தாத்ரி – 4

தாத்ரி 4

அன்புச்செல்வி அடிக்கொரு முறை , தன்னை விட சற்றே வயது அதிகமான தன் கணவன் குணசேகரைத் திரும்பிப் பாரத்தாள். எதிரில் அமர்ந்திருந்த ஜீவாவிற்கு அவளது பயம் புரிந்தது.

அந்தப் பதினோரு பேரில் அன்புச்செல்விதான் திருமணமாகி கோவையிலேயே இருக்கும் பெண். அவள் பகிர்ந்த முதல் தகவல்களைத் தாண்டி அவளை விசாரிப்பதற்காக ஜீவா தனியே வந்திருந்தான்.

“குணசேகரன் சார், எந்த இடத்துலயும் உங்க மனைவி பேர் வெளில வராது. நீங்க என்னை நம்பலாம். அன்புச்செல்வி சொல்லப்போற தகவல்கள்தான்
எங்களுக்கு அவங்களைப் பிடிக்க உதவும்”

அத்தனை பெரிய ஆஃபீஸர், சாதாரண பைக் மெக்கானிக்கான தன்னை மதித்துப் பேசியதில் சற்றே தளர்ந்த குணசேகரன் ” என்ன வேணுமோ கேளுங்க சார். அப்பாவி சார் அவ. அவளுக்கு அப்ப பதினேழு வயசுதான் சார். எங்கக்கா பொண்ணு சார் அவ. திரும்ப வந்ததும் அவ அண்ணனே அவளை… ஊரெல்லாம் அவளைத் தப்பா பேசினதை என்னால தாங்க முடியாமதான் பதினோரு வயசு வித்தியாசமா இருந்தாலும் பரவாயில்லைன்னு நானே கட்டிக்கிட்டேன் சார்” என்று படபடவென பொரிந்து விட்டான்.

“உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு, குணா சார்” என்று உணர்ந்தே சொன்ன ஜீவா,
ஜீவா காக்கி யூனிஃபார்ம் இல்லாது, இயல்பாக ஜீன்ஸ், டீஷர்ட்டில் இருந்ததாலோ என்னவோ, அன்புக்கரசியுமே சரளமாக பேசத் தொடங்கினாள்.

“அக்காவோட தலைதீவாளிக்கு கொடுக்க பெரிய்ய சில்வர் தூக்கு (எவர்சில்வர்) வாங்கி, அதுலயே பலகாரத்துக்கு மாவு அரைக்க அரிசி குடுத்துவுட்டுச்சு சார் எங்கம்மா. நான் வரிசையில நின்னு அரைச்சு போட்டு வர்ற வழியில, யாரோ தூக்குவாளியைப் புடுங்கிக்கிட்டு ஓடினாங்க சார். புத்தம்புதுசு
சார். அதில்லாம வூட்டுக்குப்போனா, எங்கம்மா என்னைய சீவிரும் சார். அதனால அவனைத் துரத்திக்கிட்டே போனேன் சார்”

“எங்கெங்கியோ சந்து பொந்தெல்லாம் ஓடினான் சார். இப்ப நெனச்சு பாக்கறப்போ , நான் பின்னால வரணும்னு அவன் வேணும்னே மெதுவா ஓடி இருக்கான்னு தோணுது. அந்த குறுக்கு சந்தோட அந்தப்பக்கம் நின்ன ஒரு பழைய மாருதி கார்ல தூக்கை வெச்சுட்டு ” வந்து எடுத்துக்கோன்னான். ஒண்ணும் செய்ய மாட்டேன், வந்து எடுத்துக்கோன்னு சொல்லவும் கார் பக்கத்துல போகவுமே புடிச்சு உள்ள தள்ளி விட்டதுதான் கடைசி.. அதுக்குப் பிறகு அந்த வீட்லதான் சார் கண்ணு முழிச்சேன்”

“அங்க உங்க கூட யாரெல்லாம் இருந்தாங்க?”

“முதல்ல நீலவேணியையும் சேர்த்து நாலு பேர் இருந்தோம். அப்புறம் ரெண்டு தெலுங்கு பேசுற பொண்ணுங்களைக் கூட்டிட்டு வந்தாங்க. இதுல சிலர் வர்றதும் போறதுமா இருந்தாங்க. எதுக்குன்னே தெரியாம டாக்டர் வந்து பாப்பாங்க. நெதமும் மருந்து, மாத்திரைன்னு சாப்பிட சொல்லுவாங்க”

“நீங்க கேக்கலையா?”

“அந்த ரெண்டு தெலுங்குப் பொண்ணுங்கள்ல ஒருத்தி அவங்க பாஷைல எதையோ கேட்டு, அவளை அவங்க அடிச்சதுல மயக்கமாகி விழுந்துட்டா. அவளை கார்ல கூட்டிக்கிட்டு போனாங்க. அப்புறம் அவ திரும்ப வரவே இல்லை சார்”

ஜீவா மெதுவே, லிஸ்ட்டில் பச்சை நிற புள்ளி வைக்கப்பட்டிருந்த பக்கங்களில் இருந்த பெண்களைப் பற்றி விசாரித்தான். ஜீவா யூகித்ததைப் போலவே அந்த ஆறு பெண்களில் ஐந்து பேர் கர்ப்பமாக இருந்ததோடு, அவர்களுக்குத் தனி கவனிப்பும் இருந்தது என்றாள், அன்புச்செல்வி.

“அவங்களை எல்லாம் யாரோ வந்து பாத்தாங்கன்னு நினைக்கறேன் சார். அவங்களை கூட்டிட்டுப் போய்ட்டு திரும்ப வரும்போது பழம், ஹார்லிக்ஸ்னு கொண்டு வருவாங்க சார்”

ஜீவா “அவங்க பேர்லாம் நினைவு இருக்கா?”

“இருக்கு சார். அதுல பூமா, காவ்யா ரெண்டு பேரும் நல்லா பழகுவாங்க சார்”

அன்புச்செல்வி சொன்ன பெயர்கள் பொருந்திப் போகவே, ஜீவா இவங்கள்லாம் இப்ப எங்க இருக்காங்க, என்ன ஆனாங்கன்னு தெரியுமா?”

“தெரியாது சார். அவங்களுக்குக் குழந்தை பிறக்கற தேதிக்கு முன்னாலயே கூட்டிட்டுப் போயிடுவாங்க சார். ஆனா, அவங்க யாரும் அங்க திரும்பி வரலை”

தொண்டையைக் கனைத்துக் கொண்ட ஜீவா “அந்த ஆறாவது பொண்ணை பத்தி ஏதாவது…?”

அதுவரை கடகடவென பதில் தந்த அன்புச்செல்வி சற்றே நிதானித்தாள்.

“ரஞ்சனியா சார்…இல்லையில்ல… அவ பேர் ரோஹிணி சார். அங்க இருந்த பொண்ணுங்க எல்லாருமே சாதாரணப்பட்டவங்கதான் சார். ஆனா, பாக்க நல்லா, ஆரோக்கியமா இருப்பாங்க. அதுக்குதானே சார் புடிச்சுக்கிட்டு போனாங்க?” என்றவளின் முகத்தில், மருத்துவ முன்னேற்றம் என்ற பெயரில், அந்த அறியாப் பருவத்தில் அவள் மீது வலிந்து திணிக்கப்பட்ட சிகிச்சையின் வலி இன்னும் மீதமிருந்தது.

“அளாத கண்ணு, முடியாட்டா விட்ரு” என்ற குணசேகரனின் குரலில் இருந்த கரகரப்பு, பண்பட்ட மனதிற்கும் உருவெளித் தோற்றத்திற்கும் தொடர்பில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

‘படித்த, நாகரிகமான இளைஞர்களில் இது போன்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவளது கடந்த கால வலிக்காக வருந்தும் இயல்பான மனமும் பெருந்தன்மையும், என்னையும் சேர்த்து நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?’ என்று நினைத்த ஜீவாவுக்கு குணசேகரனின் மேல் மதிப்பு கூடியது.

ஜீவா “ரோஹிணிக்கு என்ன ஆச்சு?”

“ரோஹிணி மத்தவங்களை மாதிரி இல்லை சார். அவ்வளவு அழகு. எங்க எல்லாத்தையும் விட சின்னப்பொண்ணு. அவ அங்க வந்தபோதே அவளுக்கு எட்டு மாசம் இருக்கும். முன்னால டெஸ்ட் செய்யறது, ஊசி போடறதுன்னு இருந்த அந்த வீட்டோட பின்னால, ரோஹிணி அங்க வந்த பிறகுதான், அவசர அவசரமா அங்கயே குழந்தை பொறக்க, வசதி எல்லாம் செஞ்சாங்கன்னு பேசிக்கிட்டாங்க”

“நீங்க யாருக்காவது பொறந்த குழந்தையை பாத்துருக்கீங்களா?”

“இல்ல சார், பிரசவத்துக்குப் போனவங்க திரும்பி அங்க வந்ததே கிடையாது சார்”

“ஓகேம்மா, ரொம்ப நன்றி. குணா உங்களுக்கும்தான். அண்ணனுக்கு தண்ணி போடற பழக்கம் இருக்கா?”

குணசேகரன் தலையைச் சொறிய, ஜீவா “இத்தனை நல்ல மனசோட இருக்கீங்க, அதையும் விட்ருங்க. சரியா?” என்றுபடி கிளம்பினான்.


அனுதரன், அவனது ஆட்கள் மூவரும் அளவு, வயது, அதன் மீதான புகார்களின் அளவீட்டின்படி, கருத்தரிப்பு மையங்களோடு மற்ற மகப்பேறு மற்றும் பல்நோக்கு மருத்துவமனைகளையும் சேர்த்தே தங்கள் வேட்டையைத் தொடர்ந்தனர்.

தோண்டத் தோண்ட கிடைத்த தகவல்களும், இதுபோன்ற நிறுவனங்களுக்கு இருக்கும் பண, அதிகார பலமும், மிகப்பெரிய நெட்வொர்க்கும் தெரிந்ததுதான் என்றாலும் அதிர்ச்சியாக இருந்தது.

புது மழைக்கு வரும் ஈசல் போல் புதிது, புதிதாக எத்தனை? மருத்துவர்களைப் பிள்ளைவரம் தரும் கடவுளாய் மக்கள் நினைத்திருக்க, அவர்களின் ஆதங்கத்தை மூலதனமாக்கி, இயற்கையை மீறி கன்னிப்பெண்களின் கருப்பை வரை கன்னம் வைக்கும் தைரியத்தைக் கொடுத்தது யார்?’

‘தெரிந்து திட்டம்போட்டு வேலை செய்பவர்கள், கட்டாயமாக ஈடுபடுத்தப்படுபவர்கள், பணத்திற்காக மனசாட்சியைக் கொன்றவர்கள், புள்ளை இல்லாத யாருக்கோ புள்ளை வந்தா நல்லதுதானே என தங்களை நியாயப் படுத்துபவர்கள் என படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடில்லாத இதயமற்ற கூட்டம்’

‘கருமுட்டைக்காகவும், வாடகைத்தாயாகவும் பெண்களை மட்டும் குறிவைக்காது, விந்தணுவுக்காகத் துரத்தப்படும் ஆண்கள் எத்தனை பேர்?’

‘இத்தனை செய்பவர்கள் சேகரிக்கப்பட்ட விந்தணுவையோ கருமுட்டையையோ வேறு ஒருவருக்கு மாற்றி உபயோகிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?’

‘இந்த உலகில் அம்மா மட்டுமே சத்தியம் என்பதற்கு இனி அர்த்தமில்லாது போய்விடுமோ?’ என்றெல்லாம் சிந்தித்த அனுதரன் நின்றிருந்தது, அந்த இரவு நேரத்தில் அமைதியான அந்த ரோட்டிலும் பிஸியாக இருந்த ஒரு கையேந்தி பவனின் அருகில் இருந்த சிறிய டீக்கடையில்.

” ஸ்ட்ராங்காயிட்டு ஒரு சாயா” என்றவன், ஒரு வாரத் தேடலில் கிடைத்த தகவல்களைக் கோர்த்துத் தன் மொபைலில் இருந்தே ஜீவாவுக்கு அனுப்பி விட்டு, மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் அசைவை உணர்ந்து திரும்ப, அவனுக்கு மிக அருகில் நின்றிருந்த இருவரிடமும் நிச்சயம் நட்பு இல்லை.

“கொஞ்சம் வரீங்களா?”

“எங்க, ஏன் வரணும். யார் நீங்க?”

“வான்னா வருவியா, சும்மா கேள்வி கேட்டுக்கிட்டு…” என்ற மற்றவனின் வலது கை அனுதரனின் முதுகில் அழுத்தமாகப் படிந்தது.

“என்ன வேணும் உங்களுக்கு?”

“நட”

தூரத்து இருட்டில் இருந்த காரை நோக்கி மூவரும், ஒட்டிப் பிறந்தவர்களைப்போல் ஊர்வலம் போனார்கள்.

காரின் அருகே சென்று கதவைத் திறந்து அனுதரனை உள்ளே திணிக்க முயற்சிக்க, அதில் ஒருவனை தன் முழங்கையால் வயிற்றில் குத்தியவன் முதுகு, பின் மண்டை என எதாலோ பலமாகத் தாக்கப்பட்டான்.

அவனிடம், மொபைல், பர்ஸ் தவிர எதுவும் இல்லாது போக, மொபைலை உருவிக்கொண்டு, நடைபாதையில் கிடத்திவிட்டுச் சென்றனர்.
தேடுதல் வேட்டைக்கு காவல்துறை வாகனம் சரி வராது என தவிர்த்திருந்த அனுதரன் ஆளரவமற்ற சாலையில் மயங்கிக் கிடந்தான்.


“சேட்டா, அனு எவிட போயி?” என்ற மஞ்சுவின் கேள்விக்கு பதில் தெரியாத ஜீவா “அவன் ஒரு முக்கியமான வேலையா வெளிய போயிருக்கான். வந்ததும் அவனே பேசுவான்” என்றான்.

இரவு எட்டரை மணிக்குத் தான் அனுப்பிய கேஸ் குறித்த தகவலோடு கூடவே இன்னும் அரை மணியில் வந்துவிடுவதாகச் சொன்ன அனுதரனை, மணி பதினொன்றாகியும் காணவில்லை. மொபைல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் சொன்னது. அனுதரனுடன் சென்ற கான்ஸ்டபிள் ராவ் , தான் அப்போதே திரும்பி வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

காத்திருத்தலின் கனம் அதிகரிக்கவும் ஜீவா ஹேமந்த்தை அழைத்துவிட்டான்.

“ஸாரி டு டிஸ்டர்ப் யூ ஹேமந்த், அனுதரனோட மொபைலை ரீச் செய்ய முடியல. ஒரு முக்கியமான மெஸேஜை அனுப்பிட்டு , இதோ வரேன்னவனை இன்னும் காணும்”

“நான் கன்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் செய்யறேன்” என்ற ஹேமந்த், GPS மூலம் , மாலை முதல் அனுதரனின் மொபைல் இருந்த லொக்கேஷன்களை கணித்துக் கூற, அடுத்த இருபது நிமிடத்தில் ஜீவாவுடன் ஹேமந்த்தைத் தேடிக் கிளம்பி இருந்தான்.


ஜீவாவும் அனுதரனும் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ். அடிபட்டு இரண்டு நாட்கள் சென்றபின், அனுதரன் தலையில் கட்டுடன் மதியம்தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருந்தான்.

ஜீவா “என்னடா நீ, கவனமா இருக்க வேண்டாமா, அடுத்த மாசம் கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இப்படி அடிவாங்கிட்டு வந்து நிக்கற? டிபார்ட்மென்ட்டை சமாளிக்கறதை விட, மஞ்சுவுக்கும் உன் பேரன்ட்ஸுக்கும் பதில் சொல்ல முடியலைடா என்னால” என்று ஆதங்கத்தில் புலம்பித் தள்ளினான்.

நடந்ததை விவரித்த அனுதரனிடம் “இன்னுமே உங்க மொபைல் ரீச் ஆகலை அனுதரன்” என்றான் ஹேமந்த்.

“யாரோ ஃபாலோ போன்ற ஃபீலிங் இருந்தது ஸார். அதனால உங்களுக்கு ஃபைலை அனுப்பின கையோட ஃபேக்டரி ரீசெட் பண்ணிட்டேன்”

“உங்க டேட்டா எல்லாம்?”

அனுதரன் “பொதுவா நான் முக்கியமான எல்லாத்தையும் என் லேப்டாப்ல பேக் அப் (back up) வெச்சிருப்பேன். தேடக்கூட எதுவுமில்லாத ஆத்திரத்துல, இந்நேரம் எம்மொபைல் செதறி இருக்கும் சார்” என்றதும் மூவரும் மனம் விட்டுச் சிரித்தனர்.

ஜீவா “பை தி வே ஹேமந்த். அனு அடிபட்டு தகவலை காப்பாத்தினதோட, இந்த கேஸுக்கு அந்த தகவல் அவ்வளவு முக்கியம். நான் நினைச்ச மாதிரியே இது பெரிய நெட்ஒர்க். ஆள் கடத்தறதுல தொடங்கி, குழந்தை இல்லாதவங்களை டெம்ப்ட் பண்ணி வாடகைத் தாய்க்கு தூண்டறது, கருமுட்டையை எடுக்கறது, விந்தணுக்காக ஆள் கடத்தறது, குழந்தையை விக்கறது வரைக்கும் இது தொடர்பான குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகம்தான்”

ஹேமந்த் “ஜீவா, அனு அனுப்பின ஃபைலை பாத்தீங்களா?”

தன் லேப்டாப்பை ஹேமந்தின் புறம் திரும்பிய ஜீவா “ம், நீங்களும் பாருங்க. கோயமுத்தூரைச் சுத்தி இருக்கற மருத்துவமனைகள் மற்றும் கருத்தரிப்பு மையங்களோட தொடர்புல இருக்கற நிழலான ஆசாமிகளோட லிஸ்ட் இது. டிரைவர், நர்ஸ், ஆயா, மிட்வைஃப்னு மொத்தம் அறுபத்தி ரெண்டு பேர் இருக்காங்க. இதுல இவங்க தொடர்பு வெச்சுக்கற ஆட்களைப் பத்தி இன்னும் தெரியலை”

“கிரேட் ஒர்க் அனுதரன்” என்ற ஹேமந்த் அதிலுள்ள பெயர்களை சத்தமாகப் படிக்கத் தொடங்கினான்.

“சந்தோஷ், ஜெகதா, பிரகாசம், ஆவுடையப்பன், ரமேஷ்குமார், பரமேஸ்வரி, செண்பகம், நவதுர்கா, பிரபாவதி, மேகலா.. ஏ யப்பா, எத்தனை பொம்பளைங்க?” என்றவன், தொடர்ந்து “ஜனார்த்தனன், மகேஷ், பராங்குசம், ஜீவிதா, மனோன்மணி, வீரபாண்டி, பழனியம்மா, நெல்லையப்பன்…”

“ஹேமந்த், வெயிட், வெயிட். திரும்ப சொல்லுங்க. வீரபாண்டியா?”

“ஆமா ஜீவா”

“அனு, நீ சொன்ன வீரபாண்டின்ற பேரு இதுல இருக்கேடா” என்ற ஜீவா, பரபரப்புடன் A3 சைஸ் ஜெராக்ஸ்களை வெளியே எடுத்துப் பார்த்தான்.

“அனு, இந்த ஆறு பேருமே வீரபாண்டி மூலமா அந்த வீட்டுக்கு வந்தவங்களா இருக்கும்னு நினைக்கறேன். அவன் டிரைவரா, தரகரா, ஏஜென்ட்டான்னு பாக்கணும். நாளைக்கு ஈவினிங்குள்ள அவனை அள்ளிடணும். என்ன ஹேமந்த்?”

“நிச்சயமா”

காலிங்பெல் ஒலிக்கவும், ஜீவா எழுந்து சென்று கதவைத் திறக்க, மஞ்சு, அவளது தந்தை, அனுதரனின் பெற்றோர் நால்வரும் நின்றிருந்தனர்.

தந்தைகள் இருவரும் கவலையுடன் அனுதரனின் உடல்நலத்தை விசாரிக்க, மஞ்சு அனுதரனையும் மற்றவர்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் குடும்பத்தோடு ஒரு மணி நேரம் பெண்ணைப் பார்த்து முடிவு செய்த ஏற்பாட்டுத் திருமணத்தின் தயக்கமும், சிபிஐ ஆஃபீஸர் என்ற பெருமையில் மறைந்திருக்கும் ஆபத்தை நேரில் தரிசித்த பயமும், அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

முதல் முறையைத் தவிர, மஞ்சுவை மொபைலில் மட்டுமே பார்த்துப் பேசி இருந்த அனுதரனுக்குமே “ஹாய்” என்றதற்குமேல் அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“மஞ்சு, அனுக்கு ஒண்ணுமில்ல. சரியாயிடும். பீ சியர்ஃபுல். அனு, டெர்ரஸுக்குக் கூட்டிட்டுப் போய் பேசு” என்ற ஜீவா, வேலையாள் கொண்டு வந்த காபியையும் பிஸ்கட்டையும் தந்தைகளுக்குத் தந்தான்.

ஹேமந்துக்கு கால் வர, எடுத்துப் பேசினான்.

“ஜீவா, அந்த ரோஹிணியோட பேரன்ட்ஸ் ஊர்ல இருந்து வந்துட்டாங்க போல. வீடு திறந்திருக்காம்”

“கமான், லெட்’ஸ் கோ. சார் நாங்க வேலை விஷயமா வெளிய போறோம். நீங்க மெதுவா பேசிட்டு போங்க” என்ற ஜீவா, அனுதரனையும் மஞ்சுவையும் பார்த்து, அவளுக்கு தைரியம் சொன்னபிறகே புறப்பட்டான்.


“நல்லா இருக்கீங்களாம்மா?”

இலகுவான மனநிலையில் ரோஹிணியுடன் பேசியபடி நடந்த ஜனனி, ஏதோ உறவினர் போல குசலம் விசாரித்த அங்கம்மாவிடம் “ம்” என்றதோடு நிறுத்திக்கொள்ள, அவளோ “இது யாரும்மா, உங்க தங்கச்சியா, லட்சணமா இருக்காங்களே” என்று உரையாடலைத் தொடர்ந்தாள்.

“இல்ல” என்றவாறு தன் பதின் வயதுத் தோழியுடன் கடைகள் இருந்த அந்த குறுகிய சந்திற்குள் வேகமாக நுழைந்தாள் ஜனனி.

வேலையோடு அன்னபூர்ணாவில் சாம்பார் வடை, ரோஸ்மில்க்கையும் முடித்துக்கொண்டு, அங்கிருந்தே ரோஹிணி பஸ் ஏறி விட, ஆட்டோ பிடிக்கக் காத்திருந்த ஜனனியிடம் மீண்டும் நெருங்கிய அங்கம்மா “நான் சொன்னதை யோசிச்சீங்களாம்மா? உங்களுக்குன்னு ஒரு குழந்தை, வேண்டாமா, எவ்வளவு ஆசையா இருந்தீங்க?”

அக்கறை தொனித்த தன் பேச்சில் ஜனனி இளகுவதைக் கண்டு கொண்ட அங்கம்மா தன் கரைச்சலைத் தொடர்ந்தாள்.

“நல்லா யோசிங்கம்மா. ஒண்ணு உங்க ரெண்டு பேரோட குழந்தை, இல்லையா இயற்கையா உங்க வீட்டுக்காரரோட குழந்தை. ஒரு வார்த்தை நீங்க சரின்னு சொல்லுங்கம்மா. ஆக வேண்டியதை நான் பாத்துக்கறேன்”

“…”

ஆரோக்கியமான, சின்ன வயசு பொண்ணா…”

“இந்தப் பேச்சு போதும் ஆயாம்மா” என்ற ஜனனி, மூன்று கிலோ மீட்டருக்கு இரண்டு மடங்கு பணம் கேட்டவரின் ஆட்டோவில் ஏறிக்கொண்டு “போலாம்ணா” என்றாள்.

ஆனால், அந்த வாரத்தில் அவளது சிகிச்சைக்குப் பின் சரியாக இருபத்தெட்டு நாட்களில் இரண்டாவது முறையாக மாதவிலக்கு வரவும், வயிற்று வலியுடன் ‘ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத எனக்கு இது மட்டும் ஏன்?’ என்ற விரக்தியும் தோல்வியும் மனதைக் கவ்வ, கழிவிரக்கத்தில் அழுதாள்.

தன் குழந்தை, தனக்கும் சீராளனுக்குமான அன்பில் விளைந்த குழந்தை என்ற ஆசையெல்லாம் இந்த ஒன்பது வருடங்களில் கானல் நீராகிப் போனதும், இது வரை செலவழித்த பணத்தையும், அனுபவித்த மனவலியும் உடல் ரணமும்… நினைக்க நினைக்க மிகுந்த சோர்வையும் ஆதங்கத்தையும் தந்தது.

‘இந்தக்காலத்தில் இருபத்தொன்பது வயதுப் பெண்கள் இப்படியா இருக்கின்றனர்? எனக்கு மட்டும் ஏன் இப்படி?’

அடிவயிற்றை சுருட்டி இழுத்ததில், தூக்கமும் விழிப்பும் யோசனையுமாகப் புரண்டவளுக்குக் குழந்தை அழும் குரல் கேட்பது போலவும், சீராளன் சமாதானம் செய்வது போலவும் மனதில் தோன்ற, எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அங்கம்மாவின் “உங்களுக்குன்னு ஒரு குழந்தை, வேண்டாமா, எவ்வளவு ஆசையா இருந்தீங்க?”

“நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்கம்மா. ஆக வேண்டியதை நான் பாத்துக்கறேன்”

“ஆரோக்கியமான, சின்ன வயசு பொண்ணா…”

“இது யாரும்மா, உங்க தங்கச்சியா, லட்சணமா இருக்காங்களே” என்ற வார்த்தைகள் ஜனனியை ஆக்கிரமித்துக் கொண்டன.