தாத்ரி – 10 (Final)

தாத்ரி 10

சிபிஐயின் சென்னை அலுவலகத்தின் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஆபரேஷன் தாத்ரியின் பொருட்டு, ஜீவாவால் பரிந்துரை செய்யப்பட்ட அவசர சந்திப்புக்காக பல்வேறு அரசு அமைப்புகளிலிருந்து உயரதிகாரிகள் கூடி இருந்தனர்.

தேசிய மருத்துவக் கழகத்தின் செயலர், மாநில மருத்துவக் கழகத்தின் தலைவர் மற்றும் செயலர், தமிழக உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தமிழ்நாடு ஐஜி, கோவை போலீஸ் கமிஷனர், கோவை கலெக்டர், சிபிஐயின் சென்னை மண்டலத் தலைவர் பிரபுதீரன், கோவை ஏசிபி ஹேமந்த், இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரிகள் ஜீவா மற்றும் அனுதரன் அனைவரும் இருந்தனர்.

முதலில் கூட்டத்தை வரவேற்று வழக்கின் பின்னணியை, அது சிபிஐக்கு மாற்றப்பட்ட காரணத்தை எடுத்துரைத்தார், கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர்.

பிறகு எழுந்த ஜீவா வழக்கு சிபிஐக்கு வந்ததில் இருந்து இன்று வரையிலான நிகழ்வுகளை, திருப்பங்களை, கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவாகப் பேச, அனுதரன் அதற்கான ஆதாரங்களை PROXIMAவில் பவர் பாயின்ட் ஸ்லைட் ஷோவாகக் காட்டினான்.

மேலும் தொடர்ந்த ஜீவா “குழந்தை இல்லாதவர்களுக்கு செயற்கை முறைல கருத்தரிக்கறது ஒரு வரம்னு சொல்றதை விட வாய்ப்புன்னுதான் சொல்லணும். ஏன்னா, IUI, IVF ரெண்டுலயுமே, வயது, நேரம், தம்பதிகளோட ஆரோக்கியம் இவைதான் கரு உருவாகவும், தங்கவும் காரணம்.

சின்ன வயசா, பொறுமை இல்லாம சீக்கிரமா IUI சிகிச்சைக்குப் போறவங்களுக்கு வேணா உடனே சக்ஸஸ் ஆகலாம். அதுவுமே 7% ல இருந்து 10 % வரைதான். வயசு அதிகமானா கேட்கவே வேண்டாம்.

IVF ஐப் பொறுத்தவரை பணமும் அதிகம், வெற்றிவாய்ப்பும் 40% தான். அதுக்காக நான் இந்த மருத்துவ முன்னேற்றமே தப்புன்னு சொல்ல வரலை”

“மக்களோட குழந்தை ஆசையை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை தங்களோட வியாபரத்துக்காக எக்ஸ்ப்ளாய்ட் செய்யறதுதான் இங்க பிரச்சனை”

“தேடி வந்து மருத்துவ உதவி கேட்கற தம்பதிகளுக்கு சிகிச்சை அளிக்கறது வேற. ஆனா, இந்த இரண்டு சிகிச்சைகளும் வேலை செய்யலைன்னா, வாடகைத் தாய் மூலமா குழந்தை பெத்துக்க சொல்லி சிபாரிசு செய்யறாங்க”

“வாடகைத் தாய் மூலம் குழந்தை பெத்துக்கறதுக்கான அரசோட சட்டங்கள் ஒருபுறம் இருக்க, அதையே துணிந்து வியாபாரமா நடத்தறாங்க. மருத்துவமனையா, மாஃபியா கும்பலான்னு தெரியலை”

“பதின் பருவப் பெண்களைக் கடத்தறதுல தொடங்கி, குறிப்பிட்ட காலம் வரை Lupron மாதிரியான வீர்யமிக்க மருந்துகளின் மூலமா ஆரோக்கியமான கருமுட்டையை உற்பத்தி செய்ய வெச்சு எடுத்துக்கறாங்க”

“அதேபோல கருமுட்டை உற்பத்தியைத் தூண்டறதுக்காக Novarel னு ஒரு ஊசி மருந்து செலுத்தப்படுது”

“நம்ம எல்லாரும் Valium னு ஒரு மருந்தைப் பத்திக் கேள்விப்பட்டு இருப்போம். இது மன பதட்டத்தைக் குறைச்சு, தசைகளைத் தளர்த்தி, தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மருந்து. இதுவும் அந்தப் பெண்களுக்குத் தரப்படுது”

“எல்லாவற்றையும் விட, கருமுட்டைகளை வெளியில் எடுக்க Transvaginal oozyte retrieval னு அல்ட்ரா ஸ்கேன் உதவியோட பெண்களோட பிறப்புறுப்பு வழியா ஓவரியில் செலுத்தி சினைமுட்டைகளை வெளியில் எடுக்கறாங்க. லோக்கல் அல்லது முழு மயக்க மருந்து செலுத்தப்பட்டு இந்த ப்ரொஸீஜர் நடக்கற முப்பதுல இருந்து நாப்பது நிமிஷம் முழுவதும் இந்த ஊசி உடலினுள் பொருத்தப்பட்டே இருக்கும். கேன் யூ பிலீவ், Egg Retrieval Needle லோட நீளம், 1.6 mm × 300 mm”

“இதில் எண்பது சதவீதம் பெண்களுக்கு, அவர்களைக் கடத்தி வந்து, மருந்து கொடுத்து, பரிசோதனைகள் செய்வதற்கான காரணங்களே தெரியாது”

“இவர்களில் பலரும் வலுக்கட்டாயமாக வாடகைத் தாயாகவும் ஆக்கப்படுகிறார்கள்”

“இந்தக் குறிப்பிட்ட வழக்குல பிடிபட்டு இருக்கற அங்கம்மா, தேவராஜ், வீரபாண்டி, மற்றும் பலரும் அமுதம் கருத்தரிப்பு மையத்தோட தொடர்புல இருக்கறவங்க. ஆனா, அவங்க பெண்களைக் கடத்தறது இவங்களுக்காக மட்டும் இல்லை”

“இதுல அங்கம்மா அவங்க ஆட்களாலேயே கழுத்தை நெறிச்சு கொலை செய்யப்பட்டாங்க. கடத்தப்பட்ட பெண்களுக்கு கேர் டேக்கரா இருந்த நீலவேணின்ற ஒரு பெண், ஏதோ கைகலப்பில் இறந்ததாகத் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தெரிவிக்கிறது”

“சந்தேகத்துக்குரிய அந்த அமுதம் கருத்தரிப்பு மையத்துல இருக்கற சில மருந்துகளும், செயற்கை முறை கருத்தரிப்புக்குத் தேவையான உபகரணங்களும் கணக்கில் வராது அதிக அளவில் வாங்கப்பட்டு இருக்கிறது”

“Centrifuge machine னு சொல்லப்படற கருவி, கருவை உருவாக்கறதுக்குத் தேவையான
Petri dish incubator, தரையே அதிர்ந்து பிளந்தாலும் அசையாத sterile containment workstation இதெல்லாம் மிக விலை உயர்ந்தவை. இவை எல்லாம் கணக்கிலேயே வராத அளவில் வாங்கிக் குவித்திருக்கின்றனர். அது மட்டுமில்லாமல்” ஆள்கடத்தல் , கருமுட்டை திருட்டு முதல் கொலை வரை சட்டவிரோதமான அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கும் மெடிகல் மாஃபியாவை சர்ச் செய்யவும், கைது செய்யவும், தேவைப்பட்டா ஹாஸ்பிடலை சீல் செய்து, உரிமத்தை ரத்து செய்யவும் உரிய அனுமதி வழங்கணும்”

“இது ஏதோ, இந்த ஒரு மருத்துவமனைல நடக்கற குற்றம் கிடையாது. இந்தப் பெண்கள், அவர்களது கருமுட்டைகள், இந்த வாடகைத்தாய்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட்டே இருக்கிறது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நன்றி”

தன் பேச்சை முடித்துக்கொண்டு அருகில் அமர்ந்த ஜீவாவிடம் பிரபுதீரன் “நச்சு நச்சுனு பாயின்ட் பாயின்டா அடிச்சடா. என்ன, இவங்கள்லாம் சொதப்பாம இருக்கணும்” என்றான்.

பல விவாதங்களுக்கும் கேள்விகளுக்கும் புள்ளிவிவரங்களுக்கும் பிறகு, அந்த உயர் மட்டக் குழு ஒப்புதல் அளித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, கோவை கலெக்டர், மாஜிஸ்ட்ரேட் சகிதம் ஜீவாவின் தலமையிலான சிபிஐ படை அமுதம் கருத்தரிப்பு மையத்தை முற்றுகையிட்டு, மீதமிருந்த ஆதாரங்களை, ஆவணங்களைக் கைப்பற்றி, தலைமை மருத்துவர், நிர்வாகிகள், முதலாளி என ஒன்பது பேர் வரை கைது செய்து, அமுதம் கருத்தரிப்பு மையத்தின் அந்தக் கிளைக்கு சீல் வைத்து, அதன் உரிமத்தையும் ரத்து செய்தனர்.


“ஜனனிமா, எப்படிடா இருக்க? பாப்பா எப்ப வருமாம்?”

“முப்பத்தி ஆறு வாரம் ஆகிடுச்சு. இன்னும் ரெண்டு வாரமாவது போகணும்”

“நார்மல் டெலிவரி ஆகும்தானேடா?”

“தெரியலைத்தான். இது மாதிரி IUI ட்ரீட்மென்ட் செஞ்சா பொதுவா சிஸேரியன்தான் செய்வாங்களாம். நீங்க கவலைப்படாதீங்க. ஆமா, உங்களுக்கு லீவ் கிடைச்சாச்சா?”

“இன்னும் இல்லை ஜனனிமா, படுத்தறானுங்கடா. இன்னும் ஒரு மாசம்தானே, எதுக்கு ரெண்டு தரம் டிக்கெட்டுக்கு செலவு செய்யணும்னு கேக்கறான் கம்பெனிக்காரன். பாக்கறேன் டா”

“ஓ… முடிஞ்ச வரைக்கும் வரப் பாருங்கத்தான்”

அவன் வந்தால் எப்படி சமாளிப்பதென நினைத்திருந்தவளுக்கு ஆசுவாசமாகவே இருந்தது.
அன்றிரவு ரோஹிணியை செக் அப்புக்கு அழைத்துச் சென்றாள்.

டாக்டர் “ஜனனி, குழந்தையோட தலை இறங்கி இருக்கு. பிரஷர் வேற கொஞ்சம் அதிகமா இருக்கு. இனி ரோஹிணி எங்க கிட்ட ஆப்ஸர்வேஷன்ல இருக்கறதுதான் சரி”

“நானும் கூட இருக்கலாமா டாக்டர்?”

“இல்லைமா. அவங்களை வேற ஒரு இடத்துல வெச்சு பாத்துப்போம். நீங்க தினம் வந்து பாக்கலாம்”

“டெலிவரி டயத்துல வரலாமா டாக்டர்?”

“நிச்சயமா. இது உங்க குழந்தை ஜனனி, நீங்க இல்லாமலா?”

இந்தப் பேச்சுகள் அனைத்தும் ரோஹிணியின் முன்னிலையிலேயே நடக்க, என் வயிற்றில் வளரும் குழந்தை, அதன் தந்தை, நான் மூவருக்கும் என்ன தொடர்பு? இது என்ன மாதிரி உறவு என, தன் வயதுக்கு மீறிய சிந்தனையில் உழன்றாள் அவள்.

“நீங்க கொஞ்சம் பணம் கட்டணுமே”

ஜனனி, கணவனின் பணத்தில் இருந்து ஒரு எஃப்டியை மட்டுமே உடைத்திருக்க, இப்போது, அவளது பெற்றோர்களின் வீட்டை விற்று, அவளது பங்காக வந்த பணம் வட்டியுடன் கணிசமாக உயர்ந்திருக்க, தேவையான பணத்தை அதிலிருந்து கொடுத்தாள்.

மறுநாள் இரவு, அவர்கள் சொன்ன முகவரியில் கொண்டு போய் விட்ட ஜனனியை அந்த வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
அதன் பின்னால், கராஜ் போன்ற கட்டிடத்தில் இருந்த ஹாஸ்பிடலில் தினமும் ரோஹிணியை சந்திக்க அனுமதித்தனர்.

ஆனால், அடுத்த ஐந்தே நாட்களில், வயதும் மன அழுத்தமும், குழந்தையின் சற்றே அதிக எடையும் சேர்ந்ததில், ரோஹிணிக்கு இயற்கையாகவே வலி கண்டு விட்டது.

ஜனனிக்கு கால் செய்து வரச்சொன்ன மருத்துவரும் ரோஹிணி இருக்குமிடத்திற்கு விரைந்தார். நாலு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ரோஹிணி அழகான பெண் குழந்தைக்கு (வாடகைத்) தாயானாள்.

குழந்தையைக் கையில் வாங்கிய ஜனனிக்கு அழுகையும் ஆனந்தமும் முட்டியது. கூடவே நின்றிருந்த அங்கம்மாவுக்கு நன்றி சொன்னவள், தன் கை மோதிரம் ஒன்றைக் கழற்றிக் கொடுத்தாள்.

“என் குழந்தை ஆயா. எனக்கும் என் அத்தானுக்கும் குழந்தை பொறந்துடுச்சு ஆயா” என்று அழுதாள்.

குழந்தையை மீண்டும் ஒரு செவிலி வாங்கிச்செல்ல, சற்று நேரத்தில், ரோஹிணியை ஒரு சாதாரண அறைக்கு மாற்றினர்.

டாக்டர் நர்ஸிடம் “நான் கிளம்பறேன் சிஸ்டர். நீங்க ஃபர்ஸ்ட் ஃபீட் பண்ண சொல்லிக் கொடுத்துட்டு ஹாஸ்பிடல் வந்துடுங்க. ஒரு சிஸேரியன் இருக்கு” என்று கிளம்பிச் சென்றார்.

ரோஹிணியே ஒரு குழந்தை போலிருக்க , அவளுக்குப் பாலூட்ட கற்றுக்கொடுத்த நர்ஸும் “பாத்துக்கங்க, அங்கம்மா” என்று புறப்பட்டாள்.

“இதோ வரேம்மா” என்று அங்கம்மா வெளியே செல்ல, ஜனனி குழந்தையின் முதல் பசியாற்றிக் கொண்டிருந்த ரோஹிணியின் அறைக்குள் நுழைந்தாள்.


நாற்காலியின் பின்னே கட்டப்பட்ட கைகளோடு அமர்ந்திருந்த வீரபாண்டி, தேவராஜ் இருவரின் எதிரே ஜீவா, ஹேமந்த் இருவரும் நின்றிருந்தனர்,

“தெரிஞ்ச உண்மைளைச் சொல்லி, அப்ரூவர் ஆகிட்டீங்கன்னா உங்க ரெண்டு பேருக்கும் எங்களால முடிஞ்ச அளவு தண்டனையை குறைக்கச் சொல்லி சிபாரிசு செய்வோம். இல்ல, எங்களோட ஃபேவரட் டிஷ் களிதான்னு சொன்னீங்கன்னா, அதுவும் ஓகே” எனறான், ஹேமந்த்.

வீரபாண்டி உடனே ஒத்துக்கொள்ள, தேவராஜ் சிறிது தயக்கத்திற்குப் பின்
வழிக்கு வந்தான்.

இருவரும் உண்மை பேசத் தொடங்கினர்.


“கோவையின் பிரபல கருத்தரிப்பு மையத்தில் பருவப் பெண்களைக் கடத்தி கருமுட்டை திருட்டு”

“தோண்டத் தோண்ட பிணம்”

“வலிந்து வாடகைத் தாயாக்கப்படும் வயதுப் பெண்கள்”

போலீஸ் வெளியிட்ட செய்திகளும், அவர்களாக சேகரித்த செய்திகளும், புனைவுகளுமாக மீடியா பரபரத்தது.

அலுவலகத்தில் உணவு இடைவேளையின்போது இதுவே பேச்சாக இருக்க, நிமலனால், தனது மனநிறைவை மறைக்க இயலாது, மகிழ்ச்சியாக இருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜீவாவுக்கு சீராளனின் மனைவியின் புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி இருந்தான்.

செய்தியை பார்த்துவிட்டு, அவனது பெற்றோர் கால் செய்தனர்.

சரவணன் “நிமலா, நியூஸைப் பாக்கவே பதறுதேடா. நம்ம பாப்புவையும் இது போல…” என்றவரால் மேலே பேச முடியவில்லை.

“அமைதியா இருங்கப்பா. எதானாலும் உங்க ஹெல்த் முக்கியம். அம்மா, பாத்துக்கங்கம்மா. நான் அப்புறமா பேசறேன்” என்று காலை கட் செய்தான்.

சீராளனும் மற்ற சீனியர்களும் போர்ட் ரூமில் கிளையன்ட்டுடன் ஒப்பந்த மீட்டிங்கில் இருக்க, மீட்டிங் முடியவுமே, கம்பெனியின் டைரக்டர் “திஸ் ஈஸ் அட்ரோஷியஸ். இந்த நியூஸைப் பாருங்க” என்று தன் மொபைலின் சத்தத்தை அதிகரித்து எல்லோரும் பார்க்கும்படி காட்டினார்.

செய்தியைப் பார்த்த சீராளனுக்கு, அமுதம் கருத்தரிப்பு மையம் என்ற பெயரை விட, கோவை மெட்டர்னிடி ஹாஸ்பிடலும் மூடப்பட்டதுதான், அதிகம் மனதில் பதிந்தது.

‘என் மகள், என் பட்டுக்குட்டி பிறந்த அந்த ஹாஸ்பிடல் நிழலான காரியங்களுக்கான இடமா?’ என நினைத்தவனுக்கு, இந்த செய்தி மனைவியை எவ்வளவு பாதிக்கும் என எண்ணியதில் ரெஸ்ட்லெஸாக உண்ந்தான்.

குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டதும் ‘நீ லீவ் தராவிட்டால், உன் வேலையே வேண்டாம்’ என்று அடுத்த ஃபிளைட்டைப் பிடித்துக் கிளம்பி கோவை வரவே இரண்டு நாட்கள் ஆனாலும், பிறந்து மூன்று நாட்களான வெண்பாவைக் கையில் ஏந்தியது இன்று போல் இருக்கிறது.

“எக்ஸ்கியூஸ் மீ” என்று எழுந்து தன் கேபினுக்குச் செல்லும் வழியில் நிமலனைப் பார்க்க, ‘அவன் பார்வையில் இருந்தது என்ன?’

தொடர்ந்து வேலையில் ஈடுபட்டாலும் மனம் அதில் ஒன்றாமல் போகவே, விடுப்பு சொல்லிவிட்டு வீட்டை நோக்கி விரைந்தான்.


வீரபாண்டி :

“எனக்கு எப்போதுமே டிரைவர் வேலைதான் சார். பொண்ணுங்களைத் தூக்கினாலும் சரி, ஹாஸ்பிடல், வீடுன்னு செக் அப்புக்கு போகணும்னாலும் சரி, அடிக்கடி என்னைதான் கூப்பிடுவாங்க.
வண்டிய ஓட்டுறதோட கூடவே ‘இந்தப் பொண்ணைப் புடி’, ‘காரை கொண்டு வந்து இந்த இடத்துல நில்லு’ ‘இந்த சாமானை அங்க போட்டு வா’ இப்படி ஏதாச்சும் வேலையும் கொடுப்பாங்க ஸார்”

தேவராஜன்:

“எங்கம்மா (அங்கம்மா) மட்டும் தான் முதல்ல அமுதம் ஆஸ்பத்திரில ஆயா வேலை பாத்தாங்க. அங்க இருக்கற டாக்டருங்க (பெயர்களைக் குறிப்பிட்டான்) மூணு, நாலு பேரு அம்மா கிட்ட இந்த மாதிரி ஆள் புடிக்கணும், வர்ற பேஷன்ட்டுல வசதியானவங்க, புள்ளைக்குத் தவிக்கறவங்கன்னு பாத்து, அவங்க கிட்டப் போய் எப்படிப் பேசணும்னு சொல்லி குடுத்து ஏஜெண்டாக்கி வுட்டாங்க”

“நெறய்ய டிமாண்ட்(!) வரவும், ஆளைத் தூக்கறது, பாதுகாப்பான எடத்துல வெக்கிறதுன்னு வேலை ஜாஸ்தி ஆனதால, நம்பிக்கையான ஆள் வேணும்னு, என்னையும் மாமாவையும் (வீரபாண்டி) சேத்துகிடுச்சு. அவ்ளோதான்”

ஹேமந்த் வெறும் பார்வையாளனாக மட்டுமே அமர்ந்திருக்க, ஜீவா இருவரிடமும் தன் கேள்விகளைக் கேட்டான். வீரபாண்டிக்கு அதிக விவரம் தெரியவில்லை. எனவே, கேள்விகள் அனைத்திற்கும் தேவாவே பதில் சொன்னான்.

ஜீவா: அந்தப் பொண்ணுங்களை எங்கெல்லாம் தங்க வைப்பீங்க? ரெண்டு வீட்டைப் புடிச்சுட்டோம். ஆனா, யாரும் சிக்கலை. இப்ப அவங்க எங்க இருப்பாங்க?

தேவா: ஈரோட்ல ரெண்டு இடம், திருப்பூர்ல ஒரு வீடு, வாளையார்ல ஒரு வீடு சார்.

ஜீவா: அந்த வீட்ல கிடைச்ச மூணு சடலமும் யார், யாரு?

தேவா: மோட்டார் ரூமுக்கடில கிடைச்ச பொண்ணு ஒரு கேரளா பொண்ணு சார். பேர்லாம் தெரியாது. தப்பி ஓட முயற்சி செஞ்சா. செக்யூரிட்டி அடிச்சதுல செத்துட்டா.

அந்தப் பையன்… டோனர் ஆக வந்தான். ஏழெட்டு முறை வந்தான். இதைக் குடுத்தா கோடீஸ்வரன் ஆகலாம்னு நெனைச்சான் போல. போலீஸ்ட்ட போவேன், வீடியோ போடுவேன்னு ஓவரா பேசினான். போட வேண்டியதாயிடுச்சு.

ஜீவா: போட்டது யாரு?

தேவா சொன்ன பதிலில் ஜீவா ஜெர்க் ஆனான் . ‘ஒரு டாக்டரா?’

ஜீவா: அந்த கொய்யா மரத்தடில இருந்தது?

தேவா: அது அந்த ரோஹிணிப் பொண்ணு சார். அதை பொதைக்கும்போது எனக்கே பாவமா இருந்துச்சு சார்.

“ஏன்?” என்ற ஜீவாவின் மொபைல் ஒலிக்க, அழைத்தது நிமலன் எனவும், ஹேமந்திடம் கண்ணைக் காட்டிவிட்டு எழுந்து வெளியில் சென்றான்.

“சொல்லுங்க நிமலன், நியூஸ் பாத்தீங்களா?” என்ற ஜீவா, நிமலன் சொன்ன செய்தியில் “ப்ளடி ஹெல்” என்ற தனக்குள்ளே சபித்தவன் “உடனே வரேன்” என்றான்.

ஹேமந்தை அழைத்து சில குறிப்புகளைச் சொன்னவன், அலுவலகத்தில் வழக்கை ஆவணப்படுத்துவதில் முனைந்திருந்த அனுதரனிடம் அவன் அப்போதே சென்னை செல்வதாகத் தெரிவித்தான்.


இரவு எட்டரை மணி. அந்த நவீனமான அபார்ட்மென்ட்டின் ஐந்தாவது பிளாக்கின் இரண்டாம் தளம் முழுவதும் போலீஸ் ஆக்கிரமித்து இருந்தது. ஃபாரன்சிக் ஆட்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு நின்றிருந்தனர்.

ஜீவா லிஃப்டுக்குக் காத்திருக்கப் பொறுமையின்றித் தடதடவெனப் படியேறி வந்தான்.

வீட்டுக்கு வெளியே காரிடாரில் போடப்பட்டிருந்த சோஃபாவில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்த சீராளனிடம் சென்றனர். அலுவலக நட்புகள் சிலர் உடனிருந்தனர்.

“ஸாரி மிஸ்டர் சீராளன்” ஜீவாவின் குரலில் நிமிர்ந்த சீராளன், அவனைப் பார்த்து, அவனது அடையாள அட்டையைப் பார்த்து சற்றே அதிர்ந்தான். படித்தவன், புத்திசாலி, பண்பாளன் அல்லவா? சட்டென சுதாரித்துக்கொண்டான்.

வீட்டுக்குள் சென்று பார்த்த ஜீவா “மை காட்” என்று வெளியில் வந்து, கண்களைக் காட்ட, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளே வந்து, தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டிருந்த சீராளனின் மனைவி, சீதளா என்கிற ஜனனியின் உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச்செல்ல, போலீஸார் நீங்கினர்.

எர்லி மெனோபாஸ் தொந்தரவு, அதனால் ஏற்படும் மன அழுத்தம், உடல் உபாதைகளைத் தாங்க முடியாது, தற்கொலை செய்து கொள்வதாக ஜனனி கடிதம் எழுதி இருந்தாள்.

சீராளனின் கொலீக்ஸ், வெளியில் இருந்த சோஃபா நாற்காலிகளை உள்ளிழுத்துப் போட்டு, வீட்டை சுத்தம் செய்தனர்.

ஜீவா “சொல்லுங்க சீராளன் சார்”

“உங்களுக்கு முன்னாலயே தெரியுமா ஜீவா சார்” என்று கேட்ட சீராளன், மனைவி அவனுக்கெனெ எழுதி இருந்த கடிதத்தைக் காட்டினான். படித்த ஜீவா பெருமூச்சு விட்டான்.

“சும்மா ஜீவான்னே சொல்லுங்க சார். உங்க ஆஃபீஸ்ல வேலை செய்யற நிமலன் உங்க பொண்ணு வெண்பாவைப் பார்த்ததும் தன் தங்கை ரோஹிணி ஜாடையா இருக்கவும், இதே கேஸ்ல விசாரணை செய்யப் போக, எங்கிட்ட வெண்பாவோட ஃபோட்டோவைக் காட்டினார். அதான் நான் வந்து பார்த்தேன்”

“…”

“ஜனனிங்கற பேரு மட்டும்தான் தெரியும். உங்க மனைவி பெயர் சீதளான்னதும் , திரும்பி போய்ட்டேன். ஆனாலும், வெண்பாவோட ஸ்கூல்ல போய் அவ பர்த் சர்ட்டிஃபிகேட்டோட ஜெராக்ஸ் வாங்கிட்டுப் போனேன்.”

“…”

“பேர் குழப்பம் ஒண்ணு. எதுவும் சரியா தெரியாமல் ஒரு அழகான கூட்டைக் கலைக்கக் கூடாதில்லையா?”

சீராளன் “எல்லாம் கலைஞ்சு போச்சு ஜீவா. ஜனனி என்னோட மாமா பொண்ணுதான். அவளோட அஃபீஷியல் பேரு சீதளா. நாங்க ஒண்ணாவேதான் வளர்ந்தோம். என்மேல அவ்வளவு கிரேஸ் அவளுக்கு. அவ்வளவு லவ்வு, பாசம். ஒரு குழந்தைக்காக பன்னெண்டு வருஷம் ஏங்கித் தவிச்சா. இந்த அளவுக்குப் போவான்னு நான் எதிர்பார்க்கல”

“…”

“இவ்வளவு பெரிய விஷயத்துல அவ பொய் சொல்லுவான்னு எனக்கு எப்படி தெரியும்? ம்ப்ச், முதல்ல இருந்தே நான்தான் ஏமாளிய, முட்டாளா இருந்திருக்கேன்”

“…”

“வெண்பான்னா உயிர் ஜீவா அவளுக்கு. அவளை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது, ஜனனிமா” என்ற சீராளன் குரல் கரகரத்து, மீண்டும் கண்கலங்கினான்.

“வெண்பா எங்க சார்?”

“எங்க ஆஃபீஸ்ல ஸ்வேதான்னு ஒரு பொண்ணு வேலை பாக்கறா. ஸ்கூல்ல இருந்தே அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டா. இன்னொரு பொண்ணும் கூட இருக்கா”

“என்ன சொல்லன்னு தெரியலை சீராளன் சார். என் கவலையெல்லாம் வெண்பா கிட்ட அவங்கம்மா இல்லைன்னு எப்படி சொல்வீங்க, அவ எப்படி எடுத்துப்பாங்கறதுலதான். பேசறேன் சார்”

“ஜீவா, அந்த லெட்டர்…”

“அது உங்க மனைவி உங்களுக்கு எழுதினது சீராளன் சார். அது உங்ககிட்டயே இருக்கட்டும்”

“ஜீவா…”

“சீராளனோட மனைவி, வெண்பாவோட அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டதாகவே இருக்கட்டும். முகம் தெரியாத , இருந்த சுவடில்லாத மறைஞ்ச ஜனனி, மறைஞ்சதாவே இருக்கட்டும்”

“சார்…”

“வெண்பாவோட எதிர்காலத்துக்கு இதுதான் நல்லது. டேக் கேர் சார். நான் வரேன்”


“நிமலன்”

“சொல்லுங்க ஜீவா சார்”

“சீதளா ஜனனியா இருப்பாங்களோன்னு நினைச்சோம். இப்ப ஜனனியோட படமும் இல்லாம, சீதளாவும் உயிரோட இல்லாம யாரோட ஒப்பிடறதுன்னு தெரியலை. ஆனா, நிச்சயமா உங்க தங்கை ரோஹிணி அந்த அமுதம் கருத்தரிப்பு மைய ஆட்கள் அவளை வாடகைத் தாயாக்கற சிகிச்சையோட வலி தாங்காமதான் இறந்திருக்கா”

“அப்ப பாப்பு உயிரோட இல்லையா சார்?”

“ஸாரி நிமலன், மனசைத் தேத்திக்கோங்க”

“அப்புறம் எப்படி சார் வெண்பாக்கும் பாப்புவுக்கும் அப்படி ஒரு உருவ ஒள்றுமை?”

“சிம்பிள் நிமலன், ரோஹிணியோட கருமுட்டையைதான் சீதளாக்கு IVF செய்ய உபயோகிச்சிருக்காங்க”

“ஸார்…”

“ஒண்ணு சொல்லட்டுமா நிமலன்? ஏற்கனவே வயசுப் பொண்ணைக் காணாம நிறைய அனுபவிச்சுட்டீங்க. உங்க அப்பா, அம்மாவால இதையெல்லாம் ஏத்துக்கவும் முடியாது, தாங்கவும் முடியாது. வீணா திரும்பவும் ரோஹிணியின் பேரு செய்திகள்ல அடிபடறதுதான் மிஞ்சும். தேவையில்லாத மனக்கஷ்டம். மனசை சமனப்படுத்திக்கிட்டு, உங்க வாழ்க்கையைப் பாருங்க நிமலன். இதை ஒரு அண்ணனா சொல்றேன், “

“…”

“நிமலன்?”

“புரியுது சார். செத்து ஆறு வருஷமானவளோட பேரைக் கெடுக்கறதுல எனக்குமே விருப்பமில்லை. உங்க நிலைல எங்களுக்காக நீங்க இவ்வளவு யோசிச்சதே பெரிசு சார். தேங்ஸ்ணா”

நிமலனின் தோளைத் தட்டிய ஜீவா ” சீக்கிரமே கல்யாணத்துக்குக் கூப்பிடுங்க. ஆல் தி பெஸ்ட்” என்றான்.


பிரபுதீரனின் வீடு. அதே மொட்டைமாடி.

“சொல்லு ஜீவா. கேஸை வெற்றிகரமா முடிச்சுட்ட. வாழ்த்துகள்”

“பாஸ், உங்க கிட்ட உண்மையைச் சொல்லி பாவமன்னிப்பு கேட்க வந்திருக்கேன்”

“என்னடா ஏதேதோ சொல்ற?”

“ரோஹிணியைக் கொன்னது ஜனனிதான் பாஸ்”

“???”

“ஜனனிதான் சீதளா பாஸ்”

“நினைச்சேன்”

“பா…ஸ்”

“எவ்வளவு கேஸைப் பாக்கறோம். நம்மால இதைக்கூட யூகிக்க முடியாதாடா ஜீவா?”

“எனக்கும் அப்படிதான் பாஸ். ஆனா, நடந்ததை அவங்க கைப்பட எழுதி இருந்தாங்க பாருங்க, இட்’ஸ் சில்லிங்” என்றவனுக்கு இப்போது கூட மயிர்க்கூச்செறிந்தது.

“அப்படி என்ன எழுதி இருந்தா?”

ஜனனியின் கடிதத்தில், சீராளன் ஸ்கேன்டிநேவியா சென்றது முதல், தானே கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்தது, பெண் குழந்தை பிறந்தது வரை ஒன்றுவிடாமல் விவரித்திருந்தவளின் எழுத்தில்….

‘என் குழந்தையைப் பாக்கற ஆசையோட அந்த அறைக்குள்ள போனபோது, ரோஹிணி, நம்ம வெண்பாவுக்குப் தாய்ப்பால் கொடுத்துக்கிட்டு இருந்தா.

அவ முகத்துல, அந்த வயசுலயும், அவ்வளவு அழுத்தமான, பலவந்தமான சூழல்லயும், பிரசவமாகி ரெண்டு மணிநேரம் கூட ஆகாத நிலமைல பால் குடிக்கற குழந்தையை ஒரு கையால வருடிக்கிட்டு, குழந்தையையே பார்த்துக்கிட்டு இருந்தவளோட கண்ணுலதான் எத்தனை அன்பு, வாஞ்சை? எனக்கு இதுதான் தாய்மை போலன்னு தோணிச்சு.

ஆனா, உடனேயே இது என் குழந்தை, நான் பால் கொடுக்க வேண்டிய குழந்தை, உங்களுக்கும் எனக்குமான பொக்கிஷம், இதை எப்படி இவ செய்யலாம்னு ஒரு ஆத்திரம்.

எனக்குத் தெரிஞ்சு, என் சம்மதத்தோடதான் அவ ஒரு தாத்ரியா, வாடகைத்தாயா உங்க குழந்தையை சுமந்தாக் கூட, எனக்கென்னவோ, அவ உங்களையே எங்கிட்ட இருந்து பிரிச்சுட்ட மாதிரி இருந்தது.

அதோட, வளைகாப்பு நடந்ததுல இருந்தே, அவ உங்களை ஃபோட்டாலயாவது பாக்கணும்னு கேட்டுக்கிட்டே இருந்தது வேற எனக்குப் பிடிக்கல.

“ரோஹிணி ” ன்னு கூப்பிட்டேன்.

“என்னக்கா?”ன்னு கேட்டவ, கூடவே குழந்தையைப் பாக்க மாமா எப்ப வருவாங்கன்னு?” கேட்டதும் எனக்கு ஆவேசம் வந்த மாதிரி அத்தனை ஆத்திரம், கண்ணு மண்ணு தெரியாத கோபம், பொறாமை, ஆங்காரம்.

நீங்க, குழந்தை ரெண்டு பேருமே என்னை விட்டுட்டு குழந்தை பெத்துக்கொடுத்த அவளோட போயிடுவீங்களோன்னு பயம்.

என்ன செய்யறேன்னே புரியாம, பக்கத்துல இருந்த இரும்பு ஸ்டூலால அவ தலைல ஓங்கி அடிச்சேன். அப்போதான் பிரசவமாகி பலவீனமா இருந்த சின்னப்பொண்ணால, அடியைத் தாங்க முடியாம பின்னால சாய்ஞ்சவ உயிரை விட்டிருப்பான்னு நான் நினைக்கலை. டக்குனு குழந்தையைக் கைல தூக்கிக்கிட்டு அங்கம்மான்னு கத்திக் கூப்பிட்டேன்.

அங்கம்மா வந்து பதறிட்டு பாத்தாங்க. டாக்டர் கிட்ட பேசினாங்க. அவங்க பக்கமும் தப்பு இருக்கறதால, பாடியை டிஸ்போஸ் செய்யறோம்னு சொல்லி, என்னையும் குழந்தையையும் கோவை மெட்டர்னிடி ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.

அடுத்த நாளே, அந்த டாக்டருக்கும் அங்கம்மாவுக்கும் ஆளுக்குப் பத்து லட்ச ரூபாய் கொடுத்தேன். இரண்டு நாள் கழிச்சு, எனக்காக ஓடி வந்து ஆசையோட ஜனனிமான்னு நீங்க கூப்பிட்டப்போ, எனக்கு உண்மையை சொல்ற தைரியம் வரலை.

ஜனனின்னு பேரை வெச்சுக்கிட்டு ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாத என்னால , எனக்குன்னு கிடைச்ச வெண்பாவை, உங்களை எப்பாடு பட்டாலும் பிரியக்கூடாதுன்னு நினைச்சேன்.

ரெண்டே மாசத்துல நீங்களும் அடுத்த ஆன்சைட்டுக்கு கனடா போனபோது எங்களையும் கூட்டிட்டுப் போய்ட்டீங்க.

உண்மை புதைஞ்சு போயிடும்னு நினைச்சப்ப, இன்னைக்கு அமுதம் பத்தின செய்தி. எனக்குப் போலீஸ் கிட்ட மாட்டி, நம்ம குடும்பம் சிதையறதுல விருப்பம் இல்லை. அதான் இந்த முடிவு. வெண்பாவை பாத்துக்கோங்க.

உங்களால முடிஞ்சா என்னை மன்னிச்சுடுங்கத்தான்’

பிரபுதீரன் பெருமூச்சு விட்டான்.

“பாஸ், இதை மறைச்சது தப்புதான். நீங்க சொன்னா….”

” வெண்பாவுக்காக, துரதிருஷ்டவசமா இறந்து போன இரண்டு பெண்களுக்காக மத்தவங்களோட அமைதிக்காகன்னு நினைக்கும்போது நீ செஞ்சது சரிதான் ஜீவா”

“பாஸ்…”

“உலகத்தோட ஒரே, முதல் உண்மை அம்மாதான். அந்த அம்மாவோட உண்மைத் தன்மையை யாரும் சந்தேகப்படறது கிடையாது. இன்னும் இதுபோல இங்கே எத்தனை ஜனனிகளோ?”

“…”

“ஐ’ம் ப்ரௌட் ஆஃப் யூ ஜீவா”

“தேங்க் யூ பாஸ்”

“போடா, போய் சரண்யாவைப் பாரு. டெலிவரிக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. குட்டிப்பொண்ணும் ஏங்கிப் போயிருப்பா பாவம்”

“யெஸ் பாஸ்”


மூன்று மாதங்களுக்குப் பிறகு….

1 ஈரோடு மற்றும் வாளையார் வீடுகளில் இருந்து மொத்தம் பதினேழு பெண்கள் மீட்கப்பட்டனர்.

2 சீராளன், தன் வேலையை மாற்றிக்கொண்டு, மகள் வெண்பாவுடன் கனடாவுக்கே சென்றுவிட்டான்.

3 சிந்துவுக்கு பாண்டிச்சேரி ஜிப்மரில் கைனகாலஜி மேற்படிப்பில் இடம் கிடைத்துவிட்டது.

4 நிமலனுக்கு திருமணம் நிச்சயம் செய்து ருக்கிறார்கள்.

5 வழக்கு நடக்கிறது. அவரவர் வசதிக்கேற்ப சிலர் பெயிலிலும், சிலர் ஜெயிலிலும் இருக்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோமாக!