தாத்ரி – 5

தாத்ரி 5

தன் உடல் உபாதையிலும் சுயபச்சாதாபத்திலும் ஒரு வாரமாக மூழ்கி இருந்த ஜனனிக்கு, ஃபேஷன் டிஸைனிங் க்ளாஸில் இருந்து கால் வந்தது.

“ஜனனி, நான் அவசரமா ரெண்டு வாரம் ஊருக்குப் போறேன். நீ கொஞ்சம் இன்ஸ்டிட்யூட்டைப் பார்த்துக்கறியா?” என்றாள் ஓனர். சில சமயம் இதுபோல் பொறுப்பேற்று இருக்கிறாள் என்பதால் வருவதாக ஒத்துக்கொண்டாள்.

அங்கு ரோஹிணியைப் பார்த்ததும் அங்கம்மாவின் ஆசை வார்த்தைகளே மனதில் சுழன்றடித்தது. எப்படியும் இதற்குக் கணவன் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்ததால்,அந்த எண்ணத்தைத் தவிர்க்க முயன்றாள்.

ஒரு வாரம் கூட சென்றிருக்காது, மீண்டும் ‘யதேச்சையாக அங்கம்மா ஜனனியை சந்தித்தாள்.

“நீங்க மட்டும் சரின்னு ஒத்துக்கோங்கம்மா. சரியான ஆளைப் புடிச்சு பத்தே மாசத்துல உங்க கைல குழந்தை இருக்கும்”

“இந்தப் பேச்சு வேண்டாம் ஆயா”

“நீங்க ஒரு தரம் டாக்டரை வந்து பாருங்கம்மா. அவங்களே சொல்லுவாங்க”

“என்னைப் போக விடுங்க ஆயாம்மா. எனக்கும் அவருக்கும் பொறக்காத குழந்தை எங்களுக்கு வேணாம். நான் வரேன்”

ஆனால், மனதில் இந்த எண்ணங்களே சுழல, இது தொடர்பான சந்தேகங்கள் எழுந்தது. கூகுள் செய்ததில் குழப்பம் அதிகரித்ததே தவிர, தெளிவு பிறக்கவில்லை. வேண்டாம் என மறுத்த ஒன்றைப் பற்றி எதற்கு இத்தனை கவலையும் ஆராய்ச்சியும் என்ற கேள்வியே எழாமல் ஏதேதோ சிந்தனையோடு இரண்டு நாட்களை ஓட்டியவள், மூன்றாம் நாள் காலையிலேயே டாக்டரிடம் போய் நின்றாள்.

“டாக்டர், அவர் இதுக்கு நிச்சயமா ஒத்துக்க மாட்டார். அப்படியே சரின்னாலும் இன்னும் ஒரு ஏழெட்டு மாசத்துக்கு அவரால இங்க வர முடியாது. அப்புறம் எப்படி….?”

சிரித்த மருத்துவர் “நம்ம ஊர்ல வாடகைத்தாய் ஒண்ணும் புதுசு கிடையாது ஜனனி. உங்களுக்கு IVF செய்யறதுக்காக உங்க கணவர் விந்தணு சாம்பிள் கொடுத்தபோதே மூன்று முயற்சிக்குத் தேவையான அளவு கொடுத்திருக்கார். அது ஸ்டோரேஜ்லதான் இருக்கு. ஒண்ணும் பிரச்சனை இல்ல”

“அது… அது நிச்சயமா அவரோட… எங்களோட குழந்தைதானே டாக்டர்?”

“100% நிச்சயம். நீங்க டீரீட்மெண்ட்டுக்கு முன்னால பார்த்து லேபிளை (டோனரின் பெயர்) உறுதி செஞ்சுக்கலாம்”

“சரி டாக்டர்”

“சர்ரகேட் மதரை நீங்களே கூட்டிட்டு வர்ரீங்களா, உங்க உறவு, நட்புல…”

“நோ, நோ டாக்டர். இங்க வேலை செய்யற அங்கம்மான்னு ஒரு ஆயாதான்…”

“அங்கம்மா ஏற்பாடா, அப்ப கவலையே படாதீங்க. ஆரோக்கியமான குழந்தை பொறக்கும்”

“தேங்ஸ் டாக்டர்”

“பணம் நிறைய செலவழியுமே பரவாயில்லையா?”

“பைசா பிரச்சனை இல்லை டாக்டர்”

மருத்துவர் “ஆல் தி பெஸ்ட் ஜனனி. எல்லாம் நான் பாத்துக்கறேன்” என்றார் அகலமான புன்னகையுடன்.

அங்கம்மாவின் இந்த தொடர்புகளை டாக்டர் ஆதரிப்பது ஏன் என்றோ, பணம் பிரச்சினை இல்லை என்றதும் அவரது முகத்தில் வந்து உட்கார்ந்த மகிழ்ச்சியையோ உணராத ஜனனி, இதை தன் கணவனிடம் எப்படிக் கூறுவது, பணத்தை எப்படி ஒன்று திரட்டுவது என அடுத்தக் கட்ட திட்டமிடலுக்கு நகர்ந்தாள்.

நன்மைக்கு மட்டுமின்றி, தீமைக்குமே மனமிருந்தால் மார்க்கம் உண்டுதானே?


இரவிலும் கனன்ற சென்னையின் வெம்மை தாங்காது, நல்லதொரு குளியலைப் போட்ட நிமலன்,
ஷார்ட்ஸும் பனியனுமாகத்
தன்னிடம் இருந்த சிறிய எலக்ட்ரிக் குக்கரில் வைத்த சாதத்தின் மேல், அம்மா துர்கா கொடுத்தனுப்பிய பருப்புப்பொடியும் நெய்யும் போட்டு, சிப்ஸ் பாக்கெட்டுடன் ஹால் திவானில் வந்து உட்கார்ந்து தன் லேப்டாப்பில் காமெடி சேனல் ஒன்றை ஆன் செய்து விட்டு உண்ணத் தொடங்க, காலிங்பெல் அடித்தது. மணி இரவு ஒன்பதரை.

‘இந்நேரத்துக்கு யார்?’ என்ற யோசனையுடன் கதவைத் திறக்க, வெளியில் நின்றிருந்தவன் “நான் ஜீவா, ஃப்ரம் சிபிஐ” எனவும், நிமலன் பெரிய அதிர்ச்சி ஏதுமின்றி “கம் இன் சார்” என்றான்.

இந்த இரவு வேளையில் இல்லையே தவிர, அவன்தான் கடந்த ஐந்தாறு நாட்களாகவே இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானே! நிமலனின் கவலையெல்லாம், அவர்கள் அவனது அலுவலகத்திற்கு வந்துவிடக் கூடாதே என்பதாகத்தான் இருந்தது. அந்த அளவில் இப்போதைக்கு அவனுக்கு நிம்மதிதான்.

தன்னை வரவேற்றவனின் இயல்பில் புன்னகைத்த ஜீவாவுக்கு போன வியாழனன்று கோவையில் இருக்கும் நிமலனது பெற்றோர்களின் வீட்டைக் கண்டுபிடித்து விசாரிக்கச் சென்றது நினைவுக்கு வந்தது.

நிமலன் சிறுவனாக இருந்தபோது ஆவாரம்பாளையத்தில் அவனது தந்தை சரவணன் வாங்கிய நாலு சென்ட் நிலத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் வீடு கட்டிக் குடியேறி இருந்தனர்.

சரவணன் இன்னும் சர்வீஸில் இருப்பதால், மகளைக் காணவில்லை என போலீஸுக்கு அளித்த புகாரில் இருந்த அவரது கண்டக்டர் உத்தியோகத்தை வைத்துத் தற்போதைய விலாசத்தைக் கண்டுபிடித்திருந்தனர்.

அதிகாலை ஷிஃட் என்பதால் மதியம் மூன்று மணிக்கு வீட்டில் இருந்த சரவணன் போலீஸை, அதுவும் அவரது மகளைப் பற்றிய மறு விசாரணையுடன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

மகன் நிமலன் மகளை உரித்து வைத்ததுபோல் ஒரு குழந்தையின் ஃபோட்டோவைக் கொண்டு வந்ததும், இப்போது முடிந்துபோனதாக நினைத்த கேஸ் சிபிஐயின் கைகளில் சென்றிருப்பதும் சரவணனைப் பதற வைத்தது.

எதற்கென்று புரியாவிட்டாலும் ஆரூஷி, நொய்டாவின் 14 வயதுப் பெண் என சிபிஐ வசம் சென்ற பதின் பருவப் பெண்களின் கேஸ்களைப் பற்றிய செய்திகளை அவரும்தானே அறிந்திருந்தார்?

இப்போது மகள் யாருடனோ ஓடிப் போய்விட்டதாகத் தான் கத்தியதின் அபத்தம் புரியவும், ஐந்து வருடங்களுக்குப் பிறகான போலீஸின் வருகையில் உள்ளுக்குள் பயம் பரவியது. துர்காவின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

நிமலன் வந்து சென்ற கடந்த ஒரு மாதத்தில், மகளைப் பற்றிய பேச்சும் நினைவும் அதிகரித்ததில், இப்போது மீண்டும் போலீஸ் தானே தேடி வந்ததுமாகச் சேர்ந்து, ஆறரை வருடங்களுக்கு முன் தொலைந்துபோன மகள் திரும்பக் கிடைத்து விடுவாளோ என்ற நம்பிக்கை மீதுற, ஜீவாவின் கேள்விகளுக்கு கவனமாகப் பதிலளித்த கணவரின் பேச்சில் குறுக்கிட்டு “ஒரு நிமிஷம் சார்” என்றார் துர்கா.

“சார், தண்ணி” என்ற நிமலனின் அழைப்பில் கலைந்த ஜீவா, நிமலன் நீட்டிய குளிர் நீரை வாங்கிப் பருகினான்.

‘வெண்பாவைப் பார்த்தா யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு நீ அவ்வளவு சொல்லியும் போலீஸ் வந்து பாப்புவைக் கேட்டதுமே உங்கம்மா, பாப்பு ஃபோட்டோ, வெண்பா ஃபோட்டோன்னு எல்லாத்தையும் காட்டி, விலாவாரியா வெளக்கிட்டா. உன் ஆபீஸரோட விவரம் தெரியாததால அவரோட பொண்ணுன்னு சொன்னதோட சரி. எப்படியும் உன்னை வந்து விசாரிப்பாங்க. பாத்து பதில் சொல்லிக்க’ என்ற தந்தையின் பேச்சு நினைவுக்கு வந்தது.

எளிமையான குடும்பத்தில் இருந்து பெரிய கம்பெனியில், நல்ல வேலையில் இருக்கும் மகனுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதென்ற தந்தையின் அக்கறையை நிமலன் சரியாகவே புரிந்துகொண்டான்.

“சொல்லுங்க நிமலன்” – ஜீவா.

சற்றே தயங்கினாலும் “நீங்க வந்து விசாரிச்சதா அப்பா சொன்னாங்க. திடீர்னு ஏன் சார் கேஸை நீங்க (சிபிஐ) எடுத்துக்கிட்டீங்க?” என்றவனின் புத்திசாலித்தனம் ஜீவாவைக் கவர்ந்தது.

நிமலனின் பெற்றோர்களுக்கு நிதர்சனத்தைத் தரிசிக்கும் மனவலிமையோ, ஜீவாவைக் கேட்கும் தைரியமோ இல்லாததோடு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர்களிடம் மகளைப்பற்றிய நற்செய்திக்கான எதிர்பார்ப்பும் ஏக்கமுமே இருந்தது.

எனினும், முழுதாக எதையும் சொல்லாது, கேஸ் குறிதாத விவரங்களை ஜீவா கோடி காட்டியதற்கே, நிமலனின் முகம் வெளிறியது.

“அவ காணாம போனபோது பதினாறு வயசுதான் சார் அவளுக்கு. குழந்தை சார் அவ. அவளைப் போய். எப்படி சார்?” என்று தவித்தான். மனதில் வந்துபோன தோற்றங்களில் அவன் முகமே கலவரமானது.

“ரிலாக்ஸ் நிமலன். ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். இப்ப சில ஆதாரங்கள் கிடைச்சதுல, தீவிரமா வேட்டையைத் தொடங்கி இருக்கோம். மாநில எல்லைகளைத் தாண்டிய குற்றம்ங்கறதால கேஸ் எங்க கைக்கு வந்திருக்கு”

படித்த இளைஞன், புரிந்து கொள்வான் என்பதால் விளக்கமாகவே பதிலளித்தான் ஜீவா.

“புரியுது சார்”

“வெண்பா பத்தி சொல்லுங்க நிமலன்”

தன் மொபைலில் இருந்த புகைப்படங்களைக் காட்டினான்.

“உங்க தங்கையோட ஃபோட்டோ எங்க கிட்டயே இருக்கு. உங்க அம்மாவும் ஒண்ணு கொடுத்தாங்க. ரெண்டு பேரும் அச்சடிச்ச மாதிரி இருக்காங்க. வெண்பாக்கு அந்த மூக்கு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் கிளி மாதிரி வளைஞ்சிருக்கு”

அடுத்து நிமலன் காட்டிய வீடியோவில், வெண்பா பாடுவதும், மற்ற கொலீக்ஸும் இருக்க “அவர்தான் சார் வெண்பாவோட அப்பா, எங்க கம்பெனியோட சீனியர் டெக்னிகல் மேனேஜர்”

“ம், தெரியும்” என்ற ஜீவா, நிமலனின் கலங்கிய பார்வையில் “சும்மா விசாரிச்சேன். நீங்களும் நானும் சந்தேகப்படறது நிஜமா இருந்தா, அவரை விசாரிக்கதானே வேணும்?”

“அவருக்கு நாப்பது வயசு கிட்ட இருக்கும் சார். பாப்பு சின்னப் பொண்ணு சார்….” என்று மீண்டும் கண் கலங்கியவனுக்கு
ஜீவாவிடம் பதில்தான் இல்லை.

“நீங்க அவரோட மனைவியைப் பார்த்திருக்கீங்களா, நிமலன்?”

“இல்ல சார். நான் இந்தக் கம்பெனில சேர்ந்தே நாலு மாசம்தான் ஆகுது. இதுவரை நடந்தது ஒரே ஒரு கெட் டு கெதர்தான். அதுலதான் நான் வெண்பாவைப் பாத்தேன். அதுக்கு அவங்க வரலை சார்”

“ம்… வெண்பாவைப் பார்த்த பிறகு, உங்க தங்கைக்கும் அந்தப் பொண்ணுக்குமான முக ஒற்றுமையை உணர்ந்த அப்புறம், நீங்க அவரோட மனைவியைப் பாக்க முயற்சிக்கலையா?”

“வெண்பாவைப் பாத்த எக்ஸைட்மெண்ட்லயும், அதிர்ச்சிலயும் ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன் சார். அம்மா அழ, அப்பா பாப்பு மேல கோவிச்சுக்கிட்டு சத்தம் போடன்னு குழப்பமா இருந்துச்சு. அம்மா, அவங்களைப் போய் பாரு, ஒருவேளை பாப்புவா இருக்கப் போகுதுன்னு அழுதாங்க. ஆனா, எனக்கு அதுல நம்பிக்கை இல்லை. அப்பாவுக்கு, நான் விசாரிக்கறது தெரிஞ்சா, என் கேரியருக்குப் பிரச்சனை வருமோன்னு பயம். அப்போதான் நீங்க விசாரணைக்கு வந்ததா சொன்னாங்க”

“…”

“பாப்பு உயிரோட இருப்பாளா சார்?”

“நீங்க உங்க சீனியரைப் பத்திச் சொல்லுங்க. அவருக்குக் கோயம்புத்தூரா?”

“நோ ஐடியா சார்”

“அவரோட அட்ரெஸ் சொல்லுங்க நிமலன்”

“அட்ரஸ் தெரியாது சார், மொபைல் நம்பர் தெரியும்.” சொன்னான்.

“அவர் பேரு?”

“சீராளன் சார்”

“மனைவி பேரு?”

“தெரியாது சார்”

“தேங்க்ஸ் நிமலன். எதா இருந்தாலும் நடந்ததை இனிமே மாத்த முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டா அதுக்கான தண்டனையை நிச்சயமா வாங்கித் தருவோம். தைரியமா இருங்க. ஏதாவது தேவைன்னா கால் பண்றேன்” என்று எழுந்த ஜீவா, நிமலனின் தோளில் தட்டினான்.

ஜீவா பதில் தெரிந்த கேள்வியை நிமலனிடம் கேட்டான்.

“உங்க தங்கை பேரு?”

“ரோஹிணி சார்”


சென்னை வந்திருந்த ஜீவா, தன் மனைவி மகளுடன் தன் பாஸ் பிரபுதீரனின் வீட்டிற்குச் சென்றான்.

“வாம்மா, வாடா ஜீவா, தங்கக்குட்டி வாங்க” என்று வரவேற்றாள் ஹேமா, பிரபுதீரனின் மனைவி.

உள்ளிருந்து வந்த குழந்தைகள் இருவரும் ஜீவாவின் ஒன்றரை வயது மகளைக் கவர்ந்துகொண்டு செல்ல, பிரபுதீரன் “அப்புறம்?” எனவும், இருவரும் மொட்டை மாடிக்கு செல்ல எழுந்தனர்.

“ஜீவா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கார். ஆனா, என்ன பிரச்சனை, என்ன கேஸ், எதுவுமே சொல்ல மாட்டேங்கறார்ணா. நீங்களே கேளுங்க” என்றாள் திருமதி சரண்யா ஜீவகுமார்.

“உஃப்” என்று ஊதிய ஜீவா “இந்த நிலமைல இந்தக் கேஸ் பத்தின டீட்டெய்ல் இவளுக்குத் தேவையா பாஸ்? மனசுல பெரிய கிரண்பேடின்னு நெனப்பு. என்னால மிடில” என்றான்.

ஹேமா “ஏண்டா, வரும்போதே பஞ்சாயத்தோடதான் வருவீங்களாடா? இதுல கல்யாணமாகி மூணு வருஷத்துல அவ வயத்துல ரெண்டாவது குழந்தை வேற”

“ரெண்டும் வேற வேற டிபார்ட்மெண்ட் அண்ணி. குழப்பிக்கக்கூடாது” என்றவனை சரண்யா முறைக்க, பிரபுதீரன் தம்பதிகள் வாய்விட்டுச் சிரித்தனர்.


அடையாரில் இருக்கும் சிபிஐ உயரதிகாரிகளின் குடியிருப்பு. அந்த தனி பங்களாவின் மொட்டை மாடி.

“எனி பிராப்ளம் ஜீவா?”

“அதெல்லாம் இல்ல பாஸ். ஆனா, இந்தக் கேஸ் மனசை என்னவோ செய்யுது. முன்னால எப்படியோ பாஸ், இப்ப ஒரு பொண்ணோட அப்பாவா”

“ஜீவா…”

முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவன் “எல்லாரும் ஒரே போல பதினாறுல இருந்து இருபது, இருபத்தோரு வயசுக்குள்ள இருக்கற பொண்ணுங்க. ஒரு பொண்ணையும், ஒரு குடும்பத்தையும் பாத்துப் பேசினதுக்கே பதறுது பாஸ்”

“சியர் அப் ஜீவா. நாம பாக்காததா, இதுலயே இன்னும் என்னென்ன வரப்போகுதோ? ஆமா, அந்த சீராளனை மீட் செஞ்சியா?”

“பாத்துட்டேன் பாஸ். தங்கமான மனுஷன். அவ்வளவு மென்மையா பேசறார். பொண்டாட்டி, பொண்ணு மேல உசிரையே வெச்சிருக்கார்.

“திடீர்னு எப்படிடா போய் பாத்த?”

“என் அதிர்ஷ்டம், அவரோட பாஸ்போர்ட் ரென்யூவலுக்கு டயம் வந்திருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். கன்ஃபர்மேஷனுக்குப் போறாப் போல போனேன்”

“குட். அவரோட மனைவியைப் பார்த்தியா?”

“பாத்தேன் பாஸ், அவங்க அவரை விட சாதுவா இருக்காங்க. நான் போனபோது அவங்க கண்ணை கட்டிக்கிட்டு நிக்க, அப்பாவும் பொண்ணும் புடிக்கச் சொல்லி ஓடிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சு பொறந்த குழந்தைனால ரொம்ப செல்லம் போல”

“ம்… அவங்க பேர் என்னவாம்?”

“சீதளா”

“கொஞ்சம் வித்தியாசமா இல்ல? வேற ஏதாவது குறிப்பிட்டு சொல்லும்படியா?”

“உண்மைல எனக்குத் தெரியலை பாஸ். ஆனா, ரோஹிணிக்கும் அந்தப் பொண்ணுக்கும் இருக்கற அசாத்திய முகஜாடைதான் இடிக்குது . நாளைக்கு வெண்பாவோட ஸ்கூலுக்குப் போகப்போறேன்”

“டேக் கேர் டா”


டாஸ்மாக்கின் உபயத்தில் “ராமேன் ஆண்டாலும் ராவணே(ன்) ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல’ என்று வீட்டு வாசலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு முழு போதையில் பாடிக்கொண்டிருந்தவனை யாரோ குத்தினார்கள்.

“இருடீ வரேன். தோச சுட்டியா? காரக் குழம்பு?”

“எந்திரிச்சு வா, கோழிக்குழம்பே ஊத்தறேன்”

அரைகுறையாகக் கண்ணைத் திறந்தவனுக்கு சுற்றிலும் மசமசப்பாக நிறைய உருவங்கள் தெரிந்தது.

“நம்மூட்ல விசேசமா அம்மிணி, அதான் கோழிக்குழம்பா?” வார்த்தை குழறினாலும் கேள்வி தெளிவாகத்தான் வந்தது.

“யோவ் த்ரீ நாட் டூ, அள்ளிப் போட்டுட்டு புறப்படாம, குடிகாரப்பயலோட என்னய்யா பேச்சு வார்த்தை வேண்டிக்கிடக்கு?”

அந்தச் சிறிய சந்தில் இருந்தவர்களில் அநேகமாக எல்லோருமே வேடிக்கை பார்க்க, ‘அவரை ஏங்க புடிச்சுக்கிட்டுப் போறீங்க?’ என்ற கேள்வியுடன் சற்று நேரம் அழுத அந்தப் பெண்மணி, கூட்டம் கலைந்ததும் வீட்டுக்குள் சென்று தன் ஆன்ட்ராய்டு மொபைலில் அழைப்பு விடுத்தவள் “தேவா, உங்க மாமாவ போலீஸ் புடிச்சிக்கிட்டுப் போய்ட்டாங்கடா” என்றாள்.


வீரபாண்டி இப்போது முழுதாகத் தெளிந்திருத்தான். காலையில் பல் விளக்கி, முகம் கழுவி, டீ குடித்தாகிவிட்டது. அங்கிருந்த கான்ஸ்டபிளின் தயவால் சிகரெட் கூட கிடைத்தது.

இதுவரை யாரும் தன் மேல் கை வைக்காததில் , தைரியமாக உணர்ந்தவன், அவனிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் சொல்ல முடிவு செய்துகொண்டான்.

ஆனால், அவன் எதிர்பாராதவிதமாக, ஒன்பது மணியளவில், கம்பிவலை போட்ட ஒரு சுமோவுக்குள் ஏற்றி, இரண்டு கான்ஸ்டபிள்களோடு சப் இன்ஸ்பெக்டரே கூட வர, அமைதியான ஒரு பங்களாவிற்கு அழைத்துச் சென்றனர்.

கான்ஸ்டபிள், ஏட்டு, சப் இன்ஸ்பெக்டர் , இன்ஸ்பெக்டர் என காவல்துறை ராங்க் வாரியாக வரிசையில் வந்து அடித்ததில் அவன் கண்களில் பயம் ஏறி இருக்க , தான்
அங்கம்மாவின் தம்பி மற்றும் மாப்பிள்ளை என்றும், தேவா எனப்படும் தேவராஜன் அங்கம்மாவின் மகன் என்றும் தெரிவித்தான். மேலும், அனுதரனின் பட்டியலில் இருந்த பலரையும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதில் பலரும் நெருங்கிய உறவினர்களாகவே இருந்தனர்.

“நம்பிக்கையா இருக்கோணும், அதே நேரம் நம்ம சேஃப்டியும் முக்கியந்தானேங்ணா?” என்று போலீஸையும் அவனோடு கூட்டு சேர்த்தான் வீரபாண்டி.

ஜீவா சென்னையிலிருந்து வந்து விசாரிக்கும்வரை , அந்த வீட்டின் ஒரு அறையிலேயே அவனைக் கடுங்காவலில் வைத்தனர்.


வெண்பாவின் பள்ளியில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி “மேம், தேவையில்லாம அவங்களைப் பயமுறுத்த விரும்பலை, ப்ளீஸ்” என்றவனுக்கு அவளது பிறப்புச் சான்றிதழின் நகலைக் கொடுத்தார், அந்தப் பள்ளியின் முதல்வர்.

தன் ஜீப்பில் ஏறி, அதில் பெண் குழந்தை, பெயர் வெண்பா, தாய் சீதளா, தந்தை சீராளன் என்றிருந்த வாசகங்களைப் படித்துக்கொண்டே வந்த ஜீவா, திடீரென விசிலடித்தான்.

குழந்தை பிறந்த மருத்துவமனை என்ற இடத்தில் ‘கோவை மெட்டர்னிடி க்ளீனிக், கோயம்புத்தூர்’ என்றிருந்தது