தாத்ரி – 9

தாத்ரி 9

ஜனனி என்ற பெயரே மனதில் சுழன்றடிக்க, நிமலன் வீட்டிலிருந்து கிளம்பிய ஜீவா, அனுதரனுக்கு கால் செய்து “இந்த அட்ரஸுக்கு வா” என்றவன், நேரே போய் நின்றது கோவை மெட்டர்னிடி ஹாஸ்பிடலில்.

இவனுக்கு முன்பே வந்து அனுதரன் காத்திருக்க, இருவரும் உள்ளே சென்றனர். தங்கள் அடையாளத்தைக் காட்டி “எங்களுக்கு உங்க ஹாஸ்பிடல்ல, தோராயமா அஞ்சு அல்லது ஆறு வருஷத்துக்கு முன்னால பொறந்த ஒரு குழந்தையைப் பத்தின டீடெயில்ஸ் வேணும்”

“ஷ்யூர் சார்”

அவர்கள் மருத்துவமனைக் கணினியில் தேட “அந்த பீரியட்ல டெலிவரி கார்ட், நீங்க குழந்தை பிறந்ததை கார்ப்போரேஷனுக்கு அனுப்பின ரெக்கார்ட் எல்லாம் டாக்குமென்டாவும் வேணும்” என்றான் ஜீவா.

அவர்கள் தேடி எடுக்க முக்கால் மணியானது. அதற்குள் அனுதரன் அந்தச் சிறிய மருத்துவமனையைச் சுற்றி வந்தான்.

ஜீவா உட்கார்ந்திருந்த ரெக்கார்ட் ரூமில் இருந்த மூவரில் ஒரு பெண் யாருக்கோ தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்தாள்.

ஜீவா தான் கேட்ட கதவல்களோடு, தனக்குத் தேவையானதை, இந்த கேஸுக்கு உபயோகமானதை படம் பிடித்துக்கொண்டு, அங்கிருந்த நிர்வாகியிடம் “இந்த ரெக்கார்ட்ஸ் எல்லாம் எங்க கிட்ட இருக்கட்டும்” என்று, எழுதி கையெழுத்திட்டு விட்டு, ஆவணங்களுடன் கிளம்பி, அனுதரனை அலைபேசியில் அழைத்தான்.

அனுதரன் “நீங்க ஆஃபீஸுக்குப் போங்க சார், நான் ஒரு முக்கியமான விஷயமா வெளில வந்துட்டேன். டூ ஹவர்ஸ்ல வந்துடுவேன்” என்றான்.

அலுவலகத்திற்குச் சென்ற ஜீவா, தான் கைப்பற்றி வந்த பேப்பர்களை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். முதலில் வெண்பா பிறந்த தேதி. அதில் குழந்தை பிறந்த நேரம், எடை, பெயர், பெற்றோர் பெயர், பெண் குழந்தை என்ற தகவல் மட்டுமே இருந்தது.

குழந்தையின் தாய் சீதளா, மருத்துவமனையில் சேர்ந்ததற்கோ, டிஸ்சார்ஜ் ஆனதற்கோ எந்த சான்றும் இலலை. வெண்பா மட்டுமல்ல, கணிசமான எண்ணிக்கையில், வேறு சில குழந்தைகளுக்கும் இதே போன்ற தகவல்தான் இருந்தது.

இதைத் தவிர, அந்த மருத்துவ மனையில் இருந்த வசதிகளுக்கும், அவர்களது ஆவணங்களில் இருந்த உபகரணங்களுக்கும் பொருந்தவில்லை.

ஒரு ஆபரேஷன் தியேட்டர், லேபர் வார்டு, ஒரு ஸ்கேனிங் மெஷின், சில சிறு உபகரணங்களைத் தவிர அங்கு வேறு எதுவுமில்லை.

மருத்துவமனையும் அதிக நடமாட்டமோ, பரபரப்போ இன்றி அமைதியாகத்தான் இருந்தது.

சிறிது நேரம் கண்களை மூடி அமர்த்திருந்தவன், தன் ரைட்டிங் பேடை எடுத்து எழுதத் தொடங்கினான்.

கதவு தட்டப்பட்டு அனுதரன் உள்ளே வந்தான்.

“என்ன சார் செய்யறீங்க?”

“வாடா, நாம அள்ளிட்டு வந்த பேப்பர்ல மேலோட்டமா பாத்தாலே நிறைய கோளாறு தெரியுது. இவ்ளோ அவசரமா நீ எங்க போய்ட்டு வர?”

“சார், அந்த கோவை மெட்டர்னிடி ஹாஸ்பிடலுக்குள்ள போய்ப் பார்த்ததுல, அங்க டீரீட்மென்ட்னு எதுவும் நடக்கற மாதிரியே தெரியல. ஏதோ வசூல்ராஜா எம்பிபிஎஸ்ல வர செட் அப் ஹாஸ்பிடல் மாதிரியே இருக்கவே, அந்த ஹாஸ்பிடலோட லைசன்ஸ், என்ன பிரிவு அல்லது கேட்டகிரில பதிவு பண்ணி இருக்காங்க, அவங்களோட ஆம்புலன்ஸ்கான பதிவு, இதெல்லாம் செக் செய்யலாம்னு மெடிகல் கவுன்சில்ல போய் கேட்டு, அதிகாரிகளோட பேசிட்டு வரேன் சார்”

“ரிசல்ட் என்ன?”

“நான் நினைச்ச மாதிரி அந்த ஹாஸ்பிடலுக்கு பிரைவேட் க்ளீனிக்னு உரிமம் வாங்கி இருக்காங்க. ஆனா, மெட்டர்னிடி ஹாஸ்பிடல்னு சொல்லி, குழந்தைங்க பொறந்ததுன்னு ரெக்கார்டை மட்டும் வெச்சிருக்காங்க. பேஷன்ட் அட்மிட் ஆன மாதிரியே தெரியலை சார் ” என்று அந்த ஹாஸ்பிடல் லைசன்ஸின் நகலை நீட்டினான்.

“ம், நானும் அதைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன்”

“நான் வரும்போது ஏதோ எழுதிட்டு இருந்தீங்களே சார்?”

“மூணு மணிக்கு ஹேமந்த் வந்ததும் அதை டிஸ்கஸ் பண்ணலாம். இப்ப பசிக்குது. போய் சாப்பிடலாம், வா.


ஹேமந்த் வரும்போதே
“திடீர்னு முக்கியமான ஒரு மீட்டிங். மெஸேஜ் கூட பண்ண முடியல. முடிஞ்சதும் ஓடி வரேன்” என, தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டே வந்தான்.

ஜீவா “அமுதம் இன்ஃபெர்டிலிடி சென்ட்டர் விஷயம் என்னாச்சு ஹேமந்த்? சிந்துவைத் தெரியும்னாவது ஒத்துக்கிட்டாங்களா?” எனவும் ஹேமந்த் சிரித்தான்.

மூவரும் தங்களிடம் இருந்த விவரங்களைப் பட்டியல் இட்டதில், கோவை மெட்டர்னிடி ஹாஸ்பிடல் ஒரு கண்துடைப்பு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது போல், அவர்களது குற்றங்களின் நிழலை நிஜமாக்குவதற்கான இடமாக உபயோகப் படுத்துவது புரிந்தது.

ஜீவா “ஹேமந்த், இதுல மாநில எல்லைகளைத் தாண்டி குற்றம் நடந்திருக்கும்போது, இதை நெறிப்படுத்த அதிகாரம் (Regulatory Authorities) இருக்கறவங்களோட துணையோட அணுகறதுதான் நல்லது. நான் என் பாஸ் கிட்டயும், உங்க கமிஷனர் கிட்டயும் பேசிட்டு கூடிய சீக்கிரம் ஒரு ஹை லெவல் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யறேன். அதுவரைக்கும் நம்ம கிட்ட இருக்கற நடந்த சம்பவங்கள், சாட்சிகள், விவரங்கள் எல்லாத்தையும்
கோர்வையா சரி செஞ்சு பவர்பாயின்ட் ப்ரஸன்டேஷன் செய்யணும்” எனவும் மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

“அனு, நீ டேட்டாவை கம்பைல் (compile) செய்ய ஆரம்பி. இப்ப நாம இந்த கேஸுக்குள்ள இருக்கற அடுத்த கேஸை பார்ப்போம்”

ஹேமந்த் “கேஸுக்குள்ள கேஸா?”

“அதான் அந்த ரோஹிணி, வெண்பா கேஸ். அதுல எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு. அனு, என்ன எழுதறேன்னு கேட்டல்ல, இதான். ஹேமந்த், உங்களுக்கு இப்ப டைம் இருக்கா?”

“இன்னைக்கு இனி இந்த கேஸ்தான் ஜீவா, சொல்லுங்க”

ஜீவா, தான் எழுதியதை படித்தான்.

1 ரோஹிணி, ஜனனி , வெண்பா

2 சீதளா, சீராளன், வெண்பா

3 அங்கம்மா, ஜனனி, ரோஹிணி

4 வெண்பா சீதளாவின் மகளென்றால், ரோஹிணியுடனான உருவ ஒற்றுமை எப்படி சாத்தியம்?

5 சீதளாதான் வெண்பாவைப் பெற்றவள் எனில், ரோஹிணி எங்கே?

6 இதில் ஜனனி என்பது யார்? தையல் வகுப்பு நட்பைத் தவிர, இருவருக்கும் என்ன தொடர்பு? அதுவும் அங்கம்மா, தனக்கு வந்த, வரவேண்டிய பணக்கணக்கை எழுதிய கையேட்டில் ஒரே காகிதத்தில் இருவரது பெயரும் வர வேண்டிய அவசியமென்ன?

7 ஜனனி அங்கம்மாவிற்கு அதிகத் தொகையைக் கொடுக்கக் காரணம் என்ன?

ஹேமந்த் “நாம வேணா DNA டெஸ்ட்டு எடுக்கச் சொல்லலாமா?”

ஜீவா ” வெண்பாக்கு அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. அவங்க அம்மா பேர் வேறயா இருக்கு. ஆனா உருவம் ரோஹிணியைப் போல இருக்கு. திடீர்னு நாம போய் குழப்பி, அதனால அந்தக் குடும்பமும் குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது. அதோட அம்மாவோட DNA டெஸ்ட் எடுக்கறது ரொம்ப ரேர்”

அனு “பாவம் சார் வெண்பா” என்றான்.

“பக்கத்துல போனா என்ன பூதம் கிளம்புமோ தெரியலை. அப்படி ஏதாவது இருந்தா, இதுல சீராளனுக்கு என்ன, எது வரை தெரியும்னு எனக்கு ஐடியா இல்லை அனு”

ஹேமந்த் “வீரபாண்டியையும், தேவராஜனையும் புடிச்சு உலுக்குவோம். அவங்களுக்குத் தெரியாம இருக்காது. தேவைப்பட்டா சேம்பர்ல வெச்சு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியதுதான்” என்றான்.

ஜீவா “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க ஏசிபி சார். நாம நினைக்கிறபடி நடந்தா, அவங்க தானே அப்ரூவரா மாறிடுவாங்க. அதுக்கு முன்னால நான் ஒண்ணு, ரெண்டு விஷயம் செய்யணும்”

“ஓகே ஜீவா, அப்ப நான் கிளம்பறேன். என் சைட்ல ஏதாவது தெரிஞ்சா சொல்றேன். எல்லா ரெக்கார்ட்ஸும் அனுதரன்கிட்ட கொடுத்துட்டேன். இன்னொரு விஷயம், கமிஷனர் இன்னைல இருந்து, உங்க செக்யூரிடியை அதிகரிச்சிருக்கார்”

“தேங்ஸ் ஹேமந்த்”

“கமான் ஜீவா, சிந்து எப்படி இருக்கா?”

“அவளுக்கென்ன, பாஸ் வீட்ல அண்ணி கையால சாப்ட்டுகிட்டு ஜாலியா இருக்கா”

ஹேமந்த் சென்றவுடன், கமிஷனர், பிரபுதீரன் இருவருக்கும் பேசி, உடனடியாக மீட்டிங் நடக்க வேண்டியதன் அவசியத்தைச் சொன்னான் ஜீவா.

பல இடங்களுக்கு ஃபோன், ஃபேக்ஸ், இ மெயில்கள் பறந்தன.


மறுநாள் காலை பதினோரு மணிக்கு, அந்தச் சிறிய தெருவில் மூன்றாவதாக இருந்த ‘ட்ரெண்டிங்’ என்ற ஃபேஷன் டிஸைனிங் ஸ்கூலின் குட்டிப் பெயர்ப்பலகை ஜீவாவை வரவேற்றது.

பள்ளியின் ஓனர், ஆரம்ப மிரட்சிக்குப் பின் ” ஆமா சார், அப்ப ஜனனி, ரோஹிணி, தீபா, தேவிராணி எல்லாரும் இருந்தாங்க சார்” என்று ஒத்துக்கொண்டாள்.

“ரோஹிணி பத்தி…”

“ரொம்ப நல்லா தைப்பா சார். அவ காணாம போனதுமே போலீஸ் வந்து நிறைய கொடைச்சல்… ஸாரி ஸார், கேள்வி கேட்டாங்க ஸார்”

“அவங்க எல்லாரும் ஒரே பேட்சா, நல்லா பேசிப்பாங்களா? வயசு வித்தியாசம் இருக்கே மேடம்?”

“ஒரே வயசுல இருக்க இது ஸ்கூல் கிடையாதே சார். அதனாலயே எல்லாரும் நல்லா பேசுவாங்க. ரோஹிணி ஸ்கூல்ல படிச்சா. தேவிராணி காலேஜ் முடிச்சிருந்தா. தீபாவுக்கு பெரிய பசங்க இருந்தாங்க”

“ஜனனி பத்தி…”

“நல்ல வசதி, அழகு சார். குழந்தை இல்லை. ஆனா, அந்த வருத்தத்தை காட்டாம பேசுவாங்க. நான் லீவுல போனா அவங்க கிட்டதான் ஸ்கூலை பார்த்துக்க சொல்லுவேன். ஆனா…”

“ஆனா? ஏன் மேடம் நிறுத்திட்டீங்க?”

“அப்பவும் ரெண்டுவாரம் இருக்க மாட்டேன், பாத்துக்கங்கன்னேன். மூணு, நாலு நாளைக்குப் பிறகு, வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு அவங்க வரவே இல்ல”

“இது எப்பன்னு சொல்ல முடியுமா?”

“முடியும் சார்” என்ற அந்தப் பெண், தேதி முதற்கொண்டு சரியாகச் சொன்னாள்.

ஜீவாவின் பாராட்டில் “எங்க மாமியார் இறந்ததுக்குதான் சார் நான் போனேன். அதான் டேட் கூட கரெக்டா நினைவிருக்கு” என்றாள்.

அலுவலகம் வந்து தேதிகளை ஒப்பிட்ட ஜீவாவுக்கு ஜிக்ஸா பஸிலில் ஒன்று மட்டும் கிடைக்காத ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஏனெனில்,

1 ஜனனி வகுப்பில் இருந்து நின்ற அதே நாளில் இருந்துதான், ரோஹிணியைக் காணவில்லை என அவளது தந்தை சரவணன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

2 வெண்பா பிறந்த தேதியில் இருந்து சரியாக மூன்றாவது நாள்தான் அங்கம்மா, ஜனனி பணம் கொடுத்ததாக எழூதி இருந்தாள்.

3 ரோஹிணி காணாமல் போனதற்கும் ஜனனிக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.

4 அப்படியே வெண்பா
ரோஹிணிக்குப் பிறந்ததாகவே வைத்துக் கொண்டால், ரோஹிணி என்னவானாள் அல்லது அவளுக்கு என்ன ஆயிற்று?

5 சீராளனின் குடும்பத்திற்கும் ஜனனிக்கும் என்ன தொடர்பு?

பிரபு தீரனிடம் கற்றுக்கொண்ட தெரிந்ததை, சந்தேகங்களை, கேள்விகளை வரிசைப்படுத்தி எழுதினால், சில நேரம் பதிலும், சில நேரம் தீர்வும், அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதும் புரியவரும் என்ற பால பாடத்தை, தன்னை அறியாது செய்திருந்தான் ஜீவா.

தான் எழுதியவற்றை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தவன், ஏதோ தோன்ற, மீண்டும் அந்த தையற் பள்ளியின் ஓனருக்குப் பேசி “உங்க கிட்ட ஜனனி, ரோஹிணி இவங்க ஃபோட்டோ எதுவும் இருக்கா மேடம்? அட்மிஷன் சமயத்துல…”

“இல்ல சார். இது அவ்வளவு பெரிய ஸ்கூல் எல்லாம் கிடையாது சார். சும்மா வாய் வார்த்தையாதான் சேத்துப்போம். ஃபீஸ் கொடுத்தா, ரசீது தருவோம். அவ்வளவுதான் சார்”

“ஓகே மேடம்” என்றவன் உடனடியாக நிமலனுக்குக் கால் செய்தான்.

“சொல்லுங்க ஜீவா சார்”

“நிமலன், கோவையா, சென்னையா?”

“நேத்து காலைலதான் சென்னை வந்தேன். என்ன சார் விஷயம்?”

“அந்த ரிசப்ஷன்ல எடுத்த ஃபோட்டோஸ்ல உங்க பாஸ் சீராளனோட மனைவி சீதளாவோட ஃபோட்டோ எதுவும் இருக்கா நிமலன்? கிடைக்குமா?

“நான் வெண்பாவை மட்டும்தான் சார் ஃபோட்டோ எடுத்தேன். ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இருக்கலாம். ஒருரெண்டு, மூணு நாள்ல அனுப்பறேன் சார். பாஸோட வைஃப் சார். கொஞ்சம் பாத்துதான் கேக்கணும்” என்றவன் “ஸார்…” என தயங்கினான்.

“சொல்லுங்க நிமலன்?”

“அவங்களை சந்தேகப் படறீங்களா சார்?”

“கான்க்ரீட்டா (திடமாக) எதுவும் தெரியலை நிமலன். ஆனா,எந்த ஆப்ஷனையும் மிஸ் பண்ணக்கூடாதுல்ல?”

“ஓகே சார். நான் ஃபோட்டோ அனுப்பறேன்”


டாக்டர்”என்ன ஜனனி, இன்னும் நீங்க ரோஹிணி கிட்ட இந்த குழந்தை உங்களுக்காகதான்னு சொல்லலையா?” என்றதில், ரோஹிணி அதிர்ந்தாள்.

ஜனனிக்காகதான் குழந்தையை சுமக்கிறோம் என்று அறிந்ததும், அந்தச் சின்னப் பெண்ணின் கலவையான, கவலையான மனநிலையை வர்ணிக்க எந்த மொழியிலும் சொற்கள் கிடைப்பது கடினம்தான்.

நட்பின் நம்பிக்கை துரோகம், தன் எதிர்காலம், வயிற்றுப் பிள்ளை மீது முளை விட்டிருந்த வாஞ்சை, பிரசவம் குறித்தான பயம், பெற்றோரை, வீட்டை நினைத்து ஏக்கம் என உணர்வுக் குவியலாக இருந்தவளுக்கு, அதை வெளிப்படுத்த அழுவதைத் தவிர, வேறு வழி புலப்படவில்லை.

வலுக்கட்டாயமாக பிள்ளையைக் கொடுத்தாலும், ஜனனி அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்ட விதத்தில் ஒரு குறையும் சொல்ல முடியாது.

உணவு, உடை தொடங்கி, இனிமையான பாட்டு, நகைச்சுவையான திரைப்படங்கள் மட்டும்தான் போடுவாள்.

என்ன ஒன்று, மாதங்கள் ஓடவும், குழந்தையின் அசைவை, அது வயிற்றுக்குள் உதைப்பதை, சற்று அழுத்திக் கை வைத்தால், பதில் சொல்வதைப்போல் அங்குமிங்கும் உருள்வதை, தன் இஷ்டம்போல் எந்நேரத்திலும் கை வைத்து உணர்ந்து பார்க்கும் சமயங்களில், ஜனனியின் முக பாவங்களைப பார்க்கவே ரோஹிணிக்குப் பயமாக இருக்கும்.

ரோஹிணி, அவளது வயதுக்கு, அவள் அனுபவிக்கும் உணர்வுகளை இனங்காண முடியாது தவித்தாள். கூடவே, தன் குழந்தையின் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் வேர்விட்டு வளர்ந்தது.

சீராளனுக்கு தங்களது புகைப்படங்களை முன்னறையில் மாட்டுவது அறவே பிடிக்காதென்பதால், ரோஹிணிக்கு அவனது படம் எதுவும் காணக் கிடைக்கவில்லை. பொதுவாக அவள் வீடு முழுவதும் உலாத்தினாலும் ஜனனி எதுவும் சொல்வது இல்லைதான்.

எனினும் தனக்கிருந்த உபாதையிலும் கழிவிரக்கத்திலும் மூழ்கி இருந்த ரோஹிணி சமையலறை, டைனிங் ஹால், ஹால் என தனது நடமாட்டத்தை முடித்துக் கொண்டாள்.

ரோஹிணி (வந்த பிறகு) எப்போதும் மூடியே இருக்கும் ஜனனியின் அறைக்குள் ஒரு முறை சென்றிருந்தால், அங்கே சீராளன் உடன் இல்லாத நிலையில், ஜனனி தனக்காக மேஜையில் வைத்திருக்கும் அவனது புகைப்படத்தைப் பார்த்திருக்கலாம்.

ரோஹிணியின் மனதில், படத்திலாவது சீராளனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் வலுத்தது.


“ஜனனிமா, எப்டிடா இருக்க, நம்ம பேபி எப்படி இருக்காங்க?”

சீராளனுடன் வீடியோ காலில் இருந்த ஜனனி சுடிதார் அணிந்திருந்தாள். அவளது எட்டு மாத வயிறு ‘பம்’மென்று பருத்திருந்தது.

“நீங்களே பாருங்க. எப்ப பாரு ஒரே உதைதான்”

“நாதான் ஜனனி எல்லாத்தையும் மிஸ் பண்றேன். இவ்வளவு வருஷம் கழிச்சு நமக்கு கிடைச்சிருக்கற பாப்பாடா. எனக்கு உன் கூட இருந்து பாத்துக்க முடியாதபடி வசமா மாட்டிக்கிட்டு இருக்கேன். டெலிவரிக்கு முன்னாலயாவது வேலை முடியாமான்னு தெரியலை. ஒரு பத்துநாள் லீவாவது குடுங்கடான்னு கேட்டிருக்கேன். ஸாரிடா ஜனனிமா”

“பரவால்லத்தான். இங்க என் கூடவே இருக்கற மாதிரி டாக்டரே ஒரு ஆயாவை அனுப்பி இருக்காங்க. ஒண்ணும் பிரச்சனை இல்லத்தான். டெலிவரிக்கு நீங்க கண்டிப்பா வந்துடணும்”

“நிச்சயமாடா. நீ சரியா சாப்பிடு. நல்லதா படி. பாட்டு கேளு. தினமும் ஏதாவது ஸ்லோகம் சொல்லு. உனக்கும் பாப்பாக்கும் நல்லது”

“ம்”

“ஜனனிமா, இந்த டயத்துல நிறைய வளையல் போடுவாங்க இல்ல?”

“ஆமாங்க, வளைகாப்பு செய்வாங்க”

“அதுக்கு ஏற்பாடு செய்டா. என்னால வர முடியாட்டாலும் அதை செய்யாம இருக்க வேண்டாம். ஒண்ணு, ரெண்டு சொந்தக்காரங்களை கூப்பிடு. எனக்கு கை நிறைய வளையல் போட்டுக் காட்டணும், என்ன? ஏய், எதுக்குடீ அழற? நான் சீக்கிரம் வந்துருவேன் ஜனனிமா”

“நான் அழ மாட்டேத்தான். நீங்க சொன்னபடியே செய்யறேன். ஆனா, ஃபோட்டோ, வீடியோவெல்லாம் வேணாம். அவ்வளவு ஃப்ளாஷ், வெளிச்சம், எதுக்குத்தான் ரிஸ்க்கு? அந்த பயத்துலதானே நீங்க வீடியோ காலே எப்பவாவதுதான் செய்யறீங்க? வளையல் போட்டுட்டு நான் இதே போல வீடியோ கால்ல வரேன். சரியாத்தான்?”

சீராளன் “சரிடா, ஜாக்கிரதையா இரு. இது உனக்கு, இது பேபிக்கு” என்று இரண்டு முத்தங்களுடன் காலை கட் செய்தான்.

ஜனனிக்கு, தன் கணவனின் கரிசனத்தில் மனம் நெகிழ்ந்தாலும், இது அத்தனையும் அவன் குழந்தையை சுமப்பவளுக்கானது என்றதில் வலித்தது.

எத்தனை அக்கறை, விசாரிப்பு, அன்பு? சீராளன் எப்போதுமே இப்படிதான் என்றாலும், இந்த அன்பை தன்னால் உண்மையாக, நேரடியாக அனுபவிக்க இயலாமல் போனதில் மனது காந்தியது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான எல்லா ஏற்பாடும் அவளே செய்தாலும், தன் குழந்தை என்னும் உரிமையில், அதை உணர வேண்டி ரோஹிணியைத் தொடுவதும் வருடுவதுமாக இம்சித்தாலும், திடீரென

‘எனக்கும் அந்தக் குழந்தைக்கும் என்ன தொடர்பு?’

ரோஹிணி என்று ஒருத்தி இருப்பதே சீராளனுக்குத் தெரியாது என்பதை மறந்து,
‘சீராளனின் கருவை ரோஹிணி சுமக்கிறாள், இடையில் நான் யார்?’ என்று ஓடிய சிந்தனையில்
ரோஹிணின் மீது மெலிதான பொறாமை கூட வந்தது.


அன்று ஞாயிற்றுக்கிழமை. எப்போதும் தூங்கும் ரோஹிணியை எழுப்பாத ஜனனி அதிகாலையிலேயே எழுப்பினாள்.

“எழுந்திரு ரோஹிணி. நேரம் நிறைய இருக்கு. ஆனாலும், தலைக்கு எண்ணெய் வெச்சு குளிச்சுட்டு, மெதுவா ரெடி ஆனா சரியா இருக்கும்”

குளித்துவிட்டு, வழக்கம்போல் தளர்வான மேக்ஸியில் வெளியில் வந்தவளிடம், ஒரு புது பட்டுப்புடவை, நகைகள் எல்லாம் கொடுத்து “இதைக் கட்டிக்கிட்டு, நகையைப் போட்டுக்கோ”

“இதெல்லாம் எதுக்குக்கா? இது வரைக்கும் நான் புடவையே கட்டினதில்லை”என்று ஜனனியைப் பரிதாபமாகப் பார்த்தாள் ரோஹிணி.

ஜனனி மளமளவென சின்னவளைத் தயார் செய்து, பூஜையறையில் கோலம் போட்ட மணையில் அமர்த்தி, விளக்கேற்றி வைத்து, தனக்குத் தெரிந்த, சரி எனப்பட்ட வகையில் சாங்கியங்களைச் செய்து ரோஹிணியின் கையில் வளையல்களை அடுக்கினாள்.
கலந்த சாதங்களைப் பரிமாறினாள்.

உணவுக்குப் பின்னான மாத்திரை, தண்ணீருடன் நான்கு வெற்றிலையில் சுண்ணம் தடவி, சிறிது பாக்கு வைத்து, சுருட்டிக் கொடுத்தவள் “ரோஹணி, உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லு ” என்றாள்.

“எனக்கு இந்தக் குழந்தையோட அப்பாவை ஃபோட்டோலயாவது பார்க்கணும்க்கா”

அவளையே உற்றுப் பார்த்த ஜனனி “பாக்கலாம். கொஞ்ச நேரம் இப்படியே உக்கார்ந்திரு, நான் வரேன்” என்று தன் அறைக்குள் சென்றாள்.

ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தவளுக்குக் கால் நரம்பைச் சுருட்டி இழுத்தது. சாப்பிட்டது வேறு நெஞ்சைக் கரிக்க, பழக்கமில்லாத புடவை அதுவும் கனமான பட்டு வேறு, அவஸ்தையாக இருக்கவும், ஜனனியிடம் சொல்லிவிட்டு, அவிழ்க்கலாம் என அவளது அறைக்கதவைத் தட்ட, அது உள் வாங்கவும் லேசாகத் திறந்தாள் ரோஹிணி.

அவளைப் போலவே பட்டுப்புடவை, நகைகள், கையில் வளைகாப்பு வளையல்கள் அணிந்து, எதிர்ப்புறம் பார்த்து நின்றிருந்த ஜனனி, தன் மொபைலை அணைத்துவிட்டுத் திரும்ப, அவளது உப்பிய வயிற்றைப் பார்த்த ரோஹிணி
கடந்த பத்து மாதங்களில் இல்லாத தன் வாழ்நாள் அதிர்ச்சியைக் கண்ணுற்றதில் நினைவிழந்தாள்.