே நிற்பானா? மறுநாள் விடியலில் நியூயார்க் நகரத்தில் இருந்தான். அங்கு அலுவல்கள் மட்டுமின்றி வேறு சில திட்டங்களையும் செயலாற்றும் பொருட்டுத் தங்கியிருந்தான்.

ஆரியன், கௌதம் பிரபாகரனின் தனிப்பட்ட எண்ணை அழைத்து டானியாவைப் பற்றிச் சொன்னவன், தங்கள் திருமணத்தை அக்காவுடன் இணைந்து முன்னின்று நடத்தக் கோரினான்.

கௌதமோ உடனே திருமணம் என்றதில் அசந்து தான் போனான்.

“டேய் மச்சான், நீ எங்கேயோ வசமா சிக்கிட்டன்னு நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. ஆனா உன்னோட சூப்பர் ஜெட் ஸ்பீட எதிர்பார்க்கலடா. லவ்ல இந்த மாமாவ மிஞ்சிட்டடா. பயபுள்ள செம ஸ்பீட்ல போற. பார்த்து… பாவம்டா என் தங்கச்சி, பயந்துற போகுது…”

“ஹஹா.. யாரு பாவம், மீ தான். அவளை நேர்ல பார்க்கப் போறீங்கல்ல அப்போ அவளிடமே கேளுங்களேன் யாரு ரொம்பப் பாவம்னு…”

“கண்டிப்பா கேட்டுட வேண்டியது தான். அப்படியே ஒரு பாண்டிங்கை போட்டு, செங்கல் வச்சு சிமெண்ட்ட பூசி எங்க கூட்டணிய ஸ்ட்ராங் பண்ணீற மாட்டேன்.”

“ஹஹா.. மாமா, உங்க ஐடியா அசத்தல் தான். டிரை பண்ணி பாருங்க, உங்க பாண்டிங் எப்படி வொர்க் அவுட் ஆகுதுன்னு. பட், எங்க அக்காவின் கூட்டணி தான் எப்பவும் தி பெஸ்ட்!”

என்னவோ அவனுடைய மாமா தன் முன்னால் இருந்து பேசுவது போல் சட்டைக் காலரை உயர்த்தி அட்டகாசமாகச் சிரித்தான் ஆரியன்.

அங்கே ஹவாயின் மௌவி தீவில் காலை ஏழு மணிக்கு ஹாயாக நடை பயின்று கொண்டிருந்த கௌதமிற்கும் மச்சினனின் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அதே நேரம் நியூயார்க் கில் மதியம் ஒரு மணி. தன் அலுவலகத்திலிருந்து தான் கௌதமுடன் பேசிக் கொண்டிருந்தான் ஆரியன்.

“அதையும் தான் பார்ப்போம் என் இனிய மச்சான். இப்பவே என் தங்கச்சியின் பவர் என்னன்னு எங்களுக்குப் புரியுதே. தி மெஜெஸ்டிக் ஆரியன் இப்படி வேலை நேரத்தில் என்னிடம் ரிலாக்ஸ்டா பேசுறதே என் தங்கச்சி செய்த மாயமல்லாமல் வேற என்னவாக இருக்க முடியும்?”

“ஹஹா ஹா..”

ரசித்துச் சிரித்த ஆரியனின் சிரிப்பு கௌதமிற்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது. இருந்தாலும் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினராக மட்டுமல்லாமல் ஆரியனின் நலம் விரும்பியாகவும் மேலும் பேசினான்.

ஜாலி மோடிலிருந்து சீரியஸ் மோடிற்கு வந்தான் கௌதம்.

“ஆரியா, டானியாவிற்கு இன்னும் வொன் இயர் ஸ்டடீஸ் இருக்குங்கற. அவ அன்டர்கிராட் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாமேடா? ஏன் இப்படி இவ்ளோ அவசரமா கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணனும்கிறே?
அவ நியூயார்க்ல படிப்பும் கையுமா இருக்கப் போறா. நீயோ அடிக்கடி டிராவல்ல பறந்துட்டு இருப்ப. அப்புறம் எப்படிக் குடும்பம் நடத்த போறீங்க ரெண்டு பேரும்?”

தான் ஆரியனுக்கு அக்கா என்ற உரிமை இருந்தும் இப்படியொரு கேள்வியை ஆதிரா தம்பியிடம் கேட்டுவிட மாட்டாள்.

தங்கள் தொழில்களைத் திறம்பட நடத்திக் கொண்டிருப்பவள், தொழிலாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தாலும், தன் விசயங்களைப் பற்றி அவனிடம் பேசுவாளேயொழிய அவன் நடவடிக்கைகளில் தலையிட மாட்டாள். தம்பியின் திறமை மேல் அபார நம்பிக்கை போலும்.

கௌதம் ஒருவனே ஆரியனை கேள்வி கேட்பவன். அக்காவின் கணவனாக அல்ல. அதற்கு முன்பிருந்தே இருவருக்குள் புரிந்துணர்வு இருந்தமையால்.

ஆரியன் தொழிலில் கால் பதித்த முதலிரண்டு ஆண்டுகளுக்குப்பின் கௌதம் நெருங்கிய தொழில்முறை நட்பில் வந்தான். தங்கள் தொழிலில் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க, தீர்வு காணவென இருவருக்குக்குள்ளும் அழகானதொரு தொழில்முறை உறவு மலர்ந்தது. அந்த உறவு தான் இன்று வரை நீடிக்கிறது.

தொழிலைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அந்த உறவு கொடுக்கும் உரிமை தான் கௌதமை ஆரியனிடம் இப்படிக் கேள்வி கேட்க வைக்கிறது.

“எத்தனை விசயங்களை தினம் தினம் சமாளிக்கிறோம். அப்படித்தான் சமாளிக்கணும். டிராவலிங்கை கொஞ்சம் கம்மி பண்ணினால் சரியா வரும்னு நினைக்கிறேன் மாமா.”

“தொழிலில் நாம சமாளிக்கும் விதம் வேற. குடும்பம்ங்கறது வேற விதமில்லையா ஆரியா? உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.”

“ம்ம்.. புரியுது மாமா. ஐ வில் ஹேண்டில் வித் கேர்.”

டானியாவின் மனநிலையைக் கௌதமிடம் பகிர்ந்து கொள்ளலாம் தான். நிலைகளைக் கடந்து மனைவியிடம் மாறா காதல் கொண்டு வாழும் அவனை விடச் சிறந்த ஆசானை ஆரியனுக்கும் தெரியாது தான்.

ஆனால், காதல் செய்து மோகிக்கும் உணர்வுகள் அல்லாமல் இன்னும் சில பல மென் உணர்வுகள், காதல் கொள்ளும் இருவரின் பிரத்யேக விசயம். காதலியின் உணர்வுகள் காதலனுக்கும், காதலனின் உணர்வுகள் காதலிக்கும் சொந்தமானவை.

டானியா தன் அம்மாவை பற்றிய கடந்து சென்ற நினைவுகளைப் பிடித்து வைத்துக் கொண்டு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதும், அதனால் ஆரியனின் காதலுடன் முழுமையாக ஒன்ற முடியாமல் தவித்துக் கிடப்பதும் ஒரு வகையான உணர்வுக் கலவை நிலை.

அந்நிலையில் தன்னவளின் மென் உணர்வுகளை மதித்து மிக மென்மையாகக் கையாள வேண்டியது தான் மட்டுமே. அவற்றைக் கௌதமிடம் கூடப் பகிர்ந்து கொள்ள ஆரியன் விரும்பவில்லை.

டானியாவை தன்னால் பார்த்துக் கொள்ள முடியும். தன்னால் மட்டுமே அவளின் இயல்பு நிலையைத் திருப்ப முடியும் என்று உறுதியாக நம்பித் தான் கௌதமுக்குப் பதிலுரைத்தான்.

இதுவரை எந்தப் பெண்ணிடமும் ஆர்வம் காட்டாதவன்… தொழிலை மட்டுமே நேசமாகக் கொண்டு பறந்து கொண்டிருந்தவன்… இப்போது ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருக்கிறான். இருபத்தி ஒன்பது வயதில் நிற்பவன் காதலில் திளைத்து சற்று இளைபாற விரும்புகிறான்.

ஆரியனை புரிந்து கொண்ட கௌதம், “சரி, இப்போ நாங்க யார்ட்ட பேசணும். வேற என்ன ப்ளானிங்..” எனக் கேட்க, இருவரும் திருமணம் பற்றிய பேச்சில் மூழ்கினர்.

தன் அக்கா ஆதிராவுடன் உரையாடிய ஆரியன், “ஆதிரா, எங்க வெடிங்ல என் சைடிலிருந்து ரெண்டு மெயின் க்ரைடீரியா இருக்கு. ஃபர்ஸ்ட் திங், டானியா சம்மர் ஹாலிடேஸ்ல இருக்கும் போதே வெடிங் நடக்கணும்.. அட் எனி காஸ்ட். ஐ நீட் சம் டைம் வித் ஹர் பிஃபோர் காலேஜ் ரீ-ஓபன்ஸ்.

செகண்ட்லி, டெம்பிள் வெடிங் நம்ம இடத்தில், இல்லை, டானியா, அவளின் அப்பா, பாட்டி-தாத்தா சாய்ஸ்ல எந்த இடமென்றாலும் ஓகே. பட், வெடிங் டின்னர் ப்ளஸ் ரிசப்ஷன் வொன்லி அட் சான் ப்ரான்சிஸ்கோ. நம்ம ஹோட்டல்ல… அஸ்வினை அந்த அரேன்ஞ்மெண்ட்ஸ்ல விட்ரு.

அக்கா, இன்னொன்னு.. டானியா அவளுடைய அம்மாவை எந்தளவுக்கு இன்வால்வ் பண்ணுவான்னு தெரியல. அவ அப்பாவிடம் இருப்பது போல் அம்மாவிடம் அவளுக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இல்லை. ஸோ, அவளுக்கு மனசு சங்கடம் வராத வகையில் நீ எல்லாமும் பார்த்துக்கோ” எனத் தன் அக்காவிடம் அத்தனை பொறுப்பையும் ஒப்படைத்து நீளமாகப் பேசியவன், தன்னவளின் மேல் மிகுந்த அக்கறையுடன் முடித்தான்.

ஆதிராவும் தம்பி சொன்னது அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டாள். பிறகு, “வொரி பண்ணிக்காம உன் பிசினஸ் வேலைகளைப் பார்டா. வெடிங் பற்றிய கவலையை எங்களிடம் விட்ரு” என்று தொடர்ந்தாள்.

“பட், நீ திரும்பி இங்க வரும் போது நமக்குள்ள தீர்க்க வேண்டிய கணக்கொன்னு இருக்குடா. பாவிகளா, மூணு பேரும் சேர்ந்து உன் லவ் மேட்டரை எனக்குத் தெரியாம மறைச்சிட்டீங்களே?”

“ஹஹாஹா.. யாரு மறைச்சது? உனக்கும் உன் அத்தானுக்கும் சொல்லாம விட்டேன். உன் கண்ணுக்கு தப்பியது மாமா கண்ணுக்கு தப்பிச்சா? இல்லையே!”

“என் தம்பியை ரிஷ்யசிருங்கர்னு நான் தப்பா எடை போட்டுட்டேன். போடா…”

கலகலத்துக் கொண்டே விடை பெற்றனர் இருவரும். நான்கு நாட்களுக்குப் பிறகு ஆரியன் நியூயார்க் கிலிருந்து இலண்டன் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

“ஹாய் ண்ணா.. கலக்கறீங்க போங்க. காதலை சொல்ல போறீங்கன்னு கூலா இருந்தேன். இப்ப கல்யாணம் பண்ணப் போறீங்கன்னு நிக்கறீங்க. அதுவும் வொன் மன்த் கேப்ல. செமையா மாட்டிவிட்டுட்டீங்க என்னை.. அண்ணியாருக்கு இந்த அஸ்வின் தான் உங்க தம்பின்னு தெரியுமா?”

குதூகலமாக ஒலித்த அஸ்வினின் குரல் ஆரியனின் களைப்பை சற்றே ஊதித் தள்ளியது. உதடுகளில் சிரிப்பு மலர ஆரியன் தம்பியை வம்புக்கிழுத்தான்.

“ஹஹா.. என் தம்பி பெயர் அஸ்வின்னு மட்டும் சொல்லியிருக்கேன். இந்த அஸ்வின் தான் அந்த அவளின் ப்ரண்ட் அஸ்வின்னு தெரியாது.”

“போச்சா எங்க ஸ்மூத் ப்ரண்ட்ஷிப்பு? நல்லா கோர்த்து விட்டுட்டீங்க பாருங்க…” சோகம் போல் அஸ்வின் சொல்ல,

“டேய் கோர்த்து விட்டுன்னு என்னடா பேச்சு?” கோபமில்லாமல் ஆரியன் கடிய,

“பார்ரா.. என் மொபைல ஆட்டய போட்டதுமில்லாம, போட்டோ கேலரியில் கை வச்சு.. டானியாவ பிடிச்சு ஜொள்ளி.. அவங்க என் ஃப்ரண்டுன்னு தெரிஞ்சதும் உங்க லவ்வுக்குள்ள என்னையும் இழுத்து கோர்த்து விட்டது யாராம்?” என்றான் அஸ்வின் விடாமல்.

உல்லாசமான குரலில் ஆரியன் பதிலுரைத்தான்.

“ஹஹா.. டேய்! உன் அண்ணியிடம் செமையான பாண்டிங்கை மிராக்கிள் க்ளூ (Miracle glue) போட்டு ஒட்டி வச்சிருக்கேல்ல.. நீயே சமாளி.”

“வொய் ப்ரோ, வொய் திஸ் கொலைவெறி? உங்க லவ் ப்ளாண்ட்ட
தண்ணி ஊத்தி வளர்க்க உதவினேனே. என் மேல் கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்ல…”

“என் தம்பி அஞ்சா நெஞ்சன். எதையும் சமாளிச்சுப்பான்னு நினைச்சு ஃப்ரீயா கிளம்பி வந்துட்டேன்.”

“ஏன் சொல்ல மாட்டீங்க? அஞ்சா நெஞ்சனா.. ஹாஹாஹா.. சரி விடுங்க பார்த்துக்கலாம். எவ்வளவோ பார்த்தாச்சு… பட் அக்காவும் மாமாவும் நேர்ல போறதுக்கு முன்னாடி அவங்களிடம் பேசிறணும்ணா.”

“அஸ்வின், நானே டானியாவிடம் சொல்லிர்றேன். நோ வொரீஸ்.”

சீரியஸ் மாடுலேஷனுக்கு மாறி ஆரியன் சொல்ல,

“நீங்க சொன்னாலும் நானும் எப்படியும் பேசத்தானே வேணும். நான் பார்த்துக்கிறேன். நீங்க நிம்மதியா கிளம்புங்க” என அஸ்வின் அந்தப் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டான். அண்ணன் தம்பி இருவரும் அலுவல்களைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசியபின் விடை பெற்றனர்.


இரவு நேரம்…

இடி மின்னல்களுடன் கோடைமழை வானத்தைப் பிளந்து ஊத்திக் கொண்டிருந்தது. அத்தனை மழையைப் பெய்யச் செய்தும் டாம்பாவின் வெப்பத்தை விரட்டியடிக்க முடியாத சோகத்தில் வருணன் கன்னத்தில் கை வைத்தபடி டாம்பா மக்களைப் பரிதாபமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

டானியா, தனது அறையின் மங்கிய வெளிச்சத்தில் நின்று கொண்டு கண்ணாடி சன்னலின் திரைச்சீலைகளை விலக்கி மழையைப் பார்த்தபடி நின்றிருந்தாள். பருவ மங்கையவளின் மன வெதுமையும் டாம்பாவின் பூமியை போலிருந்தது. எப்போதையும் விட இந்த நான்கு நாட்கள் மிகவும் கொடுமையாக இருந்தன.

தாத்தா, பாட்டி, பெட்ரோ, டைனர் என மென்னகையுடன் வளைய வருபவள், இரவில் தனிமையால் வெதும்பினாள். காரணம் அவளின் மன்னவன் ஆரியன். அன்று விடைபெற்று போனவன் இதுவரை இவளைத் தொடர்பு கொள்ளவில்லை.

‘ஓர் அழைப்பு.. ஒரு குறுஞ்செய்தி.. ம்ஹூம்.. ஏதுமில்லை…

சுதந்திரப் பறவையாய் திரிந்தவளின் முன்னால் ஏன் வந்து நின்றானாம்? அப்படி வந்தவன் ஏன் காதல் சொன்னானாம்? என்னைக் காதலி எனச் சொல்லி பிடிவாதம் ஏன் பிடித்தானாம்?

இப்படிக் கல்யாண முடிவு வரை இழுத்து வந்தவன் எதுக்காக என்னைத் தொடர்பு கொள்ளாமல் தவிர்க்கிறான்? போடா…’

சுற்று முற்றும் ஆவலாகப் பார்த்தாள் டானியா. அன்று இவள் சொன்ன ‘போடா’வும், அவன் சொன்ன ‘போய் விடவா ப்ரின்சஸ்’சும் நினைவில் வந்து தொலைத்தன.

அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் இப்போது நினைவுக்கு வந்து இம்சை செய்தன. அவன் அருகாமையில் நடந்த உரசல்களும் ஒற்றல்களும் நேரம் காலம் பார்க்காமல் வெட்கமின்றி எட்டி பார்த்தன.

ஆயாசமாகக் கட்டிலில் சாய்ந்தாள். அந்நேரம் அவளை மீட்கவென நல்லவேளையாக மொபைல் ரிங்கிற்று. அதனைக் கையிலெடுத்துப் பார்த்தவளின் கண்கள் வெறிக்க, மனமோ சில நொடிகள் சிணுங்கி பின் சீரானது.