தாத்ரி – 1
தாத்ரி 1
“எல்லாரும் பஸ்ல ஏறியாச்சா, ஆல் ஸெட்? கிளம்புவோமா? ரை…ரைட்” என்று சீழ்க்கையொலி தந்ததும் அந்த சொகுசு பஸ் கிளம்பியது.
பஸ்ஸில் இருந்த நாப்பத்தி சொச்ச ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் “ஹே” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
சென்னையில் இருக்கும், நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு மென்பொருள் கம்பெனியின் ஊழியர்கள் அனைவரும், தங்கள் வருட இறுதி விடுமுறையில் ஒரு நாளை குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக, ஈசிஆரில் இருக்கும் ஒரு ரிஸார்ட்டை நோக்கிப் பயணித்தனர்.
அதில் திருமணம் ஆன, ஆகாத யுவ, யுவதிகள், காதல் ஜோடிகள், தம்பதிகள், குழந்தைகள் எல்லோரும் அடக்கம். அடையாரில் இருந்த அலுவலகத்திற்கே எல்லோரும் வந்துவிட, பஸ் அலுவலக கேட்டைத் தாண்டியதுமே, விசில்களும் கரவொலியும் காதைப்பிளந்தது.
அந்த அலுவலகத்தில் வேலை செய்வோரின் மனைவிகள் மற்றும் கணவர்களில் பலரும் முழுதாகக் கலந்துகொள்ள முடியாமல், புன்னகையுடன் பார்த்திருக்க, ஏனையோர் பாட, ஆட ஆரம்பித்தனர்.
எடுத்தவுடன் “பொன்னி நதி பாக்கணுமே” என்று ஒருவன் தொடங்க, கும்பலாக “ஈயாரி எசமாரி” என்று பஜனை செய்தனர்.
இருந்த மூன்று டீம் லீடர்களில் ஒருவர் ” கரிசல் கடந்து, பொட்டல் கடந்து” எனவும் “சிக்னல் கடந்து, ட்ராஃபிக் கடந்து, டோலைக் (Toll) கடந்து” என ஏனையோர் பின்பாட்டு பாடினர். ஒரு பாட்டைக்கூட முழுதாக, ஒழுங்காகப் பாடவிடாது, கிண்டலும் கலாட்டாவும் தற்குறிப்பேற்றமுமாகப் பயணித்தனர்.
அந்தக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆன நிமலன், எல்லோரது குடும்பங்களையும் முதல்முறை பார்ப்பதில் சற்றே கூச்சத்துடன் இவற்றில் கலந்துகொள்ளாது, புன்னகையுடன் ரசித்துக்கொண்டு வந்தான்.
நிமலனின் தந்தை சரவணன் அரசுபோக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக இருப்பவர். அவனது அம்மா துர்கா இல்லத்தரசி. படிப்பில் ஆர்வம் இருந்த நிமலனுக்கு, கவுன்சிலிங்கில், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. குறைந்தபட்ச கட்டணத்தையே சிரமப்பட்டுத்தான் கட்டினர்.
கேம்பஸிலேயே ஒரு பெரிய எம்என்சியில் வேலை கிடைத்து, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கம்பெனி மாறவில்லை என்றால் தெய்வ குத்தமாகிவிடும் என்பதால் இந்தக் கம்பெனிக்கு மாறிவிட்டான். இப்போது பதவி, பணம் இரண்டிலுமே உயர்வு.
“நிமலன், ஒய் சோ சைலன்ட் மேன்?” என்று தோளில் தட்டிய ஸ்வேதா “கைஸ், இப்ப நிமலன் பாடுவான்” என்று கோர்த்து விட்டாள். அதற்கும் “ஏஏஏஏ” என்று கோஷமிட்டனர்.
“நி மலன், நி மலன்’ என்று கோஷத்தில் வேறு வழியின்றி “சுராங்கனி, சுராங்கனி” என்று தொடங்கவும் “ஐ, இதை எப்படி விட்டோம்? திஸ் ஈஸ் வாட் வீ மிஸ்ட் யார்’ என்று, நிமலனிடமிருந்து பாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.
அவனது டீம் மேட் அருண் “ஸ்மார்ட் மூவ்டா” என்று சிரித்தான். பஸ் மெதுவே அவர்கள் கம்பெனி புக் செய்து வைத்திருந்த ரிஸார்ட்டுக்குள் நுழைந்தது.
புக் செய்யப்பட்டிருந்த ஆறு காட்டேஜ்களில் ஆண்கள், பெண்கள் எனப்பிரிந்து உடை மாற்றி வந்தனர்.
சாண்ட்விச், சமோசா, காபி, டீ, லைம் ஜூஸுடன் ஆரம்பமானது பிக்னிக். முதலில் கூடி நின்றனர்.
இவர்களது மேனேஜர்கள் நேரே ரிஸார்ட்டுக்கு வருவதாக இருக்க, டெக்னிகல் சீனியர் மேனேஜர் ஏதோ பர்ஸனல் வேலையின் காரணமாக பதினோரு மணிக்கு மேல்தான் வருவேன் என்றதால், குடும்பம், நட்பு, காதலர்கள் என்று குழுக்களாகப் பிரிந்து, கடற்கரையில், கடலலையில் அங்கிருந்த குடையுடன் கூடிய மேஜை, நாற்காலிகளில் பரவினர்.
நிமலன் அவனைப்போல் தனித்திருந்த வாலிபர்களுடன் ஷார்ட்ஸும் பனியனுமாக மணலில் அமர்ந்திருந்தான்.
என்னதான் சினிமா, பாட்டு, இலக்கியம், அரசியல், சோஷியல் மீடியா என்று பேசினாலும், இதுபோன்ற அலுவலக பார்ட்டிகளின் இலக்கணம் மாறாது, எங்கெங்கோ சுற்றி, மீண்டும் க்ளையன்ட், ப்ராடக்ட், ப்ராஜக்ட், அனாலிஸிஸ், டேட்டா, டெலிவரி என்ற சுழலுக்குள் சென்றனர்.
வரவேண்டியவர்கள் ஒவ்வொரு குடும்பமாக வந்து இணைந்துகொண்டனர். புதியவர்களான நிமலனையும் ஸ்ரீவித்யாவையும் அறிமுகப்படுத்தி, வரவேற்றனர்.
சற்றே பெரிய ஏசி ஹாலில், சவுண்ட் சிஸ்டம் அமைத்து, பாட்டு, நகைச்சுவை, நடனம் என்று இஷ்டத்துக்கு நடக்க, ஒருபக்கம் பார்/பியர் கவுன்ட்டரைத் திறந்திருத்தனர்.
அவர்களது சீனியர் டெக்னிகல் மேனேஜர் , சரியாக மதியம் ஒரு மணிக்கு வந்து “ஸாரி கைஸ்” என்றவர், மனைவியின்றித் தன் ஐந்தரை வயது மகள் வெண்பாவுடன் வந்தார்.
நிமலனின் டீமுக்கு உணவை மேற்பார்வை செய்யும் பொறுப்பைத் தந்திருக்க, அந்த ஹாலை ஒட்டிய சிறிய டைனிங் ஹாலில் தன் டீம் மேட்டுகளுடன் பிஸியாக இருந்தவன், அரை மணியில் பஃபே முறையில் உணவின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகே, அந்த ஹாலுக்குள் நுழைந்தான்.
இப்போது எல்லா பெரிய தலைகளும் பேசிக்கொண்டிருக்க, பெண்களும் குழந்தைகளும் முதலில் சாப்பிடச் செல்ல, ஆண்களில் அநேகர் பாரில் சிறந்து விளங்கினர்.
நிமலன் நடுவில் டைனிங் ஹால் பக்கம் நகரவும் “நான் போறேன் நிமலன்” என்று அருண் சென்றான்.
இவர்கள் வட்டமாக நாற்காலிகளை போட்டு, உணவுக்குப் பின்னான சில விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்ய, குழந்தைகளும் பெண்களும் மீண்டும் பீச் பக்கம் சென்று விட்டனர்.
“நான் வெண்பாவைக் கூட்டிட்டுப் போகட்டுமா?” என்றாள் ஸ்வேதா.
“ஓகே, ஆனா, வெண்பா, பீ கேர்ஃபுல் பேபி, அக்காவை டிஸ்டர்ப் செய்யக்கூடாது. ஓகே, கொஞ்சம் பாத்துக்கோ ஸ்வேதா” என்றார் தந்தை.
“ஐ வில் டேக் கேர்” என்று சிறுமிக்கு ஹை ஃபைவ் கொடுத்தவாறு அழைத்துச்சென்றாள் ஸ்வேதா. அப்ரைஸல் சீஸன் வருகிறதே!
ஆண்களும் சில பெண்களும் உண்டபின், ஹவுஸி, தம்ஷெராட்ஸ், அந்தாக்ஷரி போன்ற விளையாட்டுகள் நடந்தது.
பின்மதிய நேரத்தின் மந்தநிலை கவியவும், டீ வரவழைத்தனர். களைத்துப்போன குழந்தைகள் அம்மாக்களின் அருகே அமைதியாக இருக்க, லேட்டாக வந்ததாலோ என்னவோ உற்சாகம் குறையாதிருந்த வெண்பா, மைக்கைக் கையில் எடுத்துக்கொண்டு “ஹலோ டாடி” எனவும் எல்லோரும் சிரித்தனர்.
“நோ வெண்பா”
“கேன் ஐ சிங் டாடி?”
டாடி தான் சீனியர் என்பதால் தன் மகளுக்கு முக்கியத்துவம் வேண்டாம் என நினைக்க, மற்றவர்கள் எல்லோரும் வெண்பாவைப் பாடச்சொல்லி ஊக்குவித்தனர்.
வெண்பா பேசிய ஆங்கிலத்தில் எல்லோரும் ஒரு நர்ஸரி ரைமை எதிய்பார்த்திருக்க, அவள்
‘ ஏறு மயிலேறி’ யை திருத்தமாகப் பாடினாள்.
வெண்பாவின் கணீர்க்குரலிலும், தமிழ்ப்பாடலிலும் ஈர்க்கப்பட்ட நிமலன், தன் மொபைலில் இருந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அதுவரை வேலையாகவும், கவனமின்றியும் இருந்ததில் இப்போதுதான் அருகில், சரியாக வெண்பாவைப் பார்த்தான். பார்த்தபடியே இருந்தான்.
பாட்டு முடிந்ததும் முதல் முறை வந்தபோதே தயக்கமில்லாது பாடி, பேசி, பழகிய வெண்பாவை எல்லோரும் பாராட்ட, குழந்தை வெட்கத்தில் தந்தையிடம் மறைந்துகொண்டாள்.
மாலை மங்கியதும், கிளம்பி அலுவலகம் வந்து இறங்கி, பைக்கை எடுத்துக்கொண்டு, மந்தைவெளியில் இருந்த தன் சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டுக்குச் சென்று சான்டலை உதறியவன், வாசல் கதவை அடைத்துவிட்டு, விளக்கைப்போடாது, பொத்தென கட்டிலில் போய் விழுந்தான்.
இருளை வெறித்திருந்தவனை அழைத்தது மொபைல். அவனது அம்மா தெய்வானைதான்.
“ஏதோ பிக்னிக்னியே, வீட்டுக்கு வந்துட்டியாப்பா?”
“ம்”
“சாப்ட்டியா நிமலா?”
“…”
“என்னடா, உடம்பு ஏதும் சரி இல்லியா”
“அம்மா, நம்ம பாப்பு இல்லம்மா, இன்னைக்கு அவளைப் பார்த்தேன்”
“ஐயோ நிமலா, என்னடா சொல்ற? “
“ஆமாம்மா. அச்சு அசலா நம்ப பாப்புவேதான்மா. ஆனா, அவ ரொம்ப குட்டியா இருக்காம்மா”
“கடவுளே!, என்னப்பா, ஏன் ஒரு மாதிரி பேசுற? உனக்கு இப்போ விடுப்புதானே, இங்க வர்றியா?”
“வரேன்” என்றவன், உடனே கிளம்பிவிட்டான்.
********************
“ஜனனிமா, நான் சொல்ற பேச்சைக் கேளுடா. இத்தனை வலி, அவஸ்தை தேவையே இல்லை. இப்பவும் சொல்றேன், எனக்கும் குழந்தை வேணும்னு ஆசை இருக்குதான். ஆனா, வெறி இல்ல”
“ஆமா அத்தான், எனக்கு வெறிதான். எனக்குக் குழந்தை வேணும்”
“உனக்குக் குழந்தைதான் வேணும்னா, நாம வேணா தத்து…”
“தத்து பித்துன்னு உளறாதீங்கத்தான். எனக்கு என் குழந்தை, நம்ம குழந்தைதான் வேணும்”
“நீ டென்ஷனாகாம இரு ஜனனி. இன்னும் கொஞ்ச நாள்ல நான் யுஎஸ் போகப்போறேன். நீயும் எங்கூட வா. இதையே யோசிக்காம மனசை ஃப்ரீயா விடு”
“என்னால முடியலையே அத்தான்”
“அழாத ஜனனீ. அதுக்குன்னு ஏன்டீ உடம்பை இப்படிப் புண்ணா ஆக்கிக்கற? எத்தனை IUI, IVF? போதும்டா. நாம ரெண்டு பேரும் இஷ்டமா செய்ய வேண்டியதை, இப்படி, ஏதோ ஒரு ஹாஸ்பிடல் பாத்ரூம்ல, பேத்தாலஜி ட்யூப்ல… என்னாலயும் முடியலடீ. நானும் மனுஷன்தானே. இப்படியே போனா, நமக்குக் குழந்தை பொறந்தாகூட என்னால ரசிக்க முடியாது போல இருக்குடீ”
“என்னடீ டக்குனு அடிக்கற?”
“இப்படிப் பேசினா அப்படிதான் அடிப்பேன். ம்ப்ச், அதை விடுங்கத்தான். இந்த ஒரு தரம் மட்டும்தான். ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ். இதுலயும்…. அப்புறம் நாம யுஎஸ் போயிடலாம்”
இத்தனை முயற்சிகளுக்குப் பின்பும், பெயரளவில் கூட ‘குழந்தை வரலைன்னா’ என்று சொல்ல முடியாத மனைவியைப் பெருமூச்சுடன் பார்த்தான் சீராளன்.
“உன் விருப்பம், எப்ப போகணும்?”
“நாளைக்குக் காலைல எட்டு மணிக்கு. லீவ் போடுங்க”
“உன்னோட டெய்லரிங் ஸ்கூல்?”
“அது செவ்வாய்க்கிழமை வீக்லி ஆஃப்”
*******************
அந்த முறை முதல் நாலைந்து முறை வரச்சொன்ன மருத்துவர், சேர்ந்த கருவை உடலில் செலுத்துமுன், மூன்று நாட்கள், சிகிச்சைக்கென ஜனனியை மருத்துவமனையில் தங்கச் சொன்னார்.
இரண்டாவது நாள் மதியம் மூன்று மணி இருக்கும். மருத்துவமனையில் மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்த ஜனனியின் அறைக்கதவைத் தட்டிவிட்டு, ஐம்பத்தைந்தில் இருந்து அறுபது வயதிருக்கும் ஒரு அம்மா உள்ளே நுழைந்தாள்.
பார்க்க, மருத்துவமனை ஆயா போல் இருந்தாள். இதற்கு முன் இங்கே வரும்போது ஜனனியைப் பார்த்து இரொண்டொருமுறை சிரித்தும் இருக்கிறாள்.
“என்ன வேணும்?”
“என் பேரு அங்கம்மா. இங்கதான் வேலைக்கு இருக்குறேன். பாப்பாவை நானும் பாத்துக்கிட்டேதான் இருக்கேன். மூணு, நாலு வாட்டி இப்படி இங்க வந்திருப்பீங்களா?”
“ம்”
“பாப்பா, நான் ஒரு வழி சொல்லட்டா?”
அவள் சொன்ன வழியில் கோபமுற்ற ஜனனி “முதல்ல இங்க இருந்து வெளில போங்க” என்று கத்தினாள்.
“கோவப்படாத பாப்பா. உன்னைப் பாத்தா பாவமா இருக்கு. உன் ஏக்கத்தைப் பாக்க சகிக்காமதான் சொன்னேன். விடு, நீயே என்னைத் தேடி வருவ பாரு”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீங்க போங்க”
ஜனனியின் எரிச்சலான குரலுக்கு முகம் மாறாது சிரித்த படியே அங்கம்மா வெளியேற, அவள் கொடுத்த ஐடியா ஜனனியின் அடி மனதில் நுழைந்தது.
********************
பெரும்பாலும் இருளும் சோகையாய் சில தெருவிளக்குகளும், ஆள் நடமாட்டமின்மையால் வெறிச்சோடும் அந்தத் தெருவில், எட்டி எட்டி இருந்த வீடுகளில், ஒரு ஓரத்தில் உயர்ந்த மதில்களுடன் கூடிய, அந்தப் பழைய பங்களாவின் வாசலில், இரவு ஒன்பதரை மணிபோல் இரண்டு சுமோக்கள் வந்து நின்றன.
வீட்டினுள்ளே இருந்தவர்கள் பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். காவலுக்கு நின்றவர்களில் ஒருவன் கேட்டைத் திறக்க, வண்டியில் இருந்து வேக நடையில் இறங்கி வந்த மற்றவன், படியேறி தடதடவென வாசல் கதவைத் தட்டினான்.
“நீலவேணி, நீலவேணி”
கதவுக்கு வெளியே இருப்பது எதுவாக இருப்பினும், நிச்சயமாக தங்களுக்கு அதனால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தாலும், கலக்கமும் எதிர்பார்ப்பும் மேலிட , நின்றிருந்த அந்தப்பெண்களிடம்
அதிகாரமாக “உள்ள போங்க” என்ற அந்த நீலவேணி, அவர்கள் உள்ளே சென்று மறைந்ததும் போய்க் கதவைத் திறந்தாள்.
அதற்குள் பெயர்ந்து விழுமளவிற்குக் கதவு தட்டப்பட்டது.
திறந்த வேகத்தில் “எவ்வளவு நேரம்?” என்று வள்ளென குரைத்தவன் “எங்க எல்லாரும், எந்நேரமும் போலீஸ் ரெய்டு வரலாம்னு நியூஸ் வந்திருக்கு. அதிக நேரமில்ல. இன்னும் அரைமணிக்குள்ள நாம இங்கிருந்த சுவடு தெரியாம கிளம்பியாகணும். சீக்கிரம்” என்றான்.
“என்னாச்சு தேவா?”
“நீ போய் எல்லாரையும் கிளப்பு. யாரும் தப்பி ஓடிடாம பாத்துக்க ” என்ற தேவா “டேய் வீரா, சம்மு, உள்ள வந்து சாமானைக் கட்டுங்கடா” என்று சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, பின்பக்கம் இருந்த ஒரு அறைக்குச்சென்று அங்கிருந்த மேஜை, அலமாரியில் இருந்தவற்றை பத்திரப் படுத்தியவனின் கையிலும் கண்ணிலும் சிக்காது ஒரு மெல்லிய நாற்பது பக்க நோட்டுப் புத்தகம் மேல் தட்டில் சுவரொடு ஒட்டி இருந்தது.
அரைமணி என்றது முக்கால் மணியாக நீளவும் டென்ஷனான தேவா “கிளம்புங்க எல்லாரும். வீரா, நீ என்னோட வா. நீலவேணி, நீ சம்முவோட போ”
நீலவேணி “அதான் சொல்றாரில்ல, போய் வண்டில ஏறுங்க” என்றாள். அந்தப் பதிமூன்று பெண்களும் தத்தம் கையில் ஒரு பையுடன், சுமோக்களில் போய் அடைந்துகொள்ள, வீட்டை ஒருமுறை சுற்றி வந்த தேவாவும் வீராவும் கடைசியாக ஏறிக்கொள்ள, வீரா வாட்ச்மேன்கள் இருவரிடமும் “கதவைப் பூட்டிட்டு, இங்க இருந்து சீக்கிரம் கிளம்பி தென்கரை வீட்டுக்கு வாங்க” என்றான்.
இரண்டு சுமோக்களும் அடுத்த திருப்பத்தின் வழியே மெயின் ரோட்டுக்குச் செல்ல முடிவு செய்து, எதிர்ப்பக்கத் தெருவில் திரும்பி, இருநூறு அடி கூட சென்றிருக்காது.
இங்கு அவசரமாக ஒரு செக்யூரிட்டி கதவைப் பூட்ட, காவலாளிகளில் ஒரு பவுன்ஸர் காம்பவுண்டுக்கு வெளியே இருந்த பைக்கில் ஏறி உதைக்கவும், மற்றவன் ஓடி வந்து ஏறும் முன், பின்னால் இருந்து க்றீச்சிட்ட போலீஸ் ஜீப்பில் இருந்து, ஆண், பெண் போலீஸார்கள் நாலைந்து பேர் குதித்து, பில்லியன் பவுன்ஸரின் டீ ஷர்ட்டைப் பிடித்து இழுத்து, இருவரையும் மீண்டும் வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
கதவில் தொங்கிய பூட்டைப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் “ஷிட், எங்கடா சாவி?” என்றவர், பவுன்ஸர்களுக்கு விட்ட அறைகளும் கெட்ட வார்த்தைகளும் கதவைத்திறந்தன.
ஒருமணி நேரம் வீடு முழுவதும் தேடிக் கிடைத்த சொல்ப பொருட்களில், பொதுவாக இது போன்ற ‘தொழில்’ நடக்கும் வீடுகளில் கிடைக்கும் ஆபாச புத்தகங்களோ, அரைகுறை உடைகளோ, அவசரத்தில் விட்டெறிந்த உள்ளாடைகளோ, முக்கியமாக ஆணுறைகளோ, கருத்தடை மாத்திரைகளோ இல்லை.
ஆனால், பக்கத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை எழுதி, மாதத்தின் பெயர், பத்து முதல் 17 வரை எண்களும் அதன் எதிரே சில தேதிகளுமாக கையால் நுணுக்கி, நுணுக்கி எழுதப்பட்டிருந்தது. அதோடு அந்தப் பெண்ணின் எடை, உயரம், ரத்தப்பிரிவு கூட குறிப்பிடப் பட்டிருந்தது.
மாடியில் இருந்து குழப்பமும் யோசனையுமாக
இறங்கி வந்த சப் இன்ஸ்பெக்டர் சிந்தாமணி “ஏதாவது கிடைச்சுதா?” என்ற இன்ஸ்பெக்டருக்கு பதில் சொல்லத் தடுமாறினாள்.
“என்ன?”
சிந்தாமணி தன்னுடன் வந்த இன்னொரு பெண் கான்ஸ்டபிளிடமிருந்த பிளாஸ்டிக் கவரை வாங்கி அதனுள்ளிருந்த பொருட்களை அங்கிருந்த மேஜையில் கவிழ்த்தாள்.
ஷூகர், பிரஷர் டெஸ்ட் செய்யும் பர்ஸனல் கருவிகளும், ஜூரமானியும் பலவிதமான மாத்திரைகளும், கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனங்களும், அதே போன்ற, ஆனால் எண்ணிக்கையில் அதை விட அதிகமான டெஸ்ட்டிங் கிட்டுகளும் ஏராளமாக இருந்தன.
புரியாமல் பார்த்த இன்ஸ்பெக்டர் “இதெல்லாம் என்ன மருந்து, இது எதுக்கு யூஸ் பண்றது, உங்களுக்கு ஏதாவது புரியுதா? என்று கேள்விகளை அடுக்கினார்.
“இந்த மருந்து மாத்திரைங்க எல்லாமே கால்ஷியம், அயர்ன் ஃபோலிக் ஆசிட் (Folic acid), ப்ரொஜஸ்ட்ரோன் (Progesterone) மாத்திரைகள்..”
“கட் இட் அவுட். ப்ராத்தல் நடக்கற வீட்ல இத்தனை மருந்து ஏன்? இதெல்லாம்… கருத்தடை மாத்திரையா?”
உத்தியோக நிமித்தமான பேச்சுதான் என்றாலுமே, இன்ஸ்பெக்டரின் கேள்வியில் பெண் போலீஸார் சற்று சங்கடமாகத்தான் உணர்ந்தனர்.
சிந்தாமணி “ஸார், இதெல்லாம் ஹார்மோன் மாத்திரைகள் சார். கர்ப்பமாகறதுக்கு முன்னால கருப்பையை பலப்படுத்த கொடுக்கறது “
“ஓ… அப்ப இது?”
“இது , இது Ovulation finder ஸார்?”
“அப்படீன்னா?”
“ஒவ்வொரு மாசமும் பெண்களோட கருமுட்டை எப்ப உற்பத்தி ஆகுதுன்னு தெரிஞ்சுக்க உபயோகிக்கறது”
அதைக் கையில் எடுத்துப் பார்த்து, உபயோகிக்கும் முறையை படித்த இன்ஸ்பெக்டர் “ஆனா, இதுக்கெல்லாம் ப்ராத்தல்ல என்ன வேல?”
சிந்தாமணி “இங்க பிராத்தலே நடக்கல சார்” என்றாள் அமைதியாக.