தாத்ரி – 7

                  தாத்ரி 7

ஜனனியின் சிகிச்சைக்காக சேமித்து வைக்கப்பட்ட சீராளனின் உயிரணுக்களை, ஐயுஐ எனப்படும் Intrauterine insemination (IUI) சிகிச்சையின் மூலம் பதினேழு வயது கூட நிறையாத ரோஹிணியின் கருப்பையில் நேரடியாகச் செலுத்தினர்.

உணவு, உடை என அடிப்படைத் தேவைகளுக்குப் பஞ்சமில்லாது, ஊட்டமான வீட்டுச் சாப்பாடும், பதின் பருவத்திற்கே உண்டான அழகும் வாளிப்புமான உடல்வாகும் சேர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த ரோஹிணியின் கருமுட்டை சுழற்சியும் மருத்துவர்களின் வேலையை சுலபமாக்கி விட, இரண்டே நாட்களில் ப்ரொஸீஜரை செய்துவிட்டனர்.

பிறந்தது முதல் வீட்டை விட்டு, பெற்றோர்களை விட்டுப் பிரிந்திராத பெண்ணுக்கு, தனக்கு என்ன நேர்த்தது என்று புரிவதற்குள், அவள் உடலில் பல்வேறு சோதனைகளும், ஊசி மருந்துகளுக்கும், அவளது அனுமதியில்லாமலே நடத்தப்பட்டது, செலுத்தப்பட்டது.

பொதுவாக IUI ப்ரொசீஜருக்கு மயக்க மருந்து அவசியமில்லை எனினும், இங்கு ரோஹிணியின் வயது, மனநிலை, அவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மயக்கமருந்து கொடுத்தே சிகிச்சை அளித்தனர்.

ரோஹிணி கண் விழித்தவுடன், முதலில் கண்டது ஜனனியைத்தான். எத்தனை நாட்களுக்குப்பின் என்று எண்ணிக்கை தெரியாது, பரிச்சயமான முகத்தைப் பார்த்ததும் பயமும் அழுகையுமாக “அக்கா, என்னை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கக்கா. எனக்கு என்ன ஆச்சுன்னு, ஆஸ்பத்திரில இருக்கேன்கா? எதுக்கு இவ்வளவு மருந்தும் டெஸ்ட்டும் ஊசியும் போடறாங்கன்னே புரியலைக்கா” என்றவள், குரலை தழைத்துக்கொண்டு “எங்க வீட்ல இது மாதிரி பணம் புடுங்கற டாக்டர் கிட்டல்லாம் போகவே மாட்டோம் கா” என்றாள்.

அவள் பேசியதில் இருந்து சுதாரித்த ஜனனி, மருத்துவரிடம் தனியே சென்று பேசினாள். தற்போதைக்கு ரோஹிணியைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும், மற்ற சிகிச்சைகள் கரு தங்கினால் மட்டுமே என்பதால், தற்சமயத்துக்கு அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள். குழந்தை ஜனனியுடையது , ஸ்பான்ஸரும் அவளே என்பதால், மருத்துவரும் சம்மதித்தார்.

ரோஹிணியிடம் “அவளுக்கு சிகிச்சை தேவை என்றும், தன்னுடன் வந்து தங்கிக்கொள்ளுமாறும் அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள்.

ஜனனியின் அதிர்ஷ்டம், ஆடு தானாகவே வந்து வெட்டுவதற்குத் தலையைக் கொடுத்தது. ரோஹிணியின் காலக்கொடுமையில், அந்தச் சிறு பெண்ணின் வயிற்றில் விந்தை விதைத்த பதினேழாம் நாள், கரு முளைவிட்டதை மருத்துவர் உறுதி செய்தார்.

சீராளனிடம் பேசிய ஜனனி “இந்த முறை IUI லயே நான் கர்ப்பமா இருக்கேங்க. முதல் முறையா ரெண்டு சிவப்புக்கோடு பாருங்க” என்றாள்.

உணர்ச்சி வசப்பட்ட சீராளன் “ஜனனிமா, நான் வேற அங்க இல்ல, இப்ப வர முடியாத சூழ்நிலைடா. டெலிவரி சமயத்துல வரப் பாக்கறேன். நீ எப்படிடா தனியா… நான் வேணா உங்க அக்கா , மாமா கிட்ட பேசவா?”

“அதெல்லாம் வேண்டாம். ஆறு மாசம் போற வரைக்கும் நான் வெளிலயே சொல்ல மாட்டேங்க. எனக்கு எல்லாம் நல்லபடியா போகணுமேன்னு பயமா இருக்கு”

“புரியுதுடா. ஜனனி, ஜனனி மா”

கணவனின் கனிந்த அன்பில், பொய் சொல்வது உறுத்தினாலும், ‘யார் சுமந்தாலும், இது என் குழந்தை, என் கணவன் சீராளனின் குழந்தை’ என்று தன்னைத் திடப்படுத்திக்கொண்டாள்.

“ஒரு நர்ஸை தினமும் அனுப்பறேன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்கத்தான்” என்றாள் ஜனனி.

“ஜனனி, பணம் இருக்கா? தேவைன்னா இருபத்தஞ்சு, இருபது, பத்துன்னு (லட்சங்கள்) மூணு ஃபிக்ஸட் டெபாஸிட் உன் பேர்லதான் இருக்கு. பிரேக் பண்ணிக்கோ”

“சரிங்கத்தான்”

ரோஹிணியின் வயிற்றிலும் ஜனனியின் மனதிலும் வளர்ந்தது கரு.


“ஜீவா சாரா சார்?”

“சொல்லுங்க நிமலன், எத்தனை சார்?” என்று சிரித்தான் ஜீவா.

“ஸார், நான் அவங்களைப் (வெண்பாவின் தாயை) பாத்துட்டேன் சார். எனக்குத் தெரிஞ்சு அவங்களை நான் கோயம்புத்தூர்ல பாத்ததா நினைவில்லை சார். சொல்லப்போனா, அவங்களை நான் பார்த்ததே இல்ல சார்”

“உங்கம்மா, அப்பாவைக் கேட்டீங்களா?”

“அவங்களும் அதையேதான் சார் சொன்னாங்க” சிறிது தயக்கத்துடன் “எங்கம்மா, ‘பாத்தாலே, வசதியானவங்களா தெரியறாங்க, உன் கூட பேசினாங்களா’ ன்னுகேட்டாங்க சார்” என்றான்.

“ஷ்… படிச்சு, நல்ல வேலைக்குப் போய், குடும்பத்தையே உயர்த்தி இருக்கீங்க, நீங்களே இப்படிப் பேசலாமா நிமலன்?”

“ஸாரி சார். அப்டி இல்ல சார். அம்மா சொன்னதை சொன்னேன் சார்”

“விடுங்க. மிஸஸ் சீராளனை எங்க, எப்படி பார்த்தீங்க?”

“நேத்து ஒரு கொலீகோட கல்யாண ரிஸப்ஷன் சார். ஆன்சைட்ல போய் இருக்கறவங்களைத் தவிர மொத்த ஆஃபீஸும் ஃபேமிலியோட போயிருந்தோம். அங்கதான் பாத்தேன்”

“ம்…. வெண்பா பத்தி ஏதாவது பேசினீங்களா?”

“இல்லை சார். அவங்க பொண்ணு, என்னன்னு சார் கேக்க முடியும்? ஆனா, நேத்து அந்தப்பொண்ணு பட்டுப்பாவாடைல வந்தா. அச்சு அசல் எந்தங்கச்சி பாப்புவேதான் சார்”

“ஃபோட்டோ எடுத்தீங்களா நிமலன்”

“க்ருப்பா எடுத்ததுல இருந்து எடிட் பண்ணி வெச்சிருக்கேன் சார்”

“எனக்கு அனுப்பி விடுங்க, நிமலன்…”

“சார்”

“உண்மை ஒருநாள் வெளியில் வந்தே தீரும். டோன்ட் ஒர்ரி”


அங்கம்மாவின் கொலை விசாரணையைத் தொடர்ந்த போலீஸுக்குக் கொலையாளியைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. கிடைத்த சில கை ரேகைகளும் அங்கம்மா மற்றும் அவளது மகள் இருவருடையதாகத்தான் இருந்தது.

எனவே, அனுதரன் கண்டுபிடித்துக் கொண்டு வந்த லிஸ்ட்டில் இருந்த மற்றவர்களைத் தேடி வேட்டையைத் தொடங்கினர். அவர்களில் பலரும் குறிப்பிட்ட மருத்துவமனைக்கோ , கருத்தரிப்பு மையத்துக்கோ வேலை செய்யாமல் டிரைவிங், கடத்தல், காவல் என அவர்களது முகவர் ஏவிய வேலையைச் செய்து, கூலிக்கு மாரடிப்பவர்களாகவே இருந்தனர்.

ஆனால், அதிலும் கணிசமான நபர்கள் அமுதம் கருத்தரிப்பு மையத்துடன் தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரிந்தது.

அறுபதுக்கும் மேலான ஆட்களை நேரடிக்குற்றமோ, சாட்சியோ இல்லாமல் கைது செய்து பலனில்லை என்பதால் எச்சரிக்கையுடன் விடுவித்தனர்.

இந்தக் கேஸுடன் தொடர்புடைய, அங்கம்மா வேலை செய்யும் அமுதம் மையத்துடன் தொடர்புடையவர்களை மட்டும் கண்காணிக்க ஏற்பாடு செய்தனர்.

ஜீவா, ஹேமந்த், அனுதரன் மட்டுமல்லாது, விசாரணையில் ஈடுபட்ட அனைத்துக் காவலர்களுமே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலிகளின் எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ந்துதான் போய் இருந்தனர்.

இது ஒரு இடம்தான். நாடு முழுவதும் இது போல் இன்னும் எத்தனை பேர், எத்தனை பருவப் பெண்கள்? இந்த கோவை மாவட்டத்திலேயே எத்தனை பேரோ? சமீபத்தில் கூட ஈரோட்டில் இது போன்ற கேஸ் பிடிபட்டதே!

மனதின் கனம் தாளாது பிரபுதீரனுக்குக் கால் செய்த ஜீவா “எப்டி பாஸ், இப்படி மனசாட்சியே இல்லாம இருக்காங்க. டாக்டர்ஸ்லாம் கடவுள் மாதிரின்னு சொல்றதெல்லாம் சும்மாவா பாஸ்? என்னவோ டிபார்ட்மென்டல் ஸ்டோர்ல ஃப்ரோஸன் மட்டன், சிக்கன் வாங்கறாப்போல குழந்தையையும் வாங்குவாங்களா?” என்றான் ஆதங்கமும் ஆத்திரமுமாக.

“கூல் ஜீவா. நீ சொன்னதேதான். ஹாஸ்பிடல் எல்லாம் கார்ப்பொரேட் ஆஃபீஸ் ஆயாச்சு. கடவுளையே ப்ரீமியம் கொடுத்து, அப்பாயின்ட்மெண்ட் இருந்தாதான் பாக்க முடியுது”

“எதுக்கு இந்த மருத்துவ முன்னேற்றம்னு தோணுது பாஸ்”

“இதுக்கு மெடிக்கல் அட்வான்ஸ்மென்ட் மட்டும் காரணமில்ல. எப்பாடு பட்டாவது ஒரு குழந்தை வேணுங்கற மக்களோட ஆசையும், அவங்களோட தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சியும், மருத்துவத் துறைல இருங்கறவங்களோட ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ மனப்பான்மையும் கூட காரணங்கள்தான் ஜீவா”

“பாஸ், இதுல அரசியல்வாதிகளுக்கு…”

“இதைத் தடுக்காம, கண்ணை மூடிக்கிட்டு வளர விடற மெடிகல் கவுன்சில்ல இருக்கற அதிகாரிகளோட பேராசைதான் காரணம். இது நேரடிக் குற்றம். அரசியல்வாதிகள் இதில எல்லாம் ஈடுபட மாட்டாங்க. ஆனா, தெரிஞ்சா கண்ணையும் வாயையும் மூடிக்கிட்டோ, கிடைச்ச வரை லாபம்னு சாய்ச்சாமாதிரி கண்டுக்காம போக வாய்ப்பிருக்கு. நீ டென்ஷனாகாத ஜீவா”

“ஓகே பாஸ்”

“நானும் கேஸ் டீடெயில்ஸை படிச்சுட்டு பேசறேன்டா”

“சூப்பர் பாஸ், நான் அப்டேட் செய்யறேன்”


சரவணன் சோகமும் சோர்வுமாக இருப்பதாக அவனது அம்மா துர்கா கவலையுடன் சொன்னதும் நிமலன் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு வார இறுதியில் கோவைக்கு வந்தான்.

என்னதான் மகளைப்போல் ஒரு குழந்தை என்றதும் ஆத்திரப்பட்டாலும், அழகான மகளின் மீது உயிரையே வைத்திருந்த சரவணன் சமீபத்திய நிகழ்வுகளால் ரொம்பவே மனம் தளர்ந்ததில் உடலும் நலிந்து போனது.

கருமுட்டை திருடிய கேஸ் குறித்து, ஜீவா சொன்னதை மகன் நிமலன் விளக்கியதும், மனமுடைந்து அழுதவர், அன்றிரவே கடுமையான நெஞ்சுவலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மைல்ட் அட்டாக் என்றனர்.

மூன்று நாட்களில் வீடு திரும்பியவர் “நம்ம பாப்பு உயிரோட இருக்குமாடா நிமலா?” என்றதில் துர்கா கதறிவிட, நிமலனின் அமைதியே அவனது நம்பிக்கையின்மையைச் சொன்னது.

சரவணன் “ஒருக்கா எனக்கு உங்க சீனியரோட மகளை நேர்ல பாக்கணும்டா” என்றதில் திகைத்தான் நிமலன்.

சரவணனுக்கு ஒரு மாதம் வரை ஓய்வு தேவை என்பதால், மெடிகல் லீவில் இருந்தார். அந்நிலையில் பெற்றோரைத் தனியே விடப் பிடிக்காமல், நிமலன் ஒர்க் ஃப்ரம் ஹோமை கேட்டு வாங்கிக்கொண்டான்.

இரண்டு வாரங்களில் தங்கை ரோஹிணியின் பிறந்தநாள் வர, சரவணன் திடீரென “நாம போய் மதுர மீனாட்சிய பாத்துட்டு வரலாம்'” எனவும் மூவரும் கிளம்பினர்.

மதுரையில் இருந்து வரும் வழியில் நிமலன், ‘மிஸ் யூ பாப்பு’ என்று தங்கை ரோஹிணியின் புகைப்படங்கள் இரண்டை இன்ஸ்டாவில் ஏற்றினான்.

அடுத்த ஒரு மணிநேரத்துக்குள், அவனது அலுவலகத்தில் அவனுடன் இன்ஸ்டாவில் இணைந்திருந்தவர்கள், வெண்பாவை அறிந்திருந்தவர்கள் கேள்விகளால் நிமலனின் வாட்ஸ்ஆப்பை முற்றுகையிட்டனர்.

இரவு படுக்கும் முன், தான் இருக்கும் சமூக வளைத்தளங்களை ஒர் பார்வையிடும் வழக்கமுள்ள சீராளன், நிமலனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான்.

அதில் இருந்த பெண்ணுக்கும், தன் மகள் வெண்பாவுக்குமான உருவ ஒற்றுமையும், நிமலனின் சொந்த ஊர் கோவை என்பதும் சிறிது நேரம் சீராளனை இம்சித்தது.

மெல்லிய வெளிச்சத்தில், தன் கையில் தலையும், அம்மாவின் மேல் காலுமாகத் தூங்கும் மகளைப் பார்த்து “என் பட்டுக்குட்டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவனின் மனம் அமைதிபெற, மற்றெதையும் மறந்து தூங்கிப்போனான்.


ஜீவாவுக்கு சிறிய, ஆனால் மிக முக்கியமான எதையோ, எங்கேயோ மிஸ் செய்கிறோம் என்ற உறுத்தல், நிமலனிடமிருந்து அழைப்பு வந்தது முதல் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இடையில் வேறு விசாரணைகள் இருந்ததால், இது பின்னுக்குச் சென்றிருக்க, இப்போது மீண்டும் மனது குறுகுறுக்கவும், அறைக்குள் இருக்கப் பிடிக்காமல் மொட்டை மாடிக்குச் சென்றால், அங்கு ஏற்கனவே அனுதரன் உலாத்திக் கொண்டிருந்தான்.

“”தூங்கலையாடா அனு? மஞ்சுவோட கால்ல இருக்கியா, நான் வேணா போயிடட்டுமா?” என்று போகத் திரும்பிய ஜீவாவைத் தடுத்தான், அனுதரன்.

“இருங்க சார். மணி பாருங்க. ஒண்ணாகப் போகுது. எனிக்கு நித்ரை வரில்லா சாரே”

“எனக்கும்டா. அந்த வீட்ல ரெய்டு நடந்த அன்னைக்கு அங்க இருந்து இடம் மாத்தப்பட்ட பெண்கள், இன்னும் எத்தனை பேருன்னு தெரியலை. லேட்டஸ்ட்டா பொண்ணைக் காணோம்னு புகார் கொடுத்தவங்கள்ல அவங்க இருக்காங்களான்னும் தெரியலை” என்ற ஜீவா பெருமூச்சு விட்டான்.

“இந்த அமுதம் ஹாஸ்பிடலை நேரடியா போய் விசாரிச்சா என்ன சார்? அதைப் பத்திதான் படிச்சிட்டு இருந்தேன். நிறைய கம்ப்ளெயின்ட்ஸ்”

“எது மாதிரி?”

“ஸ்ட்ராங் மெடிகேஷன், மாத சுழற்சிக்கு மருந்து கொடுத்தாலே இயற்கையா கருத்தரிக்கக் கூடிய பெண்களைக் கூட IVF, IUI சிகிச்சைக்கு வற்புறுத்தறது, இரண்டு, மூன்று முறைகளுக்கு மேல ப்ரெக்னென்ட் ஆகலைன்னா வாடகைத் தாய் முறையை சிபாரிசு செய்யறதுன்னு நிறைய புகார் இருக்கு சார். சிலது எழுத்துல இருக்கு. ஆனா, அங்க இருந்து வெளில வர பேஷன்ட்ஸோட புலம்பல்கள்தான் நிறைய”

“ம்… வாய் வார்த்தையா சொல்றவங்க யாரும் போலீஸ்கிட்ட வாயைத்தொறக்க மாட்டாங்க அனு. அதுவும் சிபிஐனா கேக்கவே வேண்டாம். முதல்ல பதிவு செய்யப்பட்ட புகார்களை விசாரிக்கற மாதிரி உள்ள போகலாம். கொஞ்ச நாள் பொறு”

“யூ ஆர் ரைட் சார். அதோட அங்கம்மா, வீரபாண்டி, தேவா, இன்னும் அந்த லிஸ்ட்ல இருக்கறவங்க எல்லாருக்குமே இந்த அமுதம் இன்ஃபெர்ட்டிலிடி சென்ட்டரோட தொடர்பு இருக்கு “

“எக்ஸாக்ட்லி. உள்ள போய் பழைய ரெகார்ட்ஸ், யாருக்கெல்லாம் வாடகைத்தாய் சிகிச்சை கொடுத்தாங்க, அதுக்கு ஸ்பான்ஸர்ஸ் யாருன்னு கண்டுபிடிக்கணும் அனு”

“ஓகே சார்”

“இன்னொரு முக்கியமான விஷயம்… அந்த ஹாஸ்பிடல்ல விந்தணு தானம் பண்ணி இருக்கறவங்களோட லிஸ்ட்டும் வேணும். அது அவங்க மனைவிக்காக இருந்தாலும் சரி, பொதுவா இருந்தாலும் சரி”

“டன் சார்”

ஜீவாவும் அனுதரனும் இருட்டில் அமைதியாக அந்த கார்னர் பங்களாவின் வெளி வாசலைப் பார்த்து நின்றிருக்க, திடீரென ஓரளவு வேகமாகவே சென்ற ஒரு SUVயின், XYLOவாக இருக்கலாம், பின் கதவு திறக்கப்பட்டு, யாரோ தெருவில் உருளுவதும், வாயிலில் இருந்த காவலர்கள் மூவரும் அலர்ட் ஆகி விசில் ஊதவும், அதில் ஒருவர் அந்த வண்டியைப் பின் தொடர முயற்சிக்க, அது ஆபத்தை உணர்ந்து எப்போதோ பறந்திருந்தது.

பின்னால் அவுட்ஹவுஸில் சிபிஐ போலீஸார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

ஜீவா நேரே கீழே செல்ல, அனுதரன் வேகமாகத் தன் அறைக்குள் சென்று துப்பாக்கியுடன் வந்தான்.

“ஹோல்ட் ஆன். ஹேண்ட்ஸ் அப்” என்று காவலர்களின் குரல் கேட்க, இருவரும் பார்வையைப் பரிமாறிக்கொண்டு வேகமாக வெளியில் சென்றனர்.

ஆனால், இவர்களது எச்சரிக்கைக்கு அவசியமே இல்லை என்பதுபோல், வண்டியில் இருந்து உருண்டிருந்த அந்த நாகரிகமான இளம் பெண் கை, கால்களில் சிராய்ப்புடன் மெதுவாக எழுந்து நின்றாள். கீழே விழுந்த வேகத்தில் காலில் நன்றாக அடிபட்டிருக்க வேண்டும். அடி எடுத்து வைக்க முடியாமல் அவள் முகம் வலியில் சுருங்கியது.

படித்த களையுடன் வியர்வை ஆறாகப் பெருக, அணிந்திருந்த குர்த்தி கிழிந்திருக்க, அவள் அணிந்திருந்த வெள்ளை கோட்டில் கையில் பட்ட அடியில் இருந்து ரத்தம் சொட்டியது.

அவள் முகத்தில் பதட்டமும் பயமும், எதிலிருந்தோ தப்பி வந்த தற்காலிக நிம்மதியும் தெரிந்தது.

“அவங்களை உள்ள கூட்டிட்டு வாங்க. அனு, கெட் ஹர் ஃபர்ஸ்ட் எய்ட் டன் ” என்ற ஜீவா “யாரும்மா நீ, இந்நேரத்துல இங்க எதுக்கு வந்த? ஏன் வண்டில இருந்து குதிச்ச?”

அவன் மனதில் இது ஒரு ட்ராப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழு, புலன்கள் அனைத்தும் விழித்துக்கொண்டாலும் நிதானமாகவேபேசினான்.

“இந்நேரத்துக்கு எப்படி இங்க வந்தீங்க?”

“நான் ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடல்ல ரெஸிடென்ஷியல் டாக்டர் சார்” என்றவள் சட்டென பேச்சை நிறுத்தி விட்டு, தன்னை எழுப்பி அழைத்து வந்து கூடவே நின்றிருந்த கான்ஸ்டபிளை நன்றியுடன் பார்த்தவள், ஜீவாவிடம் சந்தேகமாக “போலீஸைப் பாத்ததும் குதிச்சிட்டேன். நீங்க யார் சார்?” என்றதில் கான்ஸ்டபிளின் முகத்தில் டென்ஷன் ஏற, அனுதரனும் ஜீவாவும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டனர்.

சாவ்லானால் அவளது காயங்களைத் துடைத்து, மருந்து போட்டு, தேவையான இடத்தில் ப்ளாஸ்டர் போட்டு, விழுந்த வேகத்தில் வீங்கி இருந்த வலது கால் ஆடு தசையில் இருந்து க்ரேப் பாண்டால் கட்டிய அனுதரனிடம் “நீங்களும் டாக்டரா சார்?” என்று கேட்டுத் தன் இனத்தோடு நட்பாக முயன்றவளை

“இந்த நேரத்துல எங்க போய்ட்டு வரீங்க? போலீஸைப் பார்த்ததும் ஏன் குதிக்கணும்?” என்று அவனும் எதிர்க்கேள்வி கேட்டான்.

“ஸார்…” என்று அவள் மீண்டும் கான்ஸ்டபிளைப் பார்க்க, அவரோ பரிதாபமாக ஜீவாவைப் பார்த்தார். அவன் கண் சிமிட்டவும் “அவங்க ரெண்டு பேரும் பெரிய போலீஸ் ஆஃபீஸர்தாம்மா. எதானாலும் நீங்க அவங்க கிட்ட தைரியமா சொல்லலாம்” என்றார்.


சிந்து எம்பிபிஎஸ் முடித்து மேற்படிப்பு நுழைவுத் தேர்வுக்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறாள். இடையில் பணா அனுபவத்திற்காக அமுதம் கருத்தரிப்பு மையத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் கூட முடியவில்லை.

இன்று நைட் டியூட்டி என ஏழரை மணிக்கு ஹாஸ்பிடல் வந்தவளை ‘ஹோம் விஸிட்’ என்று ஒர்க் ஷீட் பேப்பரைக் காட்டி, ஒரு நர்ஸுடன் அழைத்துச் சென்றனர். இவளும் யாரோ பணக்கார பேஷன்ட்டுக்கு உடம்பு சரியில்லை போல என நினைத்துச் செல்ல, அங்கே….

“ஒரு டஜன் பெண்களாவது இருப்பாங்க சார். எல்லாரும் ஸ்கூல், காலேஜ் படிக்கற வயசுல இருக்கறவங்க. அந்த நர்ஸ் அங்க ரெகுலரா போறவங்க போல. அவங்களுக்கு, பிரஷர், சுகரோட கூடவே சிலருக்கு ஓவுலேஷன் டெஸ்ட் ஃபைண்டர்ல டெஸ்ட் எடுத்துட்டுக் குறிச்சு வைக்க சொன்னாங்க”

“…”

“எனக்கு அங்க நடக்கற எதுவும் சரியா படல. இந்த டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு எதுக்கு ஓவுலேஷன் டெஸ்ட்னு கேட்டதுக்கு அங்க இருந்த ஒரு பொம்பளை ‘சொல்றதை செய்னு’ என்னை அதட்டினா. வாசல்ல வேற தடி தடியா காவலுக்கு ஆள் நிக்கறாங்க. பேசாம சொன்னதை செஞ்சுட்டு, போன கார்லயே ஹஸ்பிடலுக்கு திரும்பி வந்தோம். வர்றவழிலயே அந்த நர்ஸ் என்னைப்பத்தி யார்கிட்டயோ கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிட்டே வந்தா. அங்க போனா என்ன செய்வாங்களோன்ற பயத்துலதான் குதிச்சிட்டேன்.”

அனுதரன் மீண்டும் “அதெப்படி சரியா இங்க வந்து விழுந்தீங்க?” என்றதும் வெகுண்ட சிந்து “என்னை சந்தேகப்படறீங்களா சார்? எனக்கு இது போலீஸ் வீடுன்னு தெரியாது. இந்த ரோட்ல எல்லாம் பங்களாவா, எல்லா வீட்டு வாசல்லயும் செக்யூரிடி இருக்கவும் அவங்க கிட்ட இருந்து தப்ப நினைச்சு இங்க விழுந்துட்டேன். கமிஷனர் வீடு கூட அடுத்த ரோடுதானே சார்?”

ஏதோ கேட்க வந்த அனுதரனை பார்வையால் அடக்கிய ஜீவா ” உங்க வீடு எங்க இருக்கு சிந்து?”

“ராமநாதபுரத்துல சார். எங்கப்பா கனரா பேங்க்ல இருக்கார். பேசறீங்களா?” என்றவள் தன் மொபைலைத் தேட, காணவில்லை.

“ஐயோ, என் பேக், மொபைல், ஸ்டெத்..”

ஜீவா “நீங்க பேசாம அதோட குதிச்சிருக்கலாம்” எனவும் அனுதரனும் கான்ஸ்டபிளும் சிறிது சத்தமாகவே சிரித்தனர்.

இன்னொருவர் போய் டீ போட்டுக்கொண்டு வந்தார். அதற்குள் ஜீவா ஹேமந்தை அழைத்திருக்க, அவனும் வந்து சேர்ந்தான்.

அடுத்த ஒன்றரைமணி நேரத்தில், சிந்துவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டு, அவளது பெற்றோரிடம் மேலோட்டமாக விவரம் தெரிவித்து விட்டு, சாட்சியின் பாதுகாப்பு கருதி, அதிகாலை ஃப்ளைட்டில் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் துணையுடன் சென்னையில் போய் இறங்கியவளை, பிரபுதீரனே ஏர்போர்ட் வந்து, நேரே தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

மனைவியிடம் “ஹேமா, இது சிந்து. கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்லதான் இருக்கப்போறாங்க. பாப்புக்குட்டி, டைகர், அக்காவை டிஸ்டர்ப் செய்யாம விளையாடணும், ஓகே” என்றவன், சிந்துவிடம் “ஃபீல் அட் ஹோம் மா. நீ பாட்டு ஃப்ரீயா இரு. வெளில மட்டும் போயிடாத. உன் சேஃப்டிக்குதான் சொல்றேன்” என்றான். சிந்து பயத்துடன் தலையாட்டினாள்.


சிந்துவைப் பற்றிய விவரங்களை விசாரித்த அதே நேரத்தில், அவள் சொன்ன அடையாளங்களை வைத்து, தென்கரையில் இருந்த அந்தத் தனி வீட்டுக்கு விரைந்த போலீஸ் கண்டதெல்லாம், திறந்து கிடந்த வீட்டில், தலையில் அடிபட்டு, ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த நீலவேணியைத்தான்.