தாத்ரி – 8

தாத்ரி 8

அமுதம் கருத்தரிப்பு மையத்தின் அந்தக் குறிப்பிட்டக் கிளையில் தலைமை மருத்துவரது அறையில் இருந்தான் ஹேமந்த்.

தலைமை மருத்துவரின் முகத்தில் மிக மெலிதாக முதலில் வந்துபோன பதட்டத்துக்குப் பிறகு சுதாரித்து விட்டார்.

“ஏசிபி சார், என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“உங்க ஹாஸ்பிடல்ல வேலை பாக்கற சிந்துங்கற டாக்டரை ரெண்டு நாளா காணும்னும், அவங்க மொபைலும் உபயோகத்தில் இல்லைன்னு வரதாகவும் அவங்க அப்பா புகார் கொடுத்திருக்கார்”

அவரது மௌனமும் நெற்றியில் துளிர்த்த வியர்வையும் அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தது.

“ஆமா, அன்னைக்கு திடீர்னு அவங்களைக் காணும். என்னைக்கு, எங்க கம்ப்ளெயின்ட் கொடுத்தார்?”

ஹேமந்த் நிதானமாக “இப்பல்லாம், ஆன்லைன்லயே புகார் கொடுக்கலாம். ஆனா, அவங்களைக் காணும்னு உங்க தரப்புல இருந்து எதுவும் புகார் இல்லையே? அதோட அங்கம்மான்னு ஒர் ஆயா…”

குறுக்கிட்ட சீஃப் “அங்கம்மா வேலையை விட்டு நின்னு நாலு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. சில நேரம் அப்பப்ப வருவாங்க. இதை அவங்க இறந்தப்பவே போலீஸ் கிட்ட சொன்னோமே”

“சொன்னீங்கதான். ஆனா, தொடர்ந்து எழற புகார்னாலயும், இப்ப நைட் ட்யூட்டிக்கு வந்த பொண்ணைக் காணும்னு அவங்கப்பா கொடுத்த கம்ப்ளையின்ட் பேர்லயும், விசாரிக்க வந்திருக்கோம். அதோட…”

“அதோட”

“சில சந்தேகங்களின் அடிப்படையில் உங்க ஹாஸ்பிடலை சோதனை போட சர்ச் வாரன்ட்டோட வந்திருக்கோம். நீங்க முழு ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு நம்பறோம்”

“ஷ்யூர் சார்”

ஜீவாவின் ஆலோசனைப்படி, பாதுகாப்பு கருதி, சிந்துவின் தந்தையிடம் ஆன்லைனில் புகார் கொடுக்கச் சொல்லி, எஃப்ஐஆர் போட்டு, கமிஷனரிடம் விவரம் சொல்லி, சர்ச்வாரன்ட் வாங்கி இருந்தனர்.

சிறிது நேரத்தில் அனுதரனும், இரண்டு சிபிஐ காவலர்களும் வந்து இணைந்துகொள்ள, போலீஸார் தங்கள் தேடுதலை, விசாரணையைத் தொடங்கினர்.

ஹேமந்த், அனுதரன் இருவரும் சீஃப் டாக்டரின் அறையிலேயே சிந்து காணாமல் போன தினத்தன்று இரவு சிசிடிவி பதிவுகளைப் பார்க்க, அவள் சரியாக இரவு ஏழே காலுக்கு உள்ளே நுழைவதும், அவளுக்கு ட்யூட்டி இருந்த வார்டுக்கு செல்வதும், ஒன்பது மணிக்கு மேல் இன்னொரு நர்ஸுடன் மருத்துவ மனையில் இருந்ணு வெளியேறுவதும் ஹாஸ்பிடல் ரிஸப்ஷன் ஏரியாவில் இருந்த காமிராவில் தெளிவாகப் பதிவாகி இருத்தது.

“சிந்து ஒரு நர்ஸோட அந்த ராத்திரி நேரத்துல எங்க போறாங்க டாக்டர்?”

“தெரியல, சைட்ல இருக்கற கஃபேடரியாவுக்குப் போயிருக்கலாம்”

ஒரு தலைமை மருத்துவரின் பதிலாக இல்லாமல், அவரது அலட்சியம் கோபத்தைக் கொடுத்தாலும், ஹேமந்த் கேள்வியை மாற்றினான்.

சிந்துவின் ஸ்கூட்டர் பார்க்கிங்கில் இல்லை என்பதை ஹேமந்துக்கு ஒரு காவலர் மெஸேஜில் தெரிவித்தார்.

“அவங்கப்பா, சிந்து அவங்களோட டூ வீலர்லதான் வேலைக்கு வந்தாங்கன்னு சொன்னாங்க. அவங்க வீடு திரும்பலை. அவங்க வண்டி இன்னும் இங்கதான் இருக்கா?”

“தெரியலை சார், செக் செய்யச் சொல்றேன்”

சீஃப் டாக்டர்
எந்தக் கேள்விக்கும் விட்டேற்றியாகவே பதில் அளிக்க, ஹேமந்த் “டாக்டர், நியாயமா இரவு நேரத்துல உங்க ஹாஸ்பிடல்ல இருந்து வெளில போன ஒரு டாக்டர், அதுவும் சின்னப்பொண்ணு, அவங்களைக் காணோம்னு நீங்களே புகார் கொடுத்திருக்கணும். ப்ளீஸ், கோஆபரேட்” என்றான், சிறிது கடுமையாக.

பிறகு, அவனே “அவங்க கூட போன அந்த நர்ஸை பார்க்க முடியுமா டாக்டர்?”

“தாராளமா, அவங்க இப்ப டியூட்டில இருக்காங்களான்னு கேட்டு வரச்சொல்றேன்”

அனுதரன் “உங்களோட டியூட்டி ரெஜிஸ்டரை பாக்க முடியுமா?”

“ரிஸப்ஷன்ல இருக்கும். இருங்க கொண்டு வர சொல்றேன்”

“நானே போறேன்” என்று சென்று, டாக்டர், நர்ஸ்களின் வருகைப் பதிவேட்டை ஆராய்ந்தவனின் கண்கள், அவனது லிஸ்ட்டில் இருக்கும் டாக்டர்கள், நர்ஸுகளின் பெயர்கள் அதிலும் இருக்கிறதா, யார் யார் எத்தனை நாட்களாக வரவில்லை, யாருக்கு பதிலாக சிந்து அனுப்பப்பட்டாள் என்று ஸ்கேன் செய்தது.

ஒரு பெரிய அறையில், அன்று ட்யூட்டியில் இருந்த மருத்துவர்கள் முதல் வார்ட் பாய் வரை விசாரிக்கத் தொடங்கினர். கையில் இருந்த ரெஜிஸ்டரில் கவனமாக இருந்த அனுதரன், ஹேமந்தின் “பதில் சொல்லுடா” என்று உயர்ந்த குரலில் நிமிர, எதிரில் இருந்தவனின் உடல்மொழியும் திருட்டுமுழியும் பரிச்சையமாக இருக்க, அவன் “எனக்குத் தெரியாது சார். அன்னைக்கு நான் வண்டி ஓட்டலை சார்” என்றவன், வேண்டுமென்றே குரலை மாற்றிப் பேசுவது தெரிந்தது.

அனுதரன் அருகில் இருந்த காவலருக்குக் கண்ணைக் காட்ட, அவர் அவனை பின்னிருந்து நெருங்கி, அவனது கைகள் இரண்டையும் பின்னே கொண்டு வந்து முறுக்க, சில நிமிடங்கள் பொறுத்தவன், வலி தாங்காமல் அம்மா என்று அலறியதில், அவனது உண்மைக் குரல் வெளி வந்துவிட, அனுதரன் “ஏசிபி சார், அன்னைக்கு என்னை அடிச்ச ரெண்டு பேர்ல இவன் ஒருத்தன்” எனவும் அவனைக் கைது செய்தனர்.

மருத்துமனைக்கு வந்த ஃபோன் கால்களை செக் செய்ததில், சிந்துவின் தந்தை, தாய், அண்ணன் மூவரும் மாற்றி, மாற்றி கால் செய்திருந்தது தெரிந்தது.

முன்பின்னாக இருந்த சில ஆவணங்களை எடுத்துக்கொண்டவர்கள், மீண்டும் வருவதாகச் சொல்லிக் கிளம்பினர்.


நீலவேணி, அங்கிருந்த கிரானைட் டீப்பாயில் விழுந்ததில் அல்லது தள்ளப்பட்டதில் , பின் மண்டையில் மிகக் கூர்மையாக அடிபட்டதில் உடனடி மரணம் என்றது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். அவள் மரணித்து ஆறு நாட்களாகியும் உடலைக் கேட்டு யாரும் வரவில்லை.

தென்கரை வீட்டை விட்டுக் கிளம்புகையில், ஏதோ தள்ளு முள்ளு நடந்து, அதில் கீழே விழுந்ததில் அடிபட்டிருக்க வேண்டும். ஏனென்றால், சோஃபா, மேஜை, நீலவேணிக்கு அடிபட்ட டீ டேபிள் என எல்லாமே ஒழுங்கற்றுக் கலைந்திருத்தது.

அது ஒரு தற்செயல் மரணமாகத்தான் தெரிந்தது.


ரோஹிணியின் வயிற்றில் வளரும் கருவுக்கு இரண்டு மாதங்கள் ஆனதில், அவளது
பயத்துக்கும் கவலைக்கும் எல்லையின்றிப் போனது.

‘தான் ஏன் இங்கிருக்கிறோம்?’

‘ஜனனி அக்காவும் நம்மை வீட்டுக்கு அனுப்பவில்லையே’

‘அம்மா, அப்பாவுக்கு ஒரு ஃபோன் கூட செய்ய முடியவில்லையே’ என்பது போன்ற புறக்கவலைகளை மீறி, ஒரு கர்ப்பிணிக்கே உரித்தான உடல் உபாதைகள் அவளை ஆக்கிரமித்தன.

காலை எழுந்தவுடன் வாந்தி, பின் தலைசுற்றல், சோர்வு, தூக்கம் என சுழற்றி அடித்ததில், தனக்கு என்னவோ ஆகிவிட்டதென பயந்தாள். ஏதேதோ எண்ணியவள், தான் கர்ப்பமாக இருப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

சோர்வும், திடீரென தனக்கு என்னவாயிற்று என்ற சந்தேகமும், அப்படியே ஆனாலும், இவர்கள் ஏன் பார்க்க வேண்டும், என்னை என் பெற்றோரிடமிருந்து ஏன் பிரித்து வைத்திருக்கிறார்கள், என்ற கேள்விகள் அழுத்த, ஜனனியைத் தேடி வந்தாள்.

“என்ன ரோஹிணி?”

“எனக்கு ஏதோ செய்யுதுக்கா. இங்க வந்ததுல இருந்து எனக்கு தீட்டே வரலையேக்கா. அதனாலதான் உடம்பு சரியில்லையாக்கா? தீட்டு வரலைன்னா வயத்தை வலிக்காம, ஏன்க்கா வாந்தி வருது?”

இந்தக் கேள்விக்கான பதிலை முன்பே யோசித்து வைத்தது போல், ஜனனி வெகு இதமான குரலில் “உன் வயித்துல இப்போ குழந்தை இருக்குமா. அதான் இப்படி படுத்துது” என்று அந்தச் சின்னப்பெண்ணின் தலையில் இடியை இறக்கினாள்.

ரோஹிணி சின்னப்பெண் என்றாலும், விவரம் புரியாதவளில்லை. செய்திகளும், கதைகளும், சினிமாவும் சீரியல்களும், எட்டாவது முதலே படித்த அறிவியலும் கொடுத்த அறிவில், ஆண், பெண் உறவில்தான் குழந்தை உருவாகும் என்பது தெரிந்திருந்தவளுக்கு, தான் யாருடனாவது நெருங்கிப் பழகி இருந்தாலோ, எந்தப் பொறுக்கியாவது அத்து மீறி இருந்தாலோ, இந்த வாந்தி அதனால் என்று நினைக்கலாம்.

ஆனால், காலையில் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றவளை, எவனோ ஒருவன் சைக்கிளில் வந்து இடிக்கவும், ரெண்டு பேர் வேகமாக வந்து பிடித்துக்கொண்டதுதான் தெரியும். அதன் பின் அவள் கண் விழித்தது ஹாஸ்பிடலில்தான்.

தான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன், ரோஹிணிக்கு வந்த முதல் ஐயம் தான் கற்பழிக்கப்பட்டு விட்டோமோ, தன்னை அதற்காகத்தான் கடத்தினார்களா என்பதுதான்.

மனதில் எழுந்த சந்தேகத்தை தயக்கமும் கேவலுமாக “அக்கா, என்னை யாராவது ரேப் பண்ணிட்டாங்களா?” என்று
வார்த்தையாக்குவதற்குள் ரோஹிணி நைந்தாள்.

தன் குழந்தையை, தன் கணவனின் குழந்தையை, அவளது கனவை சுமப்பவளின் வார்த்தைகளைக் கேட்ட ஜனனி பதறிப்போனாள். எனவே முடிந்தவரை உண்மையைச் சொல்ல விரும்பினாள்.

செயற்கை முறையில் குழைந்தை பிறக்க எடுக்கும் சிகிச்சைகளையும் வாடகைத்தாய் பற்றியும் விளக்கியவள்,

“நீ ஒரு குழந்தை இல்லாத, இனிமே குழந்தையே பெத்துக்க முடியாத யாரோ ஒரு பொண்ணுக்கு குழந்தை பெத்துக் கொடுக்கப் போற. உன்னை யாரீம் எதுவும் செய்யலை ரோஹிணி. உனக்கோ, உன் உடலுக்கோ யாரும் எந்தத் தீங்கும் செய்யலை. இல்லைன்னா, உன்னைப் பார்த்ததும், நீ கேட்டதுமே இங்க கூட்டிட்டு வருவேனா?”

“என்னை யாரும் ரே…ப்ச்… எதுவும் செய்யாமலே குழந்தை பொறந்ததுன்னு சொன்னா, என்னை யாருக்கா நம்புவா? என்னை, எங்கப்பா அம்மாவை கேக்க வேணாமாக்கா? எனக்கு நிறைய படிக்கணும்கா. எனக்கு தெரியாம, என்னைக் கேக்காம, என் விருப்பம் இல்லாம கட்டாயமா குழந்தை பொறக்க வெச்சா அது பேர் ரேப் இல்லையாக்கா?”

இரண்டு நாட்கள் முன்புதான் பதினேழு வயதைப் பூர்த்தி செய்திருந்த ரோஹிணியின் பளீர், சுளீர் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தடுமாறிய ஜனனி,

“இங்க பாரு ரோஹிணி, ஏதோ எனக்குத் தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு பாவம் பாத்து கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு மூணு மாசத்துக்கு மேல ஆச்சு. இன்னைக்கே, இப்படியே உங்க வீட்டுக்குப் போறோம்னு வை. உங்க அம்மா, அப்பா உன்னை உள்ள விடுவாங்களா?”

“ஏன் விட மாட்டாங்க?”

“நீ ப்ளஸ் ஒன் படிக்கற, சினிமாவெல்லாம் பாக்கறதானே? வீட்டை விட்டு நாலைஞ்சு மாசம் வெளியே இருந்த பொண்ணு, வயித்துல குழந்தையோட வந்தா உங்க அம்மா, அப்பா கொஞ்சுவாங்களா?”

புரிந்தும் புரியாமலும் இருந்த சிறு பெண்ணுக்கு, சற்றே கடுமையும் விலகலும், மெலிதான மிரட்டலும் கலந்த குரலில் யதார்த்தத்தைப் புரிய வைக்க எமோஷனல் பிளாக்மெயில் செய்த ஜனனிக்கு, தான் செய்வது அக்மார்க் சுயநலம் என்று தெரிந்தாலும், அவ்வப்போது தலையெடுத்த தன் நியாய புத்தியை, குற்றவுணர்வை, தலையில் தட்டி அடக்கினாள்.

‘நான் வாடகைத் தாய்க்குதானே ஒத்துக் கொண்டேன். இவளையே அழைத்து வருவார்கள் என எனக்கு எப்படித் தெரியும்? அப்படியே நான் வேண்டாம் என்றிருந்தாலும், கட்டம் கட்டி கடத்திய பெண்ணை உபயோகிக்காமல் விட்டுவிடவா போகிறார்கள்’ என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.

சிறு பெண்ணான ரோஹிணியால் தன் வீராப்பு, பசி, அழுகை, துக்கம், ஏக்கம், பிரிவுத்துயர் என எதையுமே அதிக நேரம் இழுத்துப் பிடிக்க முடியாது போக, அதை சரிவரப் படித்த ஜனனி, தன்மையாகப் பேசியே சின்னவளை சகஜமாக்கினாள்.

ஜனனி ரோஹிணியை மாதம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு இரவு எட்டு மணிக்குமேல் வரவழைக்கப்பட்ட பிரத்தியேகக் காரில் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாள். ஆனால், வாரம் ஒருமுறை ஒரு நர்ஸ் வீட்டுக்கே வந்து ரோஹிணியின் பிரஷர், சுகர், வெய்ட் என பரிசோதித்து விட்டுச் சென்றாள்.

ஆரம்பத்தில் தன்னுள் வன்மையில் விளைந்த கருவை வெறுத்த ரோஹிணி, நாட்கள் செல்லச் செல்ல, ஆரோக்கியமாக வளர்ந்த வயிற்றுப் பிள்ளை வயிற்றுக்குள் வளைய வந்து தன் இருப்பை வெளிப்படுத்தியதில், அவள் அறியாமலே, இயற்கையாகவே அவளுக்குள் இருந்த தாய்மை உயிர்த்தது.

தான் தொடும்போது உள்ளே புரண்டு படுத்து ‘உள்ளேன் அம்மா’ என்ற குழந்தை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், அது சீக்கிரமாக, நன்றாகப் பிறந்து விட்டால், விரைவில் தான் தன் வீட்டுக்குப் போய்விடலாம் என்ற ஆசையும், கூடவே, தான் பெற்ற குழந்தையை இன்னொருவருக்குத் தர வேண்டுமே என்ற ஆதங்கமும் அந்தச் சிறு பெண்ணை ஆட்டி வைத்தது.

டாக்டரின் அறிவுரைப்படி ரோஹிணியை தன் பார்வை வட்டத்துக்குள்ளேயே வைத்திருந்த ஜனனி, பல சமயங்களில், தன்னியல்பாக குழந்தையின் அசைவின் குறுகுறுப்பில் விரிந்த புன்னகை, விகசித்த முகம், அந்தச் சிறிய வயதிலும், விருப்பமில்லா நிலையிலும், தாய்மை ஒளிரும் கண்கள், வயிற்றை வருடும் விரல்கள் என்றிருக்கும் ரோஹிணியைக் காண்கையில் உள்ளுக்குள் பரவும் ஏக்கத்தை, பொச்சரிப்பைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள்.

ஏழாம் மாதம் செக் அப்பிற்கு அழைத்துச் செல்கையில், மருத்துவரிடம் “இந்தக் குழந்தைக்கு அப்பா யார் டாக்டர்?” என்றாள் ரோகிணி.


தன் மனதைக் குடைந்த கேள்விக்கு விடை காண, மீண்டும் ரோஹிணியின் பெற்றோரைத் தேடிப் போன ஜீவா, நிமலனை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“என்ன நிமலன், இங்க இருக்கீங்க?”

“அப்பாக்கு உடம்பு சரியில்லை சார். அதான் ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்யறேன்”

பக்கத்து கோவிலுக்குச் சென்றிருந்த சரவணனும் துர்காவும் வணக்கம் சொன்னதோடு, நிமலனுக்கு விபூதி வைத்த கையோடு, தன்னிடம் ‘வைக்கலாமா தம்பி’ என்ற துர்காவைப் பார்த்த ஜீவாவுக்கு மனம் கனத்துப் போனது.

‘போலீஸ் காரனுக்கு இதயம் கிடையாதென்று எந்த மடையன் சொன்னது?’

தலையை முன் நீட்டி, அவரிடம் விபூதியை வாங்கிக்கொண்டு தன் விசாரணையைத் தொடங்கினான்.

” உங்க பொண்ணு
ஸ்கூலுக்குத் தவிர வேற எங்கெல்லாம் தனியா போவா?”

நிமலன் “அவ காமர்ஸ் க்ரூப் எடுத்துப் படிச்சா. மேத்ஸுக்கும் அக்கவுன்டன்ஸிக்கும் மட்டும் வாரத்துல மூணு நாள் டியூஷன் போவா சார்” என்றான்.

துர்கா “அதுக்கு தனியா போக மாட்டா சார். பழைய வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி அவ கூடவே ஸ்கூல்ல படிச்ச
இன்னொரு பொண்ணும் பாப்புவும் சேர்ந்துதான் போவாங்க”

“வேற, கோவில், சொந்தக்காரங்க வீடு…?”

“இல்ல சார். தனியா எங்கயும் அனுப்பினதில்ல. பாப்பு காணாம போன சமயத்துல அந்த பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு டைஃபாயிடு ஜுரம் வந்து ரெண்டு வாரம் போல ஸ்கூலுக்குப் போகாததால இவ தனியா போனா சார். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கூடவே போயிருப்போம் ” என்ற துர்காவின் குரலில், அதைச் செய்யாது போனோமே என்ற ஆதங்கம்.

“பாட்டு, டான்ஸ் இப்படி வேற ஏதாவது?”

“இல்ல சார், ஆனா, அவளுக்கு ஃபேஷன் டிஸைனிங் படிக்கணும்னு ரொம்ப ஆசை. நல்லா தைப்பா. ஒரு தையல் ஸ்கூலுக்குப் போனா. வாரம் ரெண்டு க்ளாஸ். எனக்குக் கூட ரவிக்கை எல்லாம் தைச்சுக் கொடுத்திருக்கா சார்” – துர்கா.

“பூப்போட்ட சட்டையை தச்சுக்கிட்டு வந்து போட்டுக்க அண்ணான்னுவா. அப்ப திட்டுவேன். இப்ப பார்ட்டி வேர் (party wear)னு சொல்லி போட்டுட்டுப் போறேன்” என்ற நிமலனின் குரல் கமறியது.

தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்த சரவணன், சட்டென்று குலுங்கி அழத் தொடங்கினார்.

உடம்பு சரியில்லாத மனிதரை மேலும் இம்சிக்கிறோமே என்ற நினைத்த ஜீவாவுக்கு வேறு வழியும் தெரியவில்லை.

“அந்த ஸ்கூல் பேர் என்ன, எங்க இருக்கு?” என்று கேட்டு அறித்து கொண்டவன், “அங்க அவங்க கூட படிச்சவங்க, க்ளாஸ் எடுத்தவங்கன்னு யாரைப் பத்தியாவது சொல்லி இருக்காங்களா?”

துர்கா “வளவளன்னு பேசுவா சார் அவ. நிறைய பேரைப் பத்தி சொல்லுவா. யாரோ ஒருத்தவங்களைப் பத்தி அந்த அக்கா அதைச் சொன்னாங்க, இதைச் சொன்னாங்க, அவ்வளவு அழகா தைப்பாங்க, பூத்தையல், அது பேரென்ன, ஹாங்.. எம்பிராய்டரி கத்து கொடுத்தாங்கன்னு ஒரு ஆறேழு மாசத்துக்கு தினமும் சொல்லிக்கிட்டுக் கிடந்தா சார்”

“அவங்க பேர் என்னன்னு நினைவிருக்காம்மா?”

துர்கா “ஏதோ நல்ல பேரு சார், ஒரு சாமி பாட்டுல கூட நிறைய தரம் வரும் சார்” என்று கிச்சனுக்குள் சென்று நால்வருக்கும் டீ போட்டு எடுத்துக்கொண்டு வரும் வரை சற்று நீண்ட நேரம் யோசித்தாலும், ஜீவாவின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காது கடைசியில் “ஜனனி சார்” என்றார்.