தாத்ரி – 2

தாத்ரி 2

இரவில் நிழலாய்த் தெரிந்த குற்றங்கள், பகலில் நிஜமாய் விரிந்தது. காலை ஏழு மணிக்கே போலீஸ் நாய்களும், ஃபாரன்ஸிக் ஆட்களும், காக்கி உடைகளும் சூழ பரபரப்பாக இருந்தது அந்த பங்களா.

உயர்ந்த சுற்றுச்சுவரை மீறி எதுவும் தெரியாவிட்டாலும், வெளியே வேடிக்கை பார்க்க வென ஒரு கூட்டமே நின்றிருந்தது. அதில் அந்த வீட்டில் சந்தேகிக்கும் விதமான ஆட்களின் நடமாட்டத்தை போலீஸுக்கு பெயர் சொல்லாது அனாமதேயக் கால் செய்த இரண்டு தெருவாசிகளும் இருந்தனர்.

கிடைத்த மருந்துகள், சில உபயோகித்த துணிகள், அகற்றப்படாது கிடந்த ஒரிரு ப்ளாஸ்டிக் தொட்டிகளில் இருந்த குப்பைகளை மோப்பம் பிடித்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட், இரண்டு மூன்று முறை தோட்டத்தை சுற்றி வந்து, கொய்யா மரத்தின் அடியில் தன் முன்னங்கால்களால் மண்ணைச் சுரண்டத் தொடங்கியது.

இன்னொரு நாய் வீட்டின் பின் புறமிருந்த சிறிய பிறை போன்று கட்டப்பட்ட மோட்டார் தடுப்பும் அதைச்சுற்றி இருந்த தரையும் புதிதாக சிமெண்ட் போடப்பட்டு, பெயின்ட் இல்லாமல் பல்லை இளித்த இடத்தில் போய் சுரண்டியது.

இந்த இரண்டு இடங்களிலும் தோண்டச் சொல்லி உத்தரவிட்ட இன்ஸ்பெக்டர், வீட்டின் முன் அஸிஸ்டன்ட் கமிஷனர் ஹேமந்த்குமாரின் ஜீப் வந்து நிற்கவும், சல்யூட் அடித்து வரவேற்றார்.

வீடு முழுவதும் ஃபாரன்சிக் ஆட்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க, பார்வையிட்ட ஏசிபி, வீட்டைச்சுற்றி நடக்கத் தொடங்கினார்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, பின்னால் வேலையாட்கள் தங்கவா அல்லது கார் ஷெட்டா என்று தெரியாதபடியான அமைப்பில் ஒரு சிறிய கட்டிடம் இருக்க, அதன் ஷட்டர் இழுத்து மூடப்பட்டிருந்தது.

“இதோட சாவி எங்க, சாவி இல்லைன்னா பூட்டை உடைக்கவேண்டியதுதானே?

“ஷட்டரை திறந்தாச்சு சார். நீங்களே வந்து பாருங்க”

அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிள் ஷட்டரைத் திறக்க, அதற்குள்ளே இன்னொரு சுவரும் அதன் நடுவே கனமான ஒரு மரக்கதவும், அதனருகில் இருந்த சுவரில் செக்யூரிட்டி பாஸ்கோட் ஆபரேடிங் மெஷினும் இருந்தது.

“கராஜுக்கு இவ்வளவு செக்யூரிட்டியா? புடுங்கிப் போடுங்க”

பாஸ்கோட் இல்லாமல் தொடப்போக, அலாரம் ஒலிக்கத் தொடங்கவும், அந்த இன்ஸ்பெக்டர் தன் துப்பாக்கியால், அந்த மெஷினைச்சுட, அது உயிரை விட்டது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த மூன்று காக்கிச்சட்டைகளும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர்.

அந்த கராஜுக்குள் எடை பார்க்கும் கர்வியில் தொடங்கி, லேபர் வார்ட் உள்பட மினி ஹாஸ்பிடலேஇருத்தது. நீள்சதுரமாக இருந்த அந்தக் கட்டிடத்தின், கடைசியில் இருந்த கதவில் Operation Theatre என்ற பலகையும், அதன் மேலே சிவப்பு நிற விளக்கும் இருந்தது.

“திஸ் ஈஸ் அட்ரோஷியஸ் (atrocious). என்னய்யா இது, இட்லி சுட்டு விக்கறாப்பல குழந்தை செஞ்சு விப்பாங்களா?”

இன்ஸ்பெக்டர் “ஸார், அவங்க இந்த செக்யூரிடி பாஸ்கோட் மெஷின் இருக்கற தைரியத்துலயோ, நேரமில்லாமலோ இங்க இருக்கறதை கலைக்கலை”

“மருந்தையும், ஸ்கேனிங் மெஷினையும் நாலு தகர கட்டிலையும் தவிரிங்க கலைக்க என்ன இருக்கு ?” என்ற ஏசிபி, “எதுக்கும் கம்ப்யூட்டரை செக் செய்யுங்க ” என்றார்.

டேட்டா அனைத்தும் நீக்கப்பட்டு, தன் நினைவிழந்து (memory) கிடந்தது கணிணி.

அந்தக் கட்டிடத்தின் இண்டு இடுக்கையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தவர்களை,
மூச்சிரைக்க ஓடி வந்த ஏட்டு “ஸ..ஸார்” என்று இன்ஸ்பெக்டரை கூவிக்கொண்டே வந்தவர் ஏசிபியைப் பார்த்ததும் “ஸார்” என்று சல்யூட் அடித்து “மூணு பொணம் சார், ரெண்டு பொண்ணு சார், ஒரு ஆண் சார்” என்றார், சொல்லின் செல்வனாகி.

கராஜை மூடி சீல் வைக்கச் சொல்லி விட்டு, வேகமாக வெளியில் நடந்த ஏசிபி ஹேமந்தைத் தொடர இன்ஸ்பெக்டர் திணற, ஏட்டு நின்றுவிட்டார். டீயுடன் விழுங்கிய வடை, சமோசாக்களின் விளைவு!

மூக்கைப் பொத்திக் கொண்டாலுமே, மூச்சு நின்றுவிடும்போல வீச்சம் அடிக்க, மோட்டார் பிறையின் அருகே ஒரு குழியில் இரண்டு பிணங்கள் (ஒன்று எலும்புக் கூடு!). அந்த ஆணின் சடலம் இறந்து இன்னும் அதிக நாட்கள் ஆகாத நிலையில் இருந்தது.

கொய்யா மரத்தின் அடியில், நைந்த நைலான் துணிகளின் துண்டுகளுக்கு இடையே இருந்த எலும்புக்கூட்டின் இடது மணிக்கட்டில் IV ஊசி போடுவதற்கான cannula இருந்தது.

இரண்டு டாபர்மேன்களும், மிகப் பெரிய மோசடிச் சந்தையின் முதல் கண்டுபிடிப்பைச் செய்த கர்வம் துளியும் இல்லாது, தன் ட்ரெயினருடன் அமைதியாக நின்றிருந்தன.


கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம். கான்ஃபிரன்ஸ் ஹால் மேஜையில், அந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஒரு வெண்ணிற சார்ட்டில் பரப்பப் பட்டிருந்தது.

ஏசிபி ஹேமந்த் குமார், இன்ஸ்பெக்டர், அரசாங்க மருத்துவமனையின் கைனகாலஜிஸ்ட் ஒருவர் எல்லோரும் கூடியிருக்க, சப் இன்ஸ்பெக்டர் சிந்தாமணியின் முகத்தில் பதட்டமும் பெருமிதமும் சரிவிகிதத்தில் இருந்தது. இந்தக் கேஸில் முதல் லீட் அவள் தந்ததுதானே.

கமிஷனர் உள்ளே நுழையவும், எழுந்து நின்று சல்யூட் வைத்தனர்.

“சொல்லுங்க ஹேமந்த், ஃபாரன்சிக்ல என்ன சொல்றாங்க?”

“இன்னும் ரிப்போர்ட் வரலை சார். ஆனா, அங்க கிடைச்ச எவிடன்ஸை வெச்சுப் பார்க்கும்போது இளமையான, ஆரோக்கியமான பெண்களின் கருமுட்டையை எடுக்கறது, அவங்களை வாடகைத் தாயா பயன் படுத்தறதுதான் நடந்திருக்கணும் ஸார்”

டாக்டரிடம் திரும்பிய கமிஷனர் “உங்க கருத்து என்ன டாக்டர்? அதோட இதெல்லாம் என்ன?”

“இதெல்லாம் கர்ப்பம் ஆகப்போற, ஆக விரும்பற, கர்ப்பமா இருக்கற பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தறதுக்காக கொடுக்கற மாத்திரைகள். அதோட ஃபோலிக் ஆஸிட் கரு உருவாகவும் பிறக்கப்போற குழந்தைக்கு பிறவியில் வரக்கூடிய குறைபாடுகளைத் தவிர்க்கவும் உதவும். ப்ரொஜஸ்ட்ரோன் கரு உருவாறதுக்கும் தங்கறதுக்கும் முக்கியமான ஒரு ஹார்மோன்” என்ற மருத்துவர் அங்கிருந்த இன்னும் சில மருந்துகளின் உபயோகத்தையும் விளக்கினார்.

ஹேமந்த் “இது கர்ப்பத்தை உறுதி செய்யறது. Ovulation finder னா என்ன டாக்டர்?”

“கர்ப்பம் ஆகறதுல பிரச்சனை இருக்கறவங்களுக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியா வராதவங்களுக்கு, மாதாமாதம் கருமுட்டை எந்த நேரத்துல வருதுன்னு கண்டு பிடிக்க உதவும் சாதனம் இது”

இன்ஸ்பெக்டர் “அப்ப இந்த லிஸ்ட்டுல இருக்கற பெண்களெல்லாம்….” என்று அந்த வீட்டில் கிடைத்த நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தை டாக்டரிடம் தந்தார்.

“இதுல இருக்கற பெண்களோட வயசையும் குறிப்புகளையும் பார்க்கும்போது, நீங்க சந்தேகப்பட்டது போலவே அவங்களோட கருமுட்டையை எடுக்கவோ அல்லது அவங்களையே வாடகைத்தாயா உபயோகிக்கறதுதான் குறிக்கோள்னு புரியுது”

“எப்படி டாக்டர்?”

“ஒவ்வொரு மாசமும் அவங்களோட கருமுட்டை உருவாகுற விவரத்தை டெஸ்ட் செய்து, குறிப்பிட்ட தேதிகள்ல இந்த நோட்டுல பதிவு செஞ்சிருக்காங்க, பாருங்க”

ஹேமந்த் கமிஷனரிடம் “அதோட இந்தப் பெயர்களைப் பாருங்க சார். சில பெயர்கள் பொதுவா இருந்தாலும், நிறைய கேரளா, ஆந்திரால பொண்ணுங்களுக்கு வைக்கக்கூடிய பெயர்களும் இருக்கு”

கமிஷனர் “அப்படீன்னா, இது ஏதோ ஒரு லோக்கல் மோசடி கிடையாது. பெரிய நெட்வொர்க் இருக்கணும். அந்த அவுட்ஹவுஸ்ல இருக்கற லேபர் வார்டோட வசதிகள் போறாது. இல்லையா டாக்டர்?”

“கண்டிப்பா, இதுக்குப் பின்னால ஏதாவது ஒரு பெரிய ஹாஸ்பிடலோ, கருத்தரிப்பு மையமோ இருக்கணும் ஸார்”

“ஹும்… ஊரெல்லாம் இப்ப இன்ஃபெர்டிலிடி சென்டர்தான்”

தான் கண்டுபிடித்துச் சொல்லியும் அதுவரை தன்னைப் பேச்சிலும் சேர்த்துக்கொள்ளாமல், பாராட்டவும் செய்யாமல் இருந்ததில் சற்றே ஏமாற்றமடைந்த சிந்தாமணி “எக்ஸ்க்யூஸ் மீ ஸார், எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.

“கோ அஹெட்”

“அந்த வீட்ல நடந்த குற்றத்துக்கு பெண்களோட உடல் கிடைச்சது ஓகே. ஆனா, அந்த ஆண்?”

மருத்துவர் “உங்க கேள்வி சரிதான், கருத்தரிக்க கருமுட்டை தேவைப்படற மாதிரி, ஆண்களோட semen, அதாவது விந்தணுவும் தேவைப்படும் இல்லையா? அதுல ஏதோ பிரச்சனை ஆகி இருக்கலாம்”

ஹேமந்த் “அங்க ஆண்களுக்கு அனுமதி இல்லைன்னுதான் நினைக்கறேன். அதை பிறகு பாக்கலாம்”

கமிஷனர் “ஓகே டாக்டர், ஃபர்தரா சந்தேகம் வந்தா தொடர்பு கொள்றோம். தேங்க் யூ” எனவும், குறிப்பறிந்த மருத்துவர் வெளியேறினார்.

“இன்ஸ்பெக்டர்”

“ஸர்”

“இந்த கேஸ் உங்க ஜூரிஸ்டிக்ஷனுக்கு கொஞ்சம் அதிகம்தான். தகவல் வந்ததும் சிறப்பா செயல்பட்டீங்க. கீப் தி குட் ஒர்க்!”

“அதே போல,சிந்தாமணி அங்க நடந்த குற்றம் என்னன்னு கண்டு பிடிச்சு விவரங்கள் சொன்னதுக்கு பாராட்டுகள். நௌ போத் ஆஃயூ மே லீவ்”

இருவரும் “தேங்க் யூ ஸர்” என்று இழுத்து அடித்த சல்யூட்டில் உற்சாக விறைப்பு.

அவர்கள் சென்றதும் “ஹேமந்த், இந்த கேஸைப்பத்தி நான் கலெக்டருக்கும், ஐஜிக்கும் தகவல் தெரிவிச்சுட்டேன். இது சம்பந்தமா மதியம் கலெக்டர் ஆஃபீஸ்ல மீட்டிங் இருக்கு. இன்டர் ஸ்டேட் க்ரைம்ங்கறதால கேஸ் அநேகமா சிபிஐக்குப் போக சான்ஸ் இருக்கு”

” ஃபாரன்ஸிக் ரிப்போர்ட் வந்ததும், நீங்க உங்க அளவுல தேடுதலைத் தொடங்குங்க. லெட்’ஸ் ஸீ”

“யெஸ் ஸர் ஆல்ரெடி கோயம்புத்தூர்ல இருக்கற கருத்தரிப்பு மையங்கள், அதன் மேல் வந்த புகார்கள்னு இன்ஃபர்மேஷனை கலெக்ட் பண்ணச் சொல்லி இருக்கேன். அதேபோல கடந்த ஏழெட்டு வருஷங்கள்ல இந்த வயது வரம்புல காணாமல்போன பெண்களோட லிஸ்ட்டையும் எடுத்துக்கிட்டு இருக்கேன்”

“ஸீ யூ ஹேமந்த், நாளைக்கு காலைல பாக்கலாம்” என்று விடைகொடுத்தார் கமிஷனர்.


“இந்த IVF ப்ரொஸீஜருக்குப் பிறகு ரெண்டு வாரம் வரைக்கும் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும். எந்த ப்ராப்ளமும் இல்லைன்னா, பன்னிரெண்டாம் நாள் வாங்க, டெஸ்ட் பண்ணிடலாம்”

நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்த சீராளனின் முகம் இறுக்கமாக இருந்தாலும், நெற்றியில் இருந்த விபூதி காலையில் அவன் கோவிலுக்குச் சென்று வந்திருப்பதைச் சொன்னது.

இயற்கையாக கருத்தரிக்காத, பல முறை முயற்சிசெய்தும் செயற்கை முறையிலும் கரு தங்காமல், வருத்தத்துடன் அழுது கரையும் மனைவிக்கு இரண்டரை வருடமாக குழந்தைக்கான சிகிச்சையை, முயற்சியை மேற்கொள்வதை மறுத்ததில் ஆங்காரமும், ஆத்திரமும் இயலாமையும் சேர்ந்துகொள்ள சிடுசிடுவென்றே இருந்த ஜனனியில் முகத்தில், இப்போது எப்படியாவது அந்த அற்புதம் நிகழ்ந்து விடாதா என்ற வேதனையும் வேண்டுதலும் மட்டுமே.

இன்னொரு தோல்வியைத் தாங்க இயலாத மனநிலையில் இருந்த ஜனனி “டாக்டர், குழந்தை வர வாய்ப்பு இருக்குதானே டாக்டர்?” என்றாள், மிகுந்த எதிர்பார்ப்புடன்.

மருத்துவர் பதிலளிக்காது புன்னகைக்க, சீராளனுடன் வெளியேறினாள்.

முன்போலன்றி இரவும் பகலும் பதினோரு முறை சுழன்றதும் நம்பிக்கை வளர்ந்தது. அன்று காலை எட்டு மணிக்கு அலுவலகம் சென்ற சீராளன் பதினொன்றுக்கே டென்ஷனும் கவலையுமாகத் திரும்பி வந்தான்.

“ஜனனிமா, நான் அவசரமா ஒரு ப்ராஜக்ட்டுக்காக இன்னிக்கு நைட்டே நார்வே போகணும். ஏற்கனவே போனவங்க சொதப்பினதுல மூணு மாசமாகியும் ஒரு ப்ராக்ரஸும் இல்லை”

அவன் அடிக்கடி இதுபோல் போவது வழக்கம்தான் என்பதால் அவனுக்குத் தேவையான சாமான்களை லிஸ்ட் போட்டவள், வழக்கப்படி எழுந்து எடுத்து வைக்க முயல “ஏய், என்னடீ பண்ற, உக்காரு முதல்ல” என்று அவன் பதறியதும்தான் அவளுக்குத் தன் நிலையும் அவனது டெனஷன எதற்காக என்பதும் புரிந்தது.

“நீங்க போயே ஆகணுமா, இது… இது குழந்தையா இருந்தா… நடுவுல வர முடியாதா?”

இந்த முறை நிறைந்த நம்பிக்கையுடன் இருந்த ஜனனியை ‘வாய்ப்பு ரொம்பவே கம்மிதான்’ என்று டாக்டர் சொன்னதைச் சொல்ல விரும்பாதவனாய் “முடியும்னு தோணலைமா, ஆனா, கண்டிப்பா முயற்சி செய்வேன். உங்க அக்காவை வேணா வரச் சொல்றியா?” என்றான்.

வெற்றியோ தோல்வியோ தன்னோடே இருக்கட்டும் என்று நினைத்தவள் “இப்ப வேணாங்க. நான் எப்பவும் போல விஜியையே (வீட்டு வேலை செய்யும் பெண்) துணைக்கு வெச்சுக்கறேன்” என்றாள்.

சீராளனுக்கு மனைவியின் எண்ணம் புரிந்ததோடு, அவனுக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? கிளம்பும் வரை அவளருகிலேயே இருந்தவனின் அணைப்பும் முத்தங்களும் அவனது மனதைச் சொல்ல ஜனனியும் நெகிழ்ந்துதான் போனாள்.

சீராளன் புறப்பட்டுச் சென்ற மூன்றாம் நாள் அதிகாலை, பரிசோதிக்க வேண்டிய அவசியமின்றி செயற்கையாக பொதிக்கப்பட்டது உதிரமாக வெளிவந்தது.


தீயாய் வேலை செய்த ஏசிபி ஹேமந்த் குமார், கோவையிலும், திருப்பூர், ஈரோடு போன்ற சுற்று வட்டாரத்திலும் இருந்த கருத்தரிப்பு மையங்களின் வயது, அந்த நோட்டுப் புத்தகங்களில் இருந்த பெண்களின் எண்ணிக்கை, அவர்களது விவரங்கள் பதியப்பட்ட தேதி என கிடைத்த விவரங்களைப் பிரித்து மேய்ந்தான்.

ஏழு வருடத்திற்கு முன்பான தேதிகளில் துவங்கியது விவரங்கள். மொத்தம் நூற்றி ஆறு பெண்கள். இது ஒரு குழுதான். இது போல் இன்னும் எத்தனையோ?

“பெண்களை போகப்பொருளாக, உடமையாக நினைப்பதை விடவே இது கொடுமையா இருக்கு” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டான்.

ஏழில் முதல் மூன்று வருடங்கள் காணாமல் போன பெண்களின் விவரங்களைத் தூசிதட்டி, விசாரிக்கத் தொடங்கியது போலீஸ்.

‘பெண் கல்வி, பெண் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், புல் ஷிட்! எத்தனை பெண்களைக் காணவில்லை? காதலா, கடத்தலா, ப்ராத்தலா, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் அடிமையாக வேலை செய்யவா, சினிமா ஆசையா, சமுக வலைத்தளங்களா, விபத்தா?’

‘இத்தனை பேரும் இருந்த தடம் தெரியாது எங்கே சென்றனர்? என்ன காரணம்? பெண்ணைப் பூட்டி வைத்தபோது இத்தனை விபரீதம் நடக்கவில்லையோ?’

ஐடி விங்கில் அமர்ந்து கம்ப்யூட்டரில் டேட்டாவை மேய்ந்து கொண்டிருந்தவனை
“ஸார், கமிஷனர் ஸார் ஃபோன்” என்றார் பிஏ.

“ஹேமந்த், நாளைக்கு சிபிஐ ல இருந்து டீம் வராங்க, நினைவிருக்குதானே? அவங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்க”

“ஷ்யூர் ஸார்”


“யாருடா நிமலா இது, இது எப்படிடா முடியும்?”

“எனக்கும் புரியலம்மா. அப்படியே நம்ம பாப்பாவை உரிச்சு வெச்சது போலவே இருக்கும்மா அந்தப் பொண்ணு” என்றவன், வெண்பா பாடிய வீடியோவை ஓடவிட்டுக் காட்டினான்.

அத்தனை படபடப்பிலும் அருண் எடுத்திருந்த சில பிக்னிக் ஃபோட்டோ, வீடியோக்களை தன் மொபைலுக்கு ஃபார்வார்ட் செய்து கொண்டிருந்தான்.

அதிகாலை பஸ் சர்வீஸுக்கே சென்றிருந்த அவனது தந்தை வருவதற்கு மதியம் ஒரு மணியானது.

“எப்படா வந்த?”

துர்கா “காலைல. அதை விடுங்க. நிமலா, அந்த ஃபோட்டோவை அப்பாக்குக் காட்டுடா” என்றார், பரபரப்பும் நம்பிக்கையுமாக.

“என்ன ஃபோட்டோ?” என்றபடி வாங்கிப் பார்த்தவருக்கு சிறிது நேரம் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

“யாருடா இது?”

“அச்சு அசல் நம்ம பாப்பா மாதிரியே இருக்கில்லங்க?” என்ற துர்கா அழத் தொடங்கினார்.

சரவணன் சட்டென வெறுப்பும் கோபமுமாக “இவ ஒருத்தி, அழறத நிறுத்துடீ. அதான் அந்தப் பொண்ணுக்கு அஞ்சு வயசு இருக்கும்னு நிமலன் சொல்றான்ல. அவ காணாம போய் ஆறு, ஆறரை வருஷம் ஆகுது. இத்தனை நாளா நாம நினைச்ச மாதிரி உம்பொண்ணு ஒண்ணும் காணாமப் போகல. அவ எவனையோ இழுத்துட்டு ஓடிட்டா. நீயே யோசி, கணக்கு சரியா வரும் “

“அவ சின்னப்பொண்ணுங்க. காணாமப்போனபோது அவளுக்குப் பதினாறு வயசுதான். நம்ம பொண்ணைப்பத்தி நீங்களே இப்படி தப்பா பேசலாமாங்க”

“வேறெப்படி பேசச்சொல்ற? நமக்குத் தெரிஞ்ச அளவுல தேடியாச்சு. போலீஸுக்கு லஞ்சம் கொடுக்க வட்டிக்குக் கடன் வாங்கினதுதான் மிச்சம்”

“வாங்கின காசுக்கு கொஞ்ச நாளைக்கு அவங்க காட்டின ஒரு மாதிரிப்பட்ட பொண்ணுங்களையும், ஊர்ல எந்தப் பொண்ணு விபத்துல செத்தாலும் அந்தப் பொணத்தையும் பாத்ததுதான் மிச்சம்”

அப்போதும், ஒருவேளை கணவன் சொல்வது போல் இருக்கலாமோ, என்ற நப்பாசையில் துர்கா “அந்தப் பொண்ணோட அம்மா கூட வரலையாடா?” என்றார்.

நிமலன் “இது எங்க கம்பெனி சீனியர் டெக்னிக்கல் மேனேஜரோட பொண்ணுப்பா. இதான் அவர், பாருங்க”

“கொஞ்சம் வயசானவரா இருக்காரேடா” என்றார், துர்கா ஏமாற்றத்துடன்.

“அவருக்கு எப்படியும் நாப்பது வயசு கிட்ட இருக்கும்மா”

சரவணன் யோசனையில் ஆழ, துர்கா காணாமல் போன தன் மகளின் ஃபோட்டோக்களை எடுத்து வந்து, வெண்பாவுடன் ஒத்திடத் தொடங்கினார்.

தந்தையின் பேச்சில் நிமலனுக்கு ‘இந்த படத்தைக் காட்டி வேண்டாத பிரச்சனையைக் கிளப்பி விட்டோமோ’ என்று தோன்றியது.

ஏற்கனவே கிணறு வெட்டப்பட்டு, பூதம் புறப்பட்டு விட்டதை அவன் அறியவில்லை.