தாத்ரி – 6

தாத்ரி 6

ஜனனியின் மனம் ஒரு நிலையில் இல்லை. ஓனரிடம் ‘உடல்நிலை சரி இல்லை வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள், எனக்கு வேறு வழி இல்லை’ என்றவள், வீட்டை விட்டு நகராது தனக்குள் மூழ்கி இருந்தாள்.

‘இந்த வாடகைத்தாய் விஷயத்தைக் கணவனிடம் எப்படிச் சொல்வது?’

‘நிச்சயமாக சம்மதிக்க மாட்டான்’

‘எனக்கும்தான், அப்படியாவது ஒரு குழந்தை எதற்கு?’ என்று நினைத்தாலே கண்கள் பெருகி, உள்ளுக்குள் வெறுமை பரவ, மனம் அதை ஏற்க மறுத்தது.

‘எத்தனை வருடக் கனவு?’ அக்காவிற்குக் குழந்தை பிறந்து, அது முகம் பார்த்து சிரிப்பதற்குள் ஐம்பதே நாளில் அவளது மாமியார் அவளை அழைத்துவிட்டார். அடுத்தமுறை பார்த்தபோது இவளிடம் வரமறுத்தது, பத்து மாதக் குழந்தை.

அந்த ஏமாற்றத்தில் விளைந்த வீம்பில் ‘எனக்குக் குழந்தை பொறந்தா, அதுவும் உங்க யார்கிட்டயும் வராது’ என்றதில் தொடங்கிய கற்பனைதான் எத்தனை?

அத்தனையும் கனவும் கற்பனையுமாகவே நின்றுவிட, ‘இதோ, இதுதான் கடைசி சந்தர்ப்பம், இதை நழுவ விடாதே!’ என்றது மனம்.

கணவன் வருவதற்கு முன் இது நடந்துவிட்டால் என எண்ணித் துணிந்ததில், மீண்டும் டாக்டரிடம் சென்றாள்.

ஜனனிக்கு யார், எப்படி செயல் பட்டார்கள் என்ற விவரமெல்லாம் தெரியாது. ஆனாலும், அந்த வார இறுதியிலேயே, ஜனனி, சீராளன் தம்பதியின் வாரிசு வளர ஒரு ஆரோக்கியமான பெண் கிடைத்து விட்டதாக, மருத்துவமனையில் இருந்து தெரிவித்தனர்.

கலவையான உணர்வுகளுடன் ஓடிச் சென்றவளுக்கு, ஏதோ மருந்தின் உதவியில் உறக்கத்தில்/ மயக்கத்தில் இருந்த ரோஹிணியின் ரூபத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

‘இவளா, இந்தச் சின்னப்பெண்ணா?’

‘அக்கா, அக்காவென என் மீது அத்தனை மதிப்பும் அன்பும் வைத்திருக்கும் இந்தப் பெண்ணையா, இல்லையில்லை குழந்தையையா?’

மருத்துவரும் அங்கம்மாவும் ஒரு நர்ஸும் நிற்க “வேண்டாம் டாக்டர். இந்தப்பாவம் எனக்கு வேண்டாம். நான் யாரோ இது போல பணத்துக்காக தெரிஞ்சே குழந்தை பெத்துத் தர்றவங்கன்னு நினைச்சேன். வேணாம் டாக்டர்”

“இது ஒண்ணும் புதுசு கிடையாது ஜனனி. இந்தப் பொண்ணை கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்தாச்சு. அதுக்கான பணமும் கொடுத்தாச்சு. இனிமே யாருக்கும் உபயோகம் இல்லாம திரும்ப அனுப்ப முடியாது. உங்களுக்கு வேண்டாம்னா நாங்க வேற க்ளையன்ட்டுக்கு சொல்லுவோம். ஆனா, அது வரைக்கும் இந்தப் பொண்ணுக்கான செலவை நீங்கதான் செய்யணும்” – மருத்துவரின் குரலில் நம்பியார் முதல் நாசர் வரை, வீரப்பா முதல் வினய் வரை எல்லா வில்லன்களும் சேர்ந்து ஒலித்தனர்.

அங்கம்மா “ஏனம்மணி, இத்தினி ஆசைய நெஞ்சுக்குள்ள வெச்சுக்கிட்டு, கடேசி நிமிஷத்துல வேணாங்குறியே, ஒத்துக்க அம்மணி”

“…”

டாக்டர் “உண்மையில் உங்க அதிர்ஷ்டம், இந்தப் பொண்ணு இப்ப சரியான ஓவுலேஷன் (ovulation) டயத்துல இருக்கா. சளி, ஜுரம்னு எந்தப் பிரசினையும் இல்ல. ஆரோக்கியமா இருக்கா. உங்க கணவர் திரும்ப வரதுக்குள்ள பிரசவம் கூட ஆகிடும். நீங்க சம்மதிச்சா, நாளைக்கே…”

ஜனனி தன்னை மீறி “ஓகே டாக்டர்” என்றிருந்தாள்.


“எந்து பறையுன்னு சாரே?”

ஜீவாவை பிக்அப் செய்வதற்காக ஏர்போர்ட்டுக்கு வெளியே இந்திய அரசின் இலச்சினை பொறித்த இன்னோவாவில் காத்திருந்த அனுதரன், கேட்ட செய்தியின் அதிர்ச்சி தாளாது தாய்மொழிக்குத் தாவி, கீழிறங்கி நின்றான்.

எதிர்முனையில் இருந்த ஹேமந்த் “ஆமா அனு, நான் இப்ப ஸ்பாட்டுக்குதான் போய்க்கிட்டு இருக்கேன். முடிஞ்சா ஜீவா வந்ததும் நேரே அங்க வந்துடுங்க” என்றவன் வாட்ஸ்ஆப்பில் அவர்கள் வர வேண்டிய முகவரியை அனுப்பி இருந்தான்.

விமானம் தரை இறங்கியது தெரிந்ததுமே, அனுதரன் ஜீவாவை அழைத்துவிட்டான்.

“இருடா ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன், லக்கேஜ் கூட இல்லை”

“ஓகே சார்”

ஜீவா, வந்து நின்ற வண்டியில் ஏறியதுமே “வெளியில் வர்றதுக்குள்ள அப்படி என்னடா அவசரம்?” என்றவனின் கேள்வி , அனுதரனின் முகத்தின் தீவிரத்தில் பாதியிலேயே நின்றது.

“என்ன அனு?”

போலீஸ், ஆம்புலன்ஸ், தடயவியல், பத்திரிகையாளர்கள் என எல்லாத் துறைகளும் சங்கமித்திருந்த அந்த சிறிய வீட்டுக்கு சற்று தொலைவிலேயே காரிலிருந்து இறங்கி நடந்து சென்றவர்களை எதிர்கொண்டான் ஏசிபி ஹேமந்த்.

“எப்படி?”

“ஸ்ட்ராங்குலேஷன். கயிறு கூட அப்படியே கழுத்தில் இருக்கு”

“மை காட்” என்று மூவரும் உள்ளே செல்ல, நல்ல மணிக்கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு, முழி பிதுங்கி நாக்கு வெளியில் தள்ளி உயிரை விட்டிருந்த அங்கம்மாவின் உடலை , இவர்கள் வருகைக்காகவே காத்திருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஜீவா பார்த்ததும், ஹேமந்தின் தலையசைப்பில், முகத்தை மூடி சுமந்து சென்றனர்.

வீரபாண்டி கைதான இருபத்து நாலு மணி நேரத்துக்குள், போலீஸின் அடுத்த குறி அங்கம்மாதான் என்ற கணிப்பில் அவளைக் கொன்றிருந்தனர்.

“வீரபாண்டிக்கு செக்யூரிடியை அதிகப்படுத்துங்க ஹேமந்த்”

“ஆல்ரெடி டன் ஜீவா”

தடயவியல் நிபுணர்கள் வேலை முடிந்து சென்றனர். மற்ற போலீஸாரும் கிளம்ப, ஹேமந்துடன் வந்த இருவர் மட்டுமே வெளியில் இருந்தனர். ஆம்புலன்ஸ் சென்றதுமே, கூட்டம் பெரும்பாலும் கலைந்துவிட்டது.

நடுவீட்டில் நின்று வீட்டைச்சுற்றிப் பார்க்க, ஹேமந்தும் அனுதரனும் ஆச்சர்யயித்து அதிர்ந்த அளவில் பாதி எதிர்வினை கூட ஜீவாவிடம் இல்லை.

வெளியில் எளிமையாகத் தெரிந்த அந்த வீட்டின் உட்புறம் செழுமையாக இருந்தது. ஒவ்வொரு பொருளும் லேட்டஸ்ட்டாக, அந்த வீட்டின் அளவுக்கேற்ப கச்சிதமாக இருந்தது.

ஒரு தனியார் மருத்துமனையில் வேலை பார்க்கும் இளம் டாக்டரின் வீட்டை விட வசதியாக இருந்தது, ஆயா அங்கம்மாவின் வீடு.

சுவற்றில் தொங்கிய குடும்பப் புகைப்படத்தில் அங்கம்மா தம்பதிகளோடு, டீன் ஏஜ் தேவராஜும், இன்னொரு பெண்ணும் இருந்தனர். மகளாக, அதாவது வீரபாண்டியின் மனைவியாக இருக்க வேண்டும்.

“எதிர்பார்த்ததுதானே ஹேமந்த், கோடிக்கணக்குல பணம் புரள்ற குற்றம். இதுகூட இல்லைன்னா எப்படி?” என்ற ஜீவா, இரும்பு பீரோ, மர அலமாரி, சாமி பிறை, சமையலறை, ஒற்றைக்கட்டில், மேஜை இழுப்பறை என்று தேடத்தொடங்க, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பின், சாமி பிறையின் கீழ், நவ்தால் பூட்டினால் பூட்டப்பட்டிருந்த ஒரு சிறிய மரப்பெட்டியில், கந்தரனுபூதி, சஷ்டி கவசம், கோனியம்மன் கோவில் தேர் பத்திரிகை, தேவராஜனின் திருமணப் பத்திரிக்கை, அங்கம்மாவின் கணவனின் ஃபோட்டோ, பாங்க் பாஸ்புக், இரண்டு, மூன்று பழைய அடகுக்கடை ரசீதுகளுக்கு நடுவே பிரவுன் கலர் அட்டையில் கைக்கு அடக்கமான சிறிதான டயரி போன்ற நோட்டு ஒன்று கிடைத்தது.

அதில் அங்கம்மாவின், இந்தக் கேஸ் தொடர்பான பல ரகசியங்கள் இருப்பதாகத் தோன்றவும், அதை மட்டும் எடுத்துக்கொண்டு, காத்திருந்த போலீஸாரிடம் கதவைப் பூட்டி சீல் வைத்து, க்ரைம் சீனை பாதுகாக்கும்படி உத்தரவிட்டுப் புறப்பட்டனர்.


சிபிஐயின் சிறப்பு அலுவலகம்.

ஜீவாவும் அனுதரனும் அங்கம்மாவின் கையேட்டை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.

ஐந்து சப்ஜெக்ட் நோட்டைப்போல் ஆங்காங்கே பிரிக்கப்பட்டு, லிஸ்ட் போடப்பட்டிருந்தது. எதற்கும் தலைப்பில்லாது போனாலும், அது என்னவாக இருக்கும் என்று இவர்களாக யூகித்துக்கொண்டனர்.

பள்ளிக் கல்வியைத் தாண்டி இருக்க வாய்ப்பில்லாத அங்கம்மா குற்றமே செய்தாலும்
அதன் விவரங்களை, வரவு செலவுகளை, தொடர்புகளை, அவளுக்குச் சேர வேண்டிய/ சேர்ந்த பணக்கணக்கைத் தேதிவாரியாக, ரகவாரியாகப் பிரித்து எழுதி இருந்தது இருவருக்குமே வியப்பைத் தந்தது. அத்தனை தொழில் சுத்தம்!

ஜீவா “அனு, டீ சொல்லுடா” எனவும் அவன் எழுந்து வெளியில் செல்ல, ஹேமந்த் உள்ளே நுழைந்தான்.

சிறிது நேரத்தில் டீ மற்றும் சாண்ட்விச்சுடன் திரும்பினான் அனுதரன்.

ஜீவா காட்டிய விவரங்களைப் பார்த்த ஹேமந்த் “இவங்க லெவல்லயே இத்தனை கச்சிதம்னா, எவவளவு பெரிய நெட்வொர்க்கா இருக்கணும்?”

அனு “பெரிய சார்ட்டட் அக்கவுண்டன்ட் மாதிரி பக்காவா லெட்ஜர் மெயின்டெய்ன் பண்ணி இருக்காங்க” என்றான்.

ஜீவா “ஆர்கனைஸ்டு க்ரைம் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களோட எல்லா கண்ணிகளும் இப்படிதான் இருக்கும் ஹேமந்த். அந்த சங்கிலித் தொடர்ல யாராவது ஒருத்தர் துரோகம் செஞ்சாலோ, மாட்டிக்கிட்டாலோ அங்கம்மாவோட கதிதான்” என்றான்.

அங்கம்மாவின் குறிப்பில், முப்பது பெண்கள் வரையிலான பட்டியல் ஒன்று இருந்தது. அதுதான் இதுவரை வாடகைத்தாய் ஆக்குவதற்காக அல்லது கருமுட்டை எடுப்பதற்காக அங்கம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் எல்லோருடைய பெயருக்கும் எதிரே சம அளவிலான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. வருடந்தோறும் அதிகரித்திருந்தது. அது அங்கம்மாவின் கூலி அல்லது கமிஷனாக இருக்க வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் எட்டு பெண்களின் பெயர்கள் இருந்தது. இதற்கெதிரே எழுதப்பட்டிருந்த தொகை அதிகமாக இருந்தது.

“இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருக்க வாய்ப்பு அதிகம். ஹெவி அமௌன்டைப் பாத்தா அப்படிதான் தெரியுது” என்றான் ஜீவா.

சிஸ்டர் என்ற அடைமொழியுடன் மூன்று பெயர்கள் இருந்தது. “நர்ஸாக கருக்கலாம்.” இதைத் தவிர சில ஆண்களின் பெயர்களும் இருந்தன.

அனுதரன் “ஆள் கடத்துபவர்களாகவோ, டிரைவர்களாகவோ இருக்கலாம்” என்றதை மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த ஹேமந்த்தின் பிஏ “அங்கம்மாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சார்” என்று ஒரு கவரை நீட்டினான்.

இவர்கள் எதிர்பார்த்தபடியே கழுத்து நெறிபட்டு மரணம் என்பதைத் தவிர அதில் பெரிதாக எதுவுமில்லை.

“ஹாஸ்பிடல்ல அங்கம்மாவைச் சேர்ந்தவங்க யாராவது இருக்காங்களா?”

“அவங்க பொண்ணு, அந்த வீரபாண்டியோட மனைவியும் ஒண்ணு ரெண்டு சொந்தக்காரங்களும்தான் சார் இருக்காங்க”

“பாடிய யாராவது க்ளெய்ம் பண்ண வந்தாங்களா?”

“நீங்க சொன்னபடியே இன்னும் பாடிய வாங்கிக்கலாம்னு அறிவிக்கலை சார்”

ஜீவா “ஹேமந்த், நான் நினைக்கறது சரின்னா தேவராஜ் இப்ப வெளில வரமாட்டான். நீங்க யார் க்ளெய்ம் பண்றாங்களோ, அவங்க கிட்ட பாடியை ஒப்படைச்சுட்டு ஃப்ரீயா விடுங்க. துரத்துல இருந்து கவனம் வெச்சா போதும். வெயிட் பண்ணிப் பாக்கலாம்” என்றான்.


கீழே அலுவலகமும், மாடியில் அதிகாரிகளுக்கான இருப்பிடமுமாய் இருந்த அந்த சிறிய பங்களாவின் பின்னால் அவுட் ஹவுஸ் போல் இருந்த இடத்தில் சிபிஐ போலீஸார் தங்கி இருந்தனர்.

நேரம் இரவு ஒன்றை நெருங்கிக் கொண்டிருக்க, தன் அறையில் தூக்கமும் விழிப்புமாக இருந்த ஜீவாவை ஆழ்ந்து உறங்க விடாமல் எதுவோ உறுத்தியது. எழுந்து உட்கார்ந்து படிக்கும் விளக்கைப் போட்டவன் தன் லேப்டாப், நோட்பேட், பேனா, அங்கம்மாவின் டயரி சகிதம் அமர்ந்து கொண்டான்.

ஏற்கனவே அவனிடம் இருந்த அன்புச்செல்வி, ரோஹிணி உள்ளிட்ட பெண்களின் பெயர்கள் அங்கம்மாவின் கையேட்டில் இருக்கிறதா என்று பார்த்தான். அதில் ரோஹிணியைக் காணவில்லை. சற்றே ஏமாற்றமடைந்தாலும், முதலில் இருந்து ஒவ்வொரு பக்கமாக மீண்டும் தன் தேடுதலைத் தொடங்கினான்.

அந்த நோட்டை முன்னும் பின்னும் விரலால் ஓட்டிப்பார்த்தவன், அதன் பிரவுன் நிற ரெக்ஸின் அட்டையை நெகிழ்த்திப் பார்த்து அட்டையை உதற, சிறிதாக மடிக்கப்பட்ட மெலிதான இரண்டு சீட்டுகள் வந்து விழுந்தது. பார்த்தாலே, அந்த கையேட்டிலிருந்து கிழிக்கப்பட்டதென்று புரிந்தது.

இரண்டிலும் ரோஹிணி இருந்தாள். அதில் ஒன்றில் ஜனனி என்ற பெயரும் அதன் எதிரே அஞ்சு லட்ச ரூபாய் என குறிப்பிட்டு இருந்தது.


அங்கம்மாவின் உடலை வாங்கிக்கொண்டு சென்ற அவரது மகள், மகன் தேவராஜன் வராமலே உறவினர்களின் மூலம் இறுதிச்சடங்கை செய்து முடித்தாள். பவானியின் அருகே இருக்கும் அங்கம்மாவின் சொந்த கிராமத்தில் பதினாறாம் நாள் கருமாதி செய்வதாக முடிவு செய்தாள். வீரபாண்டியை வெளிவிடக் கேட்டது நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும், வீரபாண்டி போலீஸ் கஸ்டடியில் இருப்பதையும் ஆரம்ப கட்ட விசாரணையையும் தவிர, யாரும் பெரிதாகத் தொடராத நிலையில், அவர்கள் அளவில் அங்கம்மாவின் காரியத்திற்கு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தாள், மகள்.

கமிஷனர் மற்றும் ஹேமந்தின் மறுப்பை மீறி, தமிழ்நாடு போலீஸை முற்றிலுமாகத் தவிர்த்த ஜீவா, தானோ, அனுதரனோ கூட நேரில் செல்லாமல், இதற்கெனவே பயற்சி பெற்ற, இயல்பான தோற்றத்தில் இருந்த சிபிஐ ஆட்களை சென்னையில் இருந்து வரவழைத்து, பதுக்கியதில், கருமாதிக்கும் படையலுக்கும் ஒரு ஆட்டோவில் தேங்காய், இலை, பழம் கொண்டு வருவதுபோல் வந்த தேவராஜனை, அவர்கள் கோழி அமுக்குவது போல் அமுக்கி விட்டனர்.


ஒரு துளி ரத்தம், சிறு வீக்கம், சிவந்து கன்னிப்போதல் என எதுவுமின்றி உயிர்வரை வலிக்கும்படி அடிப்பது எப்படி என காட்டி இருந்தான் ஜீவா.

தேவாவின் உடலில் ஒரு கீறல் கூட இல்லை. ஆனால், ஒவ்வொரு அணுவிலும் குறுகத்தெறித்தது வலி. எனினும் அவன் வாயைத் திறக்கவில்லை.

ஏற்கனவே, வீரபாண்டி, தான் வெறும் டிரைவர்தான் என்றும், அங்கம்மாவும், தேவாவும் சொன்னதைச் செய்வதாகவும், தேவாவுக்குதான் எல்லாம் தெரியுமென்றும் போலீஸின் அடிதாங்காது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தான்.

அங்கம்மாவின் வீட்டை மீண்டும் தோண்டியதில், வங்கிக்கணக்கு, இன்னும் ஓரிரு பேப்பர்களில் வரவேண்டிய பாக்கிகள் என இருந்த காகிதம் அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்தனர்.

தேவராஜைக் காவலில் வைத்துவிட்டு, அவனது வீட்டை சோதனை போடச் சென்றனர். வீடா அது?

இடையார்பாளையத்தில் சகல வசதிகளும் நிறைந்த ஒரு தனி பங்களா.

“மை காட், ஜீவா, நாம படிச்சு, வேலை பாத்து, இஎம்ஐயைத் தவிர என்னத்தைக் கண்டோம்?” என்றான் ஹேமந்த்.

அதை விட ஆச்சரியம் தேவாவுக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அங்கேயே இருந்தனர். அக்காவைக் கடத்தி வந்தவன், அவளது அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ள ‘கல்யாணம்னா அத்தானோடதான்’ என்று தங்கை பிடிவாதம் பிடித்ததில், அக்காவே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததாகச் சொன்னார்கள்.

ஜீவா “மச்சம்டா” என்று முணுமுணுக்க, மற்ற இருவருக்கும் ஒரே சிரிப்பு.

தேவாவின் இரண்டு மனைவிகளையும் ஐந்து குழந்தைகளையும் தவிர, அவனது படுக்கை அறையின் பரண் மீதிருர்த ஒரு பழைய பர்ஸில் ஒரு புது ஆன்ட்ராய்ட் மொபைல் மட்டுமே கிடைத்தது.

அது பாஸ்வேர்டுக்கு எண்களைக் கேட்க, தேவாவின் இரண்டாவது மனைவியை அழைத்த ஜீவா “உங்க கல்யாணநாள் எப்போ?” என்றான். மொபைல் திறந்தது.

அதில் பெயர் குறிப்பிடப்படாத பிரத்தியேக எண்ணுக்கு மட்டுமே அழைப்புகள் சென்றிருந்தது. ஜீவா இயக்கியதுமே , ஒரு பெண் குரல் “வெளில வந்துட்டியா தேவா, இன்னைக்கு ஒரு IUI, ரெண்டு எக் கலெக்ஷன், டாக்டர் கிட்ட இருந்து எனக்கு ஃபோன் மேல ஃபோன் வருது” எனவும், ஜீவா காலை கட் செய்தான்.

தேவா என நினைத்துப் பேசிவிட்ட அந்தப் பெண், இந்நேரம் அந்த சிம்மை அழித்திருப்பாள் என்று தெரிந்தாலும், வாய்ப்பைக் கை விடாது, ஹேமந்திடம் ஃபோன் நம்பரை ட்ரேஸ் செய்யச்சொன்னான். பலன் தெரிந்ததே.


பரபரப்புடன் உள்ளே வந்த அனுதரன் “சார், நீங்க கேட்ட எல்லா டீடெயில்ஸும் இதிலே உண்டு” என்றான்.

ரெய்டு செய்த பங்களாவின் ஓனர் என்று ஒருவரை ஏற்கனவே பார்த்திருந்தாலும், அதன் சரித்திர, பூகோளத்தை ஆய்வு செய்யச்சொல்லி அனுதரனை அனுப்பி இருந்தான் ஜீவா.

கவரைத் திறந்துகொண்டே “ஏன்டா இவ்வளவு டென்ஷன்? இதுல எனிதிங் ராங்?” என்ற ஜீவா “அடப்பாவிகளா” என்றான் அதிர்ச்சியுடன்.

அதில் அந்த பங்களா மட்டுமின்றி, தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் இருக்கும் ‘அமுதம் கருத்தரிப்பு மையத்தின்’ பினாமி பரம்பரையும் அவர்களது சொத்துகளின் பட்டியலும் இருந்தது.


“சார், இங்க சீராளன்கறது…”

“நான்தான். நீங்க…?”

“என்ன சார் நீங்க, யூனிஃபார்ம்ல இருக்கேன். என்னைப் பார்த்தாலே தெரியலையா? நான் இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல ஹெட்கான்ஸ்டபிள். உங்களோட பாஸ்போர்ட் ரின்யூவலுக்கு கொடுத்திருந்தீங்கள்ல, அதுக்கான வெரிஃபிகேஷனுக்கு வந்தேன்”

யோசனையான சீராளன், வந்திருந்த போலீஸ்காரர் கேட்ட தகவல்களைக் கொடுக்கும்போதே சிந்தனை வயப்பட்டான்.

‘முதல் முறை கூட இல்லை . மூன்றாம் முறையாக ரென்யூ செய்கிறேன். இதை எத்தனை பேர் வந்து சரிபார்ப்பார்கள்?’

அதோடு, அன்று வந்தவன் இதுபோல் தேவையான ஆவணங்களோடு நிற்காமல் நிறைய கேள்வி கேட்டது போல் இப்போது தோன்றியது. அவனது தோரணையும் இவரது குழைவும்…

“சார், நாலு நாள் முன்னாலயும் ஒருத்தர் வந்து விசாரிச்சார்’

“நேத்துதானே சார் எங்களுக்குத் தகவல் வந்தது. அதோட இது ஃபர்ஸ்ட் டைம் கிடையாது. சும்மா ஒவ்வொருத்தருக்குப் பண்ணுவோம். அவ்வளவுதான். எல்லாம் சரியா இருக்கு சார். நீங்கதான் அடிக்கடி ஃபாரின் போறீங்க போல இருக்கே” என்று தலையைச் சொறிந்தவர், எதற்காக வந்திருக்கிறார் என்பது புரிய ஒரு உயர் ரக பேனாவும் ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தான். அதோடு அதை மறந்தும் போனான்.