தாத்ரி – 3
தாத்ரி 3
‘ஆபரேஷன் தாத்ரி’ குழுவினருக்காக, அரசு பங்களாவில் தனியாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டிருந்தது.
சிபிஐ குழு வந்து சார்ஜ் எடுத்துக்கொண்டதுமே, ஏசிபி ஹேமந்துக்கு சூழலே மாறிய உணர்வு. என்னதான் ஐபிஎஸ் ட்ரெயினிங் எல்லோருக்கும் பொது என்றாலும், அவர்களின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. அவர்களின் செயல்முறைகள் எல்லாம் ஐபிஎஸ்ஸா, ஐஏஎஸ்ஸா என்று சந்தேகிக்கும் அளவில் தேர்ந்த மத்திய அரசு அதிகாரியின் பாவனையில் இருந்தது.
பரபரப்பின்றி, நிதானமான பேச்சும், யாரும் எளிதில் நெருங்கக்கூடிய தன்மையும், நட்பான அணுகுமுறையும், காவல்துறையின் வழக்கமான மிரட்டலோ, அதட்டலோ இல்லாது, எதிராளியை எடைபோடுவது தெரியாது, விஷயத்தைக் கறக்கும் வித்தையும் தெரிந்திருந்தது, SP ஜீவகுமாருக்கு. சுருக்கமாக ஜீவா.
அவனுடன் கூட வந்த இன்ஸ்பெக்டர் அனுதரன் நாயர் தன் சீனியரை அடியொற்றினான். அதைத்தவிர நான்கு கான்ஸ்டபிள்கள் அடங்கிய ஒரு குழுவும் வந்திருந்தது.
வரும்போதே, அதுவரை இந்தக் கேஸில் இதுவரை நடந்தவற்றை ஒன்று விடாது படித்து, ஆராய்ந்து, கேள்விகள், திட்டங்களுடன் வந்திருந்தனர்.
கமிஷனர் அலுவலகம்.
வயதிலும், பதவியிலும் சீனியர் என்றபோதும், கமிஷனர் மரியாதை நிமித்தம் எழுந்து நின்று அவர்களை வரவேற்றார்.
“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் ஜீவா. எப்படி இருக்கார் உங்க ஐஜி?”
“பாஸுக்கென்ன ஸார், நம்ம நாட்டுல ஸ்கேம்க்கா பஞ்சம்? பிஸியா, அமோகமா இருக்கார். பை தி வே அவர்தான் என்னை இங்க அனுப்பினது”
” ஜீவா, கேஸைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”
கமிஷனரிடம் “ஸார், ஆல்ரெடி நாங்க வேலையை ஸ்டார்ட் செஞ்சாச்சு. எங்க பாணில விசாரிக்கறோம். அதுக்கு உங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து தேவையான ஒத்துழைப்பு கொடுத்தா போதும். அதை நம்ம ஹேமந்த் பாத்துக்கறதா சொல்லிட்டார். கேஸ்ல கணிசமான முன்னேற்றம் வந்தபிறகு, இந்த வாரக்கடைசில திரும்பவும் மீட் பண்ணலாம் ஸார்” என்றவன், ஏசிபியை நோக்கிப் புன்னகைத்தான்.
கமிஷனர் “மருத்துவம், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கேஸ்னால இதை சீக்கிரமா முடிக்கணும். ஹேமந்த் உங்களுக்கு உதவியா இருப்பார். என்ன வேணுமோ, எனிடைம் நீங்க என்னை கான்டாக்ட் பண்ணலாம்”
“ஸர்” என்று சல்யூட்டுடன் மூவரும் நீங்கினர்.
ஜீவா, ஹேமந்த், அனுதரன் மூவரும் புதிய அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். இரவு மணி எட்டைத் தாண்டியும் யாரும் நகரவில்லை.
ஜீவா “ஹேமந்த், இந்த நோட்டுல, போலீஸ் ரெய்டு போன தினத்துல அந்த வீட்ல இருந்து அகற்றப்பட்ட பெண்கள்ல யாரைப் பத்தியாவது விபரம் ஏதாவது இருக்கா?”
“இல்ல சார், இதுல இருக்கற தேதிகளை வெச்சு பார்க்கும்போது, இது ரொம்ப பழைய ரெக்கார்டா இருக்கு”
“சும்மா ஜீவான்னே சொல்லுங்க” என்றவன், அந்த நோட்டுப் புத்தகத்தை மீண்டும், மீண்டும் புரட்டினான்.
அதில் ஆறு வருடங்களுக்கு முன், முதல் சில பக்கங்களில் மட்டும், பெயர், மற்ற விவரங்களுக்குக் கீழே கடைசியில் மிகச் சிறியதாக, ஆனால் அழுத்தமாக பச்சை நிற ஸ்கெட்ச்சால் ஒரு புள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னால் வந்த பக்கங்களில் அத்தகைய புள்ளிகள் எதுவும் இல்லை.
“அனுதரன், இதைப் பத்தி நீ என்ன நினைக்கற?”
“சார், இது மாதிரி மொத்தம் ஆறு பெண்களுக்கு மட்டும் குறிப்பு இருக்கு. அதோட இந்தப் பக்கங்கள்ல, மேல ஏதோ பென்சில்ல எழுதி இருக்காங்க. அது டல்லாகி அழிஞ்சிருக்கு சார்”
“எக்ஸாக்ட்லி. ரிமார்க்கபிள் அப்ஸர்வேஷன் அனு. இந்த ஆறு பக்கத்தையும், முடிஞ்ச அளவு க்ளாரிடியோட ஸ்கேன் பண்ணி, பெரிய சைஸ்ல ப்ரிண்ட் எடுத்துட்டு வா”
“எஸ் ஸார்” என்று எழுந்து சென்றான் அனுதரன்.
ஹேமந்த் யோசனையுடன் வேடிக்கை பார்த்தான். அந்த விவரங்கள் எதைக் குறிக்கிறது என்று தெரிந்தும், இங்கே அதை ஒரு சாட்சியமாக கருதினரே தவிர, அந்த விவரங்களை ஆராயவில்லை. ஜீவாவானால், புள்ளியிலிருந்து கோலம் போட்டான்.
“ஹேமந்த், ஆறேழு வருஷமா காணாமல் போன பெண்களோட லிஸ்ட் இருக்குன்னு சொன்னீங்கள்ல, அது எங்க? எங்க கிட்ட கேஸோட எவிடன்ஸும், எஃப் ஐஆர் ரிப்போர்ட்டும், ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்டும்தான் இருக்கு”
ஹேமந்த் தன் லேப்டாப்பில் இருந்து, ஜீவாவிற்கு ஒரு ஃபைலை அனுப்பினான். அதைப் பார்வையிட்ட ஜீவா, அனுதரனை மொபைலில் அழைத்தான்.
“அனு, உனக்கு ஒரு ஃபைல் அனுப்பி இருக்கேன். அந்த நோட்புக்ல இந்த புள்ளி வெச்ச பீரியட்ல மட்டும், இந்த லிஸ்ட்டையும் சேர்த்து மூணு ப்ரின்ட் போட்டுக் கொண்டு வா” என்று கட் செய்தான்.
தங்கள் தேடலின் எல்லையை குறுக்கிக்கொண்டே வந்த ஜீவாவை ஹேமந்த் பிரமிப்புடன் பார்த்தான். ஹேமந்த்தும் ஒன்றும் லேசுப்பட்டவன் இல்லை, தமிழ்நாடு போலீஸும் அதேபோல்தான்.
ஆனாலும், கடைசல் பிடிக்கும் மரத்தில் வேண்டாததைக் கழிப்பது போன்ற ஜீவாவின் அணுகுமுறை, அவனை மிகவும் ஈர்த்தது.
ஜீவா லிஸ்ட்டைப் பார்வையால் மேய்ந்தபடி “அனுதரன் வந்ததும், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்துல நோட்புக்லயும் லிஸ்ட்லயும், ஒரே பெயர்கள் கொண்ட பெண்கள் இருந்தா, உடனடியா அவங்களோட வீடுகள்ல இருந்து நம்ம விசாரணையைத் தொடங்கலாம்” என்று நிமிர, ஹேமந்த் தன்னையே பார்ப்பதைக் கண்டான்.
“ஹலோ, என்ன ஐ லவ் யூ சொல்லப் போறீங்களா?” என்றதும் ஹேமந்த் புரையேறும் அளவிற்கு சிரிக்க, அனுதரன் கத்தையான காகிதங்களுடன் உள்ளே நுழைந்தான்.
மூவரும் அந்தக் காகிதங்களில் இருந்த பெண்களில், குறிப்பிட்ட காலகட்டத்தில் காணாமல் போனதாக போவீஸில் புகார் பதிவு செய்யப்பட்ட பதினான்கு பேரில், மூவரின் பெயரைப் பார்த்ததுமே கேரளப் பெண்கள் என்று தெரிந்தது. அவர்களைத் தவிர்த்து மீதமிருந்த பதினோரு பெண்களின் முகவரி (அப்போதைய) மற்றும் ஏனைய விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து, முதலில் விசாரிக்க முடிவு செய்தனர்.
ஹேமந்தும் அனுதரனும் கோவை, அதைச்சுற்றியுள்ள பகுதிகள், எந்தச் சரகத்தில் பதிந்த புகார் என பட்டியலிட, ஜீவா, அறையை இருட்டாக்கி விட்டு, கையில் இருந்த பூதக்கண்ணாடியால் (Magnifying glass) A3 சைஸ் ஷீட்டில் பெரிதாக்கி பிரின்ட் செய்யப்பட்ட பேப்பர்களை, ஃபோகஸ் லைட்டின் உதவியுடன் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
வெளியில் இருந்த காவலர் ஒருவர் டீ கொண்டு வந்தார்.
“தேங்ஸ் முருகன், ஜீவா, ஹேவ் ஏ பிரேக்” என்றான் ஹேமந்த். ஃபோகஸ் லைட்டின் திசையை மாற்றிவிட்டு, அரை இருட்டிலேயே டீயைக் குடித்தனர்.
அனுதரன் “நாளைக்குக் காலைலயே இந்தப் பெண்களின் குடும்பத்தை விசாரிக்கத் தொடங்கிடலாம்” எனவும் ஹேமந்தின் முகம் சிறிதே மாறியது.
அனுதரன் “எனி ப்ராப்ளம் ஏசிபி ஸார்?”
ஹேமந்த் “எல்லாமே க்ளோஸ் ஆகாத கேஸ், அனுதரன். காணாம போனவங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய போலீஸே, அவங்க கிட்ட திரும்பவும் விசாரிக்கப் போறதை நினைச்சாதான் ஒரு மாதிரி இருக்கு. இதுல யாருமே பத்தொம்பது வயசைத் தாண்டலை பாருங்க”
ஜீவா “கமான் ஹேமந்த், நீங்க பார்க்காததா? முப்பது, நாப்பது வருஷம் கழிச்சு சால்வ் ஆன கேஸெல்லாம் கூட இல்லையா? இந்த கேஸ் அத்தனை பெண்களையும் ஒரு புள்ளில இணைக்கறதுன்னு தெரிஞ்சா மாதிரி, நல்லதோ, கெட்டதோ இதற்கான முடிவும் தெரிஞ்சிடும்”
“அதுவும் சரிதான் ஜீவா”
ஆறாவது முறையாக நாலரை லட்ச ரூபாய்களை செலவு செய்து, கணவனின் பேச்சைக் கேட்காது, தன் உடம்பையும் மனதையும் புண்ணாக்கிக் கொண்ட ஜனனி மருத்துவரை சந்தித்தாள்.
“ஸாரிமா, இனிமேலும் இது போல ட்ரீட்மெண்ட்டை உங்க உடம்பு தாங்காது. இதைப் பத்தி ஏற்கனவே உங்க கணவர்கிட்ட சொல்லிட்டேன். நீங்க வேற வழிகளை முயற்சிக்கலாமே?”
டாக்டரின் வார்த்தைகளில், தன் ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, வேண்டுதல் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரான ஏமாற்றத்தைத் தாங்க முடியாத ஜனனி சோகையான ஒரு ‘நன்றி’ யுடன் வெளியேறினாள்.
ஜனனி கர்ப்பமில்லை என்பது தெரிந்த உடனேயே, வேலையாள் விஜி, நான்கு நாள் விடுப்பில் சென்றிருக்க, மனச்சோர்வு, உடல்சோர்வு, கைப்பு எல்லாம் அழுத்த, சீராளனும் ஊரில் இல்லாத நிலையில் மனம் நொந்து அழுதாள்.
சீராளன் ஒரே மகன். இருவரது பெற்றோருமே காலமாகி இருக்க, நெருங்கிய உறவு என்பது ஜனனியின் அக்கா மட்டுமே. ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில், இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் அக்காவுடன் ஜனனி ஃபோனில் பேசுவதே அரிதுதான்.
சீராளனின் அலைக்கற்றை ஆறுதலால் எந்தப் பயனுமில்லாது, சில நாட்கள் வரை உழன்றவள், கணவனின் “உன்னோட ஃபேஷன் டிஸைனிங் கிளாஸுக்குப் போ. ஏதாவது தை ஜனனிமா. என் பர்த்டே வருதுல்ல, எனக்கு நீயே ரெண்டு ஷர்ட் தைச்சு அனுப்பு. அன்னைக்கு அதைதான் போட்டுக்கப் போறேன்” என்றது சிறிது வேலை செய்ய, மெதுவே தன்னைத் தேற்றிக்கொண்டு அவளது கிளாஸுக்குப் போகத் தொடங்கினாள்.
கணவனுக்குப் பிடித்த நிறத்தில் இரண்டும், தனக்குப் பிடித்த நிறத்தில் ஒன்றுமாக மூன்று சட்டைகளைத் தைத்தவள் “நானும் அங்க வரட்டுமா?” என்றாள்.
“ஸ்கேன்டிநேவியால விஸா ப்ரொஸீஜர்லாம் கஷ்டம்மா. அதோட நானும் அங்க இல்ல. கொஞ்ச நாள்தானே” என்றான்.
அடுத்த இரண்டு மாதங்கள் தனது வீடு, ஃபேஷன் டிஸைனிங் ஸ்கூல் வேலை, தையல் என்றிருந்தாள் ஜனனி. இருந்தாலும், சீராளனும் உடனில்லாத தனிமை இன்னுமே வெறுமையைத் தந்தது.
ஜனனியின் தையல் நேர்த்தியையும், டிஸைன்களையும் வியந்து, அவளிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பி, நாலைந்து சிறு பெண்கள், அவளிடம் நெருங்கிப் பழகினர். இப்போது ஜனனியின் சோர்ந்த மனதிற்கு அவர்களது இளமையும் கவலையில்லாத சிரிப்பும் மிகுந்த ஆறுதலாக இருந்தது.
அதிலும் குறிப்பாக, தன்னைப்போலவே பிசிறில்லாது துணிகளை வெட்டுவது, ஃப்ரில், லேஸ் தைப்பது, எம்பிராய்டரி செய்வதென ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட ரோஹிணி என்ற பெண் ஜனனியைக் கவர்ந்தாள்.
ப்ளஸ் ஒன்னில் இருந்த ரோஹிணி, தையல், எம்பிராய்டரி, கை வேலைகளில் இருந்த ஆர்வத்தின் காரணமாக, ஃபேஷன் டிஸைனிங் க்ளாஸுக்கு வந்தாள்.
அக்கா, அக்கா என்று தன்னிடம் குழையும் ரோஹிணியின் வாளிப்பான உடலும், குழந்தைத்தனம் மாறாத குண்டு முகமும், சிரிப்பும், சூட்டிகையும் ஜனனிக்கு மிகவும் பிடித்தது.
கிளாஸில் இருந்து வரும் வழியில் தனது ஸ்கூட்டியில் அவளை ஏற்றிக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடுவாள்.
ஜனனிக்கு இருந்த மனநிலையில், ரோஹிணி மட்டுமே ஆறுதலாக இருந்தாள். இரண்டொரு முறை அவளுடன் சினிமா, ஷாப்பிங் கூட போனாள். சீராளன் கூட “என்னைக் கூடத் தேடாம செய்யற அந்தப் பொண்ணை எனக்கே பாக்கணும்போல இருக்கே” என்று கேலி செய்தான்.
ஜனனி அவர்களது ஆடை வடிவமைப்புக்குத் தேவையான பட்டன், லேஸ், மணி, டோரி, கண்ணாடி, நூல்கள், ஊசி என வழக்கமாக தான் வாங்கும் கடைக்கு ரோஹிணியை அழைத்துச் செல்லும் வழியில் மீண்டும் அங்கம்மாவை சந்தித்தாள்.
காலை மணி எட்டரை. ஜீவாவும் அனுதரனும் மீண்டும் அந்த ‘புள்ளி’ விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அனுதரன் “ஸார், இந்த பென்சில்ல எழுதி இருக்கறதைப் பாத்தா எனக்கென்னவோ வீரபாண்டின்னு எழுதி இருக்காப்போல தெரியுது “
ஜீவா “நேத்துல இருந்து இதோட பதினஞ்சு பேர் சொல்லிட்டடா” என்று சிரித்தான்.
“நீங்க வேற சார். நைட் ஃபுல்லா தூங்க விடாம இதே மண்டைல குடையுது”
“ராத்திரியெல்லாம் மஞ்சு கூட கடலையும் புட்டும் சேர்ந்தே போட்டுட்டு, ஏண்டா இப்படி பொய் சொல்ற?”
இரண்டு மாதங்களில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு “ஸார்” என்று வெட்கப்பட்ட அனுதரனைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் ஏசிபி ஹேமந்த்குமார்.
“ஜீவா, விசாரிக்க லேடி போலீஸோட டீம் ரெடியா இருக்கு”
“முதல் கட்ட விசாரணையை நீங்க செய்ங்க. எடுத்த உடனே சிபிஐனா பயப்படுவாங்க. அதோட ரேர் சான்ஸா, இதுல யாராவது வீடு திரும்பி நார்மலான வாழ்க்கைல செட்டில் ஆகி இருந்தா, அவங்களை கவனமா கையாளணும். ஆஸ்க் தெம் டு டேக் கேர். பொலைட்டா பேசச் சொல்லுங்க”
“…”
“ஸாரி ஹேமந்த். நான் தப்பா சொல்லலை. உங்களுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டி இருக்கறதால, மக்களுக்கு ஒரு பயம் வரணும்னா உங்க கடுமை அவசியம்தான். ஆனா, இந்தக் கேஸ்ல ஆல்ரெடி வயசுப் பெண்கள் காணாம போன வருத்தத்தோட நிறைய பிரச்சனைகளை, அவமானங்களை சந்திச்சிருப்பாங்க. அதோட, போலீஸ் கண்டும்பிடிக்காம, இன்னும் கேள்வி கேட்டா கோபப்படுவாங்க. அதான் சொன்னேன்”
“ஐ அன்டர்ஸ்டேண்ட் ஜீவா. ஆனா, எப்படி இது போல யோசிக்கறீங்க?”
“என் பாஸ் பிரபுதீரன் கூட ஒரு கேஸ்ல வேலை செஞ்சாலே போதும். தானே கத்துப்போம்”
“வாவ், அந்த புள்ளிகளைப் பத்தி ஏதாவது ஐடியா வந்ததா ஜீவா?”
“கிளியரா தெரியலை, ஆனா யூகமா சொல்றேன். இந்த பெண்களெல்லாம் கர்ப்பமா ஆகி இருக்கலாம். இல்லைன்னா குறிப்பிட்ட ஹாஸ்பிடல் அல்லது ஆட்கள் மூலமா வந்திருக்கலாம்.
இந்த ஆறு பேருக்கும் வேற மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட பார்ட்டிகளே இவங்களுக்கு ஸ்பான்ஸர் பண்ணி இருக்கலாம்”
ஜீவா சொன்ன யூக பட்டியலைக் கேட்ட அனுதரன் “ஸார், இத்தனை பெண்களும் எங்க சார் போய் இருப்பாங்க? வழக்கமான…”
“இல்லை அனு. நாம நினைக்கற மாதிரி இதுல பெரிய ஹாஸ்பிடல், டாக்டர், ஃபாரின் கஸ்டமர்னு சம்பந்தப்பட்டு இருந்தா, இந்தப் பெண்களை விபச்சாரத்துல ஈடுபடுத்தி இருக்க மாட்டாங்க. இதை மாதிரி திட்டம்போட்டு செய்யற மருத்துவம் சம்பந்தப்பட்ட குற்றங்கள்ல (organized crimes) ஈடுபடறவங்க ஒரு போதும் இதுல ஈடுபடறதில்லை. ஆரகன் திருட்டு, வாடகைத் தாய் எல்லாம் அதுபோல தீவிரமான மார்க்கெட் இருக்கற குற்றங்கள்”
“அப்ப இவங்க எல்லாரும் எந்த கம்ப்ளைன்டும் கொடுக்காம வீட்டுக்குப் போய் அமைதியா இருப்பாங்களா சார்?”
“இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பொதுவா சர்ரகஸில (வாடகைத்தாய்) ஈடுபடற பெண்கள் தொழிலுக்குப் போறதில்ல. ஆனா, இங்க எல்லாருமே சின்ன வயசா இருக்கறதால, எதுவும் சம்மதத்தோட நடந்திருக்கவும் வாய்ப்பில்ல. பொதுவா, கருமுட்டை எடுக்கதான் நிறைய நாள் கஸ்டடில வெச்சிருப்பாங்க.
இதுவே, வாடகைத்தாய்னா, நல்ல கவனிப்பு இருக்கும். கஸ்டமரே நிறைய பணம் கொடுத்து கவனிச்சுப்பாங்க. வெளிநாட்டுக்காரங்கன்னா கேக்கவே வேணாம். அந்தப் பொண்ணோட சுகாதாரமும் மனநிலையும் அவங்களுக்கு ரொம்ப முக்கியம். அதோட இதையெல்லாம் வெளிய சொன்னா, நம்ம நாட்ல அந்தப் பொண்ணுங்களுக்கு லேசுல கல்யாணம் ஆகுமாடா?”
ஹேமந்த் “ஓகே ஜீவா, முதல்ல இந்தப் பதினோரு பெண்களைப் பத்தி விசாரிப்போம்” என்று புறப்பட்டான்.
ஏசிபி சென்றதும் ஜீவா “அனு, இதுல கருமுட்டை, சர்ரகஸிக்கான சிகிச்சை தவிர, ஆள் கடத்தல் இருக்கு. நிறைய பணம் இருக்கு. இந்தப் பக்கம் யார்னு தெரியாத போனாலும், ஹாஸ்பிடல் தரப்புல டாக்டர்ஸை தவிர இடைத் தரகர்கள், டிரைவர், ஆயா, நர்ஸுனு நிறைய பேர் இன்வால்வ் ஆகி இருப்பாங்க. புரியுதா?”
“எஸ் ஸார்”
“அந்த லிஸ்ட்ல இருக்கற கருத்தரிப்பு மையங்களையும், அதோட நிழல் ஆசாமிகளையும் தேடச்சொல்லி, நம்ம ஆட்களை முடுக்கி விடுங்க”
“ஓ கே ஸார்”
நான்கு நாட்கள் கழிந்த நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் வார இறுதி மீட்டிங்.
“சொல்லுங்க ஜீவா”
“ஃபர்ஸ்ட் உங்க ஏசிபியே சொல்லுவார்”
முதலில் ஜீவாவின் திட்டத்தை விளக்கிய ஹேமந்த் “பதினோரு பெண்களோட முகவரில போய்த் தேடினோம். அதுல மூணு போரோட குடும்பம் அந்த இடத்துல இல்லை. தொடரவும் முடியலை. ரெண்டு பொண்ணுங்க தப்பிச்சு வீட்டுக்குப் போன பிறகு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க”
“ரெண்டு பேரு வேலை பாக்கறாங்க. ஆனா, எதுவும் பேசத் தயாரா இல்லை. மூணு பேருக்குக் கல்யாணமாகி, ரெண்டு பேர் வேற ஊர்ல இருக்காங்க. ஒரு பொண்ணுதான் கொஞ்சம் பேசினாங்க”
“???”
இப்போது ஹேமந்த், ஜீவாவைப் பார்த்தான். எல்லோரும் மிகவும் மூர்க்கமாக பேசவே மறுத்ததால், எல்லோரையுமே விசாரித்தது ஜீவாதான்.
ஜீவா “தேவான்னு ஒருத்தன்தான் கஸ்டமருக்கும் ஹாஸ்பிடலுக்கும் நடுவுல இருக்கறவன் போல. நீலவேணின்னு ஒரு பொம்பளைதான் அந்த வீட்டுல கேர் டேக்கர் மாதிரி இருந்திருக்காங்க”
” நீலவேணியோட, பெண்களா இருந்ததும், மர்மமான முறைல ஆட்கள் வந்து போனதும், சில நேரம் ஆம்புலன்ஸ் வந்ததும், தெருவாசிகளுக்கு சந்தேகமா இருந்திருக்கு. ரிமோட் ஏரியாங்கறதால முன்னை விட, இப்பதான் கொஞ்சம் வீடுங்க வந்திருக்கு. சமீபத்துலதான் காலனி அஸோஸியேஷன் ஃபார்ம் பண்ணி இருக்காங்க போல. உடனே அனானிமஸா கால் பண்ணிட்டாங்க”
“ரைட், மீதமிருக்கற ரெண்டு பொண்ணுங்க?”
“அதுல ஒரு பொண்ணு திரும்பி வந்ததும், அவ அப்பா அவளையும் வெட்டிட்டு, தானும் தற்கொலை செஞ்சுக்கிட்டார் போல”
“பேத்தடிக்”
கமிஷனரிடம் ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்டை நீட்டிய ஜீவா “அந்த இன்னொரு பொண்ணோட உயரம், மற்ற அளவுகளை வெச்சுப் பார்க்கும்போது, அந்தக் கொய்யா மரத்தடில இருந்த ஸ்கெலிடன் (எலும்புக்கூடு) அந்தப் பொண்ணோடதா இருக்கும்னு தோணுது. அதைத்தவிர…”
“அதைத்தவிர?”
“அதோட மண்டை ஓட்டுல எதாலயோ ஓங்கி அடிச்ச அடையாளம் இருக்கு ஸார்”